Sunday, June 29, 2025

உகூஃபே அததி (ஓதுவதில் எண்ணிக்கையைப் பேணுதல்)

 


இறைவனை நினைவு கூர்வதற்கு ஓர் எல்லை இல்லை. ‘இறை விசுவாசியரே! அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள்’ என்றே திருமறை சொல்கிறது. எனினும், தஸ்பீஹ் (இறை நாமம் அல்லது இறை வாசகம் ஓதுதல், ஜபம்) அல்லது ஔராது (அன்றாட ஓதுதல்) என்னும் முறைகளுக்கு எண்ணிக்கை குறிப்பிட்டுப் பேணப்படுகிறது.

எண்ணிக்கை வைத்து ஓதுதல் நபிவழியில் உள்ளதாகும். இதற்கு ஹதீஸில் பல உதாரணங்கள் உள்ளன.

தனக்கு ஒரு பணிப்பெண் வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களிடம் அன்னாரின் அருமை மகளார் ஃபாத்திமா (ரலி) கேட்டபோது, ஒருவருக்கு ஓர் உதவியாளர் இருப்பதை விட மேலான ஒன்றை அறிவித்துத் தருவதாகச் சொல்லி, நபி (ஸல்) தஸ்பீஹ் ஒன்றை ஓதக் கற்றுத் தந்தார்கள். அதாவது, உறங்கச் செல்லும்போது சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, மற்றும் அல்லாஹு அக்பர் 34 தடவைகள் ஓத வேண்டும் (ஸஹீஹ் முஸ்லிம் #2728)

நபி (ஸல்) சொன்னார்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! தினமும் நான் அல்லாஹ்விடம் இஸ்திக்ஃபார் (மன்னிப்பு) தேடுகிறேன், எழுபது முறைக்கும் மேல் அவனிடம் திரும்புகிறேன்.” (ஸஹீஹுல் புகாரி #1870 & 6307)

நபி (ஸல்) சொன்னார்கள், “சில நேரங்களில் நான் என் உள்ளத்தின் மீது திரை ஒன்றைக் காண்கிறேன். எனவே அல்லாஹ்விடம் நான் ஒரு நாளைக்கு நூறு தடவை மன்னிப்புக் கோருகிறேன்.” (ஸஹீஹ் முஸ்லிம் #2702)

இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் ஒரே அமர்வில், எழுவதற்கு முன், ‘என் ரட்சகனே! என்னை மன்னிப்பாயாக, என் திரும்புதலை ஏற்பாயாக. நிச்சயமாக, நீயே தவ்வாபுர் கஃபூர் (திரும்புவோனும் மன்னிப்போனும்)’ என்று நூறு முறை ஓதினார்கள்.” (சுனன் திர்மிதி #3434)

ஒரே ஓதலுக்கு 70 என்றும் 100 என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதை வைத்துக் குழம்ப வேண்டியதில்லை. சூழ்நிலை மற்றும் தருணங்களுக்கு ஏற்ப எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம் என்பதை இது காட்டுவதாக மார்க்க அறிஞர்கள் கருதுகின்றனர். அதிகப்படுத்திக் கொள்வது சிறந்ததுதான். ஏனெனில், இறைவனை அதிகமாக நினைவு கூர்தலே குர்’ஆனில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தஸ்பீஹ், தஹ்லீல், தக்தீஸ் ஆகியவற்றை ஓதுவதற்கு விரல்களைப் பயன்படுத்துமாறும், அவை அல்லாஹ்விடம் சாட்சி பகரும் என்றும் நபி (ஸல்) அறிவுறுத்தியதாக ஹதீஸ் கூறுகிறது (சுனன் திர்மிதி #3583).

இவற்றின் எண்ணிக்கை சிறிய அளவாக இருப்பதால் விரல்களில் கணக்கு வைப்பது எளிது. கணக்குத் தப்பாது. 33-33-34 என்ற கணக்கில் ஓதுவதற்கு விரல்களைப் பயன்படுத்துமாறு நபி (ஸல்) சொல்லியிருப்பதால் குறைந்த எண்ணிக்கையிலான இந்த திக்ரு மற்றும் ஏனைய திக்ருகளை ஓதுவதற்கு விரல்களைப் பயன்படுத்துவதே சிறந்ததும் நபிவழியும் ஆகும்.

ஆனால், அதிக எண்ணிக்கையில், ஆயிரம் இரண்டாயிரம் என்று ஓதுவதற்கு விரல்களைப் பயன்படுத்தும் போது கணக்கு வைப்பது எளிதன்று. கணக்குத் தவறிப் போவதற்கான வாய்ப்புதான் அதிகம். எனவே, ஔராதுகளை ஓத மணிமாலை பயன்படுத்தப்படுகிறது. நவீனக் கருவிகளாக ‘டிஜிட்டல் கவுண்டர்’ போன்றவையும் வந்துவிட்டன. அவற்றைப் பயன்படுத்துவதும் சரிதான்.

பேரீத்தம் கொட்டைகளை வைத்து எண்ணியபடி தஸ்பீஹ் செய்த ஒரு பெண்மணியை நபி (ஸல்)அ வர்கள் சந்தித்தார்கள் என்று சய்யிதுனா சஃ’து இப்னு அபீ வக்காஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் (சுனன் திர்மிதி #3568, ஸஹீஹ் இப்னு ஹிப்பான் #837, முஸ்தத்ரக் ஹாகிம் பாகம்-1). நபி (ஸல்) அந்த தஸ்பீஹ் எண்ணும் முறைக்கு மறுப்புக் கூறவில்லை. எனவே, பேரெண்ணிக்கையில் தஸ்பீஹ் செய்ய அதற்குத் தோதான கருவியைப் பயன்படுத்துவது நபி (ஸல்) அவர்களின் ஏற்பைப் பெற்றுள்ள ஒன்றுதான். அந்த அடிப்படையில் கருவியைப் பயன்படுத்துவதும் நபிவழியே என்றாகிறது.

அபூ தர்தா (ரலி) அவர்கள் ஒரு பையில் பேரீத்தம் கொட்டைகளை வைத்திருந்தார்கள். வைகறைத் தொழுகைக்குப் பின்னர் அவற்றைக் கொண்டு தஸ்பீஹ் செய்தார்கள் என்று அல்-காசிம் இப்னு அப்துர் ரஹ்மான் அரிவிக்கிறார்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடமும் கூழாங்கற்கள் அல்லது பேரீத்தம் கொட்டைகள் நிரப்பப்பட்ட பை ஒன்று இருந்ததாகவும் அதனைக் கொண்டு அவர்கள் தஸ்பீஹ் செய்தார்கள் என்றும் அபூ நத்ரா அல்-கஃப்பாரி சொல்கிறார்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் ஒரு கயிறு இருந்தது, அதில் ஆயிரம் முடிச்சுகள் போடப்பட்டிருந்தன. அதை வைத்து அவர்கள் தஸ்பீஹ் செய்யாமல் உறங்கப் போக மாட்டார்கள் என்று நயீம் இப்னு முஹர்ரர் இப்னு அபீ ஹுரைரா அறிவிக்கிறார். இச்செய்தியை சயீது இப்னு அபூ வக்காஸ், அபூ சயீதுல் குத்ரி, நபி (ஸல்) அவர்களின் பணிப்பெண்ணான அபூ சஃபிய்யா, ஹுசைன் (ரலி) அவர்களின் மகளாரான சய்யிதா ஃபாத்திமா ஆகியோரும் அறிவிக்கின்றனர்.

