Monday, May 23, 2022

ரூமியின் ஞான உரைகள் - 2

 

நண்பர்களே!

ஜனவரி 19, 2022 அன்று இட்ட இடுகைக்குப் பின் இன்றுதான் பிரபஞ்சக்குடிலுக்கு மீள்கிறேன். இந்த இடுகைக்குத் தூண்டுதலாக இருந்தவர் அஷ்ரஃப் நாகூரி அவர்கள். நீண்ட இடைவெளி விழுந்துவிட்டது என்பதை நேற்று வாட்ஸாப்பில் அவர் எனக்கு நினைவூட்டியிருந்தார்.

மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். நாவல் ஒன்றின் தமிழாக்கம் ஆரம்பமாகியிருக்கிறது. மவ்லானா ரூமியின் கவிதைகள் மொழிபெயர்ப்புத் திட்டம் ஒன்றும் போய்க் கொண்டிருக்கிறது. 

திசம்பர் 2021-இல் இருந்து மவ்லானா ரூமியின் ஞான உரைகள் நூலின் தமிழாக்கம் உருவாகி வருகிறது. 27 திசம்பர் 2021-ஆம் தேதி இடுகையில் அந்நூலின் முதல் உரையைப் பதிவேற்றியிருந்தேன். சீர்மை பதிப்பகத்துக்காகச் செய்துவரும் பணி. தொடர்ந்து வலைப்பூவில் அதனை வெளியிடுவது தோதாக அமையாது. எனினும், இடையிடையே சில உரைகளை மட்டும் இடலாம் என்று இப்போது தோன்றுகிறது. வாரத்துக்கு ஒன்றாவது இடலாம்தான். அந்நூலின் தமிழாக்கம் ஏறத்தாழ எண்பது விழுக்காடு முடிந்துவிட்டது. விரைவில் அது நூலாக வரும், இன் ஷா அல்லாஹ்.

27 திசம்பர் 2021 இடுகையின் தலைப்புகள் பின்வருமாறு அமைந்திருந்தன:

ரூமியின் ஞான உரைகள்

ஃபீஹி மா ஃபீஹி
(அதில் என்ன உள்ளதோ அதுவே அதில் உள்ளது)

பாரசீக மூலம்
மவ்லானா ரூமி

தமிழாக்கம்
ரமீஸ் பிலாலி


இதோ ஃபீஹி மா ஃபீஹி நூலின் ஆறாம் உரை இன்றைய இடுகையாக:

6

தன்னை அறிதல்

கிரகிப்பதற்கு வார்த்தைகள் தேவைப்படுவோருக்கே இந்த வார்த்தைகள். சொற்கள் இல்லாமலே கிரகித்துக்கொள்ள யாரால் இயலுமோ அவருக்குச் சொற்கள் எதற்கு? அப்படி கிரகித்துக் கொள்வோருக்கு வானமும் பூமியுமே வார்த்தைகள்தாம். அவர், குன் ஃபயகூன் (’ஆகு’ என்றதும் ஆகிறது – 36:82) என்னும் சொல்லில் பிறந்தவர். கிசுகிசுக்கும் ஓசையைக் கேட்க வல்லார்க்கு காது கிழிக்கும் பேச்சரவம் தேவையா என்ன?

அறபி மொழி பேசும் புலவன் ஒருவன் ஓர் அரசனின் முன்னால் வந்து நின்றான். அந்த அரசன் ஓர் துருக்கியன் என்பதோடு அவனுக்கு ஃபார்சியும் தெரியாது. இத்தகைய அரசனுக்காக அந்தப் புலவன் மிகவும் அலங்காரமான அறபிக் கவிதை ஒன்றை இயற்றியிருந்தான். அரசன் தன் சிம்மாசனத்தில் அமர்ந்தபின், அமைச்சர்களும், இளவரசர்களும், அவையினரும் அவரவர் இடங்களில் அமர்ந்தார்கள். பிறகு புலவன் எழுந்து நின்று தனது கவிதையை உரத்து வாசிக்கத் தொடங்கினான். பாராட்டைத் தூண்ட வேண்டிய இடத்தில் அரசன் மெல்ல தலையாட்டினான், வியப்பைத் தூண்ட வேண்டிய இடத்தில் வெறித்து நோக்கினான், பணிவை உண்டாக்க வேண்டிய பகுதியில் பீடுடன் நிமிர்ந்து கவனித்தான்.

