Sunday, November 18, 2012

(க்)னாட் குறிப்புக்கள்



விவேகானந்தரின் ‘வேதாந்தச் சொற்பொழிவுகள்’ பற்றி எழுதியிருந்த கட்டுரைக்கு நான்கு பின்னூட்டங்கள் வந்திருக்கவும் திறந்து பார்த்தபோது மிரண்டு போனேன். நான்குமே சையத் அனுப்பியவை. பின்னூட்டம் என்ற பெயரில் நான்கு பாகங்களாக்கி ஒரு கட்டுரையை அனுப்பியிருக்கிறார். படித்துவிட்டு நாலு வரி எழுதிப் போட்டேன்.
என் கட்டுரையைப் படித்துவிட்டு இவ்வளவு யோசித்து மெனக்கெட்டுப் பின்னூட்டம் போட்டிருக்கிறாரே என்று சந்தோஷமாக இருந்தது. ஆனால் சையத் வெரி டேஞ்சரஸ் ஃபெல்லோவாக இருப்பார் போலிருக்கிறது. ஏற்கனவே இந்தப் பாய்ண்ட்டுகளைத் தொட்டு விளக்கி “பேப்பர் கப்” என்று ஒரு தத்துவக் கட்டுரை எழுதியிருக்கிறேன். அதை வாசிக்குமாறு அவரிடம் சொல்லிவிட்டேன்.

சமீபத்தில்தான் “எறும்பின் கண்” என்று எழுபது பக்கங்கள் வருமாறு ஒரு கட்டுரை எழுதினேன். சீரியஸ் ஸ்டஃப். கிட்டத்தட்ட ஒரு மாதத்தை எடுத்துக் கொண்ட அந்தக் கட்டுரைக்குக் கடைசியில் நாகூர் இஸ்மாயிலிடமிருந்து சின்னதாக, ஆனால் போதுமானதாக, ஒரு பாராட்டு வந்திருந்தது. அதைப் பார்த்துவிட்டு என் சகதர்மினி சொன்ன பின்னூட்டம்தான் இன்னமும் என் செவியில் தேனாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது: “காலேஜ்ல மொக்கை போடுவது பத்தாதா? இப்படி ’நெட்’டை வேறு திறந்து வைத்துக் கொண்டு எல்லார் உசிரையும் வாங்கணுமா? கவிதைய கட்டுரை சைஸ்ல எழுதறீங்க. கட்டுரைய புத்தகம் சைஸ்ல இழுக்கறீங்க. இப்படியெல்லாம் ராவுனா யாரு படிப்பாங்க?”

அவள் சொன்னதில் நியாயம் இருக்கிறதோ என்று தோன்றியது. மனைவி கூறுவதில் நியாயம் இருப்பதாகத் தோன்றுவதுதானே ஒரு நல்ல கணவனுக்கு அழகு? மேலும் அவள் சொன்னதற்கு அவளே அறியாத சான்றுகளும் உண்டு. ஆரம்பத்தில் வெகு ஆர்வமாய் அளவளாவிய அரபுத்தமிழனை இப்போதெல்லாம் ஆள் அட்ரஸே காணவில்லை. கடைசியாக ஒரு ‘பன்ச்’சும் வைத்தாள் சகதர்மினி: சீரியலா எழுதலாம்; சீரியஸா எழுதக்கூடாது!

என் எழுத்து லௌகீக தர்மத்துக்கு இறையூறாக இருக்கிறது என்பது அவளின் அனுபவம். இண்டெல் பெண்ட்டியம் இன்ஸைடு வைத்த ஒரு டெல் இன்ஸ்பிரான் தனது சக்களத்தியாகிவிடும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. “அதையே கட்டிக்கொண்டு அழுங்கள்” என்று எத்தனை முறை கூறிவிட்டாள்! எழுத்து எனக்கும் தடையாகத்தான் ஆகிவிடுகிறது, ஆன்மிக தர்மத்திற்கு. ஒருவார காலமாக முராக்கபா செய்வதில் ஒரு தொய்வு இருப்பதாக உணர்கிறேன். இன்று அதிகாலைத் தொழுகைக்குப் பின் கண்களை மூடி அமர்ந்துவிட்டேன்.

