1:151-153
ரொட்டியும் புகழ்ச்சியும்
அப்போதுதான் நான் உண்டு முடித்த ரொட்டியைப் பற்றியும் பருகி முடித்த
நீரைப் பற்றியும் சிந்தித்துக்கொண்டிருந்தேன். இந்த அகச்செய்தி வந்தது: ஒவ்வொரு ரொட்டித்
துண்டுக்கும் கனிச்சுவைக்கும் ஒரு நாவும் புகழ்ச்சி மொழியும் உள்ளது. மனித உடலினுள்
நுழைந்தவுடன் அது கட்டவிழ்கிறது.
விண்மீன்களில் இருந்து வரும் தாக்கங்களுக்கும் நிலம் வளி விண் தீ நீர்
என்னும் ஐம்பூதங்களாக மாற்றமுறும் பருப்பொருளுக்கும் இந்த மடைமாற்ற உவமை நீளும். அவை
அடுத்தக் கட்டத்தில் செடிகளாகின்றன. செடிகள் விலங்குகளாகின்றன. பின்னர் அவை மொழிப்புலம்
சிறந்த மனிதர்களாகி, இறைவனின் கருணைக்கும் கோபத்திற்குமான புகழ்ச்சியாகவே ஆகின்றன.
இம்மர்மத்தின் அம்சங்களைச் சுமந்தபடி ரொட்டியும் நீரும் கரைந்து எனது
அங்கங்களில் நகர்ந்து செல்வதைக் கண்டேன். அவை எல்லாம் பேசும் ஆற்றல் கொண்ட பூக்கள்.
அவை சாட்சி பகர்கின்றன: ”அவனின் புகழைக் கொண்டு துதிக்காத பொருள் எதுவுமில்லை”
(17:44).
எனது நுண்ணறிவும் நினைவும், இருத்தலைத் தாங்கித் தூண்டுகின்ற, மறைகளை
வழங்குகின்ற மர்மத்தின் கைகளில் உள்ள மலர்கள் என்பதால், காதலின் சுவையையும் விரிதலின்
சுகங்களையும் உணர்த்துதற்கு நூற்களின் வடிவில் எனக்கு ஞானத்தை வழங்குமாறு நான் வேண்டுகிறேன்.
இவ்வெழுத்துக்களை ஒதுக்கிவிடாதே. ஆதம் நபியின் புறத்தோற்றத்தை மட்டுமே வீழ்ந்துபட்ட
ஷைத்தான் கண்டான். அவரின் சுயத்தை அவன் காணவில்லை. இந்த மெருகற்ற சொற்களுக்குள்ளே ரகசியங்கள்
இருக்கின்றன. அவற்றைத் தவறவிடாதே.
1:168-169
வெறுமையின் இந்த மகத்துவம்
இன்ப துன்பத்தின், உள்ளமை இல்லமையின் ஊற்றுக்கண் எங்கே? வெறுமையை நோக்கி
அப்பக்கம் இழுக்கின்ற ஒன்று இல்லாமல் எதுவும் திருப்தி தருகின்றதா என்ன? இது நம்மிடம்
இல்லையோ அதையே வேண்டுகிறோம். எதுவுமற்றதான ஒரு புலத்திலிருந்தே நித்தியம், ஞானம், நிலைத்த
வாழ்வு, பெண்களின் அழகு, அங்கீகாரம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான நமது ஏக்கங்களைத்
தீர்க்கும் மருந்து வருகின்றது.
வெறுமையில் நீ அங்கே இருக்கின்றாய். உன் பண்புகளில் நான் என்னை அழித்துக்கொள்கிறேன்.
காலம் இடம் என்பவற்றுக்கப்பால் பிரக்ஞை கரைந்துபோகிறது. வளர்தலையும் தளர்தலையும் நான்
அவதானிக்கிறேன். வெறுமையின் இந்த மகத்துவத்தில் நான் எங்கே வாழ்வேன்? இறங்குமிடம் ஏதுமில்லை.
1:172-173
ஒரு மணி நேரம்
அலிஃப் லாம் மீம்
”நான்”
என்னும் பொருளில் இறைவன் ”நாம்” என்று சொல்லும்போது நான் கூறும் எந்தவொரு பிரதிப்பெயரும்
மேலோட்டமாகிறது. பதவிப்பெயர்கள் இதழ்களாய் உதிர்கின்றன. ஞானம் வருகிறது. என்னுள் அப்படியொரு
ஆனந்த வெள்ளப் பெருக்கினை நான் உணர்கிறேன், அதன் கவனத்தை இழந்துவிடுவேன் போலும். எனக்கே
நான் சொல்லிக்கொள்கிறேன், காதலனும் காதலியும் காதலிப்பதன் பல்வேறு வழிமுறைகளும் எல்லாம்
எப்படி ஒரே பொருளாய் இருக்கின்றன என்று விசாரிக்கிறேன்.
இறைப்பண்புகளும் மனிதர்களும் அப்படி என்பது போல், காதலிலும் ஓர் ஒருமை
உள்ளது. இதயத்தில் வேறுபாடுகளுக்கு இடமில்லை. ஏகத்துவமும் காதலியும் மட்டுமே. அந்த
பிரசன்னத்தில் ஒரு மணி நேரம் இருப்பதற்காக நான் எனது நூற்கள், நிலங்கள், நற்பெயர்கள்,
ஒழுக்கங்கள் அனைத்தையும் இழந்துவிடச் சம்மதிப்பேன்.
1:174-175
வியக்கும் வாதம்
இப்படித்தான் முஹம்மதிடம் இறைவன் பேசினான், ”நிச்சயமாக, தெளிவான வெற்றியாக
உமக்கு வெற்றியளித்தோம்” (48:1). அவர்களுக்கிடையில் சகவாசம் இருந்தது, ”இவ்வேதத்தை
நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்” (4:105) என்றும், “நாம் உம் நெஞ்சத்தை உமக்காக
விரிவாக்கவில்லையா?” (94:1) என்றும். அவர்களிருவரும் நண்பர்களைப் போல் உரையாடினர்.
வேறு எவருக்கேனும் அத்தகைய அனுபவம் வாய்த்ததுண்டா? தெய்வீக ரகசியம் என்பது ஒவ்வொன்றின்
ஒவ்வொருவரின் பகுதி என்பதால் ஒவ்வொருவருள்ளும் அத்தகைய நெருக்கம் இருக்கத்தானே வேண்டும்?
இந்த வியக்கும் வாதத்திற்கு விடை ஒன்று வந்தது. ஒவ்வொரு ஆன்மாவுக்கும்
தனித்தன்மையான வழியுண்டு. ஒருவரின் கையில் வேதனை தரப்படுகிறது. இன்னொன்றில் காதல்,
இன்னொன்றில் காமம். கடுந்தண்டனைகளை ஒருவர் கடந்தாக வேண்டியுள்ளது. இன்னொருவருக்கோ மிதமிஞ்சிய
அரவணைப்பு.
ஆனால், தீர்க்கதரிசிகளுடன் இறைவன் கொண்டுள்ள உறவு வேறொரு தளத்தில்
உள்ளது. அதில் அற்புதங்களும் அருளும் மறைவுலகின் காட்சிகளும் வருகின்றன. அத்தளம் காண
ஆசைப்படு. இல்லை எனில் நீ எப்போதுமே இறைவனிடம் உஷ்ணம்-குளிர் பற்றியும், உணவு, சம்பாத்யம்,
உறக்கம், நடை மற்றும் ஞான ரகசியம் பற்றிய பல்வேறு கோட்பாடுகள் பற்றியுமே பேசிக்கொண்டிருப்பாய்.
என் பிரார்த்தனை
இதுதான். நான் உன்னுடன் தனித்திருக்கும்போது அர்ப்பணமான காதலின் இன்பத்தை எனக்கு அனுபவிக்கக்
கொடு. எந்தவொரு ஆசையின் திருப்திக்கும் அப்பால் நானாக அமர்கையில் ஒருங்கிணைவு கொடு.
Mazhar e sharif, Balkh city, Afghanistan.
1:188-189
ஒரே மாதிரியான சில கனவுகள்
இங்கே பல்ஃக் நகரில் ஒரே இரவில் நல்லோர் உயர்ந்தோர் பலரின் கனவில்
தோன்றி முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் எனக்கு வழங்கிய பட்டத்தினை ரத்து செய்ய நீதிபதி
ஒருவர் முயல்கிறார். “ஞானப் பேரரசு”.
இது பற்றி நான் இறைவனிடம் பேசினேன். இந்த நீதிபதிக்கு வேறு உள்நோக்கங்கள்
உள்ளன. அவர் ரகசியக் காமம் கொண்ட மனிதனைப் போல் இருக்கிறார். பெண்களை ரசித்துப் பார்ப்பதை
அவனால் தவிர்க்க முடியவில்லை. எனினும் தான் பார்ப்பது பார்க்கப்படுவதை அவன் விரும்பவில்லை.
இந்த நீதிபதி சில சொத்துக்களை அடைய விரும்புகிறார். அப்படியே எனது நற்பெயரையும் அழிக்க
நினைக்கிறார். தனது சுய நோக்கங்களைக் காண முடியாத ஒருவர் என்ன மாதிரியான இஸ்லாமிய நீதிபதி?
வழக்குகளை முடிவு செய்வதற்கான அவரது சுதந்திரமும் அதிகாரமும் பறிக்கப்பட வேண்டும்.
எவரேனும் அவரது வீட்டினுள் நுழைந்து வெள்ளிக்காசுகளைத் திருட முயன்றால் அவர் மீது ஆயிரம்
குற்றங்கள் சுமத்தி ஒறுத்துவிடுவார். ஒருவேளை அவர் வழக்கில் தோற்றால், இஸ்லாம் காய்ந்து
காற்றிலடித்துப் போய்விட்டது என்று சொல்வார்.
நமது அன்பிற்கினிய ஆத்ம நண்பர்களுக்கு ஒரே மாதிரியான கனவுகள் வந்திருக்கின்றன.
பிரகாசமான முதியவர் ஒருவர் மலைமீது நின்றபடி என்னை அழைக்கிறார், ‘சுல்தானுல் உலமா!
(அறிஞர்களின் பேரரசரே!) வெளியே வாரும். உலகம் உமது ஒளியை அனுபவிக்கட்டும். நீண்ட காலம்
நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டீர்கள். வெளியே வாரும்’.
இங்கொரு நபும்ஸகன் இருக்கிறான். பல குடும்பங்களில் சேவகம் செய்கிறான்.
அக்குடும்பத்தார்கள் எல்லாம் தமது கனவுகளில் முஹம்மது நபி தோன்றி எனக்கு இந்தப் பட்டத்தை
வழங்கியதாகப் பேசிக்கொண்டதை அவன் எனக்குத் தெரிவித்தான். அத்தகு திடீர் வெளிப்பாட்டை
எப்படி ரத்துச் செய்வது? எந்த அதிகாரத்தில்? “பஹாவுட்தீனின் நண்பர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர் அறிஞர்களில் பேரரசர்.” என்று பெரிய சபை ஒன்று முழங்கியதைத் தானே கண்டதாக அவன்
சொன்னான். எதிரிகள் சபிக்கப்பட்டவர்கள் என்பது இதிலிருந்து அர்த்தப்படவில்லையா? இறைவன்
அறிவான். அவன் சிறந்ததைச் செய்து முடிப்பான்.
1:190
உன்னத ஆரோக்கியம்
உன்னத ஆரோக்கிய நிலையில் உள்ளோர்க்கு அருள்கள் எல்லாம் கேளாமலே இலகுவாக
வந்து சேர்கின்றன. ஆனால் நாம் காயம்பட்டுக் குழம்பிப் போனால் அருளை நாம் யாசித்தே ஆகவேண்டும்.
நான் எப்படிச் செயல்படுவேன் எனில், ஆசையின் சொர்க்கத்தையும் அதில்
திளைக்கும் தேவதைகளையும் எனது முழு உடலும் பெற்றுக்கொள்ளும்.
தன் பணியைச் செய்ய படைப்பாற்றலுக்கு ஏதுக்களோ கருவிகளோ தேவையில்லை.
ஆணை ஏதுமின்றி மறுப்பேதுமின்றி, நிகழ்வுகளும் பொருட்களும் மௌனமாகத் தோன்றி மறைகின்றன.
ஒரு கோதுமை மணி மிருதுவாகி அழிகின்றது. பிறகொரு முளை தோன்றி ஒரு புதிய பயிர் வளர்கிறது.
இதுபோன்றே மரங்களும் கனிகளும் உற்பத்தியாகின்றன. இப்போது உன் வாழ்வை யோசி. பழுது நீக்கப்படும்
இன்பத்தின் அதிசயம் நோக்கி நினது தொழுகைகள் வெறுமையாகவும் கந்தலாகவும் எப்படி மேலே
செல்கின்றன என்று யோசி.
1:191-192
நகரங்களும் ஆசீர்வதிக்கப்பட்ட இருளும்
”நாம் பூமியை விரிப்பாக்கவில்லையா?” (78:6). அப்படுக்கையில் நீங்கள்
உமது உடல்களில், உமது முகங்களில் மன்னர்களைப் போல் ஓய்வு கொள்கிறீர். அங்கே மலைகள்
உம்மை ஆடாது பிடித்துள்ளன. அவை வலிய மர முளைகளாக இருக்கின்றன.
நாம் உமக்கு நகரங்களை வழங்கியுள்ளோம், நீவிர் ஜோடியாகத் திளைத்தும்
நட்பு கொண்டும் வாழ்வதற்கு. மேலும், ”நாமே இரவைப் போர்வையாக ஆக்கினோம்” (78:10). அதன்
கீழ் நீங்கள் காத்திருக்கின்றீர், அதன் ஆசீர்வதிக்கப்பட்ட இருளை விட்டும் இன்னொன்றுக்கு
உம்மை நாம் கொண்டு செல்லும் வரை.
Inner Flower - Corinna Carrara.
1:194-195
குருட்டு நம்பிக்கை
இறைவனின் பண்புகளை நான் உணர்கிறேன். குறிப்பாக, கருணையை. இது எப்போதுமே
எனக்கு வேண்டும்.
பதில்: உன் சுயத்தின் அந்தரங்கத்துள்
எனது காதலை எடுத்து வருவோரை மேலும் கூர்ந்து கவனி.
அந்த அருட்சுமப்போரை நான் அவதானிக்கவே செய்கிறேன். இன்பவுணர்வை என்
உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்லும் நுண்ணறிவைப் போன்றவர்கள் அவர்கள்.
ஆனால் நான் உன்னை இன்னும் நேரடியாக உணர விரும்புகிறேன்.
எனது மகத்துவத்தை வெளிப்படுத்தும்
மன்னர்களை கவனி. நீ வெளித் தோற்றத்தை மட்டுமே பார்க்கிறாய், உள் வேலையை அல்ல.
மேலுமொரு விடை வருவதையும் உணர்கிறேன்: விதை நடப்படுவது போன்று உன்னை ஒப்படை. மண்ணுக்குள் மறை, சுவடின்றி. தமது குருட்டு
நம்பிக்கையுடன் காற்றில் கை நீட்டும் கிளைகள் கொண்டு மரம் வளரத் தொடங்குகிறது. நம்புதலில்
இருந்து பெரிய விஷயங்கள் பற்பல வளர்கின்றன.
No comments:
Post a Comment