Thursday, June 8, 2017

வெறுமனே பார்த்திருந்ததில்...

Image result for child eyes

உன் சமூகம்
எனக்கு முன்னும் பின்னும்
இடமும் வலமும்
மேலும் கீழும்
என்னிலுமாய்
என்னுடன் செல்கிறது

எத்திசையிலும்
தூர அளவேதும் இல்லை நினக்கு
சரியாகச் சொன்னால்
திசைகள் என்பதே இல்லை

கேட்கவோ தேடவோ
தட்டவோ இல்லை நான்
வெறுமனே பார்த்திருந்ததில்
அகப்பட்டுவிட்டாய் நீ

கூடுகளின் மகிமை அறிந்தவனே
கூண்டுகளை உடைக்கிறான்
நின் காதலின் ஸ்பரிசத்தால்
எனது கூண்டே ஒரு கூடாயிற்று

ஒரு குழந்தையினது போல
வார்த்தை மாம்சமானது
அர்த்தம் அழகாயிற்று
கால நியதியில்
சொல் மரூஉ ஆனபோதும்
அர்த்தம் அதுவேதான் அல்லவா?

மௌனமாய் அரும்பியிருத்தல்
ஒவ்வொரு சமயம்
ஒரு யுவதியின் நகிலென
கசிந்துருகித் தொழுதல்
ஒவ்வொரு சமயம்
ஒரு தாயின் முலையென

கன்னமே இல்லாதவன்
பெறாமல் போகலாம்
அறைகளேதும்
இழந்து போகிறான் அவன்
முத்தங்களை எல்லாம்

மனிதகுமாரன் (பனீஆதம்)
அப்பத்தால் மட்டுமே ஜீவிப்பதில்லை
என்னும் ஞானத்தைச்
சுவைத்துக்கொண்டிருக்கிறேன்
இந்த நோன்பு மாதத்தில்


Tuesday, June 6, 2017

பருந்தின் பாடல்

Related image

ஜுன் 5 “உலகச் சுற்றுச்சூழல் தினம்” என்றது செய்தித்தாள். அப்படியா? என்று வியந்துகொண்டேன். யார் இதையெல்லாம் நிர்ணயம் செய்கிறார்கள். உலக அழகி என்னும் அறிவுப்புக்களைப் போன்ற அபத்தங்களாகவே இந்த நாள் குறிப்புக்களும் படுகின்றன. இதற்கான நாள் அதற்கான நாள்... எனக்கோ எல்லாம் எல்லா நாளிலும் சாஸ்வதம். மொத்த வாழ்வும் ஒரு நாள். அதுவே எல்லாக் குறிப்புக்களையும் கொண்டுள்ளது.

      “இயற்கையோடு வாழவும், விளையாடவும் நேரம் ஒதுக்குங்கள்” என்னும் தலைப்பிலொரு கட்டுரை (தி இந்து, திங்கள் ஜூன் 5, 2017; ப.5.). அப்படிச் சொல்ல வேண்டிய நிலையில் நாம் ஆகிவிட்டோம் என்பதே துயர்தான். காற்றோடு விளையாட நேரம் ஒதுக்குங்கள் என்று சொல்லலாம், காற்றோடு வாழ நேரம் ஒதுக்குங்கள் என்று சொல்ல முடியுமா? ஒவ்வொரு கணமும் சுவாசிக்க அது வேண்டுமே? இயற்கை நமக்குக் காற்றினைப்போல் அவசியமான ஒன்று என நாம் உணரத் தவறிவிட்டோம் என்பதையே இத்தலைப்பு உணர்த்துகிறது.

      ”இயற்கையோடு மக்களை இணைத்தல்” (Connecting People with Nature) என்னும் அடிக்கருத்தை வைத்து எழுதப்பட்ட அக்கட்டுரையில் இணைத்தலுக்கான வழிமுறைகள் சிலவற்றை மதுரை அமெரிக்கன் கல்லூரியின் விலங்கியல் பேராசிரியர் எம்.ராஜேஷ் மிகுந்த அக்கறையுடன் சொல்லியிருந்தார்.

      ”இயற்கையை ரசிக்கும்போது இறைவனின் படைப்பில் இவ்வளவு அற்புதமா, எவ்வளவு அழகாக இருக்கிறதே என்று சொல்லும்போது, நம்மை அறியாமலேயே நம்முடைய தசை நார்கள் சுருங்கி விரியும்போது இயற்கையோடு இணைகிறோம். நமக்குக் கூடுதல் சக்தியும் சிந்திக்கும் திறனும் ஏற்படுகிறது.
     
”வனப்பகுதிக்குள் செல்வதென்றால் நடந்துதான் செல்ல முடியும். அப்படிச் செல்வதால் நல்ல உடற்பயிற்சியும் காற்றும் கிடைக்கும்.” என்றும்,

      ”காடுகளுக்குச் சென்று வந்தால் இயற்கையாகவே மனதில் மாற்றம் நிகழ்கிறது. அதனால், வீட்டுக்கு அருகில் இருக்கும் இயற்கையான ஒரு இடத்துக்குச் செல்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இப்படி தினமும் இயற்கையோடு இணைந்து வேலை பார்த்தால் சுற்றுச்சூழல் நமக்கு உகந்ததாக மாறும்” என்றும் அவர் சொல்லியிருந்த கருத்துக்களில் எல்லாம் ஒரு மனிதமையப் பார்வை (Anthropocentric view) இருப்பதைக் கண்டேன். அழுது அடம் பிடிக்கும் வால் பிள்ளையைச் சமாதானப்படுத்த அதனை தாஜா செய்து சாம-தான முறைகளில் கெஞ்சுவது போல் இந்த அறிவுரைகள் நம் முன் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இயற்கையின் எதிர்வினை பேத-தண்ட முறையில்தான் இருக்கும் என்பதை நாம் கவனிக்க வேண்டும். நிலநடுக்கங்கள் ஆழிப்பேரலைகள் சூறாவளிகள் என்று எத்தனை முறை நம்முடன் பேசிவிட்டது?

Image result for saleem khan chennai environmentalist

      நாளேற, வாட்ஸ்-அப்பில் ஒரு செய்தி வந்திருந்தது. சுற்றுச்சூழல் மற்றும் பருவகால மாற்றம் பற்றி ஆய்வு நிகழ்த்திவரும் விஞ்ஞானி சலீம் ஃகான் அனுப்பியிருந்தார் (அவர் என் மனைவியின் ஒன்றுவிட்ட தம்பி.) தி இந்து ஆங்கில நாழிதளின் மெட்ரோ ப்ளஸ் இணைப்பில் சென்னையில் இந்நாளை முன்னிட்டு நிகில்.அஸ்ரானி என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றின் க்ளிப்பிங் அது. சலீம் ஃகானின் மேற்கோள் ஒன்று அதில் இடம்பெற்றிருந்தது: “நாம் விழிப்படைந்து உணர்ந்து நமது வாழ்முறையைத் தேர்வு செய்து, உலகளாவிச் சிந்தித்து ஊர் சார்ந்து செயல்பட்டு வன்முறையற்றுப் பணியாற்ற வேண்டும் என்பது மிகவும் முக்கியம். தமது வாழ்வுக்கு அலையாத்திக் காடுகளையே முழுவதும் சார்ந்திருக்கும் பிச்சாவரத்தின் இருளர்கள் போன்ற சிறு சமூகங்கள் பல இருக்கின்றன. கடற்கரைப் பகுதிகளில் நிகழும் இயற்கைப் பேரிடர்களின் போது அலையாத்திகள் காப்பரண் ஆகின்றன. நாம் இப்போது செயல்படாவிடில் அலையாத்திகள் விரைவில் அற்றுவிடும் என நான் அஞ்சுகிறேன்.”   
     