இதில் ஒரு ஐரணி சிந்தையில் சிரித்தது. என் நண்பர் சற்குணத்தை நேற்று மாலை ஏதேச்சையாகச் சந்தித்தேன். கர்ப்ப ரட்சகி மகாலில் அவருடைய மகன் ஸ்கேட்டிங் கற்றுக்கொள்கிறானாம். வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தார். ஆயிரத்து சொச்சம் வெண்பாக்களும் சில கலிவெண்பாக்களும் எழுதி வைத்திருப்பதாகச் சொன்னார். சித்தர்கள் பற்றி அவர் எழுதி வெளியிட்ட நூற்கள் நகரவே இல்லை என்று வருத்தப்பட்டார். ஆயிரம் பிரதிகளில் ஐந்தாறுதான் போயிருக்கிறதாம். திங்களன்று மதுரை அப்போலோவுக்குப் போக வேண்டும் என்று சொன்னார். அதற்கு அவர் சொன்ன காரணம் திகிலைக் கிளப்பியது: “அப்பா போனதுக்கப்பறம் சுத்த சைவமாயிட்டேன். அப்பவே கொஞ்சம் உபாதைகள் ஆரம்பமாயிடுச்சு. யோகா அதிகமா செஞ்சேன். லிவர் வீங்கியிருக்குன்னு சொல்றாங்க.”

என்னது, யோகா செய்தால் லிவர் வீங்கிவிடுமா? கேட்கவே விசித்திரமாக இருந்தது. ஆனால் லிமிட்டைத் தாண்டினால் அமிர்தமும் நஞ்சுதானே? இருக்கக் கூடும். ஹட யோகத்தில் ஈடுபடும் பலர் ரத்தவாந்தி எடுத்துச் செத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். திபெத்திய தியானம் ஒன்றைக் கற்றுக்கொண்ட கார்ல் குஸ்தாவ் யுங் அப்படித்தான் ரத்த வாந்தி எடுத்துச் செத்தாராம்.

ஆக, இன்னுமொரு நீண்ட தத்துவ விவாதத்தைக் சீரியஸ் கட்டுரைத் தொடராக ஆரம்பிக்க நான் தயாராக இல்லை. எழுத்து என்னும் ஒரே விஷயம் எப்படி லௌகீகம் ஆன்மிகம் இரண்டுக்கும் தடையாக முடிகிறது என்னும் மகா புதிரைப் பற்றி 

வியந்துகொண்டிருக்கிறேன். அத்துடன் இலவச இணைப்பாக இன்னொரு விஷயமும் தோன்றுகிறது. ஆண்கள் லௌகீகத்தில் ஆன்மிகத்தைக் கண்டால் பெண்கள் ஆன்மிகத்தில் லௌகீகத்தைக் கொண்டு வந்து விடுகிறார்கள் என்பதுதான் அது. இந்த பேலென்ஸ் அவசியம் தேவைதான். இல்லையென்றால் உலகம் இயங்காது.

”சகலமும் இறைவனின் வெளிப்பாடு. சகலத்திலும் இறைப்பண்புகள் வெளிப்படுகின்றன. இப்படியான அகப்பார்வையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். பயிற்சி எடுக்க வேண்டும். முதலில் நம்மிலிருந்தே ஆரம்பிக்கலாம். மனைவி மக்களில் பார்க்கலாம். ஜீவிதம், அறிவு, நாட்டம், சக்தி, கேள்வி, பார்வை, பேச்சு ஆகிய இறைப்பண்புகள் அவர்களில் எப்படி வெளிப்படுகிறது என்று கவனியுங்கள்”

இப்படி ஒருமுறை ஆன்மிகப் பாடத்தை சகசீடர்களுடன் பேசிக் கொண்டிருந்ததை சகதர்மினி உள்வாங்கியிருக்கிறாள். ’கார் ஓட்டக் கற்றுக் கொள்ளுங்கள்’ போன்ற அன்புக் கட்டளைகளை அவள் அவ்வப்போது இடுவதுண்டு. நான் இடிச்ச புளியாட்டம் இருந்து வருகிறேன். ஒருமுறை அன்புக் கட்டளையுடன் இப்படித் தொடர்ந்தாள், “என் வாய் வழியாக அல்லாஹ்தான் உங்களுக்கு இப்படிச் சொல்கிறான் என்று பாருங்கள். நிச்சயம் செய்வீர்கள்” சரிதான், சகதர்மினிகளுக்குத் தத்துவம் விளங்காது என்று நினைக்க வேண்டாம். கட்டாயம் விளங்கத்தான் செய்கிறது, அவர்களுக்கு எப்படி விளங்க வேண்டுமோ அப்படி!

