Friday, February 9, 2018

கவிக்கோவின் உபநிஷத் ஞானம்




(மதுரை செசி அகிம்சை அமைதிக்கான பன்னாட்டு நிறுவனம் மற்றும் பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம் 06.01.2018 சனிக்கிழமை நடத்திய ஒருநாள் கருத்தரங்கின் பதிவாக வெளிவந்துள்ள “கவிக்கோவின் கவிதைவெளி” என்னும் ஆய்வுத்தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை இது)


”பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு” என்றார் பாரதியார். அது எப்படி என்னும் கேள்விக்கான விடைகளாகப் பல பண்புகளை அப்பாடலின் சரணங்களில் அடுக்கிச் சொல்லியிருக்கிறார். அவற்றுள் முதல் காரணமாக அவர் காட்டுவதே “ஞானத்திலே...” என்பதுதான்.

      ஆக, இந்த நாட்டுக்கு ஓர் உன்னதப் புகழ் இருக்கிறது என்றால் முதன்மையாக அது இறைஞானத்தால்தான் என்பது அவரின் கருத்து. “தரமான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்” என்று பாரதியார் சொன்னதைப் போலவே, இந்திய நாட்டின் அறிவுத் தொகையினுள் வெளிநாட்டார் படித்து வியந்து போற்றிய இலக்கியப் பனுவல்கள் உண்டென்றால் தமிழில் திருக்குறளையும் வடமொழியில் உபநிஷத்களையும்தான் முதன்மையாகச் சொல்ல வேண்டும்.

      மாக்ஸ் முல்லர், பால் டியூஸ்ஸன், ஆர்தர் ஸ்கோஃபன்ஹார், ஜோசஃப் ஷெல்லிங், ரால்ஃப் வால்டோ எமர்சன், ஹென்ரி தோரோ, வால்ட் விட்மன், வில்லியம் ஜேம்ஸ், டி.எஸ்.எலியாட், ஹெர்மன் ஹெஸ்ஸெ, ரிச்சர்ட் பாக் என்று உபநிஷத ஞானத்தால் அக எழுச்சி பெற்ற வெளிநாட்டாரின் பட்டியல் நீள்கிறது.

      இந்தியாவுக்குள் உபநிஷத்களின் தாக்கம் இருப்பது இயல்புதான் என்றாலும் எல்லாச் சிந்தனையாளர்களிடமும் கவிஞர்களிடமும் அதனைக் காண முடியாது. சிந்தனை முறையின் உயர்ந்த நிலைகளை அடைந்தவர்களிடம் மட்டுமே அந்தத் தாக்கத்தை நாம் காணவியலும். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்த வகையில் இரண்டு மகாகவிகளை நாம் குறிப்பிடலாம்: தாகூர் மற்றும் பாரதி.

      உபநிஷத்கள் நமது நாட்டில் தோன்றியவை என்பதில் பாரதிக்குப் பெருமிதம் இருந்தது. ”பன்னரும் உபநிடத நூலெங்கள் நூலே / பார்மிசை ஏதொரு நூல் இது போலே?” என்று அவர் பாடினார். அந்த உபநிஷத்களின் உள்ளொளியை கிரகித்துக்கொண்ட இதயம் படைத்த இன்னொரு பெருங்கவிஞர் என்று கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களைச் சொல்லலாம். இந்தக் கருத்தை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். அதற்கு முன், உபநிஷத்கள் பற்றிய ஒரு சிறு அறிமுகக் குறிப்பைத் தரவேண்டிய தேவை இருப்பதாக உணர்கிறேன்.


















உபநிஷத்: ஞானகுருவின் சகவாசம்

      இந்து மதத்தின் கட்டமைப்பில் நான்கு வேதங்களாக ரிக் யஜுர் சாம மற்றும் அதர்வ ஆகியவை உள்ளன. ஒவ்வொரு வேதத்தின் முடிவிலும் ஆன்மிக நோக்கிலான ஆராய்ச்சிப் பகுதிகள் உண்டு. இறைவன், ஆன்மா, வாழ்க்கை ஆகியன பற்றிய அடிப்படையான கேள்விகளை அவை எழுப்பிக்கொண்டு ஆராய்கின்றன. அந்தப் பகுதிகளுக்கு ஞானகாண்டம் என்று பெயர். அவற்றின் தொகுப்பையே வேதம் + அந்தம் = வேதாந்தம் என்று அழைத்தனர். அவையே உபநிஷத்கள் என்றும் பெயர் பெற்றன.

