Monday, October 22, 2012

கண் மையும் பெண்மையும்



அந்தக் கரிய கல்லினை ஒரு கூழாங்கல்லில் தேய்த்து விரலால் தொட்டெடுத்துக் கண்களின் கீழிமைகளில் தீட்டிக் கொண்டேன். “மை போட்டது போல் இருக்கிறது” என்று கேலி பேசினாள் அவள்.

கண்கள் பெண்களுக்கு மட்டும் இருக்கும் பாகம் அல்லவே? ஆண்கள் மையிட்டுக் கொண்டால் ஆகாதா? யாரும் அப்படி இட்டுக் கொண்டதே இல்லையா என்ன? -இப்படிச் சிந்தித்தேன்.

இதனைத் தொடர்ந்து சரம் சரமாய் எண்ணங்கள் உதிக்கத் தொடங்கின. கண்-மைச் சிந்தனைகள்.
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்குப் பொய் அழகு
என்னும் வரிகள் மெல்லிசையில் தவழ்ந்தது என் நினைவில்.

கண்ணுக்கு மை எப்படியோ அப்படித்தான் கவிதைக்குப் பொய். அதாவது கற்பனை. மை என்பது இயற்கையிலேயே கண்ணில் இல்லாத ஒன்றுதானே? அதனை ஒப்பனையாகத்தான் கண்ணுக்கு எழுதுகிறார்கள். அது போல் கற்பனை என்பது பொய்தான்.

ஆனால் கண் உண்மையாக இருப்பது போல் கவிதை உண்மையாக இருக்க வேண்டும். மையே கண் ஆகி விடாது. பொய்யே கவிதை ஆகி விடாது.

அழகிய கண்களுக்கு மை தீட்டினால் அழகு அதிகம் ஆகும். ஆனால் இயல்பிலேயே ஒன்றரைக் கண்ணாக இருப்பதற்கு மை தீட்டுவதால் அழகு வந்துவிடாது அல்லவா? கவிதையும் அப்படித்தான். கேவலமான சிந்தனைகளுக்குக் கற்பனை அலங்காரம் அழகு சேர்க்காது.

பெண்கள் தங்கள் கண்களுக்கு அஞ்சனம் தீட்டி அழகுபடுத்திக் கொள்ளும் பழக்கம் மிகவும் தொன்மையான ஒன்று.

அரபியில் ‘குஹ்ல்’/ இத்மித், குர்திஷில் ‘குல்’, துருக்கியில் ‘சுர்மா’, ஹிந்தியிலும் உருதுவிலும் ‘காஜல்’, மலையாளத்தில் ‘கண்மஷி’, சமஸ்க்ருதத்தில் ’காஜல்/கஜோல்’, எகிப்தில் ‘மீஸ்தீமீத்’, லத்தீனில் ‘ஸ்தீபியம்’, கிரேக்கத்தில் ‘ஸ்தீபி’, சோமாலியில் ’கூல்’ – இவை சில மொழிகளில் கண்மையின் நாமகரணங்கள் (COOL!)

எகிப்து, கிரேக்கம், ஆஃப்ரிகா, அரேபியா போன்ற பகுதிகளில் சில ஆயிரம் வருடங்களுக்கு முந்திய சமூகங்களில் இருபொருட்கள் கண்-மையாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன.


மூன்றாம் ஆண்டிமொனி சல்ஃபைடு என்னும் பெயர் பூண்ட ஒரு வஸ்து. ஸ்டிப்னைட் என்றும் ஆண்டிமொனைட் என்றும் இதற்கு வேறு நாமங்களும் உண்டு. கி.மு.3000 காலக் கட்டத்தில் இது எகிப்தில் கண்-மையாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. முனியின் தவம் முறித்து ஆண்டி ஆக்க வல்ல அழகிய கண்களுக்கு இந்த ஆண்டிமொனி மேலும் ஆற்றல் அளித்துள்ளது!

அந்தக் காலத்திலேயே ஆண்டிமொனியால் பார்வை இழந்தவர்கள் பலர். ரசவாதிகள் (Alchemists) இப்பொருளைத் தம் பரிசோதனைகளில் கையாண்டனர். அவர்களில் பலர் துறவிகள் (MONKS). எனவே இப்பொருளுக்கு ANTI-MONACHOS – துறவிகளுக்கு எதிரானது என்று பொருள் தரும் வண்ணம் ANTIMONY என்று பெயர் சூட்டப்பட்டது. பெண்ணின் கண்ணிலும் அது துறவிகளுக்கு எதிரானதுதான்!