இவற்றின் வழியாக, அதிகமான எண்ணிக்கையில் ஓதுவதற்கு அதற்குத் தோதான கருவியைப் பயன்படுத்துவதும் நபியால் ஏற்கப்பட்டது என்ற அடிப்படையில் நபிவழியே என்று உறுதிப்படுகிறது. இதில் சர்ச்சைகளும் விவாதங்களும் பயன் தரப் போவதில்லை. மனதிற்குள்ளேயே ஓதுகின்ற ஒரு தஸ்பீஹும்கூட வீணாகிவிடாது. அல்லாஹ் அதை அறிவான், அதற்கான நற்கூலி அருள்வான். அப்படி இருக்க, மணிமாலை, அல்லது கவ்ண்ட்டர் கருவி வைத்து ஓதினால் அது வீணாகிவிடும் என்று நினைக்க முகாந்திரம் இல்லை. விரலில் ஒரே இடத்தில் எத்தனை முறை அழுத்தினாலும் அதற்கான சாட்சியையும் விரல் கூறத்தானே செய்யும்? அதன்படி, தஸ்பீஹ் மணியை விரல்தானே நகர்த்துகிறது, இத்தனை முறை ஓதினார் என்று அது சாட்சி சொல்லுமே! இந்தத் தெளிவுடன் அதிகமாக ஓதுவதில் ஈடுபடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!

உகூஃபே அததி என்னும் கோட்பாடு குறித்து மேலும் சில விளக்கங்களைக் காண்போம்.

            எண்ணிக்கை பேணி ஓதுவது என்பது ஆரம்ப நிலைச் சாதகருக்கு மன ஓர்மையையும், கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும் (தர்தீப்) உண்டாக்க உதவுகிறது. 

            பல காலம் ஆன்மிகப் பாதையில் பயணித்துப் பக்குவம் அடைந்த மூத்தோரும்கூட எண்ணிக்கை வைத்து ஓதுதலைப் பேணுகின்றனர். எண்ணிக்கை வைத்து ஓதுவதில் அகமிய ஞானம் இருக்கிறது என்று அவர்கள் உணர்ந்துள்ளனர். உதாரணமாக, ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன் சொல்கிறார்:

            ”ஆரம்பக் கட்டங்களில் அகத் தூண்டலும் உள்ளுணர்வும் ஏற்பட உதவுகின்ற இந்த முறைமை முன்னேற்றம் அடைந்த சீடர்களுக்கு ’பன்மியத்தில் ஒருமை’ (வஹ்தத் தர் கஸ்ரத்) என்பதன் பிரக்ஞையை உண்டாக்குகிறது.

இந்தப் பன்மியமும் பெருக்கமும் தோற்ற மயக்கமே!

அனைத்திலும் அந்த ஏகனே வெளியாகியுள்ளான்.

அகப் பார்வையால் நோக்கும்போது பன்மியம் என்பது ஒருமையே அன்றி வேறன்று. சிலருக்கு இதில் சந்தேகம் இருக்கலாம். எமக்கு ஐயமில்லை. தோற்றம் பல எண்ணிக்கைகள் காட்டினும் உள்ளமை ஒன்றே.”

உருது மகாகவி அல்லாமா இக்பால் (ரஹ்) அவர்கள் “ஜுக்னூ” (மின்மினி) என்னும் கவிதையில் சொல்கிறார்கள்:

(கஸ்ரத் மேன் ஹோ கயா ஹே வஹ்தத் கா ராஸ் மஃக்ஃபி

ஜுக்னூ மேன் ஜோ ச்சமக் ஹே ஒ பூல் மேன் மெஹக் ஹே)

“பன்மையில் ஒருமையின் ரகசியம் மறைந்துள்ளது

மின்மினியில் ஒளியாக இருப்பதே பூவில் நறுமணமாக உள்ளது”

எண்ணிக்கை வைத்து ஓதுவதன் ஆற்றலை குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். “திக்ரில் எண்ணிக்கை பேணுவது என்பது தெய்வீக அறிவை (இல்முல் லதுன்னி) அடைவதற்கான முதல் படியாகும்” என்று ஃகாஜா பஹாவுத்தீன் ஷாஹ் நக்‌ஷ்பந்த் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள். மேலும், “திக்ரில் மீண்டும் மீண்டும் ஓதுவதில் எண்ணிக்கையைப் பேணுதல் என்பது எண்ணங்கள் சிதறிப் போகாமல் ஒன்று திரட்டப்பட உதவுகிறது” என்றும் கூறியுள்ளார்கள்.

            உகூஃபே அததி என்பது திக்ரில் ஓதப்படும் எண்ணிக்கையைப் பேணுவதாகும், அப்படிச் செய்வது பயன் தந்தாலும் தராவிட்டாலும்” என்று மவ்லானா நூருத்தீன் அப்துர் ரஹ்மான் ஜாமி (ரஹ்) அவர்கள் இதனை வலியுறுத்துகிறார்கள். ஒருவருக்கு அவரின் குருநாதர் எவ்வளவு எண்ணிக்கை குறித்துள்ளாரோ அந்த எல்லையை மீறாமல் அவர் நியமமாக ஓதி வருவது சீடரின் மீது கடமையாகும். தானாக அவர் அந்த எண்ணிக்கையை மாற்றக் கூடாது. குருவிடம் தன் நிலையை அவர் தெரிவிக்கலாம். ஆனால் எண்ணிக்கை நிர்ணயிக்கும் உரிமை குருவுக்கே உண்டு. சீடருக்கு எது நல்லது என்பது குருவுக்கே தெரியும்.

            ”எவ்வளவு முறை திரும்பத் திரும்ப ஓதுகிறோம் என்பது முக்கியமன்று. ஆனால், அவற்றை எவ்வளவு விழிப்புடனும் அமைதியுடனும் ஓதுகிறோம் என்பதுதான் முக்கியமானது” என்று ஃகாஜா அலாவுத்தீன் அல்-அத்தார் (ரஹ்) சொல்கிறார்.

            ஆரம்ப நிலைச் சாதகர்களுக்கு தரீக்காவின் ஷைஃகுமார் எண்ணிக்கை குறிப்பிட்டு ஓதச் சொல்வதில் உளவியல் ரீதியான காரணங்களும் உள்ளன. தொடக்கத்திலேயே அதிகமாக ஒருவர் ஓத ஆரம்பித்தால் அதன் தாக்கத்தைத் தாங்காமல் மனம் பேதலித்து விடுகின்ற அபாயம் இருக்கிறது. அப்படி அதீதமாக ஓதுதலில் ஈடுபட்டதால் சிலருக்கு சித்தம் கலங்கிப் போன நிகழ்வுகளும் உண்டு. எனவே, எண்ணிக்கை வரம்பு என்பது ஆரம்ப நிலைச் சாதகருக்கு மிகவும் தேவையான கடிவாளம் ஆகிறது.

            ”திக்ரு என்பது அதன் அளவு மற்றும் தரம் (quantity and quality) ஆகிய இரண்டு அம்சங்களிலும் பேணபப்ட வேண்டும். இவ்விரண்டில் திக்ரின் தரம்தான் அதிக முக்கியத்துவம் உடையது என்பதில் ஐயமில்லை. எனவே, கொடுக்கப்பட்ட எண்ணிக்கை வரம்புக்குள்ளேயே இதயத்தில் திக்ரின் தரத்தை ஆழப்படுத்த வேண்டும். இவ்வகையில், எண்ணிக்கை வரம்பு என்பது திக்ரின் தரத்தை அடைவதற்கு உறுதுணையாகவே இருக்கிறது” என்கிறார் உஸ்மான் நூரீ தோப்பாஷ்.

            எண்ணிக்கை என்பது இறைப் பேரறிவில் உள்ளதாகும். அதனைப் பேணுவதில் நிச்சயமாக அர்த்தமுள்ளது.

உகூஃபே ஜமானி (நேரத்தைப் பேணுதல்)

 


கால நிர்வாகம் (time management) என்பது ஆன்மிகத்தில் மிக முக்கியமானது. தனக்குக் கிடைக்கும் கால அவகாசங்களை வீணாக்கும் எவரும் ஆன்மிகத்தில் முன்னேற்றம் அடைய முடியாது.

            படைப்புக்களை அடைவதற்கே காலம் கருதிச் செயல்பட வேண்டியது அவசியம் ஆகிறது. எனில், படைத்தவனை அடைய காலம் பேணுதல் எவ்வளவு அவசியம் என்று சொல்லத் தேவையில்லை.

காலத்தின் மீதாணை!

