Saturday, November 10, 2012

மூடாத நம்பிக்கை




”இறைவனின் சுயம் மட்டுமே உள்ளது என்று சொல்வது வழிகேடு. படைத்தவன், படைப்பு என்னும் இரண்டு சுயங்கள் உள்ளன என்று சொல்வது இணை வைப்பு. இதைத்தான் ‘ஒன்றெனச் சொல்வது வழிகேடு; இரண்டெனச் சொல்வது இணைவைப்பு’ என்று ஒரு மகான் பாடினார். இந்த இரண்டுமே ஆன்மிகத்தில் சறுகுதலாகும். உண்மை இவ்விரு பார்வைகளுக்கு நடுவில் இருக்கிறது. இந்தச் சிக்கலை நாம் எப்படித் தீர்ப்பது என்று சிந்தனை செய்யுங்கள்” என்றார் குரு.

சீடர்கள் சிந்தித்துக் கொண்டிருந்தனர். குறுகுறு என்று குருவையே பார்த்துக் கொண்டிருந்த ஒரு சீடன் கைகட்டி வாய்பொத்தி பவ்யமாக எழுந்து நின்றான். குரு அவனைப் பார்த்தார். புருவ நெளிவில் ‘என்ன?’ என்று வினவினார்.

“ஒன்றரை என்று சொல்லலாமா குருவே?” என்றான் அவன்.
u

மௌலா.அப்துல் காதிர் அவர்களுடன் ஆன்மிகம் பற்றிச் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். அவரைப் பேருந்து நிலையத்தில் விட்டு வந்த பிறகு மீண்டும் அசை போட்டுக் கொண்டிருந்த போது மேற்சொன்ன துணுக்குத் தோன்றியது.

அந்தச் சீடனின் விடை தர்க்க ரீதியாக மிகவும் சரியானதுதான். ஒன்றுக்கும் இரண்டுக்கும் இடையில் துல்லியமாக நட்ட நடுவில் இருப்பது 1.5-தான். ஆனால் தர்க்கம் கண்டறியும் உண்மைகள் பல நேரங்களில் ஆன்மிகத்தில் செல்லுபடி ஆவதில்லை. இது கணிதவியல் உண்மையே அன்றி ஆன்மிக உண்மை அல்ல.

தமிழ் எழுத்துக்களில் இந்தத் தன்மை இருப்பதைக் காணலாம். உயிர் எழுத்துக்களில் குறில் எழுத்து ஒலிக்கும் அளவு ஒரு மாத்திரை; நெடில் எழுத்து ஒலிக்கும் அளவு இரு மாத்திரை. மெய் எழுத்து ஒலிக்கும் அளவு அரை மாத்திரை. ஆச்சா?

மெய் எழுத்துடன் ஒரு குறிலுயிர் சேர்ந்தால், கணிதப்படி அரை + ஒன்று = ஒன்றரை என்றுதான் ஆகவேண்டும். ஆனால் இக்கலவியில் தோன்றும் உயிர்மெய்க் குற்றெழுத்து ஒரு மாத்திரைக் காலம்தான் ஒலிக்கும்.

அதேபோல், மெய் எழுத்துடன் ஒரு நெடிலுயிர் சேர்ந்தால், கணிதப்படி அரை + இரண்டு = இரண்டரை என்றபோதும், இக்கலவியில் தோன்றும் உயிர்மெய் நெட்டெழுத்து இரு மாத்திரைக் காலம்தான் ஒலிக்கும்.   

வாழ்க்கையில் இப்படித்தான் நடக்கிறது! மனிதர்களின் பேச்சில் மட்டும் என்றில்லை, தவளை கத்தினாலும், நாய் குரைத்தாலும், கழுதை கத்தினாலும், குயில் கூவினாலும், பூச்சிகள் விதறினாலும் சப்த அனுபவங்கள் அனைத்திலும் இதுவே நிகழ்கிறது. வாழ்க்கை கணிதக் கணக்குகளை மீறுகிறது. அல்லது, வாழ்க்கைக்குத் தோதுவான கணிதவியலை உருவாக்க வேண்டியுள்ளது. செட் தியரி மாதிரி. உயிரெழுத்தில் அதனுடன் கலக்கும் மெய்யெழுத்து டோட்டலி இன்க்ளூசிவ் ஆகிவிடுகிறது.

