சில நாட்களுக்கு முன் வந்த இரண்டு
செய்திகள் மிகவும் அதிர்ச்சியாக இருந்தன. குழந்தைகள் மீது பெற்றோர்கள் அன்பை மட்டுமே
பொழிவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை இரண்டு சம்பவங்களும் காட்டி
நின்றன. சமயத்தில் பெற்றோர்கள் ரௌடிகளை ஒத்த வன்முறையைத் தமது பிள்ளைகளின் மீதே பிரயோகிப்பார்கள்
என்பதற்கு இந்த இரண்டு நிகழ்வுகளும் உரத்த சாட்சிகளாக உலகெங்கும் ஊடகங்களில் பதிவாகியுள்ளன.
முதல் செய்தி 5-12-2012 அன்று
வந்தது. நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவின் வசிக்கும் இந்தியத் தம்பதிகள் சந்திரசேகர்
வல்லபனேனி – அனுபமா ஆகியோருக்கு நார்வே நீதிமன்றம் முறையே 18 மாதங்களும் 15 மாதங்களும்
சிறைத்தண்டனை அளித்துத் தீர்ப்புக் கூறியுள்ளது. சந்திரசேகர் ஒரு மென்பொருளாளர். ஆந்திராவைச்
சேர்ந்த இத்தம்பதிகள் நார்வே நீதிமுறை 219-ஆம் சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார்கள்.
குழந்தைகள் மீதான வன்கொடுமை குறித்த சட்டப் பிரிவு அது. அவர்களுடைய மகனின் மீது அவர்கள்
செய்த கொடுமைக்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுடைய ஏழு வயது மகன் சாய்
ஸ்ரீராம் பள்ளிக்கூடத்தில் மிகவும் கவலையாக இருந்திருக்கிறான். விசாரித்த போது தூக்கத்தில்
மெத்தையிலேயே சிறுநீர் பெய்துவிடுகிறான் என்பதற்காக அவனுடைய பெற்றோர்கள் அடிப்பதாகச்
சொல்லியிருக்கிறான். ஒரு முறை அவ்வாறு வகுப்பிலேயே சிறுநீர் பெய்துவிட்டான். அதற்கான
தண்டனை (!) வீட்டில் கிடைத்திருக்கிறது. அவனுடைய உடலில் தீக்காயங்கள் இருந்ததாகவும்
பெல்ட்டால் அவனை விளாசியிருக்கிறார்கள் என்றும் ஓஸ்லோ போலீஸ் தலைவர் கர்ட் லீர் சொல்லியிருக்கிறார்.
இந்தச் செய்தி என் மனத்தில் பல
சிந்தனைகளைக் கிளறிவிட்டது. என் மகனுக்கு இந்த bed-wetting இருக்கிறது. அவனென்ன வேண்டுமென்றேவா
செய்கிறான்? அதனால் சில அசௌகிரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. தினமும் மெத்தையை எடுத்து
வெயிலில் உலர்த்த வேண்டியுள்ளது. விரிப்பைத் துவைக்க வேண்டியுள்ளது. அதற்காக ஒரு சிறுவனுக்குத்
தண்டனை வழங்கி அராஜகம் செய்யலாகுமா? சிலருக்கு இந்த நிலை கல்லூரிக் காலகட்டம் வரையிலும்கூட
இருக்கிறது.
இன்னொரு கோணத்தில் பார்க்கும்
போது மேற்கத்திய நாடுகளில் தனி மனித சுதந்திரம் என்ற பேரில் பெற்றோர்களுக்குத் தம்
குழந்தைகளின் மீது கொஞ்சம் கூட உரிமை இல்லாமல் ஆக்கிவிடுகிறார்கள். ஐந்தாறு வயதுச்
சிறார்கள், திட்டிவிட்டார்கள் என்று போலீசில் கம்ப்ளெய்ண்ட் கொடுத்தால் போதும், பெற்றோர்கள்
அடுத்த நிமிடம் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்கள். இப்படியான கெடுபிடிச் சட்டங்கள் இருப்பதை
வைத்தே பிஞ்சில் பழுத்த பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை மிரட்டிவிட முடியும். “லிண்டாவுடன்
பார்ட்டிக்குப் போக வேண்டும். ஐந்து டாலர் தருகிறாயா, இல்லை என்னை பம்மில் கிள்ளினாய்
என்று போலீசில் பிராது கொடுக்கட்டுமா?” என்று நான்கு வயதுப் பயல் தன் தந்தையிடம் வசனம்
பேசுவதைக் கற்பனை செய்து பாருங்கள்.
