ஷைக்
ஹிஷாம் கப்பானி
தமிழில்: ரமீஸ் பிலாலி
ஞானப்பாதையில் உங்களுக்கு நான்கு பண்புகள் தேவைப்படும்:
1.மௌனம்
(அஸ்-ஸம்த்)
முதல் பண்பு மௌனம். பேசாதிருப்பது. வாயாடாமல் இருப்பது. ஏனெனில் நீங்கள்
பேசத்தொடங்கிய உடனே பதில் சொல்வதற்கு அங்கில்லாத ஒருவரைப் பற்றி அவதூறு
பேசுகிறீர்கள். புறம் பேசுகிறீர்கள்.
ஒருவரிடம் குறைகளே இருந்தாலும் அல்லது அவர் உங்களைப்
புண்படுத்தியிருந்தாலும் அல்லது எவரிடமிருந்தேனும் அவர் என்னென்ன செய்தார் என்பதை
நீங்கள் கேட்டு அறிந்திருந்தாலும், அவரைப் பற்றிப் புறம் பேச அனுமதி இல்லை.
மேலும், உண்மையாகவே இருப்பினும் ஒருவரைப் பற்றிப் புரளி கிளப்புவதற்கு அனுமதி
இல்லை. அதன் தேவையே இல்லாதவர்களைச் சுற்றி அந்தச் செய்தியை நீங்கள் பரப்புவது
கூடாது.
ஞானப்பாதையில் சென்று அதன் முடிவில் உள்ள சத்தியங்களை நாம் அடைய வேண்டும்
எனில் ஸம்த் (மௌனம்) மிகவும் அவசியம்.
2. பொறுமை
(அஸ்-ஸப்ரு)
மௌனமாய் இருத்தலுக்கு அடுத்த நிலையில் உங்களுக்குப் பொறுமை தேவை. எவ்வளவு
முடியுமோ அவ்வளவு பொறுமையாய் இருங்கள். உங்கள் பொறுமையை நீங்கள் மௌனத்தைக்கொண்டு
சோதித்துக்கொள்ளலாம்.
மௌனமாய் இருத்தல் பொறுமையின் ஓர் அடையாளம். ஏனெனில், எல்லோரும் பேசவே
விரும்புகிறார்கள். ஒவ்வொருவரும் பேசுகின்ற பேச்சரங்க நிகழ்ச்சிகளை (Talk Shows)
நீங்கள் பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள். அவை எல்லாம் துருக்கி நாட்டின் ”ஹமாம்”
(பொதுக் குளியலறை) போன்றவை. அல்லது, அத்தனை உறுப்பினர்களும் ஏககாலத்தில் பேசும்
பாராளுமன்றம் போன்றவை. அவர்கள் எல்லோருமே பேசுகிறார்கள். ஒருவரும் மௌனமாய்
இருப்பதில்ல. கொஞ்சமேனும் மௌனமாய் இருந்தால் விஷயம் புரியும். ஆனால், “இது ஓர்
பொதுக் குளியலறை! எங்கள் எல்லோருக்குமே உரிமை உண்டு!” என்று அவர்கள் வாதாடுவது
போலிருக்கிறது அவர்களின் பேச்சு. போகட்டும். மௌனம் உங்களுக்குப் பொறுமையைத்
தருகிறது.
எனவேதான் நாம் மீண்டும் மீண்டும் கழுதையை உதாரணம் காட்டுகிறோம். அது எப்படி
எப்போதும் பொறுமையாக இருக்கிறது என்று! கழுதை ஒருபோதும் மறுப்புச் சொல்வதில்லை.
அதன் மீது மிகவும் பாரமான சுமையை வைத்தாலும்கூட அது வெகுதூரம் செல்கிறது. “எனக்கு
வலிக்கிறதே” என்று அலறாமல் சாய்கிறது. அது பேசி எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?
நீங்கள் நீண்ட தூரம் செல்ல மௌனம் மிகவும் அவசியம். மௌனமாய் இருந்து
கேளுங்கள்.
3.
தனிமை (அல்-உஸ்லா)
உங்கள் தொழிலை அல்லது சமூகத்தை விட்டு நீங்கள் தனிமைப்பட முடியாது. நீங்கள்
ஓடிப்போகவும் முடியாது. ஆனால், உங்களுக்குத் தேவையில்லாத விஷயங்களை விட்டும்
நீங்கள் விலகிச் செல்வதே ஆன்மிகம் உங்களிடம் எதிர்பார்க்கும் தனிமை ஆகும்.
அதன் அர்த்தம் என்னவெனில், நீங்கள் உங்களிடமே மும்முரமாக (’பிசி’)
இருங்கள்!
இருநூறு பேர் கொண்ட ஒரு சபையில் நீங்கள் அமர்ந்திருந்த போதும் உங்களைத்
தணிக்கை செய்தபடித் தனித்திருங்கள்.
தனிமை என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. உங்களைச் சுற்றி நடப்பவற்றை
தியானத்துடன் கவனித்துக்கொண்டிருப்பது. அல்லது, அதையும் தாண்டி, நபி (ஸல்) அவர்கள்
சொல்வது போல், ”ஒரு மணிநேரம் இறைவனை ஆழ்ந்து சிந்தித்தல் என்பது எழுபது வருட வணக்க
வழிபாடுகளை விடவும் சிறந்தது” (தஃபக்கரு சாஅத்தன் ஃகைரும் மின் இபாதத்தி சப்ஈன
சனா).
4.
விழிப்பு (அஸ்-ஸஹ்ரு)
குறைவாக உறங்குவது உங்களின் வழிபாடுகளை அதிகப்படுத்தும். இங்கே, அஸ்-ஸஹ்ரு
என்பது சத்தியங்களைத் தேடுகின்ற பாதையில் விழிப்புடன் இருப்பதைக் குறிக்கும். ஏனெனில்
சத்தியம் எப்போது திறக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது.
சில நேரங்களில் இரவில் நீங்கள் வானத்தை நோக்கும்போது அதில் நிறைய
விண்மீன்களைப் பார்க்கிறீர்கள். நீங்கள் தெற்கு நோக்கி நகர்ந்தால் இன்னும் அதிகமான
விண்மீன்களைக் காண்பீர்கள். இதனை விளக்கிச் சொல்ல நமக்கு ஒரு வானியல் வல்லுநர்
தேவை.
நீங்கள் வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, எந்தத் தருணத்தில்
நீங்கள் ஒரு வீழும் விண்மீனைப் பார்ப்பீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது.
எப்போதுமே விழிப்புடன் இருந்து, விண்மீன் வீழ்ச்சி நிகழ்வதைக் காணவும், அதனைப்
படம் பிடிக்கவும் காத்திருக்கின்ற வானியலாளர் போல் நீங்களும் புத்திசாலிகளாக
இருந்தால் அதனை நீங்கள் தவரவிட மாட்டீர்கள்.
இரவும் பகலும் நம் வாழ்வின் வழியே எண்ண முடியாத பேருண்மைகள் கடந்து
போய்க்கொண்டிருக்கின்றன. நாம் விழிப்புடன் இல்லாததால் நமக்கு அவற்றைப் பற்றிய
சுரணையே இல்லை. விழித்தெழு. உன் மனதைத் திற. உன்னைச் சுற்றிலும் உண்மைகள்
இருப்பதைக் காண்பாய்!
No comments:
Post a Comment