ஃபார்சி மொழியில் அற இலக்கியங்கள் எழுதிய முக்கியமான ஸூஃபி ஞானக் கவிஞர் இமாம் சஃதி (ரஹ்) அவர்கள். அன்னார் எழுதிய ஒரு சிறிய கவிதை நூல் ”பந்த் நாமா” (அறிவுரைப் பனுவல்). இது கரீமாயே சஃதி என்றும் அழைக்கப் படுகிறது. இந்நூலினை நான் ஃபார்சியில் இருந்து தமிழில் பெயர்த்து வருகிறேன். பார்வைக்காக, 1906-ஆம் ஆண்டு ஆர்தர் நெய்லர் வல்லாஸ்டன் செய்த ஆங்கிலப் பெயர்ப்பை வைத்திருக்கிறேன். அதில் இமாம் சஃ’தி ஷீராஸி (ரஹ்) அவர்களைப் பற்றிய அழகான ஓர் அறிமுக உரையை அவர் எழுதியுள்ளார். அதன் தமிழாக்கத்தை இங்கே தருகிறேன்.
பெரிதும்
கொண்டாடப்படும் ஃபார்சி மொழிக் கவிஞரான ஷைஃகு முஸ்லிஹுத்தீன் சஃ’தி அவர்கள் ஷீராஸ்
என்னும் ஊரில் பொ.ஆ 1175 மற்றும் 1193 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பிறந்தார். அவரின்
தந்தை பெயர் அப்துல்லாஹ். அவர் பாரசீக நாட்டின் அதாபக் மன்னரான சஃ’த் இப்னு ஜங்கி
(பொ.ஆ 1195 – 1226) என்பாரின் அவையில் ஒரு சிறிய பதவியில் பணியாற்றினார் என்று கருதப்படுகிறது.
அந்த மன்னரின் பெயரில் இருந்தே ஷைஃகு அவர்கள் தன் புனைபெயரான சஃ’தி என்பதை வரித்துக்
கொண்டார்.
அவர் தன் தொடக்கக் கல்வியைத் தன் சொந்த
ஊரிலேயே பெற்றார். சில காலத்துக்குப் பின்னர், பாக்தாதில் உள்ள இஸ்லாமியக் கல்லூரியில்
சேர்ந்தார். அங்கே அவர் ஓர் இளம் மாணவராக இருந்தபோது, அவரின் தேவைகளை அறிந்த நல்லுள்ளம்
கொண்ட செல்வந்தர் ஒருவர் அவரிடம் நட்பு கொண்டு உதவினார். மேலும், கல்லூரியின் பேராசிரியர்
ஒருவரும் சஃ’திக்கு உதவிகள் புரிந்தார். அதன் பின்னர் அவர் ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடுவதற்காக
தனிமையில் ஒதுங்கி இறை ரகசியங்களை தியானித்தார். அவரின் பயபக்தியான உணர்ச்சிகள் அவரை
மக்கா நகருக்கு யாத்திரை செய்யத் தூண்டின – அவர் அந்த ஹஜ் என்னும் புனிதப் பயணத்தை
பதினான்கு முறை காலால் நடந்தே நிறைவேற்றியுள்ளார். சமய நற்குணங்கள் குடிகொண்டவரான சஃ’தி விரைவிலேயே தன் ஆன்மிக நிலைக்காகப் பிரபலம் ஆகிவிட்டார்.
அஃது அவருக்கு ஷைஃகு (கண்ணியமும் அந்தஸ்த்தும் உள்ள ஒருவர்) என்னும் பட்டத்தினைப் பெற்றுத்
தந்தது. அதன் பின்னர் அவர் அப்படியே அழைக்கப்பட்டார்.
தன் வாழ்வில் பல்லாண்டுகளை அவர் பயணங்களில் கழித்தார். இதை அவர்
சொல்லும் வார்த்தைகளைக் கொண்டே நாம் அறியலாம்: “நான் உலகின் பல பகுதிகளுக்கும் பயணித்திருக்கிறேன்.