மருண்டு போன அவையினர் சொன்னார்கள்: “நம் அரசருக்கு அறபியில் ஒரு வார்த்தைகூட தெரியாது. ஆனால், சரியான இடத்தில் அவர் எப்படித் தலையாட்டுகிறார்? அவருக்கு அறபி புரியாமலா? தனக்கு அறபி தெரியும் என்பதை இத்தனை ஆண்டுகளாக நம்மிடம் மறைத்து விட்டாரோ? நாம் ஏதேனும் அறபியில் தப்பாகப் பேசியிருந்தால் நமக்குக் கேடுதான்!”

இப்போது, அந்த அரசனுக்கு ஓர் அடிமைச் சிறுவன் இருந்தான். அவன் மீது அரசனுக்கு மிகவும் பிரியம். எனவே, அரசவையினர் அவனுக்கு ஒரு குதிரை, ஒரு ஒட்டகம் மற்றும் கொஞ்சம் பணம் எல்லாம் தந்து அரசருக்கு அறபி தெரியுமா தெரியாதா என்றும், ஒருவேளை அவருக்கு அறபி தெரியாது என்றால் எப்படி அவர் சரியான தருணங்களில் தலையாட்டினார்?, அது ஓர் அற்புதமா? அல்லது அகத் தூண்டுதலா? என்றும் கண்டு பிடித்துச் சொன்னால் இன்னும் சன்மானங்கள் அளிப்பதாகவும் வாக்குறுதி தந்தனர்.



ஒரு நாள் சிறுவனுக்குச் சரியான வாய்ப்புக் கிடைத்தது. அரசன் வேட்டைக்கு ஏகியிருந்தான். நிறைய விலங்குகளை வேட்டையாடி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அப்போது சிறுவன் தன் ஐயத்தைக் கேட்டான்.

அரசன் சிரித்துவிட்டான். சிறுவனிடம் அவன் சொன்னான்: “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனக்கு அறபி தெரியாது. நான் ஏன் தலையை ஆட்டி அவனின் கவிதையை ஆமோதித்தேன் என்றால் ஒரு புலவன் வேறு எதற்காகக் கவிதை எழுதப் போகிறான்? அவன் கவிதையின் கோரிக்கையே அதுவாகத்தானே இருக்கும்? எனவே அப்படிச் செய்தேன். அவனது மூல நாட்டம் எனது ஆமோதிப்புதான். அந்த முழுக் கவிதையும் அந்த மூல நாட்டத்தின் ஒரு கிளை மட்டுமே. அந்த முதல் நாட்டம் இல்லை எனில் அவன் அந்தக் கவிதையை எழுதியிருக்கவே மாட்டான்.”

நோக்கத்தைக் கருதிப் பார்க்கில் இருமை இல்லை. (அகர் ப மக்ஸூத் நழர் குனந்த் தூயீ நமானத்) கிளைகளில் மட்டுமே இருமை இருக்கின்றது. மூல் வேர் ஒன்றே. (தூயீ தர் ஃபுரூ அஸ்த், அஸ்ல் யகீஸ்த்). ஆன்மிக குருமார்களின் நிலை இதுவே. வெளிப்படையில் அவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் வேறுபடுவது போல் தெரியலாம், அவர்களின் அக நிலைகளில் (அஹ்வால்), செயல்களில் (அஃப்ஆல்), சொற்களில் (அக்வால்) பிரிவுகள் இருப்பது போல் தெரியலாம், ஆனால் நோக்கத்தைப் பொருத்த வரை அவர்கள் அனைவரும் ஒன்றே. அதுதான் இறைத் தேடல். இது, இளந் தென்றல் ஒரு வீட்டினுள் வீசுவதைப் போன்றது. அது கம்பளத்தின் ஒரு மூலையைத் தூக்குகிறது, பாய்களைக் கலைக்கிறது, புழுதி கிளப்புகிறது, தடாகத்தில் தண்ணீரை அளைக்கிறது, மரக் கிளைகளையும் இலைகளையும் நடனமாட வைக்கிறது. இதெல்லாம் வெவ்வேறு காரியங்களாகத் தோன்றுகின்றன. ஆனால், நோக்கம், மூலப்பொருள் மற்றும் எதார்த்தம் ஆகியவற்றின் கோணத்தில் பார்த்தால் இவை அனைத்தும் ஒன்றே. ஏனெனில், அவற்றின் அசைவுகள் எல்லாம் ஒரே காற்றினால் உண்டாகின்றன.