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்” (103:1-2)

என்கிறது குர்’ஆன். மனிதன் நட்டமடைவதில் கால விரயம் முக்கியமான ஒரு காரணம் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. எவர் இறை நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்து, சத்தியத்தையே பேசி, பொறுமையுடன் இருந்தாரோ அவரைத் தவிர என்றும் இந்த அத்தியாயம் சொல்கிறது. எனவே, இந்த அம்சங்களைப் பேணுவதால் காலம் விரயமாகாமல், நாம் நட்டமடையாமல் தப்பலாம் என்று புரிகிறது.

            ”ஐந்துக்கு முன்னர் ஐந்தை ஆதாயம் கொள்க” (இக்தனிம் ஃகம்சன் கப்ல ஃகம்சின்) என்று கூறி நபி (ஸல்) இவற்றைச் சுட்டிக் காட்டினார்கள்:

1.      உன் முதுமைக்கு முன் உன் இளமை (ஷபாபக்க கப்ல ஹரமிக்க).

2.      உன் நோய்க்கு முன் உன் ஆரோக்கியம் (வ சிஹ்ஹத்திக்க கப்ல சகமிக்க)

3.      உன் வறுமைக்கு முன் உன் செல்வம் (வ கினாக்க கப்ல ஃபக்ரிக்க)

4.      உன் வேலைக்கு முன் உன் அவகாசம் (வ ஃபராகக்க கப்ல ஷுகுலிக்க)

5.      உன் மரணத்திற்கு முன் உன் வாழ்க்கை  (வ ஹயாத்தக்க கப்ல மவ்த்திக்க)

இவ்வைந்துள் மூன்று விடயங்கள் காலம் தொடர்பானவையாக உள்ளன. முதுமை இளமை என்று வயது சார்ந்த நிலைகளும் காலத்தால் உண்டாகின்றன. மரணம் வாழ்க்கை என்பவையும் காலத்த்தைக் கொண்டு நிர்ணயம் ஆகின்றன. ஆழ்ந்து சிந்தித்தால் இவ்வைந்துமே காலம் தொடர்பான விடயங்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

ஆன்மிக நெறியில் ஈடுபடுவதற்கு மேற்சொன்ன வழிகாட்டுதலைப் பொருத்திப் பார்க்கும்போது,

1.      இளம் வயதிலேயே ஆன்மிக நெறியில் இணைந்துவிட வேண்டும்,

2.      உலகியல் தேவைக்கான நேரம் போக கிடைக்கும் அவகாசத்தை ஆன்மிகப் பயிற்சிகளுக்குப் பயன்படுத்த வேண்டும்,

என்று நாம் விளங்கிக் கொள்ளலாம்.


            உகூஃப் ஜமானி என்னும் இந்தக் கோட்பாடு இரண்டு விடயங்களை கவனித்துச் செயல்படுத்தப் படுகிறது:

1.      ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நம் மனநிலை (ஹால்) என்ன?

2.      அந்த மனநிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன?

இந்தக் கோணத்தில் இறைஞானியர் பல்வேறு விளக்கங்களைத் தருகின்றனர்.

“நீ உன்னைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும். நீ ஷரீஅத்தைப் பின்பற்றுவதாக உன்னைக் கண்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்து. இல்லை எனில் அவனிடம் பாவ மன்னிப்புத் தேடு” என்று ஃகாஜா பஹாவுத்தீன் ஷாஹ் நக்ஷ்பந்த் (ரஹ்) சொல்கிறார்கள்.

ஆன்மிகத்தில் ஈடுபடும் அடியானின் இதயம் இரண்டு நிலைகளில் இருக்கும். கப்ளு என்னும் சுருங்கிய நிலை / ஒடுக்க நிலை, மற்றும் பஸ்த் என்னும் விரிவடைந்த நிலை. முன்னதில் மனச் சோர்வு / மனம் உடைதல் / மனத் தளர்ச்சி இருக்கும். பின்னதில் பரவசம், களிப்பு, மகிழ்ச்சி ஆகியவை இருக்கும். கப்ளு என்னும் நிலை ”அல்-காபிள்” என்னும் அல்லாஹ்வின் திருநாமத்தால் உண்டாகிறது. பஸ்த் என்னும் நிலை “அல்-பாஸித்” என்னும் திருநாமத்தால் உண்டாகிறது.

அல்லாஹ்தான் ஒடுக்குகிறான், விரிவாக்குகிறான்” (2:245)

            இந்த இரண்டு நிலைகளும் சாலிக் (சாதகர்) மீது மாறி மாறி உண்டாகிறது. அல்லாஹ்வின் ஜலாலிய்யத் என்னும் வல்லமையும் கஹ்ரு என்னும் சினமும் வெளியாகும்போது அடியானில் கப்ளு என்னும் நிலை உண்டாகிறது. அல்லாஹ்வின் ஜமாலிய்யத் என்னும் அழகும் லுத்ஃபு என்னும் வாஞ்சையும் வெளியாகும்போது அடியானில் பஸ்த் என்னும் நிலை உண்டாகிறது.

            கப்ளு என்னும் நிலையில் ஃகவ்ஃப் (அச்சம்) என்னும் உணர்ச்சி இருக்கிறது. பஸ்த் என்னும் நிலையில் ரஜா (ஆதரவு) என்னும் உணர்ச்சி இருக்கிறது. இறை நம்பிக்கை (ஈமான்) என்பது இறைவன் மீதான அச்சத்துக்கும் ஆதரவுக்கும் இடையில் (பைனல் ஃகவ்ஃப் வர்-ரஜா) இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

“ஃகவ்ஃப் மற்றும் ரஜா ஆகிய இரண்டும் சமமாக இருக்க வேண்டும். ஃகவ்ஃப் மிகைத்திருக்க்கக் கூடாது. அதேபோல் ரஜா’வும் மிகைத்திருக்கக் கூடாது” என்று இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) சொல்கிறார்கள். இது ”இஃ’திதால்” (ஆன்மிகச் சமநிலை, spritual equilibrium) என்னும் நிலையாகும்.

            கப்ளு என்னும் நிலையில் நீ அதிகமாக இஸ்திக்ஃபார் (பாவ மன்னிப்பு) தேட வேண்டும், பஸ்த் என்னும் நிலையில் நீ அதிகமாக அல்லாஹ்வைப் புகழ வேண்டும். கப்ளு மற்றும் பஸ்த் என்னும் இந்த இரண்டு நிலைகளையும் கவனத்தில் எடுப்பதே உகூஃபே ஜமானி என்பதாகும்” என்று தன் ஷைஃகு அலாவுத்தீன் அல்-அத்தார் (ரஹ்) சொன்னதாக யாகூப் சர்க்கி (ரஹ்) அறிவிக்கிறார்கள்.

            ”அடியான் தன் கால அவகாசங்களை முழுமையாக அல்லாஹ்வை நெருங்கும் முயற்சிகளுக்குப் பயன்படுத்த வேண்டும். அல்லாஹ் தனது செயல்களை எல்லாம் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து மிகச் சிறிய விவரத்தில் கூட கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் இரவில் அடியான் தன் எண்ணங்களையும் செயல்களையும் கணக்கெடுத்து ஒவ்வொரு மணிநேரம், நிமிடம், நொடி என்று அலசிப் பார்த்து எடை போட வேண்டும். அவை நன்மையாக இருந்தால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும். அவற்றில் பிழைகளும் குற்றங்களும் இருந்தால் பாவ மன்னிப்புத் தேட வேண்டும்” என்கிறார் ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன். நக்‌ஷ்பந்திய்யா நெறியில் இதனை உகூஃபே ஜமானி என்று சொல்கிறார்கள். பொதுவாக ஸூஃபிகள் இதனை முஹாசபா என்னும் சொல்லால் குறிக்கிறார்கள்.

