Thursday, September 27, 2012

எறும்பின் கண் (தொடர்ச்சி-5)



அல்லாமா இக்பாலின் இன்னொரு கவிதை இயற்கையில் மனிதனின் இடத்தையும் சூரியனின் இடத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறது. ”இன்சான் அவ்ர் பஸ்மெ குத்ரத்” (மனிதனும் இயற்கையின் சபையும்) என்னும் அக்கவிதையிலும் மேலே நாம் கண்டுவந்த விஷயங்களைக் கொஞ்சம் விரிவாகப் பேசுகிறார். இக்கவிதையில் மனிதனின் அகமியம் எத்தனை மகத்துவமானது என்பதன் பக்கம் நம் கவனத்தை ஈடுபட வைக்கிறார்:

“ஒளிரும் பரிதியை விடியலில் கண்டேன்
உள்ளமையின் தோட்டத்திடம் இவ்வாறு கேட்டேன்:

’சூரியச் சுடர்களின் மூச்சிலிருந்தே ஒளிர்கின்றாய் நீ
உன் நதிகளின் நீர் உருகிய வெள்ளி போல் உள்ளது

கதிரவன் உன் முகத்தை
ஒளியின் நகை கொண்டு அலங்கரித்துள்ளான்
அந்த மெழுகுவத்தியே
உன் சபையைப் பிரகாசம் ஆக்கியுள்ளது

உன் ரோஜாவும் ரோஜாத் தோட்டமும்
சொர்க்கத்தின் சித்திரங்களாய் உள்ளன
இவை அனைத்தும்
’வஷ்ஷம்ஸ்’ அத்தியாயத்தின் விளக்கங்களாய் உள்ளன

உன் பூக்களின் ஆடை சிவப்பாகவும்
மரங்களின் ஆடை பச்சையாகவும் உள்ளது
உன் அவையின் தேவதைகளில்
சிலர் சிவப்பு சிலர் பச்சை போலும்

கீழ்வானில் செம்மேகங்கள் தோன்றும் போது
அது உன் கூடாரத்தின் பொன் விளிம்பாகிறது

அந்தியின் சிவப்பு
கண்களுக்கு எத்தனைக் களிப்பு!
ரோஜா நிற மதுவை
மாலையின் கோப்பையில் ஊற்றிவிட்டாய்!

உன் மதிப்பும் மகத்துவமும் பெரிது
உன் ஒளித்திரையால் போர்த்தப்பட்டுள்ளன
ஒவ்வொரு பொருளும்

வைகறை உன் மகத்துவத்தின்
கேசாதி பாத வருணனை!
இருளின் சுவடுகூட இல்லை
சூரியனின் கீழே

இவ்வொளியின் நகரத்தில்
நானும் வசிக்கிறேன் எனினும்
என் விதியின் நட்சத்திரம்
பொசுங்கி வீழ்ந்தது ஏன்?

ஒளியை விட்டும் தொலைவாக
இருளின் கைதியாய் இருக்கின்றேன்
நான் ஏன் இத்தனைப் பரிதாபமாய்,
கதியிலியாய், பாவியாய் இருக்கின்றேன்?’

இப்படி நான் புலம்பி இருக்கையில்
எங்கிருந்தோ வந்ததொரு குரல்
வானின் விளிம்பில் இருந்தோ
அல்லது பூமிப் பரப்பில் இருந்தோ

’என் இருப்பும் தோற்றமும்
உன் ஒளியைச் சார்ந்தே உள்ளன
பிரபஞ்சமெனும் ரோஜாத் தோட்டத்தின்
தோட்டக்காரன் நீயே

அழகின் கூட்டம் நீ
நான் உன் நிழற்படம்!
காதலின் வேதம் நீ
உன் விளக்கவுரை நான்!

என் அலங்கோல நிலைகளைத்
திருத்தி அமைத்தவன் நீ
என்னால் இயலாத சுமையைத்
தோளில் ஏற்றவன் நீ

என் இருப்போ
சூரிய ஒளியின் யாசகன்
அந்தச் சூரியனின் தேவை இன்றி
ஒளி வீசுபவன் நீ!

