அண்மையில் நான் படித்து ரசித்த அழகான ஆன்மிகக் கவிதை செப்டம்பர்
9, 2018 தேதியிட்ட இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்த “போலீஸ் வதனம்”. கவிஞர் இசை எழுதிய
கவிதை. அவரது புகைப்படமும் போட்டிருந்து. அதுவரை, இசை என்னும் பெயரை வைத்து அக்கவிஞர்
ஒரு பெண் என்றே எண்ணியிருந்தேன். ஆண்பாற் கவிகள் தமது Pen-name ஆகப் பெண் நாமம் சூடிக்கொள்ளல்
ஒரு ட்ரெண்ட்தானே. எனினும், கவிஞர் இசை வேண்டுமானால் ஆணாக இருக்கட்டும். இசை என்பது
பெண்மைதான். கவிதையைக் காண்க:
நான்குமுனைச்
சந்திப்பொன்றில்
ஒரு
போலீஸ்காரரும் ஒரு குடியானவனும்
கிட்டத்தட்ட மோதிக்கொண்டனர்
குடியானவன்
வெலவெலத்துப்போனான்
கண்டோர் திகைத்து நின்றனர்
அடுத்த
கணம் அறைவிழும் சத்தத்திற்காய்
எல்லோரும்
காத்திருக்க
அதிகாரி
குடியானவனை நேர்நோக்கி
ஒரு சிரி சிரித்தார்.
அப்போது
வானத்தில் தேவர்கள் ஒன்றுகூடும்
ஓசை
கேட்டது.
“நகையணி
வதனத்து ஒளிநறுங்கீற்றே!”
என வாழ்த்தியது வானொலி.
போலீஸ்
தன் சுடரை
ஒரு
கந்துவட்டிக்காரனிடம்
பற்றவைத்துவிட்டுப்
போனார்.
அவன்
ரோட்டோரம்
கிடந்து பழம் விற்கும் கிழவியிடம்
கந்து
வசூலிக்க
வந்தவன்.
கிழவி
தலையைச் சொரிந்தபடியே
“நாளைக்கு...”
என்றாள்.
ஒரு
எழுத்துகூட ஏசாமல்
தன் ஜொலிப்பை அவளிடம் ஏற்றிவிட்டுப்
போனான்.
அதில்
பிரகாசித்துப் போன கிழவி
இரண்டு
குட்டி ஆரஞ்சுகளைச் சேர்த்துப் போட்டாள்.
அது
ஒரு குப்பைக்காரியின் முந்தானையில் விழுந்தது.
எப்போதாவது
ஆரஞ்சு தின்னும் அவளை
ஒரு
பிச்சைக்காரச் சிறுமி வழிமறிக்க
அதிலொன்றை ஈந்துவிட்டுப் போனாள்.
சிறுமியின்
காலடியில்
நாய்க்குட்டியொன்று
வாலாட்டி மன்றாடியது.
அதிலொரு
சுளையை எடுத்து
அவள்
அதன் முன் எறிய
சொறிநாய்க்குட்டி
அந்த ‘ஒளிநறுங்கீற்றை’ லபக்கென்று
விழுங்கியது.
இக்கவிதையின் சூழல், களம் அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் காணும் ஒன்றுதான்.
அதில் வினோதமோ விசித்திரமோ மீவியற்கைத் தன்மையோ ஏதுமில்லை. எனினும், கட்டற்ற அன்பு
ஊறிவரும்போது அன்றாட வாழ்வு கொள்ளும் அழகின் பொலிவை இக்கவிதை படம்பிடித்துக் காட்டுகிறது.
அந்த அம்சமே இதனைக் கவிதை ஆக்குகிறது.
இக்கவிதை ஒரு படிமக் காட்சிதான். தி.ஜானகிராமன் அல்லது வண்ணதாசன் இதனை
ஓர் ஒப்பரிய சிறுதகையாக எழுதியிருக்கலாம். தனது சில கவிதைகளில் சிறுகதையும், சில சிறுகதைகளில்
கவிதையும் இருப்பதாக வண்ணதாசன் சொல்கிறார். அப்படிப்பட்ட ஒரு கவிதையாகவே இதனைக் காண்கிறேன்.