ANTI-MONOS – தனிமைக்கு எதிரானது என்னும் அர்த்தத்தில்தான் அப்பெயர் வந்தது என்னும் கருத்தும் உண்டு. ஏனெனில் மண்ணில் அது கலவையாகக் கிடைக்குமே அன்றித் தனி உலோகமாகக் கிடைப்பதில்லை. சொல்லப் போனால் பெண்மை பேணும் கண்-மையும்கூட தனிமைக்கு எதிரானதுதான்!


இரண்டாம் லெட் சல்ஃபைடு என்பது மற்றொரு வஸ்து. இது காரீயம் என்னும் உலோகத்தின் கலவை. கலீனா என்பது இதன் செல்லப் பெயர். காரிகையின் கண்ணுக்குக் காரிய வீரியம் நல்கும் போலும். இதில் கொஞ்சமாக வெள்ளியின் சல்ஃபைடுக் கலவையும் இருக்குமாம்.

அல் நிறத்து அஞ்சனத்தை ஒளிமிகு விழியில் எழுதிக் கல் தரத்து நெஞ்சுகளைக் கரைக்கும் அந்தப்புரத்து அழகிகள் அற்றை நாள் எகிப்திலும் கிரேக்கத்திலும். அவர்கள் மேலிமைக்கு கொஹ்ல் கொண்டு கறுமையும் கீழிமைக்கு ’மலச்சைட்’ (காப்பர் ஹைட்ராக்ஸைடுத் தாது) தாமிரக் கலவையால் பச்சை நிறமும் தீட்டி அலங்கரித்தனர். பார்க்கும் கண்களிலேயே கரிய நிறமும் பச்சை நிறமும் தோன்றுதடா நந்தலாலா!

அந்நாட்களில் எதிரிகள் மீது ஏவப்படும் கணைகளின் முனைகள் கொடிய விஷத்தில் முக்கி எடுத்தவையாக இருக்கும். காயத்தோடு எவரும் தப்பிக்க முடியாமல் அது காயத்தை உயிர் உலர்ந்த கட்டை ஆக்கிவிடும்! புறப்போரின் இந்த மரபை அகப்போரில் ’அப்ளை’ செய்து பார்த்தேன். சிந்தை ஒரு சிறு கவிதையை உடனே ’சப்ளை’ செய்தது. ’வில் வில் வில் உன் விழியம்பில் எனைத் தாக்காதே’ என்று பாடிய கவிஞர் வாலியின் பாணியில்:
“அம்பாகப் பாய்ச்சுகிறாள் VISION
மையென்று வைக்கிறாள்
அதன் முனையில் விஷம்!”


’அல்-குஹ்ல்’ என்னும் அரபிச் சொல்லின் அடியாகப் பிறந்த ஆங்கிலச் சொல் ஆல்கஹால் (alcohol). ஆல்கஹால் என்றால் மது / சாராயம். ஆனால் அரபியில் மதுவுக்கு ஷராப்/ நபீத் /ஃகம்ர் என்று பெயர்(கள்)! ’குஹ்ல்’ என்பது கண்-மைதான்.
”மை எழுதிய கண்களால்
மது வார்க்கிறாள்
மனதில்”
என்று யாரேனும் கவிதை (கிவிதை?) எழுதினால் அந்தத் தமிழ் வரிகளில் அரபிக்கும் ஆங்கிலத்திற்கும் பொருளாதார பாத்யதை உண்டு!

மேல் வர்க்கத்துப் பெண்கள் தம் கண்களுக்கு மை தீட்டுவது அழகின் பாற்பட்ட ஒன்றாக இருந்தாலும், எகிப்திய எத்தியோப்பிய அரேபியப் பகுதிகளில் பாலைவனத்தில் வாழ்க்கை நடத்தி வந்த மக்கள் – ஆண் பெண் இருபாலரும் – தம் கண்ணுக்கு மை இட்டுக் கொண்டது அழகு கருதி அல்ல.

பாலை எனும் பாவையின் மேனி முழுதும் பகலவனின் வெய்யில் எனும் பசலை படர்ந்து தகிக்கும் காட்சி காண்போருக்குக் கண் கூசும்! பார்த்துக் கொண்டே இருந்தால் எரிச்சலும் உண்டாகும்! அந்நிலைக்கு ஆகாமல் விழிகளைக் காக்கும் பொருட்டு அவர்கள் அஞ்சனம் அப்பிக் கொண்டனர். ஆமாம், மையின் கறுப்பு வெய்யில் ஒளியை உள்வாங்கிக் கொள்வதால் அதன் அடர்த்தி குறைந்து மிதமாகவே கருவிழிப் பாவை மீது படும்!

பண்டைய இந்தியாவில் பாவையர் தம் விழிப் பார்வை கூர்மை பெறும் பொருட்டு இமைகளின் விளிம்பில் இட்டுக் கொண்ட மை, சந்தனத் திரி எரியும் விளக்கின் புகையை ஆமணக்கு எண்ணெய்யில் (விளக்கெண்ணெய்யில்) படிய வைத்து வழித்துத் தயாரிப்பது.

