Friday, December 14, 2012

சிதாரின் பிதாமகன்ஒரு சகாப்தத்தின் முடிவு என்று இசையுலம் சொல்லிக் கொள்ளும்படியாக மாபெரும் சிதார் இசைக்கலைஞர் பண்டிட் ரவிஷங்கர் இறப்பெய்திவிட்டார். அமெரிக்க நேரத்திற்கு 11-12-2012 மாலை 4:30-க்கு கலிஃபோர்னியா சான் தியாகோவில் க்ரிப்ஸ் மருத்துவமனையில் அவரின் உயிர் பிரிந்தது என்கிறது செய்தி. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறி உலகையே தம் திறமையால் வியக்க வைத்து அமெரிக்காவிலேயே இறந்துபோகும் ஜீனியஸ்களின் பட்டியலில் இன்னொரு பெயராக இப்போது பண்டிட் ரவிஷங்கர்.

1999-ல் பார்த ரத்னா விருதினைப் பெற்ற ரவிஷங்கரின் மரணச் செய்தியைக் காலையில் தி ஹிண்டு நாளிதழில் அறிந்தேன். முழுசாக மூன்று பக்கங்களுக்கு அவரைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளது தி ஹிண்டு. ஆனால் வகுப்பறையில் மாணவர்களிடம் கேட்டபோது இந்த இசைமேதையைப் பற்றி ஒருவருக்குமே தெரியவில்லை. “என்ன படத்திற்கு சார் இசை அமைத்திருக்கிறார்?” என்ற கேள்வியை ஒருவன் கேட்டு வைத்தான். இந்த அபத்தம், அவலம் நம் நாடெங்கும் பரவிக்கிடக்கும் ஒன்றுதானே? “என்ன செய்வது தம்பி, கோலிவுட் படங்களுக்கு இசையமைக்கும் பெறும்பேறு அவருக்குக் கிடைக்கவில்லையே?” என்று மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது. இத்தனைக்கும், முந்தாநாள் ஒருவன் கேட்டான், “சார் நாளை (12-12-2012) காலேஜுக்கு லீவு விடுவாங்களா?” என்று ஒருவன் கேட்டான். எதற்கு என்று கேட்டபோது சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் சார் என்று பதில் சொன்னான். ”இன்று (11-12-2012) யாருக்குப் பிறந்த நாள் தெரியுமா?” என்று கேட்டேன். வகுப்பில் யாருக்குமே தெரியவில்லை. பாடநூலான இலக்கிய வரலாற்றில் எடுத்துக் காட்டினேன், மகாகவி பாரதியின் பிறந்தநாள் என்பதை. அப்படி 12-12-2012 அன்று விடுமுறை விடுவதென்றால் ரவிஷங்கர் இறப்பிற்காக விட்டிருக்கலாம்.