(கூர்ந்து யோசித்தால், இது செட் தியரியையும் மீறிய ஒன்று என்பது புரியும். பெரிய செட்டிற்குள் அடங்கும் சிறிய செட், அந்தப் பெரிய செட்டினுள் ஒரு பாகமாக நிற்குமே அன்றி அது முழுவதிலும் பரந்துபடாது. ஆனால் உயிர்மெய் எழுத்து என்பது உயிரும் மெய்யும் கலந்த முழுமையான கலவை. இரு மாத்திரை அளவின் நெடிலுயிருடன் கலக்கும் அரை மாத்திரை மெய்யானது அந்த உயிரின் துவக்கம் முதல் முடிவு வரை கலந்தே இரு மாத்திரை அளவும் ஒலிக்கிறது!

“நீ உயிரெழுத்து / நான் மெய்யெழுத்து / எப்போது ஆவோம் நாம் உயிர்மெய் எழுத்து?’ என்று காதல் கவிதையெல்லாம் எழுதுகிறார்கள். ஆனால் எழுத்துக்களின் கலத்தல் போன்ற முழுமையான அத்துவிதம் சாத்தியமா?)

அரித்மெட்டிக் தர்க்கத்தை மீறிய இந்த நிகழ்வு (Phenomenon) அக்கால மாணவர்களைப் பெரிதும் குழப்பியிருக்க வேண்டும். இது எப்படி? என்று கேட்டவனுக்கு நச்சினார்க்கினியர் தன் உரையில் ஓர் உவமை கொண்டு விடை பகர்கிறார்: ஒரு தம்ளர் (அவர் ’நாழி’ என்கிறார்) தண்ணீரில் அரை தம்ளர் உப்பைக் கலந்தால் அது ஒன்றரை தம்ளர் ஆகாமல் ஒரு தம்ளர் அளவே உப்புநீர் ஆவது போல்!

மௌலா அப்துல் காதிர் அவர்களின் நன்னா (தாய்வழித் தாத்தா) மௌலவி.மூசாகான் பாக்கவி. இப்னு அதாவுல்லாஹ் இஸ்கந்தரிய்யா அவர்களின் “அல்-ஹிகம்” என்னும் ஞான நூலினை ‘மெய்வழி’ என்னும் தலைப்பில் தமிழில் பெயர்த்தவர். ஹைதராபாத் சூஃபி ஹழ்றத் அவர்களின் ஞானநெறியில் தன்னை இணைத்துக் கொண்ட இறைநேசச் செல்வர். ’வஹ்தத்துல் உஜூத்’ (ஏகத்துவ உள்ளமை) என்னும் கோட்பாட்டில் அவர் ‘உள்ளமை ஒன்று; சுயம் ஒன்று’ என்னும் பார்வையை வரித்துக் கொண்டவர். ஆனால் மௌலா அப்துல் காதிர் அவர்களும் அடியேனும் சார்ந்திருக்கும் சூஃபிப் பள்ளி ‘உள்ளமை ஒன்று; சுயம் இரண்டு’ என்னும் பார்வையை முன்வைப்பதாகும்.

“சுயம் ஒன்று என்று சொல்வது வழிகேடு என்று சொல்லப்படும் போதுதான் எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. என் நன்னா அந்தக் கொள்கையில்தான் இருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு மகானை வழிகேடர் என்று சொல்ல முடியுமா? அதை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை” என்று கவலையுடன் என்னிடம் சொல்லிக் கொண்டு வந்தார்கள்.

அப்போது நான் பாடலின் அடுத்த வரியையும் சுட்டிக் காட்டினேன்: ‘ஒன்றெனச் சொல்வது வழிகேடு’ என்று மட்டுமா அந்தப் பாடல் சொல்கிறது? அடுத்த வரியைக் கவனியுங்கள். ’இரண்டெனச் சொல்வது இணைவைப்பு.’ என்று நாம் சார்ந்திருக்கும் பார்வையையும் இப்பாடல் சாடுகிறதே. ’இந்த இரண்டிற்குமே இறை நம்பிக்கை இல்லை; இப்படியும் அப்படியும் பார்’ என்று அப்பாடலின் அடுத்த இரு வரிகள் சொல்கின்றன. அதாவது மூங்கில் கழியைக் கையில் பிடித்தபடி சமன்படுத்திக் கொண்டு கயிற்றின் மீது நடக்கும் ஒருவன் இப்பக்கமும் அப்பக்கமும் சாய்ந்து விடாமல் பேலன்ஸ் செய்வது போல் போகச் சொல்கிறது. ஒருபக்கமாகச் சாய்வது ஆபத்து!

