Wednesday, September 15, 2010

ஒபலீஸ்க் ஷைத்தான்
சவூதி அரசு இக்காலத்திற்கேற்ப ஹஜ் கிரியைகளை எளிதே நிறைவேற்றுவதற்கு செய்துள்ள நாகரிக வளர்ச்சி சார்ந்த வசதிகளில் ஒன்று, பல்லாயிரக்கணக்கான ஹாஜிகள் ஒரே நேரத்தில் கல்லெறிவதற்கு வசதியாக ஷைத்தானை 'விராட் ரூபத்தில்' அதாவது மிகப் பெரிதாக வார்த்துள்ளார்கள் என்பதாகும்.ஒரு வகையில் பார்த்தால் இந்த வளர்ந்த ஷைத்தான் தூண் என்பது வாஷிங்க்டன் டி.சி-யில்  வெள்ளை மாளிகை, கேபிடால், லிங்கன் (Lincon என்று வாசிக்கவும்) ஆகியவை உள்ள பகுதியிலும்,  வாட்டிகன் நகரில் உள்ள பேதுருச் சதுக்கத்திலும் ( St .Peter 's  square ) காணப்படும் ஒபெலீஸ்க் (obelisk ) என்று கூறலாம். அதாவது, நீட்டப்பட்ட லிங்கம்!


obelisk என்னும் எகிப்துச் சொல்லுக்கு 'கடப்பாரை' என்றும் 'ஊசி' என்றும் பொருள்.(பாருங்கய்யா...எப்படி விஷயம்னு)  இது பழங்கால எகிப்தியர்களின் சூரியக்கடவுளான "ரா"வுடன் தொடர்புள்ளது.(ராவுடன் தொடர்புள்ளதா?... )


வாட்டிகன் போப்பாண்டவர் ஆலயத்தின் தூய பேதுருச் சதுக்கத்தில் உள்ள ஒபெலீஸ்க் ரோம் சாம்ராஜ்ஜிய மன்னர் கலிகுலா என்பவரால் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டது. கிறித்துவச் சமயத்திற்குள் உள்ள ரகசிய இயக்கமான ப்ரீ மேசன்ஸ் (free masons) என்னும் இயக்கத்தின் குறியீட்டு விளக்கத்தின்படி இந்த ஒபலீஸ்க் புராதனக் கடவுள்களில் ஒன்றான பால்பெக்கின் (Baalbek ) லிங்கத்தைக் குறிப்பதாகும். உலகில் ஏறத்தாழ முப்பது இடங்களில் இந்தச் சின்னம் நிறுவப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள ஒபலீஸ்க் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன்னின் நினைவாக எழுப்பப்பட்டு "வாஷிங்டன் ஒபலீஸ்க்" என்று அழைக்கப்படுகிறது. இதுவெல்லாம் அமெரிக்க அமைப்பில் ப்ரீ மேசன்ஸ் அமைப்பு கொண்டுள்ள அந்தரங்க அதிகாரத்தைக் காட்டுகிறது என்று சமயவியல் அறிஞர்கள் பலர் கருதுகின்றனர்.

ப்ரீ மேசன்ஸ், நைட்ஸ் டெம்ப்லர்ஸ், இல்லுமிநாட்டி போன்ற ரகசிய இயக்கங்களின் பகான் (pagan ) கொள்கைகள் கிறித்துவ மதத்திற்குள் எந்த அளவு ஆழமாகவும் பரவலாகவும் ஊடுருவியுள்ளது என்பதை வாட்டிகன் தேவாலயங்களில் காணப்படும் சிற்பங்கள் ஓவியங்கள் கட்டிடங்கள் போன்றவற்றில் உள்ள குறியீடுகளை வைத்தே சமையவியல் அறிஞர்கள் விளக்குகின்றனர். பழங்கால  கிரேக்க எகிப்திய செமித்திய தெய்வங்களின் கூட்டம் கிறித்துவ மதத்திற்குள் அடைக்கலம் புகுந்து உருவானதே ரோமன் கத்தோலிக் அமைப்பு என்பதை இவை காட்டுகின்றன. 
சமீபத்தில் டான் பிரௌன் (Dan Brown ) எழுதிய நாவல்களான Angels and Demons , The Da Vinci Code , The Lost Symbol ஆகியவற்றில் இந்தக் குறியீடுகள் விளக்கப்படுவதைக் காண்கிறோம். இவற்றில் முதல் இரண்டு நாவல்களும் திரைப்படங்களாக வந்துள்ளன.


