சூஃபி
ஞானி இப்னுல் அரபி (ரஹ்) அவர்களின் முக்கியமான மூன்று நூற்களில் ஒன்று ’ஃபுஸூசுல் ஹிகம்’
(மெய்யறிவின் ஒளிச்சுடர்கள்). திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட இருபத்தைந்து இறைத்தூதர்களின்
ஞானத்தை விளக்கும் அந்த நூலில் சுலைமான் நபியின் ஞானத்தை விளக்கும் அத்தியாயத்தை ஸபா
நாட்டின் அரசிக்கு சுலைமான் நபி எழுதிய கடிதத்தை வைத்தே அவர்கள் தொடங்கியுள்ளார்கள்.
அந்தக்
கடிதத்தை ஹூத்ஹுத் பறவை கொண்டு சென்று பல்கீஸ் ராணியின் மீது போட்டவுடன் அதனை அவள்
எடுத்துப் படித்துப் பார்த்துவிட்டுத் தன் அவையினரை நோக்கி அதனைப் புகழ்ந்து வாசித்தும்
காட்டுகிறாள்:
”சொன்னாள்:
‘பிரமுகர்களே!
கண்ணியமுள்ள
ஒரு கடிதம்
என்னிடம்
போடப்பட்டுள்ளது.
நிச்சயமாக
இது சுலைமானிடமிருந்து வந்துள்ளது;
நிச்சயமாக
இது
’அருளாளனும்
கருணையாளனுமாம்
அல்லாஹ்வின்
திருப் பெயரால்...
நீங்கள்
என்னிடம் பெருமையடிக்காதீர்கள்
முற்றிலும்
வழிபட்டவர்களாக
என்னிடம்
வாருங்கள்”
(27:29-31)
சுலைமான்
நபி எழுதியிருந்த செய்தி “இன்னஹு மின் சுலைமான
வ இன்னஹு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” (27:30) என்பதாகும். இந்த அறபி வாசகம்
இரு கோணங்களில் வாசிக்க இடம் தருகிறது.
அதன்
முற்பகுதியான ’இன்னஹு மின் சுலைமான்’ (நிச்சயமாக இது சுலைமானிடமிருந்து) என்பது பல்கீஸ்
அக்கடிதம் பற்றித் தன் அவையினரிடம் சொல்வது என்று கொண்டால் அக்கடிதம் ‘பிஸ்மில்லாஹிர்
ரஹ்மானிர் ரஹீம்’ (அருளாளனும் கருணையாளனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்று ஆரம்பிப்பதாகக்
கொள்ளலாம். ஏனெனில் அதுவே திருக்குர்ஆன் அத்தியாயங்களின் ஆரம்பமாகவும் மேலும் அனைத்துக்
காரியங்களுக்கான ஆரம்ப மந்திரமாகவும் இருக்கின்றது. இக்கோணத்தின் படியே பெரும்பான்மை
மொழிபெயர்ப்புக்கள் அமைந்துள்ளன.
அவ்வாசகம்
முழுவதுமே சுலைமான் நபி எழுதிய பிரதிதான் என்று காண்பது இன்னொரு கோணம். இவ்வாறு கொள்ளும்போது
‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பதற்கு முன் சுலைமான் நபி தன் பெயரை எழுதியிருதார்கள்
என்று ஆகும். இக்கோணத்தில் இதனை இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் சுலைமான் நபியின் ஞானம்
என்னும் அத்தியாயத்தின் ஆரம்பத்தில் விளக்குகின்றார்கள்.
”பல்கீஸுக்குத்
தாங்கள் எழுதிய கடிதத்தில் சுலைமான் நபி (அலை) அவர்கள் இறைவனுடைய பெயருக்கு முன் தங்கள்
பெயரை எழுதியதற்காகச் சிலர் அவர்களைக் குறை கூறியதுண்டு. ஆனால், இது அவ்வாறன்று. அந்தக்
கடிதத்தை பல்கீஸ் அவர்களே கண்ணியமான கடிதம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ‘உண்மையாகவே
அந்தக் கண்ணியமான கடிதம் என்னை நோக்கி வீசப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்கள்”
(”மெஞ்ஞான ஒளிச்சுடர்கள்”, தமிழில்:ஆர்.பி.எம்.கனி,
பக்கம்:105)
இதன்
தாத்பரியம் என்ன என்பதை இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்:
“யதார்த்தம்
ஒன்றாக இருப்பினும் தோற்றங்களில் படித்தரங்கள் அவசியமாயின.