மனித மனம் ஏதேனும் ஒருபக்கம் சாய்ந்துக் கிடப்பதையே விரும்புகிறது. அதன் சோம்பேறித்தனத்தின் விளைவு மூடநம்பிக்கை. இந்தப் பாடல் சொல்வது அதைத்தான் என்று நான் விளங்குகிறேன். ஏகத்துவம் பேசுகிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு வெறும் மூடநம்பிக்கையில் வீழ்ந்து கிடக்காதீர்கள். “இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறைநம்பிக்கை கொள்ளுங்கள்!” என்கிறது திருக்குர்ஆன்.

பாரம்பரியமாக வழங்கப்பட்ட இறைநம்பிக்கை (தக்லீதி ஈமான்) என்பது போதாது, மெய்த்தேடலால் அடையும் இறைநம்பிக்கை (தஹ்கீகி ஈமான்) வேண்டும் என்று சொல்லிக் கொண்டுதான் சூஃபி நெறியில் தீட்சை பெற்று இணைந்தோம். எனில், பிறகு இங்கேயும் தேடலே இல்லாமல் ஞான வாசகங்களை வெறுமனே கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? அப்படி ஒருவன் மூடநம்பிக்கையாக முழங்கிக் கொண்டிருப்பதைத்தான் இப்பாடலில் வழிகேடு (இல்ஹாத்) என்றும் இணைவைப்பு (இஷ்ராக் / ஷிர்க்) என்றும் சுட்டியிருக்கிறார்கள்.

சூஃபித்துவ தியானப் பயிற்சிகள் எல்லாம் இறைவனின் ஏகத்துவத்தை அனுபவத்தால் அறிவதற்காகத்தான். அப்படி அறியாவிடில் சூஃபிப் பாதையில் நீங்கள் பயணிக்கவே இல்லை என்று பொருள்.

அகவிழிப்பு (கஷ்ஃப்) என்றும் உள்ளுணர்வு (இல்ஹாம்) என்றும் சொல்லப்படும் விஷயங்களுக்கான பயிற்சிகளையே சூஃபித்துவம் வழங்குகின்றது. சிந்தனைப் பயிற்சி என்பது அதில் முக்கியத்துவம் உடையது அல்ல. ஏனெனில் உள்ளுணர்வின் அனுபவத்தால் அடையப்படும் மெய்ஞ்ஞானத்தை நீங்கள் ஒருபோதும் சிந்தனை செய்வதால் அடைய முடியாது. எவ்வளவு சிந்திக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல.

’முட்டாள் எப்படிச் சிந்திப்பான்?’ என்றொரு கேள்வியை நான் என் மாணவர்களிடம் கேட்பதுண்டு. பிறகு நானே ஒரு பதிலையும் சொல்வேன்: “முட்டாள்தனமாக!” எனவே, ஒரு முட்டாள் சிந்திக்கச் சிந்திக்க இன்னும் முட்டாள்தனத்தை வளர்த்துக் கொண்டு மேலும் பெரிய முட்டாளாகத்தான் மாறுவான்!

எனவே, கீழைத்தேய ஞானநெறிகள் அனைத்தும், சூஃபித்துவம், யோகம், தாவோ, ஜென் எல்லாம், சிந்தித்தல் என்பதை ஞானம் அடைவதற்கான ஒரு கருவியாக ஏற்கவே இல்லை! அகவிழிப்பு என்பதையே அவை பேசின. தியானத்தையே அதற்கான கருவியாக முன்வைத்தன.

ஓஷோ இதை மிக விஸ்தாரமாகப் பேசியிருக்கிறார். அவர் சொன்ன கருத்து ஒன்றை முதன்முதலில் படித்த போது நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் அந்தக் கருத்தை அவர் விளக்கிய பின் பொழுது பொல்லெனப் புலர்ந்தது போல் வெளிச்சமாயிற்று. அந்தக் கருத்து (ஆழ்பார்வை – insight என்பதுதான் சரி) இதுதான்:

“இந்தியா ஒரு தத்துவஞானியைக் கூட உருவாக்கவில்லை.”