      உபநிஷத் என்றால் குருவின் காலடியில், அவருக்கு அருகில் அமர்ந்திருப்பது என்று நேரடிப் பொருள். ஞானகாண்டம் ஆன வேதாந்தப் பகுதிகள் குருவுக்கும் சீடர்களுக்கும் இடையில் நடைபெற்ற ஆன்மிகத் தத்துவ ஆராய்ச்சியாக அமைவதால் அவை உபநிஷத் என்று பெயர் பெற்றன. 

வேதங்களைத் தொகுத்தும் நான்காகப் பகுத்தும் அவற்றுக்கு ”சாகைக்ள்” (கிளைகள்) என்னும் நூற்கட்டமைப்பையும் நல்கிய வேதவியாசரே வடநாடெங்கும் சிதறிக்கிடந்த உபநிஷத்கள் பலவற்றை அரிதின் திரட்டி, எந்த உபநிஷத் எந்த வேதத்தினுடையது என்று ஆராய்ந்து இணைத்தவரும் ஆவார்.

”எவ்வளவோ உபநிஷத்கள் இருந்தாலும் அவற்றில் சிலவே இன்று கிடைக்கின்றன. காரணம், இவை பெரும்பாலும் செவி வழி வந்தவை. இவற்றை ஓதியவர்கள் பலருக்கு எழுத்தறிவும் இல்லை. ஏட்டுச் சுவடிகளும், இலைகளும் காலத்தால் அழிந்தன.

“இவற்றில் நூற்றுக்குச் சற்று அதிகமான உபநிஷத்கள் இன்று கிடைக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றுக்கு மூன்று சமயத் தூண்களான, சங்கரர், இராமானுஜர், மாத்வர் ஆகியோர் உரை எழுதியிருக்கின்றனர். உரையோ விளக்கங்களோ இல்லாமல் இவற்றின் பொருளை அறிந்துகொள்ள இயலாது. ஏனெனில் குரு தமது சீடர்களுக்குக் கோடியிட்டுக் காட்டிய விஷயக் குறிப்புக்களே இந்த நூல்கள்.” என்று குறிப்பிடுகிறார் மேஜர்.தி.சா.ராஜு அவர்கள் (நூல்: ‘பாரதி போற்றிய பன்னரும் உபநிடத நூல்’, பக்கம்:19, முதற்பதிப்பு: டிசம்பர் 1982, வானதி பதிப்பகம், சென்னை-17).

மொத்தம் நூற்றெட்டு உபநிஷத்கள் இருப்பதாக ஒரு கணக்கு உண்டு. அவற்றுள் பன்னிரண்டு உபநிஷத்களுக்கு ஆதி சங்கரர் உரை எழுதியிருக்கிறார். அவையே மிகவும் புகழ் பெற்று விளங்குகின்றன.

அவை முறையே ஈஸா, கேன, கத, ப்ரஸ்ன, முண்டக, மண்டூக்ய, தைத்திரிய, ஐத்திரேய, சாந்தோக்ய, ப்ருஹதாரன்யக, ஸ்வேதாஸ்வதர, ந்ருஸிம்ஹ தபனிய உபநிஷத்கள் ஆகும்.
























உபநிஷத்கள் தரும் மகாவாக்கியங்கள்
      
 வேதங்கள் தரும் முடிவான கருத்துக்கள் (Conclusions) உபநிஷத்களில் அடங்கியிருப்பதால்தான் அவை வேதாந்தம் என்று சொல்லப்படுவதாகவும் ஒரு பொருளுண்டு. வேதங்களின் சாரம் அவற்றுள் இருப்பதால் அவற்றுக்கு வேதசாரம் என்றும், அவற்றின் சாரம் பகவத் கீதையில் இருப்பதால் அதற்கு உபநிஷத்சாரம் என்றும் அடைமொழிகள் உள்ளன.

      வேதங்களின் சிறந்த வாக்கியங்களை மகாவாக்கியங்கள் என்று போற்றுவர். அவை தியானத்திற்கான மந்திரங்களாகவும் கொள்ளப்படும். ஒவ்வொரு வேதத்திலிருந்தும் மிகச் சிறந்த மந்திரம் இதுவே என்று எடுக்கப்பட்ட நான்கு மகாவாக்கியங்கள் உள்ளன. அவை நான்கும் அந்தந்த வேதத்தின் இறுதியிலமைந்த உபநிஷத்களிலிருந்தே வந்துள்ளன. அவை,
அ) “ப்ரஞானம் ப்ரஹ்ம” – இறைஞானமே பரம்பொருள் அல்லது பரம்பொருளே  இறைஞானம். (ஐத்திரேய உபநிஷத்: ரிக் வேதம்)
ஆ) “அயமாத்மா ப்ரஹ்ம” – ஆத்மாவே பரம்பொருள் (மண்டூக்ய உபநிஷத்: அதர்வ வேதம்)
இ) “தத்வமஸி / தத் த்வம் அஸி” – நீயே அது / நீயே அதுவாக இருக்கிறாய் (சந்தோக்ய உபநிஷத்: சாம வேதம்)
ஈ) ”அஹம் ப்ரஹ்மாஸ்மி” – நான் பரம்பொருள் / நான் கடவுள் (ப்ருஹதாரண்யக உபநிஷத்: யஜுர் வேதம்)