இதனால்தான்,
நாம் ஒருவன் இன்னொருவனை விட அறிவாளியாக இருக்கிறான் என்று கூறுகிறோம். இதனால், எந்த
ஒரு தோற்றத்தோடு மட்டும் அவனை மட்டுப் படுத்திவிட வேண்டாம். ஒன்றில் நீ அவனை உணருகையில்
இன்னொரு தோற்றத்தில் நீ அவனைப் புறக்கணிக்க வேண்டாம். ‘அவனுக்கு உவமையானது எதுவுமே
இல்லை; அவன் யாவையும் பார்ப்பவன், யாவையும் கேட்பவன்’ (அத்: 42; ஆ:11) என்று அவனே அருளியுள்ளதில்
அவனே தன்னை ஊர்ஜிதம் செய்தும், தன்னை ஒதுக்கியும் பேசுகிறான். இம்மையிலும் மறுமையிலும்
உண்டான பார்ப்பவர்கள் கேட்பவர்கள் அனைவரோடும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளான். இவ்வுலகில்
உள்ள பொருள்கள் அனைத்தும் ஜீவத்துடிப்புடன் விளங்குகின்றன. ஆனால், சிலவின் உயிர்த்துடிப்பு
மற்றவற்றின் பார்வையை விட்டும் மறைவானதாக இருக்கிறது. மறுமையில் அந்த உயிர்த்துடிப்பு
யாவரும் உணரும்படியானதாக ஆகிவிடும். ஏனெனில் அது உயிர்களின் உறைவிடம் ஆகும். சாதாரண
பார்வை சக்தியுடையவரை விட அகமியப் பார்வையுடையவர்கள் தங்கள் பார்வை மூலம் பொருள்களை
ஊடுருவி இறைவனையே காண்கின்றனர். அதாவது இறைவன் மற்றவர்களை விட இவர்களுக்கே அதிகமும்
புலப்படுபவனாய் இருப்பான். எனவே, இறைவனுடைய அஸ்மாக்களில் [நாமங்களில்] படித்தரங்கள்
உண்டு என்று நான் சொன்னதை மறந்துவிடாதீர்கள்; அவைதாம் இறைவனின் எதார்த்தம் என்பதில்
சிறிதும் ஐயத்திற்கு இடமே இல்லை. ஒவ்வொன்றிலும் பெயரிடப்பட்டது இறைவனேயாகும். இதனால்
சிருஷ்டிக்கப்பட்டதன் ’மாஹிய்யத்’ (சாரம்) இறைவனுடைய தான் தன்மையின் சாரம்தான் என்று
சொல்வோரை மறுத்துப் பேச வேண்டாம். இன்றேல், சுலைமான் (அலை) அவர்கள் இறைவனின் பெயருக்கு
முன் தமது பெயரை (பல்கீஸுக்கு எழுதிய நிரூபத்தில்) குறிப்பிட்டிருப்பது எங்ஙனம்? இறைவனுடைய
வரம்பற்ற அருட்கொடைகளால் உருப்பெற்றவர்களுள் அவர்கள் ஒருவர். சம்மானம் பெறுபவர் அதை
அளிப்பவன் முன் நின்றுதானே ஆக வேண்டும்.” (“மெய்யறிவின்
ஒளிச்சுடர்கள்”, தமிழில்:ஆர்.பி.எம்.கனி, பக்கம்:107,108)
இவ்வசனத்திற்கு
’அஃலா ஹழ்றத்’ அஹ்மத் ரஜா ஃகான் (ரஹ்) அவர்கள் செய்துள்ள உருது மொழிபெயர்ப்பு மேற்கண்ட
இரண்டு கோணங்களையும் உள்ளடக்கியதான பூடகத் தன்மையுடன், அதாவது மூல அறபி வாசகப் போக்கின்
அமைப்பிலேயே அமைந்துள்ளது : “பேஷக் வொ சுலைமான் கீ தரஃப் சே ஹே அவ்ர் பேஷக் வொ அல்லாஹ்
கெ நாம் சே ஹே ஜொ நிஹாயத் மெஹர்பான் ரஹம் வாலா” (கன்ஸுல் ஈமான் / பாரா 19)
பல்கீஸ் தன் பிரமுகர்களை நோக்கி “கண்ணியமுள்ள ஒரு கடிதம் என்னிடம் போடப்பட்டுள்ளது.” (இன்னீ உல்கிய இலய்ய கிதாபுன் கரீம் – 27:29) என்று சொன்னதன் மீது கொஞ்சம் கவனம் செலுத்துவோம்.
கடிதத்தை
ஹுத்ஹுத் பறவை தன் அலகில் கவ்விக்கொண்டு பறந்து போயிருக்கும் பட்சத்தில் அது மேலே இருந்து
பல்கீஸ் அரசியின் மீது அதனைப் போட்டிருக்கும். எனவே “உல்கிய” என்பதைப் போடப்பட்டது
(dropped) என்று மொழிபெயர்ப்பது சரி. இதே சொல் சுலைமான் நபி அப்பறவை அனுப்பியபோது கூறிய
வாசகத்திலும் இடம் பெறுகிறது:
“என்னுடைய
இக்கடிதத்தைக் கொண்டு செல்;
அவர்களிடம்
இதைப் போட்டு விடு;
பின்னர்
அவர்களை விட்டுப் பின்வாங்கி
அவர்களின்
முடிவென்ன என்று கவனி”
(27:28)
”ஃப அல்கிஹ்
இலைஹிம்” என்பதே ”அவர்களிடம் இதைப் போட்டுவிடு” என்பதன் மூல வாசகம். இதிலும் ஆங்கிலத்தில்
அல்கிஹ் என்பதற்கு deliver என்றே பெரும்பான்மை மொழிபெயர்ப்பாளர்கள் தந்துள்ளனர்.
Dropped
அல்லது Delivered இரண்டுமே இந்த இடத்தில் பொருந்துவ்தாகலாம். கொண்டு சென்றது பறவை என்பதை
வைத்து முன்னதும், அனுப்பியவர் மன்னரான ஓர் நபி மற்றும் அனுப்பப்பட்டது சத்தியத்தின்
பக்கம் அழைப்பதற்காக என்பதால் கண்ணியமான கடிதம் கண்ணியமான முறையில்தான் வழங்கப் பட்டிருக்க
வேண்டும் என்பதை வைத்துப் பின்னதும் பொருந்தும்.
