(உமர் ஃகய்யாமின் ’ருபாயாத்’ பாடல்களில் ஒரு
பகுதியாக அமைந்திருப்பது ’கூஜா நாமா’ என்பது. களிமண் கூஜாக்கள் தமக்குள் குயவனைப் பற்றியும்
தம் வாழ்வைப் பற்றியும் பேசிக்கொள்ளும் பாணியில் மனிதர்கள் இறைவனைப் பற்றியும் வாழ்வைப்
பற்றியும் பேசிக்கொள்வதாக உட்பொருள் தொனிக்க அவர் எழுதியுள்ளார். அந்தப் பெயரையே இந்தக்
கவிதைக்குச் சூட்டுகிறேன்)
ஈரம்
காயாத களிமண்
இன்னமும்
நான்
குயவனின்
கைகளில் இருக்கின்றேன்
இன்னமும் நான்
ஒவ்வொரு
கணமும் வனைகிறது
அவனின்
இயக்கம் என்னை
ஒவ்வொரு
கணமும் புனைகிறது
அவனின் நாட்டம் என்னை
என் கட்டமைப்பில்
தெரிவதெல்லாம்
அவனின்
கைவண்ணமே
பொய்வண்ணம்
அல்ல இது
சத்திய மெய்வண்ணமே!
வெறுமை
என்னும் வடிவில்
வரைந்த
பாத்திரம் நான்
ஏழு கடல்களின்
தண்ணீர்
நிறைந்த பாத்திரம் நான்!
அவனின்
மூச்சு கடலானது
என்னுள்
எழும் அலைகளுக்கெல்லாம்
அவனின்
காதலே வேர் ஆனது
என் கிளைகள் இலைகளுக்கெல்லாம்
விண்ணுக்கும்
மண்ணுக்கும் இறைவனே
ஒளியாக
இருக்கின்றான்
இறைவன்
பார்வை எனில் மனிதனே
விழியாக இருக்கின்றான்
உடைவோம்
என்ற அச்சத்தில்
சாகிறது
கூஜா ஒன்று
உடைந்தோம்
என்ற கவலையில்
வேகிறது கூஜா ஒன்று
’தோழர்களே!
உடையுங்கள் என்னை’
என்கிறது
ஒன்றின் முழக்கம்
’நேசர்களுக்கில்லை
அச்சமும் கவலையும்’
என்பதே
இறை வழக்கம்
(குறிப்பு:
”‘தோழர்களே! உடையுங்கள் என்னை’ என்கிறது ஒன்றின் முழக்கம்” என்பது மன்ஸூர் அல்-ஹல்லாஜின்
கவிதை ஒன்றிற்கான சுட்டுதல் ஆகும். “உக்தூலூனீ யா ஸிகாத்தீ / இன்ன ஃபீ கத்லீ ஹயாத்தீ”
(என் நண்பர்களே! என்னைக் கொல்லுங்கள்! நிச்சயமாக, நான் கொலை செய்யப்படுவதில் என் வாழ்க்கை
உள்ளது!) என்பதே அந்தக் கவிதை வரிகள்)
GOOD POEM WITH GREAT MEANING ABOUT LIFE. MANY PEOPLE THINGS THAT UMAR QAYYAM WROTE LOVE POEMS ABOUT HUMAN LOVE. FEW ONLY KNOWS THAT HE IS A SUFI. PLEASE TRANSLATE HIS POEMS MORE IN TAMIL.
ReplyDeleteK. Said Alauddeen Faisz, Annur.
December 14, 2013 at 6:29 PM