Friday, May 19, 2017

நான் விளக்கைப் படைத்தேன் - part 5

Image result for sacred valley of tuwa
sacred valley of Tuwa at mount Tur Sinai

எகிப்தின் மன்னனிடம் மூசா நபியை அனுப்பும்போது இறைவன் அவரிடம் இரண்டு அற்புதங்களைத் தந்து அனுப்புகிறான். ஒன்று, அவரின் கைத்தடி பாம்பாக மாறுவது. மற்றொன்று, மூசா நபியின் கை வெண்மையாகப் பிரகாசித்தல். அதனைக் குர்ஆன் இப்படிக் கூறுகிறது: ”மேலும், உம் கரத்தைக் கக்கத்தில் வைத்தெடுக்கவும்; அது மாசற்ற வெண்மையாய் வெளிப்படும். (இது) இன்னொரு சான்றாகும்” (குர்ஆன் – 20:22).

கைத்தடி மற்றும் கை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டியதன் மூலம் அவை சார்ந்த இரண்டு அற்புதங்களையும் தான் மூசாவுக்குத் தரப்போவதை இவ்வுரையாடலின் ஆரம்பத்திலேயே இறைவன் சூசகமாகச் சுட்டிக்காட்டிவிட்டான்: ”மூசாவே! நின் வலது கையில் இருப்பதென்ன?” (வ மா தில்க பியமீனி(க்)க யா மூசா – குர்ஆன்:20:17). எனவே ”வெண் கை” (யதுல் பைளாஃ) என்னும் அற்புதம் காட்டியது மூசா நபியின் வலதுகரமே.

மூசா நபி அவர்களின் கை இறைத் திருநாமத்தின் கருவியாக இருக்கும் சிறப்பு நிலையைக் குறிக்கவே அங்ஙனம் வெண்மையாக மாறிற்று எனலாம். அதாவது, உயிரூட்டுதற்கான திருநாமம் “முஹ்யி” என்பதாக இருப்பதைப் போன்றே அந்த உயிரை மீட்டு எடுத்துக்கொள்வதற்கான திருநாமம் “முமீத்” (மரணமளிப்போன்) என்பதாகும். முஹ்யி என்னும் திருநாமத்தின் வெளிப்பாடு கழியைப் பாம்பாக்குவதில் செயல்படுகிறது எனில், முமீத் என்னும் திருநாமம் பாம்பை மீண்டும் கழியாக்குவதில் செயல்படுகிறது. மூசா நபி கழியைக் கீழே போட்டவுடன் அவர்களின் தொடர்பின்றியே அதனை இறைவன் பாம்பாக்கினான். ஆனால் பாம்பு கழியாவதற்கு அவர்களின் கை அதனைத் தொட வேண்டும் என்றான். துவா வெளியில் அந்நிகழ்வின் முன்னோட்டத்தில் அவர்களின் கை பார்ப்பதற்குச் சாதாரணமாகத்தான் இருக்கிறது. எனினும் அது அந்தரங்கத்தி இறைவனின் திருநாமத்தின் கருவியாக இருக்கும் நிலையை வெளிப்படுத்திக்காட்ட அதனை மாசற்ற வெண்மையாகப் பிரகாசிக்கச் செய்தான். அந்தக் கை முமீத் என்னும் திருநாமத்தின் கருவியாக இருந்து தொட்டவுடன் உயீர் மீட்டுக்கொள்ளப்பட்டு மேலும் அது பழைய நிலைக்குக் கைத்தடியாகவே ஆக்கப்பட்டது.

மூசா நபியின் வலது கையில் ”முமீத்” என்னும் திருநாமம் இயங்குவதற்கான முன்னோட்டம் அதற்கு வெகு காலத்திற்கு முன்பே அவரில் நிகழ்ந்திருக்கிறது. அதில், தன் இனத்தவர் ஒருவருடன் சண்டை போட்டுக்கொண்டிருந்த ஓரு எதிரியை மூசா நபி குத்தினார்கள். அதில் அவன் மரணித்துவிட்டான். அவர்களின் குத்து எந்த வேகத்தில் இருந்திருக்கும்? அந்த வேகத்தைத் தொனிப்பது போல் அந்நிகழ்வை அல்லாஹ் துரிதமாகச் சொல்கிறான்: “மூசா அவனைக் குத்தினார்; அவனை முடித்துவிட்டார்!” (ஃபகஸஹு மூசா ஃபகளா அலைஹி – 28:15). (இந்த வசனத்தின் தொடர்ச்சியை வைத்து இங்கே பேசப்படும் கருத்துக்கு முரணான ஐயப்பாடுகள் எழக்கூடும். அவற்றைத் தனியே ”மூசாவின் குத்து” என்னும் கட்டுரையில் பின்னர் பேசுகிறேன், இன்-ஷா-அல்லாஹ்)

Image result for snake like stick

முமீத் என்னும் திருநாமத்தின் செயல்பாடு பாம்பின் உயிரைப் பறித்த பின் அது செத்த பாம்பாகவே அன்றோ கிடக்க வேண்டும்? அது எப்படி கைத்தடியாக மாறுகிறது. ஃகாலிக் முஸவ்விர் முஹ்யி ஆகிய முத்திருநாமங்கள் ஏகநேரத்தில் கைத்தடி மீதியங்கி அதனைப் பாம்பாக மாற்றியது போல் இங்கே முமீத் ஃகாலிக் முஸவ்விர் ஆகிய முத்திருநாமங்கள் ஏகநேரத்தில் இயங்கிப் பாம்பினை மீண்டும் கைத்தடி ஆக்குகின்றன. எனவே மூசா நபியின் கை பற்றிய உடனேயே அது நடந்துவிடுகிறது.

அத்திருநாமங்கள் ஏன் ஏக நேரத்தில் இயங்க வேண்டும்? இதில் திருநாமங்கள் பற்றியதொரு ஞானம் இருக்கிறது. அதாவது இறைவனின் திருநாமங்கள் அவனது உள்ளமையில், சுயத்தில் இவ்விடம் அவ்விடம் என்னும் குறிப்பின்றி அனைத்துத் திருநாமங்களும் நீக்கமற முழுதும் நிரைந்திருக்கின்றன. மனிதவுடலில் கண்ணில் மட்டும் பார்வை, காதில் மட்டும் கேள்வி, நாவில் மட்டும் பேச்சு என்பதைப் போல் அல்ல அவனது திருநாமங்களும் பண்புகளும். எனவே அவை ஏககாலத்தில் ஒரே புள்ளியில் வெளியாக முடியும்.

மனித அல்லது பறவையின் உடலமைப்பினைக் களிமண்ணில் செய்யும்போது அதனைச் சதையுடலாக மாற்ற வேண்டி உயிரூட்டுதல் என்னும் நிகழ்வு அவசியமாகிறது. ஆதம் நபியின் விஷயத்தில் அல்லாஹ்வே அதனைச் செய்தான். தனது முஹ்யி என்னும் திருநாமத்தை அதன் மேல் இயங்க வைத்து உயிரூட்டினான். அந்நிகழ்வு அவன் தனது ஆவியிலிருந்து ஊதியதாக இருந்தது. ஏசுநாதர் பறவை வடிவங்களைக் களிமண்ணில் செய்த நிகழ்வில் அத்திருநாமம் அவர்களின் மூச்சு ஊதலைக் கருவியாக எடுத்துக் கொண்டது. ஏசுநாதர் இறந்துபோன ஒருவனை உயிருடனெழுப்பிய அற்புதத்தில் அவர்களே “முஹ்யி” என்னும் திருநாமத்தின் கருவியாக ஆக்கிக்கொள்ளப்பட்டார்கள். அது இறைவனின் அனுமதி அல்லது உத்தரவின் பேரில் நிகழ்ந்தது. எனவே அவனிட்ட ஆணைக்கு உடனுதவி செய்வது அவனின் பொறுப்பு என்னும் நிலையில் அவனது திருநாமம் இயங்கி உயிரூட்டிற்று.

இறைவனின் மூலப்படிவத்தில் எந்தெந்த படைப்பினத்தின் மீது அவனது முஹ்யி என்னும் திருநாமம் இயங்க வேண்டும் என்பதாக அவனது ஞானத்தின் பொது நியதி உள்ளதோ அந்தந்த படைப்பினத்தின் உருவங்கள் அவனது உயிரூட்டத்தைத் தேடுவதாகவே இருக்கும். இதில்தான் உயிரின உருவங்களை மண் / கல் அல்லது உலோகம் கொண்டு சிலை வடிப்பதை அல்லது அவற்றின் ஓவியங்கள் வரையப்படுவதை இஸ்லாம் தடுத்து வைத்திருப்பதற்கும் ஆனால் அதே மூலப்பொருட்களைக் கொண்டு பாத்திரங்கள் கட்டடங்கள் போன்ற பொருட்கள் செய்யப்படுதற்கு அனுமதி இருப்பதற்குமான விளக்கம் இருக்கிறது.

Related image

ஒரு ஓவியன் அல்லது சிற்பி தனது கலைப் படைப்பிற்கான உருவத்தை எங்கிருந்து எடுக்கிறான்? அது ஏற்கனவே உள்ள ஒருவரை மாதிரியாக வைத்து உருவாகும் ஓவியமாக / சிலையாக இருக்கலாம். உதாரணமாக, லியோனார்டோ டாவின்சி வரைந்த புகழ்பெற்ற ஓவியமான மோனா லிசா என்பது லிசா கெரார்தினி என்னும் பெண்ணை மாதிரியாக வைத்து வரையப்பட்டதாகும். இன்னொரு சாத்தியம் என்னவெனில், ஒரு கலைஞன் தனது கற்பனையில் கண்டெடுத்த உருவமாக அது இருக்கலாம். ஆனால் கற்பனைப் புலன் என்பது ஏற்கனவே முன் கண்ட உருவங்களின் பதிவுகளின்றிப் புத்தம் புதிதாக ஓர் உயிரின உருவத்தைச் சிந்திக்குமா? என்னும் கேள்வி எழுகிறது. (ஏற்கனவே பதிந்திருக்கும் சிருஷ்டிகளின் உருவங்களில், வெவேறு சிருஷ்டிகளின் உருவக்கூறுகளைத் தெரிவு செய்து ஒன்றிணைத்து, சர்ரியலிச ஓவிய பாணியில் போல், ஒரு ‘புதிய’ உயிரினம் போல் காட்டினாலும் அது உண்மையில் புதிய உயிரினவுருவம் அல்ல என்பது விளங்கும்.)

