ஜிப்ரீல் ஃபுஆத்
ஹத்தாத்
தமிழாக்கம் : ரமீஸ் பிலாலி
imaam shaafi dargah, cairo, egypt.
போதிய மார்க்க
அறிவு ஒருவருக்கு இருக்கும் எனில் அவருக்கு சூஃபித்துவத்தை இமாம் ஷாஃபி (ரஹ்...)
பரிந்துரைத்தார்கள்.
தமது ’தீவான்’-இல்
(கவிதைத் தொகுப்பில்) அவர்கள் அறிவித்தார்கள்:
”மார்க்கச்
சட்ட அறிஞராகவும் சூஃபியாகவும் இரு
இரண்டில்
ஒன்றாக மட்டும் அல்ல.
நிச்சயமாக,
அல்லாஹ்வின் பொருட்டு
உனக்குச்
சொல்கிறேன் இதை.
முன்னவர்
இறுகிப்போனவர்
அவரின்
இதயம் பக்தியைச் சுவைப்பதில்லை
பின்னவரோ
அறிவிலி
அவரிடமிருந்து எந்த நன்மையுமில்லை”
(ஃபகீஹன்வ்வ
சூஃபிய்யன் ஃபகுன் லைச வாஹிதன் / ஃப இன்னீ வ ஹக்கில்லாஹி இய்யாக்க அன்ஸஹு /
ஃபதாலிக காஸின் லம் யதுக் கல்புஹு துகன் / வஹாதா ஜஹூலுன் கைஃப துல்ஜஹ்லி யஸ்லுஹு –
அஷ்ஷாஃபி, தீவான், பாடல்:45)
இது இமாம்
சூஃப்யானுத் தவ்ரி (ரஹ்...) சொன்னதற்கு ஒப்பாக இருக்கிறது:
”மக்களில் மிகவும்
சிறந்தவர் மார்க்கச் சட்டத்தைக் கற்றுள்ள சூஃபியே” (அல்-ஹரவி அல்-அன்சாரி அவர்கள்
தமது ‘தபக்காத்துஸ் சூஃபிய்யா’ என்னும் நூலில் காடியுள்ள மேற்கோள்.)
சூஃபித்துவம் மற்றும் சூஃபிகள் பற்றி இமாம்
ஷாஃபி (ரஹ்...) அவர்கள் சொன்னவை:
”பத்து ஆண்டுகள்
நான் சூஃபிகளின் உடனிருந்தேன். அவர்களிடமிருந்து இரண்டு கருத்துக்களை எனக்குப்
பயனுள்ளதாக அடைந்துகொண்டேன்:
’நேரம் ஒரு வாள்:
நீ அதை வெட்டாவிட்டால் அது உன்னை வெட்டும்’
‘இழப்பே
பாதுகாப்பு’
(குறிப்பு: இமாம்
அல்-பைஹகீ அவர்களின் ’மனாகிபுஷ் ஷாஃபீ’ (2:208); இப்னுல் கய்யிம் அவர்களின்
‘மதாரிஜுஸ் சாலிகீன்’ (3:128) மற்றும் ‘அல்-ஜவாபுல் காஃபி’ (பக்.208-209);
அல்-சுயூத்தி அவர்களின் ’தஃயீதுல் ஹகீக்கத்துல் அலிய்யா’ (ப.15)).
சில பிரதிகள்
‘மூன்று கருத்துக்கள்’ என்று குறிப்பிட்டு இன்னொரு கருத்தினையும் தருகின்றன:
”உன் மனதை நீ
சத்தியத்துடன் ஈடுபடுத்தி வைக்கவில்லை எனில் அது உன்னை பொய்மையுடன் ஈடுபடுத்தி
வைக்கும்”
இமாம் ஷாஃபி (ரஹ்...) அவர்கள் சொன்னார்கள்:
“ஒரு பகுத்திறிவாளி சூஃபி ஆகவில்லை எனில் அவனொரு மூடனாகவே அன்றி நண்பகலை
அடைவதில்லை!” (யூனுஸ் இப்னு அப்துல் அஃலா அவர்களின் அறிவிப்பாக ‘ஹில்யா’ என்னும்
நூலில் அபூ நுஐம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்)
இந்த மேற்கோளுக்கு அப்படியே முரணாகவுள்ள
பிரதியும் இருக்கிறது: “ஒரு முட்டாளாக நண்பகலை அடைபவனாகவே அன்றி ஒரு பகுத்தறிவாளி
சூஃபி ஆவதில்லை!” (அல்-பைஹகீ அவர்களின் ‘மனாகிப்’ (2:207); இப்னுல் ஜவ்ஸியின்
‘சிஃபாத்துஸ் ஸஃப்வா’ (1:25) மற்றும் ’தல்பீஸ் இப்லீஸ்’ (1985 பதிப்பு, ப.447);
இப்னு தைமிய்யாவின் ’இஸ்திகாமா’ (ப.414))
[ஜிப்ரீல் ஹத்தாத் அவர்களின் குறிப்பு:
இமாம் பைஹகீ அவர்கள் இதனை அல்-ஹாகிமிடமிருந்தும், அவர் அபூ முஹம்மது ஜாஃபரிப்னு
முஹம்மதிப்னுல் ஹாரிஸிடமிருந்தும், அவர் அல்-ஹசனிப்னு முஹம்மதிப்னுல் தஹ்ஹாக்
(இப்னு பஹ்ரு)விடமிருந்தும் அறிவிக்கிறார்கள். இந்தக் கடைசி இரண்டு நபர்கள்
நம்பகமானோர் அல்லர். மேற்சொன்ன இரண்டு பிரதிகளில் இந்த இரண்டாம் பிரதியே சூஃபிகளை
எதிர்ப்போரால் தேர்ந்தெடுக்கப்படுவதில் வியப்பில்லை]
[தமிழ்ப்
பெயர்ப்பாளன் ரமீஸ் பிலாலி எழுதும் விளக்கம்: நண்பகல் என்று இமாம் ஷாஃபி அவர்கள்
குறியீடாக ஒரு மனிதனின் நடுத்தர வயதை, குறிப்பாக நாற்பது என்னும் அகவையைக்
குறிப்பிடுகிறார்கள். அப்படி அர்த்தப்படுத்திக் கொண்டால் இருபது வயதில்
பகுத்தறிவாளியாக இருக்குமொருவன் நாற்பது வயதில் சூஃபியாகவில்லை எனில் அவனொரு
முட்டாளாகத்தான் இருப்பான் என்று முதல் பிரதி மேற்கோளைப் புரிந்துகொள்ளலாம். இது
எப்படி எனில், ’இருபது வயதில் ஒருவன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை எனில் அவனின் அறிவில்
குறைபாடு உள்ளது; நாற்பது வயதிலும் ஒருவன் கம்யூனிஸ்ட்டாகவே இருக்கிறான் எனில்
அவனின் அறிவில் குறைபாடு உள்ளது!’ என்று சொல்லப்படுவதைப் போன்றது (இதனை பல
ஆண்டுகட்கு முன்பு ஒரு பேட்டியில் முஸ்லிம் லீகின் இன்றைய தேசியத் தலைவர்
கே.எம்.காதர் மொய்தீன் அவர்கள் சொல்லக்கேட்டேன்.)
இரண்டாம் பிரதி
மேற்கோளை நான் இப்படிப் புரிந்து கொள்கிறேன்: அதாவது, ஒரு மனிதன் சராசரி அறிவு
கொண்ட பொது மக்களின் பார்வையில் பெரிய பகுத்தறிவாளனாக இருக்கலாம். ஆனால், அவன்
சூஃபி ஆகிவிட்டான் எனில் அவனது அறிவின் உயர்வை அல்லது ஆழத்தை அந்தப் பொது மக்கள்
கிரகிக்க இயலாமையால அவனது பேச்சு அவர்களுக்குக் குழப்பமாகவும் உளறல் போன்றும்
அல்லது இன்னும் அபாயமாக, அவனது பேச்சு மார்க்கத்திற்கு எதிரானதாகத் தோன்றவே
அவர்கள் அவனொரு மூடனாகிவிட்டான் என்று கருதுவார்கள். ஆனால் அந்த சூஃபியோ இறைவனின்
உவப்புக்குரிய இறைநேசராக இருப்பார் என்பதாகும்.]
இமாம் நவவி
(ரஹ்...) அவர்கள் எழுதிய ஒரு நூலின் பெயர் “பூஸ்தானுல் ஆரிஃபீன் ஃபிஸ்-ஸுஹ்து வத்
தஸவ்வுஃப்” (”துறவு மற்றும் சூஃபித்துவம் ஆகியவற்றை அறிந்த ஞானிகளின்
பழத்தோட்டம்”). அந்நூலில் இடம்பெற்றுள்ள, இமாம் ஷாஃபி (ரஹ்...) அவர்களின் கருத்து:
“அகத்தூய்மையாளர்கள் (அல்-முஃக்லிஸ்) மட்டுமே முகஸ்துதி (அல்-ரியா) என்பதைக்
கண்டறிய முடியும்” [தமிழ்ப் பெயர்ப்பாளனின் குறிப்பு: ஸுஹ்து என்பது
சூஃபித்துவத்தில் ஒரு முக்கியமான பண்பாகும். அது இங்கே தமிழில் துறவு என்று கொடுக்கப்பட்டுள்ளது.
இது இல்லற வாழ்வைத் துறந்துவிடும் நிலை அல்ல. அந்நிலைக்கு அறபியில் ரஹ்பானிய்யத்
என்று பெயர். அதற்கு இஸ்லாமில் இடமில்லை. ‘லா ரஹ்பானிய்யத் ஃபில் இஸ்லாம்’
(இஸ்லாமில் துறவு என்பதில்லை) என்று நபிகள் நாயகம் குறிப்பிடுவது அதனையே. ஸுஹ்து
என்பது இல்லறத்தில் இருந்தபடியே உலக ஆசைகளை மனதை விட்டும் நீக்கிவிடுவதும், ’போதும்
என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்று தமிழ் முதுமொழி சொல்வதுபோல், தேவைக்கு
அதிகமாக உலகில் எப்பொருளையும் அடையாதிருப்பதும் ஆகும்].
இமாம் நவவி
(ரஹ்...) அவர்கள் இதற்குத் தரும் விளக்கம்: “இதன் அர்த்தம் என்னவெனில்,
அகத்தூய்மையை உண்மையாகவே தீவிரமாக நாடுகின்ற (அராத) ஒருவரை அன்றி வேறு எவராலும்
முகஸ்துதியின் உண்மையான நிலையையும் அதன் மறைவான நிழல்களையும் கண்டறிய முடியாது என்பதுதான்.
அகத்தூய்மையைத் தீவிரமாக நாடுபவர் நெடுங்காலம் முயல்கிறார், தேடுகிறார்,
தியானிக்கிறார், தன்னுள் மிக நெடிய சோதனைகள் செய்கிறார். பிறகே அவர் முகஸ்துதியை
அறிகிறார், அல்லது அதனைப் பற்றிக் கொஞ்சமாவது அறிவு உண்டாகிறது. இது எல்லோருக்கும்
நிகழ்வதில்லை. சொல்வதெனில், இது சிறப்பானவர்களுக்கு (அல்-ஃகவாஸ்) மட்டுமே
நிகழ்கிறது. ஆனால், யாரேனும் ஒருவன் தனக்கு முகஸ்துதி என்றால் என்னவென்று
முழுமையாகத் தெரியும் என்று பீற்றுவானே எனில் அது அவனது அறியாமையே அன்றி வேறில்லை”
(நூல்: ‘பூஸ்தானுல் ஆரிஃபீன்’, பக்.53-54).
மக்கா நகரிலிருந்தபோது
இமாம் ஷாஃபி (ரஹ்…) அவர்கள் ஃபுளைலிப்னு இயாத் (ரஹ்…) அவர்களின் மாணவராக
இருந்தார்கள். அவர்கள், ஆடு மேய்க்கும் இடையராகவும் துறவியாகவுமிருந்த ஷைபான்
அல்-ராயீ அவர்களிடம் சூஃபித்துவத்தில் தீட்சை பெற்றிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அந்த குருவைப் பற்றி அதிகமாக அறியப்படவில்லை. அவர்களிருவரும் சந்தித்துக்கொண்டது
பற்றி எக்குறிப்புமில்லை. ஷைபான் அவர்கள் தன்னுடன் சேர்ந்து நடந்தே ஹஜ் யாத்திரை
சென்றதாகவும் அப்போது அவர்கள் சிங்கம் ஒன்றைப் பழக்கி அதன் காதைப் பிடித்துத்
திருவியதைத் தான் பார்த்ததாகவும் சுஃப்யானுத் தவ்ரி (ரஹ்...) அறிவிக்கிறார்கள்.
(அபூ நுஐமின் ‘ஹில்யா’ (1985 பதிப்பு 7:68-69). இந்நூலில் அவர் நிகழ்த்திய பிற
அற்புதங்கள் (கராமாத்) பற்றிய பதிவுகளும் உள்ளன; அத்தஹபியின் சியர் (7:203)).
அல்லாஹ் அவர்கள் மீது கருணை புரிவானாக, அவர்களைப் பொருந்திக்
கொள்வானாக!
No comments:
Post a Comment