தன் வய்லின் இசை மேதைமையால் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனையே உள்ளம் உருகி அழ வைத்தவர் யஹுதி மெனுஹின். அவருடன் சேர்ந்து 1966-ல் அமெரிக்காவில் ரவிஷங்கர் இசைநிகழ்ச்சி ஒன்றில் வாசித்தார். அந்த இசை “WEST MEETS EAST” என்னும் ஆல்பமாக வெளிவந்தது. அந்த இசைப்பேழைக்காக 1967-ல் சேம்பர் ம்யூசிக் பிரிவிற்கான க்ராம்மி விருதினை வென்றார். பீட்டில்ஸ் இசைக்குழு உலகப் புகழ் பெற்று சக்கை போடு போட்டுவந்த காலகட்டம் அது. அந்த ஆண்டில்தான் பீட்டில்ஸ் இசைக்குழுவும் சிறந்த ஆல்பத்திற்கான க்ராம்மி விருதினைப் பெற்றிருந்தது. இந்திய செவ்வியல் இசை (அதில் குறிப்பாக ஹிந்துஸ்தானி) மீது ஈடுபாடு கொண்டிருந்த பீட்டில்ஸ் குழுவில் ஒருவரான ஹாரிஸன் ஃபோர்ட் பண்டிட் ரவிஷங்கருக்காக அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். அவ்வாறு அவர் 1971-ல் ஒருங்கிணைத்த பங்களாதேஷ் நிதியுதவி நிகழ்ச்சியில் ரவிஷங்கர் வாசித்த இசை பின்னர் ஆல்பமாக வெளிவந்து அவருக்கு இரண்டாவது க்ராம்மி விருதினைப் பெற்றுத் தந்தது. புத்தாயிரமாண்டான 2000-ல் அவரின் Full Circle: Carnegie Hall 2000 என்னும் ஆல்பம் சிறந்த உலக இசைப் பேழை என்னும் பிரிவிற்கான க்ராம்மி விருதினைப் பெற்றது. இவ்வாறு மூன்று க்ராம்மி விருதுகளைப் பெற்ற அவருக்கு இப்போது அவர் இறந்த மறுதினம் வாழ்நாள் சாதனையாளருக்கான க்ராம்மி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைத்துறையில் அவருடைய இசைப்பங்களிப்பு முக்கியமான இடத்தைப் பெறுவது எண்ணிக்கையை வைத்து அல்ல. சில படங்களுக்கே அவர் இசையமைத்திருக்கிறார் என்றாலும் அவை உலகின் கவனத்தைப் பெற்றன. 1950-களில் அவர் முதலில் இசையமைத்த மூன்று படங்களும் இன்றளவும் உலகெங்கிலும் திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக உள்ளவை – வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது பெற்ற சத்யஜித் ரே என்ற கலைஞனின் உன்னதப் படைப்புக்களான அபு ட்ரிலாஜி (அதில் முக்கியமாகக் கருதப்படுவது பதேர் பாஞ்சாலி)

1957-ல் காபுலிவாலா என்னும் படத்தின் இசைக்காக பெர்லின் அகில உலகத் திரைவிழாவில் வெள்ளிக்கரடி விருதினைப் பெற்றார்.

1982-ல் அவருடைய பெயர் ஒரிஜினல் ம்யூசிக் ஸ்கோர் பிரிவில் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவருக்கு அவ்விருது கிடைக்கவில்லை. படம், ரிச்சர்ட் அட்டன்பரோவின் “காந்தி”.

யஹுதி மெனுஹின், ஹாரிஸன் ஃபோர்ட், ஜான் கொல்ட்ரேன், ஃபிலிப் க்ளாஸ், ஸுபின் மெஹ்தா போன்ற இசைக்கலைஞர்களுடன் பணியாற்றியிருக்கிறார்; அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, ஜெனிவா, ஜபான், த்ரினிதாத் என்று ஏகப்பட்ட இசைச் சுற்றுப்பயணங்களும் நிகழ்ச்சிகளும் தந்திருக்கிறார்; சங்கீத் நாடக் அகாதமி விருது, பத்ம பூஷன், பதம விபூஷன், பாரத ரத்னா, இங்கிலாந்து அரசவையின் க்னைஹுட் பட்டம், ரேமன் மக்சேசே விருது, போலார் இசை விருது, யுனெஸ்கோ இசை விருது, மெல்போர்ன் பல்கலைக்கழக டாக்டர் பட்டம் என்று இப்படி ஏகப்பட்ட விருதுகளை அள்ளிக் குவித்திருக்கிறார் என்றபோதும் அவர் இறந்துவிட்ட இத்தருணத்தில் இரண்டு நாட்கள் கழித்து என் மனத்தில் அலையுறுவது அவரது தனிவாழ்வின் நினைவுகள்தான்.

காதலின் பரவசங்களும் ஏமாற்றங்களும் நிறைந்த ஒரு வாழ்வு என்று அவரின் தனிப்பட்ட வாழ்வைச் சொல்லத் தோன்றுகிறது. இது அவரின் பெற்றோர்களிலிருந்தே ஆரம்பம் ஆகிறது. ரவிஷங்கர் பிறந்த சூழலில் இருந்து தொடங்கி அவரின் வாழ்க்கையைப் படிக்கும் யாரும் மனித உறவு நிலைகளின் உள்மடிப்புகள் நிறைந்த ஒரு நாவலைப் படித்துக்கொண்டிருக்கும் உணர்வை அடையாமல் இருக்க முடியாது. ரவிஷங்கரின் இரண்டு சுயசரிதை நூல்கள் மூன்று காலகட்டங்களில் வெளிவந்துள்ளன: My Music My Life (1968) மற்றும் Raga Mala : The Autobiography of Ravi Shankar (1997). அதன் பின் இவ்வாண்டு வரையிலான பதினைந்து வருடங்களையும் சேர்த்து இனி ஒரு சரிதை நூல் கட்டாயம் வெளிவரும்.