அதிகாரத்தின் குறியீடாக இருக்கும் போலீஸ்காரரில் அன்பின் ஊற்று திறப்பதாக
இக்கவிதை ஆரம்பிக்கிறது. அதிகாரம் என்பது அன்பை நீர்த்துப்போகச் செய்யுமொரு சாபமாகவே
உலக வரலாறு நெடுகிலும் இருந்து வந்துள்ளதை நாம் பார்க்கிறோம். மத / அரசியல் / பிறவகை
அதிகாரங்கள் கைக்குக் கிடைத்தும் அன்பின் ஊற்று காய்ந்துபோகாமல் வாழ்ந்தவர்களை நாம்
மனிதருள் புனிதர்களாகக் கொண்டாடுகிறோம். ஆனால், மனிதர் அனைவரிலும் அப்படி இதயத்தில்
ஈரமுடன் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கிறது.
இங்கே, போலீஸ்காரர் ஒருவரில் அந்தச் சாத்தியம் நிகழ்கிறது.
மேலடுக்கு அதிகாரங்களின் அரணாகக் கட்டமைக்கப் பட்டிருக்கும் காவல்
துறையின் பிரதிநிதியான ஒரு போலீஸ்காரரின் முகம், பொது மனத்தில் எப்படித் தோற்றம் தரும்?
முரட்டுத்தனமும் இறுக்கமும் வெறித்த கண்களும் கொண்டதொரு முகமாகத்தான் அல்லவா? (உபயம்:
தமிழ் சினிமா?). ஆனால் இங்கே போலீஸ்காரரின் முகம் அவரது அகத்தில் பொங்கும் அன்பினால்
மென்மலர் போல் அழகாகிறது. அதனைக் கொண்டே கவிதைக்குத் தலைப்பிட்டிருக்கிறார் இசை. ‘போலீஸ்
முகம்’ என்பது ‘போலீஸ் வதனம்’ ஆகியிருக்கிறது. ’போலீஸ் உங்கள் நண்பன்’ என்பது இங்கே
உண்மையாகிறது. அதுதான் அன்பின் ரசவாதம்.
மட்டுமல்ல. அந்தப் போலீசின் அகத்துள் சுரந்த அன்பினை வானவர்கள் வாழ்த்துகிறார்கள்:
“நகையணி வதனத்து ஒளிநறுங் கீற்றே!”. இக்கவிதையின் உயிர்நாடியான வரி இது. தூய தமிழில்
இது எழுதப்பட்டிருப்பது ஏன்? வானவர்கள் செந்தமிழில்தான் பேசுவார்கள் என்னும் பழந்திரைப்பட
மனநிலையில் இப்படி எழுதப்பட்டுள்ளதா? இல்லை. அன்பின் தூய்மையைக் காட்ட மொழியின் தூய்மை
இங்கே கருவியாகிறது.
நேர்மறையான உணர்வுகள் எண்ணங்கள் ஆயினும், எதிர்மறையான உணர்வுகள் எண்ணங்கள்
ஆயினும் அவை முடிவற்றுத் தொற்றிக்கொண்டே செல்பவைதாம். தீயன நிறுத்தி நல்லன பரப்புதல்
நம் வரை. இக்கவிதை, Love is contagious என்று காட்டுகிறது. அஃதொரு ஆரோக்கியமான தொற்று.
அன்பு எங்கே இருந்தாலும் அது ஒளியும் நறுமணமும் ஆகிறது.
மனிதர்கள் தம்முள் காட்டிக்கொண்ட அன்பின் பரிமாற்றம் இங்கே இன்னொரு
மடைமாற்றமும் அடைகிறது. அது இங்கே இறுதியில் ஒரு சிறுமியின் வழியாக ஒரு சொறிநாய்க்குட்டியை
அடைகிறது. அன்பு என்பது நட்பு, நேசம், இரக்கம், காதல், தயை, அருள், கருணை என்று வடிவமாற்றம்
பெற்றுக்கொண்டே போகலாம்.
”அருள் எனும் அன்பீன் குழவி” என்கிறது குறள். அதனை இக்கவிதை நடைமுறைக்
காட்சியாக நமக்குத் தருகிறது.