எனினும்
இல்க்கா என்னும் மூலச் சொல்லினைக் கவனித்து இதனுள் ஓர் உட்பொருளும் தொனிக்கக் காண்கிறோம்.
அச்சொல்லுக்கு மேற்கூறிய இரு பொருள்களே அன்றி மொழிபு / வெளிப்பாடு (expression) என்னும்
ஒரு பொருளும் உண்டு. இப்பொருளை அக்கடிதம் பற்றி பல்கீஸ் சொன்ன வாசகத்தின் உட்பொருளாகக்
கொண்டால் “கண்ணியமிக்க ஒரு கடிதம் என்னிடம் வெளிப்படுத்தப் பட்டுள்ளது” என்றாகும்.
மேலும்
மேற்சொன்ன இரு வசனங்களிலும் (27:28,29) உள்ள கிதாப் என்னும் சொல்லுக்கு இந்நிகழ்வின்
பின்னணியைக் கவனித்து ‘கடிதம்’ என்னும் அர்த்தம் வழங்கப்படுகிறது. எனினும் கிதாப் என்பதற்கு
(வேத) நூல் என்னும் அர்த்தமும் உண்டு. சுலைமான் நபி அவர்கள் “இத்ஹப் பிகிதாபீ ஹாதா”
(என்னுடைய இக்கடிதத்தைக் கொண்டு செல்) என்று சொல்லிய இடத்தில் அவர்கள் தன் கரத்தால்
எழுதிய அது கடிதம் என்னும் பெயரைப் பெறுகிறது.
ஆனால்
‘கண்ணியமுள்ள ஒரு கடிதம் என்னிடம் போடப்பட்டுள்ளது’ என்று பல்கீஸ் சொல்லும் வாசகத்தில்
உள்ள “கிதாபுன் கரீம்” என்பதற்கு வெளிப்படையாக கடிதம் என்பதுதான் அர்த்தம். எனினும்
உட்பொருளாக தொனிக்கும் இரண்டு அர்த்தங்களைக் காண்கிறேன். அந்த இரண்டு அர்த்தங்களும்
இந்நிகழ்வில் (27-ஆம் அத்தியாயத்தின் 2-ஆம் மற்றும் 3-ஆம் ருகூக்கள்) உணர்த்தப்படும்
இறைத்தத்துவத்தைத் துலக்கித் தருபவை ஆகும்.
”கிதாப்”
என்பதற்கு இங்கே முதல் உட்பொருள் (வேத)நூல் என்பதாகும். வேதங்களைக் குறிக்க கிதாப்
என்னும் சொல் பயன்படுத்தப் படுவது அனைவரும் அறிந்ததே. இங்கே அது எப்படிப் பொருந்தும்
என்ற வினா எழும். சுலைமான் நபி அவர்கள் எழுதிய வாசகம் அதனைக் குறிக்கும்: “பிஸ்மில்லாஹிர்
ரஹ்மானிர் ரஹீம்” (அருளாளனும் கருணையாளனுமாம் அல்லாஹ்வின் திருப்பெயரால்). இது இறைவனால்
அருளப்பட்ட அனைத்து வேதங்களின் சாரம் ஆகும். இவ்வாசகம் பற்றி இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள்
தரும் விளக்கம் காண்க:
”’பிஸ்மில்லாஹ்’
என்ற அரபிப் பதத்தில் உள்ள ’பே’ என்னும் எழுத்து, ‘தாத்தெ-பஹத்’ என்னும் பரிபூரண தாத்தைக்
[தாத்தெ முத்லக்] குறிப்பதாகும். [Ablsolute Essence]. இதற்கும், ரஹ்மான் ரஹீம் என்ற
திருநாமங்களுக்கும் இடையில் அல்லாஹ் என்னும் பெயர் திரை (பர்ஜக்) ஆக விளங்குகிறது.
‘அல்-பாத்திஹா’ என்ற திருமறையின் ஆரம்ப அத்தியாயத்தின் ஆரம்பமாக முதலில் இந்த பிஸ்மில்லாஹ்
வருகிறது. இந்த அல்-பாத்திஹாவின் விளக்கமாகவே திருமறை வசனங்கள் யாவுமே அமைந்துள்ளன.
பேயிலுள்ள புள்ளி (நுக்தா) விருட்சம் முழுவதும் முளைத்து வெளிப்பட உதவிய விதையாக விளங்குகிறது.
சகல கல்யாண குணங்களையும் தன்னகத்தே கொண்டது ‘அல்லாஹ்’ என்ற பெயர். சகல சிபத்துகள்
(கல்யாண குணங்கள்), அஸ்மாயெ-இலாஹி (தெய்வத் திருநாமங்கள்) ஆகிய யாவுக்குமான பொதுப்
பெயராகும். அப்து (அடியான்) என்பது சகல அஸ்மாயெ-கியானியின் (சடதத்துவப் பெயர்களின்)
வெளிப்பாடாகும்.” ( ”மெய்யறிவின் ஒளிச்சுடர்கள்”,
தமிழில்:ஆர்.பி.எம்.கனி, பக்கம்:112)
இந்த
விளக்கத்தில் இருந்து ஒரு வரியை மட்டும் மீண்டும் கவனித்துப் பார்ப்போம்: பேயிலுள்ள
புள்ளி (நுக்தா) விருட்சம் முழுவதும் முளைத்து வெளிப்பட உதவிய விதையாக விளங்குகிறது.