இந்த நான்கு மகாவாக்கியங்களே அன்றி இரண்டாம் நிலையில் வைத்துப் போற்றப்படும் மகாவாக்கியங்களும் உள்ளன. அவற்றுள் சில,
அ) ”ஸோஹமஸ்மி / ஸோ ஹம் அஸ்மி” – அவனே நான் (ஈஸா உபநிஷத்: யஜுர் வேதம்)
ஆ) ”ஏகம் ஏவத்விதியம் ப்ரஹ்ம” – பரம்பொருள் என்பது இரண்டற்ற ஒன்று (சாந்தோக்ய உபநிஷத்: சாம வேதம்)
இ) “சர்வம் கல்விதம் ப்ரஹ்ம” – இவை அனைத்தும் பரம்பொருள் (சாந்தோக்ய உபநிஷத்: சாம வேதம்)



















கவிக்கோ கவிதைகளில் உபநிஷத் பார்வை

      சமயப் பூசல்கள் என்னும் அஞ்ஞானம் அகற்றி மெய்ஞ்ஞானம் கண்டவர் கவிக்கோ அப்துல் ரகுமான். மனிதனின் தொலைந்த பொக்கிஷமான இறைஞானம் எவ்விடம் இருப்பினும் அதனை அகமுறத் தழுவிக்கொண்ட ஆன்மிகவாதி அவர். எனவேதான் அவரது கவிதைகளில் உலகச் சமயங்களின் ஆன்மிக நெறிகள் அனைத்தின் ஞானப் பார்வைகளும் இடம் பெற்றிருக்கக் காண்கிறோம். அவரது படைப்புக்கள் அனைத்திலும் இப்பண்பு நிரம்பியுள்ளது என்று சொல்ல முடியாவிடினும் ’ஆலாபனை’யிலும் அதன் பின் அவரெழுதிய கவிதை நூற்களிலும் இப்பண்பு மிகைத்துள்ளது. அவற்றுள் குறிப்பாக, 2011-இல் வெளிவந்த “தேவகானம்” என்னும் மரபுக்கவிதை நூலில் இப்பண்பு துலங்கிக் காண்கிறது.
      
     ”தேவகானம்” நூலின் பாடல்கள் சிவவாக்கியாரின் பாடற் சந்தத்தை வரித்துக்கொண்டு யாக்கப்பட்டுள்ளன. அவற்றில் சித்தர் மெய்ப்பொருள் பார்வையும் அதிகமாக இருக்கிறது. சித்தர்களில் ஒருவராகக் கருதப்படினும் சைவ சித்தாந்தக் கட்டமைப்பைத் தந்தவரான திருமூலரின் தாக்கமும் இருக்கிறது. “முஸ்லிம் சித்தர்கள்” என்று சொல்லப்படக்கூடிய சூஃபிகளின் பார்வையும் இருக்கிறது. அதேபோல் வடமொழி ஞானப் பனுவல்களான உபநிஷத்களின் தாக்கமும் இருக்கிறது. அந்த உபநிஷத்களைத் தந்தவர்களும்கூட சித்தத்தால் வேதத்தை ஆராய்ந்து முடிவு கண்டவர்களே என்னும் கோணத்தில் அவர்களை வடநாட்டுச் சித்தர்கள் எனக் கருதலாம் அல்லவா?
       
       அப்துல் ரகுமான் அவர்களை, அவர் சார்ந்த இஸ்லாம் சமயத்தின் அடிப்படையில், அச்சமயத்தின் ஞான நெறியான சூஃபித்துவத்தை ஏற்றவர் என்பதால், ஒரு சூஃபி என்று சொல்கிறோம். சூஃபிக்கும் உபநிஷத்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்றொரு கேள்வி எழும் எனில் அதற்கொரு அற்புதமான விடையை நம் தேசத்தின் வரலாறு தருகிறது.