 ”தி க்ரீன் புக்” என்னும் தலைப்பிட்ட அக்கட்டுரையில் முகப்புரையாக அஸ்ரானி பின்வருமாறு எழுதியிருந்தார்: “NGO-க்களும் கார்ப்பரேட்களும், குடியிருப்புச் சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று உலக சுற்றுச்சூழல் தினம் பேணுகின்றனர். நீங்கள் உமது பங்கினைச் செய்கின்றீரா?” (NGOs, Corporates, housing societies come together today to commemorate World Environment Day. Are you doing your bit?)
      
இத்தகைய தூண்டும் பரப்புரைகளில் எனக்குப் பெருஞ்சலிப்பே ஏற்படுகிறது. யாரெல்லாம் காடழிவின் பெரும்பங்களிப்போரோ அவர்களே இயற்கையின் காப்பாளர்கள் என்பதான முரண் இவ்வரிகளில் உறுத்துகிறது. நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி வேகத்தைக் குறைப்பதில் பங்காற்றாத எவனும் இயற்கைப் பாதுகாப்பில் தானொரு அங்கம் என்று சொல்லிக்கொள்ள நியாயம் இல்லை. உண்மையில் இயற்கை அழிதலின் காரணிகளாகத் தாமிருப்பதன் குற்றவுணர்வு மேலடுக்கு மக்களை உளைப்பதன் பின்னணியில்தான் அத்ற்கொரு பிராயச்சித்தம் தேடும் முயற்சியாக இம்மாதிரியான நாட்கள் குறிக்கப்பட்டுப் பேணப்படுகின்றன. அன்றொரு நாள் மூக்குச் சிவக்கக் கைக்குட்டையை நனைத்தால் மனப்பாரம் நீங்குமல்லவா?
            
இம்மாதிரி நாட்களில் நாம் செய்வன எதிர்மறை விளைவுகளையாவது ஏற்படுத்தாமல் இருக்கவேண்டாமா? ”சேவ் நேச்சர்” என்னும் வாசகம் லோகோவுடன் அச்சிடப்பட்ட ஒரு கோடி டி-ஷர்ட்டுகள் இந்நாளுக்கெனத் தயாரிப்பீர்கள் (அதனை அணிந்து கொண்டு மேரத்தான் ஓடுவீர்கள்). அந்தத் தயாரிப்பு ஒரு பிட் அளவுக்குச் சுற்றுச்சூழலை அழிக்கும். இயற்கையை விதந்தோதும் வாசகங்களுடன், அது நமக்குத் தரும் நன்மைகளை விளக்கும் வரிகளுடன் வினைல் விளம்பரங்களும் துண்டறிக்கைகளும் அச்சிடுவீர்கள். அச்செயலில் மேலுமொரு பிட் அளவுக்குச் சுற்றுச்சூழலை அழிப்பீர்கள். அன்றொரு நாள் மட்டும் கார் கிளப்ப மாட்டீர்கள். இயற்கை அப்படியே பூரித்து விடுமாக்கும்? உங்கள் சுய ஏமாற்றை உணருங்கள் பிட்டிஸென்களே!

      அது சரி, இன்று எனது ’பிட்’டுக்காக நான் என்ன மண் சுமந்தேன்? என்று எண்ணினேன்.
    Image result for chinese paintings birds

  காலையில் காற்று வாங்கியபடி வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்திருந்தேன், பசிய புற்களையும் பூவிட்டிருக்கும் பப்பாளிச் செடியையும் சுற்றுப்புற மரங்களையும் பார்த்தபடி, நாலைந்து விதப் பறவைகளின் உஷை காலத்து கீதத்தை ரசித்தபடி. இன்று மழை வரவேண்டும் என்னும் பிரார்த்தனையுடன் வான் பார்த்தேன். (மழைக்காலத்தை விடவும் கோடை காலத்தில்தானே நமக்கு மழை அதிகம் தேவை? என்று முல்லாவின் ஞானத்துடன் கேட்டுக்கொண்டேன்.)

      செடி நட வேண்டும் என்கிறார்கள். என் விரல்களின் நக இடுக்குகளில் மண் ஏற பலமுறை நட்டிருக்கிறேன். அப்படியாக முற்றத்தில் நட்டுவைத்து இப்போது மதிலுக்கு மேல் தலை நீட்டுமளவு வளர்ந்து வந்திருக்கும் வேங்கை மரக்கன்று கம்பிவேலியுடன் சாய்ந்துகிடந்தபோது தூக்கி நிறுத்திக் கடுங்காற்றிலும் வேலி சாயாதபடி உடன் கழியொன்று நட்டுக் கட்டிவைத்தேன்.

      இன்னொரு நிகழ்வு. குமுளியிலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்தோம். இரு மருங்கும் மலைக்காட்டில் கனத்த நெடுமரங்கள். அவற்றின் பேருருவை அவதானிக்கப் பிள்ளைகளைப் பழக்கினேன். இயற்கை பற்றி ரால்ஃப் வால்டோ எமெர்சன் எழுதியது ஞாபகம் வந்தது. இயற்கையின் முன் மனிதன்தான் எவ்வளவு சிறியவன் என்னும் உணர்வைத் தூண்டும் பார்வையை அதில் அவர் நல்கியிருப்பார். விரிவானம் அன்று, அந்தப் பணிவுணர்வைத் தூண்ட இது போன்றதொரு நெடுமரமே போதும் என்று பட்டது. அப்போது மகனிடம், “இந்தக் காட்டுச் சாலையைப் போலவே இங்கிருந்து திருச்சி வரை இருந்தால் எப்படி இருக்கும்?” என்று கேட்டேன். அதனையே என் மனத்தின் வேட்டலாக அல்லாஹ்விடம் வைத்தேன்.

Image result for chinese paintings birds
      குறுங்கவிதை ஒன்று மனதில் தோன்றிற்று. பிள்ளையின் வாய்க்குள் ஒரு கற்கண்டு துண்டு போல் அதனைப் பலமுறை சொல்லிப்பார்த்தேன்:

”கிளைகளெல்லாம் கவிஞர்கள்
பூக்களும் கனிகளுமாய்

பறவைகலெல்லாம்
தீங்குரல் இசைக்கும்
பாடகர்கள்

ரசிகனாய் இருப்பதினும்
மனிதன் பெரும் பேறு
வேறுண்டோ?”


      எம்.ராஜேஷ், சலீம் ஃகான், நிகில் அஸ்ரானி ஆகியோரைப்போல் நானுமோர் சூழ்நிலைக் கைதிதான். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து பொதுமக்களிடம் செய்யப்படும் கருத்துப்பரப்புப் பணிகளிடம் நான் இன்னும் பேராசையுடன் எதிர்பார்க்கிறேன் என்றே தோன்றுகிறது. ஏனெனில், இயற்கைப் பாதுகாப்பில் எனது கண்ணோட்டம் கொஞ்சம் வேறுமாதிரி. சுருங்கச் சொல்வதெனில், ecology கொண்டு இயற்கையைப் பாதுகாக்க முடியாது, அதற்கு ‘deep ecology’ வேண்டும்.

      சூழியல் என்னும் அறிவியற் துறையின் போதாமைகளையும் அது தந்த ஏமாற்றங்களையும் கண்டு நொந்த பின்னர் உருவானதோர் அறிவியற்புலமே ஆழ்-சூழியல் (Deep Ecology). இயற்கை முழுவதையும் ஒற்றை உயிரியாய்க் காணும் முழுமை அணுகுமுறையை (holistic approach) அது வலியுறுத்துகிறது. புழுவாயினும் பூச்சி ஆயினும் எவ்வொரு உபவுயிரியும் மனிதனுக்கு எவ்விதத்திலும் கீழானது அல்ல, மனிதன் எவ்விதத்திலும் பிற உயிர்களினும் மேலானவன் அல்லன் என்று அது சொல்கிறது. கீழ்-மேல் என்னும் வஞ்சப் பிரிவினையை உயிரினங்களிடையே பாவிக்கலாகாது என்று போதிக்கும் தத்துவம் அது. மனிதமையச் சூழியலை அது ஒரு குறுகிய அல்லது ஆழமற்ற (narrow or shallow) அணுகுமுறையாகக் கண்டு புறந்தள்ளுகிறது.

