Friday, October 5, 2012

மண் குமிழி




தீப்பற்றும்
மண் இது

நீரால் அணையாது
ஒளியால் அணையும்

மண்ணே!
ஒளியும் தீயும்
பாவிக்க இயலாத
அதிரூபம் நினது

தெய்வத்தின்
கைவண்ணம்
மெய்வண்ணம்

நிரப்பி வைத்த
நீர்ப்பானை
ஆயிரம் கண்களால்
அழுவது ஏன்?

நீர்ச்சுழியின்
உட்குழிவில்
நிறைகின்றது
யுகத்தின் மூச்சு

தன்னுள்
எந்த மையம் நோக்கி
ஒளியைத் திரட்ட
குவியாடியின் பாவனை கொள்கிறது
இந்த நீர்ச்சுழி?

நீர்க்குமிழின் ரூபம்
நீரின் ரூபமல்ல

வசீகர வளைவின்
மென் விளிம்பில்
பார்வை கூசும்
சுடர் தாங்கிச் செல்கிறது
நதியில் போக்கில்
நாலைந்து கணங்கள்

சட்டென்று அது
உடைவது
உள்ளிருந்த காற்றின் பரவசத்திலா?
வெளிக்காற்றின் வெறியிலா?
இல்லை
ஒளியின் தழுவலிலா?

குமிழியின் அசைவில்
அவதானித்ததுண்டா
ஆற்றின் அசைவை?

அதன் கண்ணாடியில்
தரிசித்ததுண்டா
கவிந்த வானத்தை
எப்போதேனும்?


a

No comments:

Post a Comment