எங்கே போனாலும் அந்த ஊரின் மக்களுடன் மிக சகஜமாகப் பழகுவேன். ஒவ்வொரு மூலையிலும் ஏதோ
ஒன்றை நான் அடைந்திருக்கிறேன். ஒவ்வொரு அறுவடையில் இருந்தும் எனக்கான தானியத்தைச் சேகரித்திருக்கிறேன்.”1
இன்னொரு சம்பவத்தில் இருந்து நாம் அறிவதாவது,
அவர் குஜராத்தின் சோம்நாத் ஆலயத்தில் நிகழ்த்தப்படும் காட்டுமிராண்டித் தனமான சடங்குகளைப்
பார்த்து வெகுண்டு உணர்ச்சி வசப்பட்டு அதன் பூசாரியைத் தூக்கித் தலைகீழாகக் கிணற்றுக்குள்
போட்டுவிட்டார்.
அவரே குறிப்பிடும் இன்னொரு சம்பவம் அவரது
வாழ்வின் அடுத்த முக்கியமான நிகழ்வைக் காட்டுகிறது: “திமிஷ்கில் என் நண்பர்களின் சகவாசம்
அலுப்பூட்டியதால் நான் ஜெருசலேமின் பாழ்நிலப் பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்த பாமரர்களுடன்
சேர்ந்துகொண்டேன். அப்போது ஒருநாள் பரங்கியர்கள்2 என்னைக் கைது செய்து திரிபோலியில்
கோட்டைக் கொத்தளங்கள் கட்டும் பணியில் யூதர்களுடன் சேர்ந்து களி மண் தோண்டும் வேலையில்
என்னைப் போட்டுவிட்டார்கள். என் முற்கால நண்பனான ஒருவன் அந்த வழியே போக நேர்ந்தது.
அவன் என்னைப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டான். அவன் அலெப்போவின் பிரமுகர்களில் ஒருவன்.
அவன் என்னைப் பார்த்து, ‘நீ என்ன இந்த நிலைக்கு ஆகிவிட்டாய்? நீ எப்படி இருக்கிறாய்?’
என்று கேட்டான். நான் சொன்னேன், ‘நான் இறைவன் மீது மட்டுமே பரஞ்சாட்ட வேண்டும் என்று
எண்ணி மனிதர்களின் சகவாசத்தைத் துறந்து மலைகளிலும் காடுகளிலும் அலைந்தேன். ஆனால் இப்போது
நீயே என் நிலையை முடிவு செய்துகொள். மனிதர்கள் என்று சொல்வதற்கே தகுதி இல்லாத ஆட்களுடன்
நான் கொட்டகையில் அடைபட்டுக் கிடக்கிறேன். ஏதிலாருடன் பூங்காவில் சுதந்திரமாக நடப்பதை
விட நண்பர்களுடன் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டுக் கிடப்பது மேலானது.’ அவன் என்
இழி நிலை மீது இரக்கம் கொண்டான். பத்து தீனார்கள் கொடுத்து என்னைப் பரங்கியரிடம் இருந்து
விடுவித்தான். என்னை அவனுடன் அலெப்போவுக்குக் கூட்டிக்கொண்டு போனான். என் நண்பனுக்கு
ஒரு மகள் இருந்தாள். அவளை அவன் எனக்குத் திருமணம் முடித்து வைத்தான். நான் அவளுக்கு
மஹர் (திருமணக் கொடை) தருவதற்காக அவனே எனக்கு ஒரு நூறு தீனார்கள்3 பரிசளித்தான்.
சில காலம் கழித்து என் மனைவி தன் சுபாவத்தை வெளிப்படுத்தினாள். அவள் சிடுமூஞ்சியாகவும்,
வாக்குவாதம் செய்பவளாகவும், பிடிவாதக்காரியாகவும், ஏசுபவளாகவும் இருந்தாள். எனவே என்
வாழ்வின் மகிழ்ச்சி காணாமல் போய்விட்டது. ‘சான்றோன் ஒருவனின் வீட்டில் இருக்கும் தீய
பெண் இந்த உலகத்திலேயே ஒரு நரகமாக இருக்கிறாள்’ என்று சும்மாவா சொன்னார்கள்? தீய பெண்
ஒருத்தியுடன் நீ எப்படி உறவாடுகிறாய் என்பதில் எச்சரிக்கையாக இரு. இறைவா! இந்தத் தீய
சோதனையை விட்டும் எம்மைக் காப்பாயாக!”
சாதுரியமாக பதில் சொல்வதில் சஃதி கெட்டிக்காரர்.
இரண்டு சம்பவங்கள் சொல்லப் போதுமானவை. ஒருமுறை அவரின் மனைவி அவரை இப்படித் திட்டினாள்:
“பரங்கியருக்குப் பத்து தீனார்கள் கொடுத்து என் தந்தை விடுதலை செய்த ஆள்தானே நீங்கள்?”