            படைப்புகள் பல, படைத்தவன் ஒன்று (ஃகல்க் கஸீர், ஃகாலிக் வாஹித்). எனவே, இதயம் படைப்புக்களின் பக்கம் திரும்பும்போது கவனச் சிதறல் ஏற்படுகிறது. இதயம் படைத்தவனின் பக்கம் திரும்பும்போது கவனம் திரண்டு குவிகிறது. ஆன்மிகச் சாதகர் ஒவ்வொரு நொடியும் தன் மனத்தைச் சிதறவிடாமல் இறை நினைவில் திரட்ட வேண்டும். இந்தக் கருத்தில் மவ்லானா அப்துர் ரஹ்மான் ஜாமி (ரஹ்) அவர்கள் ‘ரிசாலாயே நூரிய்யா’ என்னும் நூலில் சொல்கிறார்கள்: “உகூஃபே ஜமானி என்பது ஒருவர் தன் நேரத்தை சிதறலில் (தஃப்ரீக்கா) செலவிடுகிறாரா, ஒருங்கிணைவில் (ஜம்’இய்யத்) கழிக்கிறாரா என்று கணக்கு வைப்பதாகும்.”

            இதையே வேறு ஒரு கோணத்தில், “உகூஃபே ஜமானி என்பது ஒருவர் தன் நேரத்தை மறதியில் (கஃப்லத்) கழிக்கிறாரா, இறை பிரசன்னத்தில் (ஹுளூர்) கழிக்கிறாரா என்று கணக்கு சோதனை செய்வதாகும்” என்கிறார் உஸ்மான் நூரீ தோப்பாஷ்.


            
”ஸூஃபி என்பவர் கணத்தின் குழந்தை ஆவார்” (அஸ்ஸூஃபி இப்னுல் வக்த்) என்று பிரபலமான சொலவம் ஒன்றுண்டு. இதன் பொருள் அவரின் ஒவ்வொரு கணமும் இறை நினைவில் செலவழிகிறது என்பதுதான். அதாவது, உகூஃபே ஜமானி என்பதைப் பேணுபவரே ஸூஃபி ஆவார்.

            ஒவ்வொரு நொடியும் சாதகருக்கு மிக முக்கியமானதாகும். சிறிய அவகாசத்தைக் கூட அலட்சியமாகக் கழித்துவிடக் கூடாது. ஒரு நொடி அலட்சியம் மிகப் பெரிய நஷ்டத்தைக் கொண்டு வந்துவிடலாம். அதேபோல், ஒரு நொடி கவனிப்பும்கூட மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வந்துவிடலாம், இன் ஷா அல்லாஹ்.

யாத் தாஷ்த் (இறைவனின் நினைவில் மனம் குவிதல்)

 


நக்‌ஷ்பந்திய்யா நெறியின் எட்டாம் கோட்பாடான யாத் தாஷ்த் என்பது ஏழாவது கோட்பாடான நிகாஹ் தாஷ்த் என்பதன் தொடர்ச்சியே ஆகும்.

            யாத் என்றால் நினைவு என்று முன்பே கண்டோம். யாத் தாஷ்த் என்பது அல்லாஹ்வின் உடனிருத்தலை உணர்வதில் நிலைத்திருப்பதாகும்.

நீங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான்” (57:4)

என்று குர்’ஆன் அறிவிக்கிறது. அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்னும் உணர்வையே தவ்ர் குகையில் இருந்தபோது நபி (ஸல்) தன் அணுக்கத் தோழரும் பிரதான கலீஃபாவுமான சய்யிதுனா அபூபக்ரு (ரலி) அவர்களுக்கு போதித்தார்கள்:

“கவலைப் படாதீர், நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்” (9:40)

            இந்தப் பிரக்ஞை நிலையே, அதாவது இறைவனின் உடனிருத்தல் பற்றிய உணர்வே இறை நம்பிக்கையில் மிகவும் சிறந்த நிலை என்று நபி (ஸல்) சொல்கிறார்கள்:

إِنَّ أَفْضَلَ الْإِيمَانِ أَنْ تَعْلَمَ أَنَّ اللَّهَ مَعَكَ حَيْثُ مَا كُنْتُ

“நிச்சயமாக இறை நம்பிக்கையில் சிறந்தது நீ அங்கே இருந்தாலும் அல்லாஹ் உன்னுடன் இருக்கிறான் என்பதை நீ அறிவதாகும்.” (தப்ரானீ #8791)


            
அல்லாஹ் நம்முடன் இருத்தலை இறைஞானியர் பல்வேறு கோணங்களில் அவதானித்து வகைப்படுத்தித் தந்திருக்கின்றனர். ஸூஃபி ஞானி மவ்லவி ஷைஃகு அப்துல் காதிர் மன்ப’ஈ (எ) இர்ஃபானீ ஷாஹ் நூரி (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்கள் எழுதுகிறார்கள்:

            ”அல்லாஹ் நம்முடன் இருக்கிறான். இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. இவ்விஷயத்தை குர்’ஆனும், ஹதீஸும் பல்வேறு விதங்களில் பல்வேறு கோணங்களில் வலியுறுத்திக் கூறியுள்ளது. உதாரணமாக சில:-

1.      ம’இய்யத் (உடன் இருக்குதல்)

2.      குர்பத் (சமீபமாக இருக்குதல்)

3.      அக்ரபிய்யத் (மிக நெருக்கமாக இருக்குதல்)

4.      இஹாதத் (சூழ்ந்து இருக்குதல்)

5.      ஷஹாதத் (பிரசன்னமாக இருக்குதல்)

6.      சம்மியத் (நீக்கமற நிறைந்து இருக்குதல்)

7.      ஹக்கியத் (சத்தியமாக, அசல் மூலமாக இருத்தல்)

8.      அவ்வலியத் (ஆரம்பமாக இருத்தல்)

9.      ஆகிரியத் (முடிவாக இருத்தல்)

10.   லாஹிரியத் (வெளிரங்கமாக இருத்தல்)

11.   பாதினியத் (உள்ரங்கமாக இருத்தல்)

12.   உஸ்’அத் (விசாலமாக இருத்தல்)

13.   நூரியத் (பிரகாசமாக இருத்தல்)

14.   பாக்கியத் (தரிபாடாக இருத்தல்)

15.   ஹகீகதே முஹம்மதீ (நபி (ஸல்)யின் நூராக இருத்தல்)

16.   அய்னியத் (அவன் தானே வெளியாகி இருக்குதல்)”

இவை ஒவ்வொன்றுக்கும் குர்’ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்கள் உள்ளன. அவற்றை விளக்கமாக அறிய விரும்புவோர் இர்ஃபானீ ஷாஹ் நூரி (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்கள் எழுதிய “குர்’ஆன் ஹதீஸ் ஒளியில் அல்லாஹ் நம்முடன்” என்னும் நூலினை வாசிக்கலாம்.

“அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்று குர்’ஆன் அறிவித்துவிட்டது. எனவே அதை அறிய குர்’ஆனை ஒருவர் வாசிப்பதே போதுமானது. ஆனால், அவன் எவ்வாறு நம்முடன் இருக்கிறான் என்பதை அறிய தரீக்கத் என்னும் ஞான நெறி அவசியமாகிறது, குருநாதரின் சகவாசமும் வழிகாட்டலும் அவசியமாகிறது” என்று ஸூஃபிகள் சொல்கின்றனர்.

அல்லாஹ்வின் உடனிருத்தல் பற்றிய பிரக்ஞை இடையறாமல் தொடர்கின்ற, காயிம் தாயிம் ஆகிவிட்ட நிலையே  யாத் தாஷ்த் என்று சுட்டப்படுகிறது. இதனால்தான், “யாத் தாஷ்த் என்பது மாட்சிமை மிக்க அல்-ஹக்கு (சத்திய இறைவன்) மீதான பிரக்ஞை நிலைத்திருப்பதற்குச் சொல்லப்படும். அதாவது, அந்த உணர்வு மறையாமல் இருப்பதாகும்” என்று உபைதுல்லாஹ் அஹ்ரார் அவர்கள் சொல்கிறார்.