எப்படியொரு மின்னலைப் போன்ற வாசகம் பாருங்கள்! புத்தர், மகாவீரர், நாகார்ச்சுனர், சரஹர், அஷ்டவக்ரர், பதஞ்சலி, அதிஷா போன்றோரை நாம் தத்துவஞானிகள் என்றுதான் சொல்லி வருகிறோம். ஏன், இன்று ஓஷோவையே தத்துவஞானி என்று அடையாளப் படுத்தியும் அறிமுகப் படுத்தியும் பேசுகிறோம். ஜே.கிருஷ்ணமூர்த்தியையும் அப்படியே. ஆனால் ஓஷோ சொல்கிறார், இவர்கள் எவருமே தத்துவஞானிகள் அல்ல.

ஜபல்பூர் பல்கலைக் கழகத்தில் அவர் எம்.ஏ தத்துவம் படித்த போது பரிட்சையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. “இந்தியத் தத்துவம் பற்றிக் கட்டுரை எழுதுக” என்னும் அந்த வினாவிற்கு ஓஷோ ஒற்றை வரியில்தான் பதில் எழுதினாராம் இப்படி: “இந்தியத் தத்துவம் என்று ஒன்று கிடையவே கிடையாது”! (Indian Philosophy என்னும் சொல்லாடலைப் பரப்பியவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் குழுவினர்தான். ஓஷோ சொல்லும் இதே கருத்தினை முன்வைத்து ராதாகிருஷ்ணனிடம் நித்ய சைதன்ய யதி வாதாடியதாகப் படித்துள்ளேன்.)

இந்தப் பார்வையை ஓஷோ இரண்டு விஷயங்களை முன்வைத்து விளக்கினார். ஒன்று சிந்தனை; மற்றொன்று அகப்பார்வை. அவரின் விளக்கங்களைத் திரட்டிக் கொண்டு காப்ஸ்யூலித்துச் சொல்கிறேன்:

சிந்தனை என்பது மனத்தில் நிகழ்வது. அகப்பார்வை என்பது மனமற்ற நிலையில் உண்டாவது. (சூஃபித்துவத்தில் சொல்லப்படும் ஃபனாவும் அதற்கு முன்னுரை போல் நிகழும் அஹ்வால் என்னும் அகநிலைகளும். சமாதியும் அதன் முன்னிகழ்வாக ஜென்னில் சொல்லப்படும் சடோரியும்.)

தத்துவம் என்பது சிந்தனையின் தயாரிப்பு. மெய்ஞ்ஞானம் என்பது அகவிழிப்பினால் உண்டாவது.

தத்துவம் மொழி சார்ந்த வெளிப்பாடு. மெய்ஞ்ஞானம் மொழியைக் கடந்தது, மௌனத்தில் இருப்பது.

மெய்ஞ்ஞானத்தை மொழியில் வெளிப்படுத்த முற்படும் போது தத்துவம் பிறக்கிறது. (சமஸ்கிருதத்தில் ஒரு வாக்யம் உண்டு: பிரம்மம் ஒன்றே, ஆனால் வியாக்கியானிகள் அதைப் பலவாறு பேசுகின்றனர்.)

அகவிழிப்பை அடையாதவனிடமும் மொழி இருக்கிறது. எனவே தத்துவத்தை ஞானிகள் மட்டுமன்றி அஞ்ஞானிகளும் உருவாக்க முடிகிறது.

எனவே, மெய்ஞ்ஞானிகள் தத்துவத்திற்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள், அகவிழிப்பையே வற்புறுத்துவார்கள். (சும்மா இரு, சொல் அற./ ஃகாமூஷ் குன்). அஞ்ஞானிகள் தத்துவத்தை வற்புறுத்துவார்கள். (வியாக்கியான விருத்தியாப்பியாசங்களால் தத்துவம் பல குட்டித் தத்துவங்களை ஈனும். அக்குட்டிகளும் பின் வளர்ந்து சந்ததிகளை உருவாக்கும்!)