அந்த விருட்சம் எது? சர்வ சிருஷ்டிகளின் தொகுப்பான பிரபஞ்சம் (காயனாத்) ஆகும். எனவே
‘கிதாப்’ என்பதற்கு இரண்டாம் உட்பொருள் பிரபஞ்சம் என்பது.
’இல்க்கா’
என்பதற்கும் ‘கிதாப்’ என்பதற்கும் மேற்கூறிய உட்பொருள்கள் கொண்டு பார்க்கையில் பல்கீஸ்
அவர்கள் சொன்ன “கண்ணியமுள்ள ஒரு கடிதம் என்னிடம் போடப்பட்டுள்ளது” (இன்னீ உல்க்கிய இலய்ய கிதாபுன் கரீம்
-27:29) என்பதன் வாசிப்பு பின்வருமாறு அமையும்:
“கண்ணியமான
வேதத்தின் சாரம் என்னிடம் வெளிப்படுத்தப் பட்டுள்ளது”
“கண்ணியமான
பிரபஞ்ச வெளிப்பாட்டின் தத்துவம் என்னிடம் வெளிப்படுத்தப் பட்டுள்ளது”
இந்தப்
பிரபஞ்ச வெளிப்பாட்டுத் தத்துவம்தான் பல்கீஸ் அவர்களும் அவர்களின் சமூகத்தினரும் அடைய
வேண்டிய ஞானமாக இருந்தது. அந்த ஞானம் இல்லாமல்தான் அவர்கள் குறியீட்டையே எதார்த்தமாக
விளங்கி வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். சுலைமான் நபியின் சகவாசத்தால் ஹுத்ஹுத் பறவையிடம்
கூட இந்த ஞானம் இருந்தது! இந்த ஞானத்தை போதித்து அவர்களுக்கு நேர்வழிக்கான அழைப்பை
சுலைமான் நபி தரவேண்டும் என்னும் தேட்டம் அதற்கு இருந்தது. அதனை அது தனது உரையில் குறிப்பாக
வெளிப்படுத்தியது (காண்க: 27:24-26).
பல்கீஸ்
அரசியின் அகத்தைப் பிணித்திருந்த குறியீடு என்ன? அவர் மீள வேண்டியிருந்த எதார்த்ததின்
ஞானம் என்ன?
குறியீடு : சூரியனின்
ஒளி பட்டவுடன் இருளில் கிடந்த பொருட்கள் வெளிப்படுகின்றன. சூரியனின் ஒளி விலகியவுடன்
அப்பொருட்கள் மீண்டும் இருளில் மூழ்கி விடுகின்றன.
எதார்த்தம் : இறைவனது
உள்ளமையின் ஒளி பட்டவுடன் இல்லாமையில் (அதமிய்யத்) கிடக்கும் சிருஷ்டிகள் வெளிப்படுகின்றன.
(அதாவது அவனது உள்ளமையில் தோற்றம் கொள்கின்றன). அவனது உள்ளமையின் ஒளி விலகியவுடன் அவை
மீண்டும் இல்லாமையில் ஆகிவிடுகின்றன.
இந்தத்
தத்துவமும் குறியீடும் உலகின் அனைத்து ஆன்மிக மரபுகளிலும் இடம் பெற்றிருக்கக் காண்கிறோம்.
காலப்போக்கில் தத்துவம் மறக்கப்பட்டுக் குறியீட்டையே வழிபடும் நிலை அந்த மரபுகளில்
உண்டாகிவிட்டது. இறைத்தூதர்கள் அத்தகைய குறியீட்டு வழிபாட்டை உடைத்து மீண்டும் சத்தியத்தின்
பக்கம் இதயங்களைத் திருப்பிக் கொண்டிருந்தார்கள். அதன் ஒரு உதாரணத்தைதான் சுலைமான்
நபியின் இந்தக் கதை நமக்குத் தருகின்றது.
சூரியனைக்
குறியீடாக வைத்துப் பரம்பொருளைப் பேசும் வரிகளை இந்து மரபில் ஈசாவாஸ்ய உபநிஷத்தில்
நாம் காண்கிறோம். அதன் ஆரம்பமே இறைவன் இப்பிரபஞ்சமெங்கும் இருக்கிறான் என்று சொல்கிறது:
“பிரபஞ்சம்
முழுவதும் இறைவன் பரவியுள்ளான்”
(ஈசாவாஸ்யம் இதம் சர்வம்).