      காட்டைப் பற்றிய தகவலறிவை அல்ல, அதன் மீதான ரசனையையே மக்களிடம் வளர்த்தெடுக்க வேண்டும் என்று ஆழ்-சூழியல் சொல்கிறது. ஒரு பேராசிரியனாக, people and environment என்னும் பொருண்மையைத் தகுதித் தேர்வுக்கான நோக்கில் பல ஊர்களில் பல மாணவர்களுக்குப் பாடம் நடத்தியபோதும், அதனை ஒரு வாய்ப்பாகக்கொண்டு இயற்கையைப் பற்றிய ரசனையைத் தூண்டவே முயற்சி செய்தேன். அதற்கெனப் பெரிதும் மெனக்கெட்டேன். பாடச் சட்டகத்துக்கு வெளியே ரொம்பவும் நகர்கிறேன் என்னும் விமர்சனமும் பெற்றேன். நம் பாடத்திட்டங்கள் தகவல்களால் நிரம்பி ரசனை அற்று நீர்த்துப்போய் உள்ளன. அவற்றில் ரசனையேற்றுவது நம் முதற்கடமை. (குழந்தைகளே! உங்கள் பாடநூற்களை ஈரமாக்குங்கள்!) 
 
நாள் நகர்ந்து போயிற்று. அந்தியில் நோன்பு திறந்த பின்னரும் சூழலியற் சிந்தனைகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன, பல கோணங்களில். வேறு என்னவெல்லாம் செய்திருக்க முடியும்?

”காடுகளில் உள்ளது உலகின் ஆயுள்” (”In wilderness is the preservation of the world”) என்று ஹென்ரி டேவிட் தோரோ சொன்ன வைர வாக்கியம் ஞாபகம் வந்தது. கூடவே, சென்ற மாதம் சுற்றிப்பார்த்துவிட்டு வந்த கேரள வனங்கள் நினைவில் எழுந்தன. இயற்கை சார்ந்து வாழும் பழங்குடிகளை நாகரிகத்தார் சுரண்டியழிப்பது பற்றி யோசித்தேன். மெல் கிப்சன் இயக்கிய ’அபோகாலிப்டோ’ மற்றும் டேனியல் க்வின் எழுதிய “இஸ்மயீல்” என்னும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதும் ஆந்தொனி ஹாப்கின்ஸ் நடித்ததுமான ’இன்ஸ்டின்க்ட்’ ஆகிய படங்கள் ஞாபகம் வந்தன. (”நாம் கைவிட வேண்டியது ஒன்றே ஒன்றுதான், நமது ஏதேச்சதிகாரம். நாம் இன்னும் மன்னர்கள் அல்லர், கடவுளர்கள் அல்லர். நாம் அதை விட்டுவிட முடியுமா? விலை மதிப்பற்றதல்லவா, இந்த அதிகாரம்? மாபெரும் தூண்டுதல் அல்லவா, கடவுளாய் இருத்தல்?”  என்கிறார் உயிரியல் விஞ்ஞானி எதான் பாவெல், இத்திரைப்படத்தில்.)

இயற்கையின் மீதான ரசனையைத் தூண்டுமான உமக்குப் பிடித்த பாடல்கள் ஒன்றிரண்டை வழியவிட்டபடிக் கண்மூடி அமர்ந்திருக்கலாம். அப்படி நானும் “தென்றல் வந்து தீண்டும்போது...” மற்றும் “இளங்காத்து வீசுதே சுதியோடு பேசுதே...” ஆகியவற்றை மனத்தினுள் இழையவிட்டேன். (நவீன மேற்கிசைக்கு இந்தியாவின் பதில் என்பது போல் பார்க்கப்படும் ஏ.ஆர்.ரகுமான் ஒரு பட்டிக்காட்டு இளவயது உழவன் போன்று “மாரிமழ பெய்யாதோ மக்க பஞ்சம் தீர /  சாரமழ பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற...” என்று பாடிய பாடலொன்றுண்டே, நினைவுள்ளதா?)

இயற்கை பற்றி இயற்கையில் தோய்ந்தோர் சொன்ன வரிகளைக் கொஞ்ச நேரம் வாசித்திருந்தேன். இயற்கையில் வசித்தல் என்றால் என்ன? இதோ ஒரு ஜென் கவிதை:

”எனது குடிலை ஏன் நான்
மலைக்காட்டில் அமைக்கிறேன் என்று
நீங்கள் வினவுகின்றீர்

நான் புன்னகைக்கிறேன்
மௌனமாயிருக்கிறேன்

எனது ஆன்மாவும்கூட
சும்மாயிருக்கிறது
எவருடைய உடைமையும் ஆகாத
வேறொரு உலகில் வசிக்கின்றது அது

கொன்றை மரங்கள் பூக்கின்றன
நதியோடை பாய்கிறது”
                  -லீ போ.
Image result for zen forest

இயற்கையில் தன்னை இழத்தல் என்றால் என்ன? இதோ இன்னொன்று:

”பறவைகள் விண்ணுள் மறைந்துவிட்டன
கடைசி மேகமும் கரைந்து போகிறது

யாம் உடன் அமர்ந்திருக்கிறோம்,
மலையும் நானும்,
மலை மட்டுமே என்றாகும் வரை”
                  -லீ போ.
“உலகின் இறுதி நாள் இது என்று உறுதியாய்த் தெரிந்தாலும் உன் கையிலிருக்கும் மரக்கன்றை விட்டுவிடாதே. நட்டு வை” என்று நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள். லீ போ-வைப்போல் இயற்கையில் தானழிந்து அக அமைதி கண்டவர்கள்தான் அத்தருணத்தில் அப்படிச் செயல்பட முடியும். அந்த போதம் (conscience) உண்டாக்கப்பட வேண்டும் என்பதையே இந்த ஹதீஸ் குறிப்புக் காட்டுகிறது என்று விளங்குகிறேன்.

Image result for osho meditation

இயற்கை ரசனையை என்னுள் ஆழமாய்த் தூண்டி வளர்த்தவர்களுள் ஓஷோவை இன்று நினைவு கூர்ந்தேன். தனது கம்யூனை ஒரு காட்டுக்குள் இருப்பது போலவே அமைத்தவர் அவர். சுவாங்சூ அரங்கக் கட்டடத்தின் மீது பெருமரம் ஒன்று சாய்ந்து வளர்வது பற்றி எச்சரிக்கப்பட்ட போது, ”கட்டடத்தை வளைத்துக்கட்டுங்கள், மரத்தை வெட்டக்கூடாது. நான் என் காட்டினை நேசிக்கிறேன்!” என்று சொன்னவர். ”இயற்கையுடன் இயைந்திருப்பதே மதம் என்பதற்கான என் வரையறை” என்றும் ”நாம் அனைவரும் விருந்தாளிகள். ஆனால், இந்த அழகிய பூமியை ஒரு புகைவண்டி நிலைய விருந்தினர் விடுதிபோல் பயன்படுத்தாதீர்கள். இது ஒரு காத்திருப்பு அறை அல்ல. இப்பொழுதுக்கு, இது நம் இல்லம். இன்னொருவருக்கான வீடாக அது நீடித்திருக்கும். பத்து நிமிடத்தில் என் ரயில் வருகிறது, நான் போய்விடுவேன். காத்திருப்பறையை நான் அசிங்கம் செய்து போனால் யாருக்கு என்ன கவலை? என்று கஞ்சத்தனமாக யோசிக்காதே. உன்னைத் தொடர்ந்து வரப்போகும் விருந்தினருக்காக இந்தப் பூமியை இன்னும் கொஞ்சம் அழகானதாக, இன்னும் கொஞ்சம் வாசமானதாக விட்டுச் செல்” என்றும் சொன்னவர்.

