Monday, September 27, 2010

பெருவெடிப்புக் கவிஞர்கள்"உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ்தானே ஐயா?" என்று ஒரு மாணவன் கேட்டான். "இல்லை தம்பி" என்றேன் நான். அவனுக்கு அது பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். ஒரு தமிழாசிரியர் என்றால் "உலகில் தோன்றிய முதல் மொழி தமிழே" என்று உணர்ச்சி கொப்புளிக்க அரை மணி நேரமாவது ஹிஸ்டீரியா பேஷண்டைப் போல் முழங்கவேண்டமா? அனால் நான் மிகவும் சுருக்கமாக "இல்லை" என்றல்லாவா கூறிவிட்டேன். உலகில் தோன்றிய முதல் மொழி என்று ஒரு குறிப்பிட்ட மொழியைக் கூற முடியாது என்பதுதான் மானிடவியலும் மொழியியலும் நமக்குச் சொல்லும் செய்தி. தொன்மையான மொழிகள் என்று ஆதாரங்கள் கிடைத்துள்ள பல மொழிகளில் தமிழும் ஒன்று. அவ்வளவுதான்.

ஆனாலும், தமிழ் வெறியர்கள் பலர் உலகில் தோன்றிய முதல் மொழியே தமிழ்தான் என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் எரிச்சலாகித்தான் புதுமைப்பித்தன் "உலகில் தோன்றிய முதல் குரங்கு தமிழ்க்குரங்கே!" என்று கூறினார். இப்படி இந்தத் தமிழ்ப் பிரியர்களை - தமிழ் வெறியர்களை நான் கிண்டல் செய்துகொண்டு வந்தாலும் அவர்களுக்கென்று ஏதேனும் ஆதரவுக் குரல் ஒலிக்காமலா போய்விடும்? அப்படி ஒரு குரல் நேற்று என் காதில் ஒலித்தது. அந்தக் குரலை யாராவது ஒரு மூணாங்கிளாஸ் தமிழ் வாத்தியாரோ அல்லது பாரதிதாசனாரின் ஐந்தாம் தலைமுறையில் தோன்றிய தமிழேறு தமிழ்மணி தமிழ்ச்சுடர் போன்று பெயர் வைத்த கவிஞன் எவனோ அறுசீர்க் கழிநெடிலடியில் தடாலடியாக முழங்கியிருந்தால் நான் ஆச்சிரியப் பட்டிருக்க மாட்டேன். ஆனால் அந்தக் குரல் யாருடையது தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீர்கள். என்னாலேயே முதலில் நம்பமுடியவில்லையே!

 ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking ) என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது என்ன, விஷயம் ரூட்டு மாறுகிறது என்கிறீர்களா? மேற்கொண்டு படியுங்கள். ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு பிரபஞ்சவியல் விஞ்ஞானி. குவாண்டம் இயற்பியலில் இன்றுள்ள ஜாம்பவான்களில் ஒருவர். ஐன்ஸ்டீனுக்கு அடுத்து வந்த மிகப்பெரிய அறிவியல் மூளை என்று போற்றப்படுபவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். ஆனால், ஆளைப்பார்த்தால் பரிதாபமாக இருக்கும். பக்கவாதம் போல், ஸ்டீபனுக்குக் கழுத்துக்குக் கீழே முழு வாதம். ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு சிந்தித்துக் கொண்டே இருக்கிறார். அதுதான் அவருடைய முழு நேரப்பணி. அவருடைய வாழ்க்கையே அதுதான். ஸ்பெஷல் கருவிகளை வைத்துத்தான் பேசுகிறார்.


