*****************************************
மேற்காணும் உரையாடலைப் பற்றி நான் கொஞ்சம் பேச விரும்புகிறேன்.
புனித ஹஜ் பயணம் சென்று வந்ததன் அனுபவங்களை ஒருவர் பகிர்ந்து கொள்ளும் பேச்சு ஒரு சிறந்த மததன்மை கொண்ட உரையாக இல்லாமல் சாரமற்ற 'மொக்கை'யாக - அதாவது பிளேடாக ஆவது ஏன் என்ற காரணங்களை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
பெரும்பாலும் அவர்களின் பேச்சு பின்வரும் விஷயங்களைப் பற்றியதாக அமைந்திருக்கக் காணலாம்:
# வானளாவும் பள்ளிவாயில்களின் பரப்பளவும் உயரமும்
# உணவு விடுதிகள், உணவு வசதிகள் மற்றும் ஏற்பாடுகள்
# தண்ணீர் வசதிகள்
# சாலை மற்றும் வாகன வசதிகள்
# சவூதி அரசின் பல நிர்வாகத் திறமைகள்
இவையெல்லாம் இன்றைய நிலையில் நம் பலவீனங்களைச் சமாளிக்கும் பொருட்டு இறைவன் நமக்கு ஏற்படுத்தித் தந்துள்ள அருட்கொடைகள் என்பதில் ஐயமில்லை. இனி ஹஜ் சென்று வருபவர்கள் உலகின் மிக உயரமான மணிக்கூண்டு பற்றியும் பேசுவார்கள். ( "ஆஹா! எவ்வளவு பெரிய மணிக்கூண்டு தெரியுமா? காணக்கண் கோடி வேண்டும் மணிக்கூண்டை! அதைப் பாக்குறதுக்காவது நீங்க அவசியம் ஹஜ் போயிட்டு வாங்க" என்பது போன்ற பரவச உரையாடல்களையும் நாம் அவ்வப்போது கேட்க நேரலாம்)
இவையெல்லாம் அடிப்படை மனித வசதிகள் என்பதைக் கவனிக்க வேண்டும். இவை எதுவும் நபிகளாரின் காலத்தில் இருக்கவில்லை. இவற்றுக்கும் ஹஜ்ஜின் சாராம்சத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பொருளாதாரத்தில் முன்னிலையில் உள்ள அமெரிக்க-ஐரோப்பிய மற்றும் இதர பல நாடுகளில் காணலாகும் வசதிகள்தான் இவையெல்லாம். இதில் இஸ்லாத்திற்கென்று தனித்தன்மை ஏதுமில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த நாகரீக வளர்ச்சிகளை எல்லாம்
- அதாவது தொழில்நுட்பம் சார்ந்த புற வளர்ச்சிகளை எல்லாம் அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியுடன்தான் சவூதி அரசு வளர்த்துக்கொண்டது. இவற்றை வியந்து வாயாரப் பேசுவது ஒருபோதும் இஸ்லாத்தை வியப்பதோ ஆன்மிகப் பேச்சோ அல்ல, இறையுணர்வால் உண்டாவதும் அல்ல.
இந்தக் கருத்துக்குத் தொடர்பான ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன்:
அபூ யஜீது பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் ஒருமுறை ஹஜ் சென்றபோது மதீனா நகருக்குச் செல்கிறார்கள். அப்போது மதீனாவில் ஏற்பட்டிருந்த கட்டிடங்களின் வளர்ச்சியைப் பார்த்துவிட்டு, அதனை ஹதீஸ்களின் வாயிலாக நாம் காணும் எளிமையான மதீனாவுடன் மனதில் ஒப்பிட்டு, 'இது என்ன ? நான் நபியின் நகரத்திற்கு வரவேண்டும் என்ற ஆவலுடன் வந்தேன். ஆனால் இதை பிரௌனின் நகரத்தைப் போல் ஆக்கிவிட்டார்களே!' என்று வேதனைப்பட்டார்கள்.