7-ஏப்ரல்-1920-ல் வாரணாசியில் பிறந்த ரவிஷங்கருக்கு அவரின் தந்தை ஷ்யாம் ஷங்கர் (தாய்: ஹேமாங்கினி தேவி) சூட்டிய பெயர் ரொபீந்த்ரொ ஷொங்கர் ச்சொவ்திரி (வங்காளிகளின் உச்சரிப்பே இப்படித்தான் எல்லாம் ஒ ஒ என்று இருக்கும்). ஏழு சகோதரர்களில் கடைக்குட்டி அவர். ஷ்யாம் ஷங்கர் பின்னாளில் வழக்கறிஞராகப் பணியாற்ற லண்டன் சென்றபோது அங்கே இன்னொரு திருமணம் செய்துகொண்டார். வாரணாசியில் அன்னையின் அரவணைப்பில் வளர்ந்த ரவிஷங்கர் தன் எட்டு வயதில்தான் தந்தையை நேரில் பார்க்க முடிந்தது!

அவரின் அண்ணன் உதய் ஷங்கர் ஒரு நடனக் கலைஞர். உலகெங்கும் சுற்றுப்பயணம் செய்து இந்திய செவ்வியல் நடனக் கலையைப் பரப்பியவர். இந்திய கிராமிய, செவ்வியல் நடன வடிவங்களை மேற்குலகின் நடன வடிவங்களுடன் இணைத்துப் புதிய நடன பாணிகளை உருவாக்கிய ஒரு மேதைமை மூளை. அப்படி அக்குடும்பத்தில் இருந்து ரவிஷங்கருக்கு முன்பே வெளிப்பட்ட ஒரு லெஜெண்ட். (உதய் ஷங்கர் அக்காலத்தில் அச்சாகப் பெண் வேடமெல்லாம் போட்டு அநாயசமாக ஆடியிருக்கிறார். சமீபத்தில் விஸ்வரூபம் படத்திற்கான விளம்பரங்களில் கமல்ஹாசன் கதக் ஆடுவதாக ஒரு ஸ்டில்லைப் பார்த்தபோது, அவரின் முகத்தில் இருந்த பெண்மையான பாவனை எனக்கு உதய் ஷங்கரை நினைவூட்டிற்று!)

ரவி ஷங்கர் தன் பத்தாம் வயதில் அண்ணன் உதயுடன் பாரீஸுக்குச் சென்றார். ஐரோப்பிய செவ்வியல் இசைக்கான மையம் பாரீஸ். ஃப்ரான்ஸ் நாட்டையே இசையின் தேசம் என்று சொல்வார்கள். (நினைவிருக்கிறதா, ஜெயகாந்தனின் நாவலொன்றின் தலைப்பு ‘பாரீசுக்குப் போ’) அப்போதும் மூன்று வருடங்களுக்குப் பின் அக்குழு அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தபோதும் ரவிஷங்கர் ஃபிரென்ச்சும் மேற்கத்திய செவ்வியல் இசையுடன் ஜாஸ் ராக் போன்ற புதிய இசை வடிவங்களையும் கற்றார். (பால்ய வயதிலிருந்தே இந்துஸ்தானி கற்றுவந்திருந்தார்).

ரவிஷங்கரின் குருநாதர் சிதார் கலைஞர் உஸ்தாத் அலாவுதீன் கான். அவருடைய மகளான அன்னபூர்ணா தேவிதான் ரவிஷங்கரின் முதல் மனைவி!