இறுதியாக, அமெரிக்க ஜென் கவிஞர் ஜேம்ஸ் வில்லியம் ஹேக்கட் (1929-2015) எழுதிய ஒரு கவிதையுடன் இந்நாளின் சிந்தனைகளை முடிக்க எண்ணுகிறேன். ஆழ்-சூழியல் என்னும் கோட்பாடு தனது வேர்களை கீழைத்தேய ஆன்மிக மரபுகளிலேயே கண்டுகொண்டது. அக்கோட்பாடு மெல்ல உருவாகி வந்ததில் கீழைத்தேய ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த கவிஞர்களின் பங்களிப்பு அழுத்தமானது. வால்ட் விட்மன், எமர்சன், தோரோ, கேரி ஸ்னைடர், ரொபர்ட் ப்ளை போன்றோரின் எழுத்துக்களில் கீழக்கின் ஆன்மிக ஒளி, இந்து ஞான மரபு, தாவோ மற்றும் ஜென் மரபுகளின் தாக்கம் இருப்பதைக் காணலாம். அவர்களில் ஒருவரான ஜேம்ஸ் வில்லியம் ஹேக்கட் ஆங்கிலத்தில் ஜென் ஹைகூ கவிதைகள் எழுதிப் புகழ் பெற்றவர். 1960-ஆம் ஆண்டு கனடா நாட்டின் கடற்பகுதியில் உள்ள பைலேட்ஸ் தீவுக்கு அவர் சென்றபோது மனித நாகரிக ’வளர்ச்சி’ (?) காடுகளை அழித்து வருவதைக் கண்டார். தனது ஆதங்கத்தை “பெருவனத் தீவு” (Island of wilderness) என்னும் கவிதையாக வெளிப்படுத்தினார். இரண்டு பகுதிகளைக் கொண்ட அக்கவிதையின் இரண்டாம் பகுதியை இங்கே தமிழ் செய்திருக்கிறேன்:
Image result for pylades island
பருந்தின் பாடல்
தன் அருட்கொடைகளுக்கெல்லாம்
இவ்வுலகில் எத்துனை அபாயத்தில் உள்ளது
காட்டுத்தீவு

காற்றில் தன் பெருங்குரலால்
என்னில் எதிரொலிக்கும்
காணாத பருந்தொன்றின் பிரார்த்தனை கொண்டு
என் மேல் கவியும் அதன் எச்சரிப்புக் குறிப்புக்களை
இங்கே இசைக்க முனைகிறேன்

மனிதா,
உன் நகரங்கள் நிலத்தை வீணடிக்கவும்
உன் தொழிற்சாலைகளின் விஷம்
காற்றிலும் நீரிலும் கலந்திடவும்
எம் காட்டின் புனித மௌனத்தை
உன் இரைச்சலிடும் எந்திரங்கள் அறுக்கவும்,
பூமியின் மீது மனிதத் துயரை
உன் குருட்டுப் பெருமிதத்தின் வழியே பார்.
தனக்கும் அதிகமதிகமாய் அவன்
பெருக்கிக் குவிப்பதன் பேரிடர் காண்.

நீயே நினக்கு எப்போதும் எதிரி எனினும்
அதீத அதிகாரமும் பேராசையும் பீடித்து
உயிர்கள் அனைத்திற்கும் ஓர் அச்சுறுத்தல் ஆனாய்.

உன் மனத்தின் அபத்தங்கள்
வாழ்வை ஒரு கொடுங்கனவாய் மாற்றும் முன்,
--இன்னமும் அவகாசம் இருக்கின்றது--
இக்கணத்தின் ஒருமைக்கு விழித்துக்கொள்,
பருந்தின் பாடல் சொல்வதைக் கேள்:

தத்வமஸி – நீயே அது!


Saturday, June 3, 2017

இருவருக்கும் இனி இறப்பில்லை

Image result for kaviko abdul rahman

”ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதே ஆகும். பின்னர் நீங்கள் நம்மிடமே மீட்கப்படுவீர்கள்” (குர்ஆன்: 29:57)

கவிக்கோ அப்துல் ரகுமான் மரணத்தைச் சுவைத்துவிட்டார். நேற்று காலை ஒன்பது மணியளவில் ஆம்பூரிலிருந்து நண்பர் பேராசிரியர்.மீரான் எனக்குத் தகவல் சொன்னார். ’முடிந்தால் கிளம்பி வாருங்கள்ஜி’ என்றும் சொன்னார். அவரும், நண்பர்கள் ரஃபீக் மற்றும் ரஹீம் ஆகியோரும் சென்றிருப்பார்கள் என்று நம்புகிறேன். அப்பட்டியலில் அடியேன் மட்டும் மிச்சம். 2002-இல் நாங்கள் நால்வரும் முதுகலை மாணவர்களாய் இருந்தபோது திருச்சிக்கு, எம் கல்லூரிக்கு வந்திருந்தார். அதுவே அவருடனான முதல் சந்திப்பு. மாலை சில மணிநேரங்கள் சங்கம் ஹோட்டல் அறையில் எம் நால்வருடனும் கவிதை பற்றி மிக உற்சாகமான உரையாடினார். எங்களின் முகவரிகளைப் பெற்றுக்கொண்டு ரயிலேறினார்.

நேற்று (2.5.20017) நாள் முழுதும் அவரைப்பற்றிய நினைவுகள் வந்துகொண்டிருந்தன, ஆரவாரமற்ற பெருங்கடல் ஒன்றிலிருந்து லாவகமாய் வந்து செல்லும் அலைகளைப் போல.

அவரை நான் முதன்முதலில் அறிந்தது பள்ளிப்பருவத்தில். பாரதிதாசன் சிந்தனைப் பள்ளியின் தமிழுணர்வில், மரபுக் கவிதை மயக்கத்தில் மூழ்கியிருந்த எனக்குப் புதுக்கவிதையை நண்பர் கரிகாலன் அறிமுகப்படுத்தினார், அப்துல் ரகுமானின் “நேயர் விருப்பம்” நூல் வழியாக. அதனை அடுத்து, தான் பரிசுப் பெற்று வந்த “சலவை மொட்டு” என்னும் கட்டுரை நூலையும் அறிமுகப்படுத்தினார். வாசிக்க வாசிக்க ஒரு ரசவாதம் என்னை மாற்றி அமைத்தது. உரைநடை வரிகளும்கூட இப்படிச் செதுக்கப்பட்ட கவியழகுடன் இருக்க முடியுமா என்று வியக்க வைத்த உரைநடை அதில் இருந்தது.

