Wednesday, June 21, 2017

பாலியல் என்னும் சிக்கல் - part 1


ஃப்ரிட்ஜாஃப் ஷுவான்
Image result for frithjof schuon

     பாலியல் போன்றதொரு அடிப்படையான அம்சத்தை விட்டுவிடுதல் ஆன்மிக வாழ்வு தனக்கே இயலாத ஒன்றாகும். காமம் என்பது மனிதனின் ஓர் அம்சம். மேற்குலகின் மரபு அகஸ்டீனிய இறையியற் பார்வையில் வளர்ந்து வந்துள்ளது. அப்பார்வை, பாலியலின் உள்ளார்ந்த யதார்த்தத்தை மறுதலித்துவிட்டு ஏறத்தாழ பயன்பாட்டு நோக்கிலேயே திருமணவுறவை விளக்குகின்றது. அப்பார்வையின்படி பாலியல் உறவு என்பதே பாவம்; அதன் தொடர்ச்சியாய், குழந்தை பாவத்தில் பிறக்கிறது. ஆனால், திருச்சபை பிராயச்சித்தம் தருகிறது. அல்லது, இப்பாவத்திற்கு அது பிராயச்சித்தம் என்பதினும் மேலான நன்மையைத் தருகிறது: ஞானஸ்நானம், நம்பிக்கை, புனித வாழ்க்கை.

இன்னொரு பக்கம், எதார்த்தங்களின் உள்ளார்ந்த இயல்புகளின் அடிப்படையில் உருவான ஆதியியற் பார்வையின் நோக்கில், பாலுறவு என்பது “இயற்கையான இயற்கையிகந்த” புனிதச் செயலாகும். ஆதி மனிதனில் காமத்தின் இன்பம் ஆன்மிக இன்பத்துடன் நேர்ப்படுகிறது; ஆன்மிக இணைவின் அனுபவம் ஒன்றினை அவனுக்குத் தெரிவிக்கிறது; மனிதக்காதல் என்பது எதன் தொலைதூரப் பிரதிபலிப்பாக இருக்கின்றதோ அந்த இறைகாதலின் ஒரு ”நினைவூட்டல்” அது. எனினும், அந்தப் பிரதிபலிப்பு தெளிவற்றது. ஏனெனில், அந்த அனுபவ பிம்பம் ஒரே நேரத்தில் போதுமானதாகவும் தலைகீழானதாகவும் இருக்கிறது. இத்தெளிவின்மையில்தான் முழுச் சிக்கலும் உள்ளது.

Image result for adam and eve paintings

தொன்மையான, புறச்சமய, கிரேக்க-ஹிந்து கண்ணோட்டம் – இது கிறித்துவத்தின் சார்புலத்தில் அகமியக் கண்ணோட்டம் – அப்பிம்பத்தின் போதுமையை அடிப்படையாகக் கொண்டது. நீரில் பிரதிபலிக்கும் மரம் மரமேதான், வேறொன்று அல்ல. கிறித்துவ, கடுந்தவ, துறவற மற்றும் புறவயக் கண்ணோட்டம் என்பது அதற்கு மாறாக அப்பிம்பத்தின் தலைகீழ்மையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒரு மரத்தின் கிளைகள் மேலேதான் இருக்குமே அன்றிக் கீழே அல்ல. எனவே பிரதிபலிப்பு ஒருபோதும் மரம் அல்ல.

ஆனால், இவ்விரு பார்வைகளுக்கு இடையே பெரிய வேற்றுமை உள்ளது. முன்னது, பின்னதன் சார்பியல் மற்றும் கட்டுறுத்தும் நேர்மையை ஏற்கும் நிலையில், அதற்குப் பதிலாக முன்னதன் இயற்கையான ஆதியான பங்காற்றும் கண்ணோட்டத்தின் உரிமையை ஏற்க இயலவில்லை. அகஸ்டீனியன் சார்புலத்தில் பின்னதான கண்ணோட்டம் ‘அகமியமாக’ இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கான காரணம் இதுவேதான். எனினும் அது தன்னளவில் ஒரு புறவயக் கண்ணோட்டத்திற்குள் ஒருங்கிணைக்கப்பட முடியும் என்பதற்கான நிரூபணமாக இஸ்லாம் இருக்கிறது. (இந்நோக்கில், இஸ்லாம் யூதமதத்தை விடவும் வெளிப்படையானது).

கிறித்துவச் சூழலில், பாலியல் என்பது, ஒவ்வொரு திரிபுப் பின்னணியை விட்டும் பிரித்தெடுக்கப்படும் முயற்சியில், ஒருவித மிருகப்புணர்வின் மானக்கேடாகக் கருதப்படும் நிலைக்காகிறது. ஆனால், உண்மையில் மனிதத்தன்மையான எதுவும் அதன் இயல்பில் மிருகமன்று. அதனால்தான் நாம் மனிதர்களாய் இருக்கிறோம், விலங்குகளாய் அல்ல. எனினும், விலங்கியலை (animality) விட்டும் நாம் தப்ப வேண்டுமெனில் நமது கண்ணோட்டங்கள் மனிதத்தன்மை கெழுமியதாய், நமது தெய்வாம்ச வடிவமைப்பு நம் மீது இட்டிருக்கும் நியதிக்குப் பொருந்துவதாய்  இருக்கவேண்டும். அவை நம் உள்ளத்தையும் உயிரையும் தழுவ வேண்டும். வேறு விதத்தில் சொல்வதெனில், அவற்றில் பக்தியும் உண்மையும் இருக்கவேண்டும். எனவே, இழிந்தோரின் குருட்டு இச்சைதான் மிருகத்தனமே அன்றி விலங்குகளின் கள்ளங்கபடற்ற காமம் அப்படியல்ல. மனிதன் மிருக நிலைக்குத் தாழும்போது அவன் விலங்குகளை விடவும் கீழானவன் ஆகிறான். ஏனெனில், அவை யாருக்கும் துரோகம் செய்வதில்லை, எந்த நியதியையும் உடைப்பதில்லை. விலங்கு என்பது மாசற்ற படைப்பினமாய் இருக்கக்கூடும். மனித அறத்தின் தடைகளையும் வெறுப்புக்களையும் அதன் மேல் திணிக்கக்கூடாது.

கிறித்துவ மற்றும் கடுந்தவக் கண்ணோட்டங்கள் கொள்வது போல், பாலுறவு என்பது தன்னளவில் ஒரு பாவமாய் இருக்குமெனில் அந்த இயல்பு அதனில் உருவாகும் குழந்தைக்குக் கடத்தப்பட்டிருக்கும். (இக்கண்ணோட்டம் முற்றிலும் கிறித்துவத்திற்கே உரியது அல்ல என்றாலும் இங்கே நாம் அதன் சிறந்த வடிவைக் குறிப்பிட விரும்புகிறோம்). இதற்கு மாற்றமாய், பாலுறவு என்பது தனது ஆழ்ந்த ஆன்மிக இயல்பால் ஒரு புனிதப்படுத்துகின்ற நற்காரியமாய் (ஒருசில மரபுகளில் இளவரசனின் பாலுறவு என்பது ஒரு பெண்ணின் வழியே அத்தேசத்தின் மண்ணைக் கருவுறச்செய்து மக்களுக்குச் செழிப்பை உண்டாக்கும் என்று நம்பப்படுவது போல்), அல்லது விதிக்கப்பட்ட நியதிகளின்படி நிகழும்போது இறையனுபவத்தைத் தூண்டி அடையவைப்பதான ஆதியியற் புனித காரியமாய் இருக்குமெனில், இவ்வியல்பில் கருவுறும் குழந்தை, மரபு வழியில், ஆன்மிக இணைவுக்குத் தகுதியுள்ளதாகும். முன்னைய மாற்று நோக்கில் அது பாவத்திற்கே தகுதி பெறும். யதார்த்தத்தில் அல்லாது (சமயச்) சட்டப்படிதான் என்றாலும்கூட, பாலுறவு தன்னளவிலொரு புனிதச்செயல் எனும்போது, பிறக்கும் குழந்தை அக்காரியத்தின் ஒரே இலக்கு அல்ல, ஆனால் அது ஓர் அன்பளிப்பு என்றாகிறது. (பாலுறவு என்பது, இருமுனை கூரான கத்தியாக, அதன் புறவய மற்றும் அகவய நிலைகள் சார்ந்து முற்றிலும் எதிரான மறுமைக்கால விளைவுகளை உண்டாக்கும் என்று கொண்டால், விதிக்கப்பட்ட நியதிகளை மீறும் நிலையில் இப்புனிதக் காரியத்திலிருந்து கருணைக்குப் பதிலாகச் சாபமே விளையும் என்பதை மனம்கொள்ள வேண்டும்).

