Thursday, September 16, 2010

விடலைத்தாள்மாணவர்கள் எழுதிய தேர்வுத்தாள்களைத் திருத்தித் திருத்தி ஏதோ சி.ஐ.டி வேலை பார்ப்பது போல் தோன்ற ஆரம்பித்துவிட்டது. இலக்கியத்தை, தமிழைப் புதுப் புது டெக்னிக்குகளில் கொலை செய்து வைத்திருப்பதைப் பக்கத்திற்குப் பக்கம் காணலாம். "கண்ணகியைக் கோவலன் கற்பழிக்க வந்தான்" ( இதில் அடுக்குமொழி வேறு!) என்று எழுதுவதெல்லாம் மாணவ உலகில் சர்வ சாதாரணமான விசயம். இப்படி எழுதிவிட்டு, "ஐயா, சிலப்பதிகாரம் பத்தி எழுதீருக்கேன்ல, பத்துக்கு ஆறாவது போடுங்க" என்று தருமி ரேஞ்சில் கெஞ்சுவதைப் பார்க்கவேண்டும் நீங்கள். மாணவன் ஆசிரியரின் மனநிலையில் சிந்திக்கத் தெரிந்து கொள்கிறானோ இல்லையோ, நான் மாணவனின் நிலையில் இருந்து சில இலக்கியங்களைச் சிந்தித்துப் பார்ப்பதுண்டு. அதில் ஒரு சர்ரியலிசத் தன்மை இருப்பதைக் காணலாம். சில நேரங்களில் காலத்தைக் கடந்த ஒரு போதமும் தென்படுவதுண்டு.

அந்த வகையில் சில தமிழ்க் கவிஞர்களைப் பற்றி, மாணவன் அவன் பாணியில்  குறிப்புக்கள் எழுதினால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை.

1 கண்ணதாசன்: இவர் திருக்குறளைத் தமிழில் மொழிபெயர்த்தவர். சினிமா உலகில் கொடி கட்டிப் பரந்த இவர் சில ஹாலிவுட் படங்களுக்கும் பாடல்கள் எழுதி தமிழுக்குப் புகழ் சேர்த்துள்ளார். பாரதியார் இவருடைய சீடராவார்.

2 . கவிக்கோ: இவர் எழுதிய "அம்மி கொத்த சிற்பி எதற்கு?" என்னும் புகழ் பெற்ற கவிதை புறநானூற்றில் காணப்படுகிறது. சிற்பி என்னும் சங்கக் கவிஞனை அரண்மனையில் அம்மி கொத்துவதற்காகச் சேரன் செங்குட்டுவன் அழைத்த போது அரசவைப் புலவராக இருந்த கவிக்கோ சீறி எழுந்து, "தேரா மன்னா! நான் இருக்கும்போது அம்மி கொத்த சிற்பி எதற்கு?" என்று கேட்டதே அந்தப் பாடல். இவர் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் இசுலாம் மதத்திற்கு மாறி தன் பெயரை அப்துல் ரகுமான் என்று வைத்துக் கொண்டார்.

3 . கவிப்பேரரசு வைரமுத்து: இவர் கவிப்பேயரசு என்பவரின் தம்பியாவார். இவரும் ஒரு சங்கக் கவிஞர் ஆவார். புதுக்கவிதை பாடுவதில் வல்லவர். இவர் கவிதை  பாடுவதற்காக அரண்மனைக்கு வந்தால் பாடுவதற்கு முன்பே மன்னர்கள் வைரமும் முத்தும் கொடுத்து அனுப்புவார்கள். அவ்வளவு சிறப்பு மிக்க கவிஞர். 

4 . மீரா:  இலக்கணம் மீறாமல் பாடக்கூடிய வல்லமை உடையவர். எனவே இவர் மீரா என்று அழைக்கப்பட்டார். இவர் பக்தி ரசம் சொட்டச் சொட்ட பாடுவார். இவர் கவிதை வாசித்து முடித்தவுடன் தாள்கள் நனைந்து ஈரமாக இருக்கும் என்று அறிஞர்கள் குறிப்பிடுவர். இவர் காதலைப் பாடுவதிலும் சிறப்பாகத் திகழ்கிறார். இவர் எழுதிய "கனவுகள் + நினைவுகள் = ஊசிகள்" என்னும் நூலில் இதனைக் காணலாம்.

5 . மேத்தா: இவர் புதுக்கவிதையின் தாத்தா என்று அழைக்கப்படுகிறார். ஆனால் இவருடைய கவிதைகளைப் படித்தவர்கள் இவரை புதுக்கவிதையின் கொல்லு தாத்தா என்று அழைக்கின்றனர். அந்த அளவுக்கு அற்புதமாக எழுதித் தள்ளுவார். இவர் சாகித்திய டம்மி விருது, பல ஆஸ்கார் விருது எல்லாம் பெற்றவர். இவர் ஆகாயத்துக்கு அடுத்த பக்கம் வூடு கட்டிப் பாடுவார்.

6 . சிற்பி: இவர் ஒளவையாரின் மாணவராவார். அறம் செய்ய விரும்புவார். அதனால் பல கவிதைகளை எழுதினார். இவர் தன் கவிதைகளைத் தாளில் எழுதாமல் உளி வைத்து கல்லில் செதுக்கி எழுதினார். எனவே இவரை மக்கள் சிற்பி என்று அழைத்தனர். இவர் ஆனைமலை புறாமலை அண்ணாமலை மற்றும் ஏழுமலைகளில் செதுக்கிய கவிதைகள் இன்றும் அழியாமல் உள்ளன. இவருடைய "சர்ப்ப தாகம்" என்னும் நூலுக்கு தமிழக அரசின் விருது பெற்றார்.

