Friday, September 21, 2018

மலர்க்காயம் (கஸல்)














முட்களிடம் காயங்கள்
விலங்குகளும் பெறும்...
மலர்க்காயம் படாதவர்
மனிதரில்லை

சொற்களின் அர்த்தங்கள்
எவர்தான் அறியார்?
மௌனம் புரியாதவர்
புனிதரில்லை

காதலென்றே இருந்துவிடட்டும்
காதலின் பெயர்
இன்னொரு பெயர் வைத்தல்
சுலபமில்லை

உறவுகளில் அவ்வப்போது
இடர்கிறேன் எனில்...
எனக்கு நானே அவ்வளவு
சகஜமில்லை

உள்ளிருக்கவும் முடியாது
வெளியேறவும் முடியாது
உன்னில் சுவருமில்லை
கதவுமில்லை

பானத்தைப் பருகும் முன்
பாத்திரம் உடைதல்...
அதன் போதை ஒருபோதும்
தெளிவதில்லை

அமிர்தத்தில் கலந்திடு
ஒரு துளி நஞ்சு...
துயரற்ற இசை
ருசிப்பதில்லை

காலத்தின் சாஸ்வதம்
கணமொன்றில் தரிசனம்
காலமுகம் கண்டுவிட்டால்
மரணமில்லை

No comments:

Post a Comment