புண்ணியவான்கள் வாழும் அமெரிக்காவில்
இருந்து முன்பு ஒரு சேதி வந்தது. மூனாங்க்ளாஸோ என்னவோ, ஒரு பையனை ஆசிரியை கிண்டல் செய்ய
சக சிறார்கள் சிரித்தார்களாம். உணர்ச்சி வசப்படாமல் அந்த மாணவன் வீட்டுக்குப் போய்விட்டு
மறுநாள் ஒரு பிஸ்டலைக் கொண்டு வந்து டீச்சரையும் சக மாணவர்களில் நான்கு பேரையும் டூமில்
டூமில் செய்துவிட்டான். இப்படியாக அங்கே உள்ள பிள்ளைகள் ஜேம்ஸ்பாண்ட் காம்ப்ளெக்ஸ்,
ஸ்பைடர் மேன் காம்ப்ளக்ஸ் போன்ற, சிக்மண்டு ஃப்ராய்டே அறியாத உளவியல் சிக்கல்களால்
பாதிக்கப் பட்டுள்ளார்கள்.
இன்னொரு செய்தி 6-12-2012 அன்று
வந்தது. இச்சம்பவம் நடந்தது இங்கிலாந்தின் வேல்ஸில். ஹைதராபாதைச் சேர்ந்த சாரா எகே
(வயது 33) என்ற பெண் தன்னுடைய ஏழு வயது மகனைக் கொலை செய்து, குற்றத்தை மறைக்க அவனுடைய
உடலை எரித்துவிட்டதற்காகக் கைது செய்யப் பட்டிருக்கிறார். யாசீன் என்ற அந்தச் சிறுவன்
கொலை செய்யப்பட்டது ஜூலை 2010-ல். இப்போது இரண்டாம் முறையாக நடக்கும் வழக்கில் அவருக்கு
எதிர்வரும் புத்தாண்டு தினத்தன்று தீர்ப்பு வழங்கப்படும் என்கிறார்கள். வீட்டில் நடந்த
தீ விபத்தில் செத்துவிட்டான் என்று சாரா சொல்லியிருந்தார். போஸ்ட்மார்ட்டம் வேறு செய்தி
சொன்னது. அதாவது, யாசீனின் உடல் எரிவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பே அவன் இறந்து
போய்விட்டான் என்று. சாராவை விசாரனை செய்ததில் தான் அடித்ததில்தான் அவன் உள்காயமாகி
இறந்து போனான் என்று அவர் உண்மையைக் கக்கிவிட்டார். அந்த அளவுக்குக் குரூரமாகத் தன்
மகனை அந்தத் தாய் அடிக்கக் காரணம் என்ன தெரியுமா? அவர் எதிர்பார்த்த வேகத்தில் அவன்
திருக்குர்ஆனை மனனம் செய்யவில்லை என்பதுதான்!
சாரா கணிதவியலில் பட்டம் பெற்றவர்.
திருக்குர்ஆனைச் சரியாக மனனம் செய்யாததை ஒரு குற்றமாகக் கருதி தன் மகனைப் பிரம்பால்
ஒரு நாயை அடிப்பது போல் அடித்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அடிபட்ட யாசீன்
திருக்குர் ஆன் வாசகங்களை முனகியபடியே மயங்கி விழுந்திருக்கிறான். அவனின் ஆடைகளை உருவிவிட்டு
அப்படியே தரையில் இழுத்தபடி கிச்சனுக்குக் கொண்டு போயிருக்கிறார் சாரா. எதற்காம்? அவனுக்குப்
பருக பால் தருவதற்காம்! அவர் ஊற்றிய பாலை அந்தப் பிள்ளை சில சிப்புகள் மட்டுமே குடிக்க
முடிந்திருக்கிறது. உடனே அவனை அப்படியே பெட்ரூமுக்கு இழுத்துக்கொண்டு போய் ட்ரெஸ் பண்ணச்
சொல்லியிருக்கிறார். அவன் எழுந்து நிற்க முயன்று முடியாமல் கம்பளத்தில் விழுந்துவிட்டானாம்.
தூங்கிவிட்டான் என்று நினைத்து அவனை அப்படியே கிடக்க விட்டுப் போனதாக சாரா சொல்லியிருக்கிறார்.