*

               ஒருவர் சொன்னார், “நாங்கள் அரைகுறைகள்.”

            ஒருவர் இப்படி நினைப்பதும் தன்னைத் தாழ்த்திக்கொண்டு இவ்வாறு, “கைசேதமே! என் கதி என்ன? நான் ஏன் இப்படி நடக்கிறேன்?” என்று கூறுவதுமே இறைவனின் அன்புக்கும் அருளுக்குமான ஆதாரம். ”நிந்தனை இருக்கும் வரை காதலும் இருக்கிறது,” (வ யப்கல் ஹுப்பு மா ப(க்)கியல் இ(த்)தாபு) ஏனெனில் தான் நேசிப்பவரைத்தான் ஒருவர் கண்டிக்கவும் செய்கிறார், அந்நியர்களை அல்ல. இப்போது, பல்வேறு வகையான கண்டித்தல் உள்ளன. வலியைப் பற்றிய உணர்வுடன் அதனை அனுபவிப்பதில் இறைவனின் அன்பும் உதவியும் உள்ளன. மாறாக, (புழுதியை வெளியேற்றுவதற்காகக் கம்பளம் அடிக்கப்படுவது போல் கண்டிக்கப்பட்டு) கண்டிக்கப்பட்டவன் வலி எதையும் உணரவில்லை எனில் அங்கே காதல் இல்லை என்றாகிறது. அறிஞர் அதனைக் கண்டனம் என்று கருதார். ஆனால், அதற்கு மாறாக, ஒருவரின் குழந்தையை அல்லது காதலியை ஒருவன் கண்டிக்கும்போது அங்கே காதலின் ஆதாரம் எழ வேண்டியதாகிறது. எனவே, உன்னுள் நீ வலியையும் பச்சாதாபத்தையும் உணரும் காலமெல்லாம் அது இறைவனின் நேசம் மற்றும் நல்லுதவியின் ஆதாரம் ஆகிறது.



            உன் சகோதரனிடம் நீ ஒரு குறையைப் பார்க்கிறாய் எனில் அக்குறை நிச்சயமாக உன்னில்தான் இருக்கிறது. அதை நீ அவனில் பிரதிபலிக்கக் காண்கிறாய். அதே போல், இவ்வுலகம் நீ உன் பிம்பத்தைக் காணும் ஒரு கண்ணாடி மட்டுமே. “நம்பிக்கையாளன் நம்பிக்கையாளனுக்குக் கண்ணாடி” (அல்-முஃமினு மிர்அத்துல் முஃமின்.)1. உன் குறையை நீயே நீக்கு. ஏனெனில் அடுத்தவனில் உன்னைச் சங்கடப்படுத்தும் ஒன்று உண்மையில் உன்னிடமே உள்ளததுதான்.

            உன்னில் இருக்கும் அநீதம் (ழுல்ம்), பகைமை (கீன்), பொறாமை (ஹசது), பேராசை (ஹிர்ஸ்), இரக்கமின்மை (பே ரஹ்மீ) மற்றும் ஆணவம் (கிப்ரு) முதலிய தீய குணங்கள் உன் உள்ளத்தை உறுத்துவதே இல்லை. ஆனால் அவற்றை பிறரில் நீ காணும்போது அவர்களை வெறுத்து ஒதுங்குகிறாய். தன்னில் இருக்கும் புண்ணோ கட்டியோ எவருக்கும் அருவருப்பாக இல்லை; எவராயினும் தனது சிரங்கு பிடித்த விரலைக் கஞ்சியில் முக்கி எடுத்து நக்கிப் பார்க்கிறார். ஆனால் கிஞ்சிற்றும் அவருக்கு அருவருப்புத் தோன்றுவதில்லை. ஆனால், வேறொருவரின் விரலில் சிறிய சிறங்கோ கட்டியோ இருந்து விட்டால் போதும், அவ்விரல் தொட்ட உணவை ஒருபோதும் உங்களால் வயிற்றுக்கு ஈய இயலாது. தீய பண்புகள் எல்லாம் சொறி சிரங்கு போன்றவை: தன்னில் இருந்தால் எவருக்கும் அருவருப்பில்லை; பிறரில் அவை கொஞ்சம் இருந்துவிட்டாலும் சகிக்க முடிவதில்லை. நீ பிறரை அருவருத்து விலகுவதைப் போன்றே உன்னால் அருவருப்படைந்து பிறர் விலகும் போது அதில் உள்ள நியாயத்தை ஒப்புக்கொள். உன் சங்கடமே அவனுக்குச் சாக்குப்போக்கு, ஏனெனில் உன்னில் அவன் பார்ப்பதையே நீ அவனில் பார்ப்பதால்தான் உனக்குச் சங்கடம் வருகின்றது. நம்பிக்கையாளன் நம்பிக்கையாளனுக்குக் கண்ணாடி. நிராகரிப்பாளன் நிராகரிப்பாளனுக்குக் கண்ணாடி என்று நபிகள் நாயகம் நவிலவில்லை – நிராகரிப்பாளனால் கண்ணாடியாக இருக்க முடியாது என்பதாலன்று, ஆனால் அவன் தனது ஆன்மாவின் கண்ணாடியைப் பற்றி அறியாதிருக்கிறான் என்பதால்.