இந்த இடத்தில் வடக்கத்திய இசைக்கலைஞர்களின் குடும்ப அமைப்புக்களைப் பற்றிச் சிறிது விளக்கம் தேவை என்று நினைக்கிறேன். (தெற்கில் ஒரு குழப்பமும் இல்லை. கர்நாடக சங்கீத உலகில் நீங்கள் வித்வான் அப்துல் கறீம் என்றெல்லாம் பார்க்கவே முடியாது. நாதஸ்வர வித்வான் ஷேக் சின்ன மவ்லானா குடும்பம் மட்டும் ஒரு விதிவிலக்கு. கும்பகோணத்தில் சாகுல் ஹமீது என்று ஒருவர் அரை நூற்றாண்டுக்கு முந்தி கர்நாடக வித்வானாக இருந்தார். அவரைப் பற்றிக் கவிஞர் வாலி தன் ‘நினைவு நாடாக்கள்’ நூலில் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த வித்வானை அவரின் கிழப்பருவத்தில் நான் நேரில் சந்தித்திருக்கிறேன், என் நண்பன் சுப்ரமணியன் அவரைத் தஞ்சாவூர் நூலகத்தில் டிஸ்கவர் செய்து அறிமுகப்படுத்தினான்! அவரின் பழங்காலப் புகைப்படம் ஒன்று என்னிடம் இருந்தது. இப்போது, என் அலமாரியைச் சலித்துவிட்டேன், அதைக் காணவில்லை.)

வடக்கில் உள்ள இசைக்கலைஞர்கள் இரண்டு வகை – முஸ்லிம்கள் எனில் உஸ்தாத் என்றும் இந்துக்கள் எனில் பண்டிட் என்றும் பெயர்களுக்கு முன்னால் போட்டுக் கொள்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இசைக்கலைஞர்கள் எல்லாம் ஒரே குடும்பமாக இருக்கிறார்கள், திருமண பந்த உறவுகளுடன். உஸ்தாத் அலாவுதீன் கானின் மகன் உஸ்தான் அலி அக்பர் கான் (இவர் சரோத் கருவியில் மேதை. 2009-ல் கலிஃபோர்னியாவில் காலமானார்.) மகள் பெயர் அன்னபூர்ணா தேவி. இவர்களின் குடும்பம் மியான் தான்சேனின் பரம்பரையில் வருகிறது. அக்பரின் நவரத்தினங்களில் ஒருவரான தான்சேன் வடக்கே ஹிந்துஸ்தானி இசையின் பிதாமகர். தான்சேனின் வாரிசுகளிலும் நீங்கள் சிலருக்கு முஸ்லிம் பெயர்களும் சிலருக்கு இந்துப் பெயர்களும் இருப்பதைக் காணலாம். உதாரணமாக, அவரின் மகள் பெயர் சரஸ்வதி. சரோத் கலைஞரான உஸ்தாத் அம்ஜத் அலீ கானின் மனைவியின் பெயர் சுபாசினி. பிள்ளைகளின் பெயர்களோ அமான் அலீ பங்கஷ் மற்றும் அயான் அலீ பங்கஷ்.

தன் குருவின் மகளான அன்னபூர்ணா தேவியைப் பண்டிட் ரவிஷங்கர் திருமணம் செய்தார். அது காதல் திருமணம் என்று ஓஷோ தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார். அப்போது அன்னபூர்ணா தேவிக்கு வயது பதினாங்கு! ரவிக்கு இருபது. அடுத்த வருடமே அவர்களின் ஒரே வாரிசான ஷுபேந்திரா ஷங்கர் பிறந்தார். அவரும் பிற்காலத்தில் சிதார் கலைஞராக இருந்து 2007-ல் மறைந்தார். இந்தத் திருமண உறவு சில ஆண்டுகளே நீடித்தது. உறவு முறிந்துபோனதற்கு யார்/ என்ன காரணம் என்பது இன்றும் ஒரு ரகசியமாகவே இருக்கிறது. ரவிஷங்கர் தனது சுயசரிதையில் இது பற்றிக் கொஞ்சம் சொல்லியிருப்பதில் அன்னபூர்ணா எதற்கெடுத்தாலும் சண்டை போடுவார் என்றும் தனக்கும் சட்டென்று கோபம் வந்துவிடும் என்றும் அதுவே மணமுறிவுக்கு வித்திட்டது என்றும் சொல்லியிருக்கிறார்.

