Friday, November 16, 2012

கீழிறங்கி வந்த வானம்



’நீதானே என் பொன் வசந்தம்’ இசை வெளியீட்டு விழாவை ஏதோ ஒரு தொ.கா.சே ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. இளையராஜா மேடைக்கு வந்த போது அவதாரம் படத்தில் இடம் பெற்ற ‘தென்றல் வந்து தீண்டும்போது’ என்னும் பாடலைப் பின்னணியில் ஒலிக்கச் செய்தார்கள்.

எத்தனையோ ஆயிரம் பாடல்கள் கம்போஸ் செய்துவிட்ட அந்த இசைக் கலைஞனின் இசைக் களஞ்சியத்தில் இருந்து ஒரே ஒரு பாடலைத் தேர்ந்தெடுத்து அவரை அறிமுகப் படுத்த வேண்டும் என்றால் எதைத் தேர்ந்தெடுப்பது? இப்படி என்னையே நான் பல முறை கேட்டுக் கொண்டதுண்டு. மிகவும் கஷ்டமான காரியம்தான். ஆனால் அந்தப் பெருமலையின் சிகர நுணி என்று ஏதாவது ஒன்று இருக்கத்தானே வேண்டும்?
இசைஞானியிடமே கேட்டால் என்ன சொல்வார்? ”அதை இன்னும் நானே பார்க்கவில்லை. சிகர நுணி மேகத்திற்குள் மறைந்திருக்கிறது. இதுவரை நீங்களும் நானும் பார்த்து வந்திருப்பதெல்லாம் இசை என்னும் மலையின் அடிவாரத்தில் உள்ள பாறைகளைத்தான்” என்று அவர் சொன்னாலும் சொல்லலாம்.

அவரின் பாடல்களில் எனக்கென்று ஒரு நிரல் வைத்திருக்கிறேன். அதை யாரிடமும் நான் சொல்வதில்லை. Genre வகைப்பாடுகளும் ராக், ஜாஸ், கர்நாட்டிக், ஃப்யூஷன், ஃபோக் என்றெல்லாம் இல்லாமல் தனிப்பட்ட பெயர்கள் கொடுத்து வைத்திருக்கிறேன். யோகா, தந்த்ரா, ஜென், சித்தர் இப்படியான ஒரு தினுசான வகைப்பாடு. அதில் ‘தென்றல் வந்து தீண்டும்போது...” பாடலை ஜென் என்னும் கோப்பில் வைத்திருக்கிறேன்.

டெக்னிகலாக இப்பாடல் ஃபோக்கும் மேற்கத்திய செவ்வியல் இசையும் இணைந்த ஃப்யூஷன் என்னும் வகையைச் சேர்ந்ததாகச் சொல்லலாம். எனக்கு இசையின் கலைநுட்பங்களில் ஆழமான அறிவு கிடையாது. ஒரு பாடலின் தன்மை என்பதகாக நான் எப்படி உணருகின்றேனோ அதன் அடிப்படையில்தான் வகைப்படுத்திக் கொள்கிறேன். இதே பாடல் இன்னொருவருக்கு வேறு அனுபவத்தைத் தூண்டலாம். ‘ஜென்னாவது மண்ணாவது. இந்தப் பாட்டுல அப்படியெல்லாம் எதுவுமே இல்லீங்க’ என்று அவர் சொல்லக்கூடும். அதை நான் மறுக்க முடியாது. இது அவரவர் அக அனுபவம் சார்ந்த விஷயம்.

இளையராஜாவாகட்டும் வேறு இசைக் கலைஞர்களாகட்டும், அவர்களின் ரசிகர்களிடம்கூட நான் இசையைப் பற்றிப் பேசுவதே இல்லை. இந்த முடிவை நான் எடுப்பதற்கு என் மாணவன் ஒருவன் காரணமாக இருந்தான்.