சஃதி நிதானமாக பதில் சொன்னார்: “ஆம். உண்மைதான். பத்து தீனார்களுக்கு அவர்களிடம் இருந்து
விடுதலை செய்து நூறு தீனார்களுக்கு உன்னிடம் சிக்க வைத்துவிட்டார்!”
இன்னொரு தருணத்தில், சஃதியைத் தன் போட்டியாளராக
எண்ணிய தப்ரேஸின் புலவன் ஒருவன், சஃ’தி தன் விடயத்தில் தலையிடுவதாகச் சினந்து அவரிடம்
வெடுக்கென்று கேட்டான்: “ஓய், எங்கிருந்துய்யா வர்ற?” அதற்கு சஃ’தி, “ஷீராஸ் என்னும்
இன்பமயமான ஊரிலிருந்து” என்று பதிலளித்தார். அந்தப் புலவன் மிகவும் நக்கலாகச் சொன்னான்:
“தப்ரேஸில் ஷீராஸிகள் நாய்களை விட அதிகம்.” சஃ’தி கொஞ்சமும் யோசிக்காமல் சட்டென்று
பதிலடி கொடுத்தார், “எங்க ஊர் நிலை அப்படியே தலைகீழ். அங்கே தப்ரேஸிகள் நாய்களை விடக்
கம்மி!” ஆனால், அத்துடன் ஏட்டிக்குப் போட்டி முடிந்துவிடவில்லை. சஃ’தியின் தலை வழுக்கையாக
இருப்பதை அந்தப் புலவன் கிண்டல் செய்தான். தன் கையில் இருந்த பாத்திரம் ஒன்றை கவிழ்த்துக்
காட்டி, “ஷீராஸிகளின் மண்டை எப்போதும் இந்தச் சட்டியின் அடிப்பக்கம் மாதிரி வழுக்கையாக
இருக்கிறதே எப்படி?” என்று கேட்டான். சஃ’தி சளைக்காமல் உடனே சுடச்சுட பதிலடி கொடுத்தார்:
“அதே நியதிப்படி, தப்ரேஸிகளின் மண்டை அந்தச் சட்டியின் உள் பக்கம் மாதிரி காலியாகவே
இருக்கிறதே எப்படி?”
முதல் திருமணம் கசப்பான அனுபவங்களையே தந்தது
என்றாலும், அதனால் மனம் தளர்ந்துவிடாத சஃ’தி, அரேபியாவில் தான் பயணித்தபோது இரண்டாம்
திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண்ணுடன் அவர் அன்பாகவும் அமைதியாகவும் வாழ்ந்தார்
என்று ஊகிக்கலாம். அந்த உறவில் பிறந்த குழந்தை ஒன்று சிறு பிராயத்திலேயே இறந்துவிட்டதை
அவர் மனவேதனையுடன் எழுதியிருப்பதில் இருந்து அதனை நாம் அறிகிறோம்.
எனினும், சஃதி இல்லற இன்பத்தை நிறைவாக
அனுபவித்தாரா என்பது ஐயமே. ஏனெனில், அவர் தன் கவிதை ஒன்றில் இப்படி அறிவுரை சொல்கிறார்:
“ஒவ்வொரு இளவேனிலிலும், புத்தாண்டு நாளில், ஒரு புதிய மனைவியைத் தேர்ந்தெடு. ஏனெனில்
கடந்த ஆண்டின் பஞ்சாங்கம் இந்த ஆண்டு உதவாது!”
சஃ’தியின் விருந்தோம்பல் மிகவும் பிரசித்தியானது.