தத்துவம் சிந்திக்கிறது; அகவிழிப்பு அனுபவிக்கிறது. (அக அனுபவம் உள்ளுணர்வு எனப்படும். “இறைவனை அறிவால் உணர முடியாது; ஆனால் உணர்வால் அறிய முடியும்” என்று என் சகா ஒருவர் சொன்னது நியாபகம் வருகிறது.)

மேற்குலகில் (மேலுலகு அல்ல) தத்துவம் முன்னிறுத்தப்பட்டது. கீழைத் தேயங்களில் (இந்தியா முதலெழுத்து, சீனாவும் ஜப்பானும் சார்பெழுத்துக்கள்) தரிசனம் முன்னிறுத்தப்பட்டது. (கீழைத் தேயங்களின் ஞான முறை தரிசனமே அன்றித் தத்துவம் அல்ல என்பதைத்தான் ஓஷோ தன் அத்தனை நூற்களிலும் அழுத்திச் சொல்கிறார்.)

தத்துவம் மனத்தின் செயல்பாட்டால் (அதாவது சிந்திப்பதால்) உருவாக்கப் படுகிறது. மெய்ஞ்ஞானம் – அகவிழிப்பு என்பது தியானத்தில் நிகழ்வது. அதனை நாமாக நிகழ்த்த முடியாது. அது ஒரு action அல்ல. அது ஒருவகை de-action. அது கற்றல் (learning) அல்ல. அது ஒரு கிற்றல் (un-learning). (ஐயன்மீர்! Unlearning என்ற அழகிய ஆங்கிலப் பதத்திற்கு அடியேனுக்கு ஆப்டான ஆப்த தமிழ்ப்பதம் ஏதும் ஆப்டவில்லை. ஆதலால் சர்ரியலிசப் போக்கில் வெளிப்பட்ட கிற்றல் என்னும் பதத்தினைப் பயன்படுத்தியுள்ளேன். அகராதியில் இதற்கு வேறு பொருள் ஏற்கனவெ உள்ளதா என்பதறியேன். இருப்பின், இங்கே இப்பொருள் கொள்க.)

தத்த்வவாதி என்பவன் மெய்ப்பொருள் குறித்துச் சிந்திப்பவன். மெய்ஞ்ஞானி என்பவன் மெய்ப்பொருளை அகப்பார்வையால் தரிசிப்பவன். எனவேதான் இந்தியா ஒரு தத்துவஞானியைக் கூட உருவாக்கவில்லை என்றும், இந்தியத் தத்துவம் என்று ஒன்று இல்லை என்றும் ஓஷோ கூறுகிறார். இந்தியாவில் இருந்தது philosophy அல்ல, ‘philosia’ என்று தரிசனத்தின் அடியாக அவர் ஒரு புதுச் சொல் ஆக்கித் தந்தார். (பல்கலைக்கழகங்களில் department of philosia என்று ஆரம்பிக்கலாம். அகப்பார்வை என்றால் என்னவென்றே அறியாத கபோதிகளைப் பேராசிரியர்களாக நியமித்து கல்வியைச் சிறக்க வைக்கலாம்!)

அகவிழிப்பு என்பது நாம் ஏதும் செய்யாமல் நம்மை வெறுமை ஆக்கி –passive and receptive state - ஒப்படைத்த நிலையில் நிகழ்வது (சரணாகதி நிலை – இஸ்லாம் என்றால் total surrender to the will of God என்றொரு விளக்கம் உள்ளது). அதாவது அருளப்படுவது. அது நம் உழைப்பால் நாம் சம்பாதிக்கும் நிலை அல்ல. சூஃபித்துவத்தில் ‘ஃபைஸான்’ என்று மிகவும் அழகான சொல் ஒன்றுண்டு. ’பொங்கிப் பாய்வது’ என்று பொருள். கோர்ட்டில் குமாஸ்த்தாவாகப் பணியாற்றி வந்த ஒருவர் சட்டென்று இறைநேசம் (விலாயத்) என்னும் மெஞ்ஞான நிலையை அடைந்ததைக் குறிப்பிட்டுப் பேசும்போது ’கருணை பொங்கிடிச்சு’ என்று சூஃபி மகான் ஃபைஜி ஷாஹ் நூரி (ரஹ்) குறிப்பிட்டார்கள். எத்தனை மகத்துவமான மகான்கள்!