விட்டில் பூச்சிகள் கவரப்பட்டு விழுகின்ற
விளக்கின் புகை கொண்டு மை செய்தது
விழிகளையே விளக்காக்கித் தம் காதலரை
விட்டில் பூச்சிகளாய்க் கவர்வதற்கா?

வரலாறும் அறிவியலும் இப்படிச் செப்ப இலக்கியத்தின் பக்கம் என் இதயம் திரும்பியது.

”கண்ணுள்ளார் காதலவர் ஆகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து” (1126)
என்று காதலி ஒருத்தி சொல்வதாகப் பாடுகிறார் திருவள்ளுவர்.

‘கண்ணில் என் காதலர் இருக்கிறார். மறைவார் என்பதால் மை எழுத மாட்டேன்’ என்று இதற்குப் பொருள். ‘இமைக்கும் நேரம் கூட இடைவெளி இன்றி அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். எனவே கோலம் போடக் காலம் இல்லை’ என்பது மணக்குடவர் இக்குறளுக்கு எழுதிய உரையில் காணப்படும் கருத்து!


இக்கருத்தையே கொஞ்சம் மாற்றி அப்துல் ரகுமான் இப்படிச் சொன்னார்:
‘வீட்டுக்குள் அவர். வாசலில் எதற்கு வரவேற்புக் கோலம்?’

அப்துல் ரகுமானின் கஸல் துளி ஒன்று என் சிந்தனை மீது சில்லென்று தெரித்தது.
“கண்ணுக்கு மை தீட்டக்
கோல் எடுக்கிறாள்
அந்தோ
யாருடைய விதி
எழுதப்படப் போகிறதோ?”

நானும் ஏதாவது சொல்லிப் பார்க்க நாடினேன். சட்டென்று தோன்றின இவ்வரிகள்:
“அவளின் கருவிழிகள்
இரு கவிதைகள்
அதற்கு
அவளே வரைகிறாள்
மையால் உரை”
ஆகா! என்று வாய் லேசாக அங்காந்த கணத்தில் சொடேரென்று என் பிடரியில் தட்டியது நியாபகம். இது பாரதி எழுதிய பாடல் ஒன்றில் உள்ள அர்த்த கனமான கற்பனை அல்லவா?
”வேதத் திருவிழியாள் – அதில்
மிக்க பல்லுரை எனும் கரு மையிட்டாள்”
என்று சரஸ்வதியின் வருணனையில் அவன் பாடுகிறான்.
வேதம் அவளின் கண்களாம். அதற்கு வரையப்படும் உரை என்பது கண்ணில் தீட்டப்படும் மையாம்.

“கண்ணுக்கு மை என்பது அளவாக எடுத்து நிதானமாகத் தீட்டப்பட வேண்டும். கோதி எடுத்து அப்பிக் கண்ணையே மறைத்து விடக்கூடாது. அது போல் வேதத்திற்கு இயற்றப்படும் உரை அளவாக இருக்க வேண்டும். நிதானமாக எழுதப்பட வேண்டும். மூலக் கருத்தையே மறைப்பதாக இருக்கக் கூடாது.” என்று இதற்கு உட்பொருள் இருப்பதாக திரு.டி.என்.இராமச்சந்திரன் அவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். (அவருக்குச் சொன்னவர் திருலோக சீதாராம் என்பதாக நினைவு).

மின்னல் போல் மனத்தில் பளிச்சிட்டுப் புளகம் தந்த கற்பனை இப்படி நமதல்ல என்று ஆகிவிட்டதே என நினைத்தேன். ‘அடடா, வடை போச்சே!’ என்று வருத்தப்பட்ட ’வைகைப் புயல்’ வடிவேலின் நிலையில் இருந்தேன். சற்று நேரத்தில் இன்னொரு மின்னல். அதன் பளிச்சில் நல்லதொரு கருத்தும் காட்சி தந்தது:
“கலைகள்
ஒன்றை ஒன்று சார்ந்தவை
அதோ
காவியங்கள் மீது
ஓவியம் தீட்டுகிறாள்!”
அதுவும் கறுப்பு வெள்ளைக் காவியத்தின் மீது இந்தியன் இன்க் கோட்டோவியம் (Indian-ink outline drawing)!


கட்டுரையின் ஆரம்பக் கேள்விக்கே திரும்புகிறேன். கண்-மை என்பது பெண்ணுக்கு மட்டுமே உரியதாகப் பரவலான பாவனை உள்ளது. ஆண் மை தீட்டினால் ஆண்மைக்கு இழுக்கா? என்று எண்ணும் வேளை தொலைக்காட்சி ஒன்றில் வந்து நின்றார் – ஆண்மைக்கு ஓர் அடையாளமான மீசைக்கே மையின் கைங்கர்யம் இருக்கிறது என்று அவனிக்கு அறிவித்த மூன்றெழுத்து நடிகர். அவர் தன் விழிகளுக்கு மையும் தீட்டியிருந்தார்!