Related image

மனித இனவிருத்தி என்னும் நோக்கில் திருச்சபை திருமணத்தை ஆசீர்வதிக்கிறது. அவர்களைக் கொண்டு அது விசுவாசிகளை உருவாக்கும். அவ்வாறு ஆசீர்வதிப்பதில் தவிர்க்கவியலாமல் “மாம்சத்தின் பாவம்” என்பதை அது மீட்குக்கொள்கிறது. இங்கே அது கிறித்துவை விடவும் தூய பவுலுக்கே நெருக்கமாக உள்ளது என்று சொல்லத்  தூண்டப்படுகிறோம். இன்னொரு விதத்தில் சொல்வதெனில், தான் புதிதாக எதனையும் உண்டாக்காத போதிலும், அதற்கு இடமும் இல்லை, தேவையில்லாத ஒரு விசயத்தை தூய பவுல் தனது கண்ணோட்டத்தில் பெரிதுபடுத்தியிருக்கிறார். கிறிஸ்து துறவை வலியுறுத்தினார் என்பதில் ஐயமில்லை; ஆனால், அதனைக் கொண்டு பாலுறவு என்பது இயல்பிலேயே பாவமான ஒன்று என்று அர்த்தப்படுத்த முடியாது. மாறாக, பாவிகள் அதனைக் கிழ்மை செய்கின்றனர் என்று காணலாம். ஏனெனில், பாவிகள் பாலுறவில் கடவுளுக்கான இடத்தை நீக்கிவிடுகின்றனர். இக்கோணத்தில் நோக்க, ஆதம் செய்த பாவம் என்பது துய்த்தலை முற்றிலும் தன்னுடைமை ஆக்க முனைந்ததில் உள்ளது. துய்ப்பைத் தனக்குரிய ஒன்றாக அவர் கண்டதில் தவறு என்பது களவில் மட்டுமன்றி கணிசமாக தெய்வாம்சமான சுகம் தரும் அக்களவுப் பொருளைத் தனது உடைமை என்று சிந்தித்ததிலும் இருக்கிறது. கடவுளின் கட்டளையை மீறியதில், தொடக்கத்தில் மனிதன் பங்கெடுத்திருந்த தெய்வ அகமியத்திலிருந்து ஒரு பிசகு உண்டாயிற்று. அச்செயல், தெய்வ அகமியத்தில் பங்கெடுப்பதை நிறுத்திக்கொண்டு தன்னையே தனித்தொரு அகமியமாய் உருவாக்க முனைந்ததாயிற்று. தன்னையொரு தோராயக் கடவுளாய் ஆக்குவதில் மனிதம் தனது பேரின்ப நோக்கின் நிலையைக் குறுக்கித் தாழ்த்தி முழுப் பிரபஞ்ச சுற்றுச்சூழலிலும் ஒரு பிசகை உண்டாக்கிவிடுகிறது.

இயற்கையானதும் ஆதியானதுமான புனிதச்செயலைக் கீழ்மையாக்கும் விருப்பம் எதுவும் கிறிஸ்த்துவின் நோக்கமாக இருக்க முடியாது என்பது உறுதி. அனைத்துக்கும் மேலாக, பாலியற் கூறுகளின் தெளிவின்மையை கருத்தில் கொள்ள, துறவுக்கு இயைந்ததான ஓர் ஆன்மிக வழிமுறையை அவர் வழங்கியிருக்க வேண்டும். ஏனெனில் தூய கற்பு நிலை என்பது எந்த வழிமுறைக்கும் நியதியாகும். கானாவில் (Cana; கலீலி அல்லது லெபனானில் உள்ள ஒரு சிற்றூர்; காண்க: புதிய ஏற்பாடு: யோவான்: அதிகாரம் 2: 1-11 –மொ.பெ.) கிறிஸ்து திருமணத்தை ஆசீர்வதித்தார் அல்லது புனிதப்படுத்தினார். அவர் அதனை அகஸ்தீனியக் கோணத்தில் செய்தாரா அல்லது பவுலியக் கோணத்தில் செய்தாரா என்பதை நாம் சொல்லமுடியாது. அப்போது அவர் நீரை மதுவாக்கினார். அது ஓர் ஆழிய குறியீடு. இறையியலாளர்கள் சொல்லும் அற மற்றும் சமூகச் சந்தர்ப்பவியலாக அல்லாமல் அது மாம்சமும் ஆன்மிகமுமாய் இருக்கின்றதொரு இணைவைக் குறிக்கிறது என்பதே மிகவும் பொருத்தமானது. அஃது வெறுமனே சதையுறவாக மட்டுமே இருக்குமெனில் அது மனிதமாக இருந்திராது. (குறிப்பு: மேரியின் பிறப்புக் குறித்து அவர் “பாவம் ஏதுமின்றிப் பெறப்பட்டார்” என்று திருச்சபை சொல்வதன் அர்த்தம் அவருடைய ஆன்மாவானது மூலப் பாவத்தின் கறை இன்றிப் படைக்கப்பட்டது என்பதேயாம். ஆனால் அறியாத பெரும்பான்மை விசுவாசிகள் நினைப்பது என்னவெனில், அவரது பெற்றோர்கள் உடலுறவு கொள்ளாமலேயே அல்லது குறைந்தபட்சம் உறவில் இன்பமேதும் துய்க்காமலேயே, அவர்களில் காம இச்சை இல்லாத நிலையில் அவர் கருத்தரிக்கப்பட்டார் என்பதாம். இது இறையியல் விளக்கம் இல்லை எனில் கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்றல்ல. ஏனெனில், இதுபோன்ற பாவனைகள் கிறித்துவக் கண்ணோட்டத்தில் வழமையாய் நிகழ்வதுதான்.)

மேலும், இனவிருத்தி என்பது அத்தனை முக்கியமான ஒன்றெனில், அதன் நியதியான ஒரு செயற்பாடு வருத்தப்பட வேண்டிய ஒன்றாய் இருக்க முடியாது. அதற்கு மாறாக, இனவிருத்தியின் இன்றியமையாமையின் விகிதத்திற்கேற்ப அது புனிதத்தன்மையைப் பெற்றிருக்கும் நிலையும் உண்டாகி இருக்காது. இறையியலாளர் செய்வது போல் இனவிருத்திக்கு முக்கியத்துவம் அளித்து அதனைப் பாலுறவை விட்டும் பிரித்தெடுக்க முடியும் எனில், அதேபோல் இனவிருத்தியை விட்டும் பாலுறவைத் தனித்தெடுத்து அதன் இயற்கை மற்றும் உடனடி சார்புலத்திற்கு இயைந்து மேம்படுத்திக்கொள்ளவும் முடியும். அதன் இறையியல் மற்றும் ஆன்மிகக் குறியீட்டியல் உறுதிப்படுத்தும் நோக்கில் காதல் என்பது அதன் உயிரியல் மற்றும் சமூக அம்சங்களை விட்டும் தூய்மைபெறும் பண்பினைக் கொண்டுள்ளது என்றும் சொல்ல வேண்டியதாகிறது.

காதலின்றி ஒருவர் இனவிருத்திச் செய்யவும் முடியும்; இனவிருத்தி இன்றி ஒருவர் காதலிக்கவும் முடியும். ராகேல் நெடுங்காலம் மலடாய் இருந்தது அவள் மீது யாக்கோபு கொண்டிருந்த காதலைக் குறைத்துவிடவில்லை, எவ்விதமான இடவியல் விளக்கங்களும் தந்து ’சாலமோன் பாடின உன்னதப்பாட்டு’ தன்னை நியாயப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
q       q       q       q       q       q

Related image

கிறிஸ்து திருமணத்திற்கு எதிரானவர் அல்லர், அவர் பலதாரமணத்தையும் எதிர்க்கவில்லை என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. பத்துக் கன்னிகைகள் பற்றிய நீதிக்கதை (மத்தேயு:25) இதற்கான சான்றாகும். (அதில், விளக்கும் முகமாக ‘மேலும் மணமகளும்’ என்று சேர்க்கப்படுவதால் அக்கதை தனது அர்த்தத்தை இழக்கவில்லை என்றபோதும் தன் வலுவை இழந்துவிடுகிறது). கிறித்துவ உலகில், விசுவாசிகள் அனைவருக்கும் அல்ல எனினும் அரசகுமாரர்களுக்குப் பலதாரமணம் அனுமதிக்கப்பட்டிருந்தது. அதனால் பல போர்களும் திருச்சபை மீதான அரசதிகார அழுத்தமும் தவிர்க்கப்படும் அத்துடன் ஆங்கிலேயக் கருத்துபேதமும் தவிரும். விவாகரத்தைக் கண்டித்து கிறிஸ்து சொன்னார், “தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்” (மாற்கு:10:9). ஆனால் அரசகுமாரர்களின் திருமணஙளெல்லாம் பெரும்பாலும் அரசியல் பேரங்களின் விளைவாகவே இருந்தன. அவற்றுக்குக் கடவுளுடனோ காதலுடனோ எந்த அக்கறையும் இல்லை.

ஒருதார மணத்தைப் போன்றே பலதார மணமும் இயற்கைக் காரணிகளால் அமைந்தது. முதல் திருமணம் ஒருதார நிலையாகத்தான் இருக்கும் என்பதாலும் ஆண்மையைப் போன்றே இதில் பெண்மையும் முழுதும் ஒரே நபரிடம் இருக்கும் என்பதாலும் ஒருதாரமணம் என்பது இயற்கையானது என்று சொன்னால், பலதாரமணம் என்பது உயிரியல் தகவல்கள் மற்றும் சமூக அல்லது அரசியல் சார்புகள் கொண்டு விளக்கப்படுகிறது. இன்னொரு பக்கம், பெண்மை குறிக்கும் முடிவற்ற தன்மை பல்வேறு அம்சங்களை அனுமதிக்கிறது. விடுதலை நல்கும் விளிம்பு நோக்கி ஆண் நீண்டு செல்கிறான்; பாதுகாப்பளிக்கும் மையப்புள்ளியில் பெண் வேர் கொள்கிறாள். (மாறாக, பலபதிமணம் (polyandry) என்பதை ஆதரிக்கும் தரவுகள் இயற்கையில் இல்லை; அல்லது மிகவும் அபூர்வம், அது மிகவும் பிரத்யேகமான பொருளாதாரக் காரணங்கள் கொண்டோ அல்லது மாந்திரீகக் கோட்பாடுகளைக் கொண்டோதான் விளக்கப்படுகிறது. ”புனித விபச்சாரம்” என்று கூறப்படும் மரபுகளும் உள்ளன: ஹிடாய்ரா (கிரேக்கப் பரத்தை), ஹிய்ரோடியூல் (கிரேக்க தேவதாசி), தேவததாசிகள், கீஷா (ஜப்பானியப் பரத்தை) – இவற்றில் பெண் என்பவள் மையப்புள்ளியாகிறாள், ஏனெனில் அவள் தன்னைப் பல ஆண்களுக்குத் தருகிறாள். தொல் மரபுகளின் கட்டமைப்பில் இவை போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருந்தன என்று சொல்லலாம். ஆனால் பிற்காலச் சமயங்களில் எல்லாம் இவ்வம்சம் நீக்கப்பட்டுள்ளது. சில விதிவிலக்குகள் உண்டு. அவை வெளிப்படுத்திச் சொல்லும் அளவுக்குப் போதுமானவை அல்ல).

