இனி சுலைமான்
நபியிடம் அவர்களின் செல்லப் பறவையான ஹுத்ஹுத் என்ன சொல்லிற்று என்பதைக் காண்போம்:
“தாங்கள்
ஆழ்ந்து கவனிக்காத ஒரு விஷயத்தை
நான்
கவனித்து அறிந்து கொண்டேன்;
’ஸபா’விலிருந்து
உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.
நிச்சயமாக
அவர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்;
இன்னும்,
அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது;
மகத்தான
ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது.
அவளும்
அவளின் சமூகத்தினரும்
அல்லாஹ்வை
விட்டும் சூரியனுக்குத் தலைசாய்ப்பதை நான் கண்டேன்;
அவர்களின்
செயல்களை ஷைத்தான்
அவர்களுக்கு
அழகாக்கிக் காண்பித்து
அவர்களை
நேர்வழியை விட்டும் தடுத்துள்ளான்;
அவர்கள்
நேர்வழிகாட்டலைப் பெறவில்லை.
வானங்களிலும்
பூமியிலும் மறைந்துள்ளவற்றை வெளியாக்குகிறவனும்
நீங்கள்
மறைப்பதையும் வெளியிடுவதையும் அறிபவனுமாகிய
அல்லாஹ்வுக்கு
அவர்கள் தலைசாய்க்க வேண்டாமா?
அல்லாஹு
– அவனை அன்றி வேறு தெய்வம் இல்லை;
அவன்
மகத்தான அரியாசனத்தின் ரட்சகன்”
(27:22-26)
ஹுத்ஹுத்
பறவையின் பேச்சு பருவுலகின் (MATERIAL WORLD) செய்தியை ஆன்மிக உலகின் (SPIRITUAL
WORLD) முன் சமர்ப்பிப்பதாக அமைந்துள்ளது.
“அஹத்து பிமா லம் துஹித் பிஹி” – (தாங்கள் ஆழ்ந்து
கவனிக்காத ஒரு விஷயத்தை நான் கவனித்து அறிந்து கொண்டேன்) என்று தன் பேச்சை அது துவக்குகிறது.
இத்திருவசனத்தின் மூலத்தில் “அ-ஹ-த” என்னும் வேர் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதிலிருந்து
வரும் பண்புப் பெயரான ‘இஹாதத்’ என்பதற்கு ஒரு பொருளை முழுமையாகச் சூழ்ந்து அறிவது என்பது
பொருளாகும். அதாவது அப்பொருளைத் தான் சூழ்ந்து இருக்கவும் வேண்டும், அவ்வாறு சூழ்ந்திருக்கும்
நிலையில் அதனை முழுமையாக அறியவும் வேண்டும்.
உதாரணமாக,
’அல்லாஹ்
எல்லாப் பொருட்களையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்’ (வ கானல்லாஹு பிகுல்லி ஷைஇன் முஹீத்தா -4:126)
’நிச்சயமாக
அவன் அனைத்து வஸ்துக்களையும் சூழ்ந்திருக்கிறான்’ (இன்னஹு பிகுல்லி ஷைஇன் முஹீத் -41:54)
ஒருவரின்
செயல்களை முழுமையாக அறிந்திருக்கும் நிலையையும் இஹாதத் என்பது சுட்டிக்காட்டும்:
’நிச்சயமாக
அல்லாஹ் அவர்கள் செய்வதை சூழ்ந்து அறிகிறவன்’ (இன்னல்லாஹ பிமா யஃமலூன முஹீத் -3:120)
’நிச்சயமாக
என் ரட்சகன் நீங்கள் செய்பவற்றைச் சூழ்ந்திருக்கிறான்’ (இன்ன றப்பீ பிமா தஃமலூன முஹீத் -11:92)
இஹாதத்
என்பது அனைத்துக் கோணங்களிலும் சூழ்ந்து இருப்பதையும் அறிவதையும் குறிக்கும் என்றாலும்
அவ்வாறு இல்லாமல் ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்து அறிவதற்கும் இச்சொல்லைப் பயன்படுத்தலாம்
என்பதற்குப் பின்வரும் திருவசனம் ஆதாரமாகிறது:
“அல்லாஹ்
அவர்களின் பின்னாலிருந்து அவர்களைச் சூழ்ந்திருக்கிறான்’ (வல்லாஹு மின் வராஇஹிம் முஹீத் -85:20)
இத்திருவசனம்
மொழிபெயர்ப்பாளர்களை மிகவும் சங்கடத்தில் ஆழ்த்திய ஒன்று. சிலர் ‘பின்னால் இருந்து’
என்னும் ஒரு திசையை, கோணத்தைக் குறிப்பிடாமல் ‘அனைத்து திசையிலும் சூழ்ந்திருக்கிறான்’
என்றே மொழிபெயர்த்துள்ளனர். ‘மின் வராஇஹிம்’ என்பதற்கு ‘அவர்களின் பின்னால் இருந்து’
என்பதே நேரடிப் பொருள் என்றாலும் சிலர் ‘அவர்கள் அறியாமல்’ என்று மொழி பெயர்த்திருப்பது
இலக்கிய நயமாக மிகவும் பொருத்தமானதாகும்.
இத்திருவசனம்
பின்னால் இருந்து என்னும் கோணத்திற்கு அழுத்தம் தந்து பேசுகிறதே அன்றி பிற கோணங்களில்
இறைவன் அவர்களைச் சூழவில்லை என்பதாகாது. அந்நிலையை விட்டும் அவன் பரிசுத்தமானவன்!
‘அல்லாஹ் அர்ஷில் செவ்வை ஆனான்’ என்று சொல்வது போன்றுதான் இதுவும். அர்ஷ் (அரியாசனம்)
என்பதற்கு அழுத்தம் கொடுத்து அவ்வாறு கூறப்படுகிறதே தவிர அல்லாஹ் அர்ஷில் மட்டும்தான்
இருக்கிறான் என்று அதற்கு அர்த்தம் அல்ல!
இஹாதத்
என்னும் இச்சொல் இறைவன் அல்லாத விஷயங்களுக்கும் (மாசிவல்லாஹ்) பயன்படுத்தப் படலாம்
என்பதற்குப் பின்வரும் திருவசனம் பிரமாணம் ஆகும்:
’சூழும்
வேதனை ஒருநாள் உங்களை வந்தடையும் என்று நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்’ (இன்னீ அஃகாஃபு அலைக்கும் அதாப யவ்மின் முஹீத்
-11:84)
இதில்
இஹாதத் என்னும் பண்பு இறைவனின் தண்டனை என்னும் படைப்பின் மீது சாற்றப்பட்டுள்ளது.
மேற்கண்ட
திருவசனத்தில் “அஹத்து” என்று ஹுத்ஹுத் பறவை (தமிழில்: கொண்டலாத்தி) பறவை சொல்வதை அகராதிப்
பொருளில் சொல்வதானால் “நான் சூழ்ந்தறிந்துள்ளேன்” என்று மொழிபெயர்க்க வேண்டியிருக்கும்.
ஆனால் அனைத்துக் கோணத்திலும் ஒரு விஷயத்தைச் சூழ்ந்து அறியும் தன்மை இறைவனுக்கு உரியது
ஆகையால் இங்கே ஆழ்ந்து கவனித்து அறிவது என்பதே பொருந்தும்.
சுலைமான்
நபி இறைவனின் தியானத்தில் மூழ்கியிருந்த நிலையில் இந்த ஹுத்ஹுத் பறவை அவர்களுக்கு ஓர்
அமைச்சரைப் போல் செயல்பட்டுள்ளது. அண்டை நாட்டின் நிலவரங்களை அறிந்து வந்து கூறுகிறது.
சுலைமான் நபி ஆழ்ந்து கவனிக்கவில்லை என்று அது சொல்வதன் பின்னணி இதுதான்.
அப்படி
என்ன விஷயத்தை அது அறிந்து கொண்டதாம்? ‘ஸபா’ என்னும் நாட்டிலிருந்து ஓர் செய்தியை இறைத்தூதருக்காக
அது கொண்டு வந்துள்ளதாம்! (வ ஜிஃதுக்க மின்
ஸபஇன் பிநபஇன் யகீன்). இதில் அந்தப் பறவை ’நபா’ – மறைவான செய்தி என்னும் வார்த்தையைப்
பயன்படுத்தியுள்ளது. நபி (இறைத்தூதர்) என்னும் பெயரே மறைவான செய்தியை (நபா-வை) அறிவிப்பவர்
என்பதைக் காட்டும். அப்படிப்பட்ட நபியிடம் தான் அவருக்கு மறைவான ஒரு செய்தியைக் கொண்டு
வந்துள்ளதாக அப்பறவை கூறுகிறது.
எங்கிருந்து
அந்தச் செய்தியைக் கொண்டு வந்துள்ளதாம்? ‘ஸபா’ என்னும் அண்டை நாட்டிலிருந்து. அதாவது,
அந்தப் பறவை தன் சிறகுகளால் எந்த இடத்திற்குச் செல்ல முடியுமோ அந்த இடத்தின் செய்தி
இறைத்தூதர் அறியாத ஒன்று என்று அது நினைக்கிறது. நபியோ மறைவான வேறு உலகத்தின் செய்தியை
இந்த உலகத்திற்கு அறிவிக்கும் ஆற்றல் படைத்தவர்! அவரிடம் இவ்வுலகின் செய்தியை அப்பறவை
அறிவிக்கிறது.
