Sunday, September 26, 2010

கவிக்கோவும் புவிக்கோவும்



நான் மிகவும் சிலாகித்துப் படித்த கவிஞர்களில் ஒருவர் கவிக்கோ அப்துல் ரகுமான். ஒரு பத்து வருட காலம் அவருடைய நூல்கள் என்னைச் சிலிர்க்கச் செய்தவை என்று சொல்லவேண்டும். அதன் பின் நிலைமை மாறத் தொடங்கிவிட்டது. தமிழ்ப் புதுக்கவிதையில் அவருடைய ஆளுமையைத் தாண்டியவர்களை நான் கண்டடைய நேர்ந்தது. நான் மிகவும் தாமதமாகத்தான் அவரை விமரிசிக்கத் தொடங்கினேன். அதுவும், பிறர் செய்த விமரிசனங்கள் மீது என் சிந்தனையை செலுத்தியபோது அவை எழுப்பிய கேள்விகளுக்கு என்னால் பதில் கூறமுடியவில்லை.



கவிக்கோவைப் பார்த்து ஒரு பெண் எழுத்தாளர் கேட்டாராம்,"நீங்கள் உங்களைக் கவிஞர் என்று கூறிக்கொள்கிறீர்கள். ஆனால் கவிதைகளை விடவும் அதிகமாகக் கட்டுரைகள்தான் எழுதுகிறீர்கள். தயவு செய்து கவிதை எழுதுங்கள்." இந்த விமரிசனத்தில் ஞாயம் இருக்கிறது. ஏனெனில் இடையில் ஒரு கணிசமான காலம் அவர் கவிதையே எழுதியதாகத் தெரியவில்லை. கட்டுரை நூல்களாகவே வெளிவந்தன. கவிக்கோ என்பதற்கு பதிலாகக் "கட்டுரைக்கோ" என்று அழைக்கலாம்போல் தோன்றியது. ஆனால் இது ஒரு சிறிய விஷயம்தான். கலீல் கிப்ரன்கூட கவிதைகளை விடவும் அதிகமாக உரைநடைதான் எழுதியிருக்கிறான். ஆனால் அவனுடைய கல்லறையிலேயே "இங்கு நம் கவிஞன் உறங்குகிறான்" என்று பொறித்து வைத்து அவன் ஒரு கவிஞன்தான் என்று ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.

சமீபத்தில் முனைவர் அமுதா என்பவர் எழுதி வெளிவந்துள்ள "தமிழ் இலக்கிய வரலாறு" என்னும் நூலில் அவளுக்கு நிலா என்று பேர், சலவை மொட்டு, சுட்டு விரல், முட்டை வாசிகள், சொந்தச் சிறைகள் ஆகியவை அப்துல் ரகுமான் எழுதிய கவிதைத் தொகுதிகள் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் சுட்டு விரல் தவிர பிற எல்லாம் கட்டுரை நூல்கள்!

 கவிக்கோவின் மீதான விமரிசனங்கள் வேறு விதங்களில்  என் மனதைத் தாக்கின. குமுதமோ ஆனந்த விகடனோ தெரியவில்லை, ஒரு கற்பனை எழுத்தோவியம் வந்திருந்தது. சுருக்கமாகச் சொல்கிறேன். கவிஞர்கள் அனைவரும் கலைஞர் கருணாநிதியிடம்தான் நேசமாக இருக்கிறார்கள் என்பதால் கடுப்பாகிப்போன ஜெயலலிதா, அவர்கள் அனைவரையும் கடத்திக்கொண்டு வந்து தன்னைப் புகழ்ந்து கவிதை படிக்கச் சொல்வார். அதில் கவிஞர் வாலி மட்டும் வெளுத்து வாங்குவார். (காரணம் இருக்குதுங்கோ!) கவிக்கோவும் ஒரு கவிதை படிப்பதாகக் கற்பனை செய்து எழுதியிருந்தார்கள். ஆச்சரியம் என்னவென்றால் அது அவர் எழுதுகின்ற தரத்திலேயே இருந்தது. அதாவது, கவிக்கோவின் கவிதைத் தரத்தை ஒரு நக்கல் எழுத்தாளனால் நக்கலாகவே தொட்டுவிட முடிகிறது! படித்துப் பல வருடங்கள் ஆகிவிட்டதால் அந்தக் கவிதை எனக்குச் சரியாக நினைவில்லை. அது என்னவோ,
"நட்சத்திரங்கள் கண்மூடும்
பௌர்ணமிப் பொழுதில்
வானவில்லின்  வழியே
இறங்கி வந்தாய் நீ"
என்பதுபோல் இருக்கும். குறியீட்டுப் படிமக் கவிதை. இது வெகுவாக என்னைப் பாதித்தது. வைரமுத்துவுக்கென்று சில சொற்கள் உள்ளன. ஓரிரு பாணியும் உள்ளது. அதை அவதானித்தால் போதும். எந்த மங்குனிக் கவிஞனும் அதுபோல் எழுதிவிடலாம்.
"அடடா! என்ன இது?
என் மனதில் ஒரு
மசக்கைச் சிலிர்ப்பு?"
என்பது போன்று தொடங்கி நிலா, தென்றல், கன்னி, காதல், அருவி, குருவி என்று ஒரு டஜன் சாப்ட்வேர் சொற்களும், தீ, பிழம்பு, எரிமலை, பிரளயம் போன்று ஒரு டஜன் ஹார்ட்வேர் சொற்களும் போட்டு இளைஞர்களின் அண்டர்வேருக்கு அப்பீல் ஆகும் கவிதைகளைத் தந்து நீங்களும் கவிப்பேரரசு ஆகிவிடலாம்.