இத்துடன் மேலும் சொல்லலாம், ஏறத்தாழ நார்டிக் மக்கள் (வட ஐரோப்பியர்) ஒருதாரநிலையை ஆதரிப்பவர்களாக இருக்கின்றனர். அவர்களது பருவநிலை சார்ந்த மனப்பாங்கு அதற்கான காரணமாகும். ஆனால் பெரும்பான்மையான தெற்கு மக்கள் பலதார நிலையை ஆதரிக்கும் இயல்பைப் பெற்றுள்ளனர், அது எப்படி எவ்வளவாயினும் சரி. அது அப்படி இருக்க, மேற்கின் கண்டம் முழுவதன் மீதும் பாதிரிகளுக்கான ஒழுக்கவியலைச் சுமத்துவது பிழையாகும். அந்த ஒழுக்கவியல் தனது செய்முறைப் பின்னணியால் சட்டபூர்வமானதாய் இருப்பினும், சமூகம் முழுமைக்குமாக அதனை நீட்டுதலைக் கருத, காமம் என்பது ஒருவித தீமை என்றும் அது குறைந்தபட்சத்திற்கு ஆக்கப்படவேண்டியது என்றும் அதன் சாராம்சங்கள் அனைத்தையும் நீக்கிவிடுமொரு அணுகுமுறையில் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் பார்க்கின்ற பிழைபட்ட கருத்தின் மீது நிறுவப்பட்டுள்ளதாகும்.

Image result for egyptian harem

பல பெண்கள் தமது சுயத்தைத் தக்க வைத்துக்கொள்கின்ற பலதார நிலையையும் பெண்களின் பெருந்திரள் ஒன்று தமது சுய அடையாளங்கள் மழுங்கிய நிலையில் “பெண்மையை” பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துதாரநிலை (pantogamy) என்னும் அரச அந்தப்புற அமைப்பையும் நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். அனைத்துத்தார நிலை என்பது, அதன் குறிப்பிட்ட மணவாளன் மனிதகுலத்தின் சிகரத்தில் இருப்பவனாய் இல்லாத நிலையில் அப்பெண்களுக்கு ஒருவித கண்ணியக் குறைவையே உண்டாக்குகிறது. கிருஷ்ணன் விஷ்ணு என்பதால், தாவீதும் சாலமோனும் இறைத்தூதர்கள் என்பதால், சுல்தான் (மாமன்னர்) ”இம்மண்ணில் அல்லாஹ்வின் நிழல்” என்பதால் அனைத்துத்தாரநிலை சாத்தியமாகிறது. எண்ணிக்கை அற்றதும் நிழலானதுமான ”ஹரம்” (அந்தப்புறம்) நவரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டதொரு ஏகாதிபத்திய சிம்மாசனத்தை ஒத்த செயல்பாட்டினைக் கொண்டுள்ளது. ‘ஒத்த’ செயல்பாடே அன்றிச் சமமானதல்ல. ஏனெனில், ஹரம் என்பது மனிதப்பொருளால் உண்டான சிம்மாசனமாகும். அது மேலும் நேரடியான மேலும் ஸ்தூலமான நிலையில் ஒரு பேரரசனின் உண்மையான அல்லது வரிக்கப்பட்ட தெய்வாம்சத்தைக் குறிக்கிறது (ழில்லுல்லாஹ் – அல்லாஹ்வின் நிழல் என்னும்படி. ‘முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப் படும்’ என்னும் திருக்குறள் (388) இங்கே நினையத்தகும் – மொ.பெ).

கீழான நிலையில், இந்த அனைத்துத்தாரநிலை சாத்தியமில்லை. ஒரு குறிப்பிட்ட வழக்கில், இது சட்டபூர்வமானதா அல்லது சகித்துக்கொள்ளத்தக்கதா என்பது சாதாரணத் தனிமனிதனுடன், மனித அலங்கோலத்தையும் மனமாயைகளையும் தூண்டவல்ல இச்செயல்பாட்டினை வேறுபடுத்தி நோக்கி பதில் காணவேண்டிய கேள்வியாகும்.

யாம் இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும், நடைமுறையில் இருக்கும் செயற்பாடுகளை விளக்கி வருகின்றோமே அல்லாது எதனையும் முற்படுத்துவது நோக்கமன்று; இங்கே எமது தனிப்பட்ட விருப்பு ஒரு பிரச்சனை அல்ல. அல்லது ஏதேனுமொரு குறிப்பிட்ட மரபுசார் சமூக அமைப்புக்கு எமது தனிப்பட்ட நோக்கு எதிராக இருக்கக்கூடும். அதனை யாம் ஒரு குறிப்பிட்ட பார்வைக் கோணத்தில் அல்லது குறிப்பிட சார்புலத்தில் வைத்து நிரூபித்திருக்கவும் முடியும்.
q        q        q        q      q       q

இங்கே மிகவும் முக்கியமானதொரு சாத்தியக்கூறினைக் கருதுகிறோம். அது, இல்லறக் கட்டமைப்புக்குள் துறவறம் என்பதாகும். பாலியலைப் புனிதப்படுத்துவதற்க்கான இன்றியமையா நியதிகளான பற்றின்மை மற்றும் தாராளம் ஆகிய இரண்டும் இதில் இணைந்தியங்கும் நிலை உண்டாகிறது. திருமண உறவுகளின் தளத்தில் வல்லாதிக்கமும் துச்சமும் போன்று புனிதத்திற்கு எதிராகும் காரணிகள் வேறில்லை. தவிர்தல், வழமைகளை உடைத்தல் மற்றும் ஆன்மாவின் புத்துணர்வு ஆகியன எவ்வொரு புனிதப் பாலியலுக்கும் இன்றியமையாத கூறுகளாகும். இரு உள்ளங்களின் நித்திய இணைவில், சமநிலை ஆக்கும் இரண்டு திறப்புக்கள் வேண்டும், ஒன்று விண்ணின் பக்கமும், மற்றொன்று மண்ணின் பக்கமுமாக. அதாவது, இணைகளுக்கு மேலாக மூன்றாவதாயிருக்கும் கடவுளிடம் ஒரு திறப்பு இருக்க வேண்டும்.  அத்திறப்பு இன்றேல் இருமை என்பது பகைமை ஆகிவிடும். மேலும், சாளரம் போன்றதான ஒரு திறப்பு அல்லது வெறுமை இங்கே மனிதத் தளத்தில் இருக்க வேண்டும். தவிர்தலே அந்தத் திறப்பாகும். அது இறைவனுக்கு ஒரு காணிக்கையாகவும் இணைநபருக்குச் செலுத்தப்படும் மரியாதை மற்றும் நன்றியறிதலாகவும் இருக்கும். ஏனெனில், கணவன் அல்லது மனைவியின் மனித மற்றும் ஆன்மிகக் கண்ணியம் என்பது அவர்களொரு பழக்கமாய் உறவாடப்படக் கூடாது என்பதையும் கற்பனையும் புத்துணர்வும் அற்ற முறையில் உறவாடப்படக் கூடாது என்பதையும், அவன் அல்லது அவளின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் கோருகிறது. இந்த நியதி தவிர்தலை மட்டுமன்றி பண்பின் மேன்மையையும் மிகவும் முக்கியமாகக் கோருகிறது. ஏனெனில், புனிதவுணர்வில் அல்லது பக்திநிலையில் நாம் இறுதி முடிவாக நற்பண்பையே நாம் காண்கிறோம்.

பக்தி என்பது ஒருபுறம் தனித்திருப்பதன் மதிப்பையும் மற்றொரு புறம் பங்கேற்பதன் நெருக்கத்தையும் கேட்கிறது. ஒருவர் தன்னை இல்லாமலாக்கி ’ஏழை’யாய் இருப்பது ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பொங்கிப்பெருகி வழங்குபவராய் இருக்கவும் வேண்டும். இது, தவிர்தல் மற்றும் தாரளம் ஆகியவற்றின் சகநிறைவாகும். இச்சார்புலத்தில் நோக்க, கணவன் அல்லது மனைவியின் உடலியல் சார்ந்த பொறுமை மற்றும் தாராளமான ஏற்புநிலை என்பது மனித கண்ணியத்தின் நியதி மட்டுமல்லாது திருமணவுறவின் ஆன்மிக மதிப்பின் நியதியுமாகும். கால இடைவெளியிலான தவிர்தல் என்பது இந்த ஏற்புநிலை அல்லது பொறைநிலையின் அடையாளமேயாகும். (செவ்விந்தியர்கள், இந்தத் தவிர்தல் முறை, அது அவர்களின் நடைமுறைக் காரணங்களால் இருப்பினும், தம்மைப் பலப்படுத்திக் காலப்போக்கில் தமது வீரியத்தை மிகச்செய்வதாகக் கண்டனர்).