சூரியன் இல்லை எனில்
என் பூக்காடு வெறும் சாக்காடு
வாழ்விடம் என்னும் என் பெயர்
சிறைக்கூடம் என்று மாறிவிடும்

ஆ! இந்த ரகசியத்தை அறியாதவனே!
இச்சைகளின் வலையில் சிக்கிக் கிடப்பவனே!

அவலமே! உன் மறதி!
உன் விழி பருப்பொருளின் கைதி!
மகத்துவம் உன்னை அலங்கரித்தது
நீயோ இன்று உலகின் இரவலன்!

நீ உன் அகமியத்தை அறிந்தவன் ஆகிவிட்டால்
கதியற்றோன் அல்ல நீ
பாவியும் அல்ல நீ”

இக்கவிதையில் இரண்டு பேரின் உரை இருக்கின்றது. ஒன்று மனிதனின் பேச்சு. மற்றொன்று இயற்கையின் பேச்சு. மனிதன் இயற்கையை வியக்கின்றான். ஆனால் இயற்கை மனிதனை வியக்கின்றது.


”உன் ரோஜாவும் ரோஜாத் தோட்டமும்
சொர்க்கத்தின் சித்திரங்களாய் உள்ளன
இவை அனைத்தும்
’வஷ்ஷம்ஸ்’ அத்தியாயத்தின் விளக்கங்களாய் உள்ளன”
(குல் ஒ குல்ஸார் தேரே ஃகுல்த் கி தஸ்வீரே(ன்) ஹை(ன்)
எ சபீ சூராயெ வஷ்ஷம்ஸ் கி தஃப்சீரே(ன்) ஹை(ன்))
என்று மனிதன் இயற்கையைப் பார்த்துக் கூறுகின்றான். சூரா அஷ்-ஷம்ஸ் (சூரியன்) என்பது திருக்குர் ஆனின் 91-வது அத்தியாயம் ஆகும். அதன் முதல் வசனம்,
”சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக”
(வஷ்ஷம்ஸி வள்ளுஹாஹா -91:1)
என்று சூரியனைப் பற்றிக் குறிப்பிடுவதால் அதற்கு அவ்வாறு பெயர் சூட்டப்பட்டுள்ளது. மற்றபடி அது சூரியனின் சிறப்புக்களைப் பேசும் அத்தியாயம் அல்ல!

அதாவது, இவ்வுலகம் சூரியனின் விளக்கம் என்பதாக மனிதன் பார்க்கிறான். ஆனால் இயற்கை அவனைப் பார்த்துச் சொல்கிறது:
”அழகின் கூட்டம் நீ
நான் உன் நிழற்படம்!
காதலின் வேதம் நீ
உன் விளக்கவுரை நான்!”
(அஞ்சுமன் ஹுஸ்ன் கீ ஹே தூ தேரீ தஸ்வீர் ஹூ(ன்) மெய்(ன்)
இஷ்க் கா தூ ஹே ஸஹீஃபா தேரீ தஃப்சீர் ஹூ(ன்) மெய்(ன்))


சூரியனின் ஒளியை மனிதன் வியக்கிறான். ஆனால் அவ்வொளி அவனின் இருண்ட அகத்தை வெளிச்சமாக்கவில்லை. எனவே அகமிய ஒளியை விட்டும் தான் தூரமாக இருப்பதை அவன் உணர்கிறான்:
“ஒளியை விட்டும் தொலைவாக
இருளின் கைதியாய் இருக்கின்றேன்”
(நூர் சே தூர் ஹூ(ன்) ழுல்மத் மே(ன்) கிரஃப்தார் ஹூ(ன்) மெய்(ன்))

இவ்வாறு கவலைப் படும் மனிதனுக்கு அவனது அகமிய எதார்த்தம் (ஹகீக்கத்) என்ன என்பதை இயற்கை அவனிடம் சொல்கிறது:
”என் இருப்போ
சூரிய ஒளியின் யாசகன்
அந்தச் சூரியனின் தேவை இன்றி
ஒளி வீசுபவன் நீ!”
(நூரே ஃகுர்ஷீத் கீ முஹ்தாஜ் ஹே ஹஸ்தீ மேரீ
அவ்ர் பே மின்னத்தெ ஃகுர்ஷீத் ச்சமக் ஹே தேரீ)

