Wednesday, December 26, 2012

பெண்மை இனி-தடா



செய்தித்தாளைப் படிக்கவே பெரும் பீதியாக இருக்கிறது. கடந்த பத்து நாட்களில் பத்துக் கற்பழிப்புச் சம்பவங்களாவது நிகழ்ந்திருக்கின்றன. இந்திய நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்னும் கேள்வியை மிக வலுவாக எழுப்புகின்ற சூழல் அவ்வப்போது சில காலகட்டங்களில் உருவாகும். இப்போது அச்சூழல் வந்துள்ளது.


நாட்டின் தலைநகரில் ஓடும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் மூன்று நபர்களால் வன்கலவி செய்யப்பட்டு சிறுகுடல் சிதைந்து போய் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவது நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு இப்பிரச்சனையை எப்படிக் கையாள்கிறது என்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இக்கொடுஞ் செயலை நிகழ்த்தியவர்களைப் பத்திரிகைகள் தொடர்ந்து ‘மர்ம நபர்கள்’ என்றே எழுதி வருவதில் உள்ள அசட்டுத் தனம் உறுத்துகிறது. (விபச்சாரிகளை அழகிகள் என்று எழுதுவார்களே அது இன்னொரு அசட்டுத் தனம்.) அவர்கள் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களின் முகம் இன்னும் வெளியுலகிற்குத் தெரியவில்லை. அவர்களின் விவரங்கள் வெளிப்படுத்தப் படவில்லை. ‘பெரிய இடத்துப் பிள்ளைகளாக இருக்கலாம்’ என்னும் யூகம் உண்மையக இருக்கக் கூடும். அரசு அந்தக் கிரிமினல்களைக் காப்பாற்ற முயல்கிறதா என்னும் சந்தேகம் எழுவதற்கு அரசின் இப்படியான மெத்தனப் போக்கே காரணமாகிறது.

இந்த நிலை பைபிளில் வரும் ஒரு சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது. விபச்சாரம் செய்துவிட்டாள் என்று ஒரு பெண்ணை யூதர்களின் கும்பல் துரத்திக் கொண்டு வருகிறது, கல்லால் அடித்துக் கொல்வதற்காக. விபச்சாரத்திற்கான் இந்த வகை மரணதண்டனை மூசா நபியின் ஷரீஅத் சட்டத்தில் இருந்தது. அவள் ஓடி வந்து இயேசு நாதரின் காலில் விழுந்து காப்பாற்றுமாறு கதறுகிறாள். கையில் எடைக்கல் போன்ற கற்களுடன் மூர்க்கமாக ஓடிவரும் கும்பல் எளிமையே உருவான இயேசுவைக் கண்டு அப்படியே நிற்கிறது. இயேசு ஒருவகையான் ரெபல் என்பதற்கு இந்த இடமொரு சான்று. அவரின் பார்வையில் கருணை மட்டுமே நிரம்பி வழிவதாகவே சித்திரங்கள் நமக்குக் காட்டுகின்றன. இறைஞானியின் கண்களில் ஞானக்கருணை மட்டுமல்ல தேவைப்படும் இடங்களில் ஞானக்கோபமும் (அறச்சீற்றம்/ ரௌத்திரம்) வெளிப்படும். இந்நிகழ்வில் இயேசுவிடம் அப்படியான பார்வைதான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் உடனே எதுவும் பேசவில்லை. அந்த மௌனம் இங்கே ஒரு சிங்கத்தின் மௌனத்தைப் போல. “உங்களில் யார் பாவமே செய்யவில்லையோ அவர்கள் முதலில் கல்லெறியட்டும்” என்னும் வாசகம் சிங்கத்தின் கர்ஜனை போல் அங்கே ஒலித்திருக்க வேண்டும். அருள் கொஞ்சும் தொனியில் அல்ல. பைபிளில் வரும் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் சில கேள்விகளை எழுப்புகிறார் ஓஷோ. அவர் சொல்கிறார், “ஒரு பெண் தனியாளாக விபச்சாரம் செய்ய முடியாது. அவளுடன் ஈடுபட்டிருந்த அந்த ஆண் எங்கே? அவளைத் துரத்தி வரும் அந்தக் கும்பல் அவனை எங்கே தப்பிக்க விட்டது? ஒருவேளை அவன் யாராவது மந்திரியின் மகனாக இருந்திருப்பான் அல்லது பணமுதலையின் மகனாக இருந்திருப்பான். எனவே வசதியாக அவனைத் தப்பிக்க விட்டுவிட்டார்கள்”

