”மொழிப்பழக்கம் நம்மை ஏமாற்றுகிறது” என்றார் மகாகவி இக்பால்.
மொழிபெயர்ப்பு
அதைவிட.
ஒரு சொல்லுக்குப் பொதுவாக ஓர் அர்த்தம்
இருக்கும். அந்த அர்த்தத்தில்தான் அச்சொல்லை மக்கள் பயன்படுத்துவார்கள்.
ஆனால், கவிஞர்கள் மற்றும் ஞானிகளின்
நிலை வேறு. அவர்கள் தமது சிந்தனை சார்ந்து ஒரு சொல்லின் அர்த்தத்தை மேலும் ஆழமாக்கிப்
பயன்படுத்துவதுண்டு. அவர்கள் எப்பொருளில் அதனைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்து
கொண்டால்தான் அவர்தம் எழுத்தின், பேச்சின் மெய்ப்பொருள் கிடைக்கும்.
மௌனம் என்பது அத்தகைய ஒரு சொல்.
ஓசையின்மை என்பது பொதுவில் இதன் பொருள்.
”மௌன அஞ்சலி” என்று சொல்லி ஒரு நிமிடம்
பேசாமல் ஓசையின்றி நிற்கிறோமே, அது இந்தப் பொதுவான பொருளில்தான். மற்றபடி, மௌனமும்
அஞ்சலியும் மானுடர் என்னவென்று கண்டார்கள்?
புறத்தில் மட்டுமன்று, அகத்திலும் ஓசையற்று
இருப்பதே மௌனம் என்று ஞானியர் உரைப்பர்.
அதாவது, எண்ணங்கள் இல்லா நிலை.
“மௌனம் பற்றி, மக்கள் பேசாதவை பற்றி
ஒரு நாவல் எழுத விரும்புகிறேன்” (I want to write a novel about silence, the
things people don’t say) என்றார் ஆங்கில எழுத்தாளர் விர்ஜினிய ஊல்ஃப்.
மக்கள் பேசாதவற்றைப் பற்றி எழுதுவது
எப்படி மௌனத்தைப் பற்றி எழுதுவதாகும்? ஆகாது. Silence என்னும் சொல்லினை அதன் மிகப்
பொதுவான பொருளில்தான் அவர் பயன்படுத்துகிறார். தப்பில்லை. அந்த ஆங்கிலச் சொல்லுக்கு
”மௌனம்” என்னும் சொல்லுக்குள்ள பொருளாழம் இல்லை. ஆனால் நாம் அப்படித்தான் மொழி பெயர்க்க
வேண்டியுள்ளது.
“மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே”
என்று பழைய படப்பாடல் ஒன்றுண்டு. இவ்வரி பிழை என்பதை தியான அனுபவம் கொண்டோர் அறிவர்.
மனசாட்சி விளையாடுவது எண்ணங்களில்தான். மௌனத்தில் அல்ல.
மௌனம் என்பதை சாத்தியமான பொருள் எல்லை
வரை கொண்டு போனவர் ரமண மகரிஷி என்றே சொல்லலாம்.
“எது உள்ளதோ, அது மௌனம்” (‘That which is, is Silence’ – Letters, 136) என்று அவர் கூறியுள்ள வாசகம் சிந்தையில் ஒரு திறப்பைத் தந்துவிட்டது.
மௌனம் என்பதை உள்ளமை (Existence, உஜூது)
என்னும் பொருளில் அவர் கையாள்கிறார்.
“உள்ளது ஒன்று, மற்றது அன்று” என்பர்
ஞானியர். (கம்பம் அம்பா நாயகம் (ரஹ்) அவர்களது தர்காவில் இந்த ஞான வாசகம் எழுதப்பட்டுள்ளது.)
உள்ளது ஒன்று; தெரிபவை பல.
இறைவன் ஒருவன்; படைப்புக்கள் பல.
மௌனம் ஒன்று; ஒலிகள் பல.
எண்ணங்கள் ஓசைகளால் ஆனவை; அவை அடங்கினால்
இருப்பது மௌனம் ஒன்றே.
ஓசைகள் எங்கிருந்து தோன்றின? மௌனத்தில்
இருந்தே. எங்கே அவை மறையும்? மௌனத்தில்.
படைப்புக்கள் மறைந்தால் இருப்பது பரம்பொருள்
மட்டுமே.
படைப்புக்கள் எங்கிருந்து தோன்றின?
இறைவனில் இருந்தே. எங்கே அவை மறையும்? இறைவனில்.
”எதார்த்தத்தில் இருப்பது இறைவனே; எண்ணத்தில்
இருப்பவையே படைப்புக்கள்” (அல்ஹக்கு மஹ்சூஸ்; அல்-ஃகல்க்கு மஃகூல்) என்கிறார் சூஃபி
மகான் இப்னுல் அறபி (ரஹ்).
இன்னொரு விளக்கமும் ஓர்தற்பாற்று:
இறைவனின் திருப்பண்புகளில் பேச்சு
(கலாம்) என்பதும் ஒன்று.
பண்பு (சிஃபத்) என்பது சுயத்தில் (ஜாத்)
தொக்கி நிற்பது. (பண்புகள் பல; சுயம் ஒன்று). திருநாமங்களும் திருப்பண்புகளும் சுயத்திற்கே
மீள்வன.
சுயம் எப்போதும் வெளியாகி (ழாஹிர்)
இருப்பது. பண்பு வெளியாகியும் இருக்கும், வெளியாகாதும் இருக்கும்.
பேச்சு என்னும் திருப்பண்பு சுயத்தில்
மீண்டு விட்டால், அதாவது வெளியாவது நின்றுவிட்டால் அங்கே இருப்பது மௌனம். எனவே, சுயத்தன்மை
மௌனமே.
இறைவனின் சுயமும் உள்ளமையும் ஒன்றே.
எனவே, மௌனம் என்பது அவனது சுயத்தையும் உள்ளமையையும் குறிக்கிறது.
தனது போதனை முழுவதிலும் ரமணர் மீண்டும்
மீண்டும் சுட்டுகின்ற இரண்டு சொற்கள் “சுயம்” (Self) மற்றும் “மௌனம்” (Silence) என்பவையே.
“மௌனித்தோன் ஈடேறினான்” என்பது நபி
(ஸல்) அவர்களின் ஞான வாக்கு.
No comments:
Post a Comment