அது மட்டுமல்ல, இன்னும் ஒருபடி மேலாகச் சொல்கிறது:
”என் இருப்பும் தோற்றமும்
உன் ஒளியைச் சார்ந்தே உள்ளன”
(ஹே தேரே நூர் சே வாபஸ்தா மேரீ பூத் ஒ நுமூத்)

அதாவது, மனிதன் இறைவனின் பிரதிநிதி (ஃகலீஃபத்துல்லாஹ் -2:30) ஆவான். இந்த அந்தஸ்த்து வேறு எந்தப் படைப்புக்கும் அருளப்படவில்லை. மனிதன் இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டது பற்றித் திருக்குர்ஆன் சொல்கிறது:
”நிச்சயமாக வானங்களையும் பூமியையும் மலைகளையும்
பொறுப்பைச் சுமந்து கொள்ளுமாறு முன்வைத்தோம்
ஆனால் அவை அதனைச் சுமக்க மறுத்தன
அதைப் பற்றி அவை அஞ்சின
ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்
நிச்சயமாக மனிதன்
அநியாயக்காரனாகவும் அறிவிலியாகவும் இருக்கிறான்”
(33:72)

இவ்வசனத்தின் கருத்தினையே மனிதனிடம் இயற்கை இவ்வாறு கூறுவதாக அல்லாமா இக்பால் பாடுகிறார்:
“என்னால் இயலாத சுமையைத்
தோளில் ஏற்றவன் நீ”
(பார் ஜொ முஜ் சே ந உட்டா வொ உ(ட்)டாயா தூனே)

மேற்படி வசனத்தில் மனிதனின் நிலை பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது,
நிச்சயமாக மனிதன் அநியாயக்காரனாகவும் அறிவிலியாகவும் இருக்கிறான்” (இன்னஹூ கான ழலூமன் ஜஹூலா -33:72) என்று சொல்லியிருப்பதன் கருத்து மனிதன் இறைவனை அறியாமல் இருக்கும் நிலை என்பதுதான்.

ஏனெனில், “இன்னும் ஜின்களையும் மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி நான் படைக்கவில்லை” (மா ஃகலக்துல் ஜின்ன வல் இன்ச இல்லா லியஃபுதூன் -51:56) என்னும் திருவசனத்திற்கு நபித்தோழர் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “என்னை வணங்குவதற்காகவே அன்றி... – அதாவது என்னை அறிவதற்காகவே அன்றி...” (இல்லா லியஃபுதூன் அய்யு இல்லா லியஃரிஃபூன்) என்று விளக்கம் தந்தார்கள். எனவே மனிதன் அநியாயக்காரன் ஆவது அவன் இறைவனை அறியாத மடையனாய் இருப்பதனால்தான் என்பது தேற்றம். எனவேதான் அநியாயக்காரனாகவும் என்பதுடன் அறிவிலியாகவும் என்பதும் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.

மேற்கண்ட வசனத்தில் மனிதர்களுக்கு முன் ஜின்கள் குறிப்படப்பட்டுள்ளது கவனத்திற்குரியது. அது ஏன்? ஆனால் வானவர்கள் (மலாஇக்) பற்றி இங்கே குறிப்பிடப்படவில்லை. இறைவனை அறியாததால் அநியாயம் (ழுல்ம்) உண்டானது முதலில் ஜின் இனத்தில்தான். அதுவும் மனிதனை வைத்து!

இப்லீஸ் என்னும் ஷைத்தான் எப்படி அநியாயக்காரன் ஆனான் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவன் முதல் மனிதரான ஆதம் நபிக்குச் சிரம் சாய்க்காத (சஜ்தா செய்யாத) காரணத்தினால் இறைநெருக்கத்தை இழந்து, இறைநிராகரிப்பாளனாக ஆனதை எண்ணிப் பார்க்கவும்.
“அது சமயம் வானவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள்;
இப்லீஸைத் தவிர; அவன் பெருமை அடித்தவனாக
நிராகரிப்பாளர்களில் ஒருவன் ஆகிவிட்டான்”
(ஃபசஜதல் மலாஇகத்து குல்லுஹும் அஜ்ம்ஊன்; இல்லா இப்லீஸ்; இஸ்தக்பர வ கான மினல் காஃபிரீன் -38:73,74)

