Friday, November 27, 2020

திரையோ? மறிகடலோ?

 


’திரை’ என்பது தமிழில் உள்ள ஒரு ஞானச் சொல்.

”திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்னும் முதுமொழி அனைவரும் அறிந்ததே.

அது என்ன திரைகடல்?

திரை என்றால் அலை என்று பொருள்.

புதுவை ஆகிய புதுச்சேரி என்னும் கடற்கரை மாநகரை மகாகவி பாரதியார் தனது ’குயில் பாட்டு’ என்னும் அற்புத நெடுங் கவிதையில் இப்படி அறிமுகம் செய்கிறார்:

“வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி

வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய

செந்தமிழ்த் தென்புதுவை என்னும் திருநகர்”

அதே பாரதி எழுதிய வேறொரு கவிதை வரி ‘திரை’ என்னும் சொல்லின் மற்றொரு பொருளைத் தருகிறது:

”தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி – பெண்கள்

திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்”


                  Bust of veiled Mary by Giovanni Strazza. 

(இவ்வரிகளில் உள்ள வரலாற்றுப் பிழையை விரித்துப் பேச இக்கட்டுரை இடம் அன்று. அது குறித்து எளியேன் எழுதிய “பாரதி தடுமாறினான்” என்னும் கட்டுரையில் காண்க. http://pirapanjakkudil.blogspot.com/2019/09/blog-post_9.html )

திரை என்றால் மறைக்கும் துணி என்றுதான் முதன்மை அர்த்தம். அதே சொல் கடலின் அலையையும் குறிப்பதாகத் தமிழில் அமைந்திருப்பதில் ஒரு ஞானம் இருக்கிறது.

கடலும் அதன் அலைகளும் இறைவனையும் அவனது படைப்புக்களையும் சுட்டும் குறியீடுகளாக ஞானக் கவிகள் பேசியுள்ளனர்.

“பூர்வீகக் கடலில்

புதுப்புது அலைகள்”

என்கிறார் மவ்லானா ரூமி.

திரை என்பதை மறைக்கும் துணி என்று கொண்டால் அதனை வைத்தும் பிரபஞ்சம் மற்றும் கடவுள் பற்றிய ஒரு ஞான ஒளிச்சுடரை நமக்கு அவர் நவில்கிறார்:

”திரைச்சீலையின் சித்திரங்கள் - அது

மறைத்துள்ள பொருளன்று”

திரை என்பது மறைப்பதா? அல்லது காட்டுவதா?

திரை என்பது கடலின் அலை என்று கொண்டு இந்தக் கேள்வியை எழுப்பினால் அச்சொல் தரும் ஞானத்தில் போய் முடிகிறது.

அலைகள் கடலில் தோன்றுகின்றன; கடலிலேயே மறைகின்றன. அலைகளில் கடல் அன்றி வேறு எதுவும் இல்லை. (எனினும், அலைகள் கடல் இல்லை.)

அலைகள் என்று கருதிப் பார்த்தால் கடல் நம் கருத்தில் படுவதில்லை. எனவே, அலை கடலை மறைக்கும் திரை ஆகிவிட்டது.

கடல் என்று கருதிப் பார்த்தால் அலையில் கடலே காட்சி ஆகிறது. எனவே, அலை கடலைக் காட்டும் பொருளாகிறது.

(திரைப் படம் என்பதும் திரையில் காணும் காட்சிதான். ஆனால் திரைப்படக் காட்சியினும் ஆழமானது திரைக்கடல் காட்சி! கடல் என்றாலே ஆழம் அல்லவா?)

”நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்” என்னும் சொலவடையும் இதே ஞானக் கருத்தை உணர்த்துவதுதான்.

கல்லில் செதுக்கிய ஒரு நாய்ச் சிலை உள்ளது. அவ்வழியே நடந்து வந்த சிறுவன் ஒருவன் அதனை முதன்முதலில் பார்க்கிறான் என்பதால் முதற்பார்வையில் நாயே நிற்கிறது என்று எண்ணி அஞ்சி ஓடுகிறான். பின்னர் அது ஆடாமல் அசையாமல் நிற்பதைப் பார்த்து அது சிலையே என்று தெரிந்து கொள்கிறான். இப்போது அவன் கருத்தில் நாய் மறைந்து கல்லே தெரிகிறது. (எளியேனின் குருநாதர் இச் சொலவடையை அடிக்கடி தனது சொற்பொழிவுகளில் விளக்குவார்கள்).

இந்த ஞானத்தை மரத்தால் செய்யப்பட்ட யானைச் சிலையை உவமை கொண்டு விளக்குகிறார் திருமூலர்:

“மரத்தை மறைத்தது மாமத யானை

 மரத்தில் மறைந்தது மாமத யானை

 பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

 பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்”

திரைகடல் ஓடி ஓடி திரவியம் தேடுவோர் தேடட்டும்.

நாம் திரைகளில் கடல் பார்த்து ஞான திரவியம் தேடுவோம்.

No comments:

Post a Comment