எப்படியோ, ஒருவன் வரையும் அல்லது செதுக்கும் ஓவிய / சிலை ரூபம் என்பது எங்கிருந்து வருகிறது? ஒரு குழந்தை பிறக்கிறது, வளர்கிறது. அதன் உருவத்தை அமைத்து மெல்ல மெல்ல மாற்றிப் பருவந்தோரும் ஒவ்வொரு விதத்தில் காணும் உருவைக் கொடுப்பது யார்? அது யாருடைய உருவப் படைப்பு? அந்த உருவங்கள் எங்கிருந்து வந்தன அல்லது வருகின்றன? அவை இறைவனின் ஞானத்தில் இருக்கின்றன. அல்-முஸவ்விர் என்னும் திருநாமத்தின் இயக்கம் அவற்றை வெளிப்படுத்துகிறது. இறைஞானத்தின் பொது நியதிப்படி அதில் உயிரூட்டம் எந்த அளவு இருக்கவேண்டும் என்று கண்டதோ அந்த உயிரளிப்பை முஹ்யி என்னும் திருநாமத்தின் இயக்கம் தருகிறது. ஓர் ஓவியன் அல்லது சிற்பி ஓர் உருவப்படைப்பைச் செய்யும்போது அவ்வுரு இறைஞானப் படிவத்திலிருந்தே வருகின்றது! அந்த உருவம் ”உயிரினம்” (மனிதன், விலங்கு) என்பதன் உருவமாக இருக்கும் பட்சத்தில் அதில் உயிரூட்டப்படுதற்கான கோரிக்கை (இக்திழா) எழுகிறது. அதற்கு உயிரூட்டுமாறு அதனை வரைந்த / செதுக்கிய கலைஞனை இறைவன் மறுமையில் நிர்ப்பந்திப்பது அதனால்தான். ஆனால் அக்கலைஞனுக்கு முஹ்யி என்னும் திருநாமத்தின் ஒத்துழைப்புக் கிட்டாது. ஏனெனில் அவனின் ஓவிய / சிற்பப் படைப்புச் செயல் என்பது இறைவனின் அனுமதி பெற்ற ஒன்றல்ல. எனவே வரம்பு மீறியமைக்கான தண்டனையை அவன் பெறுவான்.

Image result for hyper realistic painting

ஓவியம் அல்லது சிற்பத்தில் உருவங்கள் தமக்குரிய உயிரூட்டத்தைக் கோரும் என்பதை நம் உயிரின் மீது அவை உண்டாக்கும் அதிர்விலிருந்தே உணரலாம். ஒரு வீடு அல்லது நிலக்காட்சியின் ஓவியத்தை (still life or landscape painting)ப் பார்ப்பதற்கும் ஒரு பறவை அல்லது விலங்கு அல்லது மனித உருவத்தின் ஓவியத்தைப் பார்ப்பதற்கும் வேறுபாடு இருக்கின்றது. உயிரினங்களின் ஓவியங்களை பார்வையாளனின் உபநினைவுத் தளம் சலனப்படுத்தியே காணும். அவ்வுருவங்கள் உயிரூட்டத்திற்குரியவை என்னும் நியதி சிருஷ்டிப் பரப்பெங்கும் ஆக அடிப்படையான ஒன்று. அந்த தெய்வீக விதிக்கு உட்பட்டே மனித நினைவுப்புலம் இயங்கும். அவனின் ஜாக்ரத் நினைவகம் அதனை மறுக்க விரும்பினாலும் எத்தனித்தாலும் அவனது உபநினைவுப்புலம் (ஸ்வப்னம்) அதனைச் சலனமுறுத்திக்கொள்ளும். பிம்பங்களில் ஆக அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துவது தன்னினத்தின் எதிர்ப்பாலின உருவமாகவே இருக்கும். ஏனெனில் இயற்கை நெறியில், ஆண்-பெண் என்னும் இணையே சிருஷ்டிச் செயல்பாட்டின் கருவியாக உள்ளது. எனவே பெண்ணுருவம் போல் ஆணைச் சலனமுறுத்தும் உருவம் பிறிதில்லை. அதுவே பெண்ணுக்கு ஆணுமாம்.

இப்படி நோக்க, உருவங்களை ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் படைக்கும் வினையில் ஈடுபடுமொரு கலைஞனை விடவும், இறைவனால் படைக்கப்பட்டு வடிவம் கொடுக்கப்பட்டு (செவ்வை செய்யப்பட்டு) உயிரூட்டப்பட்ட, அவனது ரட்சிப்பால் (ருபூபிய்யத்) வளர்க்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து, இன்னொரு ஆன்மாவை அதற்கான உடலுடன் வெளிப்படுத்துதற்கான தாம்பத்யத்தில் இயங்குகின்ற ஒருவன் மேலானவன் ஆவான். அதனாற்றான், ஓவியங்களையும் சிலைகளையும் மார்க்கத்தில் தடை செய்த நபிகள் நாயகம் சொன்னார்கள், “திருமணம் எனது வழிமுறை. எனது வழிமுறையை எவன் புறக்கணித்தானோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்லன்” (அந்நிக்காஹ் மின் சுன்ன(த்)தீ வ மன் ரகிப அன் சுன்ன(த்)தீ ஃபலைச மின்னீ). 

இங்கே, இக்கட்டுரையின் தொடக்கத்தில் எடுத்துக்கொண்ட பொருண்மைக்கே நான் திரும்புகிறேன். கருத்தைப் பொருளாக வெளிப்படுத்துவது இறைவனின் தன்மையாகும். அத்தன்மையை அவன் தனது படைப்பினங்களின் வழியே செயல்படுத்துவதுண்டு. அப்படைப்பினங்களில் ஏனையவற்றினும் மனிதனிடமே மிகவும் அபரிதமாக அப்பண்பு வெளிப்படுகின்றது. எனவே அவன் “ஃகலீஃபத்துல்லாஹ்” – இறைவனின் பிரதிநிதி எனப்படுகின்றான். (அல்லது இடவலமாக, மனிதன் இறைவனின் பிரதிநிதி என்பதால் அவனுக்கு இத்தன்மை அபரிதமாக வழங்கப்பட்டுள்ளது.)

இங்கே ஒரு கேள்வி எழுகிறது. மனிதன் தனக்கு வழங்கப்பட்ட தகுதியைத் தவறாகப் பயன்படுத்தினால்? (ஏனெனில், அவன் தவறிழைப்பதற்கான சாத்தியத்துடனேயே படைக்கப்பட்டவன்.). அவன் வரம்புகளை மீறினால்?

ஆம், அவன் தவறிழைக்கிறான். அவனது சிந்தனையின் வெளிப்பாடாக அமைந்த நாகரிகக் கூறுகள் அனைத்தும் இயற்கையைச் சுரண்டும் நாச வேலையாகக் குரூரம் கொள்வதைக் காண்கிறோம். இதனைத் தடுத்து நிறுத்தித் தன்னைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டிய கடமை மனிதனுக்குண்டு. அவனது படைப்பின் குரல் ஒருபோதும் ஆணவத்தின் குரலாக ஒலித்துவிடக் கூடாது.

அதற்குத்தானோ என்னவோ, கட்டடத் திறமையில் மனிதனை விட விஞ்சியவையாக அல்லாஹ் சின்னஞ்சிறு பூச்சிகளை வைத்திருக்கிறான். உதாரணத்திற்கு, நாம் முன்பு கண்ட கரையான். ஒரு கரையானின் அளவையும் அதன் புற்றின் அளவையும் ஒருபக்கமும் மனிதனின் அளவையும் அவன் கட்டியுள்ள கட்டடங்களின் அளவையும் மறுபக்கமும் வைத்து அவற்றின் விகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் மனிதன் கரையானிடம் படுதோல்வி அடைவதைக் காணலாம். ”கரையான்களின் அற்புதம்” (The Miracle of the Termites) என்னும் நூலில் ஹாரூன் யஹ்யா பின்வரும் மேற்கோளைச் சுட்டிக்காட்டுகிறார்: “சராசரியான புற்றின் உயரத்தை ஒரு வேலைக்காரக் கரையானின் அளவுடன் ஒப்பிட்டு அந்த விகிதத்தை ஐந்தரை அடி உயரமுள்ள மனித நிலைக்கு மாற்றி நோக்கின், அக்கரையான் புற்று 960 மீட்டர் (1349 அடி) உயரமுள்ள விண்முட்டிக் கட்டடமாக – இப்போது உலகிலுள்ள எந்தக் கட்டடத்தை விடவும் மிக உயரமானதாக - இருக்கும். உதாரணமாக, அது எகிப்தின் மகா பிரமிடை விடவும் ஐந்து மடங்கு உயரமானது. கரையான் தனது புற்றினை மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகளில் கட்டிவிடுவதைக் கருத, அது மனித உழைப்பில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நிகராகும்” (எரிக் ஹாய்ட் மற்றும் பெட் ஷுல்ட்ஸ், “Insect Life”, ந்யூ யார்க், ஜான் வில்லி அண்ட் சன்ஸ், 1999, பக்கம்.160)


இத்தருணத்தில், மனிதனுக்கும் இறைவனுக்குமான உரையாடலாக அல்லாமா இக்பால் இயற்றிய பாரசீகக் கவிதை ஒன்று என நினைவுக்கு வருகிறது. அக்கவிதையுடன் இக்கட்டுரைக்குத் திரையிடுகிறேன்.

”இறைவன் மனிதனிடம் சொன்னான்:
’எங்கே நான் நீரும் மண்ணும் கொண்டு
ஓர் உலகையே படைத்தேனோ
அங்கே ஈரான் துருக்கி எகிப்தென்று
தேசங்களைப் படைத்துவிட்டாய் நீ
புழுதியில் நான்
இரும்பின் மூலத் தாதைப் படைத்தேன்
நீ வாளும் வேலும் துப்பாக்கியும் படைத்தாய்
பெருமரம் வீழ்த்தும் கோடரியைப் படைத்தாய்
பாடும் பறவைக்குச் சிறையாகும்
கூண்டினைப் படைத்தாய் நீ’
மனிதன் இறைவனிடம் சொன்னான்:
‘நீ இரவைப் படைத்தாய்
நான் விளக்கைப் படைத்தேன்
நீ களிமண் படைத்தாய்
நான் கோப்பையைப் படைத்தேன்
பாலைவனமும் மலைமுகடும்
சமவெளியும் படைத்தாய் நீ
மலர்வனமும் சோலைகளும்
தோட்டமும் படைத்தேன் நான்
கல்லில் கண்ணாடி படைத்தவன் நானே!
விஷத்தில் அமிர்தம் கடைந்தவன் நானே!’”





நான் விளக்கைப் படைத்தேன் - part 4

Image result for man from dust

அனைத்துப் படைப்புக்களும் இறைவனின் ஞானத்தில் இருந்தே படைக்கப்பட்டுள்ளன. தனது அறிவில் கருத்துப் படிவங்களாய் உள்ள அவற்றை அவன் பொருட்களாக்குகிறான். இந்தத் தன்மையே ஃகாலிக் (படைப்பாளன்) என்னும் திருநாமத்தின் செயல்பாடு (function) என்று நோக்க, பூமியில் அவனால் வைக்கப்பட்ட அவனது பிரதிநிதி (காண்க: குர்ஆன்: 2:30) ஆன மனிதனில் அத்தன்மை மிகவும் உச்சமாகப் பிரதிபலிப்பதில் ஆச்சரியமேதும் இல்லை. இந்நிலையில்தான் அவனும் “படைப்பாளன்” என்னும் பெயரை தஷ்பீஹ் – குறியீட்டு ஒப்பியல் நிலையில் பெறுகிறான்.