முதலில் எடுத்துக்கொண்ட கருத்தின்பக்கம் திரும்புவோம். அதாவது, ஹஜ் சென்று வந்தவர் தன் அனுபவங்களைக் கூறுவது ஏன் சாரமற்ற வெற்றுப் பேச்சாக உள்ளது?
காதலியைச் சந்திக்கும்போது ஒருவன் பரவசத்தை அனுபவிக்கிறான் எனில், அவளைப் பிரிந்திருந்த நேரங்களில் வேதனையை, துயரத்தை அனுபவித்திருப்பான் என்பதுதான் உண்மைக் காதலின் அடையாளம். இந்த உதாரணம் உங்களுக்குப் புரிகிறதா?
ஹஜ்ஜில் வழிபாடுகளின் உச்சத்திற்குச் செல்வதாக உணர்கின்றோம். ஹஜ் செல்லும் முன்பும், சென்று வந்த பின்பும் நம் இறையுணர்வு எந்த நிலையில் இருந்தது? இருக்கிறது? ஆன்மிக அகநிலை எதையுமே பெற்றிராத ஒருவர் ஹஜ் சென்றால் திடீரென்று அது உருவாகிவிட முடியாது. அதனால்தான் அவர் பார்த்துவிட்டு வந்து வியப்புடன் குறிப்பிடுவதெல்லாம் சடங்குகளின் புறம் சார்ந்த விஷயங்களில் ஏற்பட்டுள்ள வசதிகள் பற்றியதாகவே உள்ளன. பொருளாதார வளர்ச்சி அடைந்த எந்த நாட்டிற்கு அவர் சென்று வந்தாலும் இந்த விஷயங்களைப் பற்றித்தான் அவர் பேசுவார். இடனகளின் பெயர்களும் கட்டிடங்களின் பெயர்களும் மாறியிருக்கும். அவ்வளவுதான் வேறுபாடு. எனவேதான் ஹஜ்ஜின் தனித்தன்மையாக அவர் உணர்ந்த எதுவும் அவர் பேச்சில் வெளிப்படவில்லை என்கிறேன். ஏனெனில் அப்படியொரு சாராம்சத்தை உணர்வதற்கான மனப்பயிற்சி எதிலுமே அவர் அதுவரை ஈடுபட்டதில்லை.
ஜுனைது (ரஹ்) அவர்கள் தன் ஹஜ் அனுபவங்கள் பற்றி இப்படிக் குறிப்பிட்டார்கள்:
"நான் முதல் முறை ஹஜ் சென்றபோது இறையில்லத்தை மட்டும் கண்டேன், இறைவனைக் காணவில்லை. நான் இரண்டாம் முறை ஹஜ் சென்றபோது இறையில்லத்தையும் இறைவனையும் கண்டேன். நான் மூன்றாம் முறை ஹஜ் சென்றபோது இறைவனை மட்டுமே கண்டேன்."
நம் ஹஜ் யாத்திரைகள் எந்த நிலையில் உள்ளன?
காதலியைக் காணச்சென்று அவளின் முகத்தைக் காணாமல் முகத்திரையை மட்டுமே ஒருவன் பார்த்து வருவான் எனில் அதைப்பற்றி என்ன சொல்வது?
அருமையான பதிவு.தொடருங்கள்
ReplyDeleteஅருமை.
ReplyDeleteR i g h t...!
ReplyDelete//ஜுனைது (ரஹ்) அவர்கள் தன் ஹஜ் அனுபவங்கள் பற்றி இப்படிக் குறிப்பிட்டார்கள்:
ReplyDelete"நான் முதல் முறை ஹஜ் சென்றபோது இறையில்லத்தை மட்டும் கண்டேன், இறைவனைக் காணவில்லை. நான் இரண்டாம் முறை ஹஜ் சென்றபோது இறையில்லத்தையும் இறைவனையும் கண்டேன். நான் மூன்றாம் முறை ஹஜ் சென்றபோது இறைவனை மட்டுமே கண்டேன்."//
அடடா! அவருக்கு 3 முறை போக முடிந்தது. ஒரு முறை மட்டுமே போக முடியும் என்று இருப்பவர்கள் முதல் முறையிலேயே இறைவனைக் காண முயற்சி செய்ய வேண்டும்.