Wednesday, September 8, 2010

கீழே விழுந்த மெட்டு
"என் சுவாசங்களின் 
மணிமாலையில் 
உன் பெயரை 
தியானம் செய்வேன்"
(சாசோன் கி மாலா பெ சிம்ரூன் மே தேரா நாம்...)

உலகப் புகழ் பெற்ற இசைக்கலைஞர் நுஸ்ரத் அவர்கள் பாடிய ஒரு சூபி பாடலின் ஆரம்ப வரி இது. ஒரு இறைக்காதலனின் உணர்வுகளை லௌகீகக் காதலின் தளத்திற்கும் பொருந்தும்படியான மெட்டில் வெளிப்படுத்தும் பக்திப்பாடல் அது.
இந்தப் பாடலின் மெட்டினை அப்படியே சுட்டு ஒரு தமிழ்த் திரைப்படத்தில் போட்டிருந்தார்கள். "கத்தாழ கண்ணால..." என்று தொடங்கும் அந்தப் பாடல் சினிமாவுக்கே உரிய மேலோட்டமான, சாரமற்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒன்றாக இருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. அந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்த கலைஞனின் தளத்திற்கு நுஸ்ரத்தின் மெட்டு இறக்கப்பட்டுவிட்டது. அவ்வளவுதான். அந்த இசைக்கலைஞனைக் கேட்டால் 'நுஸ்ரத்தின் பாடலால் இன்ஸ்பயர் ஆகி இதைப் போட்டேன்' என்று கூறுவான்.
                      இன்று திருச்சிக்கு முதலமைச்சரின் தலைமையில் தளபதியும் மந்திரிகளும் எண்ணற்ற இந்நாட்டு மன்னர்களும் வருகை தருவதால் நேற்று மாலை முதலே நகரம் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகள் நெடுகப் பதாகைகளும் பளிச் பளிச் என்று நகைச்சுவை உணர்வு கொப்பளிக்கச் சிரிக்கும் முகங்களைக் காட்டும் போர்டுகளும், அவற்றில் அதே உணர்வினைத் தூண்டும் வாசகங்களும் அலங்கரிக்க, லவுடு ஸ்பீக்கர்களில் நாகூர் ஹனீபா தொண்டை கிழிய அலறிக்கொண்டிருந்தார். தில்லை நகர் வீதியில் இந்த 'ரொமாண்டிக்கான' சூழலில் நான் என் மனைவியுடன் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தபோது யாரோ ஒரு கழகக் கண்மணி பாடிக்கொண்டிருந்த அந்தப் பாடல் என் காதில் விழுந்தது. மேற்சொன்ன 'கத்தாழ கண்ணால' பாடலை அப்படியே காப்பி அடித்துத் தன் தலைவனை அவன் மெய்சிலிர்க்கப் புகழ்ந்து கொண்டிருந்தான். அரசியலுக்கே உரிய ஒரு வருணிக்க முடியாத நெடி அதில் காரமாக வீசிக்கொண்டிருந்தது.
எனக்கு நுஸ்ரத்தின் சூபிப் பாடலும், அதிலிருந்து இன்ஸ்பயர் ஆன சினிமாப் பாடலும் நினைவில் தோன்றி அதிலிருந்து காப்பியடிக்கப்பட்ட இந்த அரசியல் பாடலுக்கு அருகில் வந்து நின்றன. சிங்கமும் நாயும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்று விலங்கியல் கூறுகிறது. சிங்கம் போன்ற ஒரு பாடல் இன்ஸ்பயரேஷனில் நாயாகி, பின்பு காப்பியடித்தலில் சொரிநாயாகித் திருச்சி சாலையில் என் கண்முன்னே ஓடுவதுபோல் இருந்தது. 
கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் மனிதனும்கூட இறைவனுக்காக இசையமைக்கப்பட்ட ஒரு மெட்டுத்தான் என்று தோன்றுகிறது. ஆனால் அந்த மெட்டு சினிமாத்தனமாகவும் அரசியல்தனமாகவும் உருமாறிப் போய்விடுகிறது. 
"மனிதனை நாம் சிறந்த வடிவத்தில் படைத்தோம்.
பின்பு அவனைக் கீழினும் கீழான நிலைக்குத் தள்ளினோம்"
என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

3 comments:

  1. நல்ல சிந்தனை!உவமானமும் உவமேயமும் கனக்கச்சிதப் பொருத்தம்!

    ReplyDelete
  2. //கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் மனிதனும்கூட இறைவனுக்காக இசையமைக்கப்பட்ட ஒரு மெட்டுத்தான்//

    கண்ணன் கையில் குழல்தான் நாம் என்பது ஒரு தத்துவப் பார்வை.அவன் ஊதும் வண்ணம் நாம் இசையாக வெளி வருகிறோம்.

    ReplyDelete