பாடி பில்டிங் கலையில் அது ஒரு கலை என்பதே அறியாமல் ஏதோ ஹீரோயிசத்துக்கான முஸ்தீபுகளில் ஒன்று என்பதாக ஈடுபட்டு வந்தவன் அவன். முதுகலைத் தமிழ் பயின்று வந்தான். கடைசி செமஸ்டருக்கு இலக்கிய ஆய்வு என்று ஒன்றைச் செய்தாக வேண்டும். அதற்கான கைடுகளை அவர்களேதான் தேர்ந்தெடுப்பார்கள், குலுக்கல் முறையில். குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு எடுத்தானாம். என் பெயர் வந்ததாம். வாச்சவனை வைத்துக் கொண்டு என்ன ஆய்வு செய்வது என்றே புரியவில்லை எனக்கு. அவனின் ரசனை யாது என்று அறிவதற்கு ஒரு சின்ன இண்டர்வ்யூ செய்தேன். தான் இளையராஜாவின் ’வெறித்தனமான’ ரசிகன் என்று சொன்னான். அப்போதுதான் இளையராஜாவின் சுயசரிதை மாதிரியான ‘பால் நிலாப் பாதை’ வந்திருந்தது. அதையே ஆய்வு செய்ய அவன் ஒத்துக்கிட்டான். ஒன்றரை மாதம் ஓடிற்று. ஆய்வு எந்த அளவுக்கு டெவலப் ஆகியிருக்கிறது என்பதை விசாரித்துவிட்டு அவன் எழுதிய பிரதியைக் கொண்டு வருமாறு சொன்னேன். போனவன் இரண்டு மாதங்கள் கழித்து Viva-Voce-க்குச் சமர்ப்பிக்க ஆய்வேடாகவே தயாரித்துக் கொண்டு வந்துவிட்டான். வாங்கிப் புரட்டிப் பார்த்த எனக்கு வயிற்றைக் கலக்கியது. அவனைப் போன்ற ஒரு ரசிகன் கிடைக்க இளையராஜா நிறையவே புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆய்வு என்ற பெயரில் அவரைப் படுகொலையே செய்து வைத்திருந்தான். அஸ்ஸாசினேஷன் என்பதெல்லாம் சாதாரண வார்த்தை. ‘கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்’ என்று செய்திகளில் வாசிப்பார்களே அப்படியான ஆய்வு. SAW என்றொரு படம். அதைப் பார்த்தால் நான் சொல்லும் ஆய்வின் தன்மையை நீங்கள் விளங்கிக் கொல்லலாம்.. மன்னிக்கவும், கொள்ளலாம். ஏதோ, இளையராஜாவுக்கு நான் துரோகம் செய்துவிட்டது போல் இன்றுவரை குற்றவுணர்ச்சியாகவே இருக்கிறது.

நானும் இளையராஜாவின் ரசிகன்தான் என்பதால் அவனுடைய மனமும் என் அலைவரிசையில் இருக்கும் என்று முடிவு செய்தது என்னுடைய தப்பு. அவனின் அலைவரிசை என்ன என்று அறிந்து கொள்ள மீண்டும் ஒரு இண்டர்வ்யூ. பத்துப் பாடல்களை நிதானமாக யோசித்து நிரல் படுத்துமாறு சொன்னேன். அவன் சொன்ன எந்தப் பாடலும் என் நிரலில் வராது. பத்தல்ல, என் நிரலில் நூறுக்குள்ளும் வராது. இளையராஜா ஒற்றை நிலம் அல்ல. ஐவகை நிலமும் கொண்ட பெரும்பரப்பு. அவரில் காடும் உண்டு கடலும் உண்டு கழனியும் உண்டு மலையும் உண்டு பாலையும் உண்டு. அந்தப் பாலையிலும் சோலை உண்டு. ஒயாசிஸ் என்னும் குளமும் உண்டு. பாபநாசம் சிவனின் ரசிகர்கள் இருவருக்கு இடையே ரசனையில் வேறுபாடு என்பதற்கான சாத்தியம் கம்மியாக இருக்கலாம். ஆனால் இளையராஜா அப்படி அல்ல என்று அவனைக் கொண்டு நான் பாடம் கற்றுக் கொண்டேன்.

மீண்டும் என் நிரலுக்கே வருகிறேன். ஜென் பிரிவில் நான் வைத்திருக்கும் ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலைத்தான் பெரும்பாலும் நான் என் லிசனிங் செஷனில் இறுதியாகக் கேட்பது வழக்கம். அது ஒரு சிகரப் பாடல் என்றே இன்றுவரை நான் உணர்ந்து வருகிறேன். அதைத் தாண்டி இசைஞானி ஒரு பாடலைத் தருவாரா என்னும் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். அந்தப் பாடலைப் பின்னணியில் இசைக்கவிட்டு அவரை வரவழைத்ததைக் கண்டபோது (இயக்குநர் கவுதம் மேனனின் முடிவென்று நினைக்கிறேன்) சற்றே மகிழ்ச்சியாக இருந்தது. இப்பாடலை இசைஞானியின் மேதைமையில் ஒரு சிகரம் என்று கருதும் ரசிகர்கள் பலர் இருக்கக் கூடும் என்று தோன்றிற்று.

’அவதாரம்’ வெளிவந்திருந்த சமயம். அப்போது சுஜாதா குமுதத்தில் கேள்வி-பதில் பகுதியின் பொறுப்பில் இருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் தேசிய விருது வாங்கிய ஒரு பாடலைக் குறிப்பிட்டு அது பற்றிக் கருத்துரைக்குமாறு வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். சுஜாதா, ‘அவதாரம் படத்தில் இளையராஜா ஒரு பாடல் தந்திருக்கிறார். கேட்டுப்பாருங்கள். அபூர்வமான ஃபூஷன்’ என்பது போல் ஒரு பதில் சொல்லியிருந்தார். அதைப் படித்துவிட்டுத்தான் அந்தப் பாடலையே நான் கேட்டேன். முதல் கேட்பிலேயே பரவசம் கொள்ள வைத்தது.