நாடெங்கும் தொடர்ந்து கண்டனப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தியா கேட் முன் பல நாட்கள் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் திரண்டு போராடி வரும் நிலையில் 144 தடையுத்தரவு விதிக்கப்பட்டு இன்னும் தீவிரமடைந்துள்ளது. ஏதோ ஒரு கல்வி நிலையத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய மதிப்பிற்குரிய குடியரசுத்தலைவர் சொல்லியிருக்கிறார்: “மாணவர்களின் கோபம் நியாயமானது”. கேட்டதும் அடேங்கப்பா என்றிருந்தது. என்ன செய்வது, பன்முகத்தன்மை கொண்ட இத்தனைப் பெரிய குடியரசு நாட்டில் ஜனாதிபதி என்னும் பொறுப்பு மிகுந்த பதவியிலிருக்கும் ஒருவர் சொல்ல முடியுமான உட்சபட்ச புரட்சி வாசகம் இதுவாகத்தான் இருக்க முடியும். ஆனால் அதைத் தொடர்ந்து அவர் மாணவர்களுக்கு ஓர் அறிவுரையும் சொல்லியிருக்கிறார்: “மாணவர்கள் தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்”. நினைத்துக் கொண்டேன், வன்கலவி செய்பவர்கள் தங்களின் உடல் வெறியைக் கட்டுப்படுத்தியிருந்தால் இந்த நிலை ஏன்? மேலும், இந்தியர்கள் பல விஷயங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஏற்கனவே நாட்டின் ஜனத்தொகை எகிறிக்கொண்டு போகிறது. இப்போது கற்பழிப்புக் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. ”இந்தியர்கள் தங்களின் இச்சைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றுதான் அறிவுரை அருள முடியும்.
குடியரசுத் தலைவரின் இந்த இரண்டு வரிகளும் என் காதில் ஒரு ஞான வாசகமாக ஒலித்துக் கொண்டிருந்தது. அதில் உள்ள முரணழகை அப்படியே நீட்டிச் சிந்தித்தபோது சீன மகாஞானி லாவ்சூவின் தாவ்-டே-ச்சிங் பாணியில் தத்துவ வரிகள் உருவாகி வந்தன:

”உங்கள் கோபம் நியாயமானது
கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்
கோபத்தை வெளிப்படுத்துவது அநியாயம்

பாடல் திறன் இருப்பது நியாயம்
பாடுவது அநியாயம்
பாடாதிருப்பதே நலம்

ஆடல் திறன் இருப்பது நியாயம்
ஆடுவது அநியாயம்
ஆடாதிருப்பதே நலம்

எழுத்துத் திறன் இருப்பது நியாயம்
எழுதுவது அநியாயம்
எழுதாதிருப்பதே நலம்

எதுவும்
இருப்பது நியாயம்
வெளிப்படுவது அநியாயம்
மறைந்திருப்பதே நலம்”

இந்த ரீதியில் சிந்தனைகள் கிளம்பி என்னை பயமுறுத்திக் கொண்டிருந்ததால் மனதை திசைத்திருப்பி ஜனாதிபதி அவர்கள் சொன்ன அடுத்த கருத்தைக் கவனித்தேன். “கொடுமைக்கு உள்ளான மாணவி விரைவில் நலம் பெறப் பிரார்த்திக்கிறேன்”. மணியான வாசகம். இதை மாணவர்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். மத்திய அரசே முன்வந்து இலவசமாக ஆளுக்கொரு சப்ளாக்கட்டை கொடுத்துவிட்டால் இந்தியா கேட் பகுதியில் மாணவர்கள் அமைதியான முறையில் அமர்ந்து பஜனை பாடிப் பிரார்த்தனையில் ஈடுபடலாம். தள்ளு முள்ளு, தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு என்று இந்தக் கருமத்துக்கெல்லாம் வேலையே இல்லை. இப்படியாக இந்தியாவெங்கும் பஜன் மூலம் போராட்டங்கள் நிகழ்த்தப்படும் போது பாவாத்மாக்கள் எல்லாம் புண்யாத்மாக்களாக ட்ரான்ஸ்ம்யூட் ஆக நல்ல வாய்ப்புள்ளது. அப்புறம் வன்கலவி என்ன, மென்கலவிக்குக் கூட முனைய மாட்டார்கள். 