அவர் மிக தடபுடலாக விருந்தளிப்பதில் விருப்பம் கொண்டவர். ஒரு தருணத்தில், தன் போட்டிப்
புலவன் ஒருவனுக்கு அவர் ராஜபோக விருந்து கொடுத்ததில் அவன் வியந்துபோய், அது போல் தாரளமாகத்
தன்னால் திருப்பிச் செய்ய இயலாது என்பதை உணர்ந்தான். சஃ’தி அவன் வீட்டுக்கு விருந்தாளியாக
வந்த போது அந்தப் பேரறிஞரின் முன் மிக எளிமையான உணவுகளைப் பரத்தி வைத்தான். தான் அப்படி
விருந்து கொடுப்பதை அவன் மிக அழகான முறையில் விளக்கிச் சொன்னான்:
”நான் உங்களிடம் மூன்று நாட்கள் தங்கியிருந்து
மகிழ்ந்த போது உங்களின் விருந்து மேஜையில் நீங்கள் எனக்கு அளித்த உபசரிப்பைப் போல்
என்னால் ஒரு நாள் கூட தர முடியாது. ஆனால், இந்த மாதிரியான எனது சிக்கனமான உபசரிப்பால்
நான் செலவைப் பற்றிக் கவலைப் படாமல் உங்களை உபசரித்தபடி உங்களுடன் இருக்கும் மகிழ்ச்சியைப்
பல ஆண்டுகள் பெற முடியும்!”
சஃ’தி தன் வாழ்வின் கடைசிக் காலத்தில்
ஷீராஸுக்கு அருகில் ஒரு குடிலில் ஒதுங்கி இருந்தார். அங்கே தன் நேரத்தை அவர் இறை வழிபாட்டிலும்
அந்த நாட்டின் மேன் மக்களின் வருகையை ஏற்பதிலும் கழித்தார்.
சர் கோர் ஔஸ்லி சொல்கிறார்: “அவரின் சால்பு
மிக்க சந்திப்பாளர்களே அவருக்கு வேண்டிய உணவுகளையும் வேறு பொருட்களையும் கொண்டு வந்து
தருவது வழக்கமாக இருந்தது. அவர்களுடன் சேர்ந்து தானும் உண்டது போக மீதமுள்ள உணவுகளை
எல்லாம் அவர் தன் ஜன்னலில் தொங்க விட்டிருந்த பை ஒன்றில் போட்டு வைப்பார். ஷீராஸின்
மரவெட்டியர் தினமும் அவரின் குடில் வழியே கடந்து போவார்கள். அவர்களில் எவரேனும் பசியோடு
இருந்தால் அந்த உணவை எடுத்துக் கொள்வார்கள். இந்தச் சூழலில் நடந்த ஒரு நிகழ்வாக பாரசீகர்கள்
நம்பும் ஒரு நிகழ்வு உண்டு. அதாவது, ஒருநாள், மரவெட்டி போல் மாறுவேடம் அணிந்த மனிதன்
ஒருவன் சஃ’தி தொங்க விட்டிருந்த உணவுக் கூடையை அணுகினான். அதைத் திருட வேண்டும் என்பது
அவனின் நோக்கமாக இருந்தது. ஆனால் அவன் அதிலிருந்து கையில் எடுத்தபோது அவனின் கை காய்ந்து
பட்டுப் போய்விட்டது. அது ஷைஃகு செய்யும் கராமத் (அற்புதம்) என்று கருதிய அவன் அவரின்
உதவி கோரிக் கதறினான். அந்த ஞானி அவனிடம் எரிச்சலான குரலில் வினவினார்: ’யோவ், நிஜமாகவே
நீ ஒரு மரவெட்டி என்றால், உன் கையில் சிலாம்பு ஏறிய தழும்புகள் எங்கே? உன் கை காப்புக்
காய்த்துப் போயிருக்க வேண்டுமே, அது எங்கே? இல்லை நீ ஒரு திருடன் என்றால், ஒன்னுடைய
கன்னக்கோலும் கயிறும் எங்கே? இப்படி அழுது புலம்புவதை விட்டும் உன்னைத் தடுக்கும் உன்
தைரியமும் மனவுறுதியும் எங்கே?’ இப்படி அவனைக் கடிந்து கொண்டாலும், அவன் மீது இரக்கம்
கொண்டு அவனின் கை மீண்டும் நலம் பெற வேண்டும் என்று துஆ (பிரார்த்தனை) செய்தார். அவனுக்கு
எச்சரிக்கையும் அறிவுரையும் சொல்லி, அவன் திருடிக் கொண்டு போக நினைத்த பொருட்களில்
ஒரு பகுதியை அவனுக்குத் தந்தார்.”
பொ.ஆ 1256-இல் பாரசீகத்தின் முகலாய சாம்ராஜ்யத்தை
அதாபக்குகளின் கைக்கு மாறியபோது ஒரு சம்பவம் நடந்தது. ஷீராஸின் ராணுவத் தளபதி அந்த
ஊரின் காய்கறி வியாபாரிகளுக்கும் சந்தைக் கடைக்காரர்களுக்கும் ஒரு நிபந்தனை விதித்தார்.