திருக்குர்ஆன்
கூறும் ’இஹாதத்’ என்னும் இறைப்பண்பு இதனைக் குறிப்பிடக் காணலாம்:
“அல்லாஹ்
அனைத்து வஸ்துக்களையும் சூழ்திருக்கிறான்”
(வ கானல்லாஹு பிகுல்லி ஷைஇன் முஹீத்தா
-4:126)
’உஸ்அத்’
என்னும் இறைப்பண்பும் இக்கருத்தினைச் சுட்டக் காண்கிறோம்:
”நீங்கள்
எத்திசை நோக்கினும்
அங்கே
அல்லாஹ்வின் திருமுகமே உள்ளது
நிச்சயமாக
அல்லாஹ் விசாலமானவன்
அனைத்தும்
அறிந்தவன்”
(ஃபஐனமா துவல்லூ ஃபஸம்ம வஜ்ஹுல்லாஹ்; இன்னல்லாஹ
வாசிஉன் அலீம் -2:115)
’அல்லாஹ்வின்
முகம்’ (வஜ்ஹுல்லாஹ்) என்பதன் பொருள் அவனது உள்ளமை (உஜூது). இது சூஃபிகள் அனைவரும்
கொண்டுள்ள விளக்கம் ஆகும்.
ஆனால்
அவனின் உள்ளமையான திருமுகம் நமக்குப் புலப்படுவதில்லை. அவனின் சுயத்தன்மையை அவனை அன்றி
வேறு யாரும் அறியவியலாது. ஆனால் இறை ஞானியரின் உயிர்களோ அவனை உள்ளபடி அறியவேண்டும்
என்னும் தீரா தாகத்தில் தவிக்கின்றன. அதன் வெளிப்பாடாகவே மூசா (அலை) அவர்கள்,
“ரட்சகனே!
உன்னை எனக்குக் காட்டு!
நான்
உன்னைக் காண வேண்டும்”
(றப்பீ அரினீ உன்ழுர் இலைக்க
-7:143)
என்று
பிரார்த்தித்தார்கள். (இறைக்காதலின் சிகரங்களில் ஒன்றான இந்நிலை ‘அல்-அஃராஃப்’ (சிகரங்கள்)
என்னும் அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது!)
இதே போன்ற
ஒரு பிரார்த்தனை ஈசா உபநிஷத்தில் உள்ளது:
”தங்கப்
பாத்திரத்தினால் சத்தியத்தின் முகம் மூடப்பட்டுள்ளது;
மெய்யான
தர்மத்தைப் பேணும் என் பார்வைக்காக
அதை நீ
விலக்கியருள்வாயாக!”
(ஹிரண்மயேன பாத்ரேன ஸத்யஸ்யாபிஹிதம் முகம்|
தத்த்வம் பூஷந்நபாவ்ருணு ஸத்யதர்மாய த்ருஷ்டயே
|| ஸ்லோகம்#15
“The face of Truth is covered with a
brilliant golden lid; that do thou remove, O Fosterer, for the law of the Truth, for sight.”
–ஸ்ரீஅரவிந்தரின் ஆங்கிலப் பெயர்ப்பு.)
இதில்
உள்ள இரு சொற்கள் இரு மரபிலும் ஒப்பு நோக்கத் தக்கவை. ’சத்தியத்தின் முகம்’ என்பது
எத்திசை நோக்கினும் இருக்கும் அல்லாஹ்வின் முகம் (’வஜ்ஹுல்லாஹ்’ -2:115) ஆகும். சத்தியத்தின்
தர்மம் என்பது இறைவன் தன் தூதர்களின் வழியாக மக்களுக்கு வழங்கிய ’ஷரீஅத்’ ஆகும்.
இதில்
சொல்லப்படும் தங்கப் பாத்திரம் என்பது என்ன? அது ஒரு குறியீட்டுச் சொல் என்பது விளங்குகிறது.
ஆனால், அக்குறியீட்டின் விளக்கம் என்ன? ”உலகில் உள்ள போகப் பொருட்கள் தங்கப் பாத்திரம்
போல் உண்மையை மறைத்துள்ளன” என்று இதற்கு விளக்கம் சொல்கிறார் ஸ்வாமி குருபரானந்தா.
சுருக்கமாக, படைப்புக்களே அவனை மறைக்கும் தங்க மூடி என்று இங்கே சுட்டப்படுகிறது.
ஈசா உபநிஷத்தின்
அடுத்த சுலோகம் இறைவனை சூரியன் என்று வர்ணித்துப் பேசுகிறது:
“ரட்சகனே!
பார்ப்பவனே! விதிப்பவனே!
ஒளியூட்டும்
சூரியனே!
சிருஷ்டிகளின்
தந்தையின் ஆற்றலாய் நிற்பவனே!
நின்
சுடர்களை விலக்கி ஒளியை ஒடுக்குக!
நின்
ரூபங்களில் மிகவும் பரிசுத்தமானதான
நின்
பிரகாசத்தை உன்னில் நான் காண்பேனாக!
இச்சுயம்
எதுவோ அதுவே நானாய் இருக்கிறேன்”
(பூஷந்நேகர்ஷே யம ஸூர்ய ப்ராஜாபத்ய வ்யூஹ ரச்மீந்ஸமூஹ
|
தேஜோ யத்தே ரூபம் கல்யாணதமம் தத்தே பச்யாமி
யோஸாவஸௌ புருஷ: ஸோஹமஸ்மி || -ஸ்லோகம்#16.
”O Fosterer, O sole Seer, O Ordainer, O
illumining Sun, O power of the Father of creatures, marshal thy rays, draw
together thy light; the Lustre which is thy most blessed form of all, that in
Thee I behold. The Purusha there and there, He am I.” என்னும்
ஸ்ரீஅரவிந்தரின் ஆங்கிலப் பெயர்ப்பினைத் தழுவி நான் தமிழாக்கியுள்ளேன். குறிப்பு: ரட்சகன்:
றப், பார்ப்பவன்: அல்-பஸீரு, விதிப்பவன்: அல்-முக்ததிர்.)