சில வருடங்கள் கழித்து வேறு ஒரு பத்திரிகையில் (ஆங்கிலப் பத்திரிகை என்பதாக நினைவு) இதே பாடலைப் பற்றிக் குறிப்பிட்டு Psychedelic என்று சொல்லியிருந்தார்கள். அப்படியொரு தன்மை அந்தப்பாடலில் உள்ளது. ஆனால், சைக்கடெலிக் என்னும் வார்த்தைக்குப் பதிலாக நான் Noesis என்னும் வார்த்தையைச் சொல்ல விரும்புகிறேன். இதுதான் இப்பாடலை நான் ஜென் கோப்பில் வகைப்படுத்தி வைத்ததற்குக் காரணம். தேடல் முடிந்து பிரபஞ்சத்தின் ரகசியத்தை அறிந்த மனநிலையில் பாடப்படும் பாடலாக அது ஒலிக்கிறது. (இளையராஜாவை ஒருபோதும் ரசிக்காத என் நண்பன் அஸ்லம் இப்பாடலைக் கேட்டுவிட்டு அதன் ட்யூனில் innocence இருக்கிறது என்றும் காற்றில் ஒரு இலை அல்லது இறகு (சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று – பிரமிளின் குறியீடு) அசைந்து போவது போல் உள்ளதென்றும் சொன்னான்.)

இசை என்று பார்க்கப் போனால் இளையராஜாவின் வேரும் கிளையும் ஒன்றாகி விருட்சத்தின் முழு தரிசனம் கிடைத்த பாடல் இது என்று சொல்லலாம். கிராமிய இசை வேர்; மேற்கத்திய செவ்வியல் இசை கிளை.

இதைச் சொல்லும்போது கலைகளுக்கான உறவுநிலைகள் பற்றி முன்பொரு முறை தூர்தர்ஷனில் யுஜிசியின் நிகழ்ச்சி ஒன்றில் சொல்லப்பட்ட கருத்து நியாபகம் வருகிறது. ஒரு மேற்கத்திய வெள்ளை மார்பிள் சிலை காட்டப்படுகிறது, மைக்கேல் ஏஞ்சலோவாக இருக்கலாம், அதற்குப் பின்னணியாக இந்தியச் செவ்வியல் இசை ஒலிக்கிறது. பிறகு நடராஜர் உலோகச் சிலை காட்டப்படுகிறது. பின்னணியில் மேற்கத்திய செவ்வியல் இசை ஒலிக்கிறது. இதைக் காட்டிவிட்டு நமக்குக் கற்பிக்கிறார்கள்: ‘பொருந்தவில்லை பார்த்தீர்களா? பொருந்தாது. கலாச்சாரப் பின்னணிகள் வேறு வேறாக இருக்கும்போது எப்படிப் பொருந்தும்?” எனக்கு எதை எடுத்துத் தலையில் அடித்துக் கொள்வது என்றே தெரியவில்லை.

கலைகளின் உடலை மட்டுமே தொட்டறிந்துள்ள கலைஞர்களால் கலாச்சாரங்களை இசைய வைக்க முடியாது என்பது ஓரளவு உண்மைதான். ஆனால் கலைகளின் ஆன்மாவைத் தரிசித்துவிட்ட ஒரு மேதையால் வெவ்வேறு கலாச்சாரப் பின்னணி கொண்ட கலைகளைக் காதலில் முயங்க வைக்க முடியும். அதை இளையராஜா சாதித்திருக்கிறார். இந்தப் பாடல் அதற்கொரு பதம். (அவரின் திருவாசகம் இசைப்பேழை இந்தக் கோணத்திலும் குறிப்பிடத்தக்க ஒன்று.)