இறை நிராகரிப்பு (குஃப்ரு) மற்றும் இணைவைப்பு (ஷிர்க்) ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு உண்டு. இதில் அதுவும் அதில் இதுவும் இருப்பதைப் பற்றி நுட்பமான விளக்கங்கள் மார்க்க அறிஞர்களால் செய்யப்பட்டுள்ளன. இங்கே நாம் கவனிக்க வேண்டியது இணைவைப்பு என்பது அநியாயம் என்பதிலும் அடங்கியது என்பதாகும்.
”நிச்சயமாக இணைவைத்தல் மிகப்பெரும் அநியாயமாகும்” (இன்னஷ் ஷிர்க்க லழுல்முன் அழீம் -31:13)

இறைவனை அறியாத காரணத்தினால் நிராகரிப்பும் இணைவைப்பும் உண்டாகின்றன. ஆதம் நபிக்குச் சிரம் பணிய இப்லீஸ் மறுத்தது ஏன்? அவனே ஒரு காரணம் சொல்கிறான்: “’நானே அவரை விட மேலானவன்; என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்’ என்று கூறினான்” (கால அனா ஃகைரும் மின்ஹு; ஃகலக்தனீ மின் நாரின் வ ஃகலக்தஹூ மின் தீன் -38:76)

இப்லீஸ் இறைவனை வெளிப்படையாக அறிந்தவனாகத்தான் இருந்தான். ஆனால் அவன் மனிதனின் அகமியம் என்ன என்பதை அறியவில்லை. மனிதனின் மூலப்பொருள் களிமண் என்பது வரைதான் அவனது அறிவு எட்டுகிறது. மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள அந்தரங்கத் தொடர்பினை அவன் அறியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவனுக்குத் தன் அகமியம் என்ன என்பதே தெரியவில்லை. அதனால்தான் தன் மூலப்பொருள் நெருப்பு என்பது வரை மட்டுமே அவனின் அறிவு செல்கிறது. நெருப்பு, களிமண் ஆகியவை சுயமாகத் தோன்றிய சுயம்புகள் அல்ல. அவை பூர்வீகப் பொருட்களும் (கதீம்) அல்ல. எனவே அவற்றின் மூலம் எது என்பதைப் பற்றிய ஞானம் அவனிடம் இல்லை.

அதாவது, இப்லீஸ் தன் அகமியத்தைப் பொருத்தவரை அறிவிலியாக இருந்தான். மனிதனின் அகமியத்தைப் பொருத்தவரை அறிவிலியாக இருந்தான். எனவே அல்லாஹ்வின் விஷயத்திலும் அறிவிலி ஆகிவிட்டான். அதனால் அவனில் அநியாயம் விளைந்தது.

இறைவனை அறிய வேண்டிய இரு நிலைகள் உள்ளன. ஒன்று தன்ஸீஹ். மற்றொன்று தஷ்பீஹ்.

தன்ஸீஹ் என்பது இறைவனின் தனித்த நிலை. அதாவது, படைப்புக்களை விட்டும் அப்பாலாகி இருக்கும் நிலை.

தஷ்பீஹ் என்பது இறைவன் படைப்புக்களுடன் இருக்கும் நிலை. அவன் எவ்வாறு படைப்புக்களுடன் இருக்கிறான் என்று அறிவதே தஷ்பீஹ் பற்றிய ஞானம் ஆகும்.

இப்லீஸிடம் இருந்தது தன்ஸீஹ் நிலையில் இறைவனைக் காணும் அறிவு மட்டுமே. அவனிடம் தஷ்பீஹின் அறிவு இல்லை. அதாவது, அல்லாஹ் ஆதமுடன் எவ்வாறு இருக்கிறான் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.

இவ்விரு நிலைகளிலும் இறைவனை அறிந்தவரிடமே ஏகத்துவத்தின் அறிவு (இல்முத் தவ்ஹீத்) இருக்கின்றது. இரண்டில் ஒன்று மட்டும் இருப்பது ஆபத்து.

அதாவது, தன்ஸீஹ் நிலையில் மட்டுமே இறைவனை அறிந்தவன் படைப்புக்களில் அல்லாஹ் இல்லை என்று சொல்லி குஃப்ரு என்னும் நிராகரிப்பில் ஆகிவிடுகிறான். இப்லீஸ் அப்படித்தான் காஃபிர் ஆனான்.