திரும்பி வந்து பார்த்தபோது யாசீன் நடுங்கிக் கொண்டு கிடந்திருக்கிறான். சில நிமிடங்களில்
அவனின் உயிர் பிரிந்துவிட்டது. அதை அறிந்ததும் பீதியில் செய்வதறியாது யாசீனின் உடலை
எரித்துவிட்டு அவன் தீ விபத்தில் இறந்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்.
இச்செய்தியைப் படித்தபோது இப்பெண்
சரியான சைக்கோவாக இருப்பார் போலும் என்று நினைத்தேன். அது உண்மைதான் என்று அவரின் வாக்குமூலமே
காட்டுகிறது. அடிக்கடி தன் மகனை செமத்தியாக அடிக்கும் மனநிலை அவருக்கு உருவாகுமாம்.
“மீண்டும் அப்படி என் பிள்ளையை அடிக்கக்கூடாது என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக்
கொள்வேன். ஆனால் அந்த மனநிலை சில நாட்களில் மாறிவிடும்” என்று சொல்கிறார்.
விசாரனையின் போது அவரை ஒரு மனநலக்
காப்பகத்தில் வைத்துச் சோதனைகள் செய்யப்பட்டதில் சாத்தான் தன் மனத்தில் தூண்டுதல்களைப்
போட்டதாக அவர் சொல்லியிருக்கிறார்.
மத நெறி என்பது மத வெறி ஆகக்கூடாது
என்று சொல்வார்கள். அப்படி ஆகிவிடும் பிறழ்வுக்கான ஒரு திடுக்கிடும் உதாரணம் இச்சம்பவம்
.
இந்த நிகழ்ச்சி சூஃபி வட்டங்களில்
சொல்லப்படும் ஒரு கதையை நினைவுப்படுத்தியது. ஆயிரம் வருடங்களுக்கு முன் இராக் பக்கம்
வாழ்ந்த யாரோ ஒரு சூஃபி ஒருநாள் தன் வீட்டிற்கு ஒரு பழத்தை வாங்கி வந்தாராம். ஏழையான
அவர் எப்போதாவதுதான் அப்படி ஏதாவது பழம் கொண்டு வந்து தன் வீட்டினருக்குத் தருவார்.
ஏழ்மையாக வாழ்வது நபிவழி என்பதால் அவர் வறுமையை உவந்து ஏற்று வாழ்ந்து வந்தவர். அவருக்கு
ஒரு மகன் இருந்தான். சின்னஞ் சிறுவன். தந்தை பழம் கொண்டு வந்திருப்பதைப் பார்த்ததும்
அதைச் சாப்பிட வேண்டும் என்னும் ஆர்வம் அவனுள் உடனே எழுந்தது. பழத்தைக் கடித்துச் சாப்பிடக்கூடாது
என்பதும், கத்தியால் நறுக்கிச் சாப்பிட வேண்டும் என்பதும் நபிகள் நாயகத்தின் நடைமுறை.
அதைப் பேணுவதற்காக அவர் ஒரு கத்தியை எடுத்துப் பழத்தைக் கூறு போட முனைந்தார். அப்போது
அவருக்கு ஒரு சிந்தனை வந்தது. நபி (ஸல்) அவர்கள் பழத்தை எந்த முறையில் அறுத்திருப்பார்கள்
என்று யோசித்தார், மேலிருந்து கீழா அல்லது பக்கவாட்டிலா என்று. ஒன்றும் பிடிபடவில்லை.
தான் படித்த ஹதீஸ்களை எல்லாம் மனத்தில் புரட்டிக்கொண்டிருந்தார். இப்படியே அரை மணி
நேரம் போயிற்று! அதுவரை சிறுவனின் ஆர்வம் தாங்குமா? பழத்தை அறுத்துத் தரும்படி அவன்
அடம் பிடித்து நச்சரித்துக் கொண்டிருந்தான். சிந்தனையில் மூழ்கியிருந்த அவருக்கு இது
எரிச்சலைக் கிளப்பவே, ‘தள்ளிப் போ ஷைத்தானே’ என்று கத்தி பிடித்திருந்த கையால் அவன்
பக்கம் வீசினார். கழுத்து வெட்டுப்பட்டு அவன் கீழே விழுந்து துடித்து ’மௌத்’தாகி விட்டான்.