கலைத்துறை ஆகட்டும் விஞ்ஞானம் ஆகட்டும், மேதைகளிடம் காணப்படும் ஒரு குணம் Passion. அதை அவர்கள் கட்டுக்குள் வைத்து சரியான முறையில் channelize செய்ய முடிகிறதா என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அப்போதுதான் அவர்களால் தங்கள் துறையில் சமுதாயத்திற்கு நிறைவாகவும் நிறையவும் output தர முடியும். சிலருக்கு இந்த சேனலைஸிங்கில் கவனம் செலுத்த முடியாது. அவர்களின் passion அவர்களை ஒரு கானகவாசி போல் ஆக்கிவிடும். அந்த நிலையில் அவர்களின் தீவிரம் obsession என்னும் மனப்பிறழ்வாகப் பார்க்கப்படலாம். பிரக்ஞையின் பிசகும் மேலெழுதலும் ஒரே மாதிரி தோன்றக்கூடும். அதனால்தான் பைத்திய நிலை எது ஞான நிலை எது பிரித்துப் பார்ப்பது சிக்கலாகிறது. ஆன்மிகத்தின் ஆரம்ப நிலைகள் பித்துநிலைகள் என்று சொன்னால் அதை மறுக்க முடியாது என்றும் நோயசிஸ் மற்றும் யூனியோ மிஸ்டிக்கா போன்ற மேனிலைகளில்தான் அது ஞானம்தான் பைத்தியம் அல்ல என்று தெளிவாகச் சொல்ல முடியும் என்றும் டாக்டர்.ருத்ரன் சொல்கிறார். ஒருவன் உண்மையான கலைஞனாகவும் ஆன்மிகவாதியாகவும் இருக்கும் பட்சத்தில் பித்துநிலையை நிச்சயமாக அனுபவித்திருப்பான். பிரக்ஞையின் பிசகை அறிந்திராதவன் நல்ல கலைஞனாக இருக்க முடியாது. ஆனால் அவன் அந்நிலைக்கு மேலே நின்று அதனை பார்ப்பவனாக இருப்பான்.
இவ்வளவும் சொல்லக் காரணம், இளையராஜாவின் பேட்டி ஒன்றில் அற்புதமான கேள்வி ஒன்று அவரிடம் கேட்கப்பட்டது. ’அமானுஷ்யமான மனநிலையைக் காட்டும் கதைகள் கொண்ட குணா மற்றும் அவதாரம் ஆகிய படங்களில்தான் உங்கள் இசையின் மேதைமை உச்சமாக வெளிப்பட்டுள்ளது. இது ஏன்?’ இந்தக் கேள்விக்கு இளையராஜா என்ன பதில் சொன்னார் என்பது மறந்துவிட்டது. ஆனால், இதற்கான விடையே அவர் உண்மையான இசைஞர் என்பதுதான். வேறு என்ன காரணம்? இளையராஜாவுக்கு இப்படியான அமானுஷ்யங்களின் மீது ஈர்ப்பு உண்டு என்பதற்கு இன்னொரு சான்றும் சொல்லலாம். பிரபலங்கள் தங்களுக்குப் பிடித்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று சொல்லி வார இதழ் ஒன்றில் (பதினைந்து ஆண்டுகளுக்கு முன்) சப்ளிமெண்ட்டரி போட்டார்கள். அதில் இளையராஜா கல்கியின் சிறுகதை ஒன்றினைத் தெரிவு செய்திருந்தார். பௌர்நமி இரவில் ஊருக்கு வெளியே உள்ள கோட்டை ஒன்றில் ஒருவன் பெண்ணின் ஆவி ஒன்றை சந்தித்துக் காதல் கொள்கிறான் என்னும் கதை!

இதையெல்லாம் மீண்டும் எண்ணிப் பார்க்க வைத்தது ’நீதானே என் பொன் வசந்தம்’ படத்தின் இசை வெளியீட்டில் இளையராஜாவை வரவேற்கப் பின்னணியில் ஒலித்த அவதாரம் படப்பாடல். ஜென் சொல்லும் satori என்னும் அனுபவத்தைத் தூண்டுவது போன்ற ஒரு பாடலை இ.ஞா மீண்டும் வழங்குவாரா என்று அது எதிர்பார்ப்பைத் தூண்டியது. ஆனால் இந்தப் படத்தின் கதைக்களம் அதற்கான சாத்தியம் இருப்பதாக நினைக்க இடம்தரவில்லை.

இளையராஜாவே பாடும் ஒரு டூயட் பாடல் தொடங்கிய போது அந்த நம்பிக்கை லேசாக வலுப்பட்டது. கேனா விசில் என்று ஸ்காட்லாந்தில் ஒரு இசைக்கருவி உண்டு. (Brave Heart படத்தின் பின்னணி இசை முழுக்க இதை James Horner பயன்படுத்தியிருப்பார்.) அதைத்தான் வாசித்தார்களோ என்னவோ. அதன் ஓசை கொண்டு அற்புதமான அலையாய்ச் சுருளும் இசை இழைந்து வந்தது. இளையராஜாவின் குரலில் பல்லவி தேனாய்ப் பாய்ந்தது:

“வானம் மெல்ல கீழிறங்கி
மண்ணில் வந்தாடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுதிங்கே
வாசம் சொன்ன பாஷை என்ன?
உள்ளம் திண்டாடுதே
பேசிப் பேசி மௌனம் வந்து பேசுதிங்கே”

அதற்கு மேல் தொடர்ந்த வரிகளில் ஜென் இல்லை. ஒரு சராசரி காதல் பாடலாக மாறிவிட்டது. ஆன்மிகத் தளத்தில் இருந்து கீழிறங்கிவிட்டது. மண்ணில் இறங்கினாலும் வானம் வானமாகவே இருக்க வேண்டும். ஆனால் வானம் சட்டென்று மண்ணாக மாறிவிட்டது.

நா.முத்துக்குமார் ஜென் தத்துவத்தையும் கவிதைகளையும் மிக விரும்பி வாசிப்பதாக எழுதியிருக்கிறார். அதன் சாயலைத் திரைப்பாடல்களிலும் கொண்டு வர முயற்சிப்பதாகச் சொல்கிறார். அந்த முயற்சி இப்பாடலிலும் தெரிகிறது என்றபோதும் பல்லவியிலேயே முடிந்து போய்விடுவது ஏமாற்றமாக இருந்தது.

வேறு வகையிலான கவித்துவங்கள் சரணங்களில் இடம் பெறுகின்றன என்பதை நான் மறுக்கவில்லை. உதாரணமாக,
“நெஞ்சில் கேட்குதே
உள்ளம் துள்ளி ஓடி நான்
வந்து போன காலடி”
என்னும் வரியைச் சொல்லலாம். இதைக் கேட்டபோது, “இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு சுழலுதடி” என்று நெஞ்சை ஒரு சி.டி.ப்ளேயராக்கிப் பழநிபாரதி எழுதிய பாடல் வரிகள் நியாபகம் வந்தன.