      

ஆக, புராண எகிப்து மற்றும் கிரேக்க காலத்து லிங்கமான ஒபலீஸ்க்கை ப்ரீ மேசன்ஸ் என்னும் அமைப்பினர் கிறித்துவ மதத்தினுள் கொண்டுவந்துள்ளார்கள் என்பது நீண்ட கால வரலாறு. இந்த அமைப்பு சாத்தானை வழிபடக்கூடிய ரகசிய அமைப்பு என்பதும் சமையவியல் அறிஞர்கள் பலரால் நிறுவப்பட்டுள்ளது. சாத்தான் வழிபாட்டிற்கு அடையாளமாக லிங்கத்தை இவர்கள் பயன்படுத்துகின்றனர் என்று அவர்கள் கருதுகின்றனர்.

எது எப்படியோ, இந்தக் கருத்துக்களை அறிந்துதானோ என்னவோ மக்காவில் சாத்தான் மீது கல்லடிக்கும் இடத்தில் சாத்தானின் அடையாளமாக இந்த ஒபலீஸ்க்கை அரபிகள் அமைத்துவிட்டார்கள்!


உண்மையில் சாத்தானுக்கு இது ஒரு சரியான குறியீடுதான்! ஏனெனில் வேறு எந்த விஷயத்தை விடவும் மனிதனின் மனதைப் பிறழச் செய்வதற்கு அவன் பயன்படுத்தும் விஷயம் காமம்தான். பின்வரும் இரண்டு நபிமொழிகளை - ஹதீஸ்களைக் கவனியுங்கள்:
"திண்ணமாக, ஷைத்தான் மனிதர்களின் ரத்த நாளங்களிலெல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறான் (இன்னஷ் ஷைத்தான லயஜ்ரீ மிநிப்னி ஆதம மஜ்ரத்தமி)"

"ஷைத்தான் மனிதர்களின் அமருமிடங்களில் (மர்மஸ்தானங்களில்) விளையாடுகிறான் (இன்னஷ் ஷைத்தான யல்அபு பிமகாஇதி பனீ ஆதம)" 

அதாவது ஷைத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தும் தடகளமாக ரத்த நாளங்கள் இருந்தாலும்கூட அவன் 'கோல்' அடித்து ஸ்கோர் செய்யும் இடம் 'அல்குல்'தான். எனவே, ஷைத்தானை "ஒபலீஸ்க் ஷைத்தான்" ஆக்கிக் கல்லெறியும் கிரியையை ஹாஜிகள் நிறைவேற்றும்படி சவூதி அரசு செய்துள்ளது ஒரு புதிய ஏற்பாடு ஆகும்.

ப்ரீ மேசன்ஸ்-ன் நேர்மறை வழிபாட்டுக் குறியீடு இங்கே எதிர்மறை வழிபாட்டுக் குறியீடாகத் தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டுள்ளது!

அதாவது, இறைவனுக்கு நாம் செய்யும் வழிபாடு இரண்டு விதங்களில் அமைகிறது. எதிர்மறை வழிபாடு மற்றும் நேர்மறை வழிபாடு. தீமையை விலக்குவதும் தடுப்பதும் எதிர்மறை வழிபாடு. நன்மைகள் செய்வது நேர்மறை வழிபாடு. பொய்யான தெய்வங்களை அவை இறைவனல்ல என்று நிராகரிப்பதும்கூட இறைவனுக்கு நாம் செய்யும் வழிபாடுதான். அதாவது இது எதிர்மறை வழிபாடு. இறைவனையே ஏற்று வழிபடுவது நேர்மறை வழிபாடு.

"லா இலாஹ இல்லல்லாஹு " என்னும் திருக்கலிமா மந்திரத்தில் இவை இரண்டும் உள்ளன. "லா இலாஹ" என்பது எதிர்மறை வழிபாடு. "இல்லல்லாஹு" என்பது நேர்மறை வழிபாடு. கலிமா என்னும் மூலமந்திரம் எதிர்மறை வழிபாட்டில் துவங்கி நேர்மறை வழிபாட்டிற்குச் செல்கிறது. 