நபிவழியைப் பேணுவதில் அந்த அளவு நூல் பிடித்தாற்போல் ‘மகான்கள்’ இருந்திருக்கிறார்கள்
என்பதை இக்கதை சொல்வதாக ஒரு ஏட்டில் எழுதப்பட்டிருந்தது! எனக்கோ இந்த நபரை ஒரு சூஃபி
என்றே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நபிவழியைப் பேணுவதற்குத் தடையாக இருந்தால் உங்கள்
பிள்ளைகளைக் கொன்று விடுங்கள் என்றா நபி (ஸல்) சொல்லித் தந்தார்கள்? அவர்கள் வீட்டில்
தொழும்போது பேரப்பிள்ளை ஹஸன் அவர்களின் முதுகில் ஏறி அமர்ந்து குதிரை ஓட்டுவதாக விளையாடத்
தொடங்கி விடுவார். நபி (ஸல்) அவர்கள் அப்படியே குதிரை போல் நகர்ந்து வந்து விளையாட்டுக்
காட்டி ஹஸன் திருப்தி அடைந்து இறங்கிப் போன பின்னர் தொழுகையைத் தொடர்வார்கள். இந்தச்
சம்பவமும் ஹதீஸில் பதிவாகியிருப்பதுதான். ’சிறார்கள் மீது அன்பு செலுத்தாதவரும் பெரியவர்களுக்கு
மரியாதை காட்டாதவரும் என்னைச் சேர்ந்தவர் அல்ல’ என்பது நபிவாக்கு. உலக இலக்கியங்களிலேயே
இதுதான் மகத்தான வரி என்கிறார் அல்லாமா இக்பால். இந்த ஹதீஸ்கள் உணர்த்தும் மனநிலை கொண்டவர்தான்
உண்மையான சூஃபியாக இருக்க முடியும். மேற்படிக் கதையில் வருபவர் மார்க்கத்தை விளங்காமல்
வெறும் சடங்குகளைக் குருட்டு உறுதியுடன் பின்பற்றியவராகவே எனக்குப் படுகிறார்.
இன்னொன்றும் ஞாபகம் வருகிறது.
நான் கல்லூரி மாணவனாக இருந்த நாட்களில்
என் நண்பன் ஒருவனின் வீட்டிற்குச் சென்றேன். வாசற்கதவின் மேல் ஒரு வாசகம் வரவேற்றது
இப்படி: Read Quran Daily. தினமும் குர்ஆன் படிக்க வேண்டும் – சொல்லப்போனால் பயில வேண்டும்
என்பதில் எனக்கு எவ்வித முரண்பாடும் இல்லை. ஆனால் நண்பனின் தந்தையிடம் பேசிக்கொண்டிருக்கும்
போதுதான் தெரிந்தது அந்த வாசகத்திற்கு அவர் கொண்டிருக்கும் பொருள் “Quran and
Hadees only” என்பது! ”வேறு எந்த நூலும் படிக்கலாகாதா?” என்று கேட்டபோது அழுத்தம் திருத்தமாக
மறுத்துவிட்டார். படிக்கவே கூடாதாம். தேவை இல்லையாம். நேர விரயமாம். இறைநம்பிக்கையை
நாசமாக்கி விடுமாம். ஹதீஸைப் படிக்கலாம் எனப்து ஏன் எனில் திருக்குர் ஆனுக்கான விளக்கம்
என்பதால். இல்லையெனில் குர்ஆனைத் தவிர வேறு எதையுமே படிக்கக்கூடாதாம். இதை விளங்காமல்
முஸ்லிம் சமூகம் அறியாமைப் படுகுழியில் வீழ்ந்து கிடக்கிறதாம். இப்படியெல்லாம் என்னென்னவோ
கருத்துக்களை மழை போல் பொழிந்து கொண்டிருந்தார்.
