Tuesday, September 25, 2012

எறும்பின் கண் (தொடர்ச்சி-4)
இதுவரை நாம் ஆராய்ந்து வந்துள்ள விஷயங்களை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக் காண நினைத்தால் மனக்கண்ணின் முன் இருபதாம் நூற்றாண்டின் மாமேதைகளில் ஒருவர் வந்து நிற்கிறார். மகாகவி அல்லாமா இக்பால். அவர் காயத்ரி மந்திரத்தை உருதுவில் கவிதையாக மொழிபெயர்த்துள்ளார்!

பிராமண சிறுவர்கள் ஏழு வயதில் முப்புரிநூல் அணிந்துகொள்ளும் ‘உபநயனம்’ என்னும் சடங்கின்போது அவர்களுக்கு இம்மந்திரமும் அதன் விளக்கமும் கற்றுத் தரப்ப்பட வேண்டும் என்பது ஐதிஹ்யம்.


தன் முன்னோர்கள் காஷ்மீரின் பிராமணர்களான பண்டிட்கள் என்பதை மறவாத இக்பாலின் மனத்தில் இந்த மந்திரத்தின் உட்பொருளான மெய்ஞ்ஞானம் வெளிப்பாடு வேண்டி நின்றிருக்க வேண்டும். ”ஆஃப்தாப் – தர்ஜுமாயே காயத்ரி” (சூரியன்: காயத்ரியின் மொழிபெயர்ப்பு) என்னும் கவிதையாக அது உருவெடுத்தது. இக்பாலின் இக்கவிதை பிரெஞ்சுக் கவிஞர் தியோஃபைல் காத்தியர் எழுதிய ஒரு கவிதையில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டது என்கிறார் எம்.ஏ.கே.கலீல். நான் தேடிப் பார்த்த அளவில் அந்த ஃபிரெஞ்சுக் கவிதை கிடைக்கவில்லை. இக்பால் கவிதையின் தமிழக்கம்:

“சூரியனே!
உலகின் உயிரும் உத்வேகமும் நீயே
பிரபஞ்ச வெளி எனும் பதிவேட்டின்
பதிவாளன் நீயே

உண்மையின் இன்மையின் தோற்றத்திற்கு
அடிப்படை நீயே
உள்ளமையின் தோட்டம் உன் மூச்சால்
பசுமையாய் உள்ளது இங்கே

பஞ்ச பூதங்களின் விளையாட்டு
நிலைத்துள்ளது உன்னைக் கொண்டே
ஒவ்வொரு பொருளிலும் வாழ்வின் கோரிக்கை
உன்னைக் கொண்டே

ஒவ்வொரு பொருளும் தரிப்பட்டுள்ளது
உன் பிரகாசத்தைக் கொண்டே
உன் இந்த ஜ்வலிப்பும் கீதமும்
வாழ்வின் பூரணம் ஆகும்

உலகிற்கு ஒளியூட்டும் சூரியன் நீயே
இதயமும் அறிவும் உயிரோட்டமும் ஞானமும்
உன்னைக் கொண்டே

சூரியனே! எமக்கு ஞான ஒளியை நல்கு!
அறிவின் கண்ணுக்கு
உன் சுடர்களால் ஒளியூட்டு!

உள்ளமையின் சபையை
வஸ்துக்களால் அலங்கரிப்பவன் நீ
மேலுலகிலும் கீழுலகிலும்
வசிப்பவர்களின் ரட்சகன் நீ

உயிருள்ள ஒவ்வொன்றிலும்
உன் நிறைமையே பிரதிபலிக்கிறது
பன்மலை அடுக்குகளில்
உன் திருக்காட்சியே உள்ளது

ஒவ்வொரு பொருளது உயிரின்
ரட்சகன் நீயே
ஒளிப் பிள்ளைகளின் பேரரசன் நீயே

உனக்கு ஆரம்பம் ஏதுமில்லை
உனக்கு முடிவும் ஏதுமில்லை
ஆதி அந்தம் எனும் எல்லைகள்
அற்ற விடுதலை உன் ஒளி”

இப்பாடல் மிகவும் விரிவான ஒன்று. இதன் ஆறாம் கண்ணியாய் வரும்,
”சூரியனே! எமக்கு ஞான ஒளியை நல்கு!
அறிவின் கண்ணுக்கு
உன் சுடர்களால் ஒளியூட்டு!”
(ஏ ஆஃப்தாப் ஹம் கொ ளியாயே ஷுஊர் தே
 ச்சஷ்மெ ஃகிரத் கொ அப்னீ தஜல்லீ சே நூர் தே)
என்பதுதான் காயத்ரி மந்திரத்தின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.