      சமஸ்க்ருத மொழியில் அமைந்த உபநிஷத்களின் கருத்துக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் முகலாய இளவரசர் தாரா ஷிகோஹ். இவர் மன்னர் ஷாஜஹானின் மூத்த மகன். ஔரங்கசீபுக்கு அண்ணன். சூஃபி நெறியில் ஹஜ்ரத் மியான் மீர் காதிரி என்பவரின் சீடர். காஷ்மீரில் அவர் தங்கியிருந்தபோது சமஸ்கிருத பண்டிதர் குழு ஒன்றை அமைத்து ஐம்பது உபநிஷத்களை பாரசீகம் என்னும் ’ஃபார்ஸி’ மொழியில் எழுத வைத்தார். இந்த மொழிபெயர்ப்புப் பணி நடந்த ஆண்டு 1657. அந்த நூலுக்கு அவர் ”சிர்ரெ அக்பர்” (மாபெரும் ரகசியம்) என்று பெயர் சூட்டினார். அந்நூலின் பிரதிகள் பாரசீகம் பேசப்படும் நாடுகளுக்குச் சென்றன. 1775-ஆம் ஆண்டு அதனைப் பாரசீகத்திலிருந்து ஃபிரெஞ் மற்றும் லத்தீன் மொழிகளுக்கு அன்க்யூட்டில் துபெர்ரான் (Anquetil Duperron) என்பவர் மொழிபெயர்த்தார். பிறகு அது ஜெர்மன் மொழியில் மாக்ஸ் முல்லரால் மொழிபெயர்க்கபட்டது. இவ்வாறு, உபநிஷத்கள் உலக அரங்கில் சென்று சேர தாரா ஷிகோஹ் என்னுமொரு சூஃபிதான் வழி கோலினார் என்பதை நாம் கருத்தில் நிறுத்த வேண்டும்.

      இனி, கவிக்கோ அப்துல் ரகுமான் என்னும் சூஃபியின் “தேவகானம்” என்னும் நூலை முன்வைத்து, அவரது கவிதைகளில் உபநிஷத்களின் ஞானப் பார்வை பதிவாகியுள்ளதைச் சற்றே விளக்குகிறேன்.


















ஆன்மிகமும் அமைதியும்

      ஒவ்வொரு உபநிஷத்தின் ஆரம்பத்திலும் ’சாந்திபாடம்’ என்றொரு பகுதி இருக்கும். பாடத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் குருவும் சீடனும் இணைந்து ஓத வேண்டிய பிரார்த்தனை அது. அந்த பிரார்த்தனைகள் ”சாந்தி சாந்தி சாந்தி” என்று முடிவதால் அவற்றுக்கு ”சாந்தி பாடம்” என்று பெயர். சாந்தி என்றால் அமைதி என்பது பொருள். (இஸ்லாம் என்பதன் வேர்ச்சொல்லான சலாம் என்பதற்கும் அமைதி என்பதே அர்த்தம்). ஆன்மிகத்தால், அதில் அடையப்படும் இறைஞானத்தால் உலகில் அமைதி பரவ வேண்டும் என்பதற்காகவே உபநிஷத்களில் இந்த சாந்திபாடம் வைக்கப்பட்டுள்ளது.
       
      கவிக்கோ தந்த “வேதகானம்” நூலின் முதலிரு பாடல்களும் இஸ்லாம் மற்றும் இந்து சமயங்களின் வேதங்களிலிருந்து தேர்ந்த பிரார்த்தனைகளின் மொழிபெயர்ப்பாக விளங்குகின்றன. ”புகழெலாம் அவனதே...” என்று தொடங்கும் முதற்பாடல் குர்ஆனின் முதல் அத்தியாயமான “அல்-ஃபாத்திஹா” என்பதன் தமிழாக்கம். ”திறப்பு” என்பது அதன் பொருள்.
      ”தூயதான சோதியே!
தொழுதுனை வணங்கினேன்
      மாயப் பொய்மை நீக்கி என்னை
மெய்ம்மையில் செலுத்துவாய்
தீயதாம் இருளை நீக்கி
ஒளியிலே செலுத்துவாய்
மாயும் தன்மை நீக்கியே
அமர வாழ்வு நல்குவாய்”
என்பது இரண்டாம் பாடல். இது ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் சாந்தி பாடத்தின் தமிழாக்கமாகும்.
      ”ஓம் அஸதோ மா சத்கமய
      தமஸோ மா ஜ்யோதிர்கமய
      ம்ருத்யோர் மா அம்ருதம்கமய
      ஓம் ஷாந்திஹ் ஷாந்திஹ் ஷாந்திஹி”
என்பது சமஸ்க்ருதத்தில் அமைந்த மூல வரிகளாகும்.

’நான்’ நீ என்பதன் ரகசியம்

      ”தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான்” என்பதொரு சூஃபி வாக்கியம். இதில் தலைவன் என்பது அனைத்துக்கும் ஆதியும் மூலவனும் முதல்வனுமான இறைவனைக் குறிக்கும். தமிழில் தலை என்னும் சொல்லுக்கு முதல் என்றும் மூலம் என்றும் பொருளுண்டு.