சிவபெருமானுக்கு யோகேஸ்வரன் என்றும் யோகமூர்த்தி என்றும் பெயர் உண்டு. ஷண் மதங்களில் ஒன்றான சைவம் ஆறு ஞான மரபுகளில் ஒன்றான யோகத்துடன் இன்டர்செக்ட் ஆகி வந்த வடிவம் அது. இமய மலைச் சிகரம் ஒன்றில் கண்கள் மூடி கால்களை மடித்து அமர்ந்து சிவன் தியானம் செய்யும் வடிவம். அதுபோல்தான் ஸ்டீபன் ஹாக்கிங்கும் சதா சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு தன் மூளைக்குள் அண்ட சராசரங்களைச் சுழல விட்டபடி அவற்றின் ஊடாகக் காலத்தால் பின் நோக்கிப் பயணம் செய்கிறார், இந்தப் பிரபஞ்சம் தோன்றிய அந்த முதல் கணத்தைத் தரிசித்து விடவேண்டும் என்று. ஸ்டீபன் ஹாக்கிங் செய்யும் இந்த தவத்தைப் பார்த்தால் அவரை நீங்கள் "விஞ்ஞானச் சிவபெருமான்" என்றோ "விஞ்ஞான யோகி" என்றோ அழைப்பீர்கள்! ( "அட, இது ஒரு பெரிய விஷயமா? அண்ட சராசரம் உருவானதைப் பத்தி எங்க ஊரு கிளிஜோசியருட்ட கேட்டா புட்டு புட்டு வப்பாரு" என்று படுத்த வேண்டாம்.)

ஸ்டீபன் ஹாக்கிங் "காலத்தின் சுருக்கமான வரலாறு" (A BRIEF HISTORY OF TIME) என்று ஒரு நூல் எழுதியுள்ளார். அதில், பிரபஞ்சம் உருவாகி வந்த பல கோடி வருடங்களுக்கான பௌதிகக் காரணங்களின் அடிப்படையிலான வரலாறு கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது என்றும் முதல் ஐந்து அல்லது ஆறு நொடிகளுக்கான காரணத்தில்தான் கடவுள் ஒரு கருதுகோளாகத் தேவைப்படுகிறார் என்றும் அவர் கூறியுள்ளார். அதைக் கண்டறிவதில்தான் ஸ்டீபன் இப்போது முனைப்பாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்டீபன் அப்படி ஒரு ஆழ்நிலை தியானத்தில் - சூபி கலைச்சொல் வேண்டுமா? தருகிறேன்- 'முராக்கபா'வில் இருந்தபோது அந்த எதிர்பாராத ஒலியை அவர் கேட்டுள்ளார். கால வெளியில் பின்னோக்கி நகர்ந்து நகர்ந்து பிரபஞ்சம் ஒரு ஒற்றைப் புள்ளியாகச் செறிந்து நின்று "BIG BANG" என்னும் பெருவெடிப்பு நிகழ்வதற்கு முந்தைய கணங்களுக்குள் அவர் நுழைந்தபோது அந்த ஒலியைக் கேட்டுள்ளார். அவருடைய பிரக்ஞை அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டதாம். அது என்ன மந்திர உச்சாடன ஒலிகள் என்று கூர்ந்து கவனித்து நல்லவேளையாக நினைவில் பதித்துக் கொண்டாராம். உடனே அந்தக் கணத்திலிருந்து தூக்கியெறியப்பட்டு மீண்டும் பல கல்ப கோடி ஆண்டுகள் தாண்டி  வந்து சக்கர நாற்காலியில் விழுந்து பிண்டச் சிறையில் தன்னைக் கண்டுகொண்டாராம்.

தான் கேட்ட அந்த வினோத ஒலிகளை மீண்டும் மீண்டும் மண்டையில் போட்டுக் குடைந்த பிறகுதான் மனுஷனுக்குப் பொறி தட்டியுள்ளது. உடனே செல்போனில் என்னை அழைத்துப் பேசினார்! இங்கே ஒரு ரகசியத்தை நான் குறிப்பிட வேண்டும். ஸ்டீபன் என்னுடன் மட்டும் தமிழில் பேசுவார். அவருக்குத் தமிழ் ஓரளவுக்குத் தெரியும்! விஷயம் என்னவென்றால் அவர் கேட்ட அந்த ஒலிகள் தமிழ்தான்! தொடர்ந்து சங்கப் பாடல்களாக ஒலித்துக் கொண்டிருந்ததாம். தமிழர்களே, சிலிர்க்கிறது அல்லவா? இறும்பூது எய்துகிறீர்கள் அல்லவா? இல்லாமலா பின்ன?