7 . பெருங்கவிக்கோ: இவர் ஒரு தமிழ்க்கவிஞர் ஆவார். முதலில் பெருங்காயம் விற்றுக்கொண்டிருந்தார். கவிக்கோவுக்கு மீசை இருக்காது. இவருக்கு பெரிய மீசை உண்டு. எனவே பெருங்கவிக்கோ என்று அழைக்கப்படுகிறார். இவர் தமிழ் உணர்வு பொங்கி வழியும் வண்ணம் எழுதுவார். யாப்பெருங்கலக்காரிகை வழி நின்று வருணித்து எழுதுவார். எனவே "எழுத்தாணியில் மை தீராக் கவிஞர்" என்று சங்கப் புலவர்கள் இவரை போற்றினார்கள். "கொம்மை ________ பொருப்பு வட்ட ________ " போன்ற வரிகள் இவர் கவிதைகளில் மிளிர்கின்றன. ( குறிப்பு: இலக்கியங்களில் 'முலை' என்று வரும் இடங்களில் டேஷ் போடுவது கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் பல்கலைக் கழகங்கள் கடைப்பிடித்து வரும் மரபு. அதை இந்த மாணவன்  பாடத்தில் உள்ளபடி கசடறக் கற்று எழுதியுள்ளான்)

8 . பாவலரேறு பெருஞ்சித்திரனார்: வீரம் கொப்பளிக்கும் கவிதைகளைக் குமுறிக் குமுறிப் பாடுவதில் திறமை உள்ள சங்கக் கவிஞர் இவர். இவர் பாடினால் கனல் தெறிக்கும், அனல் அடிக்கும் , புனல் கொதிக்கும். போர்ப்பாடல்களானலும் சரி காதல் பாடல்கள் ஆனாலும் சரி எல்லாவற்றையும் பெரிய சைசில் சித்திரமாக வருணித்துப் பாடுவதால் இவர் பெருஞ்சித்திரனார் என்று பெயர் பெற்றார். "பாவலரேறு" என்னும் பெயர் குறித்து கருத்து வேற்றுமைகள் உள்ளன. பாவலர்கள் ஏற்றிப் போற்றும் பாவலர் இவர் என்று புலவர்கள் கூறுகின்றனர். பாவலர்கள் ஏறும் பாவலர் இவர் என்று மானிடவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

9 . இன்குலாப்: இவர் குலாப் ஜாமூன் போல் இன்சுவை மிக்க கவிதைகள் செய்வதில் வல்லவர். இஸ்லாமியப் பாடல்கள் பல இயற்றியுள்ளார். இவர் குலாப் தஸ்தகீர் ஜாமூன் பாபா என்னும் சூபி ஞானியின் சீடராவார். இவருடைய பாடல்கள் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெளிவந்துள்ளன. "முஸ்தபா முஸ்தபா..", "முக்காலா முக்காபுலா லைலா.." போன்ற இவரது பாடல்கள் மக்களின் மனம் கவர்ந்த பாடல்களாகும்.  

இதுவே தமிழ் இலக்கிய வரலாறில் நாம் காணலாகும் செய்திகளாகும்.

********       *********        *********

இந்த விடையை எழுதிய பின் மாணவன் தேர்வாளருக்காக எழுதிவைத்த ஓரக்குறிப்பையும் நான் குறிப்பிட விரும்புகிறேன்:
"ஐயா, நீங்கள் மனிதரில் தெய்வம். பொன்மனம் கொண்டவர். நான் மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். பார்ட் டைம் வேலை செய்கிறேன். படிக்க நேரம் கிடைக்கவில்லை. இரவெல்லாம் கண் முழித்து மிகவும் கஷ்டப்பட்டு படித்து எழுதியுள்ளேன். தயவு செய்து எனக்கு பாஸ் போடவும். நீங்கள் எல்லா வளமும் பெற்று வாழ கடவுளை வேண்டுகிறேன். நன்றி."

மேலும் ஒரு குறிப்பு:
கவிஞர் இன்குலாபின் குரு என்று மாணவன் குறிப்பிட்டுள்ள 'குலாப் தஸ்தகீர் ஜாமூன் பாபா' என்பவர் ஜெயமோகன் எழுதிய ஒரு கட்டுரையின் வழி அறியப்படுகிறார். அதைப் பற்றி வகுப்பறையில் நான் ஒரு முறை சொன்னதை மாணவன் ஞாபகம் செய்து எழுதியுள்ளான். இது அவனுடைய நினைவாற்றலுக்கு நல்ல சான்று. பாபாவைப் பற்றி மேலும் அறிய விரும்புவோர் ஜெயமோகன் எழுதிய "மனிதனாகி வந்த பரம்பொருள்" என்னும் கட்டுரையை அவரது வலைத்தளத்தில் காணவும்.

4 comments:

 1. nakkal ulagin naayagan neengal sikkal varaamal paarthu kollungal

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. //பெருங்கவிக்கோ: இவர் ஒரு தமிழ்க்கவிஞர் ஆவார். முதலில் பெருங்காயம் விற்றுக்கொண்டிருந்தார். கவிக்கோவுக்கு மீசை இருக்காது. இவருக்கு பெரிய மீசை உண்டு. எனவே பெருங்கவிக்கோ என்று அழைக்கப்படுகிறார்.//


  நல்ல ஜோக்

  ReplyDelete