“ஸோஹம்
அஸ்மி” (அவன் நானே) என்பது இந்து மரபின் நால்வேதங்கள் உணர்த்தும் முக்கியமான நான்கு
மந்திரங்களில் ஒன்று. இம்மந்திரம் உணர்வின் எழுச்சி நிலையில் மொழியப்பட்ட ஒன்றாக இருக்கும்
பட்சத்தில் சூஃபித்துவத்தில் சொல்லப்படும் ஷாத் (பரவச மொழி) என்னும் வகையைச் சார்ந்ததாக
அமையும். அதாவது அது ஓர் தத்துவ ஆதாரம் அல்ல. மன்ஸூர் அல்-ஹல்லாஜ் மொழிந்த ‘அனல் ஹக்’
என்பதைப் போன்றது. ஆனால், அதனை ஒரு தெளிந்த தத்துவக் கொள்கையின் வாசகம் என்று சொல்லும்
பட்சத்தில் சூஃபிகளில் ஒரு சாரார் “உள்ளமை ஒன்று சுயம் ஒன்று” (உஜூத் ஏக்; தாத் ஏக்)
என்று கொண்டுள்ள கொள்கைக்குப் பொருத்தமாக இது அமையும். [சூஃபிகளில் உள்ள இன்னொரு சிந்தனைப்
பள்ளி ‘உள்ளமை ஒன்று, சுயங்கள் இரண்டு’ (உஜூத் ஏக்; தாத் தோ) என்று கொள்கை கொண்டுள்ளது.
அதாவது, ’இறைவனை அன்றி வேறு உள்ளமை இல்லை; ஆனால் இறைவனின் பூர்வீக சுயம் மற்றும் படைப்பின்
வெற்றுச் சுயம் என்று இரண்டு சுயங்கள் உண்டு’ என்பதாகும். நான் சார்ந்திருக்கும் சூஃபி
நெறி இக்கொள்கையைப் பேணுகின்றதாகும்.]
மேற்சொன்ன
இரண்டு ஸ்லோகங்களில் முதல் ஸ்லோகம் தங்கமூடி / தங்கப் பாத்திரம் என்று சொல்வது பொதுவில்
படைப்புக்கள் அனைத்தின் தொகுப்பான பிரபஞ்சத்தையும் குறிப்பாக இவ்வுலகை வெளிச்சமிடும்
சூரியனையும் சுட்டுவதாகக் கொள்ளலாம். ஏனெனில் சூரியனின் ஒளி படாமல் எப்பொருளும் வெளிச்சத்திற்கு
வருவதில்லை, காணப்படுவதில்லை.
இரண்டாம்
ஸ்லோகத்தில் சூரியன் என்பது பரம்பொருளுக்கான குறியீடாகக் கொண்டு அவனை வருணிக்கப் பட்டுள்ளது.
அதன் விளக்கம் என்னவெனில், பரம்பொருளின் உள்ளமையில் சுடர்களே இப்பிரபஞ்சத்தை உள்ளதாகக்
காட்டுகின்றது.
இத்தத்துவத்தை
மனத்தில் இருத்திக் கொள்வதற்காக, எந்தக் குறியீட்டுப் பெயர் பாவிக்கப் பட்டுள்ளதோ அந்தப்
பெயருக்குரிய பொருளின் பக்கமே முன்னோக்கும் வழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும்.
சூரியன் என்னும் பருப்பொருளின் பக்கம் முன்னோக்கும் வழக்கம் அவ்வாறுதான் உண்டாகி இருக்க
வேண்டும். குறியீடு சுட்டும் பரம்பொருளின் பக்கம் கவனம் வைப்பதை விட்டு அக்குறியீட்டுப்
பெயருக்குரிய படைப்பின் மீதே தத்துவத்தைச் சாற்றிவிடும் நிலை அப்போது தோன்றிவிடுகிறது.
இதே சூரியன்
என்னும் குறியீடு ’காயத்ரி’ என்னும் மந்திரத்திலும் வருகிறது. யஜூர் வேதத்தின் ஒரு
வாசகமும் ரிக் வேதத்தின் ஒரு மந்திரமும் இணைந்து உருவாக்கப்பட்ட 24 அசைகள் கொண்ட மந்திரம்
இது. அதே பாவகையிலான வேறு ஸ்லோகங்களையும் இணைத்து அதன் விரிவடிவமும் உருவாக்கப் படுவதுண்டு.
இதற்கு சாவித்ரி மந்திரம் என்னும் பெயரும் உள்ளது.
“ஓம்
பூர் புவஸ் ஸுவ:
தத் ஸவிதுர்
வரேண்யம்
பர்கோ
தேவஸ்ய தீமஹி
தீயோ
யோந: ப்ரசோத யாத்”
”’செங்கதிர்த்
தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் – அவன்
எங்கள்
அறிவினைத் தூண்டி நடத்துக’ என்பதோர் – நல்ல
மங்களம்
வாய்ந்த சுருதி மொழி”
என்று
இம்மந்திரத்தை மகாகவி பாரதியார் தன் ‘பாஞ்சாலி சபதம்’ என்னும் காவியத்தில் “மாலை வருணனை”
என்னும் பகுதியில் தமிழாக்கித் தந்துள்ளார். சூரியன் என்னும் குறியீடு கொண்டு எந்தத்
தெய்வீகத் தத்துவம் விளக்கப்படுகிறதோ அந்தத் தத்துவத்தை இப்பகுதியில் அவர் விரிவாகப்
பேசியுள்ளார்.