”அல்லாஹ் பெரும்பாக்கியமுடையவன்; படைப்பாளர்களுள் மிகச் சிறந்தவன்” (ஃப-தபாரக்கல்லாஹு அஹ்சனுல் ஃகாலி(க்)கீன் – குர்ஆன்: 23:14) என்று தனது திருநாமத்தில் பன்மையை (ஃகாலிக்கீன் – படைப்பாளர்கள்) அவன் சுட்டியிருப்பதில் எதார்த்தப் படைப்பாளன் (ஃகாலிக்கே ஹகீகி) ஆகிய அவனைச் சார்ந்து தஃலீக் (படைத்தல்) செய்கிற வேறு படைப்பாளர்கள் யாவர்? யாருக்குத் தனது திருநாமத்தை – அது பொதுமைத் திருநாமம் (இஸ்மெ ஆம்மஹ்) என்னும் அடிப்படையில் – இறைவன் சூட்டிப் பேசுகிறான்? எந்தெந்த உயிரினங்களின் அறிவில் தனது கருத்தினை வைத்து அது உருவாகி வருவதற்கு அவற்றைச் செயல்பட வைக்கிறானோ அந்த உயிரினங்கள் எல்லாம் இந்த “ஃகாலிக்கீன்” (படைப்பாளர்கள்) என்னும் அடைமொழியில் அடங்கும். (”அல்லாஹ்வே சிறந்த முறையில் படைக்கிறான் என்பதைத்தான் ’படைப்பாளர்களுள் சிறந்தவன்’ என்று சொல்லப்பட்டுள்ளது, எனவே அவனை அன்றி வேறு படைப்பாளர்கள் இருப்பதாக எண்ணக்கூடாது” என்று சிலர் விளக்கம் தருகிறார்கள். ”அவனை அன்றி சுயமாகப் படைப்பவர்கள் யாருமில்லை; சுயமாகப் படைப்பவன் அவன் ஒருவனே” என்னும் விளக்கத்தில் இப்படிச் சொன்னால்தான் சரி. ஆனால், அவனைச் சார்ந்து படைத்தல் என்னும் நிலையில் அவனது கருவியாய் இயங்கும் ”வெளிப்படைப் படைப்பாளன்” (ஃகாலிக்கே மஜாஸி) என்னும் விளக்கத்துடன், புரிதலுடன் படைப்பளன் என்னும் பெயரை அவனல்லாதவற்றில் எதற்கும் பயன்படுதுவதையும் அவ்வாறு பயன்படுத்தக் கூடாது என்று இக்கூற்று மறுக்கும் எனில் இது வெறும் சமாளிப்பும் சப்பைக்கட்டுமான வாதமே அன்றி வேறில்லை. அந்த வாதத்தில் குர்ஆனிய ஞான ஒளியே இல்லை.) ”அவனைச் சார்ந்து படைத்தல்” என்று நாம் சொல்வதை குர்ஆனின் ஓர் திருவசனம் கொண்டே விளக்குகிறேன். இருவகையான படைத்தல் நிலைகளை அந்தத் திருவசனம் தெள்ளத் தெளிவாகப் பிரித்து விளங்கிக்கொள்ளும் வாய்ப்பினை நமக்குத் தருகிறது. ”படைத்தல்” (தஃலீக்) என்னும் வினையை, ஃகாலிக் (படைப்பாளன்) என்னும் பெயரை அல்லாஹ் அல்லாதாருக்கு எந்நிலையிலும் பயன்படுத்த முடியவே முடியாது” என்னும் வாதம் குர்ஆனுக்கே மாற்றமானது என்பதற்கு இத்திருவசனம் ஒரு பிரமாணமாக இருக்கிறது. இத்திருவசனத்தின் ஒளியில் அத்தகைய அரைவேக்காட்டு வாதத்தை நாம் புறந்தள்ளுகிறோம்.

மறுமை நாளில் ஏசுவுடன் (நபி ஈசா (அலை)) அல்லாஹ் உரையாடுவதைச் சுட்டும் திருவசனம் (குர்ஆன்:5:110) ஏசு நிகழ்த்திய பல அற்புதங்களைப் பட்டியலிடுகிறது. அதில் இரண்டு பகுதிகள் பொதுவாக நாம் படைத்தல் பற்றிய நமது புரிதலை ஆழப்படுத்திக் கொள்வதற்கு பேருதவி செய்கின்றன. அவற்றுள் முதல் பகுதி இது: “என் உத்தரவின்படி களிமண்ணிலிருந்து பறவையின் வடிவ மாதிரியை நீர் ’படைத்து’ அதில் நீர் ஊதியபோது என் உத்தரவுகொண்டு அது பறவையாகிற்று”  (வ இத் தஃக்லுகு மினத் தீனி கஹைஅதித் தைரி பிஇத்னீ ஃபதன்ஃபுஃகு ஃபீஹா ஃபதகூனு தைரம் பிஇத்னீ – குர்ஆன்:5:110).

Image result for raw clay bird

களிமண்ணிலிருந்து பறவை வடிவின் மாதிரியைச் ’செய்தல்’ என்பதை இங்கே அல்லாஹ் ’படைத்தல்’ என்றே சொல்ல்யிருக்கிறான். “தஃக்லுகு” என்னும் வினையின் அடியாக அந்த வினையை ஆற்றிய “ஃகாலிக்” இங்கே யார் என்றால் நபி ஈசா (அலை) என்பதே இத்திருவசனம் தரும் விடையாகிறது. எனினும் அவர் ஃகாலிக்கெ மஜாஸி (வெளிப்படையான படைப்பாளன்) என்றும் அந்தப் பறவைகளின் மாதிரியை உண்டாக்கும் உதிப்பை அவரின் மனதில் பதித்து இயக்கிய எதார்த்தப் படைப்பாளன் (ஃகாலிக்கே ஹகீகி) இறைவனே என்றும் நாம் விளங்குகிறோம். இதில் முன்னதை மறுத்தால் குர்ஆனை மறுத்துரைத்த குஃப்ரு (நிராகரிப்பு) என்னும் நிலையும், பின்னதை மறுத்துரைத்தால் இறைவனுக்கு ஏசுவை இணையாக்கிய ஷிர்க் என்னும் நிலையும் உண்டாகும். இரண்டையும் சமவயமாய் ஏற்கும் போதுதான் தவ்ஹீது என்னும் ஏகத்துவம் ஸ்தாபிதமாகும்.

இப்பகுதியில் இன்னொரு முக்கியமான சொல் ஏசுநாதர் ஊதியதைக் குறிக்கும் ”தன்ஃபுஃகு” என்பதாகும். அவர் எதை ஊதினார் என்பது இங்கே சொல்லப்படவே இல்லை. அல்லது எதிலிருந்து ஊதினார் என்பது சொல்லப்படவில்லை. ஆனால் களிமண், படைத்தல், ஊதுதல் ஆகிய மூன்று சொல்லாடல்களையும் குறிப்பிட்டு அல்லாஹ்வின் செயல்பாட்டைக் கூறும் திருவசனங்களில் ஊதுதல் என்பதன் விவரிப்பு ஒன்று நமக்குக் கிடைக்கிறது:

”உம் ரட்சகன் வானவரிடம், ‘நிச்சயமாக நான் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்’ என்று கூறியபோது; ’நான் அவரைச் செவ்வைப்படுத்தி, எனது ஆவியிலிருந்து அவருக்குள் ஊதியதும் விழுந்து அவருக்குச் சிரம் பணியுங்கள்’ (என்று கூறியபோது)” (இத் கால றப்புக லில்மலாஇ(க்)க(த்)தி இன்னீ ஃகாலி(க்)கு பஷரம் மின் த்தீனின், ஃபஇதா சவ்வய்த்துஹு ஃபநஃபஃக்து ஃபீஹி மிர்-ரூஹீ ஃபகஊ லஹு சாஜிதீன் - குர்ஆன்:38:71-72)

ஏசு நாதர் பறவைகளின் மாதிரியைச் செய்ததைக் குறிப்பிடும் வசனப்பகுதியும் இறைவன் மனிதனைப் படைத்ததைச் சொல்லும் இந்த வசனங்களும் களிமண், படைத்தல், ஊதுதல் ஆகிய மூன்று சொல்லாடல்களைக் கொண்டுள்ள நிலையில் ஒப்புநோக்க ஏதுவாகின்றன. ஏசுநாதர் பறவைகளுக்குள் ஊதியதைச் சொல்லும்போது ’ஃபதன்ஃபகு ஃபீஹா’ – ’அதனுள் நீ ஊதியபோது’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டது. எதிலிருந்து ஊதினார், எதை ஊதினார் என்னும் விவரம் இல்லை. ஆனால், இறைவன் மனிதனுக்குள் ஊதியதைச் சொல்லும் இத்திருவசனம் (38:72) ‘ஃபநஃபஃக்து ஃபீஹி மிர்-ரூஹீ’ – ’அவருக்குள் எனது ஆவியிலிருந்து ஊதினேன்’ என்றுள்ளது. முந்தைய திருவசனத்தில் சொல்லப்படாத மர்மத்திற்கான விளக்கத்தைப் பிந்தைய வசனத்தின் வார்த்தைகளே நமக்குத் தருகின்றன. ஜீவ ஊற்று என்பது இறைவன் மட்டுமே. அவனிலிருந்தே அது வந்தடைய வேண்டும். ஏசுநாதர் ஊதினும் அது இறைவனிலிருந்து அருளப்படவில்லை எனில் அந்தப் பறவைகள் உயிர் பெற்றுப் பறந்திருக்க முடியாது. ஆனால் அவை பறவைகளாயின என்றே திருவசனம் சொல்கிறது.

இவ்விரு திருவசனங்களில், படைத்தல் என்பதும் உயிரூட்டல் என்பதும் வேறு வேறு செயல்பாடுகளாகச் சொல்லப்பட்டிருப்பதை ஓர்க. ஏனெனில், இது மிகவும் முக்கியமானதொரு வேறுபாடாகும்.

”மனிதனைக் களிமண்ணிலிருந்து படைப்பேன்” என்று சொல்லுமிடத்தில் “இன்ஸான்” என்று சொல்லாது ”பஷர்” என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அது மனிதனின் உடலையே குறித்து நிற்கிறது. அந்த உடலில் உயிரானது பிறகே ஊதப்படுகிறது. அதற்கு ”ஃகாலிக்” என்பதுடன் இன்னொரு திருநாமத்தின் இயக்கமும் இணையவேண்டியிருக்கிறது. அதாவது, “அல்-முஹ்யி” (ஜீவனளிப்பவன்). ஏனெனில், ”அவனே நித்திய ஜீவன்” (ஹுவல் ஹய்யுல் கய்யூம் – குர்ஆன்:2:255). இறைவனின் படைத்தல் என்னும் செயல்பாட்டையும் மனிதனின் படைத்தல் என்னும் செயல்பாட்டினையும் இது வேறுபடுத்திக் காட்டுகிறது.