இப்படி ஏமாற்றம் தந்த பாடல்கள் எத்தனையோ உண்டு.

’நிலவுப் பாட்டு ஓர்நாள் கேட்டேன்
மூங்கிற் காட்டில் நாளும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம்
ஒரு உயிருக்குத் தெரிந்தது
இங்கு யாருக்குப் புரிந்தது?”
என்று பல்லவியில் தொடங்கி விரிந்த வரிகளில் இருண்மையான ஒரு பூடகம் இருந்தது. ஆனாலும் அவதாரம் பாடலின் உச்சத்தை எட்டவில்லை.

‘அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி
அன்று மூடிய வாசல்கள்
சிறு மூச்சினில் திறக்குதே’
என்னுப் பல்லவி தந்த பரவச உணர்வும் சரணத்தில் தொடரவில்லை.

இசைஞானியின் பழைய பாடல்களிலும் இந்த ஜென் தன்மை கொண்ட பாடல்கள் அரிதாக இருந்திருக்கின்றன. இயற்கையில் சுயம் கரையும் தன்மை கொண்டவை. அதில் எல்லாம் மேற்கத்திய செவ்வியல் இசைக்கூறுகளை அவர் கையாண்டிருப்பதைக் கேட்கலாம். ‘புத்தம் புதுக் காலை...பொன்னிற வேளை...’, ‘பூங்காற்றிலே காலைப் போது பூத்தூவுது சாலை மீது...’, ‘புதிதாய்க் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்’ இத்தியாதி. ஆனால் முழுப்பாடலிலும் அந்த உணர்வைப் பிசிரு தட்டாமல் தருவதாக அவை அமையவில்லை என்றே நான் உணர்ந்தேன். ஏதோ ஒரு குறை இருக்கிறது. ‘தென்றல் வந்து தீண்டும்போது…’ பாடலுக்கு மேலே செல்லும் ஒரு பாடல் இன்னும் வரவில்லை என்பதாகவே உணர்கிறேன்.
கொஞ்சம் கிட்ட வந்த பாடல்,
‘இளங்காத்து வீசுதே சுதியோடு பேசுதே
வளையாத மூங்கிலில் நாதம் வளைந்து ஓடுதே”
இப்பாடலும்,
“விதை விதைக்கிற கைதானே
பூப்பறிக்குது தினந்தோறும்
அதிசயத்தை யாரு அறிஞ்சா?
ரகசியத்தை யாரு புரிஞ்சா?”
என்று பிரபஞ்சத்தை ஒரு பெருவியப்போடு நோக்குகிறது. “வாழ்க்கை என்பது சிக்கல் அல்ல, தீர்வு காண்பதற்கு. அது வியக்கப்பட வேண்டிய ஒரு புதிர்” என்று ஓஷோ விளக்கும் ஜென் பார்வை இப்பாடலில் அழகாக வந்துள்ளது, வரிகளிலும் இசையிலும்.

ஒன் பாய்ண்ட் ஷார்ட் என்று சொல்லலாம். காரணங்கள் உண்டு. ஆனால் இந்த அளவுக்கு வெளிப்பட்டதற்கான காரணம் என்ன? சந்தேகமே இல்லை. இளையராஜாவுக்கு அதீதப் பிரக்ஞையின் மீது ஆழமான ஈர்ப்பு இருக்கிறதுதான். இப்படத்தின் இயக்குநர் பாலா என்பதையும் பிதாமகனின் கதாப்பாத்திரங்களையும், இப்பாடல் எடுக்கப்பட்டுள்ள மலைச்சூழலையும் கவனியுங்கள், புரியும். “நான் கடவுள்” படத்தின் பாடல்கள் வெளிவந்தபோது ஒரு விமரிசனத்தில் ‘பிதாமகனில் வரும் இளங்காத்து வீசுதே போல் ஒரு பாடல் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது’ என்று எழுதியிருந்தார்கள். முக்கியமான விமரிசனம்.

அவதாரம் ஒரு ஃப்ளாப் படமானதில் ஆச்சரியமே இல்லை. தமிழகச் சூழலில் அது போன்ற ஒரு முன்வைப்பு வரவேற்பைப் பெறாது. கூத்துப்பட்டறையில் உருவாகி வந்த நாசரின் மனத்தில் இந்தக் கதை இயல்பாகவே வடிவெடுத்திருக்க வேண்டும். அழிந்து வரும் தெருக்கூத்து என்னும் கலை வடிவத்தின் மீது தீராத அப்செஷன் கொண்ட ஒரு கலைஞனின் வலிகளைப் பேசும் கதை. ’கலையைத் தேர்ந்தெடு; கலை வடிவத்தின் மீது பற்று வைக்காதே’ என்று சொல்வது போல் இருக்கிறது. ஏனெனில் கலைக்கான தேவை என்றும் இருக்கும். ஆனால் வடிவங்கள் காலாவதி ஆகிக்கொண்டெ வரும். எனவே, காலாவதி ஆகும் கலை வடிவத்தைப் பற்றிக்கொண்டு விட மறுப்பவன் அழிவான். அத்தகைய கலைஞன் மனப் பிறழ்வு கொண்டவனாகப் பார்க்கப் படுகிறான். தெருமுனைக் கச்சேரிகளில் இருந்து வளர்ந்து வந்த இளையராஜாவுக்கு இந்தக் கதை ஆத்மார்த்தமாக நெருங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை. அது அவரின் மிக உன்னதமான ஒரு பாடலை வெளிக்கொண்டு வந்துள்ளது.