சர் வில்லியம்
ஜோன்ஸ் செய்த ஆங்கிலப் பெயர்ப்பு: ”Let us adore the supremacy of that divine sun, the godhead who
illuminates all, who recreates all, from whom all proceed, to whom all must
return, whom we invoke to direct our understandings aright in our progress
toward his holy seat” (“THE GAYATRI OR THE HOLIEST VERSE OF THE VEDAS”, ‘The
Works of Sir William Jones, Volume XIII, London, 1807, page:367)
இம்மொழிபெயர்ப்பில்
“divine sun” என்பதற்கு அவர் தரும் அடிக்குறிப்பில் “Opposed to the visible
luminary” (இது கண்ணுக்குத் தெரியும் சூரியன் அல்ல) என்று சொல்லியிருப்பதன் மூலம் இக்குறியீடு
இவ்வுலகின் வானத்துச் சூரியனைக் குறிக்கவில்லை என்பதைத் தெளிவுப் படுத்துகிறார். மேலும்
காயத்ரி மந்திரத்திற்குச் சிறு விளக்கம் ஒன்றினையும் தந்துள்ளார்:
இந்த
வெளியுலகிற்குச் சூரியனும் அதன் ஒளியும் எப்படியோ மறைவான அறிவுலகிற்கு சத்தியமான பரம்பொருள்
ஆகும். சூரியனால் வெளிச்சமாக்கப்பட்ட பொருட்களை நம் உடலின் கண்கள் காண்பது போல் சுயங்களின்
சுயமான சத்தியத்தின் ஒளியை தியானிப்பதன் மூலம் நம் ஆன்மாக்களுக்கு ஒரு ஞானம் கிடைக்கிறது.
நம் உள்ளங்களை பேரின்பத்தின் பாதையில் நடத்திச் செல்ல வல்ல ஒளி அதுவே.”
(“What
the sun and light are to this visible world, that, are the supreme good, and truth,
to the intellectual and invisible universe; and, as our corporeal eyes have a
distinct perception of objects enlightened by the sun, thus our souls acquire
certain knowledge, by meditating on the light of truth, which emanate from the
Being of beings: that is the light by
which alone our minds can be directed in the path to beatitude.” (“THE GAYATRI
OR THE HOLIEST VERSE OF THE VEDAS”, ‘The Works of Sir William Jones, Volume
XIII, London, 1807, page:367))
காயத்ரி
மந்திரத்திற்கு நீதிபதி வில்லியம் குவான் செய்த மொழிபெயர்ப்பு : “Unveil, O Thou who
givest sustenance to the Universe, from whom all proceed, to whom all must
return, that face of the True Sun now hidden by a vase of golden light, that we
may see the truth and do our whole duty on our journey to thy sacred seat.”
(Judge William Quan, “A Commentary on the Gayatri”, Path, January, 1893.)
இம்மந்திரத்திற்கு
அவர் கொடுத்துள்ள விளக்கவுரையில் வரும் சில புள்ளிகள் இங்கே ஆராயப்படும் விஷயத்திற்கு
முக்கியமானவை:
“இப்பிரார்த்தனை
மனிதனால் செய்யப்பட்டதும் உறுப்புக்கள் ஆசாபாசங்கள் மற்றும் மனிதப்பண்புகள் கொண்டதுமான
ஏதோ ஒரு கற்பனை தெய்வத்திடம் செய்யப்பட்டதல்ல. ஆனால் இது மறைவிலுள்ளதையும் காணக்கூடிய,
அவற்றை ஒளியில் வெளிக்கொண்டு வரக்கூடிய மேலான சுயத்திடம் (இறைவனிடம்) செய்யப்பட்டதாகும்.
இப்பிரார்த்தனை எதில் இப்பிரபஞ்சம் உருவாக்கப்பட்டு நிலைத்துள்ளதோ அதனிடம் செய்யப்பட்டதாகும்.”
(“The cry is not made to some man-made god with parts, passions, and
attributes, but to the Self above who seeth in secret and bringeth out to
light. It is directed to that on which the Universe is built and standeth.”)
“பிரபஞ்சம்
முழுவதும் தோற்றம் பெறுவது இதில் இருந்தே.” (From this the whole Universe
proceeds out into manifestation.) (இந்தக் காயத்ரி மந்திரம் படைப்புக்கள் எவ்வாறு
தோற்றம் கொள்கின்றன என்னும் தத்துவத்தை விளக்குகின்றது என்பதை இவ்வரியால் உணர்த்துகிறார்.
அதற்கு சூரியன் குறியீடாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது.)