தஞ்சையில் தூய பேதுரு மேனிலைப்பள்ளியில் அப்போது படித்துக் கொண்டிருந்தேன் (திருவையாற்றில் வீடு). பண்டாரவாடையிலிருந்து வரும் நண்பன் நூர் முஹம்மதின் பையில் எப்போதும் ”பாக்யா” இருக்கும். விடலைப்பருவப் பையன்களின் மத்தியில் அதன் அட்டைப்படத்திற்காகவே பிரபலமாகியிருந்தது. அதனை ஒருவன் பையில் வைத்திருக்கிறான் என்பதே அவன் மீது ஒரு தனிப்பார்வையை அனைவரிடமும் உண்டாக்கிவிடும். அப்போது நூரிடம் கேட்டபோது ”அப்துல் ரகுமான் இதில் ஆலாபனை என்றொரு கவிதைத் தொடர் எழுதுகிறார். அதனை வாசிக்கவே வாங்குகிறேன்” என்று சொன்னான். அதுவரை வெளிவந்திருந்த கவிதைப் பக்கங்களைக் கத்தரித்து இணைத்துக் கொண்டு வந்தான். பள்ளி மைதானத்தில் மரத்தடியில் அமர்ந்து தினமும் படித்தோம். அதே ’ஆலாபனை’யைப் பின்னர் நான் எம்.சி.ஏ படித்தபோது கல்லூரியின் தோட்டத்தில் ஒரு கலிக்கிமரத்தின் நிழலில் அமர்ந்து வாசித்திருக்கிறேன். அதன்பின் முதுகலைத் தமிழும் பயின்றபின், எம்.ஃபில் ஆய்வுக்கு அதே ஆலாபனையைத்தான் தேர்ந்தேன்.


















கல்லூரிப்படிப்பிற்காகத் திருச்சிக்கு வந்துவிட்டேன் என்றாலும் திருவையாறு செல்லும்போதெல்லாம் தஞ்சாவூர்ப் பேருந்து நிலையத்தினருகில் இருந்த ”முரசு நூல் நிலையம்” என்னும் கடையில் நூற்களும் இசை நாடாக்களும் வாங்கும் பழக்கம் இருந்தது. அங்கேதான் அப்துல் ரகுமான், கலீல் ஜிப்ரான் மற்றும் ஓஷோ ஆகியோரின் நூற்களை அதிகமும் வாங்கினேன். கல்லூரியில் சேர்ந்தமைக்காக 21.06.1994 அன்று நண்பர் கரிகாலன் “அவளுக்கு நிலா என்று பெயர்” வாங்கித் தந்தார். கவிக்கோவின் நூற்கள் ஒவ்வொன்றாய் அதிலிருந்தே என்னிடம் சேரத் தொடங்கின. (முட்டை வாசிகள், கரைகளே நதியாவதில்லை, சொந்தச் சிறைகள் என்று தொடர்ந்த அந்த மெல்லிய நூற்களில் எல்லாம் அட்டைப்படங்களில் மணியம் செல்வனின் ஓவியங்களும் கிறங்கடித்தது. அந்த முதற்பதிப்புக்களைத் திருமகள் நிலையம் செய்திருந்தது. இப்போதைய பதிப்புக்களில் அந்த அழகு இல்லை. பின்னர், ஆலாபனையில் கவிதைக்கு ஒன்றாக ம.செ. வரைந்த சித்திரங்கள் சிலிர்க்கச் செய்தன.)

கல்லூரியில் கிடைத்த ஆப்த நண்பன் அஸ்லமிடம் கவிக்கோவை அறிமுகம் செய்தேன். அவனுக்குத் தாய்மொழி உருது. கஜல் பிரியன். ஜக்ஜீத் சிங் பாடிய கஜல்களின் இசைநாடாக்கள் மூன்று டஜன் கணக்கில் அவன் வீட்டில் இருந்தன. புகைப்படத்தில் அப்துல் ரகுமானைப் பார்த்துவிட்டு ‘அடடே ஜக்ஜீத் மாதிரியே இருக்கிறாரே!’ என்று வியந்தான். அவன் வீட்டின் முற்றத்தில் அமர்ந்தபடி ஆலாபனையிலிருந்து ஒவ்வொரு கவிதையாய் நான் வாசித்துக்காட்டவும் அவன் கேட்கவுமாக அமைந்த நட்புப் பொழுதுகளும் இப்போது நினைவில் எழுகின்றன.

இப்படியாக என் மனத்தில் ஒரு தனியிடம் பெற்றிருந்த கவிக்கோவை நான் நேரில் சந்திப்பேன் என்றெல்லாம் எண்ணியிருக்காத நிலையில் கல்லூரி விழாவுக்கு வந்தார். ஆரம்பத்தில் நான் சொன்னபடி நாங்கள் நால்வர் அவரைச் சந்தித்தோம். புறப்பட அவர் தயாரானபோது எனது எளிய அன்பளிப்பை அவரிடம் நீட்டினேன். ஜக்ஜீத் சிங்கின் “ஃபேஸ் டூ ஃபேஸ்” என்னும் கஜல் கேசட். வாங்கிப் பார்த்தவர் “அட, நம்மாளு” என்றார். அவருக்குப் பிடிக்கும் என்பதை நான் மானசீகமாக உணர்ந்திருந்தே எடுத்துச் சென்றிருந்தேன். ஒருபக்கம் புருவத்தை உயர்த்தி உதட்டை லேசாக இழுத்து மலரும் அவரின் சிக்னேச்சர் முகபாவத்தை மீண்டும் மீண்டும் ரசிக்கக் கிடைத்த அனுபவம் அது.

Image result for signatures in the water osho

அதன் பின் கவிக்கோவை நான் சந்தித்தது அவரது இல்லத்தில். திருவான்மியூரில் கடல்வழிச் சாலையில் அப்போது இருந்தார். எனது எம்.ஃபில் ஆய்வேட்டின் ஒரு பிரதியை அவருக்குக் கொடுக்க நானும் நண்பர் மீரானும் போயிருந்தோம். வீட்டின் மாடி அவரது தனிப்பட்ட பகுதியாய் இருந்தது. நூலகமும் சோஃபாக்களும் இசைப் பேழைகளும் அங்கிருந்தன. சோஃபாவில் அமர்ந்தவுடன் ஆய்வேட்டை வாங்கிப் பார்த்தார். “சூஃபித்துவப் பார்வையில் அப்துல் ரகுமானின் ஆலாபனை” என்னும் தலைப்பே அவரைக் கவர்ந்துவிட்டதாகத் தெரிந்தது. பேசத்தொடங்கினார். இடையில், மூன்று ‘ச்சாயா’க்களுக்கு ஆணை பிறப்பித்தார். அவரின் மனைவியே படியேறி வந்து வழங்கிச் சென்றார்கள். அருமையான தேநீரைப் பருகியபடி அவரது நூலக அலமாறியை நோட்டம் விட்டேன். ஓஷோவின் நூற்களும் அதில் இருந்தன. ரெபல் பதிப்பக வெளியீடாக வந்த நேரடி நூற்கள். அவற்றில் ஓஷோவின் அரிதான புகைப்படங்கள் இருக்கும். தற்போது வரும் பதிப்புக்களில் அவை இருப்பதில்லை. குறிப்பாக, ஹைகூ கவிதைகள் பற்றிய “Signatures on water” என் கண்ணைக் கவர்ந்தது. ஒருவித சந்தோஷம் என மனத்தில் தோன்றியது. ஏனெனில்,  ’கவிக்கோவின் ஆளுமையில் மவ்லானா ரூமி, அல்லாமா இக்பால் மற்றும் ஓஷோ ஆகியோரின் தாக்கம் இருக்கிறது’ என்பதே எனது எம்ஃபில் ஆய்வின் முடிவில் கண்டடைந்து எழுதியிருந்தேன். அதனை அங்கேயே சுட்டிக்காட்டினேன். அவரும் அது சரிதான் என ஒப்புக்கொண்டார். “ஓஷோ மிகப்பெரிய அறிவாளி. ஆனால், மவ்லனா ரூமிதான் எனது மானசீக குரு” என்றார்.