மிக மலிவான விலை உள்ள பேரீச்சம் பழங்களை அதிகமான விலைக்கு அவர்கள் அரசிடம் இருந்து
வாங்க வேண்டும் என்பதே அது. இந்த விடயம் ஷைஃகு சஃ’தியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
அவர் முகலாய ஆளுநருக்கு கவிதை நடையில் ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்:
“என் சகோதரன் அணிய கீழாடை கூட இல்லை; அவன் பேரீச்சம் பழங்களை அதிக விலைக்கு வாங்க வேண்டும்
என்று தொல்லை! இதை விட ஒரு மனிதனுக்கு இருக்க முடியாது ஓர் அவல நிலை!” சஃ’தியின் கவிதை
மக்களுக்குச் சாதகமாக வேலை செய்தது. ஷைஃகின் வறுமைப்பட்ட சகோதரனுக்கு இலவசமாகவே பேரீச்சம்
பழங்கள் வழங்கப்பட்டதுடன், “அவன் அத்தனை வறுமையில் வாடுகிறான் என்பதை அறிந்ததற்காக”
அவனுக்கு ஒரு “சிறிய தொகை”யும் உதவியாக வழங்கப்பட்டது.
பொ.ஆ. 1265-இல் பாரசீகத்தில் இரண்டாம்
முறையாக முகலாயர்கள் ஆட்சியில் அமர்ந்தபோது அரசன் ஒருநாள் தன் அமைச்சர்களுடன் சஃதியைச்
சந்திக்க வந்தான். தான் ஒரு அரசனாக இருந்தபோதும் அமைச்சர்கள் அனைவரும் சஃ’தியை அரசனை
விட அதிக மதிப்புடன் நடத்துவதைப் பார்த்து வியந்தான். அந்த வினோதமான சூழலுக்கு என்ன
காரணம் என்று அவன் கேட்டபோது, உலகமெங்கும் தன் கவிதைகளால் பெயர் அறியப்பட்டுள்ள ஞானியான
ஷைஃகு பற்றி அரசன் கேள்விப்பட்டதில்லையா என்று அவர்கள் திருப்பிக் கேட்டனர். அதன் விளைவாக,
ஷைஃகு தன் அரண்மனைக்கு வந்து தனக்கு “ஏதேனும் அறிவுரை” வழங்க வேண்டும் என்று சஃ’தி
அழைக்கப்பட்டார். “நீ இந்த உலகத்தில் இருந்து எதையுமே மறுமைக்கு எடுத்துச் செல்ல முடியாது.
ஒரு நற்கூலி அல்லது ஒரு தண்டனை மட்டுமே உனக்குக் கிடைக்கும். இப்போது, எதைத் தேர்ந்தெடுப்பது
என்பது உன் கையில் உள்ளது” என்று அவர் அறிவுரை கூறினார். அரசன் தான் அவமானப் பட்டதாக
உணர்ந்தான். அதை சஃ’தி அறிந்து கொண்டார். எனவே, தான் அங்கிருந்து கிளம்பும்போது அவனின்
காதில் பின்வரும் கவிதையைச் சொன்னார்:
அரசன் இறைவனின் நிழல் ஆவான்
நிழல் தன் மூலத்தை நெருங்கியிருக்க வேண்டும்.
வாள் ஆட்சி புரியவில்லை என்றால்
கீழ்களின் மனம் நன்மை செய்ய இயலாது.
உலகில் தோன்றும் நீர்மைகள் யாவும்
அரசனின் நேர்மைக்குக் கட்டியம் கூறும்;
ஒவ்வொரு எண்ணமும் பிசகாய் உள்ளோனிடம்
எவ்வாறு நாடு
நன்மைகளை அடையும்?
அதே ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களில் ஒருவர்
சஃ’தியிடம் ஐந்து வினாக்களை முன்வைத்து விடை கோரினார்.
(1) யார் சிறந்தவர் – மனிதனா? அசுரனா?
(2) என் பகைவன் என்னிடம் சமரசம் அடையவிடில் நான் என்ன செய்ய வேண்டும்?
(3) மக்காவுக்குப் பயணம் செல்பவன் அந்தக் கடமையை விட்டவனை விட மேலானவன்
அல்லனா?
(4) ஹழ்ரத் அலீ1-யின் வமிசக்காரன் பிறரை விட மேலானவனா?