            நீரோடை ஒன்றின் அருகில் அரசர் மனம் தளர்ந்து அமர்ந்திருந்தார். அவர் அத்தகைய நிலையில் இருப்பதைப் பார்த்தால் இளவரசர்கள் எல்லாரும் மிகவும் அஞ்சுவார்கள். அவர்கள் என்ன செய்தாலும் அவரை உற்சாகப் படுத்த முடியாது. அரசருக்கு மிகவும் பிரியமான விகடகவி ஒருவன் இருந்தான். அரசரைச் சிரிக்க வைத்துவிட்டால் தக்க சன்மானம் வழங்குவதாக இளவரசன் அவனிடம் சொன்னான். விகடகவி அரசரிடம் சென்றான். எவ்வளவு முயன்றும் அரசர் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தன் முகத்தை அவர் பார்த்தாலாவது ஏதாவது சேஷ்டைகள் செய்து காட்டி அவரைச் சிரிக்க வைக்கலாம் என்று விகடகவி நினைத்தான். ஆனால் அரசர் குனிந்த தலையாக அந்த நீரோடையைக் கூர்ந்து நோக்கியபடி அமர்ந்திருந்தார்.

            ”அரசர் நீரில் என்ன பார்க்கிறார்?” என்று விகடகவி கேட்டான்.

            ”சோரம் விட்டவனைப் பார்க்கிறேன்,” என்றார் அரசர்.

            ”ஐயா, நானும் ஒன்றும் குருடன் இல்லியே!” என்றான் விகடன்.

            உங்களைச் சங்கடப் படுத்தக் கூடிய ஒன்றை நீங்கள் பிறரிடம் பார்க்கும் நிலை இதைப் போன்றதே. அவன் குருடன் அல்லன். நீங்கள் பார்ப்பதையே அவனும் பார்க்கிறான்.

            இறைவனிடம் இரண்டு சுயங்களுக்கு இடமில்லை (பேஷே ஊ தோ அனா நமீ கன்ஜத்.) ”நான்” என்கிறாய் நீ. “நான்” என்கிறான் அவன். இந்த இருமை மறைய வேண்டும் என்றால் நீ அவனுக்காகச் சாக வேண்டும், அல்லது அவன் உனக்காகச் சாக வேண்டும். கோட்பாட்டிலும் எதார்த்தத்திலும், அவன் சாதல் என்பது சாத்தியம் இல்லை. ஏனெனில், ”அவன் நித்திய ஜீவன், மரணம் இலான்” (வ ஹுவல் ஹய்யுல்லதீ லா யுமீத்து.) ஆனால், அவன் எத்தகைய அருளாளன் என்றால், இருமை மறையும் பொருட்டு அவன் உனக்காக சாகவும் தயங்க மாட்டான். எனினும், அவன் சாதல் சாத்தியம் இல்லை என்பதால் நீதான் அவனுக்காக மரணித்து அவன் உன்னிடம் வெளிப்படவும் இருமை மறையவும் செய்ய வேண்டும்.