நக்‌ஷ்பந்திய்யா நெறியின் ஞானியர் இந்த யாத் தாஷ்த் என்பதை இஹ்சான் என்னும் நிலையுடன் அடையாளம் கண்டுள்ளனர். அதனை விளங்க இஹ்சான் என்றால் என்ன என்று அறிவது அவசியமாகும்.

            ஹதீஸே ஜிப்ரீல் என்னும் பிரபலமானதும் முக்கியமானதுமான நபிமொழியில், இஸ்லாம், ஈமான், மற்றும் இஹ்சான் ஆகிய மூன்று மார்க்க நிலைகள் – தீனின் மூன்று அம்சங்கள் – பற்றி வானவர் கோன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வினவ, அவற்றுக்கான வரையறைகளை நபி (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார்கள். அதில், இஹ்சான் என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் சொன்னதாவது:

‏ أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ

”அல்லாஹ்வை நீ பார்ப்பது போல் வணங்க வேண்டும், அவனை நீ பார்க்க முடியாவிட்டால் நிச்சயமாக அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் (என்னும் உணர்வுடன் வணங்க வேண்டும்)” (ஸஹீஹுல் புஃகாரி #50; ஸஹீஹ் முஸ்லிம் #8)

            இந்த ஹதீஸை இறைநேசர்கள் ஸூஃபித்துவம் என்பதன் அடித்தளம் (பினாயே தஸவ்வுஃப்) என்று கூறியுள்ளனர். எனவேதான் ஸூஃபித்துவம் என்பது இல்முல் இஹ்சான் (இஹ்சான் பற்றிய அறிவுத் துறை) என்று சொல்லப்படுகிறது.

இந்த ஹதீஸ் இரண்டு அகநிலைகளைக் குறிப்பிடுகிறது:

1.      முஷாஹதா : அல்லாஹ்வை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு.

2.      முராக்கபா : அல்லாஹ் தன்னைப் பார்க்கிறான் என்னும் உணர்வு.

யாத் தாஷ்த் என்பதை சிலர் முஷாஹதா என்னும் நிலையுடனும், சிலர் முராக்கபா என்னும் நிலையுடனும் அடையாளம் கண்டு விளக்கியுள்ளனர்.

உதாரணமாக, உஸ்மான் நூரீ தோப்பாஷ் அவர்கள் இதனை முராக்கபா என்னும் கோணத்தில் இப்படி விளக்குகிறார்:

”யாத் தாஷ்த் என்பது எல்லாம் வல்ல இறைவனின் பிரசன்னத்தில் நிலைத்திருப்பது பற்றிய பிரக்ஞையை அடைவதும் அந்த விழிப்புணர்வுடன் செயல்படுவதுமாகும். இதனை முராக்கபா என்றும் சொல்வர். அல்லாஹ் தன் திருவசனம் ஒன்றில் அறிவிக்கிறான்: ‘யாமே மனிதனைப் படைத்தோம், அவனின் மனம் அவனிடம் என்ன ஊசாடுகிறது என்பதையும் யாம் அறிவோம். அவனின் பிடரி நரம்பை விடவும் அவனிடம் யாம் நெருங்கியுள்ளோம்’ (50:16). எனவே, ஈமானின் அகமியமான இஹ்சான் என்னும் உணர்வை ஒருபோதும் இழந்துவிடாமல் இருப்பது அவசியமாகும். அதாவது ஒவ்வொரு கணமும் அல்லாஹ் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான், தன் மனத்தின் நிலையை அறிகிறான் என்னும் பிரக்ஞை இருக்க வேண்டும். இந்த உணர்வு பாவங்களுக்கு எதிரான பாதுகாப்புக் கவசம் ஆகும். ஏனெனில், ஒருவரின் இதயம் எப்போதும் தன் ரட்சகனுடன் இருக்கும்போது, தான் இறை பிரசன்னத்தை விட்டு நீங்காமல் இருப்பதை உணர்வும்போது அவர் எப்படிப் பாவம் செய்ய முடியும்?”

 வேறு சிலர் யாத் தாஷ்த் என்பதை முஷாஹதா (அகக் கண்ணால் அல்லாஹ்வை தரிசித்தல்) என்னும் நிலையுடன் அடையாளப்படுத்தி விளக்குகின்றனர். உதாரணமாக, ரஷாஹத் ஐனுல் ஹயாத் என்னும் நூலில் எழுதப்பட்டுள்ளது: “யாத் தாஷ்த் என்பது சாட்சி காணுதல் (ஷுஹூது) ஆகும். அதாவது அவசியமான காதலின் (வாஜிபுல் இஷ்க்) [அதாவது, இறைக்காதலின்] காரணத்தால் இதயத்தில் சாட்சிநிலை (ஷுஹூது) மிகைத்திருப்பதாகும்.”

இந்த இறைக்காதல் ஒருவரின் இதயத்தில் உண்டாகித் தரிப்பட்டுவிட்டால் அப்புறம் அவர் உலகில் எப்பணியில் இருந்தாலும் இந்த பிரக்ஞை நிலை மாறாமல் இருக்கும். ஒருவரின் ’ஆன்மிக மாற்றம்’ முழுமை அடைவதற்கு முன் உள்ள கட்டங்களில் இதுவே கடைசிக் கட்டமாகும். இறைக்காதல் என்பது சாதகர் தன் ’அனா’ என்னும் ஆணவத்தை, தன்முனைப்பை இழந்ததற்காக வழங்கப்படும் சன்மானமாகும். ”இந்நிலை எட்டப்படும்போது சாதகர் தன் சுயத்தை இழந்ததை கவனிக்காத வண்ணம் அவரின் மீது ஹக்கின் புறத்தில் இருந்து ஆனந்த நிலை உண்டாகிவிடுகிறது” என்கிறார் டெரென்ஸ் நூனிஸ்.

ஒருவர் உலகியல் பணிகளில் ஈடுபட்டிருக்கும்போதும் உள்ளம் இறை நினைவில் மூழ்கி லயித்திருக்க்கும் நிலையைக் குறிப்பிட நக்‌ஷ்பந்திய்யா நெறியில் ஒரு சொலவம் உண்டு:

தஸ்த் ப-கார் தில் ப-யார்

(கைகள் வேலையில் ஈடுபட்டுள்ளன; இதயம் இறைவனிடம் இருக்கிறது)

”இது நக்‌ஷ்பந்திய்யா நெறியின் அடையாளம் ஆகும். இந்தப் பயிற்சியால்தான் சாதகன் (சாலிக்) இந்த ஸூஃபி நெறியின் முக்கியமான ஆன்மிக நிலையை அடைய முடியும்” என்கிறார் ஹஜ்ரத் மவ்லானா முஹம்மத் அப்துஸ் சத்தார் ஃகான் நக்‌ஷ்பந்தி காதிரி (நூல்: நக்‌ஷ்பந்தி டீச்சிங்ஸ் லத்தாஇஃப் & முராக்கபாத், ப.27).

யாத் தாஷ்த் என்பது உன்னதமான அகநிலை என்று புரிகிறது. ஆனால் ஆரம்ப நிலையில் பயிற்சி பெற்று வரும் சாதகன் இதனை எப்படி அடைவது? என்று வினா எழலாம். அதற்கான பயிற்சிகளை முறைப்படி செய்யும்போது இந்த நிலை வாய்க்கும். அடிப்படையான சில விடயங்களைப் புரிந்து கொண்டு பயிற்சிகளை ஆரம்பிக்க வேண்டும்.