(5) ஞானக் கவிஞரே! நீங்கள் வளர்க்கும் பறவைகளைப் பேணுவதற்காக ஒரு தலைப்பாகையும்
500 தீனார்களும் கொண்ட அன்பளிப்பை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
அந்தச் செய்தியை சஃ’தியிடம் கொண்டு போன தூதுவன் தன்னையே அவரின்
”பறவை”களில் ஒன்றாகக் கருதி தன் பைக்குள் 150 தீனார்களைப் போட்டுக் கொண்டு மீதம்
350 தீனார்களை சஃ’தியிடம் கொடுத்தான். அவன் களவாடியதைக் கண்டுபிடித்துவிட்ட சஃ’தி அதனை
சமிக்ஞை செய்து பின்வருமாறு பதில் எழுதினார்:
கண்ணியமான அன்பளிப்பும் பணமும்
எனக்கு அனுப்பி வைத்தீர்.
நும் செல்வம் பெருகட்டும்,
நும் பகைவர் நும் பாதத்தின் கீழே உருளட்டும்!
ஒவ்வொரு தீனாருக்கும் நும் ஆயுளில் ஆண்டு ஒன்று கூடட்டும்,
அப்படியாக இந்த உலகில் நீவிர்
முந்நூற்று ஐம்பது வயது
வாழ்வீர்!
ஞானியின் கவிமடலை வாசித்ததும் அவருக்குக் கருவூலத்தில் இருந்து பத்தாயிரம்
தீனார்கள் பரிசு அனுப்பி வைக்கும்படி அமைச்சர் அறிவித்தார். ஆனால் அப்போது கருவூலக்
காப்பாளர் இறந்து போனார். அதனால் பரிசுத் தொகை வழங்கப்படாமல் இருந்தது. சிறிது காலம்
சென்றதும் அதை அமைச்சருக்கு சஃ’தி கவனத்தில் கொண்டு வந்தார். நடந்ததை அறிந்த அமைச்சர்
சஃ’திக்கு ஐம்பதாயிரம் தீனார்கள் பரிசளிக்கும்படி உத்தரவிட்டார். ஷீராஸில் கட்டப்பட்டு
வரும் ”முசாஃபிர் ஃகானா” (பயணியர் விடுதி)க்கு அதன் ஒரு பகுதியை ஒதுக்குமாறு அவர் வேண்டுகோளும்
விடுத்தார். சஃ’தி எழுதிய முதல் நான்கு விடைகளுக்கு என்ன சன்மானம் அளிக்கப்பட்டது என்று
தெரியவில்லை.
ஷைஃகு சஃதி பொ.ஆ.1291-இல் ஷீராஸில் தன் முதிய வயதில் மரணம் அடைந்தார்.
அவரின் கவிதை வரிகள் பொறிக்கப்பட்டுள்ள அவரின் அடக்கத்தலம் மிகுந்த கண்ணியத்துடன் போற்றப்பட்டு
வந்தது. பின்னாளில் அது கைவிடப்பட்ட நிலையில் பாழடைந்து விட்டது. எனினும் பாரசீகத்தின்
மிக மேன்மையான கவிஞர்கள் மற்றும் அறிஞர்களில் ஒருவரின் ஓய்விடம் என்று அடையாளம் காணும்
வகையில் அதன் எஞ்சிய பகுதிகள் நல்ல நிலையில் இருக்கின்றன.
உள்ளூர் நாட்குறிப்பாளர்
ஒருவர் அவரின் உருவத்தை இப்படி வருணிக்கிறார்: “சஃ’தி குள்ளமானவர். லட்சணமானவர் அல்லர்.
அவரின் தலை நீளமாக இருந்தது. அது ஆழ்ந்த சிந்தனை மற்றும் ஞானத்தைக் காட்டுவதாக இருந்தது.
அவரின் ஆடை மிக எளிமையாகவும் அதே சமயம் சிறப்பாகவும் இருந்தது. ஒரு தலைப்பாகை, ஜுப்பாவின்
மீது அணியப்பட்ட நீளமான நீல நிற அங்கி, கையில் ஒரு அஸா (கைத்தடி). இந்த கண்ணியமிக்க
பாணரின் பண்பு மிக உயர்வானதாகவும் அவர் ஒரு பேராளுமை என்று காட்டுவதாகவும் இருந்தது.