அன்னபூர்ணா தேவி இப்போது மும்பையில் வாழ்ந்து வருகிறார். இசைகுருவாகப் பல சிறந்த இசைக்கலைஞர்களை உருவாக்கிய அவர் மேடைகளில் வாசிப்பதில்லை. ரவிஷங்கர் ஐரோப்பா அமெரிக்கா என்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த நாட்களிலேயே இவர் மேடையேறுவதை நிறுத்தி வீட்டிற்குள் முடங்கிவிட்டார். அன்னபூர்ணா சுர்பஹார் என்னும் கருவியில் தேர்ந்தவர். ரவியுடன் சேர்ந்து ஆரம்பத்தில் ஜுகல்பந்திகள் வாசித்திருக்கிறார். ஸ்வபன் குமார் பந்தோபாத்யாய் எழுதிய அவரின் சுயசரிதை An Unheard Melody: Annapurna Devi. அதில் வேறு விதமான சித்திரங்களை நாம் காண்கிறோம். அன்னபூர்ணா தேவியின் மேதைமை அபூர்வமான ஒன்று. ரவிஷங்கரை விடவும் அவரின் மேதைமை மேலானதாக இருந்ததாம். சொல்லப்போனால், அவரின் குருவும் தந்தையுமான அலாவுத்தீன் கானை விடவும் அதிகத் திறமை அவரிடம் இருந்திருக்கிறது. இதை ரவி நன்றாக உணர்ந்திருக்கிறார். ஒரு கலைஞனாக இதுவே ரவிக்கு அவரிடம் காதலை உருவாக்கியிருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதன்பின் ஒரு கணவனாக அவர் அந்தப் பெண்ணின் மீது பெற்ற அதிகாரம் அவரின் மனத்தில் இருந்த பொறாமைத் தீயை ஊதி வளர்த்திருக்க வேண்டும். அது உக்கிரமான ஒரு பழிவாங்கலாக வெளிப்பட்டது என்கிறது இந்நூல். “பொது மேடைகளில் நான் வாசிப்பதை நிறுத்திக் கொண்டதற்கான உண்மையான காரணத்தை நான் என்னுடன் என் கல்லறைக்கு எடுத்துச் சென்றுவிடுவேன்” என்று அவர் ரவிஷங்கரிடம் சொன்னதாகப் பதிவு செய்கிறது. நூலின் தலைப்பை மீண்டும் ஒருமுறை கவனியுங்கள், எத்தகைய ஒரு அவலம்!
இந்த நூலின் தலைப்பு அற்புதமான ஒன்று. ”Ode on a Grecian Urn” என்னும் ஜான் கீட்ஸின் கவிதையில் வரும் வரியொன்றினைப் பின்னணியாகக் கொண்டு இத்தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. “Heard melodies are sweet, but those unheard are sweeter” என்னும் அவ்வரியின் முதற்பகுதி ரவிஷங்கர் என்றால் பிற்பகுதி அன்னபூர்ணா தேவி!

1940-களின் இறுதியில் கமலா சாஸ்திரி என்னுமொரு நடனமாதை ரவிஷங்கர் மணந்துகொண்டார். பின்னர் அவர் அமெரிக்காவில் கலைப்பணி ஆற்றிக் கொண்டிருந்தபோது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான ஸ்யூ ஜோன்ஸ் என்னும் பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பில் 1979-ம் வருடம் அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. நோரா ஜோன்ஸ் என்னும் அந்தப் பெண் எட்டு முறை க்ராம்மி விருது வாங்கியிருக்கிறார். பாடகியான அவர் ஒரு நடிகையும்கூட.