ஆனால் கவிக்கோவுக்கும் இது பொருந்தி வரும் நிலை இருப்பதைக் கண்டபோது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. கஜல் எழுதுகிறேன் என்று அவர் தொடர்ந்து வெளியிட்ட நூல்களில் ஆடம்பரம் இருக்கும் அளவு சாரம் இல்லையோ என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஒரு சில கவிதைப் பொறிகள் மட்டுமே பிரகாசம் காட்டின. மற்றவை வெறும் அவல் பொரியைப்போல் இருந்தன! ஒரு சில சொற்களின் செட்டும் அவற்றைக் கோர்க்க கவிக்கோ பாணியையும் கொஞ்சம் கற்றுக்கொண்டால் நாமும் அதைப்போல் எழுத முடியும் என்று தோன்றியது. பேராசிரியர்.வ.முஹம்மது யூனுஸ் அப்படிச் சில கஜல் பொறிகளை எழுதியும் காட்டினார். அதைத் தொடர்ந்து சில மாணவர்களும் அதைப்போல் எழுதத் தொடங்கிவிட்டார்கள். கஜல் பொறிகள் அவற்றின் கீழ்தளத்தில் கடலைப் பொரிகள்தானே? அதுமட்டுமல்ல, ஒரு மாணவன் எழுதிய கஜல் 'பொரி' ஒன்றில் நான் தவறு கண்டபோது "எண்ணன்னே, கவிக்கோ எழுதுனா ஒத்துக்குறீங்க. நான் எழுதுனா ஒத்துக்க மாட்டேங்குறீங்க" என்று போட்டானே பாக்கணும் அருவாள.  ஏழு வருஷம் ஆகியும் மறக்கல. 

இதெல்லாம் பரவாயில்லை. இன்னொரு சம்பவம் சொல்றேன் கேளுங்க. ஒரு முறை வகுப்பிற்கு அப்துல் ரகுமான் எழுதிய "இன்றிரவு பகலில்" நூலை எடுத்துச் சென்றேன். மாணவர்களுக்கு நல்ல நூல்களை அறிமுகம் செய்து வைப்பது ஆசிரியனான என் கடமை அல்லவா? அதனால், அவ்வப்போது ஏதாவது ஒரு நூலை எடுத்துச் சென்று அதைப்பற்றிக் கூறுவதுண்டு. "அப்துல் ரகுமான் எழுதிய அருமையான நூல் இது. 'இன்றிரவு பகலில்'" என்றுதான் சொன்னேன். ஒரு மாணவன் தன் அருகிலிருந்தவனிடம் ஏதோ கூறிச் சிரித்தது என் கண்ணில் பட்டது. நூலை மூட்டி வைத்துவிட்டு, அவனை எழுந்து நிற்கச் சொன்னேன். எழுந்து நின்றான். என்ன சிரிப்பு என்று கேட்டேன். பக்கத்தில் இருந்தவனையும் எழுப்பினேன். கால் மணி நேரம் மழுப்பிய பிறகு காரணத்தைச் சொன்னான். அதாவது, "இன்றிரவு பகலில்" என்னும் தலைப்பு ஏதோ நீலப் படத்தின் பெயரைப் போல் தொனிக்கிறதாம். அதனால் சிரித்தானாம். மாணவர்களிடம் இலக்கியப் பிரக்ஞையை வளர்க்கிறேன் என்று எனக்கு இதெல்லாம் தேவைதானா? பிறகு பொறுமையாக யோசித்த போதுதான் அவன் சொன்னதிலும் ஒரு பாய்ண்ட் இருப்பது தெரிந்தது. கவிக்கோ எழுதிய நூல்களின் பெயர்களை ஒவ்வொன்றாக எண்ணிப்பார்த்தேன்: "இன்றிரவு பகலில்", 'அவளுக்கு நிலா என்று பெயர்', 'உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்', 'சலவை மொட்டு', 'நேயர் விருப்பம்', 'உறங்கும் அழகி', 'பால் வீதி', 'ரகசியப் பூ'.... ஆகிய பெயர்கள் அந்த விஷயத்தை சஜ்ஜஸ்ட் செய்து தொனிப்பது போல் உள்ளதை உணர முடிந்தது. கவிக்கோ அப்படியெல்லாம் எழுதுபவறல்ல என்பது எனக்கும் உங்களுக்கும் தெரியும். என்றாலும் நாளை எவனாவது பின்-நவீனத்துவப் பார்வை முன்-நவீவத்துவப் பார்வை என்று கிளம்பி வந்து கட்டுடைப்பு கடப்பாரை என்று கவிக்கோவைக் குடைந்தால் இப்படியெல்லாம் விமரிசனம் வரும் அல்லவா? அது எவனோ சிக்மண்டு பிராய்டாமே? உளவியலைப் பிராண்டிப் பிராண்டி அடிமனசுல இருக்கிறது இதுதான் பார் என்று அள்ளிக்கிட்டு வந்து காட்டுவானாமே? அப்படி யாராவது கிளம்பி, "கவிக்கோ அப்துல் ரகுமான்: ஒரு பிராய்டிய குறுக்கு வெட்டுத் தோற்றம்" என்று நறுக்கிப் போட்டுவிட்டால் என்னாவது?

