Monday, September 24, 2012

சாவித் துவாரம்




புளகத்தில் கத்த நினைத்த
பொழுதுகளை என்ன செய்தாய்?

மலை முகட்டில்
மாலை வெயிலின்
மஞ்சள் விரல்கள் உன்
விழி வருடிய
விந்தைக் கணங்களில்...

களி கொண்ட
காற்றின் அலைகளில்
கற்பூர தேகமாய்
கரைந்தும் கரையாமல்
நேற்று இன்று நாளை
மறந்து போயிருந்த
மந்திர வேளையில்...

ஒரு புல்
ஒரு கல்
உலகினும் பெரிதாய்
உணரக் கிடைத்த
உள்ளுணர்வின் நொடியில்...

ஒரு கையில் மகனும்
ஒரு கையில் மகளுமாய்
கடலின் அலைகளில்
கால் நனைத்திருந்து
பிள்ளைகளின் பிள்ளையாய்
சட்டென்று மாறிய
சந்தோஷ நிமிஷத்தில்...

உலகமே ஒரு
பெரிய பலூன் என்று
உள்ளத்தின் வாய் கொண்டு
ஊதிப்பார்த்த
உன்மத்தப் பெருமிதத்தில்...

சாவிகளாய்ச்
சமைந்து வந்த
சன்னத முகூர்த்தங்களில்
சடங்குகளின் கைதியாய்...
இதயம் திறக்காமல்
இப்படியே ஏன்
இருந்து விட்டாய்?

புளகத்தில் கத்த நினைத்த
புனிதப் பொழுதுகளை
மருந்தினைப் போல்
மௌனமாய்
ஏன் விழுங்கிப் போனாய்?

a

No comments:

Post a Comment