19
இறைஞானி பிலாலி ஷாஹ் ஜுஹூரி அவர்களின் ஆன்மிக உரையைக் கேட்டுக்
கொண்டிருந்தோம். வாழ்வில் அன்றாடம் நாம் காணும் இயல்பான நிகழ்வுகளை எடுத்துச் சொல்லி
அவற்றைக் கொண்டே இறைவனை நாம் விளங்கிக் கொள்ளும் வகையில் தத்துவங்களை விளக்கிக் கொண்டிருந்தார்கள்
மகான் அவர்கள். ஒரு கட்டத்தில் பின்வருமாறு பேசினார்கள்:
“பாம்பினை வைத்துத் தெருவில் வித்தை காட்டுபவனைப் பார்த்திருக்கிறேன்.
அவன் மகுடி வாசிப்பான். படமெடுத்து நிற்கும் நாகம் தலையசைத்து ஆடும்.
பாம்பும் மனிதனும் பகைவர்கள் அல்லவா? இது அவனைக் கடித்துக் கொல்லும்.
அவன்
இதனை அடித்துக் கொல்வான்.
ஆனால் இங்கே என்ன நடக்கிறது? பாம்பு, நடனம் ஆடி அவனுக்குக் காசு
சம்பாதித்துத் தருகிறது. பதிலுக்கு அவன், அதற்குப் பாலும் முட்டையும் வாங்கி ஆகாரம்
வைக்கிறான்.
ஒருவருக்கொருவர் உயிரை எடுப்பார்கள் என்னும் பகைவர்களை ஒருவருக்கொருவர்
வாழ்க்கைக்கு உதவி செய்பவர்களாக ஆக்கி வைக்கிறான் அல்லாஹ்.
தெரிந்து கொள்ளுங்கள், அல்லாஹ் உங்களுக்கு நன்மை செய்ய நாடினால்
உங்கள் எதிரியை வைத்துக்கூட உங்களுக்கு நன்மை செய்துவிடுவான். உங்களுக்குத் தீமை நிகழ
வேண்டும் என்று அவன் நாடிவிட்டால் உங்களின் நண்பர்களை வைத்துக்கூட உங்களுக்குத் தீமைகள்
நிகழ வைப்பான்.”
இந்த விளக்கத்தைப் பற்றி அலசிப் பேசிக் கொண்டிருந்தோம். மகானின்
தத்துவங்கள் மேலும் துலங்கிக் கொண்டிருந்தது.
“சில நேரங்களில் நம்மைக் கொண்டே நமக்குத் துன்பங்கள் நேரும்படியும்
ஆகிவிடுகிறது. தன்னை மறந்து ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் நம் பல்லே நம்
நாக்கை நறுக்கென்று கடித்துக் காயப்படுத்தி வலியால் நாம் துடிப்பது உண்டல்லவா?” என்றார்
சூஃபி.
20
காணக் கண் கோடி வேண்டும் கஃபாவை…
ஆதி இறையில்லத்தின் காட்சிப் பரவசத்தைப் பறைசாற்றும் பாடல் ஒலித்துக்
கொண்டிருந்தது. அவரவரின் புனிதப் பயண அனுபவங்களை நண்பர்கள் பகிர்ந்து
கொண்டார்கள்.
“கஃபாவை மட்டுமல்ல. இதோ, பாசி படர்ந்திருக்கும் இந்தப் பழைய
ஈரச் சுவரின் மீது, லேசான விரிசலில் வேர்விட்டு இறைவனைத் துதித்தபடி நிற்கின்ற இந்தப்
புல்லின் இதழைக் காணவும் கோடிக் கண்கள் வேண்டும்தான்.
சொல்லப் போனால், அகப்பார்வை இல்லாத கோடிக் கண்களால் என்ன பயன்?
சிலந்தியின்
எட்டுக் கண்கள்
வெட்டுக்
கிளியின் பட்டுக் கண்கள்
எறும்பின்
கலவைக் கண்கள்
பூனையின்
சலவைக் கண்கள்
ஆந்தையின்
பெரிய கண்கள்
யானையின்
சிறிய கண்கள்
இவற்றினும்
மனிதக் கண்கள்
எப்போது புனிதக் கண்கள்?
”புறக்கண்கள் அந்தப் பேரரசனைக் காணவியலும்
எனில்
மாடுகளும் கழுதைகளும் அல்லாஹ்வை தரிசிக்குமே”
(கர் பதீதி ஹிஸ்ஸெ ஹைவான் ஷாஹ் ரா
பஸ் பதீதி காவோ ஃகர் அல்லாஹ் ரா)
என்று மௌலானா ரூமி (ரஹ்) பாடுகிறார்கள்.