கீதாலி நோரா ஜோன்ஸ் ஷங்கர் என்று பிறப்பில் நாமகரணம் சூட்டப்பட்ட நோராவை ரவிஷங்கரின் இசை வாரிசு என்று சொல்லவெ முடியாது. அந்த அளவுக்கு இந்திய இசைக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல் அவர் மேற்கத்திய பாணியை மட்டுமே வரித்துக்கொண்டவர். நூறு சதவிகிதை அமெரிக்கன். ஆனால் இவரை ரவிஷங்கரின் ஆளுமையில் ஒரு பகுதியின் வாரிசு என்று நினைக்கத் தோன்றுகிறது. ஏனெனில், ரவிஷங்கர் தன் இளமைக்காலத்தில் ஜாஸ் பாப் ராக் போன்ற மேற்கத்திய இசை வடிவங்கள் மீது காதல் கொண்டிருந்தார். இப்படியிருந்தால் உருப்பட மாட்டாய் என்று சொல்லித்தான் உதய் அவரை இந்தியாவிற்குக் கொண்டு வந்து அலாவுத்தீன் கானிடம் சேர்த்தது. எனினும் அந்த மேற்கிசை ஈர்ப்பு பின்னாளில் அவர் யஹுதி மெனுஹின், ஹாரிசன் ஃபோர்டு, கோல்ட்ரான், ஃபிலிப் க்ளாஸ் ஆகியோருடன் இணைந்து செய்த இசைப்பேழைகளில் வெளிப்பட்டது.

1960-களில் அமெரிக்காவில் இளைஞர் பட்டாளம் மாற்று கலாச்சாரம் (counter culture) ஒன்றை உருவாக்கும் வேகத்தில் இருந்தார்கள். அமைப்புக்களைத தகர்த்தல், மரபை மீறுவது, புதியவற்றுக்கு வரவேற்பு, அதீத மனநிலைகளில் வாழ்தல், நிச்சயமின்மையில் வாழ்தல், வியட்நாம் மீதான அமெரிக்கப் போரினை எதிர்த்தல் போன்றவை எல்லாம் பிரளயாமக் கிளம்பிக் கொண்டிருந்தன. அவர்களின் கலகம் போதையின் பாதையில் சென்றது. இசையைத் துணைக்கருவியாய்க் கொண்டது. அந்த மாற்றுக் கலாச்சாரம் ’ஹிப்பி கலாச்சாரம்’ பெயர் பெற்றது. பீட்டில்ஸின் ஹாரிசனுடன் இணைந்த ரவிஷங்கர் ஹிப்பிகளுக்காகவும் வாசித்தார். அது ’ராக் ராகா’ என்னும் இசை வடிவமாக சிலாகிக்கப்பட்டது. ஆனால் எந்தவொரு நிலையிலும் இந்தியச் செவ்வியல் இசையின் தனித்தன்மையை இழந்துவிடச் சம்மதிக்காத ரவிஷங்கருக்கு ஹிப்பிகளின் நடை உடை செயல்கள் அதிர்ச்சியாக இருந்தன. உட்ஸ்டாக் இசை நிகழ்ச்சியில் ஜிமி ஹெண்ட்ரிக்ஸ் என்னும் கிதார் கலைஞர் தன் கருவியைத் தீ வைத்துக் கொளுத்தியதைப் பார்த்து அவர் அதிர்ந்து போனார். இந்திய இசைக் கலைஞனுக்கு இசைக்கருவி என்பது ஆன்மரூபம். அதில் லேசான கீறல் விழுவதைக்கூட அவனால் தாங்க முடியாது. தன் சிதார் கருவியைக் கொளுத்துவதாக ரவிஷங்கரால் கற்பனை கூட செய்ய முடியாது.

ரவிஷங்கருக்குள் இருந்த இந்தியச் செவ்வியல் இசைக்கலைஞனின் வாரிசு அவரின் இரண்டாவது மகளான அனுஷ்கா ஷங்கர்தான். ரவிஷங்கருக்கும் சுகன்யா ராஜன் என்பவருக்கும் 1981-ல் பிறந்தவர் அனுஷ்கா. ஆனால் ரவிஷங்கர் 1989-ல்தான் சுகன்யா ராஜனைத் திருமணம் செய்துகொண்டார்!