      ’நான்’ என்னும் தன்னுணர்வைப் பற்றி ஆராயாத ஆன்மிக நெறிகள் அகிலத்தில் இல்லை. உபநிஷத் என்னும் ஆன்மிகப் பனுவல்கள் வழங்கும் அதி சிறந்த உன்னதமான மெய்யறிவே “’நான்’ என்பது ஒன்றுதான்” என்பதேயாகும்.   

      கிரேக்க நாட்டில் டெல்ஃபி என்னும் இடத்தில் உள்ள அபோல்லோ ஆலயத்தில் குறிக்கப்பட்டிருந்த அருள்வாக்குகளில் ஒன்று “நோதி ஸ்யூட்டான்” (தன்னை அறிவாய்) என்பதாகும். அதனையே சாக்ரடீஸ் தனது வாழ்நாள் முழுதும் விளக்கினார் என்பர். அந்த அருள்வாக்குகள் உபநிஷத்கள் வழங்கியவை ஆகலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். எனினும், உபநிஷத்கள் தன்னை அறியச் சொல்வதன் பொருள் சாக்ரடீஸின் விளக்கத்தை விடவும் ஆழமானது என்று அறிஞர் குழாம் ஒப்புகின்றது. ”The key-note of the old Upanishads is "know thyself," but with a much deeper meaning than that of the γνῶθι σεαυτόν of the Delphic Oracle. The "know thyself" of the Upanishads means, know thy true self, that which underlines thine Ego, and find it and know it in the highest, the eternal Self, the One without a second, which underlies the whole world.” என்று மாக்ஸ் முல்லர் இவ்வேறுபாட்டினைச் சுட்டிக்காட்டுகிறார்.

      கவிக்கோ “நான்” என்னும் தன்னுணர்வின் மெய்ம்மை பற்றி “தேவகானம்” நூலில் பல இடங்களில் மீண்டும் மீண்டும் பேசுகிறார். அவர் முன்வைக்கும் கருத்துக்கள் ‘சுயாதீனம்’ என்னும் தன்னுணர்வு பற்றி சூஃபித்துவம் மற்றும் உபநிஷத்கள் தரும் ஞானப் பார்வையைத்தான் வரித்துக்கொண்டுள்ளன.

      தன்னை அறியாமல் வேறு எதனை அறிந்தாலும் அது பொய்யறிவாகப் போய்விடும் என்னும் விழிப்புணர்வை நமக்கு ஊட்டுகின்றன அவரின் ”தேவகானம்” பாடல்கள். “மன்னும் விண்ணும் மண்ணும்நீ மதியினால் அறிந்தனை / என்ன என்ன உள்ளதோ யாவையும் அறிந்தனை / அன்ன யாவும் நுட்பமாய் அறிந்திருந்தும் வீணடா / உன்னை நீ அறி அதே உயர்ந்த ஞானம் ஆமடா” (81) என்றும் “சகத்தை நீ அறிந்திடின் சாரமற்ற அறிவது / அகத்தை நீ அறிந்திடின் அது மெய்ஞ்ஞானம் ஆகுமே” (85) என்று அவர் பாடுவதை ஓர்க.

      இறைவனை நோக்கி, ”நீயும் நானும் வேறென நிறுத்தவும் இடமுண்டு / நீயும் நானும் ஒன்றென நினைக்கவும் இடமுண்டு” (26) என்று சொல்வதன் மூலம் துவைதம் மற்றும் அத்வைதம் ஆகிய இரண்டுமே பார்வைக் கோணங்களால் வரும் வேறுபாடுதான், அவை இரண்டுமே தத்தமது தளங்களில் உண்மையான பார்வைகளே என்பதைச் சுட்டுகிறார். துவைதம் பாமரர்களுக்கானது, அத்வைதம் ஞானிகளுக்கானது என்பதே மெய்ஞ்ஞானியரின் ஏகோபித்த கருத்து.

      ”நான் என நவில்வது நான் எனில் அஞ்ஞானமாம் / நான் என நவில்வது நீயென உணர்வதே / வான் தரும் மெய்ஞ்ஞானமாம்” (10) என்று கவிக்கோ அவர்கள் கூறுகிறார். முதல் வரியில் சொல்லப்படும் நான் என்பது அறியாமையால் உண்டான அடையாளங்களைத் தான் என்று கருதுகின்ற தன்முனைப்பு (Ego) ஆகும். இது இறைவனை அடையத் தடையாக நிற்கும். EGO என்பதற்கு Edging God Out என்று அழகான விளக்கம் தருகிறார் டாக்டர் தீபக் சோப்ரா. இரண்டாம் வரியில் கவிக்கோ சுட்டும் நான் என்பது இறைவனது தன்னுணர்வு மனிதனில் பிரதிபலிப்பதாகும். அது இறைவனின் ’நான்’ ஆகும். அதுவே மெய்ப்பொருள். அதனை அடையும் வழி, பொய்யான நான் என்பதை அழிப்பதே ஆகும். இதனை சூஃபிகள் ஃபனா என்பர். யோக நெறி இதனை சமாதி என்கிறது. “என்னை நான் இழந்தனன் கிடைத்தனன் என் ஈசனே” (57) என்று கவிக்கோ பாடுகிறார்.