அது ஒரு வெள்ளிக்கிழமை. இருந்து மதியம் சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும் என்று சொல்லிவிட்டார். அவருடனேயே தொழுகைக்குச் சென்றோம். கீழே முற்றத்தில் கார் நின்றிருந்தது. அவரோ வீதிக்கு வந்து ஓர் ஆட்டோவை மறித்தார். “டிரைவர் வரவில்லை. ஆட்டோவில் போய்விடுவோம்” என்றார். மீன் குழம்பும் வறுவலுமாகச் சாப்பாடு. மேஜையில் அமரவைத்து அவருமே பரிமாறியபடி உடனருந்தினார். மீண்டும் மாடிக்கு ஏறியவர்கள் மாலை வரை பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நான் நிர்வாக ஊதிய அடிப்படையில் விரிவுரையாளர் பணியில் இருந்தேன். மீரான் எம்.ஃபில் செய்துகொண்டிருந்தார். “தம்பீ, இலக்கியச் சேவையெல்லாம் அப்புறம் பார்க்கலாம். முதலில், பொருளாதாரத் தன்னிறைவை அடையணும். அது ரொம்ப முக்கியம். அது இல்லாம இலக்கியச் சேவைன்னு எறங்குனவன் பல பேரு அட்ரஸே தெரியாமப் போயிட்டானுங்க” என்று எதார்த்த நிலையை எடுத்துச் சொன்னார். (அவருடைய நண்பர் கவிஞர் மீரா அவர்களை நினைத்துக்கொண்டு சொன்னாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.) எனது தொலைப்பேசி எண்ணை வாங்கிக்கொண்டார். ஆய்வேட்டைப் படித்துவிட்டுப் பேசுகிறேன் என்றார். இரண்டே நாட்களில் அழைத்தார். “உங்க ஆய்வேட்டைப் படித்துவிட்டேன் தம்பீ. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.” என்று பாராட்டினார். அத்துடன், “இது ஆய்வேட்டின் நடையில் இருக்கு தம்பீ. இத நீங்க உடச்சு சின்னச் சின்னக் கட்டுரைகளா எழுதுங்க. பொது மக்கள் படிக்கிறாப்ல இருக்கணும். ஷாஜஹான்ட்ட சொல்லி நூலாகக் கொண்டு வர்றேன்” என்றும் சொன்னார்.





























அதுவே நான் கவிக்கோவை நேரில் சந்தித்த கடைசி முறை. அதன் பின் சில முறை அலைப்பேசியில் உரையாடியிருக்கிறோம். கும்பகோணத்தில் அகில உலக இஸ்லாமிய இலக்கிய எட்டாம் மாநாடு அவரின் தலைமையில் நடந்தது. அதில் எந்தவொரு குழுவிலும் நான் இல்லை. நேரில் கலந்துகொள்ளவும் இல்லை. ஆனாலும் ஒரு தனிச்சிறப்பு அதில் அடியேனுக்குக் கொடுத்தார். எப்படி என்று சொல்கிறேன். அந்த மாநாட்டிற்கு அவர் தேர்ந்திருந்த பொருண்மை “இஸ்லாமிய இசை” என்பதாகும். மார்க்க அறிஞர்கள் மற்றும் அரைவேக்காடுகளினிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி அம்மாநாடு நடந்தது. அதன் சிறப்பு மலரில் முதல் கட்டுரை அவருடையது. இரண்டாவது இடத்தை அடியேனின் கட்டுரைக்குத் தந்திருந்தார். பின்னர் நேரில் அழைத்தும் பேசினார். “என் கட்டுரை இரண்டாமிடத்திலா?” என்று வியந்து கேட்டேன். “தரம் இருக்குல்ல தம்பீ. நீங்க நல்லா எழுதியிருக்கீங்க. அதுக்கான இடத்த தந்திருக்கேன்” என்று சொன்னார். எம்ஃபில் ஆய்வேட்டை நூலாக்கும் பணி பற்றிக் கேட்டார். அப்போது நான் அவரது கஜல் கவிதைகளை வைத்து “இஸ்மி” என்னும் இதழில் (அவர் பின்னர் தலைவராக இருந்த தமிழ்நாடு வக்ஃபு வாரிய மாத இதழ். அதன் ஆசிரியர் தத்துவக் கவிஞர் இ.பதுருத்தீன் அவர்கள்) “பட்டாம்பூச்சிக் காலம்” என்னும் தலைப்பில் கட்டுரைகள் எழுதி வந்தேன். ஒரு டஜன் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு என் ஆய்வேட்டின் அமைப்பை மாற்றாமலேயே அதனிடையில் இணைத்து “சூஃபித்துவப் பார்வையில் கவிக்கோ” என்னும் தலைப்பில் பேராசிரியர் முனைவர். மு.சாதிக் பாட்சா அதனை நூலாக வெளியிட்டார். இதுவரை அது கவிக்கோ அவர்களுக்குத் தெரியாது. (இப்போது தெரிந்திருக்குமோ என்னவோ?).

மீண்டுமொரு தருணத்தில் நூலாக்கம் பற்றி அவர் கேட்டபோது ‘ஐயா, இப்போதுதான் வீடு கட்டிக்கொண்டிருக்கிறேன். அதனால் எதுவும் எழுதவில்லை” என்று சொன்னேன். பெரிதும் மகிழ்ந்து வாழ்த்தினார். பொருளாதாரத் தன்னிறைவின் இன்றியமையாமை பற்றி அப்போதும் வலியுறுத்தினார். கவிஞன் அல்லது எழுத்தாளன் அல்லது தமிழாசிரியன் வறுமைப்படக் கூடாது என்னும் கருத்து அவரில் எப்போதும் வலுவாக இருந்திருக்கும் போலும். (தமிழாசிரியனுக்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்னும் கருத்து இப்போது என்னில் பிரதானமாய் இருக்கிறது. இது காலநிலை மாற்றத்தின் அடையாளமாய் இருக்கக்கூடும்.)

”பிலாலி மன்ஜில்” என்னும் எனது இல்லத்தின் புகுவிழாவை முடித்துவிட்டு அவருடன் பேசினேன். மகிழ்வுடன் வாழ்த்தினார். ஆய்வேட்டை சிறு கட்டுரைகளாக உடைத்து மறு ஆக்கம் செய்யுமாறும் அதனை யுனிவர்சல் பதிப்பகத்தின் வாயிலாக நூலாகக் கொண்டுவரலாம் என்றும் அப்போதும் சொன்னார், 2015-ல். அக்காரியத்தை ஏனொ இன்றுவரை நான் செய்யவில்லை. அவர் வெளிக்கொண்டு வர விரும்பிய நூல் என்னும் தகுதியில் இப்போதும் அது கனவாகவே இருக்கிறது.

பின்னர் அவருக்குப் பவழவிழா ஏற்பாடுகள் நடந்தது. எக்குழுவிலும் நான் கிடையாது. (அதாவது நண்பர்கள் மீரான், ரஃபீக் மற்றும் ரஹீமைப் போல் நேரில் சென்று இடம் தேடிக்கொள்ள ஏனோ எனது மனநிலை எப்போதும் உடன்பட்டதில்லை. கவிக்கோவே ஆனாலும் சரி என்றிருந்துவிட்டேன்.) அலைப்பேசியில் அழைத்தார். தனது லேட்டஸ்ட் நூற்களைப் படித்திருக்கிறேனா என்று விசாரித்தார். “பறவையின் பாதை” வரை வாசித்திருப்பதாகச் சொன்னேன். ”அதுக்கப்புறம் ரெண்டு மூனு வந்திருச்சே. சரி, ஷாஜகான்ட்ட சொல்லி அனுப்பச் சொல்றேன். பவழ விழா மலருக்கு ஒரு கட்டுரை எழுதுங்க” என்று சொன்னார். “கவிக்கோ கவிதைகள்” என்னும் தலைப்பில் அவரின் பதினொரு கவிதை நூற்கள் ஒன்றாகத் தொகுக்கப்பட்ட நூலொன்று வந்து சேர்ந்தது. ”ஞானம் கனிந்த கவி” என்னும் தலைப்பில் கட்டுரையொன்று எழுதி அனுப்பி மலரிலும் இடம்பெற்றது. ஆனால் விழாவுக்கு நான் செல்லவில்லை. சிறிது நாட்கள் கழித்து அவரே பேசினார். “என்னைச் சரியாகப் புரிந்துகொண்ட சிலரில் நீங்களும் ஒருவர்” என்று சொன்னார். பள்ளி மாணவப்பருவத்தில் அவரின் கவிதையை முதன் முதலில் வாசித்த அந்தக் கணத்திலேயே அது எனக்குத் தெரிந்திருந்தது, அவரும் நானும் ஒரே அகவுலகப் பிரஜைகள் என்று. அப்போதுதான் அவரும் தனது பயணத்தை ஆன்மிக திசையில் வேகமெடுக்கச் செய்திருந்தார். அடியேனின் மனமும் அரசியல் திசை விட்டு ஆன்மிக திசை நோக்கித் திரும்பியிருந்த காலக்கட்டமும் அதுதான். கவிக்கோ சொன்ன அந்த ஆத்மார்த்தமான ஒற்றை வரியே அவருக்கும் எனக்குமான உறவுக்கு நான் பெற்ற சான்று என்று வாழ்க்கை முழுதும் வைத்துக்கொள்வேன். அது போதும்.