இன்னொரு சம்பவம். “நீங்கள் ஞானமடைந்த போது நீங்கள் செய்த முதல் காரியம் என்ன?” (Bhagwan, what was the first thing that you did after you became enlightened?) என்று ஆஸு என்பவர் கேட்ட கேள்விக்கு, “சிரித்தேன். உண்மையான ஒரு வெடிச்சிரிப்பு” (I laughed, a real uproarious laughter) என்று ஆரம்பித்து ஓஷோ விளக்கிப் பேசிக்கொண்டிருந்தார். (19 ஆகஸ்ட்,1980). பேச்சின் இடையே மின்வெட்டு ஏற்பட்டு இருட்டாகி விட்டது. மீண்டும் மின்தொடர்பு வரும்வரை இருட்டில் மௌனமாக எல்லோரும் அமர்ந்திருந்தார்கள். மின்தொடர்பு கிடைத்து வெளிச்சம் வந்ததும் ஓஷோ இப்படிப் பேசினார்: “ஆம், அது அப்படித்தான் நிகழ்கிறது! எங்கிருந்தென்றே தெரியாது, சட்டென்று இருள், சட்டென்று ஒளி! நீங்கள் எதுவுமே செய்ய முடியாது. வெறுமனே கவனித்துக் கொண்டிருக்கலாம்.” (Yes, it happens like that! Out of nowhere, suddenly the darkness, suddenly the light! And you cannot do anything. You can just watch.)

உன்னதமான அகதரிசனங்களைச் சுட்டும் வாசகங்கள் – மந்திரங்கள்கூட சாதகர்களிடம் வெறும் மூடநம்பிக்கைச் சரக்காக மாறிவிடும் சாத்தியம் இருக்கிறது, அதிகமாகவே இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டத்தான் இவ்வளவும் சொன்னேன். மகான்கள் இறையனுபவத்தில் அடைந்த தரிசனங்களை வெளிப்படுத்தும் வாசகங்களை அவற்றுக்கான அனுபவங்களே இல்லாமல் நாம் வெறுமனே நம்புவது அவர்களின் மீதுள்ள மதிப்பின் ஆரம்ப நிலையாக இருக்கலாம். அந்த மதிப்பின் வளர்ச்சி அவர்கள் அடைந்த ஆன்மிக அனுபவங்களை நாமும் அடையும் வண்ணம் அவர்கள் சென்ற நெறியில் நடப்பதுதான். அவர்கள் வரையறுத்துத் தந்த வாசகங்களை வெறுமனே வாயால் முழங்கிக் கொண்டிருப்பதல்ல.

உதாரணத்திற்கு ஒரு கதையைச் சொல்லலாம். ஒரு ஊரில் இரண்டு குருடர்கள் இருந்தார்கள். மக்கள் ஒளி என்று பேசிக்கொள்வதைப் பற்றி அவர்களுக்கு அறிய மிகவும் ஆவலாக இருந்தது. ஆனால் அவர்களால்தான் ஒளியைப் பார்க்கவே முடியாதே? எனவே ஒளியின் தன்மைகள் பற்றி அவர்கள் தகவல்களைச் சேகரித்துக் கொண்டார்கள். ஒளியைப் பற்றிய ஆயிரக்கணக்கான கவிதை வரிகளை மனப்பாடம் செய்தார்கள். ஒளியைப் பற்றி மேடைகளில் பல மணி நேரம் நுண்மான் நுழைபுலத்துடன் – அதாவது அட்டகாசமாக உரையாற்ற அவர்களால் முடிந்தது. அந்த ஜில்லாவிலேயே அவர்களை விஞ்சிய ஒளியறிஞர்கள் எவரும் இல்லை. எனவே, பல்கலைக்கழகம் அவர்களுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து ‘Authority of Light’ என்று புகழ்ந்து சிறப்பித்தது. ஆனால், நடைமுறையில் இந்தக் குருடர்களால் பட்டப் பகலில் தங்கள் முன்னால் நிற்கும் எருமை மாட்டைக் கூடப் பார்க்க முடியாது! ஒளியைப் பற்றிப் படிப்பறிவைச் சேகரித்ததுடன் அவர்கள் இருவரும் சிந்தித்துப் புதிய புதிய ‘உண்மை’களைக் கண்டறியவும் முற்பட்டார்கள். அதற்காக ‘ஒளிஞர் பேரவை’ என்ற ஒன்றையும் தொடங்கினார்கள். வெளியீடுகள் குவிந்தன. ஒளி பற்றிய அற்புதமான காவியங்களும் வியாக்கியானங்களும்! இப்படியே பொழப்பு ஓடிக்கொண்டிருந்த ஞான்று ஒருநாள் அந்தக் குருடர்கள் இருவருக்கும் இடையே ஒளி பற்றிய கருத்து வேறுபாடு வந்தது. ‘ஒளி என்பது நிறமற்றது’ என்றான் ஒருவன். ‘இல்லை இல்லை ஒளி என்பது ஒருவித இளஞ்சிவப்பு நிறமுடையது’ என்றான் மற்றொருவன். ‘ஒளி என்பது சுவையற்றது’ என்றான் இவன். ‘என்ன முட்டாள்தனமான கருத்து. ஒளி என்பது புளிப்பு இனிப்பும் கலந்த ஒருவகை சுவையை உடையது’ என்றான் அவன். அவ்வளவுதான், பேரவை உடைந்தது!