இறைவன் படைத்து உயிரூட்டுகிறான். மனிதன் படைத்தால் உயிரூட்ட முடியாது. எனவேதான் ஏசுநாதர் களிமண்ணிலிருந்து பறவைகளின் உடல் மாதிரியை (ஹைஅத்) “படைத்தார்” என்று சொல்லும்போதும், அவற்றுள் ஊதியதைச் சொல்லும்போதும் முக்கியமான இன்னொரு வார்த்தை இணைக்கப்பட்டுள்ளது: “பிஇத்னீ” – ”எனது உத்தரவு / அனுமதி”. ஏனெனில் இறைவனை அன்றி உயிரளிப்போன் (முஹ்யி) யாருமில்லை. அவனது உத்தரவு / அனுமதி இல்லாது செய்யப்படுகின்ற – குர் ஆனியச் சொல்லாடலின்படிச் சொல்வதெனில் ‘படைக்கப்படுகின்ற’ – உயிரினத்தின் வடிவ மாதிரிகள், அதாவது சிலைகள் விஷயத்தில் அவற்றுக்கு உயிரூட்டுமாறு அவற்றைப் ‘படைத்தவர்களை’ நோக்கி மறுமையில் அல்லாஹ் கட்டளையிடுவான்; அது அவர்களால் முடியாமல் தண்டனை அடைவார்கள் என்று நபிமொழியில் காண்கிறோம். இறைவனின் உத்தரவு அல்லது அனுமதி இன்றி சுயேச்சகையாக நிகழ்த்தப்பெறும் யாதொரு காரியமும் (அமலும்) உயிர்ப்புள்ளதாக அமையாது. நமது வழிபாடுகள் கூட உயிர்ப்பின்றிப் போவதற்கு நமது சுயேச்சை மிகைப்பதே காரணம். ஏனெனில் நாம் படைத்தல் என்பது எதார்த்தத்தில் இறைவனின் படைத்தலாக இருக்கும் சத்தியத்தை நமது சுயேச்சை என்னும் திரையே மூடியுள்ளது. நமது காரியங்கள் (அமல்கள்) அனைத்தின் நிலையும் இதுதான். ”நிச்சயமாக அல்லாஹ்வே உங்களையும் உங்கள் செயல்களையும் படைத்தான்” (வல்லாஹு ஃகல(க்)ககும் வ மா தஃமலூன் – குர்ஆன்: 37:96). நம் செயல்கள் (அமல்கள்) அல்லாஹ்வால் படைக்கப்படுகின்றன என்பதே அவற்றின் எதார்த்தமாயுள்ள நிலையை மறந்து நமது சுயேச்சையை முற்படுத்தும் மாயையே நமது செயல்களைச் சிலைகளாக்குகிறது. இந்நிலையில் வழிபாடே சிலையாகிவிடுகிறது! அதற்கு உயீரூட்டும்படியான கட்டளையை நாம் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. எனவே, ”அவனன்றி ஓரணுவும் அசையாது” என்னும் நிலைக்கு அடியான் தன்னை ஒப்படைத்து (இதனையே இஸ்லாம் என்னும் சொல் குறிக்கிறது) அவனின் உத்தரவுப்படி அசையும்போது அவனின் செயல்பாடுகளில் ”முஹ்யி” என்னும் திருநாமத்தின் சுடர் வெளிப்பட்டு உயிர்ப்புள்ளதாகிறது. ஏசுநாதர் பறவைகளைப் படைத்தார் என்று கூறுமிடத்தில் உள்ள ”பிஇத்னீ” என்னும் சொல் தரும் விளக்கங்கள் இவை.

அத்தகைய உத்தரவு / அனுமதி என்பது அனைவருக்கும் ஒரே தராதரத்தில் கிடைப்பதில்லை.  வழிபாடுகளுக்கான உத்தரவு அல்லது அனுமதி போன்றதல்ல இது. இறைத்தூதர்களின் “முஃஜிஸா” மற்றும் இறைநேசர்களின் ”கராமத்” ஆகிய மீவியற்கை நிகழ்வுகளான அற்புதங்களுக்குரிய அனுமதி அல்லது உத்தரவு என்பது அவனின் திருப்பொருத்தத்தின் (“ரிளா”/ “ரிள்வான்”) மேலான படித்தரங்களை நியதியாகக் கொண்டுள்ளது. அத்தகைய மீவியற்கை நிகழ்வுகள் மனிதனை இறைவனின் பிரதிநிதியாக நிறுத்துவதில் உச்சபட்ச சாத்தியங்களை செயல்படுத்திக் காடுபவை. இதற்கான ஓர் உதாரணத்தை மேற்சொன்ன திருவசனம் – ஏசுநாதரின் அற்புதங்களை விவரிக்கும் திருவசனம் – நமக்குத் தருகிறது. ”படைத்தல் பற்றிய நமது புரிதலை ஆழப்படுத்திக் கொள்வதற்கு பேருதவி செய்யும்” இரண்டு பகுதிகள் என்று நான் முன்பு குறிப்பிட்டதன் இரண்டாம் பகுதி அது. இதுவரை நாம் விவரித்து வந்த முதற்பகுதி ”ஃகாலிக்” என்னும் திருநாமத்தை மனிதனின் மீது போர்த்திப் பார்க்கிறது. மனிதன் படைத்தாலும் அதற்கு அவன் உயிரூட்ட இயலாது என்னும் படித்தரத்தைச் சுட்டுகிறது. இரண்டாம் பகுதி, அதைவிடவும் ஒரு படி மேலே செல்கிறது. ”முஹ்யி” (உயிரளிப்பவன்) என்னும் தனது திருநாமத்தை இறைவன் தனது பிரதிநிதியான மனிதனின் மீது போர்த்திக் காணும் படித்தரத்தை அது சுட்டுகிறது. அந்நிலையில் உயிரூட்டும் செயல் மனிதன் செய்வதாகக் காட்டப்படுகிறது.

Image result for lazarus came back from the dead

அவ்வசனப் பகுதி இது: ”என் உத்தரவுடன் இறந்தோரை நீ (உயிர்ப்பித்து) வெளியாக்கிய போது” - (வ இத் துஃக்ரிஜுல் மவ்த்தா பிஇத்னீ – குர்ஆன்:5:110). ஏசுநாதர் நிகழ்த்திய “இறந்தவனுக்கு உயிரூட்டிய” அற்புத நிகழ்வு இது. இறந்தவனின் அந்த உடல் இறைவனால் “படைக்கப்”பட்டது. அதற்கு முன்பு இறைவனே உயிரூட்டி வெளிப்படுத்தியிருந்தான். “முமீத்து” (மரணமளிப்போன்) என்னும் திருநாமத்தின் இயக்கத்தால் அதனை அவனே பிணமாக்கினான். இப்போது அவனே தனது தூதரான ஏசுநாதரின் வழியே அதற்கு உயிரூட்டுகிறான். எனினும் தனது திருநாமத்தைத் தனது கருவியின் மீது போர்த்தி அவரே அதனைச் செய்ததாகக் குறிப்பிடுகிறான். (அல்லாஹ்வே கர்த்தன்; ஏசுநாதர் கருவி!).

இந்நிகழ்வில், ”ஹைஅத்” படைப்பின் உடலமைப்பு மாறவில்லை. எனவே ஃகாலிக் என்னும் திருநாமத்தின் இயக்கம் இல்லை. ஆனால் முஹ்யி என்னும் திருநாமத்தின் இயக்கமுள்ளது. இவ்விரு திருநாமங்களின் இயக்கமும் ஒருசேர நிகழ்த்தும் அற்புதமும் இருக்கிறது. அது நபி மூசா (அலை) அவர்களின் வழியாக நிகழ்ந்தது. அவரின் கைத்தடி ஒரு பாம்பாக மாற்றப்பட்ட அற்புதம் அது. எகிப்திய கொடுங்கோல் மன்னனான ஃபிர்-அவ்னின் அவையில் அந்த அற்புதத்தை மூசா நபி நிகழ்த்திக்காட்டினார். அதற்கு முன் தூர் மலையடிவாரத்தில், புனித துவா சமவெளியில் (”பில் வாதில் முகத்தஸி துவா” – குர்ஆன்:20:12)  முன் நிகழ்வாக அந்த அற்புதத்தை இறைவன் அவருக்கு நிகழ்த்திக்காட்டி வழங்கினான். அந்த நிகழ்வைத் திருக்குர்ஆன் பின்வருமாறு சொல்கிறது:

”(அல்லாஹ் சொன்னான்)
‘மூசாவே! நின் வலது கையில் இருப்பதென்ன?’
(மூசா) சொன்னார், ‘இஃதென் கைத்தடி.
அதில் நான் சாய்ந்துகொள்வேன்
அதுகொண்டு என் ஆடுகளுக்குத் தழை பறிப்பேன்
அதிலெனக்கு மேலும் பயன்களுண்டு’
(அல்லாஹ்) சொன்னான்,
‘மூசாவே! அதனைக் கீழே போடுங்கள்’
அவர் அதனைக் கீழே போட்டார்
அப்போது அது விரைந்து நெளியும் பாம்பாயிற்று
(அல்லாஹ்) சொன்னான்,
‘அதனைப் பிடியும், அஞ்சற்க,
அஃது அதன் முந்தைய நிலையிலாகும்;
மேலும், உம் கரத்தைக் கக்கத்தில் வைத்தெடுக்கவும்
அது மாசற்ற வெண்மையாய் வெளிப்படும்
(இது) இன்னொரு சான்றாகும்;
நமது மாபெரும் அத்தாட்சிகளிலிருந்து
உமக்குக் காண்பிப்பதற்காக”
(குர்ஆன்:20:17-23)

இந்நிகழ்வில் கழி ஒன்று பாம்பாக மாறியுள்ளது. களிமண் என்னும் பொருள் தானதல்லாத இன்னொரு பொருளான சதையாக (மனித மற்றும் பறவை உடலாக) மாற்றப்படுவதைப் பற்றிய திருவசனங்களை முன்பு விரிவாகக் கண்டோம். அந்நிலையுடன் இஃதும் ஒப்பு நோக்கற்பாலது.

மூலப்பொருள் ஒன்றினை எடுத்து) அதில் இன்னொரு சிருஷ்டிக்கான உருவ அமைப்பைச் செய்தலை தஃக்லீக் (படைத்தல்) என்று இந்தத் திருவசனங்கள் காட்டுகின்றன. இதில் ஃகாலிக் என்னும் திருநாமத்தின் சுடர் வெளிப்படுகிறது. களிமண் என்பதிலிருந்து மனிதவுடல் அல்லது பறவையுடல் செய்யப்படும்போது களிமண்ணில் இல்லாத உருவம் அதில் புதிதாக உண்டாகிறது. இந்த உருவமூட்டல் “அல்-முஸவ்விர்” (உருவமளிப்போன்) என்னும் திருநாமத்தின் இயக்கமாகும். ”ஃகாலிக்” என்னும் திருநாமத்தின் இயக்கத்துடன் “முஸவ்விர்” என்னும் திருநாமத்தின் இயக்கமும் இயைந்துள்ளது. இந்நிலையிலும் அதன் பருப்பொருள் (material) களிமண்ணாகவே இருக்கிறது.

அது எப்போது களிமண் அல்லாத சதையாகிறது? அதாவது ஒரு மூலப்பொருள் தான் அல்லாத இன்னொரு பொருளாக மாற்றமடையும் “தகய்யுர்” நிகழ்ந்தாக வேண்டியிருக்கிறது. அது நிகழாவிடில் மனிதன் சதையுடல் கொண்டவனாக அல்லாமல் களிமண்ணுடல் கொண்டவனாகவே இருந்திருப்பான். ஏசுநாதர் பறவையுருவம் செய்தது பற்றிக் குறிப்பிடும் வசனப்பகுதியை நினைவு கூர்க. அவர் அதனுள் ஊதியதும்தான் இறையுத்தரவால் அவை ”பறவை”களாக (அதாவது களிமண் என்பது சதையாலான பறவையாக) மாறிற்று. இதையே முதல் மனிதராகிய ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் படைக்கப்பட்டது பற்றிய வசனப்பகுதியில் பொருத்திப் பார்க்கவும். அல்லாஹ் அவரின் களிமண்ணுடலுக்குள் தனது ஆவியிலிருந்து ஊதியதும்தான் அது சதையுடலாக மாற்றமடைந்தது என்று விளக்கமாகும். எனவே, முஹ்யி என்னும் திருநாமத்தின் உயிரூட்டும் இயக்கமே “தகய்யுர்” என்பதையும் நிகழ்த்துகிறது.

ஆதம் நபியின் சிருஷ்டித் தருணத்தைப் பேசும் திருவசனத்தில் “வ இதா சவ்வய்த்துஹு” – “நான் அவரைச் செம்மை செய்ததும்” என்னும் சொற்றொடரை இங்கே கவனிப்போம். இது, உயிர் ஊதப்படும் முன் நிகழ்வதால், “அவரின் உடலுக்குரியதாக செய்து வைக்கப்பட்டிருக்கும் களிமண்ணுடலைச் செவ்வை செய்ததும்” என்று அதன் பொருள் விரியும்.  களிமண்ணுடலைச் செவ்வை செய்தல் என்றால் என்ன? இன்னொரு இடத்திலும், தஃக்லீக் (படைத்தல்) என்பதையும் செம்மை செய்தல் என்பதையும் அல்லாஹ் இருவேறு பணிகளாகப் பிரித்துச் சொல்கிறான். “அவனே படைத்துச் செவ்வையாக்கினான்” (அல்லதீ ஃகல(க்)க ஃபசவ்வா – குர்ஆன்:87:2) செவ்வையாக்குதல் என்றால் என்ன? விகிதவடிவம் அல்லது பரிமாணவடிவம் ஆக்குதல் என்னும் விளக்கத்தை இன்னொரு திருவசனம் தருகிறது: “திண்ணமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்” (லகத் ஃகலக்னல் இன்சான ஃபீ அஹ்சனித் தக்வீம் – குர்ஆன்:95:4). இவ்வசனத்தில் ’அழகிய அமைப்பு’ (அஹ்சனித் தக்வீம்) என்பது செவ்வையான அமைப்பைக் குறிக்கிறது. செவ்வியம் என்பது தக்க விகிதப் பரிமாணங்களைப் பெற்றிருக்கும் நிலையாகும். (இஸ்லாமியக் கலை இப்பண்பையே பிரதானமாக வளர்த்தெடுத்துள்ளமையை அதன் கட்டடக்கலையில் குறிப்பாகவும் தெளிவாகவும் நாம் அவதானிக்க முடியும்).

களிமண்ணில் வடிவம் சமைக்கப்பட்டதை “ஃகல(க்)க” என்னும் பதம் காட்டுகிறது என்றால் “ஃபசவ்வா” என்னும் பதம் அவ்வடிவைத் தனித்தன்மையுடன் துலங்கச் செய்ததைக் காட்டுகிறது. அதாவது, ஃகாலிக் என்னும் திருநாமத்தின் இயக்கத்தைத் தொடர்ந்து “முஸவ்விர்” என்னும் திருநாமத்தின் இயக்கம் நிகழ்கிறது என்பது இதிலிருந்து பெறப்படும். அதன் பிறகே “முஹ்யி” என்னும் திருநாமத்தின் உயிரூட்டல் நிகழ்ந்திருப்பதைக் கண்டோம்.

மூசா நபியின் அற்புத நிகழ்வில், கைத்தடி பாம்பானதில், அதே சமயத்தில் மரம் என்பது சதையுடலாகும் தகய்யுரும் (இதுவே தஃக்லீக் (படைத்தல்) என்பதாகவும் உள்ளது), பாம்பின் வடிவத்தை, உருவத்தை ஏற்கும் தஸவ்வுரும், உயிர் பெறுதலும் நிகழ்வதைக் காண்கிறோம். எனவே ஃகாலிக், முஸவ்விர், முஹ்யி ஆகிய மூன்று திருநாமங்களும் ஒரே சமயத்தில் இயங்கும் நிகழ்வு அது. அவ்வகையில் அதன் வெளிப்பாடு மிகவும் பேரற்புதமே ஆகும்.


அந்தப் பாம்பு மீண்டும் தடியாக மாற மூசா நபி அவர்கள் அதனைப் பிடிக்க வேண்டும் என்பது இறைக்கட்டளை. அதன் தாத்பரியம் பற்றிக் கொஞ்சம் சிந்திப்போம். ஏனெனில் மூசா நபியின் ”கை” இங்கே தனிக் கவனம் பெறுகிறது. 

to be continued...

Wednesday, May 17, 2017

நான் விளக்கைப் படைத்தேன் - part 3

தஷ்பீஹ் என்பதை இன்னொரு வகையில் சொல்வதெனில் குறியீடு (symbol) என்று சொல்லலாம். ஏனெனில் உருவகம் என்பது மொழியிலமைந்த குறியீடுதான். எனவே முதஷாபிஹாத் வகைத் திருவசனங்களைக் ‘குறியீடான ஆயத்கள்’ (Symbolic Verses) என்று சொல்லலாம்.

முஹ்கமாத் மற்றும் முதஷாபிஹாத் என்னும் இருவகை வசனங்களில் ஊடறுத்து நிற்குமொரு வெளிப்பாட்டு உத்தியையும் இறைவன் தனது மறையில் கையாள்கிறான். அது மிஸ்லு (பன்மை: அம்ஸால்) என்னும் உவமை (Similitude) ஆகும். (இதனைச் சிலர் ’உதாரணங்கள்’ (examples) என்றும் மொழிபெயர்த்துள்ளனர்.)  முஹம்மத் மர்மத்யூக் பிக்தாலின் ஆங்கில மொழிபெயர்ப்பில் முப்பத்தாறு திருவசனங்களில் Similitude என்னும் சொல்லினைக் கொண்டு வருகிறார். அதற்கு இணையர்த்தத்தில் (Synonymous) “allegory” என்னுஞ் சொல்லையும் பயன்படுத்துகிறார்.

”திண்ணமாக நாம் முன்வைத்துள்ளோம், இந்த குர்ஆனில், ஒவ்வொரு உவமையிலிருந்தும், அவர்கள் நினைவுகூர்வதற்காக” (வ லகத் ளரப்னா லின்னாசி ஃபீ ஹாதல் குர்ஆனி மின் குல்லி மிஸ்லின் லஅல்லஹும் ய(த்)த-த(z)க்கரூன் – குர்ஆன்: 39:27) என்னும் திருவசனமும், “இந்த உவமைகள், மனிதருக்காக அவற்றை முன்வைக்கிறோம், அவர்கள் ஆழ்ந்து சிந்திப்பதற்காக” (வ தில்கல் அம்ஸாலு நள்ரிபுஹா லின்னாசி லஅல்லஹும் ய(த்)தஃபக்கரூன் – குர்ஆன்: 59:21) என்னும் திருவசனப் பகுதியும் இறைவன் உரைக்கும் உவமைகளின் நோக்கம் என்னவென்பதைக் காட்டுகின்றன. அதாவது, இவ்வுவமைகளைக் கொண்டு மனிதர்களிடம் இறைவனின் எதிர்பார்ப்பு அவர்கள் அவற்றை தியானிக்கவும் (தத(z)க்குர்) ஆழ்ந்து சிந்திக்கவும் வேண்டும் (தஃபக்குர்) என்பதேயாம்.

ஆனால் குர்ஆனின் உவமைகளை எல்லோரும் விளங்கிவிட முடியுமா? அல்லது அதற்கென்றான சிறப்புத் தகுதிப்பாடு, நாம் உருவக, குறியீட்டு (முதஷாபிஹாத்) வசனங்களுக்குச் சுட்டியது போல, ஏதேனும் தேவைப்படுகிறதா? இதற்கும் இறைவசனமே பதிலளிக்கிறது: ”இந்த உவமைகள், மனிதருக்காக அவற்றை முன்வைக்கிறோம். ஆனால், அறிஞர்களே அன்றி அவற்றை விளங்குவதில்லை” (வ தில்கல் அம்ஸாலு நள்ரிபுஹா லின்னாஸி, வ மா யஃகிலுஹா இல்லல் ஆலிமூன் – குர்ஆன்: 29:43). உவமைகளை விளங்குவதற்கு இல்மு (அறிவு, கல்வி) என்னும் தகுதிப்பாட்டினை இவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது. குர்ஆனை ஓதவும் படிக்கவும் தெரிந்த அனைவரிடமும் ஒரு குறைந்தபட்ச ‘இல்மு’ இருக்கத்தான் செய்கிறது. எனவே, இவ்வசனம் அறிவு என்று சுட்டிக்காட்டுவது புற-அறிவை (இல்மெ ழாஹிர்) அல்ல, ஆன்மிகமான அக-அறிவையே (இல்மெ பாத்தின்) என்பது போதரும்.

விளங்குதல் என்பதில் இவ்வசனம் “அக்லு” என்னும் சொல்லினைப் பயன்படுத்துகிறது. அறிவது என்பது வேறு விளங்குவது என்பது வேறு. அறிவது மக்களிடையே சமமாக நிகழக்கூடும். ஆனால் அவரவரின் விளங்குதல் என்பது பல்வேறு நிலைகளில் அமையும். (’நுண்ணிய நூற்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும்’ என்கிறார் திருவள்ளுவர்.) விளங்குதல் என்பதை நோக்கிச் செலுத்துகின்ற ஒருவகை அறிவைப் பெற்றிருப்பவர்களையே இவ்வசனம் “ஆலிமூன்” (அறிஞர்கள்) என்று குறிப்பிடுகிறது. அவர்கள் அக-அறிவைப் பெற்றிருப்பவர்கள்தான். அக்ல் என்பதை ஆங்கிலத்தில் Intelligence / Intellect என்று மொழிபெயர்ப்பதுண்டு. இச்சொல்லே இதயம் (கல்ப்) மற்றும் அதன் மையமான ’லுப்’ ஆகியவற்றைக் குறிக்கும் ஆங்கிலச்சொல் என்று கூறும் மார்ட்டின் லிங்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்: “இதயம் பல நேரங்களில் சிந்தனைக்கு நிகர்ச்சொல்லாக வருகிறது. அதாவது, இச்சொல் இன்று தவறாகப் புழங்கும் அர்த்தத்தில் அல்ல. மாறாக, லத்தீன் மொழியின் ’இன்டலெக்டஸ்’ என்பதன் முழு அர்த்தத்தில் – எட்டா நிலையை நோக்கும் புலன் என்னும் அர்த்தத்தில் – வருகிறது” (மார்ட்டின் லிங்ஸ், “சூஃபியிசம் என்றால் என்ன?”, தமிழில் புன்யாமீன், மெல்லினம் வெளியீடு, முதற்பதிப்பு:2013, பக்.52-53). ’எட்டா நிலையை நோக்கும் புலன்’ (‘the faculty which perceives the transcendent’) என்பது வெளிப்புலன்கள் அல்ல, அகப்புலன்களே ஆகும். (’ரவி பார்க்காததைக் கவி பார்ப்பான்’ என்பது முதுமொழி). இந்த முன் நிபந்தனையை நிறைவேற்றும் எவரும் இறைவன் உரைக்கும் உவமைகளை (அம்ஸால்) விளங்கிக்கொள்ள முடியும்.

உவமைகள் மற்றும் குறியீடுகளைப் பயன்படுத்தும் இறைவசனங்கள் பற்றி இதுவரை பேசியவற்றை நோக்க, அகமிய அறிவு கொண்டோரில் இரு நிலையினர் உள்ளனர் என்பதை அவதானிக்க முடிகிறது: உவமைகளை விளங்குவோர் மற்றும் அவற்றுடன் உருவகங்களையும் (குறியீடுகளையும்) விளங்குவோர். முன்னதைக் காட்டிலும் பின்னது மேனிலையாகும். (தமிழில் அணியிலக்கணம் பயில்வோருக்குத் தெரியும், உவமையின் வகைமை விளக்கம் தரும் தொல்காப்பியம் உருவகத்தை அதன் சிறப்பான தனித்தன்மை கொண்ட வகைமையாகச் சுட்டுகிறது (‘பொருளே உவமம் செய்தனர் மொழியினும்...’). உவமையை விளங்குவதினும் உருவகத்தை – அதன் நுண்ணிய உத்திகளான உள்ளுறை மற்றும் இறைச்சி ஆகிய குறியீடுகளை விளங்குவது மேலானது என்பதே தமிழறிவு.

உவமைகளை விளங்குவதற்கு அகக்கல்வியை ஒருவர் தேடவேண்டும். அது அவரின் முயற்சிக்கு விடப்படுகிறது. முயன்றால் அந்நிலை எய்தலாம் என்பதால்தான் இறைவன் உவமைகளை அனைத்து மனிதருக்குமாக முன்வைக்கிறான். ஆனால் உருவகங்களை, குறியீடுகளை விளங்குவது என்பது மனிதன் தன் சுயமுயற்சியால் அடையக்கூடிய ஒன்றல்ல. அதற்கு இறைவனின் தேர்ந்தெடுப்பு (இஸ்த்திஃபா) தேவைப்படுகிறது. அந்நிலை இறைவனின் தரப்பிலிருந்து அடியாருக்கு அருளப்படுமொரு சிறப்பு நிலையாகும். ”ராசிஃகூன ஃபில் இல்மு” (அறிவில் உறுதிப்படுத்தப் பட்டோர்) என்று அவர்கள் குறிப்பிடப்படுவதால் இது போதரும். எனவே, அம்ஸால் என்னும் உவமைகளை விளங்குவோரினும் முதஷாபிஹாத் என்னும் குறியீடுகளை விளங்கிக்கொள்வோர் மேலான படித்தரம் கொண்டவர்கள் ஆவர்.

இனி, on a personal note என்று ஆங்கிலத்தில் சொல்வது போல், இப்பொருண்மை சார்ந்து எனக்கும் என் மகனுக்குமாக நடந்த உரையாடலைத் தழுவிச் சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அஃதொரு இனிய மாலைப் பொழுது. கிரிக்கெட் ஆடிவிட்டு மகனும் நானும் முகப்புத் தோட்டத்தில் அமர்ந்திருந்தோம். அதற்கு முன் தினம்தான் ஆனந்த குமாரஸ்வாமி எழுதிய “Symbols” என்னும் கட்டுரையை வாசித்திருந்தேன். (அதனை, “குறியீடுகள்” என்னும் பெயரில் மொழிபெயர்த்து ஏப்ரல் 18-ஆம் தேதி பிரபஞ்சக்குடிலில் வெளியிட்டேன்.) அதில், அடையாளங்கள் (signs) மற்றும் குறியீடுகள் (symbols) ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாட்டினை மிகத் தெளிவாக அவர் சொல்லியிருந்தார். அவரின் கருத்தைப் பின்வருமாறு சூத்திரப்படுத்திக் கொண்டேன்: ”குறியீடுகள் கருத்துக்களைச் சுட்டுகின்றன; குறிகள் பொருட்களைச் சுட்டுகின்றன.”

கருத்து மற்றும் பொருள் (idea and object) என்னும் இரண்டு நிறுவல்கள் தத்துவ உலகில் மிகவும் அடிப்படையானவை. இவற்றைச் சார்ந்த முதல்வாத நோக்குகளே சிந்தனையுலகை இடது மற்றும் வலது சாரிகளாகப் பிரித்துப் போட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். இவ்விரண்டிற்குமான தொடர்புகள் பற்றி நான் அப்போது சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனந்த குமாரஸ்வாமியின் இந்த எளிய ஆனால் ஆழிய வரையறையை என் மகனுக்குக் கற்பிக்க விரும்பினேன்.

“நான் சில பெயர்களைச் சொல்வேன். அது பொருளா அல்லது கருத்தா என்று நீ சொல்” என்று அவனிடம் சொன்னேன். “அது எப்படி, எல்லாப் பெயருக்கும் பொருள் இருக்கத்தானே செய்யும்?” என்றான். (”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது தொல்காப்பியம்!). “அவசரப்படாத கண்ணு. பொறுமையா கேட்டுட்டுச் சொல்லு” என்றேன். “மரம், வீடு, பந்து, ஸ்கூட்டர், வானம், பறவை, கதவு” என்று நான் சொல்லிச் செல்லவும் அவை ஒவ்வொன்றுக்கும் “thing” (பொருள்) என்று சொல்லிக்கொண்டே வந்தவனிடம் சட்டென்று “அன்பு” என்றேன். பொருளென்று வழமையாய்ச் சொல்ல வாயெடுத்து நிறுத்தி, சிரித்தபடி “idea” (கருத்து) என்றான். “மகிழ்ச்சி” என்றேன், கபாலியைப் போல. “idea” என்றான் சிரித்துக் கொண்டே. “கோபம், சோகம்…” என்று மெய்ப்பாடுகளாக அடுக்கவும் கருத்து என்றே சொல்லிவந்தான்.

“சரி. பொருள்கள் என்று நாம் சொன்னதில் ஒரு கேள்வி. மரம் என்பதற்கும் நாற்காலி என்பதற்கும் அடிப்படையில் என்ன வித்தியாசம்?” என்று கேட்டேன். “மரம் என்பது இயற்கையிலேயே இருப்பது. அதிலிருந்து பலகை எடுத்து மனிதன் செய்தது நாற்காலி” என்றான்.

Related image

“அதாவது, நாற்காலி என்பது ஒரு பொருளாக ஆவதற்கு முன் தச்சனின் சிந்தையில் ஒரு கருத்தாக இருந்ததுதானே?” என்றேன். “ஆம்” என்றான். கருத்தே இங்கு பொருளாக மாறியிருக்கிறது. (கருத்துமுதல்வாதம்!). மரம் எப்படி வந்தது? பறவை எப்படி வந்தது? இயற்கையாக இருப்பவை என்று நாம் சொல்லும் பொருட்கள் எல்லாம் எப்படி வந்தன? அவை யாருடைய கருத்தில் உதித்தவை? “அல்லாஹ்வின் இல்மில் – ஞானத்தில் இருந்து வந்தவை” என்று பதில் சொன்னான்.

மரத்திலிருந்து நாற்காலி செய்ய வேண்டும் என்னும் எண்ணம் மனிதனின் மனத்தில் உதித்தது எப்படி? (முதலில், அதற்கு ’மரம்’ என்று பெயரிட வேண்டும் என்னும் எண்ணம் எப்படி தோன்றிற்று? தொல்காப்பியம் சொல்லதிகாரம் கிளவியாக்கம் என்னுமியலின் முதல் நூற்பாவிற்கான உரையில் சேனாவரையர் சொல்கிறார்: “தனிமொழியாவது சமய ஆற்றலால் பொருள் விளக்குவது”. அடிக்குறிப்பு: ”சமய ஆற்றலாவது இச்சொல்லால் இப்பொருளை உணரவேண்டுமென்ற இறைவனின் விருப்பம். இதனை வடநூலார் ‘சங்கேத ரூபா சக்தி’ என்பர்”.)

”அல்லாஹ் அந்த எண்ணத்தை மனிதனின் மனத்தில் போடுகிறான்” – இது என் மகன் சொன்ன பதில். ‘அப்படியெனில், முதன்மையாக நாற்காலி என்பதும் இறைவனின் எண்ணம்தான் அல்லவா? அடுத்துத்தானே அது மனிதனின் மனத்தில் தோற்றுகிறது?” ஆம். இயற்கையை நாம் செயற்கை ஆக்குகிறோம். இயற்கை இன்றிச் செயற்கை இல்லை! இறைவனின் வெளிப்பாடு இயற்கை என்றும் மனிதனின் வெளிப்பாடு செயற்கை என்றும் இங்கே சொல்லலாம். ஆனால், ஆழ்ந்து நோக்க, அனைத்துமே இறைவனின் வெளிப்பாடுகள்தாம், மனிதன் வெளிப்படுத்தும் செயற்கை உட்பட. ஏனெனில் இறைவனின் ஞானத்தில் இல்லாத ஒன்று மனிதனின் சிந்தனையில் முகிழ்த்து வெளிப்படுவதில்லை, இந்த வீடு, ஸ்கூட்டர், பந்து, கதவு, ஏணி என்று எல்லாமே.

இயற்கை மற்றும் செயற்கை ஆகிய தமிழ்ச் சொற்களில் உள்ள தத்துவ நோக்கு வியக்க வைக்கிறது. ”இயல்” என்பது இருப்பது என்னும் பொருளைத் தருகிறது. செயலின் விளைவாக அன்றி இருப்பது இயற்கை ஆகும். செயலின் விளைவாகத் தோன்றுவன எல்லாம் செயற்கை ஆகும். வானாதி அண்டங்கள் யாவையும் நாம் இயற்கை என்று சொல்வதெல்லாம் மனிதமைய நோக்கில்தான் (anthropocentric view). ஏனெனில் அவற்றை மனிதன் ’செய்ய’வில்லை. (கை இயலாயிருக்கிறது. அதில் வினை என்னும் செயல் தோன்றுகிறது. கைவினை. அதன் விளைவாகப் பொருள்கள் உண்டாகின்றன. ”கைவினைப் பொருட்கள்” என்னும் எளிய தமிழ்ச் சொற்றொடரில் எத்தகைய தத்துவம் துலங்குகிறது என்பதைப் பாருங்கள்!) ஆனால், இறைமைய நோக்கில் (theocentric view) பார்க்கும்போது அனைத்தும் இறைவனின் படைப்புக்கள் என்பதால் வெளியுலகாய் அமைந்தன அனைத்தும் செயற்கையே. எனில் இவற்றின் இயற்கை எது? இறைவனின் ஞானத்தில் (இல்முல்லாஹ்) காலாதீதமாய் அமைந்திருக்கும் அவற்றின் மூலப்படிவங்கள் (Archetypes; இதனை சூஃபி மகான் இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் தனது நூற்களில் அஃயானே ஸாபி(த்)தா (நிலைப்பட்ட படிவங்கள்) என்று குறிப்பிடுகிறார். அதுவே அனைத்து சிருஷ்டிகளின் இயற்கை ஆகும். இக்கட்டுரையின் பொருண்மை கருதி, இச்சிந்தனை ஓட்டத்தை இங்கேயே நிறுத்தலாம். (இதன் நீட்சியாக, இறைவனின் செயல் எதன் மீது ஏற்படுகிறது? அவனின் உள்ளமை அன்றி வேறற்ற நிலையில் அவனது செயல்களின் விளைவு எதன்மீது ஏற்படுகிறது? செயலின் விளைவு உள்ளமையை மாற்றாது எனில் அவனது ஞானத்தில் உள்ள படிவங்களின் மீதே அவனின் செயல்களும் இயங்க வேண்டுமாதலால் அவனது செயல்களும் அதன் விளைவுகளும்கூட ஞானத்திலேயேதான் நிகழ்வனவா? என்கிற ரீதியில் சிந்தித்தால் இறைமைய நோக்கில் காண செயற்கை என்பதே கிடையாது என்னும் முடிவில் போய் நிற்கிறது. அதாவது, பந்து என்பதன் இயற்கை எது? அது இப்போது எதார்த்தத்தில் இருப்பது இறைவனின் ஞானத்தில்தான் என்பதால் அதுவும் இயற்கைதான் அல்லவா? எனவே மனிதமைய நோக்கில் செயற்கை என்று நாம் காணும் எதுவும் இறைமைய நோக்கில் இயற்கைதான்).