இக்கவிதையில் அல்லாமா இக்பால் சூரியனைக் குறியீடாகக் கொண்டு இறைவனைப் பாடியிருக்கிறார் என்பதுதான் சரியான விளக்கமாக அமையும். வானத்தில் வட்டமிடும் சூரியனைத்தான் இவ்வாறு பாடியிருக்கிறார் என்று சொன்னால் அது குறியீட்டுப் பொருளின் மீது இறைத்தன்மையைச் சாற்றும் இணைவைப்பாக ஆகிவிடும். வெளிச்சூரியன் நம் புறக்கண்கள் காணும் வெளியுலகைத்தான் வெளிச்சமிடுகிறது. ஆனால் ”இதயமும் அறிவும் உயிரோட்டமும் ஞானமும் உன்னைக் கொண்டே” என்று சொல்லும் போது அது இறைவனைக் குறித்தே ஆகும். எனவே ”இறைவனே உள்ளமையின் சுடர்களைப் படைப்புக்களின் மீது தெளித்துக் கொண்டிருக்கும் சூரியன்” என்பதே இக்கவிதையின் சாராம்சம் ஆகும்.

இக்கவிதை நெடுக இறைவனைக் குறித்து சூஃபித்துவத்தில் கையாளப்படும் கலைச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. ரூஹ் (ஜீவன்), கவ்ன் ஒ மகான் (பிரபஞ்சம், இடம்), உஜூத் (உள்ளமை), அதம் (இல்லாமை), நுமூத் (தோற்றம்), ஹஸ்தி (உள்ளமை), காயிம் (நிலைப்பாடு), தகாளா (கோரிக்கை), ஸபாத் (தரிப்பாடு), நூர் (ஒளி), தஜல்லீ (ஒளிச்சுடர்கள் –வெளிப்பாடுகள்), அவ்வல் (ஆதி) மற்றும் ஆஃகிர் (அந்தம்) ஆகிய சொற்களைக் கவனிக்கவும். இவை இறைவனைக் குறித்துச் சொல்லப்பட்டவை. சூரியனைக் குறித்து அல்ல. ஆனால் இச்சொற்களின் பின்னணியில் உள்ள இறைத்தத்துவங்கள் சூரியனைக் குறியீடாகக் கொண்டு விளக்கப்படுகின்றன.

”உயிருள்ள ஒவ்வொன்றிலும்
உன் நிறைமையே பிரதிபலிக்கிறது”
(தேரா கமால் ஹஸ்தியே ஜான்தார் மே(ன்))
என்னும் ஒற்றை வரியே இறைவனுக்கும் படைப்புக்கும் இடையில் உள்ள உறவைக் குறித்து சூஃபிகள் சொல்லும் முக்கியமானதொரு பாடத்தின் சாராம்சமாகும்.

அதாவது, சிருஷ்டிகளின் பண்புகள் ’சிஃபாத்தே நாக்கிஸ்’ (குறைப் பண்புகள்) என்று சொல்லப்படும். சவம், மடமை, நாட்டமின்மை, ஆற்றலின்மை, செவிடு, குருடு, ஊமை மற்றும் இல்லாமை ஆகியவை.

இறைவனின் பண்புகள் ’சிஃபாத்தே கமால்’ (நிறைப் பண்புகள்) என்று சொல்லப்படும். ஜீவன், அறிவு, நாட்டம், ஆற்றல், கேள்வி, பார்வை, பேச்சு மற்றும் உள்ளமை ஆகியவை.

படைப்புக்களின் குறைப் பண்புகளில் அவற்றை மறைத்துப் பரம்பொருளின் நிறைப் பண்புகளின் சுடர்கள் பிரதிபலிக்கின்றன. எனவே படைப்புக்கள் அப்பண்புகளைச் சுயமாகப் பெற்றிருப்பது போல் தோற்றம் அளிக்கின்றன.