அவர் மிகவும் இங்கிதமானவராக, நண்பர்களுக்கு இணக்கமானவராக, பகைவருக்கும் தாராளமானவராக
இருந்தார். விகடத்தில் தன் காலத்தின் அறிவன்மார் அனைவரையும் விஞ்சுபவராக இருந்தார்.
அவரின் நகைச்சுவை எந்த அளவுக்கு ஆற்றல் உடையதாக இருந்தது என்றால் அதைக் கேட்டால் எத்தகைய
கடுமயான உம்மணாமூஞ்சிக் காரனும் கலகலவென்று சிரித்துவிடுவான். அனுபவமிக்க இளைஞர்களின்
வட்டத்தில் அவர் ஒரு சின்னப் பையனாகவும், மனிதப் புனிதர்களின் சமூகத்தில் ஒரு ஞானியாகவும்
இருந்தார். சுருக்கமாகச் சொன்னால், அவர் ஒரு நிறைவான அறிஞர், செவ்விய ஃபார்சி மொழிப்
புலமை கொண்ட உன்னதமான குரு, இறையியலில் ஒரு தெளிவான வழிகாட்டி, வாழ்க்கை மற்றும் நல்லறம்
பற்றி சொல்லோவியம் தீட்டிய இலக்கியவாதி.”
“ஆயிரம் பாடல்களின் அருங்குயில்” என்று அழைக்கப்படும் ஷைஃகு சஃ’தி
அவர்கள் எழுதியதாக நன்கு அறியப்படும் பனுவல்கள்:
அ) பூஸ்தான் (கனித் தோட்டம்) – அறக் கருத்துக்களும் வாழ்க்கை நியதிகளும்
பொதிந்த அற்புதமான கவிதை நூல்.
ஆ) குலிஸ்தான் (ரோஜா வனம்) – ஃபார்சி இலக்கியத்தில் அதிகம் படிக்கப்படும்
நூல் என்று இதனைக் கருதலாம். இந்த அழகான நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிடும்போது
ஈஸ்ட்விக் எழுதினார்: “பள்ளி மாணவன் தன் முதல் பாடங்களை இதில் கற்கிறான். கல்வி நிறைந்த
அறிஞன் இதனை மேற்கோள் காட்டுகிறான். இதில் உள்ள அடிகள் பலவும் பழமொழிகள் ஆகிவிட்டன.
இஃது எழுதப்பட்ட காலத்தை நாம் கருதினால் – பதின்மூன்றாம் நூற்றாண்டின் முதல் பாதியில்
– ஐரோப்பாவின் மீது காரிருள் படர்ந்திருந்தது – அந்தோ! குறைந்தபட்சம் அது உணரப்படாத
ஓர் இருள் என்று ஒப்ப வேண்டும் – அத்தகைய காலத்தில் இந்த நூலில் எழுதப்பட்டுள்ள கருத்துக்கள்
பலவும், அதில் இருக்கும் இறைப் பண்புகள் குறித்த ஒளிமிகு பார்வைகளும் நிச்சயமாக அற்புதமானவையே.”
இ) பந்த் நாமா அல்லது
அறிவுச் சுருள் (கரீமா)4
- இருபதாம் நூற்றாண்டின் தத்துவச் சூழலுக்கும்
பொருந்தி வருகின்ற கருத்துக்கள் பொதிந்த சிறிய கவிதை நூல். செறிவும் நேர்த்தியும் கொண்ட
இந்நூல் ஃபார்சி மொழியறிந்த கிழக்குலகு நெடுகிலும் மிகப் பிரபலமான ஒன்றாகத் திகழ்கிறது.