யாத் தாஷ்த் என்னும் எட்டாவது கோட்பாடு அதற்கு முந்தைய கோட்பாட்டின் தொடர்ச்சி என்று இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டேன். இந்நிலை இதற்கு முந்தைய மூன்று கோட்பாடுகளின் தொடர்ச்சியாக ஏற்படுவது என்று ஃகாஜா உபைதுல்லாஹ் (ரஹ்) சொல்கிறார்:

“யாத் கர்த் என்பது திக்ரு செய்தல் என்னும் காரியமாகும். இது கலிமா தய்யிபா என்னும் பரிசுத்த நறுமண வாசகத்தை நாவால் ஓதுவதாகும். பாஸ் கஷ்த் என்பது கலிமா வாசகத்தைச் சொல்லி திக்ரு செய்யும்போது இதயத்தை ஹக்கின் பக்கம் திருப்பி, ‘என் இறைவா, நீயே எனது இலக்கு, உன் பொருத்தமே எனது லட்சியம்’ என்னும் உணர்வுடன் இருப்பதாகும். நிகாஹ் தாஷ்த் என்பது சொற்கள் இன்றி இதயத்தில் மௌனமாகவே ஹக்கிடம் திரும்பி முன்னோக்கிய நிலையில் உறுதிப் படுவதாகும். யாத் தாஷ்த் என்பது ’நிகாஹ் தாஷ்த்’தில் நிலைத்திருப்பதாகும்.”

இதிலிருந்து இந்த நான்கு நிலைகளும் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்ததாக இல்லை என்றும், ஒரே செய்முறையின் தொடர்ச்சியாக மலர்பவை என்றும் விளங்கலாம்.

லா இலாஹ இல்லல்லாஹ் என்னும் கலிமா தய்யிபாவை திக்ரு செய்வதே இந்த நிலைகளுக்கு வழிமுறையாக அமைந்துள்ளது. அதனை எப்படி திக்ரு செய்ய வேண்டும் என்பதில் தமது ஞான விளக்கங்களுக்கு ஏற்ப தரீக்கா (ஞான நெறி)கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாள்கின்றன. நக்‌ஷ்பந்திய்யா நெறியில் கையாளப்படும் வழிமுறையை இங்கே எழுதுகிறேன்.

ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன் எழுதுகிறார்: “யாத் தாஷ்த் என்பது திக்ரு செய்யும் சாதகர் ஒவ்வொரு மூச்சிலும் நஃபி (மறுத்தல், negation) மற்றும் இஸ்பாத் (உறுதிப்படுத்துதல், தரிப்படுத்துதல், affirmation) ஆகியவற்றால் தன் இதயத்தை எப்போதும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பிரசன்னத்தில் வைத்திருப்பதாகும். அப்படிச் செய்யும்போது அவர் இறைவனது ஏகமான தனித்த சுயத்தின் ஒளிச்சுடர்கள் (அன்வாரே ஜாத்துல் அஹதிய்யா) வெளிப்படுவதை உணர்கிறார்.

   ”அதன் பின்னர் அவர் நான்கு வகையான எண்ணங்களில் முதல் மூன்று வகையான எண்ணங்களை விட்டுவிடுகிறார்: 1) தன்முனைப்பான எண்ணங்கள், 2) தீய எண்ணங்கள், 3) வானவரின் எண்ணங்கள், 4) சத்திய (ஹக்கானி) எண்ணங்கள். இந்த நான்காம் வகையான எண்ணங்கள் மட்டுமே அவரின் மனத்தில் தரிப்படுகின்றன.”

இந்த நிலைகளில் சாதகர் லா இலாஹ இல்லல்லாஹ் என்பதைப் பின்வருமாறு ஓத வேண்டும். தலை குனிந்து தன் அடிவயிற்றில் இருந்து லா இலாஹ என்பதை மேலே இழுத்து வலது தோளுக்குக் கொண்டு சென்று இல்லல்லாஹ் என்பதை நெஞ்சின் இடது புறத்தின் கீழ்ப்பகுதியில் இதயத்தை நோக்கி அடிப்பது போல் தலையை அசைத்து மனத்தில் ஓத வேண்டும். இது ஒரு விடுத்தம் ஆகும். இது போல் ஒரே உள்மூச்சில் மூன்று முறை செய்ய வேண்டும். அடுத்து வெளிமூச்சில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்று மனத்தில் ஓத வேண்டும். மீண்டும் இதே போல் செய்ய வேண்டும். இது ஆரம்ப நிலைப் பயிற்சி ஆகும். இதில் பக்குவம் அடைய அடைய ஒரே மூச்சில் ஏழு, ஒன்பது, பதினொன்று என்று ஒற்றைப் படையாக எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டே போக வேண்டும். பூரண நிலை அடைந்தோர் ஒரே மூச்சில் இருபத்தைந்து முறை திக்ரு செய்யும் ஆற்றலை அடைகின்றனர்.

இது போல் பிற தரீக்காக்களில் அவரவர் விளக்கங்கள் மற்றும் செய்முறை (மஸ்லக்) அடிப்படையில் ஓதும் முறைகள் வடிவமைக்கப் பட்டிருக்கும். தான் எந்த தரீக்காவில் தன் குருநாதரை ஒருவர் அடைகிறாரோ அந்த குருநாதரின் வழிகாட்டுதல் படி திக்ரில் ஈடுபட வேண்டும்.

Saturday, June 28, 2025

நிகாஹ் தாஷ்த் (ஆன்மிக நிலை விழிப்புணர்வு, சுதாரிப்பு)

 (நக்‌ஷ்பந்திய்யா நெறியின் ஏழாம் கோட்பாடு குறித்த விளக்கம்)











நிகாஹ் என்றால் பார்வை என்று பொருள் (நழர் என்பது இதற்கு நிகரான அறபிச் சொல்.) இது இதயத்தைத் தொடர்ந்து கண்காணித்தல் என்னும் பயிற்சியாகும். அதாவது, உள்ளத்தில் தகாத, வீணான எண்ணம் ஒன்று கூட நுழைந்துவிடாமல் / எழுந்துவிடாமல் கவனித்துக் கொள்வதாகும். ஏனெனில், ஸூஃபித்துவத்தின் அடிப்படையான பயிற்சி தஸ்கியத்துந் நஃப்ஸ் – உள்ளத்தைத் தூய்மை செய்தல் என்பதுதான். அது மீண்டும் அழுக்காகி விடாமல் பாதுகாப்பதே நிகாஹ் தாஷ்த் என்னும் பயிற்சியாகும்.

            ”ஒரு சாதகர் தொடர்ச்சியாக பதினைந்து நிமிடங்கள் தன் மனத்தை வீண் எண்ணம் எழாமல் பாதுகாத்துவிட்டால் அது பெரிய சாதனை என்றும் அப்போதுதான் அவர் உண்மையில் ஸூஃபி ஆகிறார் என்றும் நக்‌ஷ்பந்திய்யா நெறியில் கருதப்படுகிறது” என்கிறார் ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன்.

            இந்த காலக் கணக்கு மேலும் அதிகமாகிக் கொண்டே செல்லும். எப்போதும் மனத்துக்கண் மாசிலன் ஆகியிருக்கும் நிலையை ஒருவர் அடைய வேண்டும். ஷைஃகு சஃ’துத்தீன் அல்-கஷ்காரி (ரஹ்) சொல்வது போல், “சாதகன் ஒன்று அல்லது இரண்டு அல்லது தன்னால் இயன்ற மணி நேரம் அதனது மனத்தில் கைருல்லாஹ்வின் (அல்லாஹ் அல்லாதவற்றின்) சிந்தனை நுழைந்துவிடாமல் பாதுகாத்து வர வேண்டும்.”

            ”தன் உள்ளத்தை அறிந்தவன் தன் இறைவனை அறிவான்” (மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப றப்பஹு) என்று ஹழ்ரத் அலீ (ரலி) சொன்னதாக பிரபலமான வாசகம் ஒன்றுண்டு. இதன் கருத்துப்படி, இறைவனை ஒருவர் அறிவதற்கு இதயத் தூய்மை மிகவும் அவசியமாகிறது.

            ”பத்து இரவுகள் நான் என் உள்ளத்தைக் காவல் காத்தேன். அது இருபது ஆண்டுகளாக என்னைக் காவல் காக்கிறது” என்று ஸூஃபி குரு ஒருவர் சொல்லியுள்ளார்.

            அபூ பக்ருல் கஹ்த்தானி (ரஹ்) சொல்கிறார்கள், “நான் என் இதயத்தின் வாசலில் நாற்பது ஆண்டுகள் காவலுக்கு நின்றேன். அது எல்லாம் வல்ல அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் அறியாத நிலையை அடையும்வரை அதனை நான் அல்லாஹ்வுக்காகத் தவிர வேறு எதற்காகவும் திறக்கவில்லை.”