தஷ்பீஹ் நிலையில் மட்டுமே இறைவனை அறிபவன் இறைவன் படைப்புக்களுக்கு அப்பாற்பட்டவன் அல்ல என்னும் நிலையை அவன் மீது கற்பனை செய்வதால் இணைவைப்பில் ஆகிவிடுகிறான். அதாவது இடப் பரிணாமங்களில் இறைவனை மட்டுப்படுத்தி அவனையும் ஒரு படைப்புப் பொருளைப் போல் பாவிக்கின்றான். இதன் நீட்சியாக, இறைவனும் படைப்பும் ஒன்றே என்னும் இணைவைப்பும் உண்டாகி விடுகிறது.

இவ்விரு நிலைகளையும் பற்றி மகாஞானி இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு பாடினார்கள்:
“தன்ஸீஹில் மட்டும் இறைவனை விளங்கினால்
அவனை நீ கட்டுப்பட்டவன் என்று விளங்கிவிட்டாய்
தஷ்பீஹில் மட்டும் இறைவனை விளங்கினால்
அவனை நீ மட்டுப்பட்டவன் என்று விளங்கிவிட்டாய்
இரண்டு குறிப்புக்களிலும் அவனை நீ அறிந்து கொண்டால்
ஞானிகளின் தலைவனும் வழிகாட்டியும் ஆவாய்”
(வ இன் குன்த பித்தன்ஸீஹி குன்த முகய்யிதா
வ இன் குன்த பித்தஷ்பீஹி குன்த முஹத்ததா
வ இன் குன்த பில்அம்ரைனி
குன்த இமாமல்லில் ஆரீஃபீன வ சய்யிதா)

அல்லாமா இக்பாலின் கவிதையில் மனிதன் இயற்கையிடம் கேட்கிறான்:
”ஒளியை விட்டும் தொலைவாக
இருளின் கைதியாய் இருக்கின்றேன்
நான் ஏன் இத்தனைப் பரிதாபமாய்,
கதியிலியாய், பாவியாய் இருக்கின்றேன்?”


இயற்கை கூறும் பதிலில் மனிதன் தன் அகமிய நிலையை மறந்து, அதனால் இறைஞானமும் இன்றி அகக்குருடனாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் இக்பால்:
“அவலமே! உன் மறதி!
உன் விழி பருப்பொருளின் கைதி!
மகத்துவம் உன்னை அலங்கரித்தது
நீயோ இன்று உலகின் இரவலன்!”
(ஹாயே கஃப்லத் கெ தேரீ ஆன்ஃக் ஹே பாபந்தெ மஜாஸ்
நாஸ் ஸீபா தா துஜே தூ ஹே மகர் கர்மெ நியாஸ்)

இந்நிலைதான் இப்லீஸை வழிதவற வைத்தது. அவனின் பார்வை ‘பாபந்தெ மஜாஸ்’-ஆக (பருப்பொருளின் கைதியாக) இருந்தது. அதாவது, தன்னுடலின் மூலமான நெருப்பு மற்றும் ஆதம் நபியது உடலின் மூலமான மண் ஆகிய பருப்பொருட்களைத் தாண்டி அவனின் பார்வை செல்லவில்லை.

முதல் மனிதனின் மகத்துவம் எது? வானவர்கள் அனைவரும் அவனுக்கு அடிபணிந்ததாகும். ஆனால் இன்று அம்மனிதன் உலகின் இரவலனாக அதாவது பருப்பொருளின் இரவலனாக இருக்கிறான். இப்லீஸ் தன்னுடைய குறைப் பார்வையை மனிதனிடம் உண்டாக்கி அவனைப் பருப்பொருளின் கைதியாக்கி விடுகிறான். எப்படி எனில், ஆதமுக்கு அவன் சிரம் பணிய மறுத்து இறைவனிடம் வாதாடி தண்டனையும் அவகாசமும் பெற்ற பின்னர் அவன் இவ்வாறு சொன்னான்:
“என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால்
இவ்வுலகில் அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படிச் செய்து
அவர்கள் அனைவரையும் வழிகெடுத்து விடுவேன்;
அவர்களில் அந்தரங்க சுத்தியுள்ள
உன் நல்லடியார்களைத் தவிர”
(கால றப்பி பிமா அக்வைத்தனீ லஉஸய்யினன்ன லஹும் ஃபில் அர்ளி வ லஉக்வியன்னஹும் அஜ்மஈன்; இல்லா இபாதக்க மின்ஹுமுல் முஃக்லஸீன் – 15:39,40)