அவர் வீட்டுப் பிள்ளைகளை நினைத்து
எனக்கு மிகுந்த பரிதாபமாக இருந்தது, எத்தகைய ஒரு சர்வாதிகாரியின் கீழ் மாட்டிக் கொண்டுள்ளார்கள்
என்று. அவர் வீட்டில் மருந்துக்குக்கூட ஒரு இலக்கிய நூலோ, சிறுவர் நூலோ இல்லை. கவிதைகளுக்கு
இஸ்லாத்தில் இடமே இல்லை. கற்பனை என்பதே பொய், அது சாத்தானின் வேலை என்றெல்லாம் நினைப்பவரிடம்
நாம் என்ன பேசமுடியும்? இலக்கியங்கள் இல்லாமல் போகட்டும், அந்த வீட்டில் உள்ள சிறுவர்கள்
என்ன வாசிப்பார்கள் என்று கேட்டேன். “ஏன், குர்ஆன்தான். வேறு என்ன? எங்கள் வீட்டில்
எல்லொருமே குர்ஆன்தான் படிப்போம். அப்புறம் பிள்ளைகள் பாடங்களைப் படிப்பார்கள்” என்றார்.
“இல்லை, குழந்தைகளுக்கான கதைகள் இலக்கியங்கள் இருக்கின்றதே. அரேபியன் நைட்ஸ், ஃபேரி
டேல்ஸ் இது மாதிரி?” என்றேன். “சீச்சீ, அந்தக் குப்பையெல்லாம் நம்ம பிள்ளைங்க தொடவே
கூடாது. வெறும் கற்பனைகள். மோசமான நூல்கள். அறிவைக் கெடுக்கக் கூடியவை. அதெல்லாம் ஷைத்தானியத்தான
புத்தகங்கள்” என்றார். நான் அவை போல் நூத்துக்கணக்கில் படித்திருக்கிறேன் என்பதைச்
சொல்லவில்லை. சொல்லியிருந்தால், “பாஹர் ஜாவ் ஷைத்தான்” என்று துரத்தியடித்திருப்பாரோ
என்னவோ?
இப்படித்தான் மார்க்கப் பற்று
சிலரை சைக்கோ ஆக்கிவிடுகிறது. கற்பனை என்பதற்கே மார்க்கத்தில் இடம் கிடையாது என்று
அவர் சொன்னார். “வீண் கற்பனையாளர்கள் நாசமாகட்டும்” (51:10) என்று திருக்குர்ஆன் சொல்கிறது. மனம் போன போக்கில்
பிரம்மைகளையும் இச்சைகளையும் அடிப்படையாகக் கொண்டு இறைக்கொள்கைகளையும் கோட்பாடுகளையும்
வகுத்துக் கொள்வதைக் கண்டிக்கும் திருவசனமாகவே இதனை நான் கொள்கிறேன். குதிரைக்குச்
சிறகுகள் இருப்பதாக ஒரு தேவதைக் கதை புனைவதைக் கண்டிக்கும் வசனமாக அல்ல. முழு முற்றாகக்
கற்பனையை நிராகரிக்கும் வசனமாக அல்ல. வீண் கற்பனையைத்தான் இந்தத் திருவசனம் சாடுகிறது.
பிள்ளைகளுக்கு மனவிரிவை நல்கும் கற்பனைகளை எப்படி வீண்கற்பனைகள் என்று முத்திரையிட
முடியும்? நபிகளின் முன்னிலையில் ‘பானத் சுஆத்’ என்னும் கஸீதாவைப் பாடிய கஅப் (ரலி)
அக்காவியத்தைக் கற்பனையான ஒரு காதல் சூழலைக் குறிப்பிட்டுத்தான் ஆரம்பிக்கிறார். “வீண்கற்பனை
செய்பவனே, ஓடிப்போ” என்று நபி (ஸல்) அவரை விரட்டவில்லை.
“கற்பனை என்பது அறவே கூடாது என்று
நீங்கள் சொல்கிறீர்கள். இது மனிதனுக்குச் சாத்தியமே கிடையாது. மனித மனத்தின் அமைப்பிற்கே
இது முரணானது. மூளையில் கற்பனைக்கென்று சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதிகள் கற்பனை
என்னும் நிகழ்வில் மட்டுமே செயல்படுகின்றன. கற்பனை இல்லை எனில் அப்பகுதியின் செல்களுக்குச்
செயல்பாடே கிடையாது. அந்தப் பகுதிகளில்தான் இலக்கியங்களும் இசையும் கலைகளும் உள்ளுணர்வும்
பிறக்கின்றன. நீங்கள் சொல்வது போல் கற்பனை என்பதே தகாது என்றால் முஸ்லிம்கள் மூளையை
முழுமையாகப் பயன்படுத்துவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்று ஆகிவிடும். கற்பனைக்குரிய
மூளைப் பகுதிகளையும் பயன்படுத்தலாம் என்று சொன்னால் அது எந்த விதமான கற்பனைகளை என்னும்
கேள்வி எழுகிறது. அக்கேள்வியிலிருந்து முன்னகர்வதற்கான வெளி விரிகிறது. நீங்கள் வைத்திருக்கும்
கோட்பாடு கால்களை முறித்து நம்மை வெறுமனே முடமாக்கிப் போட்டுவிடும். மேலும், குர்ஆனை
மட்டுமே படிக்கவேண்டும் என்று சொல்லும் நீங்களும்கூட குர்ஆன் சார்ந்து உங்கள் கற்பனைகளை
விரித்துக் கொண்டுதான் செல்வீர்கள். உங்கள் ஆழ்மனத்தில் அது நிகழாமல் இருக்கவே முடியாது.