      ”அறிந்திடாத போது ‘நான்’ நானென நினைத்தனன் / அறிந்தனன்... இப்போது ‘நான்’ நீயென அறிந்தனன்” (43) என்று தான் அடைந்த மெய்ஞ்ஞானத்தை வெளிப்படுத்துகிறார் கவிக்கோ. இது, ”சோஹமஸ்மி”, “அஹம் ப்ரஹ்மாஸ்மி” என்று உபநிஷத்கள் தரும் மகாவாக்கியங்களின் கருத்தாகவே இருக்கக் காண்கிறோம்.

முத்தொழில் செய்யும் ஏக இறைவன்

      படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில் புரியும் கர்த்தன் ஒருவனே என்பதுதான் சமயங்கள் அனைத்தும் சாற்றும் முடிவான உண்மை. இக்கருத்தினை உபநிஷத்களிலும் காண்கிறோம். “வெகுவாய் சிருஷ்டிக்கிறான், முடிவில் உலகனைத்தையும் அழிக்கிறான் அந்த தேவன்” (4:1) என்றும், “அவன் தேவர்களைப் படைப்பவன், வளர்ப்பவன், உலகனைத்திற்கும் அதிபன்” (4:12) என்றும், “அணுவுக்கணுவாய் இருப்பவன், கலக்கத்தினிடையில் உலகைப் படைப்பவன், அநேக வடிவுடையவன், உலகனைத்தையும் வியாபித்து நிற்கும் ஒருவன்” (4:14) என்றும் ஸ்வேதாஸ்வதரோபநிஷத் சொல்வது கருதத்தகும். இக்கருத்துக்களின் பிரதிபலிப்பை நாம் கவிக்கோவின் பாடலில் காண்கிறோம்:
      ”எது இவ்வண்டம் யாவையும் இயல்பினால் படைத்ததோ
      எது இவ்வண்டம் யாவையும் இரக்கத்தாலே காத்ததோ
      எதனிடம் இவ்வண்டங்கள் இறுதியில் ஒடுங்குமோ
      அது நம் ஈசன்; நெஞ்சமே அதனையே வணங்குவாய்” (32).

இப்பாடலின் கருத்துடன், “என்னிடமிருந்தே அனைத்தும் உண்டாகியிருக்கிறது. என்னிடமே அனைத்தும் நிலைத்திருக்கிறது. என்னிடமே அனைத்தும் லயமடைகிறது. இரண்டற்ற அந்த பிரம்மமாக நான் இருக்கிறேன்” (மய்யேவ ஸகலம் மயி ஸர்வம் ப்ரதிஷ்டிதம் / மயி ஸர்வம் லயம் யாதி தத் ப்ரஹ்மாத்வயமஸ்ம்யஹம்) என்று கைவல்யோபநிஷத் (ஸ்லோகம் 1:19) சொல்வதையும் ஒப்பு நோக்கலாம்.

பரம்பொருளின் நிர்க்குண நிலை

      இறைவனை அறிவித்துத் தருகின்ற ஞானப் பனுவல்கள் அவனை இரண்டு விதங்களில் வருணிக்கின்றன. ஒன்று அவனது அநாதி நிலையான, படைப்புக்களுக்கு அப்பால் ஆன நிர்க்குண நிலை. மற்றொன்று படைப்புக்களுடன் அவன் தொடர்பு கொண்டிருக்கும் தன்மையான சற்குண நிலை. (இவ்விரண்டையும் சூஃபித்துவம் தன்ஸீஹ் மற்றும் தஷ்பீஹ் என்று அழைக்கிறது).

      நிற்குண நிலை என்பது குணம் குறியற்ற நிலை எனப்படும். அந்நிலையில் இறைவனுக்கு எந்த அடையாளங்களும் காட்டவியலாது. இடம் காலம் பாலினம், மொழி என்பதற்கெல்லாம் அப்பாற்பட்ட நிலை அது. “நைவ ச தஸ்ய லிங்கம்” (6:9) (அவனுக்குக் குறியுமில்லை / அடையாளம் இல்லை) என்கிறது ஸ்வேதாஸ்வதர உபநிஷத். அதில் பாலினம் என்பதைக் கருத, இறைவன் ஆணோ பெண்ணோ அல்லன். அதே சமயம் அவன் இரண்டும் குழம்பிய அலியும் அல்லன். ”நைவ ஸ்த்ரீ ந புமானேஷ ந சைவாயம் நபும்ஸக” (5:10) (அவன் பெண்ணுமல்லன், ஆணுமல்லன், அவன் அலியுமல்லன்) என்கிறது அந்த உபநிஷத். இக்கருத்தையே மாணிக்கவாசகர் தனது திருமந்திரத்தில் “ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்” என்று பாடினார். கவிக்கோவும் இதனை வழிமொழிந்தவாறு, “ஆணுமில்லை பெண்ணுமில்லை அலியுமில்லை இல்லையே” (33) என்று பாடுகின்றார்.

அந்தரங்கமான நூல்

      ”சந்திரன் அச் சூரியன் சார்ந்து நிற்கும் கோளங்கள்
      மந்தரம் சராசரம் மனிதர்கள் அனைத்துமே
      சுந்தர மணிகளாம்; தூயவன் தொடுத்ததோர்
      அந்தரங்கமான நூல் அனைத்தையும் இணைத்ததே” (42)

என்று கவிக்கோ பாடுகின்ற கருத்தும் உபநிஷத்கள் தருகின்ற ஞானப் பார்வையே. அவை இறைவனை வருணிக்கும் பெயர்களில் ஒன்று ”ஸூத்ரதாரி” என்பது. இச்சொல்லின் அர்தத்தை மேஜர்.தி.சா.ராஜு அவர்கள் மிக அழகாக எழுதியிருக்கிறார்: “ஸூத்ரம் என்னும் சொல்லுக்குப் பருத்தி இழை என்றும், புத்தகம் என்றும் பொருள் உண்டு. தமிழிலும் நூல் என்ற வார்த்தைக்கும் இதே பொருள். கண்ணுக்குப் புலப்படாத நூலின் துணை கொண்டு இவ்வையம் முழுவதையும் இயக்குவதால் இறைவனுக்கே ஸூத்ரதாரி என்று பெயர்” (நூல்: ‘பாரதி போற்றிய பன்னரும் உபநிடதம்’, பக்கம்:124).

      உபநிஷத்களின் சாரமான பகவத் கீதையிலும் இக்கருத்து சொல்லப்படுகிறது. “மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ” (பகவத் கீதை 7.7).



















அந்தர்யாமி : உள்ளிருக்கும் ஏகன்

      அனைத்தையும் படைத்த இறைவன் அனைத்தினுள்ளும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பது மெய்ஞ்ஞானிகள் கண்ட உண்மை. இதனால் இறைவனை அந்தர்யாமி (உள்ளே உறைபவன்) என்று உபநிஷத்கள் அழைக்கின்றன. இது வைஷ்ணவத்தில் ‘சரீர சரீரி’ என்னுமொரு அடிப்படைக் கோட்பாடாகவே இருக்கிறது. “உடல்மிசை உயிர் என கரந்தெங்கும் பரந்துளன்” என்று இதனை நம்மாழ்வார் சொல்கிறார்.

      ”எள்ளிலே நிறைந்திருக்கும் எண்ணெய் போல என்மனத்(து)
      உள்ளிலே நிறைந்திருக்கும் ஒழிவிலாத சோதியே!” (74) என்றும்,
      ”கள்ளிருக்கும் பூவினுள், கனலிருக்கும் கல்லினுள்
      சுள்ளிருக்கும் மிளகினுள், சுளையிருக்கும் தோலினுள்
      எள்ளிருக்கும் எண்ணெயாய் ஈசன் உள் இருக்கிறான்
      உள்ளிருக்கும் ஈசனை உலகமெங்கும் தேடலேன்?” (328)

என்றும் கவிக்கோ அவர்கள் பாடியிருப்பதில் இறைவனை அந்தர்யாமியாய் காணும் ஞானப் பார்வை வெளிப்படுகின்றது. எள்ளில் எண்ணெய், கல்லில் அக்னி என்னும் உவமைகள் உபநிஷத்களில் உள்ளதே.

      ”எள்ளினுள் எண்ணெய் போலும், தயிரினுள் நெய் போலும், ஊற்றுக்களில் நீர் போலும், அரணிக்கட்டைகளில் அக்கினி போலும் இந்தப் பரமாத்மா ஜீவாத்மாவிடம் காணப்படுகிறது” (திலேஷு தைலம் ததனீவ ஸர்ப்பி / ராப: ஸ்ரோத: ஸ்வரணீஷு சாக்னி: / ஏவமாத்மா ssத்மனி க்ருஹ்யதே sஸௌ -1:15) என்கிறது ஸ்வேதாஸ்வதர உபநிஷத்.

