Sunday, January 24, 2010

எழுத்துக் கண்ணாடி



இந்தப் பொங்கல் விடுமுறையில் இரண்டு நாவல்கள் வாசிக்க முடிந்தது. யுவன் சந்திரசேகர் எழுதிய "கானல் நதி" நாவலைப் படித்து முடித்ததும் மனம் தாளாமல் கனத்துக் கிடந்தது. இடையிடையே எல்.சுப்ரமணியத்தின் "ஜிப்சி டிரய்ல்" ஆல்பத்திலிருந்து ஒரு இசையைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த இசையின் ஆதார சுருதியில் இழைந்த சோக உணர்வு நாவலின் கதையோட்டத்துடன் நன்றாகப் போடுந்தியிருன்தது. 
அதனால் ஏற்பட்ட அழுத்தமும் இணைந்து நள்ளிரவில், னேஎர்பானையில் விரிசல் விட்டதுபோல் கண்ணில் கசிந்தது. 
"யாரோ எழுதியதைப் படித்துவிட்டு இப்படி ஏன் அழ  வேண்டும்?" என்று என் மனைவி கேட்டாள், சற்று கோபமாகவே. இந்தச் சிறுபிள்ளைத்தனங்கள் அவளுக்குப் பிடிக்காது.  
எனக்கு வேறு மாதிரித் தோன்றுகிறது. எழுதியவரை யாரோ என்று நினைத்துக் கொண்டு படித்தால் நான் முதலில் அதைப் படிக்கத்தான் முடியுமா? எழுதியவருடன் என் மனதின் அலைவரிசை இயைபு கொள்ளும்போதுதான் ஒரு நூலைத் தோய்ந்து படிக்க முடிகிறது.  
 

அதாவது, எனக்குப் பிடித்த எழுத்தாளனின் எழுத்தில் நான் காண்பது அல்லது தேடுவது என் மனதின் எழுததைதான், குரலைத்தான். எனவே, ஒரு நூலைத் தோய்ந்து வாசிக்கையில் நான் வாசிப்பது என் மனதின் பிரதியைத்தான். அதாவது, ஒரு கண்ணாடியைக் கையில் வைத்துக் கொண்டு என் மனதையே அதில் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

"இதெல்லாம் நீ கூறுவது சரி. வேதம் வாசிக்கையிலும் அப்படித்தானோ?" என்று ஒரு குரல், என் உள்ளிருந்தே வருகிறது. யோசித்துக்கொண்டிருக்க்கிறேன்.


1 comment:

  1. //எனக்குப் பிடித்த எழுத்தாளனின் எழுத்தில் நான் காண்பது அல்லது தேடுவது என் மனதின் எழுததைதான், குரலைத்தான். எனவே, ஒரு நூலைத் தோய்ந்து வாசிக்கையில் நான் வாசிப்பது என் மனதின் பிரதியைத்தான்.//

    அடடா! வாசிப்பின் சூத்திரத்தை போகிறபோக்கில் சொல்கிறீர்களே சார்!
    அருமை!

    ReplyDelete