’ஆலிம் கவிஞர்’ தேங்கை ஷரபுத்தீன் மிஸ்பாஹி அவர்களின் வழியாக அந்தப் பவழவிழா மலர் என் கைக்கு வந்து சேர்ந்தது. என் கட்டுரையைக் குறிப்பிட்டுக் காட்டித் தனக்கு நிறைவு தந்த கட்டுரை என்று கவிக்கோ சொன்னதை அவர் என்னிடம் எத்திவைத்தார். அக்கட்டுரையில்  அவரது கவியாளுமையின் பரிணாமத்தை நான் அலசியிருந்தேன். ’கி.மு., கி.பி. என்று பிரிப்பது போல் அப்துல் ரகுமானை ஆ.மு., ஆ.பி என்று பார்க்கலாம்’ என்று ’ஆலாபனை’ நூலை வைத்தே அவரைப் பகுத்திருந்தேன். ஆலாபனைக்கு முன் சென்ற காலங்களில் அவரின் கவிதைகள் எல்லாம் பரிசோதனைகள், வார்த்தை விளையாட்டுக்கள், வெளிநாட்டு வடிவங்களைத் தமிழுக்கு அறிமுகஞ்ச் செய்தல் முதலிய நிலைகளில் வெளிப்பட்டவை. ஆலாபனையே அவரின் திருப்புமுனை என்பது என் பார்வை. அதன் பின் அவரொரு சூஃபிக் கவியாகவே தன்னைப் பெரிதும் வெளிப்படுத்தினார். அவரே நான் அடைந்துகொண்ட கவிக்கோ, அசல் கவிக்கோ. ஆனால், இன்றளவும் அவரைச் சிலாகிப்பவர்கள் பலரும் ஆ.மு காலக்கட்ட ’கவிதை’களுக்காகவே அவரை நேசிக்கிறார்கள். அவர்கள் எவருமே கவிக்கோவை “அறிந்த”வர்கள் அல்லர், இன்று.

  பல அஞ்சலிகள் இப்போது அவருக்கு ஊடக வடிவங்கள் அனைத்திலும் இடம்பெற்றிருக்கும். ரஃபீக் (கவிஞர் மானசீகன்) வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்தி போலொரு அஞ்சலி செலுத்தியிருந்தார். “மரணம் முற்றுப்புள்ளி அல்ல” என்று கவிக்கோ எழுதியதையே அவரது மரணம் தரும் செய்தியாய் பாவித்திருந்தார். பிறகு நான் ஜெயமோகனின் தளம் சென்று கண்டேன். சிறியதொரு அஞ்சலிச் செய்தி இருந்தது, பின்வரும் கராரான மதிப்பீட்டுடன்: “கவிதை பற்றிய அவருடைய கொள்கை நான் எண்ணுவதற்கு முற்றிலும் மாறுபட்டது. கவிதையை அவர் சொல்வீச்சாக, மேடை நிகழ்வாகவே பார்த்தார். அவை மௌனவாசிப்பில் மிகையாகவே எஞ்சின.” (”அப்துல் ரகுமான்: அஞ்சலி”, ஜூன்2, 2017). கவிக்கோவின் ஆரம்பக்காலக் கவிதைகளை வேண்டுமானால் இப்படி மதிப்பிடலாம். ஆலாபனையைத் தொடர்ந்து வந்த கவிதைகள் அப்படியானவை அல்ல என்பதே என் அவதானம்.

”தேவகானம்” என்னும் நூலின் முன்னுரையில் அவர் இப்படி எழுதுகிறார், ”சந்தையில் சாமான்கள் வாங்கிக் கொண்டிருந்த காலத்திலேயே எங்கிருந்தோ ஒரு புல்லாங்குழல் இசை என்னை அழைத்துக் கொண்டே இருந்தது. சந்தையும் சாமான்களும் தேவைப்படாத காலம் வந்ததும், அந்தப் புல்லாங்குழல் இசை உரத்து ஒலித்தது.”

ஆனால், சீக்குப்பிடித்த உலகியலின் எதார்த்தங்களில் ஒன்றென, அந்தச் சந்தைக் கடைக்காரர்களும்கூட அந்த வேய்ங்குழல் நாதத்தை அறிந்தவர்கள் போல் காட்டிக்கொண்டு பொழிப்புரை வழங்குகின்ற கண்ணறாவிக் காட்சிகளை எல்லாம் காணலாகிறது.

அந்த வேய்ங்குழல் இசை என்பது ஆன்மிகம். சூஃபித்துவம் என்று அதனை இஸ்லாம் சார்ந்து பெயரிட்டுக்கொண்டாலும் சத்திய தரிசனத்தை எந்த எல்லைகளுக்குள்ளும் குறுக்கிகொண்டவர் அல்லர் கவிக்கோ. ஜென்னும் தாவோவும் இந்து ஞான மரபும் கிறித்துவ விவிலிய ஞான வாக்கியப் புரிதலும் கொண்டே அவரின் ஆன்மிகம் ஆல் போல் தழைத்துப் பரவியிருந்தது.

Image result for kaviko abdul rahman

“ஏகத்துவ உள்ளமை” (வஹ்தத்துல் உஜூது) என்னும் சத்திய தரிசனத்தை, இஸ்லாத்தின் மூலமந்திரமான திருக்கலிமா வழங்கும் ஆழிய ஞானத்தை அவர் புரிந்து கிரகித்திருந்தார், அல்லாமா இக்பாலைப் போலவே. “இறைவன் ஒருவனே என்பது பாமரர்களின் நம்பிக்கை. எல்லாம் இறைவனே என்பதே உண்மையான ஏகத்துவம்” என்றொரு பேட்டியில் ஒளிவு மறைவின்றிச் சொன்னார். கிண்டர் கார்டன் முஸ்லிம்களும் அரைவேக்காடுகளான வஹ்ஹாபிக் கொடுங் கோட்பாட்டாளர்களும் அவர் சொன்னதைப் புரிந்து கொள்ளாது எதிர்வினை ஆற்றுவார்கள் என்பதை அறிந்திருந்தும் அவர் அப்படிச் சொன்னதில் ஓர் ஆன்மிக மறவுணர்வு இருப்பதைக் காண்கிறேன். அத்தகைய கிணற்றுத் தவளைகள் கூச்சலிடும் ஃபத்வாக்களுக்கு அவர் அஞ்சாதிருந்தது அவரின் ஆளுமையை இன்னும் மேலோங்கச் செய்கிறது. அவரது வீட்டில் நான் உரையாடியிருந்த போது “நெல்லிக்குப்பம் அப்துற் ரஹ்மான் அவர்கள் எழுதிய முஸ்லிம் அத்வைத மூல மந்திரம் என்னும் நூலைப் படித்ததுண்டா?” என்று கேட்டார். இல்லை என்றேன். “படியுங்கள். மிக ஆழமான நூல். நீங்கள் படிக்க வேண்டும்” என்று பரிந்துரைத்தார்.