Image result for ramakrishna paramahamsa and sarada devi

எந்தச் சாத்தியத்தையும் விட்டுவிடக்கூடாது என்னும் நோக்கில், மிக மிக அபூர்வமானதும் ஆனால் தன்னளவில் தீமையற்றதுமான ஒரு வழக்கத்தையும் இங்கே நாம் பேசவேண்டும். அதில் (தாம்பத்ய உறவு) தவிர்தல் என்பது நிலையானதாகவும் தூயகற்பு நிலையுடன் ஒரு சகோதரச் சகோதரி உறவுநிலை பேணப்படுவதாகவும் அமைகிறது. (இவ்வகை உறவுக்கொரு சிறந்த உதாரணமாக ராமகிருஷ்ணரின் இல்லறம் இருக்கிறது. பரமஹம்சர் தனது மனைவியைத் தொடாமல் வழிபட்டார். அவரை வழிபடாது தொடுவதைக் காட்டிலும் இது நிச்சயம் மேலான ஒரு நிலையே ஆகும்). அத்தகையதொரு நிலையில், தவிர்தல் என்பது ஒரு பகட்டு அல்லது துன்புறுத்தும் ஒழுக்கவியலாக இராமல், புனிதப் பிள்ளைத்தனம்  கொண்டதாயிருக்கும். நிச்சயமாக, காமமற்ற இல்லறம் என்பது தனித்தன்மையான தகுதிகளைக் கோரும் அதே வேளை இத்தகு உறவுநிலையை ஆதரிக்குமொரு ஆன்மிகக் கண்ணோட்டமாக, ஆதியாகமம் சொல்லும் பின்வரும் வாக்கியத்தை உறுதிப்படுத்துகிறது: “மனுஷன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல; ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்”. (இது “அவனுக்குப் பொருத்தமான துணையை” என்றும் “அவனுக்குத் தகுதியான துணையை” என்றும் மொழிபெயர்க்கப்படுவதுண்டு. இதனை ஒருவர் புரிந்துகொள்ள முடிந்தால், அதுவே சில விரிவுரைஞர்கள் முன்வைக்கும் பெண்வெறுப்பை நீக்கப் போதுமானதாகும்.)

to be continued... 

Monday, June 19, 2017

பெரியன்

Image result for god is great
திருமண வைபவ மண்டபத்தில்
சேடிகளுடன் சேர்ந்து (சி.டி.யில்தான்)
தக்பீர் முழக்கம் பாடிக்கொண்டிருந்தார்
நாகூர் ஹனீஃபா:
அல்லாஹு அக்பர்
இறைவன் மிகப் பெரியன்

சிறுவயதில் அபத்தமாய்த் தோன்றியதுண்டு
எவ்வளவு பெரியவன் என்னும் கேள்வி.
அறிவுப்பூர்வமான கேள்வி அது என்றும்கூட!

இன்னமும் அதற்கு சீரியஸாய் விடையளிக்கும்
அறிவாளிகள் இருக்கத்தானே செய்கிறார்கள்?

நானொரு மண் துகள் எனில்
அவன் இப்பூமிப் பந்தோ?

நானொரு சிறுமீன் எனில்
அவன்தான் சாலப் பெருங்கடலோ?

நானொரு குறுங்கொசு எனில்
அவன்தான் விரிவானமோ?
(கொசுவை உவமை சொல்ல வெட்கமென்ன?)

நானும்தானொரு அணுத்துகள் எனில்
அவன் இப்பிரபஞ்ச முழுமையோ?

அல்லது அதனினும்
‘நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்த’
அண்டங்கள் எல்லாம் அடக்கிய
இப்பிரபஞ்சமேயொரு
‘இல்நுழை கதிரின் துன் அணு’
ஆகிவிடும்படிக்கு அத்தனைப் பெரியனோ?

இவ்வியப்புக்கள் எல்லாம் ஓய்ந்து போயின
உவமைகளில் உண்மை கவியவில்லை
எனும் உணர்தலில்

இவ்வெண்ணங்களில் எல்லாம் இருக்கிறதே
நானுமொரு இருத்தல்
அவனுமொரு இருத்தல்
என்னும் இருமையின் உறுத்தல்

அவனுடன் எப்பொருளும் இல்லாத
ஆதி முதற்றே அவன்
இருத்தலில் இணையிலி அல்லவா?

சிறிய என்று எதனையும் ஒப்பிட்டுச் சொல்ல
அவனன்றி வேறொன்று இல்லாதிருக்கும்
பெரியன் அப்பெரியன் அப்பெரியன்.



(குறிப்பு: இறைவன் பெரியன் என்பதை ஒப்பீட்டு அளவில் விளக்க முனைந்த அற்புதமான சிந்தனைகளில் ஒன்று மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தின் ‘திருவண்டப் பகுதி’யின் ஆரம்பத்தில் கிடைக்கிறது. ”அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் / அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி / ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின் / நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன / இல்நுழை கதிரின் துன் அணுப் புரைய / சிறிய ஆகப் பெரியோன்” என்று இறைவனின் பெருமையை வியக்கிறார் அவர்.)

ஞானக்கனி

Image result for CHILD WITH A FRUIT

மனிதக் காலம் தொலைத்துவிட்டது
ஞானப்பழத்தை

உலகையே சுற்றி வந்ததில்
(நம்மை ஐரோப்பா சுற்றியதிலும்)
தகவல் யுகம் என்னுமிக்காலத்தில்
மிகச் சுளுவாய் நமக்குக் கிடைக்கின்றன
ஆஸ்திரேலியாவின் கிவிப்பழமும்
அமெரிக்கன் திராட்சையும்
துரியனும்
அன்ன பிறவும்

இவற்றில் எது ஞானப்பழம் என்றுரைக்க
அடியேனுக்கு ஞானம் இல்லையே?

ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும்
ச(ந்த)ர்ப்ப வசமாய் உண்டது
ஆப்பிள்தான் என்றும்
அதுவே அறிவுக்கனி என்றும்
வியாக்கியானம் ஒன்றுண்டு

நவீன வாழ்வின் சிக்கல் யாதெனில்
அதில் எந்த வெரய்ட்டி,
பெல்ஜியம்? அமெரிக்கா? ராயல்?

கையிலொரு கொய்யா எடுத்து
அது காயம் பட்டிருப்பதை நோக்க
பழக்காரர் சொல்கிறார்
‘அணிற்பிள்ளை கடித்த பழம்
மிகவும் ருசியாய் இருக்கும்’

அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே
நினைவில் விரிந்த வீட்டின் கொல்லையில்
மருண்டு ஓடிற்று அணில் ஒன்று

சமதளத்தில் ஓடியது போன்றே
நின்று ஒருகணமும் யோசியாது
தொண்ணூறு டிகிரி மடக்கு அங்கே இல்லாததுபோல்
செங்குத்தாகவும் ஓடிப்போனது மரத்தில்

காலத்துடன்
முப்பரிமாணங்களின் குவி மையம் ஆன
பிள்ளைமை 
ருசிக்கும் கணத்தில் 
எந்தக் கனியும்
ஞானக்கனிதான்




Sunday, June 18, 2017

நூன் என்னும் எழுத்தின் மர்மங்கள் - part 2

ரெனெ கினான்
Related image

நூன் என்னும் எழுத்தின் வடிவத்திற்குத் திரும்ப, தொல்மொழிகள் பலவற்றின் எழுத்துக்களுக்கு இடையிலான உறவுநிலைகளின் கோணத்தில் இன்னும் சுவையான அவதானங்களை நாம் சொல்வோம். சம்ஸ்க்ருத எழுத்துக்களில், நூன் என்பதற்கான எழுத்தான ன் என்பது அதன் சுருக்க வடிவில் ஓர் அரைவட்டமும் மையப்புள்ளியும் கொண்டதாகவே இருக்கிறது. ஆனால் இங்கே அந்த வளைவு மேலே திரும்பியதாக உள்ளது. அதாவது வட்டத்தின் மேல்பாதியால் ஆனதாக இருக்கிறது, அரபியின் நூன் போல் கீழ்ப்பாதியால் ஆனதாக அல்ல. (மொ.பெ.குறிப்பு: ரெனெ கினான் இதனை எந்த அடிப்படையில் சொல்கிறார் என்று தெரியவில்லை. ஓம் என்பதை சம்ஸ்க்ருதத்தில் எழுதுகையில் அரபி நூன் வடிவில்தான் எழுதப்படுவதைக் காண்கிறோம்.) இவ்வாறு, அதே வடிவம் தலைகீழாக நமக்குக் கிடைக்கிறது. அல்லது, இணைநிறைவாகும் இரண்டு பாதிகளை நாம் பெறுகிறோம். அவற்றை ஒன்றிணைத்தால், இரு மையப்புள்ளிகளும் கலந்து ஒன்றாகி, மையப்புள்ளியுடன் கூடிய ஒரு முழுவட்டத்தைத் தருகின்றன. அவ்வடிவம் முழுமையான யுக சுழற்சியையும் வானியலில் சூரியனின் குறியீட்டையும் ரசவாதத்தில் தங்கத்தின் குறியீட்டையும் தருகின்றது. (ஆன்மிகச் சூரியன் மற்றும் பொற்கரு / தங்கக் கரு (ஹிரண்யகர்ப்பம்) என்று ஹிந்து மரபில் சொல்லப்படுபவற்றை இங்கே நினைவுகூரலாம். மேலும், சில குறியீடுகளின்படி அரபியின் நூன் என்னும் எழுத்து சூரியனைக் குறிக்கும் வானியல் எழுத்தாகும்.)

Related image
hiranyagarbha

வட்டத்தின் கீழ்ப்பாதி என்பது கப்பலைக் குறிக்கிறது எனில் (மொ.பெ.குறிப்பு: கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல, நூஹ் -à நோவா --à நாவாய் என்பதும் எண்ணத்தகும். நாவாய் என்றால் கப்பல் என்று பொருள்.), வட்டத்தின் மேற்பாதி வானவில்லைக் குறிக்கிறது. ஆங்கிலத்தில் Ark என்பதன் கராரான பொருள் கப்பல் என்பதுடன் வானவில் என்பதுமாம். (மொ.பெ. குறிப்பு: அதனையே arch என்று எழுதலாயிற்று. இக்கருத்து, மேல்வட்டமும் கீழ்வட்டமும் வேறுவேறு அல்ல என்னும் பார்வைக்கு, கிரேக்க தத்துவஞானியான ஹெர்மிஸ் திரிமெஜிஸ்டஸுக்கு அவரின் ஆசான் பைமாந்திரஸ் சொல்லித்தரும் பிரபஞ்ச ரகசியமான “எவ்வாறு மேலோ அவ்வாறே கீழும்” (ஒபோஸ் பரபானோ எத்ஸி காய் பரகாதோ) என்னும் தத்துவப் பார்வைக்கு, நம்மை இட்டுச் செல்கிறது.) ஒப்புமைகள் தலைகீழாய் இருப்பது இயல்பே.