’இவ்வுலகில் அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படிச் செய்து’ என்று அவன் சொன்னதன் கருத்து, இவ்வுலகப் பொருட்கள் இறைவனை மறைக்கும் திரையாக அவர்களுக்கு ஆகிப்போகுமாறு செய்தல் என்பதுதான். பிறகு அவர்கள் இவ்வுலகின் பொருட்களைக் காண்பார்கள் ஆனால் இறைவனின் பிரசன்னத்தை அதில் காண மாட்டார்கள். எனவே வெளியுலகம் சுயமே இயங்குவதாகக் கருதும் நிலை அவர்களிடம் உருவாகும். படைப்புக்களுக்குச் சுயத்தன்மையைச் சாற்றிவிடுவார்கள். இந்நிலையில்தான் பல்கீஸ் அரசியையும் அவர்களின் கூட்டத்தையும் இப்லீஸ் (ஷைத்தான்) ஆக்கியிருந்ததாக சுலைமான் நபியிடம் ஹுத்ஹுத் (கொண்டலாத்தி) பறவை கூறிற்று:
”அவளும் அவளுடைய சமூகத்தினரும்
அல்லாஹ்வை அன்றி
சூரியனுக்குச் சிரம் பணிவதை நான் கண்டேன்
அவர்களுடைய செயல்களை
அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து
அவர்களை நேரான வழியில் இருந்து தடுத்துள்ளான்
ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை”
(27:24)

மனிதர்களை வழி கெடுப்பேன் என்று இப்லீஸ் போட்ட சபதத்தில் “அந்தரங்க சுத்தியுள்ள உன் நல்லடியார்களைத் தவிர” (15:40) என்று சொல்லியிருக்கிறான். அகத்தூய்மையாளர் (முஃக்லிஸீன்) என்பவர்கள் அகத்தூய்மை (இஃக்லாஸ்) உள்ளவர்கள். திருக்குர்ஆனின் 112-வது அத்தியாயத்திற்கு ‘சூரத்துல் இஃக்லாஸ்’ என்றும் ‘சூரத்துத் தவ்ஹீத்’ என்றும் பெயர்கள் உண்டு. இஃக்லாஸ் (அகத்தூய்மை) என்பது தவ்ஹீதின் ஞானம்தான் (இல்முத் தவ்ஹீத்).

இப்லீசிடம் தவ்ஹீதின் ஞானம் இல்லாமல் போனதால்தான் அவன் வழிகெட்டுப் போனான் என்பது இதனால் விளங்கும். எனவேதான் இஃக்லாஸ் – தவ்ஹீத் எவரிடம் இருக்கிறதோ அவர்களை அவனால் வழிகெடுக்க இயலாது என்று அவனே கூறுகிறான்.

இப்லீஸிடம் இருந்த இறைஞானம் ஏகத்துவ ஞானம் (இல்முத் தவ்ஹீத்) அல்ல. அது இருந்திருந்தால் அவன் வழிகெட்டுப் போயிருக்க மாட்டான். அல்லாஹ் ஒருவன் (வாஹித்) என்பது அவனுக்குத் தெரியும். அல்லாஹ்தான் ரட்சகன் (றப்) என்பதும் அவனுக்குத் தெரியும். அல்லாஹ்தான் வணக்கத்திற்குரிய தெய்வம் (இலாஹ் – மஃபூத்) என்பதும் அவனுக்குத் தெரியும். எனினும் இவ்வறிவுகள் மட்டுமே ஏகத்துவ ஞானம் ஆகப் போதுமானவை அல்ல.

அதாவது தன்ஸீஹ் என்னும் நிலையில் அல்லாஹ்வை இப்லீஸ் அறிந்து வைத்திருந்தான். ஆனால் அது மட்டும் ஏகத்துவ ஞானம் என்னும் நிலையை எட்ட முடியவில்லை. தஷ்பீஹின் நிலையில் அல்லாஹ்வை அறியும் அறிவு இப்லீசிடம் இருக்கவில்லை. எனவே அவன் வழிகெட்டுப் போனான்.