5 comments:

  1. உங்களது பதிவுகளை ரீடர் மூலம் படித்து வருகின்றேன். சில விடயங்கள் கொள்கை அளவில் ஒத்துப் போகாமல் இருந்தாலும் தங்களது பதிவுகள் தரும் இன்பம் அலாதியானது.

    பின்னூட்டங்கள் பொதுவாக சிறந்த பதிவுகளுக்கு கிடைப்பதில்லை... ;-)

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. பேப்பர் கப் படித்துவிட்டு பேப்பர் மட்டும் இல்லை கப்பு மட்டும் இல்லை, பேப்பரும், கப்பும் .....பிரித்துப்போட்டால் பேப்பர், பிரிக்காமல் விட்டால் கப்பு ....
    இறைவன் மட்டுமே என்னை அறியும்வரை நான் மனிதன் ....என்னையே நான் அறிந்தவரை நானும் கடவுள் என பின்னூட்டம் எழுத எண்ணியிருந்தேன் இந்தப்பதிவினை படிக்கும்வரை. "மறுபடியும் முதல்ல இருந்தா?" என்று கேட்டுவிட்டால் என்ன செய்ய என எண்ணி, "வெரி டேஞ்சரஸ் ஃபெல்லோவாக" மறுபடியும் முகம் காட்ட மனமின்றி மூன்றே வரிகளில் பின்னூட்டத்தை பின்னூட்டமாகவே எழுதிவிட்ட சந்தோசத்துடன் முடிக்கின்றேன்.

    பின்குறிப்பு:
    ---------
    கார் ஓட்ட அவசியம் கற்றுக்கொள்ளுங்கள். எங்கள் வாய் வழியாக அல்லாஹ்தான் உங்களுக்கு இப்படிச் சொல்கிறான் என்று பாருங்கள். நிச்சயம் செய்வீர்கள் -:) -:)

    ReplyDelete
  4. உங்களது கட்டுரையில் என்னை குறிப்பிட்டிருப்பதை படிக்கும் போது நல்ல குஷியா தான் இருந்தது.. நன்றிகள்..

    எறும்பின் கண் மிகவும் அற்புதமான வடிவம். என்ன உங்க மனைவி இப்படி சொல்லிட்டாங்க... நீங்க ‘ம்’ன்னு சொன்னா என் செலவுல உங்களோட கட்டுரைகளை என் தோழர் ஒருவரோட (வே.மதிமாறன்) புத்தக பிரஸ் மூலமாக நான் வெளியிட தயாராக இருக்கிறேன்.

    நிசமாக தான் சொல்கிறேன். வியாபார நோக்கம் இல்லை. எனக்கு மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது உங்களது எழுத்துகள்.

    நான் எங்க ஹஜ்ரத் அவங்களுக்கு அடுத்த படியா விரும்பி மரியாதையோடு படித்து வருகிறேன்.

    எனக்கு சுஃபியிசம் என்றால் உயிர் மாதிரி.. நீங்கள் எனக்காக ஒரு புத்தகம் எழுத வேண்டும். ஆனால் அது முழுக்க முழுக்க இஸ்லாமிய சூழலில் இருக்க வேண்டுமென விரும்புவேன், ஓஷோ, ராமகிருஷ்ண பரமஹம்சர் இவர்கள் மீதெல்லாம் எனக்கு எந்த விரோதமும் கிடையாது, ஆனாலும் எனது விருப்பம் அதுவே..

    ReplyDelete
  5. உங்களின் பல கட்டுரைகளை நான் எனது முகநூலில் பகிர்ந்து இருக்கிறேன்.

    உங்கள் கட்டுரையில் வரும் ஹதீதுகளை சில குறிப்புகளை எனது ஸ்டேட்டஸாக எழுதியிருக்கிறேன்.

    உங்களது மௌலான ரூமியின் தமிழாக்க கவிதைகளை சகோதரர் நூருல் அமீன் மூலமாக கிடைக்க பெற்று பாதுகாத்து வருகிறேன்.

    ReplyDelete