இந்த இருவரில் யார் சரி என்பதை அறிய அந்நாட்டில் மிகச் சிறந்த ஞானி என்று போற்றப்பட்ட ஒருவரிடம் இருவரின் கட்சிகளும் சென்றன. அவர்களின் வாதங்களுக்கான ஆதாரங்கள் நூறு கழுதைகள் மீது பொதி பொதியாகக் கொண்டு வரப்பட்டன. அந்த ஞானி அவை அனைத்தையும் தீ வைத்துக் கொளுத்திவிடும்படிக் கட்டளையிட்டார்! “இந்த இருவரின் கூற்றுக்களுமே அபத்தமானவை, தவறானவை. ஏனெனில் இவர்கள் இருவருக்குமே கண்பார்வை இல்லை. குருடர்கள் ஒளியைப் பற்றிச் சிந்தித்துக் கூறுவதில் அடிப்படையிலேயே அர்த்தம் இல்லை. இவர்கள் உளறி வைத்திருப்பதை எல்லாம் படித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. இவர்கள் கூறும் இதே கருத்துக்களைக் கண்பார்வை உள்ளவன் சொன்னால் அதில் அர்த்தம் இருக்கிறது எனலாம். கண் பார்வை உள்ள ஒருவன் ‘ஒளி என்பது காஃபிக் கொட்டையின் மணமும் கருவாட்டின் சுவையும் உடையது’ என்று சொல்லி அதற்கு ஐம்பது வால்யூம்களில் விளக்கவுரை எழுதினாலும்கூட அதைப் படித்துப் பார்ப்பதில் அர்த்தம் உண்டு. ஏனெனில் அது ஒளியைப் பார்த்தவனின் கருத்து. எனவே அவன் ஏன் அப்படிச் சொல்கிறான் என்பதை நாம் ஆராய இடம் உண்டு. ஆனால் குருட்டுப் பயல் ஒருவன் ‘ஒளி என்பது பிரகாசமானது’ என்று சொல்வான் ஆகில் அது பொய்தான்!” என்று அந்த ஞானி தீர்ப்பு வழங்கினார்.

திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்வதைப் பற்றி நபிகள் நாயகம் சொன்ன இரண்டு ஹதீஸ்கள் இந்தக் கருத்தை வலியுறுத்துகின்றன:

“தன் சொந்தக் கருத்தின்படி குர்ஆனுக்கு விளக்கம் தருபவன் தன் இடத்தை நரகத்தில் கண்டுகொள்வான்” (நூல்: திர்மிதி)

