Wednesday, October 10, 2012

எறும்பின் கண் (தொடர்ச்சி-6)


சுலைமான் நபியின் கடிதத்தைப் படித்த பின் ஸபா நாட்டின் அரசி பல்கீஸ் என்ன முடிவு செய்தார் என்பது திருக்குர்ஆனின் 27-ம் அத்தியாயத்தின் அடுத்த பகுதியில் தொடர்கிறது. பல்கீஸுக்கும் அவரின் அரசாங்கப் பிரமுகர்களுக்கும் நடந்த உரையாடல்:

“எனவே பிரமுகர்களே! என்னுடைய இந்த விஷயத்தில் ஆலோசனை கூறுவீர்களாக! நீங்கள் என்னிடம் நேரடியாகக் கருத்துச் சொல்லாத வரை நான் எந்தக் காரியத்தையும் முடிவு செய்பவள் அல்ல” என்று கூறினாள்.
“நாங்கள் பெரும் பலசாலிகளாகவும், கடினமாகப் போர் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கிறோம்; முடிவு உங்களைப் பொருத்தது. என்ன முடிவு எடுக்கிறீர்கள் என்பதைச் சிந்தித்துக் கொள்ளுங்கள்” என்று அவர்கள் சொன்னார்கள்.
(27:32,33)

இவ்விரு வசனங்கள் மூன்று நபர்களை நம் கண்முன் நிறுத்துகிறது. இறைத்தூதர் சுலைமான் (அலை), பல்கீஸ் அரசி மற்றும் பல்கீஸின் அரசுப் பிரமுகர்கள். இம்மூவரும் மூன்று விஷயங்களின் குறியீடுகளாக உள்ளனர். இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள் ஆன்மிகத்தின் குறியீடு. பல்கீஸ் அரசி இதயத்தின் குறியீடு. அரசுப் பிரமுகர்கள் உடலின் (அதன் ஐம்புலன்களின்) குறியீடு.

ஆன்மிகம் இறைவனின் பக்கம் இதயத்தை ஈர்க்கிறது. ஐம்புலன்கள் உலகின் பக்கம் அதனைத் திருப்புகின்றன.

உண்மையில் இதயம்தான் ஐம்புலன்களின் மீது அதிகாரம் கொண்டதாக உள்ளது. எனினும் அது ஐம்புலன்களின் ஆலோசனைக்கு உட்படுமானால் ஆசாபாசங்களின் வழியில்தான் சென்று கொண்டிருக்கும். ஆன்மிகத்தின் வழியில் அது வராது. எனினும் இதயம் ஆன்மிக நெறியில் அடிபணிந்து அமைதி பெற்றுவிடும் எனில் ஐம்புலன்களும் அதற்கு வசமாகி நிற்கும். ‘முடிவு உங்களைப் பொருத்தது’ என்று பிரமுகர்கள் கூறியது இதனைச் சுட்டும்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருவாய்மொழி:
“உடலில் ஒரு சதைத்துண்டு இருக்கிறது; அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர் குலைந்து விட்டால் உடல் முழுவதும் சீர் குலைந்துவிடும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்.”
(”இன்ன ஃபில் ஜசதி முள்கத்தன் இதா ஸலுஹத் ஸலுஹல் ஜசது குல்லுஹு; வ இதா ஃபசதத் ஃபசதல் ஜசது குல்லுஹு; அலா வஹியல் கல்பு” அறிவிப்பாளர்: நுஃமான் பின் பஷீர் (ரலி), புகாரி ஹதீஸ் #52)

பல்கீஸ் அரசி ஆலோசனை கேட்டபோது அவரின் பிரமுகர்கள் தங்களின் படை பலத்தை எடுத்துக் கூறி அவரை சுலைமான் நபிக்கு அடிபணியாமல் எதிர்த்துப் போரிடுமாறு தூண்டுகிறார்கள். அவர்கள் சுலைமான் நபியை ஓர் அரசராகப் பார்த்தார்களே அன்றி இறைத்தூதராகப் பார்க்கவில்லை. அதாவது ஐம்புலன்கள் வெளியுலகை அறியும் தன்மை கொண்டவையே அன்றி அகவுலகைக் காண்பவை அல்ல. இத்தகைய வெளிப்புலன்கள் மட்டும் இருந்து இதயம் குருடானவர்களைப் பற்றித்தான் திருக்குர்ஆனின் பின்வரும் வசனங்கள் கடிந்து பேசுகின்றன:

“செவிடர்களாக ஊமைகளாக குருடர்களாக இருக்கின்றனர்
எனவே அவர்கள் மீளமாட்டார்கள்”
(2:18)

”இறை நிராகரிப்பாளர்களுக்கு உதாரணமாவது
ஒருவனின் கூப்பாட்டையும் கூச்சலையும் தவிர
வேறெதனையும் கேட்டறிய இயலாதவை போன்றதாகும்;
அவர்கள் செவிடர்களாகவும் ஊமைகளாகவும்
குருடர்களாகவும் இருக்கின்றனர்;
அவர்கள் எதனையும் உணரமாட்டார்கள்.”
(2:171)

”அவர்களுக்கு இதயங்கள் உள்ளன
ஆனால் அவற்றால் உணர்வதில்லை;
அவர்களுக்குக் கண்கள் உள்ளன
ஆனால் அவற்றால் காண்பதில்லை;
அவர்களுக்குச் செவிகள் உள்ளன
ஆனால் அவற்றால் கேட்பதில்லை;
இவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள்;
இல்லை! அவற்றினும் இழிந்தவர்கள்!”
(7:179)

“யார் இம்மையில் குருடனோ
அவன் மறுமையிலும் குருடனே”
(17:72)

”நிச்சயமாகக் கண்கள் குருடாகவில்லை
நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள் குருடாகின்றன”
(22:46)


தனது பிரமுகர்கள் சொன்ன பதிலைக் கேட்டுவிட்டு பல்கீஸ் அரசி சொன்னது பின்வருமாறு:
“அவள் கூறினாள்: ‘அரசர்கள் ஒரு நகரத்துள் நுழைவார்களானால் நிச்சயமாக அதனை அழித்து விடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை சிறுமைப்படுத்தி விடுகிறார்கள். அவ்வாறுதான் இவர்களும் செய்வார்கள்.” (27:34)

சுலைமான் நபியவர்கள் எறும்புகளின் பள்ளத்தாக்கிற்கு வந்தபோது தலைவி எறும்பு அவர்களின் படையைப் பார்த்துவிட்டுக் கூறியதை இங்கே நினைவு கூருங்கள்:
“எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; சுலைமானும் அவருடைய சேனைகளும் அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு” (27:18)

’இந்த எறும்பு பல்கீஸ் அரசிக்கு ஒரு குறியீடாக இருக்கிறது’ என்று முன்பே குறிப்பிட்டேன் அல்லவா? பல்கீஸ் அரசியின் நிலை அந்த எறும்பின் நிலை போல் ஆகியிருந்தது.

பல்கீஸ் அரசியின் இந்த உரையாடலுக்குள் உள்ள ஞான உட்பொருளாக சூஃபிகள் சொலவதாவது: இறைவனின் ஒளிச்சுடர்கள் ஒரு மனிதனின் இதயத்திற்குள் நுழையும்போது அதில் அவன் வைத்திருக்கும் இறைவனல்லாத வஸ்துக்களின் பற்றுக்களையும் பிம்பங்களையும் அவை அழித்து விடும்.

பல்கீஸ் அரசி ஒரு முடிவு எடுத்தார். சுலைமான் நபிக்கு அன்பளிப்புக்களை அனுப்பி வைத்துச் சமாதானம் செய்ய நாடினார்:
“ஆகவே, நிச்சயமாக நான் அவர்களுக்கு ஓர் அன்பளிப்பை அனுப்பி, தூதர்கள் என்ன கொண்டு வருகிறார்கள் என்பதைப் பார்க்கப் போகிறேன்.” (27:35)


நம்முடைய மனமும் பல நேரங்களில் இப்படித்தான் செயல்படுகிறது என்பதை எண்ணிப் பாருங்கள். பாவங்கள் புரிவதும் பிறகு அதற்குப் பரிகாரம் தேடுவதும். ‘இறைவா! உனக்கான வழிபாடுகளை எல்லாம் நான் செய்துவிடுகிறேன். ஆனால் நான் என் இஷ்டத்திற்கு வாழ என்னை நீ விட்டுவிடு’ என்று மனம் தகிடுதத்தம் செய்ய நினைப்பதைப் போன்றது இது.

