Wednesday, February 14, 2018

ஷைக் நஜீம் ஹக்கானி



தமிழில் : ரமீஸ் பிலாலி


















ஆன்மிக ராக்கெட்
பக்குவமடையாத ஒரு நபருக்கு ஆன்மிக சக்தி வழங்கப்பட்டால் அவர் தன் மீதும் பிறர் மீதும் நாசத்தைக் கொண்டு வந்துவிடுவார்.
வீரர்கள் ஆரோகணித்து பவனி வரும் பெரிய குதிரைகளை ஒரு சிறுவன் பார்த்து வியப்படையலாம். ஆனால், அப்படிப்பட்டதொரு குதிரை மீது நாம் அவனை ஏற்றிவிட்டால், அதனை அவனால் கட்டுப்படுத்த முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
சில நேரங்களில், ஒரு தந்தை தன் குறுமகனைத் தனது மடிமீது வைத்துக்கொண்டு குதிரை சவாரி செய்து அவனுக்கு வேடிக்கை காட்டிக்கொண்டு நகர வீதிகளில் செல்லலாம். அந்தத் தந்தை தன் மகனை உண்மையாகவே குதிரையை ஓட்ட விடுவதாகச் சொல்வீர்களா?
தங்கள் தன்முனைப்பை (Ego) அடக்கிவிட்டவர்களுக்கு மட்டுமே யாதொரு அதிகாரமும் தரப்பட முடியும்.
மீண்டும் மீண்டும் பல முறை அதன் பாகங்களின் செயல்பாடுகள் சோதிக்கப்பட்டுச் சரி காணாத வரை ராக்கெட் ஏவப்படுவதில்லை.
தனது விண்ணுலக இலக்கை நோக்கிய ஒவ்வொரு ஆன்மாவின் பயணமும் ராக்கெட் ஏவுதலை விட மிகவும் முக்கியமான விஷயமாகும்.
எனவே, மாபெரும் குருமார்கள் தமது சீடர்களுக்கு அவ்வளவு எளிதில் அதிகாரம் தந்துவிடுவார்கள் என்று எண்ணவேண்டாம்.



















குருவின் தேவை
சத்தியப் பரம்பொருளின் பிரசன்னத்தில் தன்முனைப்பு தனது எதிர்ப்பில் தலை தூக்குகிறது. நாம் அதனைக் கீழே வீழ்த்த வேண்டும்.
அது மிகவும் நுட்பமான பணி, அறுவை சிகிச்சையைப் போல.
கசாப்புக்காரன் கறி வெட்டலாம். ஆனால் அவனால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது.
கசாப்புக்காரனிடமும் கத்தி இருக்கிறது; மருத்துவரிடமும் கத்தி இருக்கிறது. ஆனால், அவ்விரு கருவிகளுக்கிடையே எவ்வளவு பெரிய வேறுபாடு!
ஒன்று பலிகொடுக்கப் பயன்படுகிறது. இன்னொன்று வாழ்வை நீளச் செய்ய.
மேலும், அனைவரும் அறிந்ததுதான், மருத்துவ நூற்களைப் படிப்பதால் மட்டுமே ஒருவர் தகுதி பெற்ற மருத்துவராக உருவாகிவிட முடியாது. ஆனால் ஒரு தேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணருடன் ஒரு மாணவனாக இருந்தால் மட்டுமே அப்படி உருவாக முடியும்.



















நம் வாசற்கதவு
நபிகள் நாயகத்திற்கு அருளப்பட்ட புனித வசனங்களில் ஒன்று:
”நிச்சயமாக, நாம் ஆதமின் சந்ததியை கண்ணியப்படுத்தினோம்” (குர்ஆன்:17:70)
      பன்மையில் ஏகத்தின் இருப்பைப் புரிந்து கொள்வதே இது.
      எல்லாம் வல்ல அல்லாஹ் தனது அடியார்கள் அனைவருக்கும் தனது கதவுகளைத் திறப்பதால் நாமும் நமது ரட்சகனின் அடியார்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்கிறோம்.
      தமது தாகத்தைத் தனிப்பதற்காக ஊற்றுக்கு வருவோரை குறுக்கு விசாரனை செய்வதிலேயே தம் வாழ்நாளைக் கழித்துவிடும் மதவாதிகள் அல்லர் நாம்.
      இதுவே நமது மூத்த குருநாதர் சொன்னது: “நான் ஆதமின் மக்கள் அனைவருக்குமான வழக்கறிஞன்.”
      யாரேனும் நமது வாசலுக்கு வந்தால், அவரை அனுப்பியவன் யாரென்று நாம் அறிவோம். எனவே நாம் மறுப்பதில்லை.     

No comments:

Post a Comment