வகுப்பறையில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த மாணவன் ஒருவனைக் கையும் களவுமாகப் பிடித்து வந்து எங்கள் துறைத் தலைவர் முன் நிறுத்தினார் ஒரு பேராசிரியர். விசாரணை மற்றும் தக்கப் பரிசோதனைக்குப் பின் அந்த செல்போன் என்னும் 'மினி மசாலாத் திரையரங்கு' அந்த மாணவனிடமே திருப்பிக் கொடுக்கப்பட்டது. மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்த அந்த மாணவன் மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொண்டிருந்தான்: "சார், எல்லாப் பசங்களுந்தான் வச்சிருக்காங்க. என்னை மட்டும் ஏன் புடிக்கிறீங்க?" ( தமிழுக்கே சிலேடையா? மவனே பேத்துருவேன்)
"ஐயகோ! இவன் விரிவுரையாளருக்கு வல்லின றகரம் போடுவான் போலிருக்கே. இந்தச் செல்லினத்தை - புல்லுருவியைப் பூண்டோடு அழித்துவிடவேண்டும்" என்று நான் காண்டாகக் கூறவில்லை. அவன் சொன்னதில் டபுள் மீனிங்கை ஒதுக்கிவிட்டு நேரான அர்த்தத்தில் கவனம் செலுத்தி யோசித்தேன். மாணவர்களின் நிலை உண்மையில் இப்படித்தான் இருக்கிறதா? ஏன் இப்படி ஆனது?
தரையிறங்கி வந்த தாந்திரீகச் சிலைகள் போல் பத்திரிகைப் பக்கங்களில் பாவைகளின் படங்கள். திரையில் அவர்களின் தீட்சை. அதனால்தான் மாணவன் மந்திரித்துவிட்டது போல் இருக்கிறான். மலையாள மாந்திரீகம்! இந்த நிலையில் இருப்பவனிடம் போய் நான் இலக்கியம் இயம்ப வேண்டும் என்றால் நடக்கிற காரியமா? சம்போகச் சயனத்தில் இருப்பவனிடம் மளிகைக் கடை ரோக்கா வாசிப்பதுபோல் ஆகிவிடுகிறது. என் சக பேராசிரியர் ஒருவர் அடிக்கடிச் சொல்வார், "வகுப்பறையில் பாடம் நடத்துவது வன்புணர்ச்சி" என்று.
"இருட்டறையில் உள்ளதடா உலகம்" என்று பாரதிதாசன் பாடினார். மாணவன் உலகத்தைத் தேடி சினிமாக் கொட்டகைக்குப் போய்விட்டான். அவன் கனவு காணும் உலகம் அங்கேதான் இருக்கிறது.
"இருட்டறையில் ஏதில் பிணம் தழுவியதுபோல" என்று வள்ளுவர் ஒரு உவமை கூறுவாரே, அது சில வகுப்பறைகளுக்கும் பொருந்துகிறது.
இரண்டாம் பிரிவேளையிலேயே சில மாணவர்கள் கிறங்கி அமர்ந்திருப்பார்கள். தள்ளாடி மேசைமீது விழுகிறான். மந்தமான கண்கள். மந்தமான புத்தி. காரணம் கேட்டால் இரவெல்லாம் தூங்கவில்லை என்று கூறுவான். சம்சாரியான நானே ஷிப்ட் முறையிலாவது தூங்கி எழுந்து வருகிறேன். பிரம்மச்சாரியான இவனுக்கென்ன வந்தது? அலைபேசியோ? மடிக்கணினியோ? சீவகச் சிந்தாமணியை அவன் கற்பனைப்புலன் 3D -யில் காட்டியிருக்கும்போலும்.
என்னவோ சொல்வார்களே, ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமாவா? இவனால் பதினெட்டிலேயே பகலில் நிமிரமுடியவில்லை. இந்த லட்சணத்தில் இவன் எதிர்கால இந்தியாவின் முதுகெலும்பு வேறு. ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் கூறுகிறார்.
மதுரை கோவை நெல்லை தஞ்சை சென்னை என்று விதவிதமான ஸ்லாங் எல்லாம் போட்டு அரசியல் சினிமா நாட்டு நடப்பு எல்லாம் கலந்து பாடத்தைக் கொடுத்தாலும் இவர்களுக்குச் சுவைப்பதில்லை. என்ன சொல்வது? இவனுகளுக்கு மு.வ , வ.சுப.மா , தெ.பொ.மீ , அ.கி.ப வகையறாக்கள் வந்து தமிள்ல தாளிச்சிருக்கணும்... அப்பத் தெரியும் அருமை.
pls. take word verification.
ReplyDeleteநீங்க வாத்தியாரா வேற இருக்கீங்க. இம்பொசிஷன் எழுதச் சொல்றா மாதியில்ல இருக்குது.