            ஷைஃகு அபுல் ஹசன் அல்-ஃகரகானீ (ரஹ்) சொன்னார்கள், “நாற்பது ஆண்டுகளாக அல்லாஹ் என் உள்ளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதில் தன்னைத் தவிர வேறு எதையும் அவன் காணவில்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கும் என் உள்ளத்தில் இடம் இல்லை.”


            மனிதனுக்குள்ள முக்கியமான அருட்கொடைகளில் ஒன்று கற்பனை ஆற்றலாகும். அதன் வழியாகப் பல்வேறு துறைகளில் பற்பல சாதனைகளை அவன் நிகழ்த்தியுள்ளான். “கல்வியறிவை விட கற்பனையாற்றல் முக்கியமானது” என்று விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுகிறார். ஆனால், கற்பனை என்பது நேர்வழியில் செலுத்தப் பெறாவிடில் அது அழிவு சக்தியாக மாறிவிடும். அது மின்சாரம் போன்றது. அதை ஆகுமான வழியில் பயன்படுத்தினால் நன்மை விளையும், ஆகாத வழியில் செலுத்தினால் தீமை விளையும்.

            ஸூஃபித்துவத்தின் முக்கியமான பயிற்சிகளில் ஒன்று குருவின் உருவத்தை நினைத்தல். இது ”தஸவ்வுரே ஷைஃகு” எனப்படும். ஒரு நபரின் குரலைக் கேட்கும்போது அவரின் உருவம் நமக்குச் சிந்தனையில் வரும் அல்லவா? குருவின் போதனைகளை நினைவு கூரும்போது அவரின் திருவுருவம் சாதகனுக்கு நினைவு வராமல் போகாது. ஷைஃகு திக்ரு செய்வது போன்றுதான் முரீது செய்ய வேண்டும். அதற்கும் இந்தக் கற்பனை ஆற்றல் உதவும். அத்தகைய நல்வழியான சிந்தனைகளுக்கு கற்பனை ஆற்றல் உதவுகிறது. அதனால் ஆன்மிகத்தில் மிகப் பெரிய பலன் கிடைக்கிறது.

            ஆனால், சராசரி மனிதர்களிடம் கற்பனை ஆற்றல் என்பது அவர்தம் உள்ளத்தில் சந்தேகம், இச்சைகள், குழப்பங்கள் முதலிய தகாத எண்ணங்களும் உணர்ச்சிகளும் உண்டாகிவிடக் காரணம் ஆகிறது. அதை அவர்கள் கட்டுப்படுத்தவில்லை என்றால் மனம் அழுக்காகிப் போய்விடுகிறது. எனவே ஸூஃபித்துவத்தின் ஆரம்ப நிலையில் உள்ள சாதகன் தன் கற்பனைக்குக் கடிவாளம் போட வேண்டிய அவசியம் இருக்கிறது.

            இதனால்தான், ”அறமற்ற, ஒழுக்கமற்ற உருக்காட்சிகளைக் கற்பனை செய்வதை விட்டும் மனத்தைப் பாதுகாத்து வைப்பது நிகாஹ் தாஷ்த் ஆகும்” என்கிறார் உஸ்மான் நூரீ தோப்பாஷ்.

            சாதகன் ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடும்போது அவனின் உள்ளத்தில் இறைவனிடம் இருந்து மேன்மையான ஓர் உணர்வு நிலை (ஹால்) உண்டாகிறது. நிகாஹ் தாஷ்த் என்பது அவன் ஆழ்நிலை தியானத்தில் இருந்து வெளிவந்து உலகிற்குத் திரும்பிய பின்னரும் அந்த உணர்வு நிலை மாறிவிடாமல் பார்த்துக் கொள்ளும் பயிற்சி என்றும் ஒரு விளக்கம் உண்டு. 

            இது பற்றி மின்ஹாஜுஸ் ஸாஇர் என்னும் நூலில் இப்படி எழுதப்பட்டுள்ளது: “மேன்மையான திக்ரில் இருந்து உண்டான விசேடமான விழிப்பையும் இறையுணர்வையும் பாதுகாக்க வேண்டும். ஏனெனில், ஹக்கு அல்லாதவற்றின் நினைவு உள்ளத்திற்குள் புகுந்து விடக்கூடாது.”

               நிகாஹ் தாஷ்த் என்பது ஓதுகின்ற வாசகங்களின் அர்த்தம் உள்ளத்தில் வெளிச்சமாகும்படி திக்ரு செய்வதாகும் என்றும் ஸூஃபிகள் விளக்குகின்றனர். எனவே அப்பயிற்சி திக்ரு செய்யும்போதே நிகழ்வதாகிறது.

            உதாரணமாக, சுப்ஹானல்லாஹ் (இறைவன் பரிசுத்தன்), அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனுக்கே), மற்றும் அல்லாஹு அக்பர் (இறைவன் மிகப் பெரியோன்) ஆகிய வாசகங்களை ஒருவர் திக்ரு செய்கிறார். அதை வெறுமனே வாயால் அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார், ஆனால் அவரின் உள்ளம் பல்வேறு சிருஷ்டிகளையும் அவற்றின் காரியங்களையும் நினைத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது ஒழுங்கான திக்ரு ஆகுமா? அதனால் அவருக்கு ஆன்மிகத்தில் முன்னேற்றம் (தரக்கீ) ஏற்படுமா? ஓதுவதற்கான குறைந்த பட்ச நன்மை அவருக்குக் கிடைக்கும். அவ்வளவுதான்.

            ”திக்ரே லிசானீ லக்லகா / திக்ரே கல்பீ வஸ்வஸா” – ’நாவால் மட்டுமே செய்யும் திக்ரு உளறல் ஆகும், மனத்தால் மட்டுமே செய்யும் திக்ரு ஊசாட்டமாகும்’ என்று ஸூஃபிகள் சொல்லியுள்ளதை நினைவில் வையுங்கள்.

ஆனால், அந்த வாசகங்களின் அர்த்தத்தை உணர்ந்து அவர் ஓதும்போது, அதன் விளக்கங்களும் அவற்றின் உணர்வுகளும் அவரின் உள்ளத்தில் உண்டாகும்போதுதான் அது ஆன்மிகம் ஆகும். எனவேதான், திக்ரு செய்வதற்கு குருநாதர் போதிக்கும் தஃலீம் தல்கீன் ரீதியிலான அறிவு அவசியமாகிறது. ஸூஃபித்துவத்தின் போதனை முறை ‘நெஞ்சில் இருந்து நெஞ்சுக்கு’ (சீனா ப சீனா) என்று சொல்லப்படுகிறது. குருவின் இதயத்தில் இருந்து இல்மு என்னும் அறிவு ’அலம்’ (அச்சுப் பதித்தல்) என்பது போல் அப்படியே முரீதின் இதயத்தில் பதிந்துவிடுகிறது. இந்த முறையில் மிகக் குறுகிய காலத்தில் சாதகர் மிக அதிகமான முன்னேற்றத்தை அடைந்து விடுகிறார். இதைத்தான், “அறிஞர் நடக்கிறார், ஞானி பறக்கிறார்” என்னும் ஸூஃபி சொலவடை உணர்த்துகிறது. அத்தகைய சாதகர் மிக விரைவாகவே நிகாஹ் தாஷ்த் என்னும் நிலையை அடைய முடியும்.