உன் வழிபாடுகள் இறைவனுக்குத் தேவையா? அவன் தேவையற்றவன் ஆயிற்றே. உன் காணிக்கைகளால் அவனை நீ விலைக்கு வாங்க முடியுமா? அவன் கொடுத்ததையே அவனுக்குத் திருப்பிக் கொடுத்து அவனை வளைக்க நினைக்கிறாயா? இப்படிப்பட்ட மடத்தனம் பலரிடமும் உள்ளது. இறைவனுக்குக் காணிக்கை செலுத்திவிட்டால் என்ன அநியாயம் செய்தாலும் அவன் நம்மைக் காப்பது அவன் மீது கடமை ஆகிவிடுகிறது என்றும் அவன் தங்களைத் தண்டிக்க மாட்டான் என்றும் நினைக்கிறார்கள்.

ஆனால் மனிதனின் இந்த மடத்தனத்தைப் பார்த்து இறைவன் சிரிக்கிறான். மனிதன் மனப்பால் மாந்தி மகிழ்ந்திருக்கட்டும் என்று சில காலம் அவனை விட்டுப் பிடிக்கிறான். பல்கீஸ் அரசியின் அன்பளிப்புக்களைப் பார்த்ததும் சுலைமான் நபி அவ்வாறுதான் சொன்னார்கள்:
”அவ்வாறே சுலைமானிடம் வந்தபோது அவர் சொன்னார்:
‘நீங்கள் எனக்குப் பொருளைக் கொண்டு உதவி செய்கிறீர்களா?
அல்லாஹ் எனக்குக் கொடுத்திருப்பது
உங்களுக்கு அவன் கொடுத்திருப்பதை விட மேலானதாகும்.
எனினும் உங்கள் அன்பளிப்பைக் கொண்டு
நீங்கள்தான் மகிழ்ச்சி அடைகிறீர்கள்!
அவர்களிடமே திரும்பிச் செல்க.
நிச்சயமாக நாம் அவர்களால் எதிர்க்க முடியாத
ஒரு பெரும்படை கொண்டு அவர்களிடம் வருவோம்;
நாம் அவர்களைச் சிறுமைப்படுத்தி
அவ்வூரிலிருந்து வெளியேற்றி விடுவோம்.
மேலும் அவர்கள் இழிந்தவர்கள் ஆவார்கள்”
(27:36,37)

சூரியனுக்குச் சிரம் பணிந்து கொண்டிருந்த பல்கீஸ் அரசிக்கும் அவரின் சமூகத்தவருக்கும் இப்பிரபஞ்சத்தின் படைப்பு மற்றும் தரிப்பாட்டின் தத்துவத்தை விளக்கி அதன் வழியே ஏகத்துவ இறைக்கொள்கையின் பக்கம் அழைக்க சுலைமான் நபி இரண்டு காரியங்கள் செய்தார்கள். அக்காரியங்களின் உட்பொருளை பல்கீஸ் அரசி உடனே விளங்கிக் கொண்டார். ஏனெனில் எந்தத் தத்துவத்திற்குக் குறியீடாக சூரியன் வெளியுலகில் அமைந்துள்ளதோ, எந்தத் தத்துவத்தைத் தொலைத்துவிட்டு அதன் குறியீடான சூரியனை அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தார்களோ அந்தத் தத்துவத்தை சுலைமான் நபி தன் செயலின் மூலம் அவரின் இதயத்திற்குச் சுட்டிக் காட்டிவிட்டார்கள்.

(தொடரும்) 

No comments:

Post a Comment