இப்பாடல் வரிகள் மிகவும் எளிமையானவை. இந்த வரிகளில் சிறப்பாக ஒன்றுமே இல்லையே என்று சொல்லத் தூண்டும் சாதாரணமான வரிகள்தான். இதுவும் ஜென் கவிதையின் மிக முக்கியமான ஒரு பண்பு. ஹைகூ கவிதையின் சிகரம் என்று போற்றப்படும் பாஷோ எழுதிய ஒரு ஹைகூ. ஜென் தத்துவங்கள் அனைத்தின் சாராம்சமும் இதற்குள் இருக்கிறது என்று போற்றப்படும் அந்த ஹைகூவைக் கவனியுங்கள்:

“பழைய குளம்
தவளை குதித்தது
நீரொலி”

அவ்வளவுதான்! மிக எளிமையான ஐந்தே வார்த்தைகள். தத்துவக் கலைச்சொல் என்று இதில் ஒன்றுமே இல்லை. ஆனால் ஜென் தத்துவ மரபின் சாரம் இதில் நிறைந்திருக்கிறது என்று ஜென் வட்டத்தில் இதனை வியந்து வியந்து பேசுகிறார்கள். சாமானியர்களுக்கு இதெல்லாம் nut case என்று தோன்றும்.

கவிஞர் வாலியும் மிக எளிமையான வரிகளையே தந்திருக்கிறார். ”பாடல் எழுதுபவனுக்கு என்ன எழுத வேண்டும் என்பதை விட என்ன எழுதக் கூடாது என்பது தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அதை மிக நன்றாக அறிந்தவர் வாலி” என்று ஒருமுறை இளையராஜா சொன்னார். இந்தப்பாடல் அதற்கொரு நல்ல சான்று.

“காலியாய் இருப்பதே நிறைவாய் இருக்கிறது” என்று தாவ்-தெ-ச்சிங்கில் தாவோயிச ஞானி லாவோஸு சொல்லும் தத்துவப் பார்வையை இந்தப் பாடலில் எத்தனை லாவகமாக இயல்பாக ஒரு வரியில் வாலி கொண்டு வந்திருக்கிறார் என்று எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன்:
“எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது”

“காலம் என்பது ஒரு நீரோடை போல் செல்கிறது. அதில் எதிர்நீச்சல் போடாமல் ஒரு வெற்றுப் படகு போவது போல் நீங்கள் செல்லுங்கள்” என்பது தாவோவும் ஜென்னும் வழங்கும் ஆழ்பார்வைகளில் ஒன்று. இதை ஓஷோ பல நூல்களில் விளக்கியுள்ளார். இதை ஒரு தத்துவம் என்று சொன்னால் சொல்லுங்கள். ஒரு பாமரனின் வாய்மொழியாக இது வெளிப்பட்டால் எப்படி இருக்குமோ அப்படியே இதை வாலி எழுதியிருக்கிறார்:
“ஓடை நீரோடை அது ஓடும் அதுபோல
ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அதுபோல
நிலையாய் நில்லாது நினைவில் வரும் நிறங்களே”

இது ஒரு காதல் பாடல் (duet song) என்பதும் கவனத்திற்குரியது. இது போன்ற ஒரு டூயட் பாடல் இதற்கு முன்பும் பின்பும் வந்திருக்காது என்று சொல்வேன். ஏனெனில், பொதுவாக காதலர்கள் பாடும் டூயட் பாடல் என்றால் அதில் ஒருவரை ஒருவர் வருணித்துப் புகழ்வது மாதிரிதான் இருக்கும். குறைந்தபட்சம் காதலன் காதலியைப் புகழ்வான். “நீதானே என் பொன்வசந்தம்” என்ற வரியே கூட அதற்கொரு உதாரணம். நீயே என் சொர்க்கம் / தெய்வம்/ தேவதை இத்தியாதி வருணிப்புகள். அதன் அடிப்படை என்னவெனில் ‘நீ இல்லை என்றால் நான் இல்லை’ என்பதுதான். ஒருகணமும் உயிர்வாழ மாட்டேன் என்பது போன்ற அதீதப் புலம்பல்களைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போயிருக்கிறதா இல்லையா?