“இறைவனின்
மேலான சுயத்தின் ஒளிச்சுடர்கள் நம்மில் பிரதிபலித்து நம்மைப் பிரகாசமாக்குவதற்காக சத்தியச்
சூரியனின் திருமுகத்தை திரைவிலக்கி அருளுமாறு இம்மந்திரத்தில் கேட்கப் படுகிறது. நவீன
மக்கள் அறியாத ஓர் இயல்பான விஷயத்தை இது வெளிப்படுத்துகிறது. அதாவது, நாம் காணும் சூரியன்
‘சத்தியத்தின்’ சூரியன் அல்ல. மேலும், நம் அறிவின் ஒளியும்கூட நம் சுயத்தின் சத்தியச்
சூரியன் அல்ல. மிகத் தொன்மையான காலத்து நம் முன்னோர்கள் இந்த வெளிச்சூரியனின் வழியே
சத்தியச் சூரியனான இறைவனின் ஆற்றல்களை எப்படி அடைவது என்று அறிந்து வைத்திருந்தனர்.
நாம் அதனைத் தற்காலிகமாக இழந்து நிற்கிறோம். ஏனெனில் நம் ’வளர்ச்சியில்’ நாம் பருப்பொருள்
என்னும் நரகில் வீழ்ந்து விட்டோம். இது திரையை உண்டாக்கிவிட்டது.” (“The request made
in the verse to unveil the face of the True Sun is that the Higher Self may
shine down into us and do its work of illumination. This also spreads forth a
natural fact unknown to moderns, which is that the sun we see is not the true
sun, and signifies too that the light of intellect is not the true sun of our
moral being. Our forefathers in the dim past knew how to draw forth through the
visible Sun the forces from the True one. We have temporarily forgotten this
because our evolution and descent into the hell of matter, in order to save the
whole, have interposed a screen.”)
பிரம்ம
சமாஜ்யத்தைச் சேர்ந்த சிவநாத் சாஸ்திரியின் ஆங்கிலப் பெயர்ப்பு: "We meditate on the worshipable power and
glory of Him who has created the earth, the nether world and the heavens (i.e.
the universe), and who directs our understanding." (”The History of Brahmo
Samaj”, Brahma Samaj, Calcutta, 1911, page:XVI.) இம்மந்திரத்தின் மூலத்தில் உள்ள
’சவிதர்’ என்னும் சொல்லுக்கு ராஜா ராம் மோகன் ராய் அவர்கள் ‘சூரியக் கடவுள்’ என்னும்
அர்த்தத்தை விட்டு இன்னொரு சாத்தியமான ‘படைப்பாளன்’ என்னும் அர்த்தத்தைக் கொண்டார்.
அதன் அடிப்படையில் இம்மொழி பெயர்ப்பு அமைந்துள்ளது.
ஸ்வாமி
விவேகானந்தரின் ஆங்கிலப் பெயர்ப்பு: “We
meditate on the glory of that Being who has produced this universe; may He
enlighten our minds.” (”The Complete Works of Swami Vivekananda”,
Advaita Ashram, page:211.)
சர்வபள்ளி
ராதாகிருஷ்ணன் இம்மந்திரத்திற்கு அதன் குறியீட்டு நிலையிலும் தத்துவ நிலையிலுமாக இரண்டு
ஆங்கிலப் பெயர்ப்புக்களை வழங்கியுள்ளார்:
"We meditate on the adorable glory of the
radiant sun; may he inspire our intelligence." (“The Principal
Upanishads”, 1953, page:299.)
“We meditate on the effulgent glory of the
divine Light; may he inspire our understanding." (“Religion and
Society”, 1947, page:135)
மேற்கண்ட
மொழிபெயர்ப்புக்கள் அனைத்திலும் ஒரு பொதுத்தன்மை இருப்பதைக் காணலாம். அதாவது, காயத்ரி
மந்திரத்தின் குறியீடு எந்தத் தத்துவத்தை விளக்குவதற்காக எழுந்ததோ அந்தத் தத்துவத்தின்
பக்கம் கவனத்தை வழிநடத்தக் கூடிய வகையில் அவை அமைந்து, அவ்வாறு அமைவதற்காக சூரியன்
என்னும் அந்தக் குறியீட்டுச் சொல்லைத் தவிர்த்துள்ளன.
மேற்காணும்
மொழிபெயர்ப்புக்களில் காணலாகும் சில சொற்களுக்குச் சூஃபித்துவ மொழியில் குறிப்பு எழுதினால்
அது இவ்வாறு அமையும்:
வெளியுலகு
(Visible World) – ஆலமுஷ் ஷஹாதத்; அறிவுலகு/ மறைவுலகு (Intellect and invisible
world) – ஆலமே ஃகயால், ஆலமுல் கைப்; Being: உஜூது / தாத் (Dhat); Thou
who givest sustenance to the Universe/ Him who has created the earth, the nether world and the heavens / Being
who has produced this universe: றப்பில்
ஆலமீன் (அகில உலகங்களின் ரட்சகன்);
divine Light:
அந்நூர் (ஒளி).; from whom all proceed, to
whom all must return: இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் –நாம் அவனுக்குரியவர்கள்,
அவனிடமே நாம் மீள்கின்றோம்.
இதுவரை
நாம் ஆராய்ந்து வந்துள்ள விஷயங்களை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக் காண நினைத்தால் மனக்கண்ணின்
முன் இருபதாம் நூற்றாண்டின் மாமேதைகளில் ஒருவர் வந்து நிற்கிறார். மகாகவி அல்லாமா இக்பால்.
அவர் காயத்ரி மந்திரத்தை உருதுவில் கவிதையாக மொழிபெயர்த்துள்ளார்!
(தொடரும்)
அருமை தொடருங்கள்
ReplyDelete