இவ்விரு அரைவட்டங்களும் உலக முட்டையின் இரு பாதிகளாகும். ஒருபாதி நிலத்தில், கீழ் நீர்களில் இருக்கிறது; மறுபாதி விண்ணில் மேல் நீர்களில் இருக்கிறது. இவ்விரு பாதிகளும் பிரியும் முன் இருந்த ஆதி நிலையின் முழு வட்ட வடிவம் மீண்டும் யுக முடிவில் உண்டாக்கப்பட வேண்டும். எனவே, இரு வடிவங்களின் இணைவு என்பது, யுகத்தின் நோக்கத்தைக் குறிக்கிறது, அவ்வட்டத்தின் ஆரம்பத்துடன் அதன் முடிவை இணைப்பதைக் குறிக்கிறது. சூரியக் குறியீட்டியலின்படி இதனைக் காணும்போது மிகவும் தெளிவடைகிறது, அதாவது சம்ஸ்கிருத ‘ன்’ என்பதன் வடிவம் சூரிய உதயத்தையும் அரபியின் நூன் என்பதன் வடிவம் சூரிய அஸ்தமனத்தையும் குறிக்கின்றன.

இன்னொரு பக்கம் முழு வட்டம் என்பது பத்து என்னும் எண்ணின் வடிவம் ஆகும். அதன் மையம் ஒன்றையும் அதன் சுற்றுவட்டம் ஒன்பதையும் குறிக்கும். ஆனால் இங்கே அது இரண்டு நூன்களின் இணைவால் கிடைப்பதால் அதன் மதிப்பு 2X50=102 , என்றாகிறது. ஓர் இடையுலகில் (மொ.பெ.குறிப்பு: திரையுலகம். ஆலமுல் பர்ஸஃக், World of Isthmus) இவ்விரு வடிவங்களின் இணைவு செய்யப்படவேண்டும் என்பதை இது குறிக்கிறது. பகுப்பு மற்றும் பிரிப்புகளின் மண்டலமான கீழுலகில் இவ்விணைவு சாத்தியமன்று. அது சாஸ்வத இருத்தல் மற்றும் மாற்றமில்லா நிலைமை ஆகிய நோக்குகளில் உணரப்படும் மேலுலகில்தான் இவ்விணைவு நிகழ்த்தப்பட முடியும். (மொ.பெ.குறிப்பு: எழுத்துக்களுக்கு எண் மதிப்பு வழங்கப்படும் அப்ஜத் என்னும் முறையின்படி நூன் என்னும் எழுத்தின் மதிப்பு ஐம்பது ஆகும். உலகளாவிய தொல்மரபுகளில் நூறு என்பது முழுமையைக் குறிக்கும் எண்ணாக இருக்கின்றது.)

இந்த நீண்ட விளக்கங்களுடன் ஒரேயொரு விஷயத்தை நாம் மேலும் சொல்வோம். நாம் பார்த்து வந்த படிக்கு, யுக நிறைவு என்பதற்கு, வரலாற்று நோக்கில், ஒரு தொடர்ச்சி இருந்தாக வேண்டும். அதாவது அதன் தொடக்கம் மற்றும் முடிவுகளைக் குறிக்கும் மரபு வடிவங்களுக்கு இடையே ஓர் இணைவு இருந்தாக வேண்டும். அந்த தொடக்கமும் முடிவும் தமது புனித மொழிகளாக சம்ஸ்க்ருதம் மற்றும் அரபி ஆகியவற்றைக் கொண்டுள்ளன. ஒருபக்கம், ஹிந்து மரபு என்பது ஆதி மரபின் நேரடியான பாரம்பரியத்தைக் குறிக்கின்றது, மற்றொரு பக்கம் “இறைத்தூதின் முத்திரை”யாக இருக்கின்ற இஸ்லாமிய மரபு தற்கால யுகத்திற்கான தொல்மரபின் உன்னத வடிவமாக இருக்கின்றது.

(மொ.பெ.குறிப்பு: ரெனே கினானின் இந்த முடிவின் மீது மேலதிகமான ஆய்வுகளை நாம் நிகழ்த்திச் சில மாற்றங்களை உரைக்க முடியும். ஆனால், அவர் தந்திருக்கும் முடிவின் மிக நல்ல அம்சம் யாதெனில் ஹிந்து மரபு மற்றும் இஸ்லாமிய மரபு ஆகியவற்றுக்கிடையிலான ஆழ்ந்த தொடர்பைத் துலக்குகிறார் என்பதே. இந்து மரபைச் சனாதன தர்மம் என்று சொல்வதன் பொருளை இங்கே அவர் அதனை ஆதி மரபின் நேரடியான பாரம்பரியம் என்று சுட்டுவதில் காணலாம். இஸ்லாம் மேனோக்கிச் செல்லும்போது அடையுமிடமாக அதனைக் குறிப்பிடலாம், அதன் மொழிபுகளைச் சரியான நோக்கில் முஸ்லிம்கள் புரிந்துகொண்டால். அதே சமயம், இந்து மதம் குறிப்பிடும் கல்கி அவதாரத்தை நோக்கிச் செல்லும்போது அடையுமிடம் இஸ்லாமாகவே இருக்கும், இஸ்லாத்தின் மொழிபுகளைச் சரியான நோக்கில் இந்துக்கள் புரிந்துகொண்டால். இதனை இக்கட்டுரையின் கடைசி வரியில் ரெனெ கினான் சொல்லியிருப்பது காட்டுகிறது. சம்ஸ்க்ருதம் மற்றும் அரபி என்று ரெனே கினான் பகுப்பதில் ஒரு சிறு மாற்றம் அவசியம் என்று நான் கருதுகிறேன். யாதெனில், சம்ஸ்க்ருதம் என்னுமிடத்தில் தமிழ் இருக்கவேண்டும் அல்லது சம்ஸ்க்ருதத்துடன் தமிழ் இருக்கவேண்டும், அது சிவனின் உடுக்கையின் இருபக்கங்களின் மொழிகள் என்னும் சமன்வாத நோக்கில். தமிழின்றி மானுடத்தின் ஆதி நிலைகளை விளங்குதல் முழுமை பெறாது. இக்கட்டுரை நுவலும் பொருண்மைக்கு சம்ஸ்க்ருதத்துடன் தமிழ் மேலதிகமான விளக்கங்களைக் கொடுக்க முடியும் என்பதை எனது குறிப்புக்கள் காட்டியுள்ளன என்று நம்புகிறேன். அவற்றுடன் மேலும் சில சொல்லியாக வேண்டும்.

Image result for adam peak sri lanka
adam's peak, sri lanka.

உலகின் முதல் மனிதரான ஆதம் என்னும் பெயர் தமிழில் ஆதன் என்றாகிறது. அவர் சிரந்தீவு என்னும் இலங்கையில் இறக்கப்பட்டார் என்றொரு ஹதீஸ் தெரிவிக்கிறது. இலங்கையில் இப்போதும் சிவனடிபாதம் என்னும் ஆதம் மலை இருக்கிறது. (சிவனும் ஆதமும் ஒன்றுதான் என்னும் ஆய்வு உண்டு. வெளிவராத அந்த ஆழமான ஆய்வு திருச்சி கே.கே நகரில் இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்த, ஓய்வு பெற்ற மின்வாரியப் பொறியாளர் ஒருவரால் நிகழ்த்தப்பட்டது. அதன் கைப்பிரதியை நான் வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. அது நூலாக்கம் பெற்றதா என்றறியேன். அவரையும் இப்போது காணவில்லை.) நூஹ் என்னும் பெயரே நாவாய் என்னும் கப்பலுக்கு ஆனது நோக்க அவரும் தமிழரே என்னும் கருதுகோள் உள்ளது. அவர் வயிற்று வலியுடன் பிறந்தார் என்னும் குறிப்புண்டு. எனவே வலி என்று பொருள்படுமாறு அவரின் பெற்றோர் அவருக்குப் பெயர் சூட்டினார்களாம். வலி என்பதைக் குறிக்க நோவு என்னும் சொல் தமிழில்தான் இருக்கிறது. (புறப்பொருள் வெண்பாமாலையில் ஐயனாரிதனார் எழுதிய ஒரு பாடல் நுவலும் ”வையகம் போர்த்த வயங்கொலி நீர் / கையகலக் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே” என்னும் வரிகள் நூஹ் நபி சந்தித்த பிரளயத்தைச் சுட்டும் என்று கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்கிறார். அதன் விளக்கத்தை அவரெழுதிய “முன் தோன்றிய மூத்த குடி” என்னும் கட்டுரையில் காணலாம். நூல்: எம்மொழி செம்மொழி; வெளியீடு: நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை.)


மேலும், பாண்டியர்களின் சின்னம் மீன் என்பதை இக்கட்டுரையின் பொருண்மயுடன் இயைத்துப் பார்க்க இடமுண்டு. முத்தமிழரசருள் அவர்களே தொன்மையர். எனவேதான், பாண்டி என்னும் பெயர் பண்டு என்பதிலிருந்து வந்துள்ளது. தொன்மையானவர்கள், பழையவர்கள் என்று பொருள். அவர்களின் நிலம் ‘பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்து” என்று சொல்லப்படும் தென்குமரிக் கண்டமாக, லெமூரியக் கண்டமாக இருந்ததும் பின்னர் அது கடல்கொள்ளப்பட்டதும் பிரளயத்துடன் ஒப்புநோக்கற்பாலன. ‘நிலந்தரு திருவிற்பாண்டியன்’ என்னும் மன்னனின் பெயர் நூஹ் நபியின் பணியை நினைவூட்டுவதாக உள்ளது. நிலந்தருதல் என்பது பிரளயத்திற்குப் பின் நிலம் கண்டறிந்ததைச் சுட்டுவதாகச் சொல்லலாம் என்னும் கருத்தும் ஆய்வுலகில் உண்டு. ரெனெ கினான் தமிழறியாமல் போனது அவர் இயங்கிய சமயத்துறைக்கு மட்டுமல்லாது அவருக்குமே தனிப்பட்ட முறையில் இழப்பாகத்தான் இருக்கும். இந்திய மரபு என்பதை சம்ஸ்க்ருதம் என்பதாக அர்த்தப்படுத்திக்கொண்டு தமிழை ஏறெடுத்தும் பாராதிருந்துவிடும் நிலை இன்னமும் நீடிக்கத்தான் செய்கிறது. அதனால் நிகழும் அறிவிழப்பு சாலப் பெரிது.)

the end.

