Sunday, September 12, 2010

கண்முன் கரையும் பிறை
முடிவாக 10 .09 .2010  ஈத் பெருநாள் என்று அரசு காஜி அறிவித்துவிட்டார். சன் செய்திகள் டி.வியில் பளிச் நியூசில் "நாளை ரம்ஜான்" என்று போட்டார்கள். உண்மையில் ரமலான் மாதம் முடிந்துவிட்டது. "நாளை ஷவ்வால்" என்றுதான் போடவேண்டும். ரமலான் மாதத்தில் நோன்பு வைத்ததற்காகக் கொண்டாடப்படும் பெருநாள் என்பதால் மக்களின் புழக்கப்படி இவ்வாறு போட்டுள்ளார்கள். தவறில்லை.

விசேஷம் என்னவென்றால், காலண்டரில் குறித்தபடியே பெருநாள் அறிவிக்கப்பட்டதுதான். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் பத்தாம் தேதி பெருநாள் கொண்டாடப்பட்டது. இதர மாநிலங்களில் பதினோராம் தேதி கொண்டாடினார்கள். அதாவது, இஸ்லாமிய முறைப்படியான காலக்கணக்கு இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. அது ஒரு சீரான காலக்கணக்கு அல்ல. இதை ஒரு சிறப்பம்சமாகவே நான் காண்கிறேன். தமிழ்நாட்டில் ஷவ்வால்-1 , ஆனால் அதே நாள் கர்நாடகாவில் ரமலான்-30 . தமிழ்நாட்டில் ஷவ்வால்-2 , ஆனால் அதே நாள் கர்நாடகாவில் ஷவ்வால்-1 .
நாள்காட்டிகளோ தொலைபேசியோ கண்டறியப்படாத காலத்தில் எப்படி காலத்தைக் கணக்கிட்டிருப்பார்கள்? எப்படி மாதங்களை முடிவு செய்திருப்பார்கள்? இஸ்லாமிய காலண்டர் என்பது நிலாக்காலண்டர் lunar calendar . அந்த முறைப்படி பிறை பார்த்து மாதங்களைக் கணக்கிட்டால் அது சூரிய காலண்டர் போல் சீராக வராது. இஸ்லாமிய மாதங்களுக்கு இத்தனை நாட்கள் என்று நிலையான கணக்கு இல்லை. எனவே எந்த ஊரிலும் இஸ்லாமிய மாதங்களுக்கான காலண்டரை முன்கூட்டி அச்சடித்து வைப்பது சாத்தியமில்லை.

இவ்வாறு ஒவ்வொரு மாதமும் பிறை கணக்கிட்டு மாதங்களை அந்தந்தப் பகுதியில் கடைப்பிடித்து வந்தால் காலப்போக்கில் நான்கு ஐந்து நாட்கள்கூட வேறுபடுவதற்கு வாய்ப்பு உண்டு. எந்த ஊருக்கு இறைவன் எப்போது பிறையைக் காட்டுகிறானோ அப்போதுதான் அங்கே அடுத்த மாதத்தின் பிறப்பு. நபிகள் நாயகம் காலத்தில் அப்படித்தான் பின்பற்றப்பட்டது. பிறை பார்க்கும்படிதான்  அவர்களும் கற்றுத்தந்தார்கள்.

ஆனால் இன்று தூத்துக்குடியில் பிறை கண்டவுடன் சென்னைக்கு செல்போன் போட்டு அரசு காஜியிடம் கூறுகிறார்கள். உடனே அவர் தமிழ்நாட்டிற்கே ரமலான் முடிந்து விட்டது என்று அறிவித்துவிடுகிறார். அப்புறம் இறைவன் ஒவ்வொரு ஊருக்கும் பிறை காட்டுவதிற்கும், காட்டாமல் மறைப்பதற்கும் என்ன மரியாதை என்றே புரியவில்லை.

உண்மையில், ஊர் ஊருக்குப் பிறை பார்த்து மட்டுமே மாதங்களை முடிவு செய்தால் எப்படி இருக்கும்? காலப்போக்கில் இப்படி ஒரு நிலை உருவாகலாம். அதாவது, திருச்சியில் இன்று ஷவ்வால்-1 , கன்யாகுமரியில் ரமலான்-30 , மும்பையில் ஷவ்வால்-2 , ரியாதில் லைலதுல் கத்ரு, நியூ யார்க்கில் ரமலான்-28 , சென்னையில் ரமலான்-4 .... இது போன்ற ஒரு நிலைதான் இருக்கமுடியும். அபாடிப்பட்ட ஒரு நிலையின் வழியே காலத்தை அவதானிக்கும்போது காலம் என்பது திரவநிலையில் ததும்புவதாகக் காட்சி தருகிறது. உண்மையில், சூரியக் காலக் கணக்கு என்பது solid time என்றால் நிலாக் காலக் கணக்கு என்பது liquid time என்றுதான் சொல்ல வேண்டும்.


நபிகள் நாயகம் காலத்தில் இருந்து அப்படியொரு பாய்மக் காலத்தில்தான் (fluid time ) இஸ்லாமிய சமூகம் வாழ்ந்து வந்தது. (பழந்தமிழர்களின் காலக் கணக்கும் நிலாக் கணக்குதான். பின்பு ஜோஷியத்திற்கு வசதியாக நிலையான வடிவமுள்ள சாலிட் டைம் சூரியக்கணக்கு ஆரியப் புரோஹிதர்களால் கொண்டுவரப்பட்டது.) "சவூதிக்குப் போன் போட்டுக் கேட்போம். ஒரே நாளில் எல்லோரும் கொண்டாடுவோம். அதுதான் ஒற்றுமை" என்று பிதற்றுகின்ற மேதாவிகள் வந்தபிறகு இஸ்லாமியக் காலக் கணக்கு உறைந்துவிட்டது. அது தன் திரவ நிலையை - பாய்மத்தை ( fluidity ) இழந்துவிட்டது.

அந்திக்குப்பின் வானில் ஒரு மெல்லிய புன்னகையாகத் தோன்றிக் கண்முன் கரையும் பிறையில் காலத்தின் திரவச் சலனம் ஒரு நதிபோல் ஓடிக்கொண்டிருப்பதாகப் படுகிறது.

3 comments:

 1. ur thoughts inpires us. the ideas are highly interpretative. v congratulate u for further work. umar & taj

  ReplyDelete
 2. //சவூதிக்குப் போன் போட்டுக் கேட்போம். ஒரே நாளில் எல்லோரும் கொண்டாடுவோம். அதுதான் ஒற்றுமை" என்று பிதற்றுகின்ற மேதாவிகள் வந்தபிறகு இஸ்லாமியக் காலக் கணக்கு உறைந்துவிட்டது. அது தன் திரவ நிலையை - பாய்மத்தை ( fluidity ) இழந்துவிட்டது. //

  Superb!

  ReplyDelete
 3. //எந்த ஊருக்கு இறைவன் எப்போது பிறையைக் காட்டுகிறானோ அப்போதுதான் அங்கே அடுத்த மாதத்தின் பிறப்பு.///

  உலகம் பூராவும் ஜி.எஸ்டி + என்றெல்லவா ஆகிவிட்டது?

  ReplyDelete