Thursday, May 15, 2014

...என்றார் சூஃபி - part 6

24
05.05.2014. enroute kattappana.

மலைச் சாலையின் கொண்டையூசி வளைவுகளில் எங்கள் வாகனம் சென்று கொண்டிருந்தது. உயரம் செல்லச் செல்ல காற்றில் குளுமையும் தூய்மையும் கூடி வந்தன. மூச்சு அனிச்சையாக ஆழமாகி ஆனந்தம் பொங்கிற்று.
“இது அன்ஃபாசெ ஈசா (ஏசுவின் மூச்சு) போல் இருக்கிறது” என்று வியந்து கூறினேன்.
“கீழே காற்று கரியமில வாயு கலந்து மாசுபட்டுள்ளது. இங்கே மலைகளின் உயரத்தில் தூய்மையாகவும் குளுமையாகவும் உள்ளது.
கீழான எண்ணங்கள் வெளிப்பட்டிருக்கும் மனதின் மூச்சு மாசுபட்ட காற்றாக இருக்கிறது. விறகு எரிந்தால் கரிப்புகை வரும். இச்சைகளால் எரியும் மனத்தின் மூச்சு கரியமில வாயுவாகத்தான் இருக்கும். அத்தகைய மனிதனின் மூச்சு அனைவருக்கும் விஷமாகும்.
இறைஞானியின் மனம் மலைச் சிகரமாகும். அவரின் மூச்சு மலையில் வீசும் காற்றைப் போல் குளுமையானது, தூய்மையானது. இறைஞானியின் மூச்சுதான் இறந்த இதயங்களுக்கு உயிரூட்டும் அன்ஃபாசெ ஈசா” என்றார் சூஃபி.
25
06.05.2014. from rosaappookkandam (kumily) to kanavaakkuzhi.

மழையில் நனைந்துகொண்டிருந்தது மலையாள நாடு. கேரளாவை அம்மண்ணின் மக்கள் கடவுளின் சொந்த நாடு (God’s own country)  என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்கள். இயற்கை வளமும் குளுமையான பருவகாலமும் அவ்வாறு சொல்வதைப் பொருத்தமாக உணர வைக்கின்றன.
கனவாக்குழி என்னும் மலைக்கிராமத்தில் உள்ள ஏலக்காய்த் தோட்டத்திற்கு எங்கள் வாகனம் போய்க் கொண்டிருந்தது. இடையில் ஒரு கிராமம் வந்தது. அதன் பெயர் ‘சாத்தானோடை’ என்று சொன்னார்கள். அதனைக் கேட்டதும் மெல்ல சிரித்தபடி, “Stream of Satan in God’s own country” (கடவுளின் சொந்த பூமியில் சாத்தானின் ஓடை) என்றார் சூஃபி.
விண்ணிலும் மண்ணிலும், இம்மையிலும் மறுமையிலும், எங்கும் எதிலும் இறைவனின் ஆட்சியே நடக்கின்றது. ஆதமும் ஹவ்வாவும் சொர்க்கத்திலிருந்து வெளியேற கருவியாய் இருந்தவன் சாத்தான். எனினும், கடவுளின் ராஜ்ஜியத்தை விட்டும் அவன் எங்கே வெளியேற முடியும்?
26
06.05.2014 – 3:00 p.m, kanavakkuzhi.
nadeem bilali, trekking thru cardamom estate