வானில் வட்டமிடும் சூரியனையே நேரடியாகக் குறித்து இக்பால் எழுதிய ஒரு கவிதையுடன் மேற்கண்ட கவிதையை ஒப்பிடும்போது இக்கவிதை இறைவனைப் பற்றிய குறியீட்டுக் கவிதை என்பது விளங்கும். “ஆஃப்தாபெ ஸுப்ஹ்” (’வைகறைச் சூரியன்’ அல்லது ‘காலையிளம் பரிதி’) என்னும் தலைப்பில் அமைந்த அக்கவிதையைத் தமிழில் தருகிறேன். (’காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்’ என்று பாரதிதாசன் தன் ’அழகின் சிரிப்பு’ நூலைத் துவக்குகிறார். அதிலிருந்து இத்தலைப்பை மொழிபெயர்த்துக் கொண்டேன்.):

”மனிதனின் மதுக்கூடத்தின்
கண்ணியமற்ற கலவரத்தை விட்டும்
மேலுயர்ந்து இருக்கின்றாய் நீ
வான்சபையை அலங்கரிக்கும்
மதுக்கோப்பை நீ

வைகறை மணப்பெண்ணின்
காதில் ஆடும் வெண்முத்து நீ
கீழ்வானின் வளைந்த நெற்றியில்
ஒளிரும் அணிகலன் நீ

காலத்தின் தாளில்
இரவின் மைக்கறையை அழித்து விட்டாய்
பொய்ச் சின்னம் போல்
வானிலிருந்து நட்சத்திரம் அகற்றப்பட்டது

வானின் விளிம்பில்
உன் அழகு தோன்றும் போது
கனவு மதுவின் மயக்கம்
சட்டென்று கலைகிறது கண்களை விட்டு

பார்வைப் புலன் ஒளியால் நிறைகிறது
எனினும் உன் ஒளியோ
புறக் கண்களைத்தான் திறக்கின்றது

கண்கள் எதனைத் தேடுகின்றதோ
அந்தக் காட்சி வேண்டும்
அகத்தின் கண் எதனால் திறக்குமோ
அந்தப் பிரகாசம் வேண்டும்

விடுதலை வேட்கைகள்
நிறைவேறுவதில்லை இவ்வுலகில்
வாழ்க்கை முழுவதும் இங்கே
தளையிடப்பட்டுக் கிடக்கின்றோம்

உன் பார்வைக்கோ
மேலோரும் கீழோரும் ஒன்றே
அது போன்ற ஒரு பார்வையைப் பெற
எனக்கும்கூட ஆசைதான்!

பிறரின் துயர் மீது என் கண்கள்
கண்ணீரைப் பொழிவதாகட்டும்
தேச வேற்றுமைகளும்
கலாச்சார வேற்றுமைகளும் விட்டு
என் இதயம் விடுதலை ஆகட்டும்

நிற வேற்றுமையால்
என் நாவு கட்டப்பட வேண்டாம்
மனிதகுலமே என் இனமாகட்டும்
முழு உலகும் என் தேசமாகட்டும்

இயற்கை அமைப்பின் இனிய ரகசியம்
என் அகப்பார்வைக்குத் தோன்றட்டும்
என் சிந்தனை விளக்கின் புகை
விண்வெளிகளை அளக்கட்டும்

முரண்களின் முடிச்சுக்களைத் தேடுவது
என்னைப் பதற்றப் படுத்தாதிருக்கட்டும்
காதல் ததும்பும் அழகு
ஒவ்வொரு பொருளிலும் காட்சி ஆகுக

ரோஜாவின் இதழ்கள்
தென்றலால் சிதைக்கப்படும் எனில்
அதன் வலி
என் கண்களில் நீராகிக் கசிகின்றது

காதல் துடிப்பின் அக்கினித் துளி
என் இதயத்தில் இருக்கட்டும்
அதன் ஒளியில் இருக்கட்டும்
சத்தியத்தின் ரகசியச் சேதி
என் இதயம் எனதாய் இல்லாமல்
இறைவனின் கண்ணாடியாய் இருக்கட்டும்

பொதுநல நினைப்பால்
நிரம்பியிருக்கட்டும் என் சிரம்
ஏதேனும் லாப நோக்கினால் அல்ல

இவ்வுலகின் கொந்தளிப்புக்களில்
உனக்குப் பொறுமை இல்லை எனில்
பெருவிளக்கே!
அது உண்மையில் பெருமை அல்ல

உலகை அலங்கரிக்கும் உன் அழகை
நீயே அறியவில்லை ஆதலால்
மனிதனின் வாசலில் கிடக்கும்
ஒரு தூசிக்குச் சமமல்ல நீ!

வானவர்கள் அடிபணிந்த மனிதனின் ஒளி
இறைக்காட்சித் தேடலின் கதகதப்பாய் இருந்தது
ஆனால் நீயோ மறுநாளின் விடியலை
யாசித்துக் கொண்டிருந்தாய்

சத்திய ஒளிக்கான ஆசை
எங்கள் இதயத்தில் உள்ளது
இந்தப் பாழடைந்த இடத்தில்தான்
தேடலாசை என்னும் லைலாவின்
வீடு இருக்கின்றது

கடினமான முடிச்சை அவிழ்ப்பதில்
அடடா! என்ன பேரின்பம்!
எமது முடிவடையா முயற்சியில் உள்ளது
நூறு முடிவுகளின் பேரின்பம்!