            நீங்கள் இரண்டு பறவைகளை ஒன்றாகக் கட்டலாம். அவை ஒரே இனத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும், இரண்டு சிறகுகள் இப்போது நான்கு ஆகியிருந்தாலும் அவற்றால் பறக்க முடியாது. ஏனெனில் இருமை இன்னமும் இருக்கிறது. ஆனால், செத்த பறவை ஒன்றை நீங்கள் உயிருள்ள பறவை ஒன்றுடன் சேர்த்துக் கட்டினால் அதனால் பறக்க முடியும். ஏனெனில், அங்கே இருமை இல்லை.

            சூரியன் எவ்வளவு கருணை உள்ளது என்றால் சாத்தியம் எனில் ஒரு வௌவாலுக்காக அது உயிரை விட்டுவிடும். ”அன்பிற்குரிய வௌவாலே! என் கருணை எல்லாவற்றையும் தொடுகிறது. உன் நன்மைக்கான நான் ஏதேனும் செய்யவே நாடுகிறேன். உன்னால் சாக முடியும் என்பதால், செத்துவிடு. அப்போது நீ எனது பேரொளியின் மகிமையைக் காண்பாய். உனது வௌவால் தன்மையை உதிர்த்துவிட்டு நீ எனது நெருக்கம் என்னும் காஃப் மலையின் அன்கா பறவை ஆவாய் (வ ஃகுஃப்பாஷீ பேரூன் ஆயீ வ அன்காயே காஃபே குர்பத் கர்தீ.)”2 என்று சூரியன் அதனிடம் சொல்லக் கூடும்.

            இறை அடியான் ஒருவனிடம் ஒரு காதலிக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் தகுதி இருந்தது. அத்தகைய காதலி ஒருத்தியைத் தனக்குத் தருமாறூ அவன் இறைவனிடம் வேண்டினான். ஆனால் இறைவனுக்கு அதில் சம்மதம் இல்லை. குரல் ஒன்று அந்த அடியானிடம் சொன்னது, “அத்தகைய ஒருத்தியை நீ பார்க்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை.”

            ஆனால் அந்த இறையடியான் அதே வேண்டுதலை மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருந்தான். “என் இறைவா! அத்தகைய காதலிக்கான ஆசையை நீயேதான் என் உள்ளத்தில் விதைத்திருக்கிறாய். அது எப்படி நீங்கும்?”

            கடைசியில் ஓர் அசரீரி சொன்னது: “இது நடக்க வேண்டும் எனில் உன்னையே இல்லாமல் ஆக்கிவிடு, இன்மை ஆகு. இவ்வுலகை விட்டுக் கிளம்பிடத் தயங்காதே!”

            ”என் ரட்சகனே! நான் திருப்தியடைந்தேன்!” என்று அந்த அடியான் சொன்னான். தான் நாடிய காதலி கிடைக்க வேண்டும் என்று அவன் தன் உயிரை அர்ப்பணித்தான். அவனின் ஆசை நிறைவேறிற்று.

            தொடக்கம் முதல் முடிவு வரை ஒட்டுமொத்த உலகத்தின் வாழ்க்கையும் மறுமை வாழ்வின் ஒரு நாளுக்கு ஈடில்லை. அத்தகைய வாழ்வுக்காக இறைவனின் ஓர் அடியான் தனது உயிரையே விட்டுவிடும் அளவுக்கு நேசம் இருக்கிறது என்றால், அந்த நேசத்தையே படைத்த இறைவனின் கருணை என்ன அதை விடவும் குறைவாகவா இருக்கும்? அது அபத்தம். எனவே, அவன் சாவது சாத்தியம் இல்லை ஆதலால் நீதான் இல்லாமல் ஆக வேண்டும் (ஃபனாயே ஊ மும்கின் நேஸ்த், பாரீ தூ ஃபனா ஷூ)

*

            அசடன் ஒருவன் வந்து ஞானி ஒருவரை விட உயரத்தில் அமர்ந்து கொண்டான். அந்த ஞானி சொன்னார்: “ஒருவன் விளக்குக்கு மேலே இருந்தாலும் கீழே இருந்தாலும் என்ன வேறுபாடு? விளக்கு மேலே இருக்க வேண்டும் என்று சொல்வது விளக்கிற்கு ஆதாயமன்று. அதன் ஒரே நோக்கம் பிறர் அதன் ஒளியை அனுபவித்துப் பயனடைய வேண்டும் என்பதே. இல்லை எனில், மேலேயோ கீழேயோ, விளக்கு எங்கே இருப்பினும் அது அப்போதும் அதே விளக்குதான். அதுவே நிரந்தர சூரியன்!”

            இவ்வுலகில் ஞானியர் தமக்கு மேலான அந்தஸ்த்தும் பதவியும் கோருகிறார்கள் எனில் அவர்களின் உயர்வை மக்கள் உணராமல் இருப்பதால்தான். லௌகீக மக்களை அவர்கள் இவ்வுலகின் கண்ணியாலேயே கைப்பற்ற முயல்கின்றனர், அம்மக்கள் ஞானியரின் மேன்மையை உணர்ந்து மறுமையின் கண்ணியில் மாட்டிக் கொள்ள வழி பிறக்கலாம் என்பதற்காக. அதே போல், நபி (ஸல்) அவர்கள் மக்கா நகரையும் அதன் சுற்றுப் புறங்களையும் கைப்பற்றினார்கள். அவை தனக்கு வேண்டும் என்பதற்காக அல்ல, அவற்றில் இருப்போருக்கு வாழ்வும் ஒளியும் அருளப்படுவதற்காக.  “இது கொடுத்துப் பழகிய கை, எடுத்துப் பழகியதன்று,” (ஹாதா கஃப்பு முஅவ்வதுன் பிஅன்ய் யுஃதிய மா ஹுவ முஅவ்வதுன் பிஅன்ய் யஃ-ஃகுத.) மக்களுக்குக் கொடுப்பதற்காகவே ஞானிகள் மக்களை ஏமாற்றுகின்றனர், அவர்களிடம் இருந்து எதையும் எடுப்பதற்காக அல்ல.

            உண்பதற்காகவோ விற்பதற்காகவோ யாரேனும் தந்திரம் செய்து சிறு பறவைகளைப் பிடிக்கிறார்கள் என்றால், அதை ஏமாற்றுக் காரியம் எனலாம். ஆனால், அரசன் ஒருவன் ஒன்றுக்கும் உதவாமலும் தனது மதிப்பை அறியாமலும் சுற்றித் திரியும் ராஜாளி ஒன்றைக் கண்ணி வைத்துப் பிடித்து அதனைப் பழக்கிச் செம்மை ஆக்கி மதிப்பில் உயர்த்தித் தனது கையில் அமர வைக்கிறான் எனில், அதை நாம் ஏமாற்று என்று சொல்வதில்லை. வெளிப்படையில் அது ஏமாற்றுப் போல் தோன்றினும், அது நேர்மை மற்றும் வண்மையின் சாராம்சம் என்று போற்றுவர். அது இறந்தோரை உயிர்த்தெழுப்புவது போன்றது, கூழாங்கல்லை மாணிக்கம் ஆக்குவது போன்றது, உருவமற்ற விந்தணுவை உயிருள்ள மனிதனாக்குவது போன்றது. தான் ஏன் பிடிக்கப்படுகிறோம் என்பதை ராஜாளி அறியும் எனில் அதனை ஈர்ப்பதற்கான தானியம் தேவையில்லை. அதுவே உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஈடுபடுத்திக் கண்ணியைத் தேடி அகப்பட்டு அரசனின் கையில் அமர்ந்துவிடும்.

            மக்கள் எப்போதும் ஞானிகளின் கூறும் சொற்களின் வெளி அர்த்தத்தை மட்டுமே காண்கின்றனர். “இந்தப் பேச்சை எல்லாம் நாங்கள் நிறைய தடவை கேட்டிருக்கிறோம். போதிய அளவு இந்த வார்த்தைகளைக் கேட்டுவிட்டோம்,” என்கின்றனர்.

            ”அவர்கள் கூறுகின்றனர்:

            ’எமது உள்ளங்கள்

            உறையிடப் பட்டுள்ளன.’

            இல்லை, அவர்களது நிராகரிப்பால்

            அல்லாஹ் அவர்களைச் சபித்துவிட்டான்;

            ஆகவே, அவர்கள் நம்புவது

            வெகு சொற்பமே.”