மாணவர்கள் என்றால் மட்டும் என்ன சும்மாவா? போலீசையே திருப்பி அடிக்கிறார்கள். அதில் ஒரு காவலர் செத்தே போய்விட்டார். இப்போது அவரின் குடும்பம் ஆதரவற்ற நிலையில் கதறிக் கொண்டிருக்கிறது. மாணவர்களின் சக்தி என்பது எந்த அளவுக்குத் தீவிரமானதோ அந்த அளவுக்குச் சட்டென்று நிதானம் இழந்து போகக்கூடியதும் ஆகும். நல்ல நோக்கத்தில்தான் போராடுவதற்கு அவர்கள் அங்கே கூடினார்கள் என்றாலும் அவர்களுக்கென்று ஒரு மைய அச்சு இல்லை. ஒருவித ஹைப் தன்மையில் அங்கே கூடியவர்கள் அவர்கள். எத்தகைய இளைஞர்கள்? இன்றைய இந்தியாவின் சராசரி இளைஞர் கூட்டம்தான் அது. ஃபோட்டோக்களில் பார்த்த போது அதில் சிலர் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு ரீலீசன்று சினிமா தியேட்டர் முன் நிற்கும் முக பாவனை அவர்களிடத்தில் இருந்தது. ஆழமான சமூகப் பிரக்ஞை உள்ளவர்களாகத் தெரியவில்லை. குப்பைத்தனமான திரைப்படங்கள் காட்டும் சமூகப் பிம்பத்தையும் அரைவேக்காட்டு சித்தாந்தங்களையுமே வரித்துக் கொண்டிருப்பவர்கள் அவர்கள். ஆயிரக்கணக்கான அந்த மாணவர்களில் உண்மையான சமூக அக்கரையுடன், இந்த நிகழ்வை ஒற்றை நிகழ்வாகக் கருதாமல் இதன் பின்னணியில் கால தேசப் பரிமானங்களில் விரியும் சிக்கல்களின் ஒட்டுமொத்தத் தோற்றத்தை மனத்தில் அவதானித்துத் தீவிரமான மன அதிர்ச்சிக்கு ஆட்பட்டு முக்கியத்துவத்தை உணர்ந்து போராடுபவர்கள் என்று ஒரு டஜன் பேர் இருந்திருக்கலாம். அதுவே பெரிய எண்ணிக்கை. நல்ல வேளையாக இந்தப் போராட்டத்திலிருந்து இன்னும் எந்தத் தம்பி ஹஜாரேவும் புறப்பட்டு வரவில்லை.

சில மாதங்களுக்கு முன் செய்தித்தாள்களில் வந்து அதிர்ச்சி அளித்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. க்ரூப் ஸ்டடிக்காக சக மாணவியின் வீட்டிற்குச் செல்லும் நான்கு மாணவர்கள் அவள் வீட்டில் வைத்தே அவளைக் கற்பழித்தார்கள். இத்தனைக்கும் அந்த மாணவியின் அன்னையை வாயார ‘அம்மா அம்மா’ என்று அழைத்து அவரும் இவர்களைத் தன் பிள்ளைகளைப் போல் பாவித்து வாஞ்சையுடன் சமைத்துப் பரிமாறியதை மூக்குப் பிடிக்க மொக்கியவர்கள்தான் அவர்கள். அப்படிப்பட்ட மாணவர்கள் இந்தப் போராட்டக் கூட்டத்திலும் இருப்பார்கள். இல்லை என்று மறுக்க என்ன முகாந்திரம் இருக்கிறது?

டெல்லியில் நடந்த சம்பவத்துக்கு இத்தனை தீவிரமான எதிர்ப்புக்கள் நாடெங்கும் வெடித்திருப்பது விழிப்புணர்விற்கான அடையாளமாக இருக்கலாம் என்றாலும் அதே நேரம் இங்கே தமிழகத்தில் நடந்த பாலியல் கொடுமைகள் அந்த அளவுக்குக் கண்டுகொள்ளப் படவில்லை என்பது ஏன்? எத்தனைக் குரூரமான சம்பவங்கள் அவை!

ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று கற்பழித்தார்.
ஸ்கூல் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பதின்பருவ மாணவியை ஒரு கும்பல் ஊருக்கு வெளியே வைத்து வன்கலவி செய்தபின் கொலை செய்து பிணத்தைப் புதரில் வீசிவிட்டுப் போனது.

மருத்துவ மனையில் அட்மிட் ஆகியிருக்கும் தங்கையைப் பார்த்துவிட்டுத் தனியே வீடு திரும்பிய பதின்மூன்று வயது மாணவி ஒருத்தி வீட்டுக்கு வழி தெரியாமல் தவிக்க, இரவு அடைகலம் கொடுக்கப்பட்ட ஒரு வீட்டில் அவரின் கற்பு சூறையாடப்படுகிறது (மும்பையில் நடந்தது)

மணிமுத்தாறில் ஆற்றங்கரையில் ஒரு காதல் இணை அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாம். அவ்வழி வந்த மூன்று பேர் அப்பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு செல்ஃபோனையும் நானூறு ரூபாய் பணத்தையும் பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டார்கள் என்கிறது செய்தி. (அந்தக் காதல் மன்னனை முதலில் கட்டிப் போட்டு விட்டார்களாம்.)

இப்படி நாளும் வந்து குவியும் செய்திகளை வெட்டி வைத்தால் வாரத்துக்கு ஒரு சிறுகதை நூல் அளவு தேரும் போலிருக்கிறது. வருடம் முழுதும் தொகுத்தால் ஒரு பெரிய வால்யூமே வரும். பத்தாண்டுகளில் பத்து வால்யூம்களில் Modern Encyclopedia Indiana உருவாக்கிவிடலாம்.

இது இன்று நேற்று உருவாகி நடந்து வரும் கதை அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்படியான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்பதற்குப் பழைய இலக்கியங்களில் சான்றுகள் உண்டு. உதாரணமாக மணிமேகலையில் ஒரு பெண் தரும் வாக்குமூலம் சீத்தலைச் சாத்தனாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவலன் கண்ணகியை அழைத்துக் கொண்டு பிழைப்பதற்காக மதுரை போய்விட்ட பிறகு மாதவி தன் மகள் மணிமேகலையுடன் புத்த மடாலயம் ஒன்றில் அடைக்கலம் ஆகி ஆன்மிக வாழ்க்கை மேற்கொள்கிறாள். அங்கே அவளுக்குச் சுதமதி என்ற பெண் ஒருத்தி தோழியாக வாய்க்கிறாள். அப்படியாக பூஜை தியானம் நட்பு என்று சாந்தமாக நாட்கள் கழிந்து கொண்டிருக்கையில் ஒருநாள், கோவலன் கொலை செய்யப்பட்ட செய்தியும் மதுரையை எரித்துவிட்டுக் கண்ணகி விண்ணேகிய செய்தியும் கிடைக்கிறது. அதைக் கேள்விப்பட்டு மணிமேகலை அழுகிறாள். புத்தரின் சிலைக்குச் சாற்றுவதற்காக அவள் கோர்த்துக் கொண்டிருந்த மாலையில் அவளின் கண்ணீர்த் துளிகள் விழுகின்றன. மாலை தீட்டாகிவிட்டது என்று சொல்லும் மாதவி ஊருக்கு வெளியே உள்ள மலர்வனத்திற்குப் போய்ப் புதிய பூக்களைப் பறித்து வருமாறு அவளிடம் சொல்கிறாள். அப்போது மாதவியின் தோழி சுதமதி அதை மறுத்து, மணிமேகலை அழகிய பெண் என்பதால் அவள் தனியே காட்டுப்பகுதிக்குச் செல்வது ஆபத்து என்று சொல்கிறாள். (ஆண் தனியே காட்டுக்குச் சென்றால் உயிருக்குத்தான் ஆபத்து. பெண் எனில் கற்புக்கும் சேர்த்து என்னும் நிலை, அப்போதும் இப்போதும் மாறவே இல்லை.) எத்தகைய ஆபத்து என்பதற்குத் தன் வரலாற்றைக் கூறுகிறாள். சுதமதி ஒரு பிராமணப் பெண். அந்தணர் ஒருவரின் மகள். வெளியுலகம் தெரியாமல் செல்லமாக வளர்ந்த பிள்ளை. சின்னத்தம்பி படத்தின் குஷ்பூ போல வெளியுலகைக் காண ஊர்கோலம் போக வேண்டும் என்று அவளுக்கு ஆசை. அந்த ஆசை ஒருநாள் மிகைக்கவே சின்னத்தம்பி பெரியதம்பி என்று எந்தத் தம்பியையும் துணைக்கு அழைத்துக் கொள்ளாமல் தானாகவே கிளம்பிப் போகிறாள். இந்த இடத்தில் பூம்புகார் நகரைச் சுற்றி ஐந்து வகைக் காடுகள் இருந்ததைச் சாத்தனார் குறிப்பிடுகிறார். பயங்கராமான நிலக்காட்சிகள். அது இந்திர விழாக் காலம். மேலுலகில் இருந்து தேவர்கள் விஞ்சையர்கள் என்று பல வகையானவர்கள் வந்து செல்லும் டூரிஸ்ட் சீசன். கானகத்தில் தனியே நின்ற காரிகையான சுதமதியை, வானவூர்தியில் வந்து கொண்டிருந்த விஞ்சையன் ஒருவன் கண்டு காமம் மிகவே அப்படியே அவளை அள்ளியெடுத்து வானவூர்தியில் சாய்த்து அந்தரத்தில் பறந்தபடி பலாத்காரம் செய்தபின் மீண்டும் கீழே இறக்கி விட்டுவிட்டுப் போய்விடுகிறான். யார் அந்த விஞ்சையன் என்று அடையாளம் காட்டிக் கைது செய்வதெல்லாம் பூம்புகார் போலீசால் முடிகிற காரியமா? சுதமதி என்னும் பிராமணப் பெண் (வயது 16) ஒரு மர்ம நபரால்… என்கிற போக்கில் பெட்டிச் செய்தி போட்டிருப்பார்கள், அவ்வளவுதான்.