அவரை நேரில் சென்று காண நான் ஆர்வப்படாமைக்கு வேறு சில காரணங்களும் உண்டு. ஒரு காலக்கட்டம் வரையில் அவரே எனது ஆதர்சக் கவிஞராய் இருந்தார். பின்னர் ஜெயமோகனின் வழியாக தேவதேவனை வந்தடைந்தபோது நிலை மாறிற்று. என் மனத்துக்கினிய கவி என்று இன்று தேவதேவனையே எண்ண முடிகிறது. மேலும், வண்ணதாசன் போன்றோரின் கவிதைகளில் உள்ள உணர்வழகியலே கவிதையின் இயற்கை நறுமணமாய்த் தெரிகிறது. கவிதை ரோஜா அத்தர் புட்டியாய் இருக்கலாகாது, அஃதொரு ரோஜாச் செடியாய் இருக்கவேண்டும் என்னும் மனநிலைக்கு நான் நகர்ந்திருக்கிறேன். (இப்போதும் அவருடைய பாணியில் ‘சூஃபிக் கவிதை’ என்று சொல்லத்தக்க தனித்தனிக் கனச்சிந்தனைகளைக் கோர்த்த, ஒவ்வொரு வாக்கியமும் ஒவ்வொரு தனிக்கவிதையாய் பாவிக்கத்தக்க கட்டமைப்புக் கொண்ட கவிதைகளை அவ்வப்போது எழுதத்தான் செய்கிறேன் எனினும் அப்படி எழுதுவது குறைந்து வருகிறது.)

இன்னொரு காரணம், சென்னைக்குச் செல்வதெனில் எனது ஆன்மிக குருநாதரை (முர்ஷித்-ஐ)ப் பார்க்கவே சென்று வருவது வழக்கமாகிவிட்டது. என் குருநாதரை அவர் அறிவார். “உங்க முர்ஷித் என் மீது பிரியமுள்ளவர்” என்று ஒருமுறை அலைப்பேசி உரையாடலில் குறிப்பிட்டிருக்கிறார். அது ஒரு பெரும் ஆறுதலாய் எனக்கு இருந்தது.

பத்து நாட்களுக்கு முன், கம்பம் டிஸ்கோ டீ ஸ்டாலில் நண்பன் ரஃபீக்குடன் உரையாடும்போதுகூட மேற்சொன்ன கருத்தைப் பகிர்ந்தேன். “ஐயாவின் கவிதையில் எப்போதும் ஒரு பேராசிரியர் எட்டிப் பார்த்துக்கொண்டே இருப்பார்” என்றான். “அவர் தன் கவிதைகளில் ஓர் அறிஞராகவே காட்சி தருகிறார். ஒரு கணவனாக, தந்தையாக, தோழனாக மகனாக அவர் கவிதை எழுதியது கிடையாது. இது பெருத்த ஏமாற்றத்தைத் தருகிறது. அதனால்தான் நான் தேவதேவனிடம் நகர்ந்துவிட்டேன் போலும்” என்றேன். “சரிதான் ஜி. வைரமுத்துவிடம்கூட அந்த தனிமனிதத் தன்மையைப் பார்க்க முடியும். கவிக்கோ ஐயாவிடம் அது இல்லை” என்று சொன்னான். இத்தகைய மதிப்பீடுகளை அவரின் ரசிக மாணவர்களான நாங்களே செய்கிறோம் என்பதை ஒருவேளை அவர் அறிந்திருந்தாலும் அதற்காக வருத்தப்பட்டிருக்க மாட்டார், எங்களின் ’வளர்ச்சி’ கண்டு மகிழ்ந்திருப்பார் என்றே நான் உணர்கிறேன்.

நேற்று மாலை நோன்பு திறந்து அரைமணி நேர வாக்கில் சையது இப்றாஹீம் பிலாலி அழைத்தார். ”கவிக்கோ ஒரு சூஃபி” என்றார். ஆமோதித்தேன். நீங்கள் வருவதெனில் நேரில் செல்லலாம் என்றார். அரசியல்வாதிகளும் சந்தைக்கடைக்காரர்களுமே பெரும்பான்மையாக இருக்கப்போகும் ஓர் இரங்கல் கூட்டத்திற்குச் செல்ல என் மனம் ஒப்பவில்லை என்றேன். சிறிது நேரம் அலைப்பேசியிலேயே கவிக்கோவைப் பற்றி அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். “இதுவே அவருக்கு ஒரு நல்ல அஞ்சலி ஆயிற்று” என்றார். உண்மை! ”அஞ்சலி” என்னும் சொல் இதயத்தின் மையத்தை (அரபியில் லுப் என்ப), கூம்பிடும் நிலையில் உள்ளங்கைகளின் நடுவில் இருக்கும் வெற்றிடத்தை, நின்றெரியும் விளக்குச் சுடரின் திரியுள இடத்தில் திரளும் வெற்றிடத்தைக் குறிக்கும் என்கிறது இந்து ஞான மரபு. அது இன்னொருவருக்குத் திறந்து கொடுப்பதே “ஃபாத்திஹா” என்னும் திறப்பு. தனது இதயத்தின் ஆழம் வரை சென்ற ஒருவர் அதே நிலையில் இருக்கும் சஹ்ருதயராக  யாரைக் காண்கிறாரோ அவரை ஆதமார்த்தமாக உணர்ந்துகொள்வதே அஞ்சலி என்பதன் அர்த்தம். அந்நிலை அறியார் அஞ்சலி செலுத்தவே முடியாது.

கவிக்கோவைப் பற்றி நாளெல்லாம் வந்த சிந்தனைகளில் ஆலாபனை நூலின் முகவுரையில் அவர் எழுதிய இவ்வரிகள் மீண்டும் மீண்டும் நினைவு வந்தன:
“எனக்குள் இருவர்
இருக்கின்றனர்.
ஒருவன் பாடகன்         
மற்றொருவன் பித்தன்.”
அவ்விரண்டுமே அவரது ஆளுமையின் பரிமாணங்கள். அதில் பாடகனே நமக்குக் கவிதைகள் தந்தான். பித்தன் பேராசிரிய வேடமிட்டுக்கொண்டு தத்துவங்களைக் கட்டுரைகள் ஆக்கினான். அவரால் நேரடியாகப் பாடகன் ஆக முடியவில்லை. எனவே கவிஞன் ஆனார். அவரால் தனது (ஞானப்) பித்தனை வெளிப்படையாகக் காட்ட இயலவில்லை. அல்லது அதற்கான காலம் கனியத் தொடங்கியிருந்த நிலையில் புறப்பட்டுவிட்டார்.

Image result for kaviko abdul rahman


















”நான் இசையைத்தான் காதலித்தேன். அவள் கிடைக்காததால் அவளின் தங்கையான கவிதையைக் கைப்பிடித்தேன்” என்று அவர் ஒருமுறை இளையராஜாவிடம் சொன்னாராம். அந்த இசைஞானியின் பிறந்த நாளில் நம் கவிஞானி இறந்திருப்பது அவரே விரும்பிய முரண் அணி போன்ற முத்தாய்ப்பாகிவிட்டது.


இரவு உறங்கச் செல்லும் முன், “பாடகன், பித்தன். இந்த இருவருக்கும் இனி இறப்பில்லை” என்று சொல்லிக்கொண்டேன்.