“PIRATES OF THE CARRIBEAN” தொடர்த் திரைப்படங்களில் வரும் நண்பர் ஜாக் ஸ்பார்ரோ என்னும் கடற் கொள்ளையன் தன் கண்களில் மை தீட்டியிருப்பதும் நினைவு வந்தது.


என் மகனும் நானும் மகிழ்ந்து நெகிழ்ந்து பார்த்து ரசிக்கும் கார்ட்டூன் கேரக்டர்களில் ஒருவரான தோழர் பெருந்தகை ‘ஷின் ச்சான்’ (shin chan) அவர்களும் மை அப்பிய கண்களுடன் காட்சி தருபவரே!

இதெல்லாம் வெறும் ஒப்பனைகள். திரையில் வரும் கற்பனைகள்.

ஆனால் சுர்மா – இத்மித் – குஹ்ல் என்னும் கண்-மை இட்டுக்கொள்வதை வழிபாடாகவே கருதுகிறது இஸ்லாம். அது நபிவழி (சுன்னத்) என்னும் அந்தஸ்த்தில் உள்ள காரியம். அது ஒப்பனையோ கற்பனையோ அல்ல. ஆன்மிகத்தின் அம்சம்.

’இத்மித்’ என்று அரபியில் அழைக்கப்படும் மூன்றாம் ஆண்டிமொனி சல்ஃபைடு பற்றி நபிகள் நாயகம் நயந்துரைத்த மொழிகள் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகியுள்ளன. நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் நபி-மொழி:
“உங்கள் அஞ்சனங்களில் சிறந்தது இத்மித். அது பார்வையைத் தெளிவாக்குகிறது, இமையின் முடிகளை வளர்த்துகிறது” (நூற்கள்: சுனன் நஸாயீ #5113, சுனன் அபுதாவூத் #3837).

நபித்தோழர் அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
“நபி (ஸல்) தன் கண்களுக்கு மை இடுகையில் வலக் கண்ணில் மூன்று முறையும் இடக் கண்ணில் இரண்டு முறையும் இடுவார்கள்” (நூல்: முஸன்னஃப் இப்னு அபீஷைபா)

இந்த அழகிய நபிவழியைப் பின்பற்றும் ஆசையால்தான் சுர்மாக் கல்லை ஒரு கூழாங்கல்லில் உரசிக் கொண்டிருந்தேன். ஏனெனில் மெல்ல மெல்ல நடைமுறையில் இல்லாமல் ஆகி வருகிறது இந்த நபிவழி.

ஆயத்தமாகவே கிடைக்கும் சுர்மாப் பொடிகளும் வைத்திருக்கிறேன். தமிழகத்து அஞ்சனங்களில் கரிசலாங்கண்ணி சேர்க்கப்படுவது போல் வட மாநிலங்களில் இருந்து வரும் சுர்மாப் பொடிகளில் கற்பூரம் கலந்ததும் ரோஜா கலந்ததும் கிடைக்கின்றன. அப்படி எப்போதோ வாங்கி வைத்த பொடி ஒன்றை ஒருமுறை கண்ணில் இட்ட அடுத்த கணமே எரிதழல் போல் கனன்று அந்தி வானத்து நிறம் வந்துவிட்டது. உடனே கழுவி விட்டேன்.

பிறகுதான் தெரிந்தது. கண்-மைக்கும் காலாவதி உண்டென்று. மேலும் தூய பொருள்தான் கண் காக்குமாம். கலப்படங்கள் கண் கெடுக்குமாம். ஆதலால், அமெரிக்கா போன்ற நாடுகளில் ரசாயன மைகள் தடை செய்யப் பட்டுள்ளன.

சிக்னலின் எந்நிறமும் என் கண்ணின் அடையாளம் ஆவதை ஒருபோதும் நான் விரும்புவதில்லை. இத்தருணத்தில் ஒரு பிரார்த்தனை செய்தேன்:

“இறைவா!
என் கண்களில் பச்சையான பார்வை தோன்றக் கூடாது;
பக்குவமான பார்வையே தோன்ற வேண்டும்.
என் கண்களில் மஞ்சள் பார்வை இருக்கக் கூடாது;
மதுரமான பார்வையே மலர வேண்டும்.
என் கண்கள் சிவந்து போவதும் ஆகாது;
சிந்தனையின் ஒளி அதில் சிறக்க வேண்டும்.
என் பார்வைப் போக்குவரத்தைச் சீராக்கு;
நேரான பாதையில் அதை நடத்துவாயாக!”








2 comments: