(நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிரபஞ்சக்குடிலுக்குள் நுழைகிறேன். மீண்டும் பதிவுகளைத் தொடரும்படித் தூண்டிய தோழர் அஷ்ரஃப் நாகூரிக்கு நன்றி. நூலாக்கப் பணிகள் தொடர்கின்றன. அவ்வகையில், “அல்-கிப்ரீத்துல் அஹ்மர் வல் அக்ஸீருல் அக்பர் ஃபீ மஃரிஃபத்தி அஸ்ராரிஸ் சுலூக்கி இலா மலிக்கில் முலூக்கி” என்னும் சூஃபித்துவ ஞான நூலினைத் தமிழாக்கம் செய்துவருகிறேன். தமிழில் இதன் சுருக்கமான தலைப்பு “சிவப்புக் கந்தகம்” என்பதாகும். ஆங்கிலத்தில் "Red Sulphur". இதனை எழுதியவர் ஷைகு அப்துல்லாஹிப்னு அபீபக்ருல் ஐதரூஸ் (ரஹ்) என்னும் சூஃபி ஞானி ஆவார். இந்நூலின் அறபிப் பிரதியுடன் ஆங்கில ஆக்கத்தை ஒப்புநோக்கிப் பையப் பையத் தமிழாக்கம் செய்து வருகிறேன். அறபியில் ஏற்படும் ஐயங்களை ஜமால் முகமது கல்லூரியின் அறபிப் பேராசிரியர் மௌலவி ஷாஹுல் ஹமீது பிலாலி அவர்களிடம் ஆலோசித்துத் திருத்திக் கொள்கிறேன். இந்நூலின் ஆங்கிலப் பிரதிக்கு ’இஸ்லாமியச் சிந்தனைக்கான ராயல் ஆலுல் பைத் இன்ஸ்டிட்யூட், ஜோர்தான்’ தந்திருக்கும் முன்னுரையை இங்கே பதிவிடுகிறேன். இந்த முன்னுரையே இந்நூலின் உள்ளடக்கத்தை மிகச் சுருக்கமாக வரைந்து காட்டுகிறது.)
இச்சிறிய ஞான நூலின் ஆசிரியரான அப்துல்லாஹ் இப்னு அபீபக்ருல் ஐதரூஸ் அவர்கள் 811 ஹிஜ்ரி / 1408 பொ.ஆண்டில் பிறந்தார். அவரின் மகனான அல்-ஐதரூஸுல் அதனியிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்கும் பொருட்டு அவரை அல்-ஐதரூஸுல் அக்பர் என்று அழைக்கின்றனர்.
அவர் தனது எட்டாம் வயதில் தந்தையை இழந்தார். அதன் பின்னர் அவரை
அவரின் தாத்தா வளர்த்து வந்தார். அவரின் பத்தாம் வயதில் தாத்தாவும் இறந்தபிறகு அவரை
அவரின் சிற்றப்பா ஷைகு உமருல் மிஹ்தார் வளர்த்தார். தன் சிற்றப்பா ஷைகு உமருல் மிக்தாரிடம்
கல்வியில் பெரும்பயன் அடைந்ததற்கு அப்பால் அவர் மார்க்கச் சட்ட அறிஞர்கள் மற்றும் சூஃபிகள்
ஆகியோரின் ஒரு குழுவினரிடம் பயின்று குர்ஆன் விரிவுரை, ஹதீஸ் மற்றும் இஸ்லாமியச் சட்டவியல்
ஆகிய மூன்று இறைஞானத் துறைகளில் சிறப்புற்றார்.
அவர் வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான அறிவுப்புலங்களில் கற்பித்தார்.
பேரெண்ணிக்கையான மாணவர்கள் அவரின் கையால் பட்டம் பெற்றனர். அவர்களில் பலரும் தாம் சார்ந்த
அறிவுத்துறையில் மேதைகள் ஆயினர். அவரின் சகோதரர் ஷைகு அலீ அவர்களும் அவரின் மூன்று
மகன்களும் அத்தகையோருள் அடக்கம்.
அவரின் சிறிய தந்தையின் மறைவுக்குப் பின்னர் அவர் ’பா அலவி’
ஞானப் பாட்டையின் ஆன்மிகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு இருபத்தைந்து
வயதுதான் ஆகியிருந்தது. இஃது அவருக்கிருந்த பரந்துபட்ட கல்வியறிவையும் அதிசயமான ஆன்மிக
முதிர்ச்சியையும் காட்டுகின்றது.
அப்துல்லாஹ் இப்னு அபீபக்ருல் ஐதரூஸ் அவர்கள் 865 ஹிஜ்ரி /
1462 பொ.ஆண்டில் (யமன் நாட்டின் ஹள்ரமவ்த் மாகாணத்தில் உள்ள) அல்-ஷிஹ்ரு என்னும் ஊருக்குச்
சென்றுவிட்டு தனது ஊரான தரீமுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ரமலான் 12-ஆம் நாளில்
தனது ஐம்பத்து நான்காம் அகவையில் மரணித்தார். இரண்டு நாட்கள் கழித்து தரீமில் நல்லடக்கம்
செய்யப்பட்டார். அவரின் இடத்தில் பா அலவிகளின் ஆன்மிகத் தலைவராக அவரின் மகனார் அபூபக்ரு
அமர்ந்தார்.1
அப்துல்லாஹ் இப்னு அபீபக்ருல் ஐதரூஸ் அவர்கள் எழுதிய சிறு பனுவலான
“சிவப்புக் கந்தகம்” என்பது ஆன்மிக வழிநடை (சுலூக்) குறித்ததாகும். இது கற்றோரைத் தனது
வாசகராகப் பெற முயலும் கல்வித்துறை சார்ந்த நூலன்று. அதேசமயம், இதனை எழுதியவரைப் போல்
ஆன்மிகத்தில் மேனிலை அடைந்த ஞானியருக்குப் பயன் நல்கும் மேம்பட்ட பனுவலுமன்று. ஆனால்,
இது ஆன்மிகப் பாதையில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் சாதகருக்குப் பயனளிக்கும்
நோக்கில் எழுதப்பட்ட ஒன்று.
ஆன்மிக சாதகர்கள் அனைவருக்குமான அகநோக்கு சர்ந்த குறிப்புரைகள்
நிறைந்திருப்பதால் சுருக்காமாக இருந்தாலும்
பெரிதும் பயனளிப்பதாக உள்ளது.
சில அம்சங்களில் இந்நூல்,
அபுல் காசிமுல் குஷைரி எழுதிய ரிசாலா அல்லது அல்-சுஹ்ரவர்தி எழுதிய அவாரிஃபுல் ம’ஆரிஃப்
ஆகிய சூஃபித்துவப் பெருநூற்களின் பயனுள்ள சுருக்கமாகப் படலாம். ஆனாலும், மேற்சொன்ன
நூற்களினை இவர், குறிப்பாக அகநிலைகள் மற்றும் படித்தரங்கள் (அஹ்வால் மற்றும் மகாமாத்)
தொடர்புடைய கலைச் சொற்களை விளக்குவதற்கு, எடுகோளாகக் கையாண்டிருப்பினும், ஆசிரியரின்
சொந்த ஆன்மிக அனுபவமும் மெய்யறிதலும் இந்நூலின் ஒவ்வொரு வரியிலும் வெளிப்படுகின்றது.
ஆன்மிகப் பாதை பயணிக்கப்படுகின்ற பல்வேறு வழிகளை விவரிப்பதில்
தொடங்கும் இப்பனுவல், செம்மை அடைந்த ஆன்மிக குரு ஒருவரின்றி இவ்வழிகளில் எது ஒன்றுமே
சாத்தியமில்லை என்று திட்டவட்டமாகச் சொல்கிறது. இந்து சூஃபிகள் அனைவரும் ஒப்புக்கொள்ளும்
ஒரு கருத்தாகும். ரட்சகனுக்கும் அடியானுக்கும் இடையிலான திரை ஆணவத்தாலும் தகாதோரின்
சகவாசத்தாலும் தடிக்கிறது. ஆன்மிக குரு ஒருவரின் வழிகாட்டுதல் இன்றி அத்திரையை நீக்குதல்
முடியாது. இமாம் கஸ்ஸாலி அவர்களின் ஆன்மிக வழியின் செய்முறைக்கு ஏற்ப, சூஃபி பாதை என்பது
நான்கு முக்கியப் பண்புகளின் மீது அமைந்துள்ளது: குறைவாக உண்ணுதல், குறைவாகப் பேசுதல்,
குறைவாகத் தூங்குதல் மற்றும், மக்களை விட்டும் ஒதுங்கியிருத்தல்.
ஆன்மிக
ஒழுக்கம், தனித்திருத்தல், அகநிலைகள் மற்றும் படித்தரங்கள், அல்லது வேறு ஆன்மிக அடைதல்கள்
எதுவாயினும் செம்மையுற்ற ஷைகு ஒருவரின் சகவாசத்தில் ஆன்மிக சாதகன் இருந்தால் அன்றி
கிட்டவே கிட்டாது என்பதை ஆசிரியர் வலியுறுத்துகிறார்.
மேலும்,
இஹ்சான் [என்னும் ஆன்மிக மேனிலைகளுள் ஒன்று]
என்னும் அகநிலை மார்க்கத்தின் பிற இரண்டு தூண்களைச் சார்ந்துள்ளது : உறுதியான இறைநம்பிக்கை
கொண்டிருப்பது மற்றும் இஸ்லாம் விதிக்கும் கடமைகளைப் பேணுவது.
இத்துடன்,
அஹ்லுஸ் ஸுன்னாஹ் என்னும் நேர்வழியினரின்
கொள்கைகளை (இஃதிகாதே அஹ்லுஸ் ஸுன்னாஹ்) விளக்கி ஷைகு அப்துல்லாஹ் இப்னு அஸ்’அதுல் யாஃபிய்யி
எழுதிய குறுங்கவிதை ஒன்றையும் இந்நூலாசிரியர் இணைத்துள்ளார். அல்லாஹ்வை அறிந்தோர் முன்மொழியும்
இறை நம்பிக்கையின் எதார்த்தம் யாதெனில், அல்லாஹ்வை அவன் தன்னில் தானே இருக்கும் நிலையில்
நாம் அறியவே இயலாது, அவன் மேலானவன் அப்பாற்பட்டவன்! என்பதே. அல்லாஹ் தன்னில் தானே அமைந்திருக்கும்
நிலையில் அவனை அறிய மாட்டாத இந்த மனித இயலாமையின் முன், இறைஞானியர் தம்மால் அறியப்படக்கூடிய
மற்றும் அறிய இயலாத அனைத்தையும் விட்டுவிடுகின்றனர். எனவே, அவர்கள் தம்மை விட்டே வெளியேறுகின்றனர்.
அவர்கள் சத்திய உள்ளமையை அன்றி வேறு எதையுமோ எவரையுமோ காண்பதில்லை.
ஆன்மிகச்
சாதனைக்கு இன்றியமையாத இரண்டாம் தூணாக இருப்பது பயிற்சிகள் (அஃமால் – செயற்பாடுகள்).
இறை பயபக்தி என்னும் உணர்வு இல்லாத செயல்கள் எதுவும் சரியானதாகவோ ஏற்புடையதாகவோ இருக்காது.
பயபக்தி (தக்வா)விற்கு ஐந்து அந்தரங்க மற்றும் ஐந்து வெளிரங்க ஆடைகள் உள்ளன: முதலாவது
உடலின் உறுப்புகள் சார்ந்தது. அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களைப் பேணுவதால் இஃது அடையப்படுகிறது.
இரண்டாவது, இதயம் சார்ந்தது. அது அடைகின்ற ஆன்மிக படித்தரங்களின் தொடர்பால் அடையப்படுகிறது.
மூன்றாவது உயிர் (ரூஹ்) சார்ந்தது. அவை அடையும் ஆன்மிக ருசிகளால் அது அடையப்படுகிறது.
நான்காவது, ஏகத்துவத்துவத்தின் வழியாக அடையப்படும் அந்தரங்க ரகசியங்கள் (அஸ்ரார்) சார்ந்தது.
ஐந்தாவது, ரகசியத்தின் ரகசியம் (சிர்ருல் அஸ்ரார்) சார்ந்தது. இதுவே அனைத்திலும் மிகப்
பெரிது. இதனை அடைந்தவர் ’இறைப் பிரதிநிதி’ (ஃகலீஃபத்துல்லாஹ்) என்னும் நிலையின் ரகசியத்தை
அடைந்தவராவார்.
இதனைத்
தொடர்ந்து, உண்மையான சூஃபி யார் என்பதை விளக்கும் ஆசிரியர், அவர் இறைச் சட்டம், ஞானப்
பாதை மற்றும் மேலான ஆன்மிக எதார்த்தம் ஆகியவற்றை ஒன்றிணைப்பவரே ஆவார் என்று சொல்கிறார்.
அதற்கடுத்து, தற்பழியர் (மலாமத்தி) மற்றும் அலைஞர் (கலந்தரி) ஆகியோருக்கு இடையிலான
வேறுபாடுகளை விளக்குகிறார். இவ்விடத்தில், சூஃபி நெறியினரிடம் இருந்து மறுப்புரைகள்
தோன்றக்கூடும் என்று கருதி முன்னெச்சரிக்கைக் குறிப்பு ஒன்றும் தருகிறார். சக முஸ்லிம்கள்
மீது நல்லெண்ணம் வைக்கும்படியும், அவர்கள் மொழியும் சொற்களைக் கொண்டோ அல்லது அவர்களின்
செயல்களைக் கொண்டோ, அவற்றை உடன்பாடான முறையில் அர்த்தப்படுத்த வழியிருக்கும் வரை, அவசரப்பட்டு
அவர்களைக் கண்டனம் செய்யவோ, அவர்களை நிராகரிப்பாளர் என்று தீர்ப்புரைக்கவோ வேண்டாம்
என்று வலியுறுத்துகிறார்.
இந்த
ஆரம்ப வார்த்தைகளுடன், “சிவப்புக் கந்தகம்” நூலின் ஆசிரியர் அடுத்தபடியாக சூஃபி நெறியினரின்
ஆன்மிகப் படித்தரங்களையும் அவற்றின் பயன்களையும் விவரிக்கின்றார். பத்து அருட்பயன்களை
நல்கும் பத்துப் படித்தரங்களை அவர் பட்டியலிடுகிறார்: 1) திரும்புதல் (தவ்பா), 2) பேணுதல்
(வரா’ஃ), 3) பற்றறுப்பு (ஜுஹ்து), 4) பொறுமை (ஸப்ரு), 5) வறுமை (ஃபக்ரு), 6) நன்றியுணர்வு
(ஷுக்ரு), 7) இறையச்சம் (ஃகவ்ஃப்), 8) இறை ஆதரவு (ரஜா’ஃ), 9) அல்லாஹ்விடம் ஒப்படைதல்
(அத்-தவக்குல் அலல்லாஹ்), மற்றும் 10) திருப்தி / பொருத்தம் (அர்-ரிளா).
இந்தப்
பத்துப் படித்தரங்களும் பத்துப் பயன்களைத் தருகின்றன: 1) திரும்புதல் அல்லது மீளுதல்
(தவ்பா) அல்லாஹ்வின் அன்பைப் (முஹப்பத்தல்லாஹ்) பெறுகிறது; 2) பேணுதல் (வரா’ஃ) ஏக்கத்தை
(அஷ்-ஷவ்க்) உண்டாக்குகிறது; 3) பற்றறுதல் (ஜுஹ்து) உள்ளத்தில் பயபக்தியை (ஃகுஷூ வ
ஃகுளூ) உண்டாக்குகிறது; 4) பொறுமை (ஸப்ரு) இறை நெருக்கத்தை (உன்ஸ்) உண்டாக்குகிறது;
5) வறுமை (ஃபக்ரு) இறைவனுடன் மிக நெருக்கத்தை (குர்பு) உண்டாக்குகிறது; 6) நன்றியுணர்வு
(ஷுக்ரு) வெட்கவுணர்வை (அல்-ஹயா’ஃ) உண்டாக்குகிறது; 7) வறுமை (ஃகவ்ஃப்) இறைப் பரவசத்தை
(அஸ்-சுக்ரு) உண்டாக்குகிறது; 8) இறை ஆதரவு (ரஜா’ஃ) இணைவை (அல்-வஸ்லு / அல்-வஸூல்)
உண்டாக்குகிறது; 9) அல்லாஹ்விடம் ஒப்படைதல் / பரஞ்சாட்டுதல் (அத்-தவக்குல் அலல்லாஹ்)
சமாதி நிலையை (ஃபனா) உண்டாக்குகிறது; 10) திருப்தி / பொருத்தம் (அர்-ரிளா) இறைவனில்
நிலைத்திருக்கும் நிலையை (பகா’) உண்டாக்குகிறது.
இவ்விளக்கத்தை
அடுத்து, அப்துல்லாஹ் இப்னு அபீபக்ருல் ஐதரூஸ் அவர்கள் சூஃபிகளின் சொல்லாடல்களைப் புரிந்து
கொள்வதற்கு இன்றியமையாத முக்கியமான கலைச் சொற்களான ஷரீஅத் (இறைச் சட்டம்), தரீக்கத்
(ஆன்மிக நெறி / பாதை), மேலான ஆன்மிக எதார்த்தம் (ஹகீக்கத்), கணம் (வக்து) மற்றும் அகநிலை
(ஹால்) ஆகியவற்றை விளக்குகிறார். பின்னர், நிலையான ஆன்மிகப் படித்தரங்கள் (மகாமாத்)
மற்றும் தற்காலிகத் தங்கிடங்களான (அஹ்வால்) ஆகியவற்றின் வேறுபாடுகளைச் சுட்டுகிறார்.
அதன் பின், முக்கிய ஆன்மிக நிலைகளான ‘சுருங்குதலும் விரிவும்’ (கப்ளு வ பஸ்த்), ‘திகைப்பும்
நெருக்கமும்’ (ஹைபா வ உன்ஸ்), ‘முற்பரவசமும் பரவசமும்’ (தவாஜிது வ வஜ்து), ’அடைதல்’
(அல்-வஜூது), ’சேர்தலும் பிரிதலும்’ (அல்-ஜம்’உ வல் ஃபர்க்) மற்றும் ‘சேர்தலின் சேர்வு
மற்றும் இரண்டாம் பிரிதல்’ (அல்-ஜம்’உல் ஜம்’உ வல் ஃபர்க்குஸ் ஸானி), மற்றும் இன்ன
பிற பற்றிய தெள்ளிய விளக்கங்களை நல்குகிறார்.
ஆன்மிகப்
பயணி (அஸ்-ஸாலிக்) இந்த ஆன்மிக நிலைகள் மற்றும் படித்தரங்கள் அனைத்தையும் கடந்து போக
வேண்டும். தன் செயற்பாடுகளை விட்டும் அழிக்கப்படுகின்ற சாதகன் அல்லாஹ்வின் செய்ற்பாடுகளைக்
கொண்டு தரிப்படுகிறான். தன் பண்புகளை விட்டும் அழிக்கப்படுபவன் அல்லாஹ்வின் பண்புகளைக்
கொண்டு தரிப்படுகிறான். தன் சுயத்தைக் கொண்டு அழிக்கப்படுபவன் அல்லாஹ்வின் சுயத்தைக்
கொண்டு தரிப்படுகிறான். சாதகன் அழிவின் பிரதேசத்தை அடைகின்றபோது ஏகத்துவப் பேரொளி அவனை
அனைத்துத் தட்டழிவுகளை விட்டும் காப்பாற்றி, அனைத்து தீய பண்புகள் மற்றும் அத்துமீறல்களை
விட்டும் அவனைத் தூய்மையாக்குகிறது. அதன் பிறகுதான் அவன் ஆத்ம ஞானியரின் குழாத்துள்
வைக்கப்படுகிறான், பேரமைதி மற்றும் ஆனந்தம் ஆகியவற்றை அடையும்வரை அவன் ஆத்ம சாதகரின்
நிலைகள் அனைத்திலும் பயணிக்கின்றான்.
ஆத்ம
சாதகன் உயிரின் (ரூஹ்) பிரதேசத்தை அடையும்போது அல்லாஹ்வின் அருட்கொடையாக அவன் அனாதி
நிலையை அவதானிக்கின்றான். ஓ! அது எத்தகைய சிறந்த கண்ணியம்! ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்பதைக்
கொண்டு இதயத்தின் கதவு திறக்கிறது. ‘அல்லாஹ்! அல்லாஹ்!’ என்பதைக் கொண்டு உயிரின் கதவு
திறக்கிறது. ஆர்மபம் மட்டுமே இருக்கிறது. இறைதியானம் (திக்ரு) இதயத்தை மிகைக்கும்போது
தியானிப்போன் (தாக்கிர்) தியானிக்கப்படுவோனாகவும் (மத்கூர்), தியானிக்கப்படுவோன் (மத்கூர்)
தியானிப்போனாகவும் (தாக்கிர்) மாறும் நிலை நேர்கிறது. அப்போது தியானிப்போன் தனது சுயத்தை
விட்டும் ஏனைய அனைத்தை விட்டும் முற்றிலும் அழிக்கப்படுகிறான். இதுவே சிறந்தோருள் சிறந்தோரின்
(ஃகாஸ்ஸுல் ஃகவாஸ்) கருத்தில் ஏகத்துவம் ஆகும். தியானமே ஆன்மிகப் பயணியரின் கட்டுச்சாதம்
என்று சொல்லப்படுவது ஏன் என்பதை இது விளக்கும். அவனின் தியானம் இன்றி எவரும் அல்லாஹ்வை
அடைவது இல்லை. அல்லாஹ்வின் தியானம் என்பது சொல் செயல் மற்றும் அகநிலை ஆகியவற்றால் அமைவதாகும்.
இதனைத்
தொடர்ந்து, ’சிவப்புக் கந்தகம்’ நூலாசிரியர் ஆன்மிக இசை குறித்து விளக்குவதற்குச் சில
பத்திகளை ஒதுக்குகிறார். முதலில், ஆன்மிக இசைக்கு மக்கள் பல்வேறு விதங்களில் எதிர்வினை
ஆற்றுவதைச் சுட்டுகிறார். அவர்களின் உணர்வுகள் மற்றும் ரசனைகள் பலதரப்பட்டவையாக இருப்பதை
நோக்கும்போது இது ஏற்படுவது இயல்புதான் என்கிறார். முதல் வகை இசை சட்டரீதியாக முரணுவதாகும்.
அதில் கேட்போர் வெறுமனே இனிய குரலை மட்டும் ரசிக்கிறார் அல்லது மகிழ்ச்சியும் குதூகலமும்
அடைகிறார். இரண்டாம் வகை இசை போற்றத் தக்கதாகும். அது, இறைக் காதலால் மிகைக்கப்பட்ட
ஒருவர் கேட்கும் இசையாகும். இத்தகு இதயம் இல்லாதோர் ஆன்மிக இசைக் கூட்டங்களில் கலந்து
கொள்வது தடை செய்யப்பட்டதாகும். ஏனெனில், இசை அவர்களின் தீய பண்புகளைக் கிளர்த்தி விட்டு
அவர்களின் குழப்பத்தையும் பாவங்களையும் அதிகமாக்கிவிடும்.
இறுதியாக,
அப்துல்லாஹ் இப்னு அபீபக்ருல் ஐதரூஸ் அவர்கள் இச்சிறு மாநூலில் மேலான ஆன்மிக எதார்த்ததிற்கு
உரியோரே (அஹ்லுல் ஹகீக்கத்) அல்லாஹ்வை அறிந்தோர் (ஆரிஃப்பில்லாஹ்) என்று குறிப்பிடுகிறார்.
அல்லாஹ், அவனின் திருநாமங்கள் மற்றும் அவனின் திருப்பண்புகள் பற்றிய பல்வகையான அறிவுகளை
அவர்களே அடைந்துள்ளனர். மேலான ஆன்மிக எதார்த்தம் என்பது ரட்சக (ருபூபிய்யத்) ரகசியங்களின்
ஒளிகளை தரிசிப்பதாகும் என்று அவர்கள் கருதுகின்றனர். இந்த தரிசனத்தை அடைவதற்கான வழி
ஷரீஅத் என்னும் இறைச் சட்டத்தை இம்மி பிசகாமல் கடுமையாகப் பேணுவதாகும். இந்தப் பாதையில்
பயணிக்கும் எவரும் மேலான ஆன்மிக எதார்த்தத்தை அடைவார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்
ReplyDelete