ஆக, ஏகத்துவ ஞானம் (இல்முத் தவ்ஹீத்) என்பது அல்லாஹ்வை தன்ஸீஹ் தஷ்பீஹ் ஆகிய இரு நிலைகளிலும் அறிவதுதான்.

அல்லாமா இக்பாலின் மேற்படிக் கவிதையில் வரும் மனிதன் தன் அகமியத்தை அறியாதவனாக இருக்கிறான். இறைஞானம் அவனிடம் இல்லை. இப்லீஸின் நிலையில் அவன் இருக்கிறான். எனவே அவன் இருளின் கைதியாய் இருக்கிறான். இத்தகைய மனிதனின் நிலை பற்றித் திருக்குர்ஆன் சொல்கிறது:
“நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்”
(இன்னல் இன்சான லஃபீ ஃகுஸ்ர் – 103:2)

இந்த நஷ்டநிலை, ’ழலூமன் ஜஹூலா’ – அநியாயக்கார அறிவிலி என்னும் நிலை மாறவேண்டும் எனில் இறைஞானம் அவசியம். அந்த இறைஞானம் தன்ஸீஹ் நிலையில் மட்டுமல்லாது தஷ்பீஹ் நிலையிலும் இறைவனை அறிவது கொண்டு உண்டாகும். அதற்குத் தன் அகமியத்தை அறிவது அவசியம். இதனையே இயற்கை மனிதனுக்குச் சொல்வதாக இக்பால் இவ்வாறு பாடுகிறார்:
”நீ உன் அகமியத்தை அறிந்தவன் ஆகிவிட்டால்
கதியற்றோன் அல்ல நீ
பாவியும் அல்ல நீ”


”மனிதன் என் ரகசியம். நான் அவனின் ரகசியம்” (அல்-இன்சானு சிர்ரீ வ அனா சிர்ரஹூ) என்பது இறைவாக்கு (ஹதீஸ் குத்ஸி).

இந்த அகமிய ஞானத்தைப் பெறும் வழியாகத்தான் “தன்னை எவன் அறிந்தானோ அவன் தன் இறைவனை அறிந்தான்” (மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப றப்பஹு) என்று சொல்லப்பட்டது.

மனிதன் தன் அகமியத்தை அறியும் வரை இவ்வுலகம் அவனுக்குப் பெரிதாகத் தெரிகிறது. ஹழ்றத் அலீ (ரலி) சொன்னார்கள்: “பார்ப்பதற்குச் சிறிய பிரபஞ்சம் (ஆலமுல் அஸ்கர்) என்று தெரிகின்றாய் நீ. உண்மையில் பெரிய பிரபஞ்சம் (ஆலமுல் அக்பர்) நீயே!”

மனிதனின் இந்த மேன்மையான நிலையின் ரகசியங்கள் தெரியவரும்போது இவ்வுலகம் உண்மையில் அவனை அடைத்து வைத்துள்ள ஒரு சிறைச்சாலதான் என்பதைக் கண்டுகொள்வான். ”இவ்வுலகம் இறைநம்பிக்கையாளனுக்குச் சிறைச்சாலை” (அத்துன்யா சிஜ்னுல் முஃமின்) என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதை விளங்கிக் கொள்வான்.

மனிதனுக்கு வானவர்கள் சிரம் பணிந்தார்கள் என்பதில் பிரபஞ்சமே அவனுக்குச் சிரம் பணிந்த நிலை இருக்கிறது. இந்த நிலை நபிமார்களின் எதார்த்தமாக இருக்கின்றது. யூசுஃப் நபி தன் தந்தையான யஃகூப் நபியிடம் சொன்னதைக் கவனிக்கவும்:
“யூசுஃப் தன் தந்தையாரிடம்:
‘என் அருமைத் தந்தையே!
பதினோரு நட்சத்திரங்களும் சூரியனும் சந்திரனும்
எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே
நான் கண்டேன்’ என்று கூறியபொழுது...”
(இத் கால யூசுஃபு லிஅபீஹி யாஅபதி இன்னீ ரஐத்து அஹத அஷர கவ்கபன் வஷ்ஷம்ச வல்கமர ரஐத்துஹும் லீ சாஜிதீன் -12:4)                                          