இவ்வகையான அநாகரிகச் செயல்கள் ஏன் நிகழ்கின்றன என்று பல கோணங்களில் ஆராய இடமுண்டு. உளவியல் அடிப்படையில் சிந்தனையை இயக்கினால் கிடைக்கும் பார்வைகளில் பல் நிச்சயம் கச்ப்பானவையாக இருக்கும். பெண்ணின் உடலை போகப் பொருளாக பாவிப்பதும் உடைமையாக பாவிப்பதும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று. எதுவரை இந்த இரண்டும் தொடர்ந்து கொண்டிருக்குமோ அதுவரை பெண்ணின் மீதான வன்முறைகள் மறைய முடியாது. பெண்ணைச் சார்ந்து கட்டமைக்கப்பட்டிருக்கும் விழுமியங்கள் அதிகம். ஒரு குடும்பத்தின், சாதியின், மதத்தின், மண்ணின் நற்பெயர் என்பது அதனைச் சார்ந்த பெண்ணின் மீது ஏற்றிப் பார்க்கப்படுகிறது. எனவே அவளுக்குச் செய்யும் வன்முறையான பாதிப்பு என்பது அவள் சார்ந்துள்ள அமைப்பின் வீழ்ச்சியாகப் பார்க்கப் படுகிறது. சூதாட்டத்தில் தோற்று அவமானப்பட்ட ஒருவன் ஜெயித்தவன் மீது வன்மம் வைத்து சமயம் பார்த்திருந்து அவனுடைய மகளைக் கடத்திச் சென்று சந்தையில் விற்க அவள் தொலை தூரமான ஓர் ஊரில் விலைமகள் ஆக்கப்படுகிறாள். இது உருதுவின் முதல் நாவலான ’உம்ராவோ ஜான் அதா’ என்பதன் கதையின் ஆரம்பம். (கமலின் ‘மகாநதி’ நியாபகம் வருகிறதா?)

பள்ளிக்கூடச் சிறுவர்களிடம் உள்ள ஓர் உளவியலை இங்கே கவனிக்க வேண்டும். தன்னிடம் இல்லாத ஒரு பொருளை இன்னொருவன் வைத்திருப்பதைப் பார்த்தால் அவனுக்கு எழும் மனத்தூண்டல். அதே போல் தனக்கும் ஒன்று வேண்டும். கிடைக்காது என்னும் பட்சத்தில் அவனிடம் இருப்பதை அபகரிக்க வேண்டும் அல்லது அவனுக்கும் இல்லாமல் அழித்துவிட வேண்டும். இதே மனநிலை ‘வளர்ந்த’ பேர்களிடையே பிணக்குகள் ஏற்படும்போது பெண்ணை அந்த உடைமைப் பொருளாக வைத்துப் பார்க்கிறது, செயல்படுகிறது.