இராமலிங்க அடிகள் பாடிய “தனிப்பெருங் கருணை” என்பது துளிர்க்கும் ஒரு
புள்ளியை இங்கே அடையாளம் காட்டுகிறார் இசை. அவரவர் வாழ்வில் இதுபோன்ற அற்புதத் தருணங்கள்
அவ்வப்போது வந்து போய்க்கொண்டுதான் இருக்கும். அதனை வெறுமனே விழிப்பின்றிக் கடந்து
போகிறோம். அக விழிப்புடன் அவை நம்மில் நிகழும் எனில் அத்துளிகள் பெருங்கடல் என மாறும்.
மலையில் ஊற்றெடுக்கும் தலைக்காவிரி ஒரு சிற்றோடையாக வழிந்தோடிப் பின்னர் அகன்ற காவிரியாகி
இறுதியில் கடலில் கலப்பது போல், அன்பின் சிறிய ஊற்று அடைக்கப்படாமல் இருந்தால் அதுவே
பெருங்கருணையின் பிரவாகமாய் ஆகி இறைமை என்னும் கடலுக்கு இட்டுச் செல்லும்.
‘அளவற்ற
அருளாளன் நிகரற்ற அன்புடையோன்’ என்கிறது இஸ்லாம். அந்தப் பண்பு தன்னுள் ஊற்றெடுக்காத
எவரும் உண்மையான முஸ்லிம் அல்ல என்பதுதான் அம்மந்திரம் தரும் விழிப்புணர்வு. அஃதன்றி,
வேதத்தையும் சமய நூற்களையும் ஓதுவதில் அர்த்தமில்லை. ‘ஓதி உனையறிந்தோர் உண்டோ பராபரமே’
என்கிறார் மஸ்தான் சாகிபு.
நாகூர்
பக்கத்தில் மஞ்சக்கொள்ளை என்றொரு சிற்றூர். அங்கே ஷிப்லி பாபா என்றொரு சூஃபி மகான்
வாழ்ந்திருந்தார். படிக்காத மனிதர். சமயக் கல்வி எதுவும் அவருக்கில்லை. ஆனால், அடியார்கள்
நாடி வரும் இறைஞானியாக இருந்தார். அவரின் வாயில் புறப்படும் வார்த்தைகள் பலருக்கு வாழ்க்கை
ஆயின. ஏட்டுச் சுரைக்காய்களுக்கு மத்தியில் அவர் எதார்த்தச் சுரைக்கொடியாய் பசியாற்றிக்
கொண்டிருந்தார். சித்தர்களைப் போல் தனிப்போக்குக் கொண்டிருந்தவர் அவர். அவ்வகை மனிதர்களை
சூஃபித்துவத்தில் ‘மஜ்தூப்’ என்று குறிப்பிடுவார்கள். சரி, அவர் எப்படி ஞானம் அடைந்தார்?
அதற்கான விடையை சூஃபி மகான் ஃபைஜி ஷாஹ் நூரி (ரஹ்) அவர்கள் ஒற்றை வரியில் இப்படிச்
சொன்னார்கள்: “கருணை பொங்கிருச்சு”.
”Love
dogs” என்றொரு புகழ் பெற்ற கவிதை. பாரசீக மொழியில் மௌலானா ரூமி எழுதியதை கோல்மன் பார்க்ஸ்
ஆங்கிலம் ஆக்கியிருந்தார். (பார்க்ஸ் என்றால் நாயின் குரைப்பு என்றும் பொருளுண்டு!).
அதில் வரும் சில வரிகள்:
தன் எஜமானுக்காக
நாயொன்று முனகுவதைக் கவனி.
அவ்வொலியே தொடர்பு.
யாரும் பெயரறியா நாய்கள் உண்டு,
காதலின் நாய்கள்.
நீயும் அவற்றுள் ஒன்றாக
வாழ்வை
அர்ப்பணி.
அத்தகைய
ஒரு காதல் நாய்க்குட்டிதான் நானும். இறைஞானி தரும் ‘ஒளி நறுங்கீற்று’க்களை லபக்கென்று
விழுங்கும் நாய்க்குட்டி.
No comments:
Post a Comment