மனிதன் இறைவனின் பிரதிநிதி. நபிமார்கள் மனிதர்கள். மனிதர்களாகப் பிறந்தவர்கள் அனைவருக்கும் உன்னதமான ஒரு நிலை வழங்கப்பட்டுள்ளது. அந்த நபிமார்களின் நெஞ்சம் சுமந்த ஏகத்துவ இறைஞானத்தை மனிதன் அடைந்தால் அவன் சூரியனுக்கும் சந்திரனுக்கும் தலைசாய்த்துக் கொண்டிருக்கமாட்டான். மாறாக, சூரியனும் சந்திரனும் அவனுடைய அகமியத்திற்கும் கட்டுப்பட்டதாக மாறிவிடும்.
“நிச்சயமாக அல்லாஹ்
வானங்களில் உள்ளவற்றையும்
பூமியில் உள்ளவற்றையும்
உங்களுக்கு வசமாக்கித் தந்திருக்கிறான் என்பதையும்
உங்கள் மீது புறத்திலும் அகத்திலும்
தன் அருட்கொடையை நிரப்பியுள்ளான் என்பதையும்
நீங்கள் காணவில்லையா?”
(அலம் தரவ் அன்னல்லாஹ சஃக்கர லகும் மா ஃபிஸ்ஸமாவாத்தி வ மா ஃபில் அர்ளி வ அஸ்பக அலைக்கும் நிஃமஹு ழாஹிரன் வ பாத்தினா -31:20)

பல்கீஸ் ராணிக்கு எழுதிய கடிதத்தில் மனிதனின் உன்னத நிலை என்ன என்பதை சுலைமான் நபி குறிப்புக் காட்டிவிட்டார்கள். “நிச்சயமாக இது சுலைமானிடமிருந்து வந்துள்ளது; நிச்சயமாக இது ‘அருளாளனும் கருணையாளனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்’” (இன்னஹு மின் சுலைமான வ இன்னஹு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் -27:30) என்று அவர்கள் தன்னை தஸ்மியா மந்திரத்திற்கு முன் நிறுத்திக் கூறியதில் ஆதம் நபி பெற்றிருந்த ’வானவர்கள் அடிபணியும் நிலை’ தனக்கும் இருப்பதாகக் காட்டிவிட்டார்கள். அந்நிலை இறைவன் வெளிப்படும் தலமாக (மழ்ஹரெ இலாஹி) மனிதன் இருக்கும் நிலை ஆகும்.

”எவர் தூதருக்குக் கீழ்ப்படிகின்றாரோ
நிச்சயமாக அவர் அல்லாஹ்வுக்கே கீழ்படிகின்றார்”
(மன் யுதியிர் ரசூல ஃபகத் அதாஅல்லாஹ -4:80)
என்று நபி(ஸல்) அவர்கள் குறித்து திருக்குர் ஆன் விளம்பும் உன்னத நிலையில் சுலைமான் நபி தன்னைக் கண்டார்கள். எனவே அவர்கள் பல்கீஸ் அரசிக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்கள்:
“நீங்கள் என்னிடம் பெருமை அடிக்காதீர்கள்
முற்றிலும் வழிபட்டவர்களாக என்னிடம் வாருங்கள்”
(அல்லா தஃலூ அலய்ய வஃதூனீ முஸ்லிமீன் -27:31)

அகக்கண் தரிசனம் இல்லாத இப்லீசிடம் இருந்த ஒரு குணத்தை இங்கே சுலைமான் நபி சுட்டிக்காட்டியுள்ளார்கள்; பெருமை. இப்லீசைப் பற்றி அல்லாஹ் சொன்னான்: “அவன் பெருமை அடித்தவனாக காஃபிர்களில் ஆகிவிட்டான்” (அஸ்தக்பர வ கான மினல் காஃபிரீன் -38:74)

இவ்வாறு சுட்டிக் காட்டியதன் மூலம் சுலைமான் நபி தன் ஆன்மிக அந்தஸ்த்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதாவது இறைத்தூதரிடம் பெருமையடிப்பவர்கள் ஷைத்தானின் மயக்கில் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள்.

இறைத்தூதரிடம் பெருமை அடிப்பது அல்லாஹ்விடமே பெருமை அடிப்பதாகும்.
இறைத்தூதருக்கு அடிபணிவது அல்லாஹ்வுக்கே அடிபணிவதாகும்.

(தொடரும்) 

No comments:

Post a Comment