உன் நெஞ்சம்
தேடலின் வேதனை அருளப்பட்டதல்ல
தெய்வீக ரகசியங்களைத் தேடுவதின்
அறிவுடையோன் அல்ல நீ”


அல்லாமா இக்பாலின் இக்கவிதை வானில் சுழன்று கொண்டிருக்கும் ஹீலியம் விளக்கான சூரியனை விளித்துப் பேசுகிறது. அதனை மனிதனின் மேன்மையுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறது.

மனிதன் படைப்புக்களின் சிகரம் ஆனவன். ’அஷ்ரஃபுல் மஃக்லூக்காத்’ (படைப்புக்களில் சிறந்தவன்) என்னும் அந்தஸ்த்து வழங்கப்பட்டவன். அவனில் இருக்கும் ஆன்மிக விழிப்பு வேறு படைப்புக்களால் எட்ட இயலாத ஒன்று.

தன்னை அறியும் பேறும் அதனால் தன் இறைவனை அறியும் பேறும் கொடுக்கப்பட்டவன் மனிதன். அந்த ஆன்மிக ஞானத்தின் பிரகாசத்தின் முன் வானத்துச் சூரியனின் புற ஒளி ஒன்றுமே இல்லை என்கிறார் இக்பால்.

”உலகை அலங்கரிக்கும் உன் அழகை
நீயே அறியவில்லை ஆதலால்
மனிதனின் வாசலில் கிடக்கும்
ஒரு தூசிக்குச் சமமல்ல நீ!”
(அப்னே ஹுஸ்னெ ஆலம் ஆரா சே ஜோ தூ மஹ்ரம் நஹீ(ன்)
ஹம்சரெ யக் ஜர்ராயெ ஃகாக்கெ தரெ ஆதம் நஹீ(ன்))

இப்படிப்பட்ட சூரியனையா மனிதன் வணங்குவது? சூரியனுக்கே ஒளி தந்து கொண்டிருக்கும் பரம்பொருளை அல்லவா அவன் அறிந்து வழிபட வேண்டும்? இதுதான் சுலைமான் நபி (அலை) அவர்கள் பல்கீஸ் ராணிக்கு எழுதிய கடிதமும் உணர்த்துகின்றது.

இதைச் சொல்லும்போது எனக்கொரு சம்பவம் நியாபகம் வருகின்றது.


எம் பகுதிக்கு ஆயங்குடியில் இருந்து சூஃபி மகான் ஸுபூத்தி ஷாஹ் ஜமாலி அவர்கள் ஒருமுறை வருகை தந்திருந்தார்கள். அப்போது அந்த தியான சபையில் உரையாடலின் போது ஒருவரிடம் குரு அவருக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த மினரல் நீர் பாட்டிலைக் காட்டிக் கேட்டார்கள், “இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“கண்ணாலதான்”
“அதைப் பார்க்கும் முன் உங்கள் பார்வை எதன் மீது விழுகிறது?”
“…”
“அதைக் காட்டும் ஒளியின் மீது விழுகிறதல்லவா?”
“ஆமாம்”
“அதை நாம் கவனிப்பதில்லை. ஆனால் முதலில் நம் பார்வை பொருள்களைக் காட்டும் ஒளியின் மீதுதான் விழுகிறது. அதன் பின்னர்தான் அவ்வொளி காட்டும் பொருளின் மீது விழுகிறது. இப்போது உங்கள் பார்வை முதலில் விழும் ஒளி எது?”
“ட்யூப் விளக்கின் ஒளி”
“சரி. இப்போ ராத்திரியில் விளக்கின் ஒளி. வெளியே போனால் நிலவின் ஒளி. பகலில் என்றால் சூரியனின் ஒளி. இந்த ஒளியை எல்லாம் காட்டுவது எந்த ஒளி?”
“…”
“விளக்கு, நிலா, சூரியன் இவற்றின் ஒளியை எல்லாம் காட்டிக் கொண்டிருப்பது அல்லாஹ்வின் ஒளிதான். அதை நம் அகக்கண்ணால் பார்க்க வேண்டும். அதுதான் மஃரிஃபா (இறை ஞானம்)”

(தொடரும்) 

No comments:

Post a Comment