                                                (2:88)

            நிராகரிப்போர் சொல்கின்றனர், “எங்கள் இதயமெல்லாம் அத்தகைய பேச்சே நிரம்பியுள்ளது.” இறைவன் அவர்களுக்கு விடையளிக்கிறான்: “அவர்களுக்கு நாசமே! இந்தச் சொற்கள் அவர்களுக்குள் நிரம்புமா? இல்லை, அவர்கள் ஷைத்தானின் தூண்டுதல்களாலும் வீண் கற்பனைகளாலும் நிரம்பியுள்ளனர். அவர்கள் இணை வைப்பாலும் சந்தேகங்களாலும் நிரம்பியுள்ளனர் – இல்லை, அவர்கள் சாபத்தால் நிரம்பியுள்ளனர்.” அவர்களின் நிராகரிப்பால் இறைவன் அவர்களைச் சபித்திருக்கிறான். அவர்களின் பிதற்றல்களை விட்டும் அவர்கள் வெறுமை ஆனால் ஞானிகளின் வார்த்தைகளை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். ஆனால், அதற்குக் கூட அவர்களால் இயலாது. இறைவன் அவர்களின் செவிகளையும் கண்களையும் இதயங்களையும் முத்திரை இட்டு விட்டான், அவர்கள் தவறான நிறத்தைப் பார்ப்பதற்காக. எனவே அவர்கள் யூசுஃப் நபியை ஓநாயாகப் பார்க்கின்றனர். அவர்களின் செவிகள் தப்பான ஓசையைக் கேட்கின்றன. ஞான உரைகளை அவர்கள் அபத்தம் என்றும் பிதற்றல் என்றும் கருதுகிறார்கள். தீய தூண்டல்கள் மற்றும் வீண் கற்பனைகளின் கிடங்காகிவிட்ட அவர்களின் இதயங்கள் பிழையாகவே பார்க்கின்றன. கற்பனைகளின் முடிச்சுக்கள் விழுந்துவிட்டதால் அவர்களின் உள்ளங்கள் பனிக்காலத்து நீர் போன்று உறைந்து விட்டன.

            ”அவர்களின் இதயங்கள் மீதும்

             அவர்களின் செவிகள் மீதும்

             அல்லாஹ் முத்திரை இட்டுவிட்டான்;

             மேலும், அவர்களது பார்வைகள் மீது

             திரையொன்று கிடக்கின்றது.”

                                                            (2:7)

 அவர்கள் எப்படி நிறைவடைய முடியும்? அவர்களின் முழு வாழ்விலும் அவர்களோ அல்லது யாரைக் கொண்டு அவர்கள் பெருமை அடிக்கின்றனரோ அவர்களும் இறையருளை ஒருபோதும் உணரவோ பார்க்கவோ கிடையாது. சிலர் தம்மை நிறைத்துக் கொள்ளும்படி இறைவன் அவர்களுக்கு வழங்கும் நிரப்பமான கூஜா அவர்களுக்கு அருளப்படவில்லை. சிலருக்கு இறைவன் அதனை வெறுமையாகத் தருகின்றான். எனவே அவர்கள் ஏன் நன்றி கூற வேண்டும்? நிரப்பமான கூஜாவைப் பெறுபவர் நன்றி உரைப்பார்.

            இறைவன் களிமண்ணும் நீரும் கொண்டு ஆதமைப் படைத்தபோது ஆதமின் களிமண்ணை அவன் நாற்பது நாட்கள் பிசைந்தான் (’ஃகமர்ர தீன(த்)த ஆதம அர்ப-ஈன யவ்மன்’.)3 ஆதமின் (உடல்) கூட்டை முழுமையாக்கி ஒரு குறிப்பிட்ட காலம் பூமியில் அப்படியே வைத்துவிட்டான். இப்லீஸ் (ஷைத்தான்) கீழே இறங்கி வந்து ஆதமின் கூட்டுக்குள் போனான். ஒவ்வொரு நாளமும் நரம்புமாக ஆராய்ந்து பார்த்தான். அதெல்லாம் ரத்தமும் நிணமுமாக இருப்பதைக் கண்டான். அப்போது ஆதம் நபி சொன்னார், “ஓ! இறை விதானத்தின் (அர்ஷின்) நிழலில் நான் இருந்த போது நான் பார்த்த இப்லீஸ்தான் இவனா என்று நான் ஆச்சரியப்படுகிறேன்! அந்த இப்லீஸ் இன்னமும் இருக்கிறான் எனில் நிச்சயமாக அவன் இவனேதான்.”

            அஸ்ஸலாமு அலைக்கும்! (உங்கள் மீது பேரமைதி உண்டாகட்டும்!).

No comments:

Post a Comment