அனுஷ்கா ஷங்கர் அப்படியே அப்பாவின் பிள்ளை. சிதார் கலைஞர் என்பதையே தன் வாழ்க்கையாக தேர்ந்திருக்கிறார். தந்தையைப் போலவே உலக இசை என்னும் ஜானரில் அவருக்கு நல்ல ஈடுபாடு இருக்கிறது. 2003–ல் கிராம்மி விருதுக்காகப் பரிந்துரைக்கப் பட்டிருந்தார். ரவிஷங்கர் மரணமடைவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் தந்தை மகள் இருவருமே 2013-ம் ஆண்டிற்கான க்ராம்மி விருதுக்கு ஒருவருக்கொருவர் எதிராக நாமினேட் ஆகியிருக்கிறார்கள் என்ற செய்தி வந்தது. “The Living Room Sessions Part-1” என்னும் பேழைக்காக ரவிஷங்கர் தன் 92-வது வயதில் க்ராம்மிக்கு பரிந்துரைக்கப் பட்டிருந்தார்! அனுஷ்கா ஷங்கர் பரிந்துரைக்கப் பட்டிருந்தது. TRAVELLER என்னும் பேழைக்காக. ஃப்லெமென்க்கோ (ஸ்பானிய) இசைக்கும் இந்திய செவ்வியல் இசைக்குமான தொடர்பு பற்றிய அவரது ஆராய்ச்சியை அந்தப் பேழை இசையில் வெளிப்படுத்துகிறது. (இதேபோல் இந்திய் செவ்வியல் இசைக்கும் அரபு இசைக்குமான் தொடர்புகளை ஆராய்ச்சி செய்து வருவதாக பல வருடங்களுக்கு முன் வசுந்தரா தாஸ் சொன்னாரே, என்னாயிற்று?)

”என் மகள் நிச்சயம் வெல்வாள்” என்று ரவிஷங்கரும், “வேறு யாராவது என்றால் எனக்கு வெற்றி கிடைத்திருக்கலாம், அப்பாவை எதிர்த்து ஒருபோதும் என்ன்னால் வெல்ல முடியாது” என்று அனுஷ்காவும் சொல்லியிருந்தார்கள். ரவிஷங்கர் மரணித்துவிட்ட சேதி வந்ததுமே வாழ்நாள் சாதனையாளருக்கான க்ராமி விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது. இத்துடன் சேர்த்து நான்கு. இனி, அனுஷ்கா அந்த க்ராமியை வென்றெடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.4 comments:

 1. தூர்தர்ஷனில் மட்டுமே சில அபூர்வ கலைஞர்களின் இசையை கேட்கமுடியும்.அதுபோல் பல புதியசெய்திகளை உங்கள் பதிவின் மூலம் அறிந்துகொண்டேன்.

  ReplyDelete
 2. நிறைய தகவல்களுடன் நல்ல சுருதி மீட்டல்களாக அருமையாக வந்திருக்கிறது இந்த பதிவு...விகடன் அல்லது குமுதத்துக்கு அனுப்புங்க...பிரசுரமாகிடும்.

  ReplyDelete
 3. கடந்த ஒரு மாதமாக ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறது உங்கள் எழுத்தில்...நிறைய பதிவுகளாக எழுதி பட்டையை கிளப்புகிறீர்கள்.நகைச்சுவையும் அதிகம் வருகிறது...

  ReplyDelete
 4. 11-12-1882 இல் பிறந்து, இந்திய மண்ணில் வாழ்ந்து இந்திய மண்ணிலேயே 1921 இல் மரணித்துப்போன பாரதியையே இன்னும் கொஞ்ச நாளில் மாணவர்கள் மறந்து போவார்கள் .....அப்படியிருக்க, 1920 இல் இந்திய மண்ணில் பிறந்து இந்திய மக்களால் பெரும் அளவில் நேசிக்கப்பட்ட போதும், இந்திய அரசாங்கத்தாலும் அனைத்து விதங்களிலும் கொவ்ரவிக்கப்பட்டபோதும், உச்சகட்டமாக 1999 இல் பாரத் ரத்னா விருதையே வழங்கியபோதும் பிடிவாதமாக அமெரிக்காவில் குடியேறி அங்கேயே மரணித்த இசைகலைஞர் பற்றி மாணவர்களுக்கு தெரியாமல் போனதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை ....தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று நான் நினைக்கிறேன்

  ReplyDelete