கவிக்கோ "வானம்பாடி" இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றுதான் கொள்ள காலமாக நான் நினைத்திருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது. அவர் வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தவராம். அதாவது, வாணியம்பாடியில் இருந்து. அதைத்தான் நான் தவறாக விளங்கிவிட்டேன் போலும். அவர் கலைஞருடன்தான் நெருக்கமாக இருந்து கவிதைகள் பாடுவார். வானம்பாடிகளை ஆதரிப்பார், உற்சாகப் படுத்துவார். போராட்டங்களில் கலந்துகொள்ள மாட்டார். கண்ணதாசனைப்போல் மீன் சந்தையில் விண்மீன்களை விற்க மாட்டார். மீலாது விழாக்களில் நபிகள் நாயகத்தைப் புகழ்ந்து கவிதை பாடுவார். இந்து மதத்தின் தொன்மங்களை வைத்து சமூக, அரசியல் அங்கதக் கவிதைகள் புனைவார். ஆனால் அதற்கு இஸ்லாமியத் தொன்மங்களைப் பயன்படுத்த மாட்டார்! (இந்த விமரிசனம் இந்து மதத்தைச் சேர்ந்த என் பேராசிரிய நண்பர் ஒருவர் கூறியது) தெளிவானவர்.

ஆனால் அவருக்குமா இப்படியொரு எதிரி தோன்றவேண்டும்? அதுவும் அவருடைய பாணியிலேயே அவருக்கு எதிர்ப்பாட்டு பாடிக்கொண்டு. இது என்ன புதுக்கதை என்கிறீர்களா? புதுக்கதைதான். எவனோ புவிக்கோ என்று ஒரு புல்லுருவிக் கவிஞன் புறப்பட்டு உள்ளானாம். அடிப்பொடிகள் ஐம்பது பேரைச் சேர்த்துக்கொண்டு கவியரங்குகள் எல்லாம் நடத்துகிறானாம், கவிதை நூல்கள் வெளியிடுகிறானாம். என் பார்வைக்குக்கூட சில நூல்கள் வந்தன. "தயிர் வீதி" என்று ஒரு புத்தகம். வீதி வீதியாகத் திரிந்து தயிர் விற்கின்ற பெண்கள் படும் பாடுகளைப் பேசுகிறது. "சுண்டு விரல்" என்றொரு நூல். இளசுகளின் உள்ளத்தைச் சுண்டுமாம். ஒவ்வொரு வரியும் ஊவன்னாவில் ஆரம்பிக்கும் கவிதைகளின் தொகுப்பு ஒன்று."ஊலாபனை" என்று பெயர். "நாயர் விருப்பம்" என்று ஒரு கவிதை நூல். புவிக்கோவின் நெருங்கிய நண்பர் மாதவன் நாயர் என்பவர் விரும்பிக் கேட்ட விஷயங்களைப் பாடும் நூலாம் இது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டால் உலகம் நிச்சயம் "யார் இந்தப் புவிக்கோ?" என்று விசாரித்துக்கொண்டு வந்து உதைக்குமாம். அவ்வளவு நன்றாக உள்ளதாம். "ரகசியப் பழம்" என்று ஒரு கவிதை நூல். இன்னும் வெளிவரவில்லை. தவம் செய்து எழுதிக்கொண்டிருக்கிறாராம். சாகித்திய அகாதமி விருது வாங்கும் என்று புவிக்கோவின் பரம ரசிகர்கள் சத்தியம் செய்கிறார்கள். அதற்கான முஸ்தீபுகளில் இறங்கி அரசியல் செய்துவருகிறாராம். பின்னே, அரசியல்வாதிகள் கவிதை எழுதலாம், கவிஞர்கள் அரசியல் செய்யக்கூடாதா? 

1 comment:

  1. //இந்து மதத்தின் தொன்மங்களை வைத்து சமூக, அரசியல் அங்கதக் கவிதைகள் புனைவார். ஆனால் அதற்கு இஸ்லாமியத் தொன்மங்களைப் பயன்படுத்த மாட்டார்! (இந்த விமரிசனம் இந்து மதத்தைச் சேர்ந்த என் பேராசிரிய நண்பர் ஒருவர் கூறியது) தெளிவானவர்.//

    அதானே! ஊருக்கு இளச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டிதானே!

    ReplyDelete