உங்கள் மனத்தை ஆழமாகக் கவனித்துப் பாருங்கள்” என்று அவரிடம் நான் சொன்னேன்.
ஒரு நபிமொழியும் ஒரு பொன்மொழியும்
பற்றிய சிந்தனை வந்தது.
”உங்கள் குழந்தைகள் பேசத் துவங்கும்போது
அவர்களுக்கு முதலில் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்பதைக் கற்றுக்கொண்டுங்கள்” என்பது நபிமொழி.
அதாவது, ‘லா இலாஹ இல்லல்லாஹ்’
என்னும் இஸ்லாமிய மூல மந்திரத்தை மொழியக் கற்றுக் கொடுங்கள் என்பது அதன் கருத்து. மாறாக
அம்மந்திரத்தின் பொருளைக் கற்றுக்கொடுங்கள் என்று அர்த்தமல்ல. அல்லது, அதன் விளக்கத்தைக்
கற்றுக்கொடுங்கள் என்று அர்த்தமல்ல. ஏன் சொல்கிறேன் எனில், சில மேதாவிகள் அப்படி விளங்கிக்
கொண்டு, பேச ஆரம்பிக்கும் பாலகர்களிடம் தத்துவ பிளேடு போட்டு அதிர்ச்சியில் அந்தக்
குழந்தைக்குப் பேச்சே வராமல் செய்துவிடுவார்கள் என்றுதான்.
“லா இலாஹ இல்லல்லாஹ்” என்பதே ஒரு
முஸ்லிமின் முதல் வாசகமாகவும் அவன் இறக்கும் தருவாயில் இறுதி வாசகமாகவும் அமைய வேண்டும்
என்னும் நோக்கில் சொல்லப்பட்ட ஹதீஸ் இது.
பேசத் தொடங்கும் பிள்ளைக்கு அதனைச்
சொல்லித் தரும்போது எடுத்ததுமே முழு வாசகத்தையும் அது தெளிவாகக் கூறிவிடும் என்று சொல்ல
முடியாது. சில பிள்ளைகள் பாதியை மட்டும் - ‘லா இலாஹ’ என்பதை மட்டும் சொல்லக் கூடும்.
அதற்குக் “கடவுள் இல்லை” என்று பொருள். உடனே பதறிக்கொண்டு இது என்ன நாத்திகம் பேசுகிறது
என்று அடித்துக் கொன்று எரித்துவிடக் கூடாது. மெள்ள மெள்ளப் பழகி முழுசாகச் சொல்லும்.
அதேபோல், ஆரம்பத்தில் குழறிக் குழறி வேறு மாதிரியாகச் சொல்லக்கூடும் ‘லா இயாவா’ என்பது
போல். உடனே டென்ஷனாகி, இது என்ன இத்தாலிய மொழி பேசுகிறது என்று மரண தண்டனை வழங்கக்கூடாது.
முஸ்லிம் குழந்தையும் ஆரம்பத்தில் மழலைதான் பேசும்; வளர வளரத்தான் அரபியெல்லாம் பேசக்
கற்கும் எனப்தைப் புரிந்து கொள்ளும் பக்குவம் வேண்டும்.
”லா இலாஹ இல்லல்லாஹ்” என்பது நீரோட்ட
யமக வாசகம். பயப்படாதீர்கள், உதடுகள் ஒட்டாமல் சொல்ல வரும் வாசகம். “ஒருவர் மரணப்படுக்கையில்
கிடக்கும் போது மரணம் நெருங்கும் வேளையில் அவரின் கழுத்து வரண்டு உதடுகள் இறுகிப் போகும்
நிலையில் உதடுகள் ஒட்டுமாறு பேசுவது கடினம். அல்லாஹ்வின் அளவற்ற கருணையைப் பாருங்கள்,
அந்த நிலையிலும் சொல்ல இலகுவாகத் திருக்கலிமாவை நீரோட்ட யமகமாக அருளியிருக்கிறான்”
என்று இதைச் சொல்கிறார், என் குருநாதரின் முதல் சீடரான இறையருட் கவிமணி கா. அப்துல்
கஃபூர் அவர்கள்.