நூன் என்னும் எழுத்தின் மர்மங்கள் - part 1

ரெனெ கினான்

Related image
Rene Guenon a.k.a. Abdul Wahid Yahya.

நூன் என்பது அரபி மற்றும் ஹீப்ரூ மொழிகளில் பதினான்காவது எழுத்து ஆகும். ஒலியியல் அடிப்படையில் அதன் மதிப்பு ஐம்பது. எனினும், 22 எழுத்துக்களைக் கொண்ட ஹீப்ரூவை விடவும் 28 எழுத்துக்கள் கொண்ட அரபி அட்சர வரிசையில் அதன் தனித்தன்மை அழுத்தமானது, ஏனெனிலது முதல் பாதியின் முடிவைக் குறிக்கிறது. (மொ.பெ. குறிப்பு: ரெனெ கினான் சொல்வது போல் இருக்கவேண்டும் எனில் நூன் என்பது அரபி எழுத்து வரிசையில் 15-வது எழுத்தாக இருக்க வேண்டும். ஆனால் அது 25-வது எழுத்தாகவே அமைந்துள்ளது. ஆனால் அவர் குறிப்பிடும் தனித்தன்மையை நீங்கள் ஆங்கில அட்சரங்களில் காணலாம். 26 எழுத்துக்கள் கொண்ட அதில் M என்பது 13வது எழுத்தாகவும், அதாவது முதற்பாதியின் முடிவாகவும், N என்பது மறுபாதியின் துவக்கமாகவும் அமைந்திருக்கிறது. ஆங்கில மொழியை உருவாக்கியவர்கள் இக்கருத்துப் பொதிய அமைத்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.)

      குறியீட்டியல் அடிப்படையில் இவ்வெழுத்து இஸ்லாமிய மரபில் முதன்மையாக ’அல்-ஹூத்’தை (திமிங்கலத்தை)க் குறிக்கிறது. இது நூன் என்பதன் அசல் அர்த்தத்துடன் பொருந்துகிறது. அதிலிருந்தே இவ்வெழுத்துப் பெயர் பெற்றுள்ளது. மேலும் அது மீன் என்னும் பொருள் கொண்டுள்ளது. அதனால்தான் சய்யிதினா யூனுஸ் (Jonah) அவர்கள் ’துன்னூன்’ என்று அழைக்கப்படுகிறார். (மொ.பெ. இந்த இறைத்தூதர் சில காலம் ஒரு பெருமீனின், அதாவது திமிங்கலத்தின் வயிற்றில் இருந்தார்கள். எனவே மீனுடையவர் என்று சிறப்புப்பெயர்.)

      இது பொதுவாக மீன் குறியீடுகளுடனும் குறிப்பாக மீன்-மீட்பர் என்னும் குறியீட்டுடனும், அதாவது இந்து மரபின் மத்ஸ்யாவதாரம் மற்றும் ஆரம்பக்காலக் கிறித்துவர்களின் இச்தஸ் உடனும் பொருந்துகிறது. மேலும் இது வேறு மரபுகளில் ஓங்கில் (dolphin) பெற்றிருக்கும் மதிப்பிடத்துடன் ஒப்பு நோக்கும் நிலையில் உள்ளது. ஓங்கில் என்பது ஓரைகளில் மகரத்தைக் குறித்து நின்று சுக்ல பட்சத்தின், அதாவது ஏறுவழியின் வாயிற்கதவாக இருக்கின்றது.

      நூன் என்னும் எழுத்தின் வடிவத்தை நோக்கும்போது, குறிப்பாக அதனை இறைத்தூதர் யூனுஸ் அவர்களுடன் தொடர்புறுத்திக் காணும்போது அது மத்ஸ்யாவதாரத்துடன் கொண்டுள்ள பொருத்தங்கள் மிகவும் ஆச்சரியமூட்டுகின்றன.

Related image

      இதனை நன்றாக விளங்கிக்கொள்ள சில அடிப்படைகளை நாம் நினைவுகொள்ள வேண்டும். விஷ்ணு ஒரு மீன் (மத்ஸ்ய) வடிவம் கொண்டு எதிர்கால மனுவாகிய சத்யவ்ரதனுக்குக் கட்டளையிடுகிறான், எதிர்கால உலகின் விதைகளை எல்லாம் சுமக்கின்ற ஒரு பெரிய கப்பலைக் கட்டுமாறு. பிறகு, இரண்டு மன்வந்தரங்களைப் பிரிக்கும் பெருவெள்ள நிகழ்வுக்குப் பின் அவன் அதே வடிவில் அந்தக் கப்பலை வழிநடத்திச் செல்கிறான். இதில், சத்யவ்ரதனின் பணி சய்யிதினா நூஹ் (Noah) அவர்களின் பணியை ஒத்திருக்கிறது. நூஹ் நபியின் கப்பலும் பிரளயத்திற்குப் பின் புணருத்தாரணம் செய்யப்படப்போகும் எதிர்கால உலகிற்கான அனைத்துப் பொருள்களையும் வைத்திருந்தது.

      இவ்விரு மரபுகளுக்கும் இடையில் சில வேறுபாடுகள் இருக்கலாம். பைபிள் சொல்லும் பிரளயம் இந்து மரபின் மன்வந்தரத்தைக் காட்டிலும் சிறிய காலச் சுழற்சியாக இருக்கிறது, ஒருவேளை அவை ஒரே சம்பவமாக இல்லாத பட்சத்தில், அவை ஒன்றுக்கொன்று ஒப்புடையவையாக இருக்கின்றன. இரண்டிலுமே, உலகின் முந்தைய நிலை அழிக்கப்பட்டு ஒரு புதிய நிலை உருவாக்கப்படுகிறது.

      யூனுஸ் நபியின் நிகழ்வை நோக்கினால், அதில் திமிங்கலம் என்பது வெறுமனே கப்பலை வழிநடத்துமொரு மீனாக அன்றி அதுவே ஒருவித கப்பலாக இருக்கிறது. கப்பலில் இருக்கும் சத்யவ்ரதன் மற்றும் நூஹ் நபி போல யூனுஸ் நபி மீனுக்குள் இருக்கிறார்கள். அக்காலம் அவருக்குமே, வெளியுலக ரீதியில் அல்ல எனினும் அகவுலக ரீதியில், இருத்தலின் இரண்டு நிலைகளுக்கு இடையிலான ஒரு இருளுடைய (தெளிவற்ற) காலகட்டமே. (மொ.பெ.குறிப்பு: யூனுஸ் நபி மீனின் வயிற்றுக்குள் இருந்த நிலையை இருள் என்று குர் ஆன் கூறுவதைக் கவனிக்கவும் : “ஃபநாதா ஃபிழ்ழுலுமாத்” – அவர் ஆழ்ந்த இருளிலிருந்து அழைத்தார் (பிரார்த்தித்தார்) – 21:87). இவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் இரண்டாம் பட்சமானவையே. ஏனெனில் ஒரே குறியீட்டுருவங்கள் அண்ட மற்றும் பிண்ட நிலைகளில் இருவித பொருள் கொள்வது இயல்பேயாகும். மேலும் மீன் வயிற்றிலிருந்து யூனுஸ் நபி வெளிப்படுவது ‘உயிர்த்தெழுதல்’ என்பதன் குறியீடாகவே காணப்படுகிறது. அதாவது ஆன்மா ஒரு புதிய நிலைக்குக் கடந்து போவதைக் குறிக்கிறது. ஹீப்ரூ மரபான கப்பாலாவில் நூன் என்னும் எழுத்துடன் பிறப்பு என்னும் பொருண்மை தொடர்புறுத்தப்படுவதை கவனிக்க வேண்டும்.

Image result for nun arabic letter

      அரபி எழுத்தான நூன் என்பதன் அசல் வடிவமும் இக்கருத்தினையே மேலும் தெளிவாகக் குறிக்கக் காண்கிறோம். அதன் வடிவம் ஒரு வட்டத்தின் கீழ்ப்பாதியான அரைவட்டமும் அதன் மையப்புள்ளியும் ஆகும். வட்டத்தின் கீழ்ப்பாதி நீரில் மிதக்கும் கப்பலைக் குறிக்கிறது. அதன் மையப்புள்ளி அக்கப்பலினுள் வைக்கப்பட்டுள்ள விதையைக் குறிக்கிறது. அதாவது, அப்புள்ளி “மனித இனத்தின் விதை” என்று பொருள்படும் அல்லது பிரளயத்தில் அழிந்துபோகாமல் காப்பாற்றப்படுகின்ற உயிரினங்களின் சாரம் என்பதாகப் பொருள்படும். (மொ.பெ. குறிப்பு: நூன் என்னும் எழுத்து இறைத்தூதர் நூஹ் (ஆங்கிலத்தில் நோவா) அவர்களின் பெயரின் முதல் எழுத்தாக அமைந்திருப்பதும் தற்செயலாக இருக்க முடியாது. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், சம்ஸ்க்ருதத்தில் ஓம் என்று எழுதும்போது ம் என்னும் எழுத்து அரபி அட்சரமான நூன் என்னும் எழுத்தின் வடிவத்திலேயே எழுதப்படுகிறது. ம் மற்றும் ன் ஆகிய எழுத்துக்கள் ஒன்றினுக்கு ஒன்று பகரமாய் அமையக்கூடியவை. அரபியில் மீம் மற்றும் நூன் ஆகிய அவ்வெழுத்துக்கள் அடுத்தடுத்து நிற்பவை, அதாவது 24 மற்றும் 25-வது எழுத்துக்களாக. ஆங்கிலத்திலும் அவை MN என்று தொடர்ந்து நிற்பதை முன்பே சொன்னோம். மேலும், எழுத்துக்களுக்கு உரிய சாரியைகளைக் கவனிக்க, குறிலுக்கு கரம் மற்றும் நெடிலுக்கு காரம் ஆகிய சாரியைகள், ம் என்னும் எழுத்தைப் பேச்சில் ’மகரம்’ என்று சொல்வோம். சம்ஸ்க்ருதத்தில் மகரம் என்பது நீர்வாழ் விலங்கான முதலையைக் குறிக்கிறது என்பதும் அரபியில் நூன் என்றால் மீன் என்பதும் எண்ணத்தகும்.)

      இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில், நூன் என்னும் எழுத்தின் கீழ்ப்பாதி வட்ட வடிவமானது கோப்பை என்பதையும் குறித்து நிற்பதாம். அவ்வகையில் அது, விதை இன்னமும் முழுமையாய் வளர்ச்சியடையாத நிலையிலிருக்கும் கருவைத் தாங்கிய பாத்திரம் என்பதைக் குறிக்கும். அதன் நீட்சியாக, ககன முட்டை அல்லது உலக முட்டை என்பதன் கீழ்ப்பாதியான நிலவுலகைக் குறிக்கும். (ஆங்கிலத்தில் MATRIX –தாய்த்தொகுதி அல்லது கரு- என்பதை சம்ஸ்க்ருதத்தில் யோனி என்பர். இக்கருத்து கிரேக்கச் சொல்லான டெல்ஃபஸ் என்பதிலும் உள்ளது. அதே சமயம் டெல்ஃபஸ் என்பது டால்ஃபின் என்னும் மீனையும் குறித்து நிற்கிறது.)

Image result for om sanskrit art

(மொ.பெ.குறிப்பு: ரெனே கினான் தரும் இக்குறிப்புக்கள் மேலும் ஆச்சரியத்துடன் நிட்சி கொள்கின்றன. ’கருவைத் தாங்கிய பாத்திரம்’ என்று அவர் சொல்வதைக் கருப்பை / கர்ப்பப்பை என்று ஒற்றைச் சொல்லில் கூறிவிடலாம். பிரளயத்தின் பின்னான உயிரினங்களின் மறு உருவாக்கம் என்னும் பின்னணியிலேயே இக்கட்டுரை விரிவதைக் கவனிக்க, ஓம் என்னும் பிரணவ மந்திரம் ‘பீஜ மந்திரம்’ (விதை மந்திரம்) என்று சொல்லப்படுவதும், அதுவே அனைத்துப் படைப்புக்களின் ஆதியொருமை (தாய்த்தொகுதி, உறுப்புக்கள் இன்னமும் பிரிக்கப்படாத முழுமையான கரு) என்னும் நிலையைச் சுட்டுவதையும் காணலாம். ஆங்கிலத்தில் கருப்பையை ஓம்ப் (WOMB) என்று சொல்வதன் ஓசைப் பொருத்தமும் இங்கே நினையத்தகும். போஷித்தல் (அரபியில் தர்பிய்யத் என்பர். அதனைச் செய்பவனே ரப் – ரட்சகன் என்று அழைக்கப்படுகிறான்.) என்பதைக் குறிக்கும் தமிழ்ச்சொல்லான ’ஓம்புதல்’ என்பதன் ஓசைப்பொருத்தமும் நினையத்தகும். ஏனெனில் போஷிப்பில் முதல் நிலை கருவைப் போஷித்தல்தான். இச்சொல்லின் திரிபாகவே கருவுண்டாகும் கலவிச்செயலைக் குறிக்குமான தமிழ்ச்சொல்லும் உருவாகி இன்னாச்சொல்லாக வழங்கிவருதலாயிற்று எனலாம். ’ஆகு’ என்பதற்கான அரபிச்சொல் ’குன்’ என்பதாகும். அதன் ஈற்றெழுத்தான் நூன் என்பது ‘விதை தாங்கிய கருப்பை’ என்பதைக் குறிக்கும் என்று காண, முதலெழுத்தான காஃப் என்பது கருவில் விதையை வைக்கும் ஆண்பாலைக் குறிப்பதாக அர்த்தம் பெறுகிறது. குன் என்பது ஆண்-பெண் இணைவையும் கருவறைக்குள் விதை வைக்கப்படுவதையும் குறிப்பதாகிறது. ஜோடிகளை வைத்து அபிவிருத்தி செய்வதுதானே இறைவன் வகுத்தமைத்த நியதி? மேலும், Word Egg (உலக முட்டை) என்று ரெனெ கினான் குறிப்பிடுவது தமிழில் இன்னும் கூர்மையாக அண்டம் என்னும் ஒற்றைச் சொல்லில் அமைந்துவிடுகிறது. அண்டம் என்பது உலகம் என்றும் பொருட்படும்,  முட்டை என்றும் பொருட்படும். மேலும், டெல்ஃபஸ் என்பது யோனி அல்லது கருவைக் குறிப்பதோடு டால்ஃபின் என்னும் மீனையும் குறிக்கும் என்று ரெனெ கினான் சொல்கிறார். ஓம் என்னும் பிரணவம் பிரபஞ்சக் கருவைக் குறிக்கிறது என்பதுடன் இதனை இயைந்து காண, ஓம் என்பதை ஓங்காரம் என்று தமிழில் சொல்வதுடன் டால்ஃபின் என்பதற்குத் தமிழ்ப்பெயர் ’ஓங்கில்’ என்றிருப்பதன் ஒலிப்பொருத்தமும் நினைத்தற்பாலது.)


      இக்கோணத்தில், ஆன்மிக மாற்றத்தின் இசைவம்சமாக அல்-ஹூத் (திமிங்கல மீன். மொ.பெ.குறிப்பு: தமிழில் இம்மீனுக்குரிய இப்பெயரிலேயே கப்பலைக் குறிக்கும் கலம் என்னும் சொல்லும் உள்ளடங்கியிருப்பது மேலும் வியப்பளிக்கிறது.) தன்னுள் அமரத்தன்மையின் விதையைச் சுமந்திருக்கும் ஒவ்வொரு மனிதனையும் குறிப்பதாக அமைகிறது. இதயம் என்னும் குறியீடு கொண்டு இது சுட்டப்படுகிறது. இதயம், கோப்பை மற்றும் உலகமுட்டை ஆகியவற்றுக்கிடையில் உள்ள குறியீட்டுத் தொடர்புகளை இங்கே நாம் நினைவுகூர்வோம். மனிதனின் ஆன்மா அவனது தனிநபர் நிலையிலிருந்தும் அதனைச் சூழ்ந்திருக்கும் பிரபஞ்ச நிலையிலிருந்தும் வெளிப்படுகிறது, யூனுஸ் நபியின் ’மறுவாழ்வு’ அவர்கள் திமிங்கலத்தின் வயிற்றிலிருந்து வெளிவந்ததாக இருந்தது போல. இது கருவறையிலிருந்து குழவி வெளிப்படுவதன் நிகராகும் எனலாம். மீனின் வயிறு மற்றும் கருவறையின் உட்குடைவு ஆகியவற்றை நூன் என்னும் எழுத்தின் கீழ்ப்பாதி வட்ட வடிவம் குறிக்கின்றது.

      புதிய பிறப்பு என்பது பழைய நிலையின் மரணம் ஆகும், தனிமனித நிலையிலும் சரி உலக நிலையிலும் சரி. இறப்பும், பிறப்பு அல்லது மறுவுயிர்ப்பும் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்தவை அல்ல. அவை ஒரே நிலை மாற்றத்தின் இரண்டு எதிர்முகங்கள். அரபி அட்சரங்களில் நூன் என்னும் எழுத்து மீம் என்னும் எழுத்தைத் தொடர்கிறது. மீம் என்னும் எழுத்தின் பிரதான பொருள்களில் ஒன்று ”மவ்த்” (மரணம்) என்பதாகும். அரபியில் மீம் என்னும் இவ்வெழுத்தின் வடிவம் மனிதனின் தோற்ற நிலையைக் குறிக்கிறது. அதாவது முற்றிலும் ஆட்பட்ட /  அடிபணிந்த ‘சஜ்தா’ என்னும் தலைவணங்கிய நிலையைக் குறிக்கிறது. வெளித்தோற்றத்தில் இது தான் இல்லாமல் ஆகின்ற அழிவைக் குறிக்கிறது என்றாலும், தனது சாத்தியங்கள் அனைத்தையும் ஒரு புள்ளியில் (மொ.பெ.குறிப்பு: சஜ்தா செய்யுமிடத்தையே தொழுகையின் நிலைகளில் நோக்கியிருக்க வேண்டும் எனும்படிக்கு), தனித்த, அழிவற்ற புள்ளியில், குவிப்பதைக் குறிக்கின்றது. அப்புள்ளியானது அனைத்து மேனிலைகளும் வளர்வதற்கான விதையாகிறது.