அகப்பார்வை இல்லாத ஆயிரம் கண்களை விடவும் அகப்பார்வை கொண்ட ஒற்றைக்
கண் மேலானது” என்றார் சூஃபி.
21
“உங்களில் இறந்தவர்கள் மீது யாசீனை ஓதுங்கள்” (இக்ரஉ யாசீன் அலா மவ்த்தாக்கும்) என்பது நபி(ஸல்)
அவர்களின் அருள்மொழி.
திருக்குர்ஆனின் 36-வது அத்தியாயமாக இருப்பது சூறத்துல் யாசீன்.
‘குர்ஆனின் இதயம்’ என்று அதனை நபி(ஸல்) அவர்கள் வருணித்தார்கள். அதனை ஓதி இறந்து போனவர்களின்
ஆன்மாக்களுக்கு அதன் நன்மைகளைச் சேர்ப்பதை இந்த நபிமொழி ஊக்கப்படுத்துகிறது.
”இந்த நபிமொழியில் இன்னொரு சமிக்ஞையும்
இருக்கிறது. அதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதாவது ஹள்ரத் அலீ (ரலி) அவர்கள் ‘நான்
பேசும் குர்ஆன்’ (அனா குர்ஆனுன் நாத்திக்) என்று தன்னைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.
அலிஃப் என்னும் ஒற்றை எழுத்தின் அகமியங்களை ஒரு நாள் முழுவதும் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.
அப்படியாக, குர்ஆனின் ஞானம் கொடுக்கப்பட்டவர்கள் எவரோ அவரே நடமாடும் குர்ஆன் ஆவார்.
அவரின் இதயம் யாசீன் ஆகும். இறையுணர்வு இன்றி இறந்து கிடக்கும் உங்கள் இதயங்களை அத்தகைய
ஞானிகளின் இதயங்களுடன் இணைத்து வைத்து உயிரூட்டுங்கள் என்பதும் மேற்சொன்ன நபிமொழியில்
பொதிந்து கிடக்கும் சமிக்ஞை ஆகும்” என்றார் சூஃபி.
22
”ஒருவர் எப்போது சூஃபி ஆகிறார்?”
என்றொரு இளைஞர் வினவினார்.
“அவரின் தூக்கம் விழிப்பாகவும்
அவரின் விழிப்பு தூக்கமாகவும் ஆகும்போது” என்றார் சூஃபி.
அதாவது, சூஃபிகள் தூக்கத்திலும்
பிரக்ஞையோடு இருக்கிறார்கள் என்றும் ஒருவர் ஆழ்ந்து உறங்கும்போது எத்தனை நிம்மதியாக
(relaxed) இருப்பாரோ அதுபோல் விழிப்பிலும் இருக்கிறார்கள் என்றும் இதனை நான் புரிந்துகொண்டேன்.
23
04.05.2014, 6:18 p.m.
மௌனமாக அடியெடுத்து வைத்து அந்தி
வந்துவிட்டது. மஞ்சுகள் இறங்கிய மலைகள் தம் பிரம்மாண்டத்தால் ஒரே சமயம் தொலைவில் இருப்பது
போன்றும் அருகில் இருப்பது போன்றும் தோன்றுகின்றன. இங்கிருந்து அவற்றைக் கண் நிறுத்திக்
காண்கையில் சட்டென்று நான் அங்கிருப்பதாகப் படுகிறது.
மலைத்தொடரின் விளிம்பில் மின்மினி
போல் ஓரிரு தீபங்கள் பூக்கின்றன, இங்கிருந்து காண அத்தனைச் சின்னதாய், சிமிட்டிக்கொண்டு.
“இங்கிருந்து அந்த விளக்கினை நாம்
காண்கிறோம். ஆனால் அந்த விளக்கின் வெளிச்சத்தில் நாம் எதையாவது பார்க்க முடியுமா?”
என்று கேட்டார் சூஃபி.
“அந்த விளக்கு இருக்கும் இடத்திற்கு,
அதற்கு அருகில் போனால் காணலாம்” என்றேன் நான்.
“முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு பிரகாசிக்கும்
விளக்கு – சிராஜம் முனீரா. இதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த
விளக்கின் வெளிச்சத்தில் எல்லாவற்றையும் பார்ப்பவர்கள் குறைவு. நீ அந்த விளக்கிற்கு
அருகில் இரு” என்றார் சூஃபி.
http://www.youtube.com/watch?v=VM4xgB6X15g&app=desktop
ReplyDelete- ரூமி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களோடு நேற்று இங்கிருந்தேன்.. திடீரென்று உங்கள் ஞாபகம் உதித்தது. இங்கே வந்தேன். வந்து பார்த்தால்... என்றார் சூஃபி.
மாஷா அல்லாஹ்
அருமை.... மிகவும் அருமை....
ReplyDelete