இதே அமைப்பில்தான் இஸ்லாத்தில் எல்லா வழிபாடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, முதலில் தவஹ்ஹுது ஓதி ஷைத்தானை நிராகரித்த பின்பே பிஸ்மில்லாஹ் ஓதுகிறோம். "தூக்கியெறியப்பட்ட - சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாவிடம் பாதுகாவல் தேடுகிறேன் ( அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தான் இர்ரஜீம்)" என்னும் தவஹ்ஹுதும் அல்லாஹ்வை நாம் வழிபடுவதே. இதனைப் போன்றே ஷைதானுக்குக் கல்லெறிவதும் ஒரு எதிர்மறை வழிபாடுதான். எனினும் அது ஒரு குறியீட்டு வழிபாடு. இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் நேராகவே ஷைத்தானின் மீது கல்லெறிந்தார்கள். அந்த நிகழ்வை நினைவு கூறும் வண்ணம் ஹாஜிகள் ஒரு கல்தூணில் ஷைத்தானை உருவகப்படுத்திக்கொண்டு கல்லெறிகிறார்கள். அதாவது, ஷைத்தானை உருவகப்படுத்திக்கொண்ட ஒரு குறியீட்டின் வழியாக இறைவனுக்கான ஒரு எதிர்மறை வழிபாட்டை நிறைவேற்றுகிறோம்!   

ஷைதானுக்கான குறியீடான ஒபலீஸ்க் கல்லெறியும் எதிர்மறை வழிபாட்டுக்குப் பயன்படுகிறது என்றால் நேர்மறை வழிபாட்டுக்கு எந்தக் குறியீடும் இல்லையா? காபா, கிப்லா என்பதெல்லாம் நேர்மறை வழிபாட்டுக் குறியீடுகள் என்று கூறலாம் என்றாலும், மனிதனே அந்தக் குறியீடாக இருக்கிறான் என்று கூறுவதுதான் சாலச் சிறந்தது. மனிதன் இறைவனின் பிரதிநிதி - 'கலீபதுல்லாஹ்.' அதனால்தான் வானவர்கள் அவனுக்குச் சிரம்தாழ்த்தி அதன் வழி இறைவனுக்கான நேர்மறை வழிபாட்டை நிறைவேற்றினார்கள்.

இதில் இன்னொரு விஷயமும் உள்ளது. அதாவது, அந்த ஷைத்தானின் குறியீடு மனிதனிலேயே உள்ளது! நபிகள் நாயகம் சொன்னதுபோல் ஷைத்தானை இஸ்லாத்தில் ஆக்கிவிடவேண்டும். பிறகு அது நேர்மறை வழிபாட்டிற்கு உரியதாகிவிடும்! "மனைவியுடன் கூடித் துய்ப்பது 'சதகா'-தர்மம்" என்னும் நபிமொழிக் கருத்தைக் கண்டுகொள்க.  

2 comments:

  1. Sure... we'll ensure our prayers...! :-)

    ReplyDelete
  2. //கிறித்துவச் சமயத்திற்குள் உள்ள ரகசிய இயக்கமான ப்ரீ மேசன்ஸ் (free masons) என்னும் இயக்கத்தின் குறியீட்டு விளக்கத்தின்படி இந்த ஒபலீஸ்க் புராதனக் கடவுள்களில் ஒன்றான பால்பெக்கின் (Baalbek ) லிங்கத்தைக் குறிப்பதாகும். உலகில் ஏறத்தாழ முப்பது இடங்களில் இந்தச் சின்னம் நிறுவப்பட்டுள்ளது.//

    தஞ்சாவூரில் கூட மசோனிக் கிள‌ப் உள்ளது. இன்றும் அதில் உறுப்பினர் உண்டு.
    யார் அவர்கள் என்பது ரகசியமே. "தலைவெட்டி சங்கம்' என்று அதனை சொல்லுவார்கள்.கிராப் வெட்டிக்கொள்வதால் அப்படியா அல்லது உண்மையாகவே தலை சீவப்ப்டுகிறதா? ரகசியம். பரம ரகசியம்

    ReplyDelete