“ஒருவன் தன் சுய இச்சையின்படி குர்ஆனுக்கு விளக்கம் தந்தால், அது சரியாகவே இருந்த போதும் அவன் குற்றம் செய்தவன் ஆவான்” (நூல்: குர்துபியின் ஜாமிவுல் அஹ்காம்)
வேதவரிகளின் விளக்கங்களை இறைவனே ஒருவனின் மனத்தில் பாய்ச்சினால்தான் அதைச் சரியாக விளங்க முடியும் என்பதை இன்னொரு ஹதீஸ் மூலம் நாம் அறிகின்றோம். அதாவது, “அல்லாஹ், இவருக்கு நீ மார்க்கத்தின் புரிதலையும் குர் ஆனின் விளக்கத்தையும் அருள்வாயாக” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்காக நபி (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள் என்பதாம். இதனை ஆழ்ந்து கவனிப்பவர்களுக்கு ஒன்று புலனாகும். அதாவது, இறைத்தூதருக்கு அருளப்பட்ட வேதத்தின் விளக்கமும் ஒருவருக்கு இறைவனின் புறத்திலிருந்து அருளப்பட்டதாகவே இருக்க வேண்டும். நபிக்கு அருளப்படுவது வஹீ என்றும் இறைவன் தன் நேசர்களுக்கு அருளும் விளக்கங்கள் இல்ஹாம் என்றும் அழைக்கப் படும். எனவே, உள்ளுதிப்பாய் அருளப்பட்டது அல்லாமல் ஒருவன் தன் பகுத்தறிவால் சிந்தித்துச் சொல்லும் விளக்கங்கள் ‘தஃப்ஸீர் பிர் ரய்’ – சுய இச்சையின் விளக்கங்கள் ஆகிவிடும்.

இல்ஹாம் என்பதற்கு ’இல்மெ லதுன்னி’ –இறைவனிடம் இருந்து வரும் நேரடியான ஞானம் என்று சூஃபித்துவத்தில் ஒரு பெயர் உண்டு. அது இந்த இறைவசனத்தின் அடிப்படையில் சொல்லப்படுகிறது:
“அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்;
நம்மிலிருந்து அவருக்கு அருளை வழங்கியிருந்தோம்; மேலும்
நம்மிலிருந்து அவருக்கு ஞானத்தை வழங்கியிருந்தோம்”
(18:65)

இந்த ஞானம் சிந்திப்பதல்ல, சித்திப்பது!

எனவேதான் சிந்தனை முறைகளுக்கு முக்கியத்துவம் தராமல், அகவிழிப்புப் பயிற்சிகளுக்கு சூஃபித்துவத்தில் கவனிப்புத் தரப்படுகிறது. குருடனுக்குச் சிந்திக்கக் கற்றுத் தருவதால் என்ன பயன் இருக்க முடியும்? அவனின் கண்களுக்குப் பார்வையைத் தருகின்ற சிகிச்சைதான் தேவைப்படுவது.

அவ்வாறு இறைவனிடமிருந்து நேரடியாக அடியானின் உள்ளத்தில் இறக்கப்படும் வேத விளக்கங்களுக்கு ஒரு எல்லை இருக்க முடியாது. “குர்ஆனின் முதல் அத்தியாயத்திற்கான விளக்கங்களை நான் வெளியிட்டால் எழுபது ஒட்டகங்கள் சுமக்கும் அளவுக்கு நூற்கள் திரண்டுவிடும்” என்று ஹழ்றத் அலீ (ரலி) அவர்கள் சொன்னதை மேற்கோள் காட்டி இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்கள் இக்கருத்தினை வலியுறுத்துகிறார்கள் (நூல்: இஹ்யா உலூமித்தீன்).
இறைவன் யாருடைய இதயக் கதவை மூடிவிட்டானோ அவரின் இறைநம்பிக்கை வெறும் முட நம்பிக்கையாகத்தான் இருக்கும். அதைப் பற்றி அவர் வாழ்நாளெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தாலும் அது மூடநம்பிக்கையாகவே இருக்கும். நிச்சயமாகச் சிந்திப்பார், ஏனெனில் சிந்தனை இல்லாத மனிதன் எவனும் இல்லை.

இறைவன் யாருடைய இதயத்தைத் திறக்கச் செய்து அதில் ஞான விளக்கங்களைத் தன்னில் இருந்தே அருள்கின்றானோ அந்த இதயத்தில் இருக்கும் இறை நம்பிக்கையே உயிருள்ளதாகும்.

இறைவா! எங்கள் இதயங்களைத் திறந்தருள்வாயாக! மூடநம்பிக்கையை விட்டும் மூடாத நம்பிக்கைக்கு எங்களை அழைத்துச் செல்வாயாக!



1 comment: