33
’நகர்ந்து கொண்டிருக்கும் நத்தைக்குத் திடீரென்று பார்வையுடன்
கண்கள் கிடைத்துவிட்டால் என்ன செய்யும்?’ என்று கேட்டார் சூஃபி.
நாங்கள் ஒவ்வொருவரும் யோசிக்கத் தொடங்கினோம். நத்தைக்குக் கண்கள்
இல்லை. எனவே அது பிரபஞ்சத்தை இரட்டைப் பரிமாணமாகவே உணர்ந்து கொண்டு வாழ்கிறது. இரு
பரிமானத்திலேயே நகர்கிறது. அல்லாமா இக்பாலின் “Six Lectures on the Reconstruction
of Religious Thought in Islam” என்னும் நூலில் இக்கருத்து விளக்கப்படுவதை நினைவு கூர்ந்தேன்.
ஒருவேளை அதனால்தான் அது நிதானமாக நகர்கிறதோ என்னவோ? என்று நினைத்துக் கொண்டு பதில்
சொன்னேன், ‘நத்தைக்குக் கண்கள் கிடைத்து விட்டால் அதன் வேகம் அதிகமாகிவிடும்.”
”நிச்சயமாக இல்லை. நத்தை திகைத்து நின்றுவிடும் அன்பர்களே!
”’எங்கே’ இருக்கிறோம்?’ என்றொரு புதிய குழப்பம்
வந்து ஸ்தம்பித்துவிடும். மேலும் இடம் என்பதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல்
தடுமாறும். எங்கே செல்வது என்னும் பிரச்சனை புதிதாக முளைத்துவிடும். அதற்கு விடை தெரியாமல்
முழிக்கும், புதிகாகக் கிடைத்த கண்களை வைத்துக் கொண்டு! இதயத்தில் இரண்டு விழிகள் உண்டல்லவா?
அது சட்டென்று திறந்து கொண்டதும் பக்தன் சிறிது காலத்திற்கு மௌனியாகி விடுகிறான்” என்றார்
சூஃபி.
34
“குர்ஆன் ஓதப்படுகிறது. அதனைச் செவியுறும் நீங்கள் யாரை நினைவு
கூர்வீர்கள்?” என்று கேட்டார் சூஃபி.
இதற்கென்ன கேள்வி? என்பது போல் எண்ணினேன். ”அல்லாஹ்வைத்தான்
நினைவு கூர்வோம்” என்று எங்களில் சிலர் பதில் சொன்னோம். மௌனமாக இருந்தவர்களின் பதிலும்
அதுதான். அவர்கள் ஆமோதித்துத் தலையாட்டினார்கள்.
“அதாவது, குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வேதம். அவனின் பேச்சு
– கலாம். எனவே அதனைச் செவியுறும்போது அவனின் நினைவு வருகிறது. சரி. மற்ற ஒலிகளில் ஓசைகளில்
அவனை நீங்கள் நினைவு கூர்வதில்லை அல்லவா? ஆனால், ஒலிகளுக்கெல்லாம் ஆதாரமாக இருப்பதே
அவனின் சிஃபத்தெ கலாம் என்னும் தெய்விகப் பண்புதான் அல்லவா? ஒலிகளுக்குள் அவனின் குரலைக்
கேட்க வேண்டும் எனில் வேறு இரு செவிகள் வேண்டும்.
’இறைவா!
உன் நினைவிற்காக
என் இதயத்தின்
செவிகளைத்
திறந்திடுவாயாக!’
என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள் (அல்லாஹும்
மஃப்தஹ் மசாமிஅ கல்பீ லிதிக்ரிக்).
இந்த அனுபவத்தில் ஆழ்ந்திருந்த ஒரு நேரத்தில்தான் தெருவில் நாய்
ஒன்று குரைத்த போது அபூயஜீத் பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் சட்டென்று ‘லப்பைக்க’ – ‘உனக்குச்
செவிசாய்த்தேன்’ என்று பரவத்தில் கூறினார்கள்.
இதயத்தின் செவிகள் திறந்துவிட்டால் கேட்கும் மொழிகளில் எல்லாம்,
ஒலிகளில் எல்லாம் உள்ளுறையும் இறைநாதம் கேட்கும்” என்றார் சூஃபி.
அருமை
ReplyDeleteNandraga ullathu.
ReplyDelete