ஆனால் இப்பாடலில் காதலர்களுக்கிடையே அது மாதிரியான சாய்தலே இல்லை என்பதுதான் இதன் விசேஷம். “I need you” என்னும் நிலையில் காதல் சாத்தியமே இல்லை என்பார் ஓஷோ. உன் தேவைக்காக மற்றவரைப் பயன்படுத்திக் கொள்கிறாய். அதற்குப் பெயர் காதல் அல்ல. “I don’t need you” என்னும் நிலையில்தான் காதல் இருக்க முடியும் என்று அவர் சொல்வார். இப்பாடலில் காதலர் இருவருமே தத்தமது மனநிலையில் நிறைவாய் இருக்கும் உணர்வே வெளிப்பட்டுள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது தூய காதலைச் சொன்ன ஒரே பாடல் இதுதான் என்று சொல்லிவிடத் தோன்றுகிறது!

இளையராஜாவின் இசை குறித்து இன்னொரு விஷயம். மேற்கத்திய செவ்வியல் இசையில் அபாரமான திறமை கொண்டவர் அவர் என்பது உலகறிந்த செய்தி. ஐரோப்பாவுக்கே போய் சிம்ஃபொனி வாசித்து வந்தார். அவருடைய இசைப் பேழைகளிலும், பின்னணி இசைகளிலும், பாடல்களிலும் சிம்ஃபொனியின் கூறுகளை அவர் கையாண்டிருப்பதைக் கேட்டிருக்கிறோம். பீத்தோவன், ஹாண்டல், பாக், மொஸார்ட், ச்சாப்பின், ச்சகாவ்ஸ்கி போன்ற சிம்ஃபொனி மேதைகளின் தாக்கம் இல்லாத ஒரு இசையமைப்பாளரைகூட ஆங்கில மற்றும் மேற்கத்திய திரைப்படங்களில் காணமுடியாது. இளையராஜாவுக்கே மிகவும் பிடித்தவரான ஜெர்ரி கோல்ட்ஸ்மித் முதல் ஜேம்ஸ் ஹானர், ஃபிலிப் க்ளாஸ், ஹான்ஸ் ஸிம்மர் வரை.

ஃபிலிப் க்ளாஸின் இசையைக் கேட்டுக் கொண்டிருந்தபோது ஒரு விஷயம் என் மனதில் பட்டது. அதாவது இவர்களெல்லாம் திரைப்படங்களுக்கு மிகச் சொற்பமாகவே இசையமைத்திருக்கிறார்கள் என்பதுதான் அது. ஆனால் இங்கே இந்தியச் சூழலில் இளையராஜாவின் மேதைமையை முழுக்க முழுக்க திரைப்படங்களே விழுங்கிக் கொண்டன. எனவே தூய இசை வடிவங்களை அவர் முழுமையாக வழங்குவதற்கான வாய்ப்பே இங்கே இல்லாமல் போய்விட்டது. எத்தனை துயரமான விரயம் என்று வருத்தமாக உள்ளது.

இன்னொரு விஷயம், அவர்களின் இசையில் உள்ள மாடுலேஷன். தேவையான இடத்திற்கேற்ற ஒலியளவு என்பது இந்தியச் சூழலில் இல்லவே இல்லை. எப்போதும் உரத்து ஒலிப்பதாகவே அதனை இந்திய மனநிலை வேண்டுகிறது. தொன்மையானதும் செழுமையானதுமான தம் இசை மரபை இந்தியர்கள் இழந்துவிட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது. ஃபிலிப் க்ளாஸ்ஸின் இசை மயிலிறகு மனதில் வருடுவது போல் உள்ளது. தென்றல் வந்து தீண்டுவது போல்! (இப்போது இந்த மாடுலேஷனை ஏ.ஆர்.ரஹ்மான் இன்னும் ஒருபடி மேலே எடுத்துச் செல்கிறார், ‘ராவணன்’ படத்தின் பின்னணி இசையைக் கேட்டால் தெரியும். இளையராஜா போட்டு வைத்த பாதை அது.)

இந்தச் சூழலிலும் இளையராஜா தான் பெற்ற களங்களில் சிம்ஃபொனியின் கூறுகளையும், தேவையான இடங்களில் ஒலியின் ஏற்ற இறக்கங்களையும் முடிந்த அளவு கொண்டுவந்திருக்கிறார் என்பது அவரின் சாதனை. மட்டுமல்ல, சிம்ஃபொனியின் கூறுகளை ஐரோப்பிய உணர்வே சற்றும் தொனிக்காமல் அதைத் தமிழ் மண்ணின் வாசம் வீசும்படியாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது அவரின் உச்சபட்சமான சாதனை. அதன் சான்றுகளில் ஒன்றாக அவதாரம் படப்பாடலைக் காண்கிறேன்.

வாங்கலிஸ் (Vangelis) என்றொரு கிரேக்க நாட்டு இசைமேதை இருக்கிறார். அவருடைய வீட்டில் அவரை சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் அவருடைய இசை பற்றி இவ்வாறு கூறினார்: வாங்கலிசின் இசை என்னை வேறொரு கிரகத்திற்குத் தூக்கிக்கொண்டு போகும் (Vangelis’ music used to transport me to another planet.)  இந்தத் தன்மையை இளையராஜாவின் இந்தப் பாடலிலும் வேறு சில பாடல்கள் மற்றும் பின்னணி இசையிலும் நான் உணர்ந்திருக்கிறேன்.