ஏலத்தோட்ட வீட்டில் மதிய உணவு. லேசான தூரிக் கொண்டிருந்தது. நான் தனிமையை நாடி அலுவலகக் கட்டிடத்தின் வராந்தாவுக்குச் சென்றுவிட்டேன். சரிந்து செல்லும் மலைப்பாதையும் அதன் பின்னணியில் உயர்ந்து நிற்கும் மரங்களும் அதற்கு அப்பால் உள்ள மலைத் தொடர்களும் அந்த வராந்தாவிலிருந்து காட்சி தந்தன. மலை வலுத்துக் கொண்டது. பனிமூட்டம் புகை போல் அசைந்து கொண்டிருந்தது. மலை முகடுகளின் மேல் விண்ணில் ஓர் அபூர்வ வெளிச்சம். மௌனமும் சப்தமும் கலந்துவிட்டது போல் இருளும் ஒளியும் கலந்த ஆனந்த வெளிச்சமாய் அது இருந்தது. ஏதும் எழுதப்படாத தாள் போன்றும் எல்லாம் எழுதப்பட்ட ஏடு போன்றும் ஏக சமயத்தில் அது தோன்றியது.
சிறிது நேரத்தில் மழை சற்றே குறைந்தது. தூரலுடன் வீசிய காற்றில் மரங்களின் உச்சிக் கொப்புகள் அசைந்தாடின. அவற்றில் சின்னஞ் சிறு கரிய பறவைகள், நான்கு அல்லது ஐந்து பறவைகள், வானில் வட்டமடித்துப் பறப்பதும் அசையும் கிளைகளில் மீண்டும் வந்து அமர்வதுமாய் விளையாடிக் கொண்டிருந்தன. கூர்ந்து கவனித்தபோது சட்டென்று ஒரு விஷயம் புலப்பட்டது. அப்போது அங்கே மழையோசை தவிர வேறு எந்த சப்தமும் இல்லை. அந்தப் பறவைகளும்கூட ஓசை எழுப்பாமல்தான் பறந்து வட்டமடித்துக் கொண்டிருந்தன. இது எனக்குப் புதுமையாக இருந்தது. மரக்கிளைகளில் விளையாடும் பறவைகள் சப்தம் எழுப்பாமல் இருந்ததை இதற்கு முன் நான் பார்த்ததில்லை. அவற்றுக்கும் அத்தருணம் மழையின் ஓசையை ரசித்துக் கொண்டாடும் தருணம் போலும். அவற்றின் இயக்கம் மழையின் இசைக்கு அவை ஆடும் நடனம் போலும்.
மரங்களில் செடிகளில் எல்லாம் மழைத் தாரைகள் பொழிந்து ஒருவித ஓசை எழுந்துகொண்டிருந்தது. அந்த ஓசை மழையின் ஓசையா? அல்லது அந்த மரங்களின் செடிகளின் ஓசையா?
நான் நின்றுகொண்டிருந்த முற்றத்தின் மேலிருந்த தகரக் கூரையில் மழை-நீர் விழுந்து ஓசை எழும்பிக் கொண்டிருந்தது. அந்த ஓசை மழையின் ஓசையா? அல்லது அந்தத் தகரக் கூரையின் ஓசையா?
வெராந்தாவுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் வாலியில் மழை நீர் விழுந்து ஓசை எழும்பிக் கொண்டிருந்தது. அந்த ஓசை மழையின் ஓசையா? அல்லது அந்த வாலியின் ஓசையா?
,அந்த மழை இறைவனின் அருள்-மழை. இறைவனின் கருணை எல்லாப் பொருட்களையும் மீட்டி இசைத்துக் கொண்டிருப்பதாக அத்தருணத்தில் உணர்ந்தேன்.
“இன்னும், அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி வைத்து, அதைக் கொண்டு பூமியை – அது உயிரிழந்த பின் உயிர்பெறச் செய்கிறான். செவியேற்கும் மக்களுக்கு இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது” (வல்லாஹு அன்ஸல மினஸ் சமாஇ மாஅன் ஃப-அஹ்யா பிஹில் அர்ள பஃத மவ்த்திஹா. இன்ன ஃபீ தாலி(க்)க ல-ஆயத்தல்லிகவ்மின் (ய்)யஸ்மஊன் -16:65) என்னும் திருவசனத்தைக் குர்ஆனிலிருந்து ஓதினார் சூஃபி.
மழை பற்றிய இந்த ஆயத்தில் அல்லாஹ் ’சமாஅத்’ (கேட்டல்) என்னும் பண்பினைச் சொல்லியிருப்பதில் என் கவனம் நின்றது.
“உன் கண்களும் செவிகளாகாத வரை மழை கொண்டுவரும் அத்தாட்சியை உன் இதயம் பெற்றுக்கொள்ள இயலாது” என்றார் சூஃபி.
27
06.05.2014. from kattappana to cumbum.

இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டது. கம்பம் மெட்டிலிருந்து மலைச்சரிவில் பதினெட்டு கொண்டையூசி வளைவுகளின் வழியாகக் கீழே இறங்கும் பயணம். மழையும் பனிப்படலுமாகப் பாதையை மறைக்கின்றன. உள்ளே அமர்திருந்த அனைவரையும் அச்சம் பீடித்துக் கொண்டது. ஒருமணி நேரப் பயணமாக ஊர் வந்து சேர்ந்தோம். “உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வந்து சேர்ந்தோம்” என்றார் ஒரு பெண்மணி. பொதுவாக இப்படிச் சொல்வது வழக்கம்தான். பேச்சு வழக்கு.
சட்டென்று, “உங்கள் கை கடவுளின் கை ஆகும் தருணமா அது?” என்றார் சூஃபி.
நபி (ஸல்) அவர்கள் பல முறை சொல்லியிருக்கிறார்கள், “வல்லதீ நஃப்சீ பியதிஹி” (என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக!) என்று. சர்வ சிருஷ்டிகளின் உயிர்களுமே அவனின் கைப்பிடியில்தான் இருக்கின்றன.
இறைநேசர்களைப் பற்றிய ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ் சொல்கிறான்: “அவன் பார்க்கும் கண்களாக நான் ஆகிவிடுகிறேன். அவன் கேட்கும் செவிகளாக நான் ஆகிவிடுகிறேன். அவன் பற்றும் கையாக நான் ஆகிவிடுகிறேன். அவன் நடக்கும் காலாக நான் ஆகிவிடுகிறேன்”
இந்த நிலை இறைத்தூதர்கள் உள்ளிட்ட அனைத்து இறைநேசர்களுக்கும் பொருந்தும். நபி (ஸல்) அவர்களின் நிலையும் இதுவே. நபியின் கை இறைவனின் கை.
நபித்தோழர்கள் ஒருமுறை நபியிடம் வாக்குறுதி (பைஅத்) செய்தார்கள். நபியின் ஒரு கை மீது தோழர்களின் கைகள் இருந்தன. நபியின் இன்னொரு கை அவர்களது தோழர்களின் கைகள் மீது இருந்தது. இந்நிகழ்வை குர்ஆனில் அல்லாஹ் இப்படிச் சொல்கிறான்:
”(நபியே!) நிச்சயமாக உங்களிடம் வாக்குறுதி செய்தவர்கள் அல்லாஹ்விடமே வாக்குறுதி தந்தார்கள். அல்லாஹ்வின் கை அவர்களின் கைகள் மீது இருந்தது”
ஆபத்தான கட்டங்களில் நாம் உணரவேண்டியது என்ன? தவ்ர் குகையில் இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் தமது தோழரான அபூபக்கர் (ரலி) அவர்களிடம் சொன்னதுதான்: “அஞ்சற்க, அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்” (லா தஹ்ஸன் இன்னல்லாஹ மஅனா -9:40)
பொதுவாக, ஆபத்தான கட்டங்களில் மனிதனின் பிரக்ஞை முழுமையான விழிப்பில் இருக்கிறது. உச்சத்தில் இருக்கிறது. தன்னுடன் இறைவன் இருப்பதை உணர்வதே அதன் உச்ச நிலை. அதிலும் என் கண்ணாகவும் காதாகவும் கையாகவும் காலாகவும் அவனே இருக்கிறான் என்னும் நிலைக்கு பிரக்ஞை விழிப்படைவதே இறைநேசத்தின் (விலாயத்) நிலை.
அந்த நிலையில் உள்ளவர், ‘உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வந்தேன்’ என்று சொன்னால் அதன் பொருள் ‘உயிர் அவனின் கைவசத்தில் பாதுகாப்பாக இருந்தது’ என்பதுதான்.
28
heart-of-stone by cathie douglas
“பாவங்கள் செய்வதால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்” என்றார் ஆலிம்.
“அத்துடன், பாவங்கள் செய்யாததால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்” என்றார் சூஃபி.
29
”இரண்டு பறவைகள் ஒரே மரத்திலிருந்து கனிகளை உண்டன. அக்கனிகளில் இருந்த கடுகு அளவிலான விதைகள் அந்தப் பறவைகளின் அலகில் ஒட்டியிருந்தன. அப்பறவைகள் இரண்டும் ஆளுக்கொரு திசையில் பறந்து சென்றன. ஒரு பறவை ஊருக்கு வெளியே இருந்ததொரு பொட்டல் நிலத்தில் ஒரு பாறையின் மீது அமர்ந்து தன் அலகை உதறியது. அதில் ஒட்டியிருந்த சில விதைகள் ஈரத்தின் சுவடுகூட இல்லாத அந்தக் காய்ந்த பூமியில் விழுந்தன. அந்த விதைகள் சிறிது நேரத்திலேயே வறுபட்டுப் போயின.
இன்னொரு பறவை ஊருக்குள் சுற்றித் திரிந்தபடி ஒரு குட்டிச் சுவரின் மீது அமர்ந்து தன் அலகை உதறியது. அதில் ஒட்டியிருந்த சில விதைகள் அந்தச் சுவரின் கீழிருந்த சாக்கடையின் ஓரமாக விழுந்தன. சில நாட்களில் அவ்விதைகள் செடிகளாக முளைத்து விட்டன. அவற்றைக் கண்ட விவசாயி ஒருவன் ‘அடடே! இவை இன்ன வகைக் கனிகளின் செடிகளாச்சே!’ என்று மகிழ்ந்தவனாக அவற்றை அப்படியே வேரோடு கெல்லி எடுத்துக்கொண்டு போய் நல்ல நிலத்தில் நட்டுவைத்தான்”

இக்கதையைச் சொல்லிவிட்டு, ”நேசத்தின் ஈரம் அறவே இல்லாத இதயத்தை விடவும் தவறான கோணத்திலாவது நேசம் இருக்கிறதே அத்தகைய இதயம் நல்லது” என்றார் சூஃபி.

No comments:

Post a Comment