மரமறுத்து நாற்காலி செய்ய வேண்டும் என்னும் எண்ணத்தை மனிதனின் மனத்தில் இறைவனே போடுகிறான் என்றென் மகன் சொன்னதன் தொடர்ச்சியாக நான் அவனிடம் கேட்ட கேள்வி, “இப்படி இயற்கையைக் கையாண்டு புதுப்பொருள் செய்யும் எண்ணத்தை மனிதனுக்கு மட்டும்தான் அல்லாஹ் கொடுக்கிறானா? வேறு உயிரினத்திற்கு அந்த நிலை இருக்கிறதா? எப்படி?”. இக்கேள்வி தொட்டு நாங்களிருவரும் அடைந்த கண்டறிதல்களை இனி கோர்வையாகச் சொல்லிச் செல்கிறேன்.

மரம் இருக்கிறது. அதில் கிளைகள் கொப்புகள் இலைகள். அவற்றில் ’இயற்கை’யாகவே பூவும் பிஞ்சும் காயும் கனியும் தோன்றுகின்றன. பறவைகளுக்கு அவை உணவாகின்றன. ஆனால் பறவைகளுக்கான கூடுகள் மரத்தில் இயற்கையிலேயே உண்டாகின்றனவா? என்றால் இல்லை. கூடுகளைப் பறவைகளே ‘செய்’கின்றன. அதில் சில பறவைகள் தொழில்நுட்ப நேர்த்தி பெறுவதைக் காண்கிறோம். தூக்கணாங்குருவியின் கூடு எத்தனை நுணுக்கமாக நெய்யப்படுகிறது! அதன் வாய் நோக்கும் திசை மழையின் வருகையை அல்லது வராமையைக் காட்டிவிடும் என்று சொல்கிறார்கள்! எத்தகைய உய்த்துணரறிவு! எனவே, நாம் விவரிக்கும் கோட்பாட்டின்படி, கூடு என்பது பறவையின் சிந்தனையில் இறைவனால் வைக்கப்படுகிறது. அப்பறவை அதனை நிதர்சனம் செய்கிறது. சுள்ளிகளும் புற்களும் இதர மூலப்பொருட்களும் கண்டடைந்து சேகரிக்கப்பட்டுப் பறவையால் கூடு உருவாகிறது.
Image result for weaver bird nest india

மீன்கள்? அவை நீரில் வசிக்கின்றன. நீருக்குள் ஏதேனும் பாறைப் பிலங்கள் காணப்படின் அதனுள் அவை உறையக்கூடும். ஆனால் அவை வீடுகள் செய்வதில்லை. முள்ளம்பன்றிகள்? மலேசிய நாட்டின் பழங்குடியினரான ஜஹாய் மக்களைப் பற்றியதொரு ஆவணப்படம் கண்டேன். அவர்கள் முள்ளம்பன்றிகளை வேட்டையாடுகிறார்கள். அவை நெகிழ்நிலத்தில் பொந்து அமைத்து உள்ளே பதுங்கியுள்ளன. பதினைந்து அடிகள் சுற்றளவு கொண்ட பொந்தமைப்பிற்குப் பல வாசல்கள் இருக்கின்றன. இது நுணுக்கம் இல்லாதவொரு எளிமையான பொந்தமைப்புத்தான். ஆனால் கரையான் மற்றும் எறும்புப் புற்றுக்களை நாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவற்றின் நுண்ணமைப்பு நம்மை வியப்பிலாழ்த்துகிறது. ஒரு கரையான்புற்றானது சராசரியாக பத்து அடி உயரமும் எட்டு அடி அகலமுமாயிருக்கும். ஒருவகைக் கரையான்கள் இருபத்தாறு முதல் முப்பது அடி வரை கட்டுகின்றன. காங்கோவில் கண்டறியப்பட்ட ஒரு கரையான்புற்று நாற்பத்திரண்டு அடி உயரமிருந்ததாம். (கரையான்களிலும் இந்தியர்கள், அமெரிக்கர்கள் மற்றும் அரபு சேக்குகளெல்லாம் உண்டு போலும்). கரையான்களின் சமூக அமைப்பு, எறும்புகள், குளவிகள் மற்றும் வண்டுகளின் சமூக அமைப்புடன் ஒப்புநோக்கப்படுகிறது. எறும்புகள் மற்றும் தேனீக்களின் ’குடியிருப்புக்களும்’ மிகவும் நுண்ணிய கட்டமைப்புக்கொண்டவை என்பதைக் கவனிக்கவும்.

பாம்பு? அது கரையான் எழுப்பும் புற்றில் நுழைந்து வாழ்கிறது. (காலே இல்லாத பாம்பின் காலனியாதிக்கம்!). அல்லது பாறைகள் மரங்கள் போன்றவற்றில் இயற்கையாக அமைந்த குறுமுழைகளில் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொள்கிறது. (முழை என்றால் குகை. குகைக்குள்ளும் பல சிறு பொந்துகள் இருப்பதுண்டு. ”மலை முழை அதனின் கண்ணே குறுவளை அனேகம்” என்கிறார் உமறுப்புலவர். அதிலொரு வளையில் (பொந்தில்) கருநாகம் (’கரிய பாந்தள்’) இருந்ததாம். (சீறாப்புராணம்: ஹிஜ்ரத்துக் காண்டம்: விடமீட்ட படலம்: பாடல்#3)). சிங்கங்கள் புலிகள் ஓநாய்கள் போன்றன? மலை மற்றும் கானக முழைகளில்.

இவ்வாறு யோசித்துப் பார்த்ததில் பறவைகள் மற்றும் எறும்பு, தேனீக்கள், கரையான்கள் போன்ற பூச்சிகள் ஆகியவையே சிறப்பாக ’வீடு’ கட்டுகின்றன என்று காண முடிந்தது. காட்டு ராஜா தனக்கொரு அரண்மனையைக் கட்டுவதில்லை. கால்நடைகள் தமக்கொரு உறைவிடம் உருவாக்குவதில்லை.

இந்த அவதானம் எனக்கு வியப்பாகவே இருந்தது. ஏனெனில், கட்டுமானப் பணிகளில் மனிதனன்றி, இன்னும் சொல்லப்போனால் மனிதனினும், சிறப்புப் பெற்றுள்ள இச்சிறு பூச்சிகளையும் பறவைகளையும் குர்ஆனில் அல்லாஹ் மிகவும் சிறப்பிடம் தந்து கூறியுள்ளான். “தேனீ” (அந்-நஹ்லு), “எறும்பு” (அந்-நம்லு) என்னும் தலைப்பில் இரண்டு அத்தியாயங்களே உள்ளன.

உறைவிடக் கட்டுமானம் பற்றிய கருத்துருவம் இறைவனால் மனத்தில் போடப்பட்டு அதனைச் செயல்படுத்த இயங்குதல் என்னும் கோட்பாட்டுக்குச் சிறந்த உதாரணமாக தேனீயை குர்ஆன் குறிப்பிடுவதைக் காணலாம். “உம் ரட்சகன் தேனீக்கு வெளிப்படுத்தினான்: மலைகளிலும் மரங்களிலும் அவர்கள் கட்டியெழுப்புவதிலும் நின் வீட்டை அமைத்துக்கொள்” (வ அவ்ஹா றப்புக இலந்நஹ்லி அனித்தஃகிதீ மினல் ஜிபாலி புயூத்தன் வ மினஷ் ஷஜரி வ மிம்மா யஃரிஷூன் – குர்ஆன்:16:68)
Image result for honey bee hive

இவ்வசனத்தில் உள்ள ”அவ்ஹா” என்னும் சொல் மிக முக்கியமானதொரு கலைச்சொல். இறைத்தூதர்களின் இதயங்களுக்கு இறைவன் அருளுகின்ற வேத வெளிப்பாடுகளையே (Revelations) வஹீ என்றழைப்பர். இங்கே தேனீ என்னும் பூச்சிக்கு இறைவன் வஹீ அறிவித்ததாக வருவது அச்சிறு பூச்சிக்கு இறைவன் வழங்கியுள்ள கண்ணியத்தை, மதிப்பைக் காட்டுகிறது. இறைவனின் படைப்புக்களில் எதனையும் துச்சமென நினைக்கக் கூடாது என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.

தேனீயின் வீட்டைக் குறிப்பிடும் குர்ஆன் எறும்பின் வீட்டைப் பற்றியும் சொல்கிறது. பேரரசர் ஆகிய நபி சுலைமான் (அலை) (Solomon) அவர்கள் தம் படையினருடன் வருவதைக் கண்ட எறும்பு தனது கூட்டத்தாருக்கு எச்சரிக்கை செய்கிறது. ”அவர்கள் எறும்புகளின் சமவெளிக்கு வரும் வரை. (அப்போது) ஓர் எறும்பு கூறிற்று ’எறும்புகளே! உங்கள் உறைவிடங்களுக்குள் நுழையுங்கள். சுலைமானும் அவரின் படையினரும் அவர்கள் அறியாத நிலையில் உம்மை நசுக்கிவிட வேண்டாம்” (ஹத்தா இதா அதௌ அலா வாதிந்நம்லி காலத் நம்லத்துன் யா அய்யூஹந் நம்லுத்ஃகுலூ மசாக்கினக்கும் லா யஹ்திமன்னக்கும் சுலைமானு வ ஜுஹூதுஹு வஹும் லா யஷ்உரூன் – குர்ஆன்: 27:18). இவ்வசனத்தில் வீடு அல்லது உறைவிடம் என்பதைக் குறிக்க ”மஸாக்கினா” என்னும் சொல் ஆளப்படுகிறது. சுகூன் என்றால் நிம்மதி என்று பொருள். மஸாக்கினா என்றால் நிம்மதியை அடையுமிடம். ”எலி வளையானாலும் தனி வளை” என்பது தமிழ் முதுமொழி. அது சொந்த வீட்டின் நிம்மதியைச் சுட்டுகிறது. இங்கே குர் ஆன் அதே போல் குறிப்புக்காட்டுகிறது, எறும்புக்கே ஆனாலும் தன் வீட்டில்தான் நிம்மதி! ஏனெனில் இந்த எறும்புகள் மனிதர்களின் இருப்பிடத்தில் கூடு கட்டியவை அல்ல. தம் சொந்த நிலத்தில் (பட்டா நிலம் பார்த்துக்குங்க!) “வாதிந் நம்லு” (எறும்புகளின் சமவெளி அல்லது எறும்பு நகர் என்பது அந்த இடத்தின் பெயர். இறைவன் வைத்த பெயர்! தமிழகத்திலும் அப்படியோர் ஊர் உள்ளது. எறும்புகளை மிகவும் மதிப்புடன் சுட்டிச் சொல்லும் ஊர் – திருவெறும்பூர்!)

Image result for hudhud bird

வீடு கட்டும் திறன் தரப்பட்ட உயிரினங்களில் ஒன்று பறவை என்பதாகக் கண்டோம். அதனொரு பிரதிநிதியும்கூட சுலைமான் நபியுடன் தொடர்புபடுத்திச் சொல்லப்படுகிறது. சும்மா அல்ல, தூதர் (Ambassador) என்னும் பெரும்பதவி கொண்டு கீர்த்தி பெற்று விளங்கிற்று அது. (காண்க: குர்ஆன்: 27:20-28) இனத்தால் அது ஒரு கொண்டலாத்தி (hoopoe). அரபியில் ஹுத்ஹுத் என்று சொல்வார்கள். அரசனுக்குத் தூதுப்பணி செய்த அப்பறவையின் தலையிலேயே இறைவன் மகுடம் போன்ற அமைப்பை வழங்கி அதனை விசிறி போல் விரித்து மடக்கி ஜாலாக்குக் காட்டும் திறனையும் கொடுத்திருக்கிறான்.

எறும்பும் பறவையும் மட்டுமல்ல, உறைவிடம் கட்டும் திறனில் சிறந்ததாக நாம் முன்பு கண்ட கரையானும் சுலைமான் நபியுடன் தொடர்புப் படுத்திச் சொல்லப்படுகிறது. கரையான் என்னும் பெயர் நேரடியாகச் சுட்டப்படாவிடினும், மரத்தை அரிக்கும் அதன் குணம் குறிப்பிடப்படுகிறது. சுலைமான் நபியின் இறப்புச் சூழலில் அது இடம்பெறுகிறது. பலஸ்தீனத்து மாபெரும் இறையில்லத்தை ”ஜின்கள்” என்னும் அசுர கனங்களைக் கொண்டு அவர்கள் கட்டியிருந்த போது மேற்பார்வை பார்த்த நிலையில் உயிர் பிரிந்தது. ஆனாலும், அஸா என்னும் கைத்தடி ஊன்றியபடி அவர்களின் உடல் நின்றிருந்தது. இதைக் கண்ட ஜின்கள் இராப்பகலாக ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்தன. பணி முடிந்தபோது அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டிருந்ததை இறைவன் வெளிப்படுத்தினான். “நாம் அவருக்கு மரணத்தை விதித்தபோது, அவற்றுக்கு எதுவும் அவரின் மரணத்தைக் காட்டவில்லை, அவரின் கைத்தடியைத் தின்றதொரு மண்ணுயிரி தவிர” (ஃபலம்மா களைனா அலைஹில் மவ்த்த மா தல்லஹும் அலா மவ்த்திஹீ இல்லா தாப்பத்துல் அர்ளி தஃகுலு மின்ஸஅ(த்)தஹு – குர்ஆன்: 34:14). 

இந்தத் திருவசனம் குறிப்பிடும் உயிரினம் கரையான் என்பதே மிகப்பொருத்தமாக அமையும். “தாப்பத்துல் அர்ளி” (பூமியின் உயிரினம் – creature of the earth / earthly creature) என்றே அது பொதுவாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அது சுலைமான் நபியின் கைத்தடியைத் தின்றதாகச் சொல்லப்படுவதால் மரத்தை அரிக்கும் திறன் கொண்ட கரையானையே குறிப்பதாகச் சொல்லலாம். மட்டுமல்ல மண்ணுக்குள் சிறு சிறு பொந்துகள் போட்டு வாழும் மண்புழுவை விடவும், எலிகளை விடவும், அவற்றினும் சிறந்த கட்டட வல்லுநர்களான எறும்புகளைவிடவும் சராசரியாகப் பதினைந்து அடி உயரத்திற்கு மண்ணையே எழுப்பிப் புற்றுக் கட்டும் கரையானை “தாப்பத்துல் அர்ளி’ என்று புகழ்வதுதான் சாலப் பொருத்தமானது!


இவ்வாறு, மனத்தில் ”உதித்த” கருத்தினை (idea) வெளிப்பொருளாக மாற்றும் திறன் கீழ்நிலை உயிர்களில் காணப்படினும் அவையெல்லாம் ஏதோ முன்னறிவிப்புப் போன்றும் கொசுரு (samples) மாதிரியும் இருக்கின்றன, மனிதனிடம் அத்திறன் வெளிப்படுவதை நோக்கும்போது. 

to be continued...

Tuesday, May 16, 2017

சக்கரம்

Image result for girl in chakra

அந்தி அண்மித்த மாலைப்பொழுது
என்னவளின் பிறந்தகத்தில் இங்கே
விரிவானம் நோக்கிய மொட்டை மாடியில்
காற்று வெளியிடை தனித்திருந்தேன்

(தியானிக்கின்றேனாம்
கவி ஆகையால் கற்பனை செய்கிறேனாம்
வெறுங்கவி அல்ல பேராசிரியரும் கூட
(எனவே, கவியாய் இருப்பது பெரும்பிழையன்று)
அதனால் சிந்திக்கின்றேனாம்
என்னைப் பற்றிய அவர்களின் சித்தாந்தம்
இருக்கட்டுமே
வற்றாக் கருணையின் அரவணைப்பாய்
தட்டில் இனிப்பும் பலகாரமும்
ஏலம் மணக்க நாவில் ஒட்டும் தேநீரும்
வந்துவிடும் எப்போதும்.)

ஊரையே சுற்றி வளைத்ததாக
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மடிப்புக்கள்
நீல நிறம் கொண்டென் விழியும் நெஞ்சும்
குளுமை செய்தனவாய் நிறைந்திருந்தன

அண்மையில் படித்த நூற்கள் சுமந்து
ஓடும் திருஷ்ணையில் மிதந்தும் அமிழ்ந்தும்
அவ்வப்போது கரையேறி நின்றும்
குளிரில் தேகம் வெடவெடப்பது போல்
இறைநாமம் செபித்தும்
மார்ஜார தியானத்தில் மனமிருந்தது

ஓடக்கரைத் தெருமுனையில்
கிளிப்பச்சை வண்ணம் தீட்டியிருக்கும்
அவ்லியா பீடத்தில் வளர்ந்து நிற்கும்
தனித்த பூவரசின் கோலமொரு குறியீடாய்க்
கண்டு அதில் நின்றது பார்வை

வந்தார்கள் படையெடுத்து
தீராத விளையாட்டின் பிள்ளைகள்
அடியேனின் மரபணுச் சித்திரங்கள் இரண்டு
அவர்களின் மச்சிகள் தம்பிகள் தங்கைகள்

ஆகச் சிறியளாம் வாண்டு ஒருத்தி
என் கையால் இருமுழ உசரமிருப்பாளை
அச்சாணி ஆக்கியொரு அனிச்ச சக்கரம்
உருவாகிற்றங்கே

இம்மென்றால் வனவாசம்
ஏனென்றால் சிறைவாசம்
தனக்கே விதித்துக்கொண்டு
நிமிடத்திற்கொருமுறை
மூலையில் அமர்ந்துவிடுவாள்

சிற்சில மயிலிறகு பெய்தாலே
முறியும் அச்சாக இருந்தது அவள் மனம்

விளையாட்டுச் சக்கரம் சுழலுவான் வேண்டி
ஆரங்கள் எல்லாம் அவள் வயின் சாய்ந்து
சாமங்கள் சொல்லிச் சாமரம் வீசி
குறுநகையுறுத்தி எழுப்பி
அவள் விதிக்கும் விசித்திர நியதிகள் கேட்டுத்
தொடர்ந்தது அவர்களின் விளையாட்டு

யானைக்குட்டிகள் போன்ற
நெகிழிநீர்த் தொட்டிகள் இரண்டும்
காரைச்சுவர் கொண்ட பழையது ஒன்றும்
கீழிருக்கும் சயன அறையின்
மேற்தள மேடுமாக
இத்தனையே வசதிக்குள்
எத்தனை லாவகமாய் ஒளிந்துகொள்கிறார்கள்!
எப்படியெல்லாம் கண்டடைகிறார்கள்!

ஒருவருக்குள் மீண்டும் மீண்டும் அவரைக்
கண்டடைய முடிவதுதான்
வாழ்வின் தலையான அர்த்தமோ?
உறவுகளின் உன்னதமோ?

விசாரங்களில் நொண்டியடிக்கும் மனம்
எட்டிப் பிடிக்க முடியாத தூரத்திற்கு
அதற்குள் 
சுழன்று போயிருந்தது
ஆகச் சின்னஞ் சிறியள் ஒருத்தியை
அச்சாகக் கொண்டு உருவான சக்கரம்




(இடம்: கம்பம், தேனி மாவட்டம்)
(திருஷ்ணை: எண்ணங்களின் தொடரோட்டம், சித்த விருத்தி. இதனை நிறுத்தி வைப்பது யோகம்; மார்ஜாரம்: பூனை)


துளிப்பாடு

Image result for bird drinking tap water

இன்று நாள் முச்சூடும்
அமர்ந்தாயிற்று
துளியொன்றின் தீரா வியப்பில்

இல்லை நண்பா!
சிறப்பானதென்றாக்கும்
எந்த அர்த்தப்பாடும்
அதன் மீது எண்ணற்க

புனிதத் தலமெதிலும்
ஊற்றெடுத்து வந்த
தீர்த்தத் துளி அல்ல அது

உழைப்பாளியின்
நெற்றியில் வழிந்து
புருவ ரோமத்தில் தொங்கிச் சிந்தும்
வியர்வைத் துளியுமன்று

அறப்போர்க்களமாடிய
தியாகியின் குருதித் துளியன்று

தியாகியின் ரத்தத்தினும்
வலிமையானதென்று
வருணிக்கப்பட்ட
மைத்துளியும் அன்று

இறைத்தூதரினதோ
இறைநேசரினதோ
கண்கள் வடித்த
கண்ணீர்த் துளியுமன்று

ஈன்ற குழவியின்
குருத்து வாய் உண்ணுதற்குப்
பெருங்கருணை திரவமாயிற்றென
தாயின் முலையூறும்
பால் துளியுமன்று

உடற்கொண்ட
உயிரிணைகளின்
காதற்கலவியின்
பாலும் தேனும் அல்ல

சித்தாந்த நூற்களிலும்
உணர்ச்சியூட்டும்
உரை வீச்சுக்களிலும்
நம் மீது தெளிக்கப்படும்
எவ்வொரு துளியுமல்ல அது

நண்பனே!
கவிஞர்தம்
காவியப் பேரழகி
ரோமாஞ்சலமாடிய
சிலிர்ப்பின் துளி அல்ல அது

குறைந்த பட்சம்
அமிர்தமெனக் கவிஞர் சிலாகிக்கும்
மழைத்துளி கூட அல்ல

புழக்கடையில்
உலோகக் குழாயின் விளிம்பில்
சொட்டக் காத்திருந்ததொரு
சாதாரண நீர்த்துளிதான் அது

கோடை தாளாக் குருவியொன்று
சிற்றலகால் உறிஞ்சிக் குடித்துப்
பறந்து சென்ற காட்சியில்
நீர்க்கோலம் நச்சுவதன் ஞானத்தை
ஒரு விம்மிதமாய்
தந்து சென்றது அது

க்ரௌஞ்சமும்
மூங்கிலிலைப் பனிநீரும்
ஒன்றான தருணமாய்
வாய்க்கப் பெற்றேன் அதை

எவ்வுலகின் எத்தீயும்
அதனால் அணையும் என்பதான
சாதாரண நீர்த்துளிதான் அது