Friday, September 28, 2012

நிழல் போன்றவன்



சூரியன் உன் தாமரை
நிலா உன் அல்லி

பிரபஞ்சத்தினும்
பெரிது உன் அழகு
என் அறிவோ
எறும்பின் கண்

உன்
அழகின் வருணனைகள்
அலுப்பூட்டும் போது
உன் அழகு அன்றி
ஆறுதல் வேறு ஏது?

நீ
முகம் திருப்பிச்
செல்லும் போதெல்லாம்
என் முகத்தில் விழுகிறது
இருளின் திரை

காதல்
உனக்கு மின்மினி
எனக்கோ
காட்டுத் தீ

காதல்
உனக்கொரு பெயர்
எனக்கோ
சரிதை


விளக்கு
விட்டில்
பழைய படிமம்
என்கிறார்கள்...
எரிதல்
அப்படியாய் இல்லை

நிழலற்ற உனது
நிழல் போன்றவன்
நான்

ஒருபோதும் உன்னை
அடையவே முடியாதெனில்
உன்னின் வேறாய் இருப்பதில்
என்ன நியாயம் இருக்கிறது?

உன் பார்வை
விரிவானம்
உன் மூச்சு
சிறகுகளைத் தாங்கும்
காற்று

நீயின்றி இயலாது
கவிதைகள் எழுத
எனினும்
எந்தக் கவிஞனும்
எழுத முடியாத
கவிதை நீ



காதலின்
ஊற்றுக்கண்ணில்
உன்னைச் சந்தித்து
தாகமுடன் திரும்புகிறேன்
ஒவ்வொரு முறையும்

இரவெல்லாம்
உன் நினைவும்
உன் கனவும்
சக்களத்திச் சண்டையிடும்
வீடு நான்

நீயே உன்னை
வருணித்த பாடல்
என்
பாதாதி கேசம்

பருவங்களில் நான்
பாலை ஆனாலும்
சோலை ஆனாலும்
நீங்காத
நிலத்தடி நீர்
நீ

a

No comments:

Post a Comment