மேற்கத்திய இசை மேதைகளாக இங்கே நான் தொட்டுக்காட்டியவர்கள் அனைவருமே அவர்களின் கலாச்சார மற்றும் வரலாற்றுச் செழுமையை நன்றாக உள்வாங்கிக் கொண்டவர்கள். ஆனால் இங்கே நடப்பது என்ன? உலகத்தரத்தில் ஒரு படம் பண்ணுகிறேன் என்று இயக்குநர் பீற்றிக் கொள்வார். பார்த்தால் ஜீ.வி.பிரகாஷ் போன்ற கத்துக்குட்டிகளை வைத்து இசை போடுவார்கள். இந்த மண்ணில் வேர்பாய்ச்சி அந்தன் சாராம்சத்தை உள்வாங்காத ஒருவனால் எப்படி நம் திரைப்படங்களுக்கு நல்ல இசையைக் கொடுக்க முடியும். ஏ.ஆர்.ரஹ்மானிடமும் அந்தக் குறை இருப்பதாக உணர்கிறேன். அதனால்தானோ என்னவோ அவர் இங்கிருந்து நகர்ந்து போய்விட்டார்.

’பூ’ என்று ஒரு திரைப்படம். தொலைக்காட்சியில் ஒருநாள் ஓடிக்கொண்டிருந்தது. அதன் பின்னணி இசை மனதைப் பிசைந்தது. உலகத்தரமாக இருந்தது. யாரது என்று விசாரித்தால் இ.ஞா.இ,ரா என்றார்கள். நந்தலாலா, அழகர்சாமியின் குதிரை போன்ற லோ பட்ஜெட் படங்களுக்கு உலகத் தரத்தில் பின்னணி இசை தந்துவருகிறார் இளையராஜா. பாடல்களே வேண்டாம். ஹாலிவுட் பாணியில் இந்தப் பின்னணி இசைகளுக்குப் பெயர் கொடுத்து தனி ஆல்பங்களாகக் கொண்டு வரலாம். ஆனால் தூய இசையைக் கேட்கும் மனவளம் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்தியர்களுக்கு வராது என்றே நினைக்கிறேன்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வந்த இளையராஜா இப்போதிலிருந்து தொடங்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அவரின் மேதைமை இவ்வளவு குப்பைக் கூடைகளில் வீணடிக்கப்பட்டிருக்காது. ”மீன் விற்கும் சந்தையில் விண்மீன்கள் விற்றவன்” என்று கண்ணதாசனைப் பற்றி அப்துல் ரகுமான் கூறிய வரிகள் இளையராஜாவுக்கும் பொருந்தும்.

பாடல் எழுத அழைக்கப்பட்டபோது மறுத்து, ‘அம்மி கொத்த சிற்பி எதற்கு?’ என்று அப்துல் ரகுமான் கேட்டது பிரசித்தம். இளையராஜா என்ற சிற்பி ஒரு சிலைக்கு நூறு அம்மிகள் என்ற வீதத்தில் கொத்தியிருக்கிறார். இதைத்தான் விரயம் என்று சொல்கிறேன்.

’வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்தாடுதே’ என்று நா.முத்துக்குமார் எழுதிய வரிகளே இளையராஜாவுக்கும் பொருந்தும். ஆம், மண்ணில் இறங்கி வந்த வானம் அவர். ‘மண்ணில் தெரியுது வானம். அது வசப்படலாகாதா?’ என்றான் பாரதி. இளையராஜா அப்படி நமக்கு வசப்பட்டவர். ஆனால் அவரின் இசை எனக்கு வானில் பறக்கும் சிறகுகளைத் தருவதாக இருக்க வேண்டும் என்றே நான் எதிர்பார்க்கிறேன். அவதாரம் படப்பாடலில் அவர் எட்டிய அந்த மேகம் மூடிய சிகர உச்சத்தில் இருந்து இன்னும் பல பாடல்கள் வெளிப்பட வேண்டும் என்பது என் ஆசை.

4 comments:

  1. Wanted to write something.. A comment.. Donna what to write.. Just dropping a stone!

    ReplyDelete
  2. இசை மேதையை இவ்வளவு நுணுக்கமாய் விமர்சித்ததில், உங்களின் மேதமை வெளிப்படுகிறது

    ReplyDelete
  3. இசை ஞானி ஒரே இசையை பல படங்களில் பாடல்களுக்கு பதிவு செய்திருக்கிறார். அதை இங்கே பாருங்கள்: http://nagoreismail786.blogspot.sg/2012/11/blog-post_6.html

    ReplyDelete
  4. You may be interested to read following post
    http://www.kaatchippizhai.com/index.php?option=com_content&view=article&id=130:2012-12-20-10-30-34&catid=46:2011-12-13-13-39-32

    தனி இசை ஆல்பம் அமைப்பதற்க்குரிய பொருளாதார அனுசரனை இல்லையெண்டு நினைக்கிறேன்.

    ReplyDelete