மேற்சொன்ன வாசகங்களின் விளக்க ரீதியில், சுப்ஹானல்லாஹ் என்பது இறைவனின் ஷஃ’னே தன்ஸீஹ் (transcendence) என்பதை, அதாவது ’அவன் படைப்புக்களுக்கு அப்பாலாக இருக்கும் நிலை’யையும், அல்ஹம்துலில்லாஹ் என்பது ஷஃ’னே தஷ்பீஹ் (immanence) என்பதை, அதாவது அவன் படைப்புக்களுக்கு உடனிருக்கும் நிலை’யையும், அல்லாஹு அக்பர் என்பது இறைவனின் கமாலிய்யத் (perfection) என்பதை, அதாவது தன்ஸீஹ் தஷ்பீஹ் இரண்டும் சேர்ந்திருக்கும் பூரண நிலையையும் குறிக்கிறது. இந்த விளக்கங்களை எளிதில் கவனத்தில் கொண்டு வந்து ஓதும் வகையில் சுப்ஹானல்லாஹ் என்பதை கண்களை மூடி, சிருஷ்டிகளைப் பார்க்காமலும், அல்ஹம்துலில்லாஹ் என்பதை கண்களைத் திறந்து சிருஷ்டிகளைப் பார்த்தபடியும், அல்லாஹு அக்பர் என்பதை இரண்டு நிலைகளும் கலந்ததாக கண்களை மூடியும் திறந்தும் ஓதும்படியாக ஒரு உக்தி இருக்கிறது.

இதன் நோக்கம் திக்ரு செய்யப் பயன்படுத்தும் சொற்கள் / வாசகங்களின் அர்த்தம் சிந்தையில் வெளிச்சமாகி அவற்றின் உணர்வு நிலை (conscience) உண்டாக வேண்டும் என்பதுதான். இதன் காரணமாகவே திருக்கலிமாவின் விளக்கத்தை அதன் பல்வேறு படித்தரங்களுக்கு ஏற்ப வியாக்கியான வாசகங்களாகக் கோர்வை செய்திருக்கிறார்கள். லா இலாஹ இல்லல்லாஹ் என்பதற்கான வியாக்கியான வாசகங்களாக 1) லா மஃ’பூத இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை அன்றி வேறில்லை), 2) லா மக்ஸூத இல்லல்லாஹ் (தேவைகளை நிறைவேற்றுபவன் அல்லாஹ்வை அன்றி வேறில்லை), 3) லா மவ்ஜூத இல்லல்லாஹ் (உள்ளமைக்கு உரியவன் அல்லாஹ்வை அன்றி வேறில்லை), மற்றும் 4) லா மஷ்ஹூத இல்லல்லாஹ் (வெளியாகியிருப்பவன் அல்லாஹ்வை அன்றி வேறில்லை) ஆகிய வாசகங்கள் கோர்வை செய்யப்பட்டுள்ளன. இந்த அர்த்தங்கள் சிந்தையில் வெளிச்சமாகும்படியாக திருக்கலிமாவை தியானம் செய்ய வேண்டும். [இப்படியான வாசகங்கள், மா ஃகலக்துல் ஜின்ன வல் இன்ச இல்லா லி-ய’ஃபுதூன் – ’ஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி நான் படைக்கவில்லை’ (51:56) என்னும் திருவசனத்திற்கு அய்யு லி-யஃ’ரிஃபூன் – ’அதாவது, அவனை அறிவதற்காகவே’ என்று ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வியாக்கியானம் கொடுத்து திருவசனத்தின் அமைப்பிலேயே தஃப்சீர் வாசகத்தைக் கோர்வை செய்ததைப் போன்றதாகும்.]

            உள்ளத்திற்குள் படைப்புக்களைப் பற்றிய எண்ணமே நுழையாமல் இருப்பது சாத்தியமா? என்று வினா எழலாம். ஆரம்ப நிலையில் சாதகரின் மனத்தில் அதிகமான எண்ணங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். அப்போது சாதகன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஒன்று உரைக்கலாம். நீரோடைக் கரையில் மீனுக்காகக் காத்திருக்கும் கொக்கு தனக்குரிய மீன் – உறுமீன் – வரும் வரையில் கவனம் சிதறாமல் ஒரே இலக்கில் பார்த்துக்கொண்டு நிற்கும். அக்கம் பக்கத்தில் ஆயிரம் மீன்கள் ஓடினாலும் அவற்றை அது அலட்சியப் படுத்திவிடும். தனது இலக்கு வைக்கப்படும் இடத்தில் ஒரு மீன் வரும்போது சட்டென்று கொத்தி எடுத்துக் கொள்ளும். அது போல் இறைவனையே லட்சியமாகக் கொண்டு தியானத்தில் மனத்தைக் குவித்து வைத்திருக்கும்போது அவனல்லாதவை பற்றிய சிந்தனைகள் உள்ளே வரத்தான் செய்யும். சாதகர் அவற்றை அலட்சியப்படுத்த வேண்டும். அவற்றின் மீது கவனம் செலுத்தக் கூடாது. ஓர் எண்ணத்திற்கு அளிக்கப்படும் கவனமே அதனை பலப்படுத்தும். கவனம் அளிக்கப்படாத எண்ணங்கள் பலமிழந்து போகப் போக மறைந்துவிடும்.

         எண்ணங்களுக்கு நீ சக்தி ஊட்டிவிடாதே என்றுதான் இறைஞானியர் வழிகாட்டுகின்றனர். அதுதான் இப்பயிற்சியின் யுக்தி (knack) என்று புரிந்து கொள்ளுங்கள்.

            ஃகாஜா அப்துல் ஃகாலிக் இப்னு அப்துல் ஜமீல் அல்-குஜ்தவானி (ரஹ்) சொல்கிறார், “உள்ளத்திற்குள் எண்ணங்களே நுழையாது என்பது கிடையாது. ஆனால், அவை சில நேரங்களில் வரும், சில நேரங்களில் வராது.”

            இதே கருத்தில் ஃகாஜா அலாவுத்தீன் அல்-புஃகாரி (ரஹ்) சொல்கிறார், “எண்ணங்களை ஜெயிப்பது என்பது மிகக் கடினம், சாத்தியமில்லை என்றே சொல்லலாம். நான் என் இதயத்தை எண்ணங்களை விட்டும் இருபது ஆண்டுகள் பாதுகாத்து வைத்தேன். அதன் பின்னரும் அவை தோன்றிக் கொண்டுதான் இருந்தன. ஆனால் அவற்றால் என் இதயத்தின் மீது தாக்கம் செலுத்த முடியவில்லை.”

            இந்தக் கருத்திற்கு ஏற்ப ”நிகாஹ் தாஷ்த் எனபதன் அர்த்தம் உள்ளத்திற்குள் வரும் எண்ணங்கள் உள்ளத்தைப் பாதிக்காமல், அதன் மீது தாக்கம் செலுத்தாமல் இருப்பதாகும்” என்று ஷைஃகு அப்துல் மஜீத் இப்னு முஹம்மத் அல்-ஃகானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்.

            இக்கருத்தில் ஃகாஜா உபைதுல்லாஹ் அல்-அஹ்ரார் (ரஹ்) அவர்கள் தரும் விளக்கம் சுவையானது: “நிகாஹ் தாஷ்த் என்பதன் அர்த்தம் தொடக்க நிலையிலேயே சாதகர் எண்ணங்கள் எழாமல் இருப்பார்கள் என்பதன்று. ஆனால், இறை நினைவையும் உணர்வையும் எண்ணங்கள் பாதிக்காது என்பதுதான். இதற்கு ஓர் உதாரணம் சொல்லலாம். எண்ணங்கள் ஆற்றில் விழுந்த வைக்கோல் போன்றவை. அவை ஆற்றின் நீரோட்டத்தைத் தடுத்துவிடாது. ஆறு எங்கே போக வேண்டுமோ அதன் போக்கில் அது ஓடிக்கொண்டே இருக்கும்.”

            எண்ணங்களும் இறைவனின் படைப்புதான். அவன் படைக்காமல் அவை சுயமாகத் தோன்றிவிட முடியாது. எனவே, வீணான எண்ணங்கள் உண்டாகாமல் இருக்க இறைவனிடம் இதயத்தை ஒப்படைப்பது ஒன்றே வழியாகும். மவ்லானா ரூமி (ரஹ்) சொல்கிறார்கள்:

                        ”எண்ணங்களைப் பற்றிச் சிந்திக்காதே

                         எண்ணங்களைப் படைப்பவனைப் பற்றி யோசி.”