இதுவும் இன்று நேற்று உருவான கதை அல்ல. எனக்கு ஆதிபிதா ஆதம் நபியின் பிள்ளைகளின் கதை நினைவுக்கு வருகிறது. ஆதாம் ஏவாள் என்று இரண்டே பேர்தானே அப்போது. அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் வளர்ந்து ஆளான போது அவர்களுக்குத் திருமணம் முடிக்க வேண்டிய நிலை வருகிறது. ஆதமின் பிள்ளைகளில் மூத்த மகன் ஆபில். அவனின் தம்பி காபில். அவர்களைத் தொடர்ந்து பிறந்தவர்களில் இரு பெண்களை (சகோதரிகளைத்தான்! வேறு வழி?) இருவருக்கும் நிச்சயம் செய்கிறார் தந்தை ஆதம். அண்ணனுக்குப் பேசிய பெண் தனக்குப் பேசிய பெண்ணைவிட அழகியாக இருப்பதாகத் தம்பி காபில் அபிப்ராயப் படுகிறான். அவளைத் தனக்குக் கட்டிவைக்குமாறு தந்தையிடம் கேட்கிறான். இறைவனின் ஏற்பாடு அது என்றும் அதில் தான் மாற்றம் செய்ய முடியாது என்றும் அவர் கூறிவிடுகிறார். மாற்றிக்கொள்ளலாம் என்று அண்ணனிடம் கேட்கிறான். தந்தை ஒரு நபி. அவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடப்பது நம் கடமை என்கிற ரீதியில் அவன் லெக்ச்சர் அடிக்கவே தம்பி மிகக் கடுப்பாகிப் போகிறான். (பேசுவடா நீ, ஏன் பேச மாட்ட, அழகான புள்ளைய ஒனக்குக் கொடுத்திட்டாங்கள்ல, பேசுவ நீ). அவன் நெஞ்சில் அது வன்மமாக வளர்கிறது. அதன் விளைவு? இன்றைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பின்வரும் ஆப்ஷன்கள் தருகிறேன்:

a) தற்கொலை செய்து கொள்கிறான்
b) தந்தையைக் கொலை செய்கிறான்
c) அண்ணனைக் கொலை செய்கிறான்
d) அந்த அழகிய பெண்ணைக் கொலை செய்கிறான்
e) தனக்குப் பேசிய பெண்ணைக் கொலை செய்கிறான் (லாஜிக்கே இல்லை என்றாலும்      இவ்விசயமெல்லாம் விவஸ்த்தைக்கு அப்பாற்பட்டதாகத்தானே இருக்கின்றது)
f) பேசியபடித் திருமணம் செய்து கொண்டு விரக்தியில் வாழ்க்கையைக் கழிக்கிறான்
g) பேசியபடித் திருமணம் செய்து கொண்ட பின் ஒருநாள் அண்ணனையும் தன் மனைவியையும் கொலை செய்கிறான்.

ச்செ, இப்படியே எழுதிக்கொண்டிருந்தால் ஏதோ புதுப்பேட்டை படத்தின் நிழலுலகக் கதை போல் தொனிக்கிறது. வேறு சாத்தியங்கள் உங்களுக்குத் தோன்றினால் சேர்த்துக் கொள்ளுங்கள்.

விடை பலரும் அறிந்ததுதான். அண்ணனைக் கொலை செய்துவிட்டான். உலகில் நடந்த முதல் கொலை. Arranged Marriage-க்கு எதிரான கலகம். அழகிய பெண் தனது உடைமையாக இருக்க வேண்டும் என்ற மனப்பான்மை. தனக்கு அவள் கிடைப்பதற்கான சூழலை உருவாக்க எண்ணி தற்போதைய உடைமையாளனைத் தீர்த்துக்கட்டும் திட்டம். மனிதன் மகா பொல்லாதவன் ஐயா.


No comments:

Post a Comment