Image result for whale and yunus

      இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும், திமிங்கலம் என்னும் குறியீட்டில் ஆக்க அம்சம் அன்றி ஓர் அழிவு அம்சமும் இருக்கிறது. குறியீடுகளின் தெளிவற்ற, இருபொருட்படுகின்ற தன்மையை வைத்து மாத்திரம் அல்ல, திமிங்கலம் என்னும் குறியீடு இறப்பு மற்றும் மறுவுயிர்ப்பு ஆகியவற்றுடன் கொண்டுள்ள தொடர்பால் அது நியாயப்படுத்தப்படுகிறது. ஒரு நிலையில் மாற்றம் என்பது இறப்பு மற்றும் பிறப்பால் நிகழ்கிறது. குகை (cavern) (மொ.பெ.குறிப்பு: கருவறை அல்லது மீனின் வயிறு என்பதை இச்சொல்லால் குறிக்கிறார்) என்பது புதைக்கப்படும் இடமாகவும் இருக்கிறது, அதேசமயம் ’மறுபிறப்பு’க்கான இடமாகவும் இருக்கிறது. யூனுஸ் நபியின் கதையில் திமிங்கலம் இவ்விரட்டைப் பணியைச் செவ்வனே ஆற்றுகிறது. மேலும், மத்ஸ்ய அவதாரமும் தானொரு மீட்பர் என்னும் பணியை ஏற்கும் முன் பேரழிவான பிரளயத்தை அறிவிக்கும் தீயவுருவில் தோன்றவில்லையா?

Image result for leviathan
leviathan.

தனது அழிவாம்சத்தில், திமிங்கலம் என்பது ஹீப்ரூ மரபின் லிவியாதன் (Leviathan) என்பதைக் குறிக்கின்றது. (கடல் மிருகமான இது ஹிந்து மரபின் மகரம் ஆகும். ஓரையின் மகர விண்மீனுடன் தொடர்புள்ள ஆக்க அம்சங்களுடன் கிரேக்க புராணவியலின் முதலையான டைஃபோன் என்பதன் அழிவாம்சங்களையும் ஒருசேரப் பெற்றுள்ளது.)  (மொ.பெ.குறிப்பு: லெவியத்தன் என்பது புறச்சமய பௌராணிகத் தொகுதியிலிருந்து பைபிளுக்குள் வரித்தெடுக்கப்பட்ட அசுர விலங்கு. அது திமிங்கலமாகவும் முதலையாகவும் காட்டப்படுகிறது. ஆனால் ஹீப்ரூ மொழியில் லிவியாதன் என்பதற்கு முறுக்கிய அல்லது திருகிய என்று பொருள். அவ்வகையில் அது பாம்பினைக் குறிப்பதாகக் காணலாம். ”நாளை சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பப்பண்ணத் தக்கவர்களும், அதைச் சபிப்பார்களாக” (பழைய ஏற்பாடு: யோபு:3:8) என்னும் பைபிள் வசனத்தின் மறுவாசிப்புப் பிரதியில் லிவியாதன் என்பது இருளுக்கு எதிரான ராட்சத சர்ப்பம் என்பதாக கீழைத்தேய பௌராணிகத்தின்படி பொருள்கொள்ளப்படுகிறது. அதாவது, கிரகண நிகழ்வைக் குறியீடாகச் சொல்லும், ஒளியை அறிவை விழுங்கும் அறியாமையைச் சொல்லும், கேதுவை விழுங்கும் ராகு என்னும் பெரும்பாம்பு. ”லிவியாதானைத் தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ? அதின் மூக்கை நார்க்கயிறு போட்டுக் கட்டக்கூடுமோ? குறட்டினால அதின் தாடையை உருவக் குத்தக்கூடுமோ?” (பழைய ஏற்பாடு: யோபு: 41:1,2) என்பதில் அது முதலையாகக் காட்டப்படுகிறது. ”அதிலே கப்பல்கள் ஓடும்; அதிலே விளையாடும்படி நீர் உருவாக்கின திமிங்கலங்களும் உண்டு” (”There the ships go to and fro, and the Leviathan, which you formed to frolic there” பழைய ஏற்பாடு: சங்கீதம்: 104:26) என்பதில் லிவியாதன் என்பது திமிங்கலமாகக் காட்டப்படுகிறது. அல்லது அது, தன் உடலை முறுக்கியபடி இயங்கும் எவ்வொரு பெரிய விலங்கினையும், ஆழ்கடல் மிருகத்தையும் குறிக்கலாம் என்பர். ”தேவரீர் முதலைகளின் தலைகளை நறுக்கிப் போட்டு, அதனை வனாந்தரத்தின் ஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தீர்” (பழைய ஏற்பாடு: சங்கீதம்: 74:14) என்பதில் எகிப்தின் செங்கடற்கரையில் வீழ்த்தப்பட்ட எதிரியாக அது காட்டப்படுகிறது. ”அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்” (பழைய ஏற்பாடு: ஏசாயா: 27:1) என்பதில் அது பெரும்பாம்பாகக் காட்டப்படுகிறது. இரு பாம்புகளாக இங்கே சொல்லப்பட்டவை அச்சிரிய மற்றும் பாபிலோனியப் பேரரசுகளைக் குறிப்பதாகவும் வியாக்கியானமுள்ளது.)

அரபியரின் மரபில் இவ்வம்சம் முதன்மையாக ‘பனாத்தல் ஹூத்’ (திமிங்கலத்தின் மகள்கள்) என்பதால் குறிக்கப்படுகிறது. இது வானியல் நோக்கில் இந்து மரபின் ராகு மற்றும் கேதுவைக் குறிப்பதாகக் காணலாம், குறிப்பாக அவை கிரகணத்துடன் கொண்டுள்ள தொடர்பால். அது, யுகமுடிவு நாளில் பெருங்கடலைக் குடித்து முடிக்கும். அந்நாளில் விண்மீன்கள் “மேற்கில் உதயமாகிக் கிழக்கில் சாயும்”. (மொ.பெ. குறிப்பு: உலக முடிவு நாளின் அடையாளங்களாக நபிகள் நாயகம் சொன்னவற்றுள் ‘சூரியன் மேற்கில் உதிக்கும்’ என்று சொன்னதை இங்கே நினைவு கூர்க.) இப்பொருண்மையை மேலும் நீட்டித்தால் நாம் எடுத்துக்கொண்ட அடிக்கருத்தை விட்டும் விலகிச் செல்ல நேரும். எனவே, போகிற போக்கில் ஒரு குறிப்பாக நாம் சொல்வதெல்லாம், இதிலும் நாம் யுக முடிவு மற்றும் அதனைத் தொடரும் நிலைமாற்றம் ஆகிவற்றிற்கான நேரடிக் குறிப்பைக் காண்கிறோம். இதுவே தன்னளவிலொரு முக்கியக் குறிப்பாகவும் நாம் இதுகாறும் சொல்லிவந்தவற்றை வலுப்படுத்துவதாகவும் அமைகிறது.


Friday, June 16, 2017

எல்லோர்க்கும் பெய்த மழை

Related image

இன்னொரு மழைத்தருணம்தான்
என்றாலும்
மீண்டும் புத்தம் புதிதாய்

மேகங்கள் திரண்டுவரும்போதே
காற்று கட்டவிழ்த்துக்கொண்டது

ஓரிரு துளிகள் விழுகையிலேயே
பறவைகள் தம் சிறகுகள் படபடக்கப்
பரவசமுற்றுத் திரிந்தன

சுவர்களிலும் புற்களிலுமாய்
சாயும் வெய்யிலில்
அழகு காட்டும் சிறுமியின் முகம்

அந்தத் தேக்கிலைகளில்தான்
என்னவொரு பிரகாசம்!

எண்ணெய் தடவிக்கொண்டு
குளியலுக்குத் தயாராகி நிற்கின்றன
சிறார்கள் போல
பளபளக்கும் தென்னங்கீற்றுக்கள்

கீதாரிப் பெண்கள்
துரிதப்படுத்துவதைக் கண்டுகொள்ளாமல்
இக்கணம் விருந்தாகி வந்துள்ளதென்று
மேயுமின்பம் திளைக்கின்றன
வெள்ளாடுகள்

பலமுறை அப்படிப்
பார்த்ததுதான் என்றாலும்
இரட்டை வானவில்
இரட்டை மகிழ்ச்சிதான்

வலுக்காத மழைத்தூரல்
காற்றில் திசை மாறிக்கொண்டு
இப்படியும் அப்படியும் பெய்கிறது
“காற்று வந்து இப்படிக் கலைக்கிறதே”
என்று வருந்துகிறார் என் மனைவி

காற்று ஒளி நீர் மண் யாவும்
ஒன்றிலொன்று மயங்கும்
லீலை அல்லவா இது?

மழை சற்று ஓய்ந்தபோது
நெடிய ஜன்னலருகே
நாற்காலியிட்டு அமர்ந்துகொண்டேன்

முகத்தில் துடைப்பதுபோல்
அகத்தில் துடைக்கிறது
என்னையொரு சிறுவனாக்கி
வயதழிக்கும் மழைக்காற்று

பள்ளிவிட்டுத் திரும்பும் சிறுமிகள்
தூரல் துய்க்கும் தூமலர் முகத்தில்
சிரிக்கும் அழகேந்திச் செல்கிறார்,
சைக்கிள் கேரியரில் புத்தகப் பை
நனைவதன் கவலை ஏதுமின்றி

தாளமிடும் தகரக்கூரைக்குக் கீழே
என் ஸ்கூட்டரும்கூட
சிலிர்த்துக்கொண்டதாய்த் தோன்றியது

கண்ணாடி அணியாது வெளிக்கிளம்பினேன்
ஈரமழைக் காற்றின் ஸ்பரிசம்
வேண்டி நின்றன என் கண்கள்

ஏழெட்டு நாட்களே ஆன நாய்க்குட்டிகள்
புளகித்துப் புரள்கின்றன
வனத்துறை அலுவலகத் திருப்பத்தில்.
தம் வாழ்வில் அவை காணும்
முதல் மழை அல்லவா இது?
வாழ்த்துக்கள் பிள்ளைகளே!

நல்லுயிர்கள் இருப்பனவால்
எல்லோர்க்கும் பெய்த மழை
இன்பம் நல்கிற்று
மனிதனுக்கும்கூட.