      ”ஸத்தியத்தாலும் தவத்தாலும் எவன் தொடர்ந்து பார்க்கிறானோ அவனுடைய உள்ளத்தில் எள்ளில் மறைந்திருந்த எண்ணெய் போலவும், தயிரில் இருந்த வெண்ணெய் போலவும், ஆற்றில் இருந்த நீர் போலவும், அரணிக்கட்டையிலிருந்த நெருப்புப் போலவும் ஆத்மா வெளித்தோன்றுகிறது” என்கிறது பிரம்மோபநிஷத் (ஸ்லோகம் 19).

இறைவன் இதயத்தினுள் இருக்கிறான்

      உபநிஷத்கள் இறைவனுக்கு வழங்கும் பெயர்களில் ஒன்று ”குஹன்” என்பதாகும். ’குஹா’ என்னும் சமஸ்க்ருதச் சொல்லுக்கு குகை என்றும் இதயம் என்றும் அர்த்தங்கள் உள்ளன. பக்தனின் இதயம் என்னும் குகையில் இருப்பதால் இறைவனுக்கு குஹன் என்று பெயர் ஆயிற்று. தன்னுள் ஆழ்ந்து காண்பவர் இறைவனைக் காணலாம் என்பது ஞான நெறிகள் ஒப்பும் உண்மைகளுள் ஒன்று. இதைக் கவிக்கோவும் நமக்கு போதிக்கிறார்.

      ”அகத்திலே தோண்டிப் பார் உனக்கு அகப்படும் புதையலே” என்று சொல்லும் கவிக்கோ அவர்கள், “இறைவனும் உனக்குளே” என்று அறிவித்துத் தரக் காண்கிறோம் (பாடல் 79). இக்கருத்துக்களை உபநிஷத் சுலோகங்களுடன் ஒப்பு நோக்கலாம்.

      ”எல்லா தேவதைகளும் இருதயத்தில் இருக்கிறார்கள். பிராணன்கள் இருதயத்தில் நிலை பெறுகின்றன. இருதயத்தில்தான் உயிர்நிலையும் ஞான ஒளியும். அதுதான் முப்புரிப் பூணூல் என்று ஞானிகள் அறிகிறார்கள். பரமாத்மா இருதயத்தில் உறைகின்றது” என்கிறது பிரம்மோபநிஷத் (4-ஆம் ஸ்லோகம்).

      ”இருதய குகையில் உறைபவன்; பகுக்கப்படாதவன்; இரண்டற்றவன்” (குஹாசயம் நிஷ்கல-மத்விதீயம்) என்று இறைவனை வருணிக்கின்றது கைவல்ய உபநிஷத் (ஸ்லோகம் 2:5).

புலன்களுக்கு அகப்படாத பரம்பொருள்

      இறைவன் நமது ஐம்புலன்களுக்கு அகப்படுவோன் அல்லன் என்பது ஞானியர் யாவரும் கண்டறிந்த உண்மை. உபநிஷத்களும் இந்த உண்மையை உரக்க உரைக்கின்றன.

      ”கண்ணும் செல்வதில்லையே கருத்தும் செல்வதில்லையே
      பண்ணும் வார்த்தை ஒன்றுமே பக்கம் செல்வதில்லையே” (256)
என்று கவிக்கோ பாடுகின்ற வரிகள் அப்படியே கேன உபநிஷத்தில் உள்ளதொரு ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பே எனலாம்.

      ”ந தத்ர சக்ஸுர் கச்சதி; ந வாக் கச்சதி; ந மனோ” (1:3) என்கிறது கேனோபநிஷத். “அங்கே பார்வை செல்வதில்லை, பேச்சும் செல்வதில்லை, மனமும் செல்வதில்லை” என்பது இதன் பொருள்.

முடிவுரை
      மேற்சொல்லி வந்த விளக்கங்கள் கவிக்கோவின் “தேவகானம்” நூலின்கண் அமைந்த பாடல்களில் உபநிஷத்களின் ஞானக் கருத்துக்கள் பிரதிபலிப்பதை போதிய அளவு எடுத்துக்காட்டுகின்றன என்று நம்புகிறேன். மிக வெளிப்படையாகத் தெரிந்த பாடல் வரிகளுக்கே இங்கு விளக்கங்கள் விளம்பியுள்ளேன். ஆற அமர நுணுகி ஆராய்ந்தால் மேலும் பல பாடல்களில் மறைந்து கிடக்கும் உபநிஷத் ஞானங்கள் வெளிப்படக்கூடும். கவிக்கோ அப்துல் ரகுமான் நமக்குத் தந்திருக்கும் இந்த “தேவகானம்” நூலை நாம் ”கவிக்கோ உபநிஷத்” என்றே அழைக்கலாம்.
 

No comments:

Post a Comment