என் குருநாதரின் தாழ்மையான சீடனான
அடியேனின் மனத்தில் இன்னொரு கோணத்தில் ஒரு கருத்து உதித்தது. அதாவது, இந்த மந்திரம்
லகார ஓசையை அதிகம் பெற்றதாக இருக்கிறது. குழந்தைகள் முதல் வயோதிகர் வரை அனைவருக்குமே
நாவசைப்பில் இலகுவாக உச்சரிக்க முடிந்த ஓசை அது. பல சமூகங்களில் பழங்காலம் தொட்டே குலவை
போடுதல் (Ululation) என்னும் பண்பாட்டுக் கூறு உண்டு. குழந்தைக்குத் தாய் பாடும் தாலாட்டு
என்பதும் இந்த ஓசையைக் கொண்டதே. தால் என்றால் நாக்கு. தாலாட்டு என்றால் நாக்கை ஆட்டி
அசைத்து எழுப்பும் ஓசை. அது ல்லொலொலொலொலாயீ என்று இசைப்பதை இன்று கிராமங்களில்கூட காணமுடியுமா
என்று தெரியவில்லை. அது பற்றிய இளக்காரமான பார்வைகள் உருவாக்கப்பட்டு, கிராமத்துக்
குழந்தைகள் கூட ‘கூகிள் கூகிள் பண்ணிப் பார்த்தேன்..” போன்ற பாடலகளைக் கேட்டுக் கண்வளர்கின்றன,
அல்லது திடுக்கிட்டு எழுந்துகொண்டு கதறுகின்றன. தாயின் குரலிலும் பாட்டி மாமி அத்தை
அக்காள் போன்றோரின் குரலிலும் தாலாட்டு கேட்டு வளரும் குழந்தைக்கு லகர ஓசை மனத்தில்
ஆழமாகப் பதிந்திருக்கும். எனவே பேசத் துவங்கும் போது லகர ஓசையினடுக்காக வரும் லா இலாஹ
இல்லல்லாஹ் என்பதைச் சொல்வது அதற்கு இலகுவாக இருக்கும். இதுவும் குழந்தைகள் மீது இறைவன்
காட்டிய அளவற்ற கருணையின் அடையாளம் அல்லவா?
இப்போது பொன்மொழிக்கு வருகிறேன்.
”உங்கள் பிள்ளைகள் அறிவாளிகளாக
இருக்க வேண்டும் எனில் அவர்களுக்கு புனைகதைகளை வாசியுங்கள். அவர்கள் மேலும் அறிவாளிகளாக
இருக்க வேண்டும் எனில் அவர்களுக்கு மேலும் புனைகதைகளை வாசியுங்கள்” (If you want
your children to be intelligent, read them fairy tales. If you want your
children to be more intelligent read them more fairy tales) என்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
மேலே நாம் கண்ட நபிமொழிக்கும்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்வதற்கும் முரண்பாடு இல்லை என்பதை நான் அறிவேன். இன்றுகூட என்
பிள்ளைகள் இரண்டு கதை நூல்கள் வாங்கினார்கள் - பல நாடுகளின் கிராமியக் கதைகளைக் கொண்ட
நூல் ஒன்றும், பெங்குவின் பற்றிய நூல் ஒன்றும். அவளுக்கு திருக்கலிமாவும் குர்ஆன் அத்தியாயங்களில்
சிலவும் தெரியும். இன்னும் தெரிந்து கொள்வார்கள், இன்ஷா அல்லாஹ்.
பிள்ளைகள் ஆன்மாவின் சிறகுகளுடன்
பிறக்கின்றன. பொறுப்பாக வளர்க்கிறேன் பேர்வழி என்று பல பெற்றோர்கள் அந்தச் சிறகுகளைத்தான்
முதலில் வெட்டி எறிகிறார்கள். அந்நிலையை விட்டும் நம்மை இறைவன் காப்பானாக!
No comments:
Post a Comment