இந்நூல் அழகான சொற்கோவை கொண்டிருப்பதுடன் அச்சொற்கள் மனத்தில் பதியும்படி மிகச் சரளமாகச்
சொல்லக்கூடிய சந்தத்தில் அமைந்திருப்பதும் இதற்குக் காரணம் எனலாம். எனவே இதன் அடிகள்
மனனம் செய்யப்படும் வழக்கம் இருக்கிறது. வேறெந்த ஃபார்சி மொழி நூலை விடவும் இந்நூல்
அந்தப் பேறு பெற்றுள்ளது. பைரன் எழுதிய “Lover’s Last Adieu” என்னும் கவிதையின் சந்தத்தை
சஃ’தியின் பந்த் நாமா என்னும் அறிவுச்சுருளில்
உள்ள சந்தத்துடன் ஒப்பிடலாம். இரண்டிலிருந்தும் அடிகளை அருகருகே வைத்துப் பார்த்தால்
இதை உணரலாம்:
“The roses of love glad the garden of life”
“கரீமா ப-பஃக்ஷாயே பர் ஹாலே மா”
இன்னும் ஒரு விடயம் மட்டும் சொல்வதற்கு உள்ளது. அதாவது, இந்த நாட்டில்
கடந்த நூறு ஆண்டுகளில் பந்த் நாமா என்னும்
அறிவுச்சுருளின் எவ்வொரு மொழி பெயர்ப்பும் பதிக்கப்படவில்லை (தன்னளவில் பூர்த்தியாகாத
கிளாட்வினின் பிரதி 1801-இல் பிற்சேர்க்கையான மொழிபெயர்ப்புடன் வெளியிடப்பட்டது.) எனினும்,
பம்பாயில் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அறிஞர் ஒருவர் அதனை ஆங்கிலத்தில் பெயர்த்தார்
என்று தெரிகிறது. அவ்விரண்டு நூற்களுமே இப்போது அச்சில் இல்லை. நடைமுறையில் அந்த மொழிபெயர்ப்புப்
பிரதிகள் இப்போது ஆங்கிலேயப் பொது மக்களுக்குக் கிடைப்பதாக இல்லை என்று சொல்லலாம்.
எனவே, இந்தப் பிரதியை வெளியிடுவதில் தடை ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆர்தன் என். வல்லாஸ்டன்.
க்ளென் ஹில், வால்மர்
மே 6,
1906.
________________________________________
1 இதை அவர்
சிறிய ஆசியா, பார்பரி, அபிசீனியா, எகிப்து, சிரியா, ஃபலஸ்தீன், அர்மேனியா, அரேபியா,
ஈரானின் பல்வேறு மாகாணங்கள், மற்றும் இந்தியாவின் சில பகுதிகள் ஆகிய இடங்களுக்குப்
பயணித்த பின்னர் எழுதியிருக்க வேண்டும். இந்த அலைவுகளின் காலத்திலும்கூட அவரின் பெயர்
அனைவராலும் அறியப்படாமல் இல்லை.
2 அதாவது
சிலுவைப் போராளிகள்.
3 இன்றைய
பண மதிப்பின்படி நூறு தீனார்கள் என்பது இங்கிலாந்துப் பணத்தில் ஒரு பென்னி மதிப்பு
வரும். ஆனால் சஃ’தியின் காலத்தில் ஒரு தீனார் என்பது ஏழு அல்லது எட்டு ஷில்லிங் மதிப்பு
இருந்திருக்கும்.
[குறிப்பு: ஷில்லிங் என்னும் நாணயம் 1960-களில் வழக்கொழிந்துவிட்டது.
அப்போது அது ஒரு பவுண்டில் இருபதில் ஒரு பங்கு மதிப்பாக இருந்தது. அதாவது, 20 ஷில்லிங்
= 1 பவுண்ட். இன்று ஒரு பவுண்ட் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 109 ரூபாய்
ஆகும். எனவே ஒரு ஷில்லிங் என்பது 109 / 20 = 5.45 ரூபாய் ஆகும். ஆக, 1 தீனார்
= 8 ஷில்லிங் = 5.45 x 8 = 43.6 ரூபாய் ஆகும்.
எனவே, 100 தீனார் என்பது 43.6 x 100 = 4360 ரூபாய் ஆகும். இதுவே, சஃ’தி வழங்கிய மஹர்
என்னும் திருமணக் கொடையின் தொகை – ரமீஸ் பிலாலி]
4 தொல்
கையெழுத்துப் பிரதிகளில் இந்தப் பனுவல் காணப்படவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.
இது பொ.ஆ.1438 வாக்கில்தான் முதன் முதலாக சஃ’தி எழுதியதாகச் சொல்லப்பட்டது.
1906-இல் வல்லாஸ்டன் இதை எழுதியபோது இமாம் சஃ’தியின் அடக்கத்தலம் பாழ்நிலையில் இருந்திருக்கலாம். ஆனால் பின்னர் அது மராமத்துச் செய்யப்பட்டு இன்று வரை அழகிய வடிவில் பேணப்படுகிறது. ஸூஃபித்துவ சாதகர்கள் வருகை நல்கும் தலமாக அமைந்திருக்கிறது.