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு 
முன் தோன்றிய மூத்த குடி"
அல்லவா நம் தமிழ்க்குடி? இந்த வரிகளின் அறிவியல் விளக்கம் இப்போது புரிகிறதா? பெருவெடிப்பு நிகழ்ந்து கல்லும் மண்ணும் தோன்றும் முன்பே தொல்காப்பியரும் கபில பரணரும் ஔவையாரும் அவரன்ன சங்கக் கவிஞர்களும் பிறந்து தமிழ்ப்பால் மாந்தி சங்கக் கவிதைகளைப் பாடியுள்ளனர். ( இதே தமிழ்ப்பாலைத்தான் ரஜினிகாந்த் இன்னமும் குடித்து வருகிறார். ஆனால் அவர் கவிதையெல்லாம் எழுதமாட்டார். தமிழை வாழ வைக்கிறார்!)

எனவே, சங்கக் கவிஞர்களை நாம் இனி "பெருவெடிப்புக் கவிஞர்கள்" (BIG BANG POETS) என்று அழைத்துப் பெருமை கொள்ளலாம். வெள்ளிவீதியாரை இவர்கள் பட்டியலில் சேர்க்க முடியாது. அவர் காலத்தால் பிற்பட்டவர். அதாவது பெருவெடிப்பு நிகழ்ந்த பல கோடி வருடங்களுக்குப் பின்னால் உருவான MILKY WAY OF GALAXY என்னும் பால் வீதி தோன்றிய ஞான்று பிறந்தவர் அவர். அதையே வெள்ளி வீதி என்ப. அதனால் அவர் "வெள்ளிவீதியார்" எனப்பட்டார்.

போதும் தமிழர்களே, நம் பெருமைகளைக் கேட்டு நமக்கே புல்லரிக்கிறது! ஆனால் எவனாவது தமிழ்ப் பகைவன் தோன்றி "பெரிய வெடிச் சத்தத்துடன் கவிதை எழுதியவர்கள் என்பதால்தான் பெருவெடிப்புக் கவிஞர்கள் என்று சங்கப் புலவர்களை அழைக்கிறோம்" என்று திரித்துப் பொருள்கூறித்  தமிழர்களின் நெஞ்சிலே நஞ்சு கலந்துவிடாமல் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வாழ்க தமிழ்! வெல்க தமிழ்! 3 comments:

 1. I like this very much sir ,pls watch discovery channel they telecast about stephen hawkings galaxy theory at night(after 8-11)i exactly not known the time........but his all theory against islam.......he say there is no god..........

  ReplyDelete
 2. Boss( Mr.Sheshaathri?), மன்சங்க எல்லார்க்குமே அவங்க சம்பந்தப்பட்ட ஒன்னு பெருமையான விஷயமாயிருந்தா, லைட்டாவாச்சும் அலட்டிப்பாங்க, its quite natural. நீங்களே ஒத்துக்கிட்ட தொன்மையான மொழிங்கிறதால கொஞ்சம் ஒவரா feel பண்றாங்க. உங்களுக்கு ஏன் பாசு நோப்பாலமா கீது? மத்தபடி 'கல் தோன்றி..' விஷயமெல்லாம், ரொம்ப வெளிப்படியான உயர்வு நவிற்சி அணி விஷயம், அதை பத்தில்லாம் எழுதி ஏன் time waste பன்றீன்ங்க?

  நீங்க சொல்ற 'தமிழ் வெறியர்கள்', 1960 களில் இருந்திருக்கலாம், இப்பெல்லாம் ரொம்ப கம்மி, அதான் எல்லாத்தையும் plan பன்னி பன்றீங்களே. ஆமாம், சம்ஸ்கிருதத்தை தெய்வ மொழின்னும், உலக மொழிக்கெல்லாம் தாய் மொழின்னுல்லாம் சொல்லிக்கிறாங்களே அத பத்தில்லாம் ஒன்னும் சொல்ல மாட்டீங்களா?

  நீங்க எழுதற நிறைய விஷயங்க ஓரளவுக்கு நியாயமாவும், உங்க எழுத்து நடை சூப்பராவும் இருக்குது, congrats. Have decided to visit your blog often.

  -தருமி

  ReplyDelete
 3. //உடனே செல்போனில் என்னை அழைத்துப் பேசினார்! இங்கே ஒரு ரகசியத்தை நான் குறிப்பிட வேண்டும். ஸ்டீபன் என்னுடன் மட்டும் தமிழில் பேசுவார். அவருக்குத் தமிழ் ஓரளவுக்குத் தெரியும்! விஷயம் என்னவென்றால் அவர் கேட்ட அந்த ஒலிகள் தமிழ்தான்!//

  காதுல பூ!

  ReplyDelete