அந்தச்
செய்தியின் விவரங்கள் என்ன?
”நிச்சயமாக
அவர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்” (இன்னீ வஜத்து அம்ரஅ(த்)தன் தம்லி(க்)குஹும்). இன்னும், அவளுக்கு ஒவ்வொரு
பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது (வ ஊதியத் மின்
குல்லி ஷைஇன்); மகத்தான அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது (வ லஹா அர்ஷுன் அழீம்)”
உண்மையில்
இந்தச் செய்திகள் மறைவான செய்திகளே அல்ல! இவை வெளிப்படையானவை (ழாஹிர்) மட்டுமே. அந்த
ஹுத்ஹுத் பறவை சுலைமான் நபியின் அகமியம் (ஹகீக்கத்) – அந்தரங்கம் (பாத்தின்), ஆன்மிக
உலகில் அவர்களுக்கு அருளப்பட்டுள்ள அந்தஸ்த்து பற்றி இங்கே கணக்கில் எடுக்கவில்லை.
வெளிரங்கமான ஆட்சி அதிகார நிலையைப் பற்றியே பேசுகிறது.
சுலைமான்
நபி முன்பு தன்னையும் தம் தந்தையான தாவூத் நபியையும் பற்றிச் சொன்ன ஒரு செய்தியை நினைவு
கூர்க: “எமக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது” (வ ஊ(த்)தீனா மின் குல்லி ஷைஇன் -27:16) இது புறவுலகம் அகவுலகம் இரண்டையும்
கவனித்துச் சொன்னதாகும். இதே வருணிப்பை பல்கீஸ் அரசிக்கு ஹுத்ஹுத் பறவை கூறுகிறது:
“அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது” (வ ஊதியத் மின் குல்லி ஷைஇன் –27:23) இது புறவுலகை மட்டும் கவனித்துச் சொல்லப்பட்டதாகும்.
அதே போல்
”மகத்தான அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது” (வ
லஹா அர்ஷுன் அழீம் -27:23) என்று அது பல்கீஸ் அரசியை வருணிப்பதும், பின்னர் தன்
பேச்சை முடிக்கும் போது அதே வருணிப்பால், “அவன் மகத்தான அரியாசனத்தின் ரட்சகன்” (றப்புல்
அர்ஷில் அழீம் -27:26) என்று இறைவனைப் புகழ்வதும் கவனிக்க வேண்டிய ஒன்று. ’அர்ஷ்’ என்பது
ஒரு படைப்பு. ஒப்புமையாக (தஷ்பீஹன்), ’அர்ஷ்’ என்னும் பெயர் உலக ஆட்சியாளர்களின் அரியாசனத்திற்கும்
வழங்கப்படுகிறது. ஆனால் எதார்த்தத்தில் (ஹகீக்கத்தன்) இறைவனின் அரியாசனத்திற்கு இவை
சமமாக மாட்டா. எனவே தஷ்பீஹான வாசகத்தால் இணைவைப்பு (ஷிர்க்) என்பது உண்டாகாது. தஷ்பீஹ்-தன்ஸீஹ்
(ஒப்புமை-அப்பான்மை IMMANENCE-TRANSCENDENCE) பற்றிய அறிவு அந்தப் பறவைக்கு இருந்துள்ளது!
ஸபா நாட்டினரின்
இவ்வுலக ஆட்சி நிலையை ஒப்புமை ரீதியில் பேசிய ஹுத்ஹுத் அவர்களின் ஆன்மிக நிலை, மறுமை
வாழ்விற்கான நிலை எப்படி இருக்கிறது என்பதை அடுத்துச் சொல்கிறது: ”அவளும் அவளின் சமூகத்தினரும்
அல்லாஹ்வை விட்டும் சூரியனுக்குத் தலைசாய்ப்பதை நான் கண்டேன்; அவர்களின் செயல்களை ஷைத்தான்
அவர்களுக்கு அழகாக்கிக் காண்பித்து அவர்களை நேர்வழியை விட்டும் தடுத்துள்ளான்; அவர்கள்
நேர்வழிகாட்டலைப் பெறவில்லை.”
அவர்களின்
பார்வை புறவுலகோடு நின்றுள்ளது, ஷைத்தானின் பார்வை ஆதம் நபியின் உடலோடு நின்றுவிட்டதைப்
போல்! எனவே ஷைத்தான் அவர்களின் செயல்களை அவர்களுக்கு அழகாக்கிக் காண்பித்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.
சூரியன்
என்பது இறைவனின் சர்வ கோடி சிருஷ்டிகளில் ஒன்று. மனிதனும் இறைவனின் ஒரு சிருஷ்டியே.
ஆனால், மனிதன் சிருஷ்டிகளின் சிகரமானாவன். சர்வ சிருஷ்டிகளும் தமக்கென்று சுயமாக உள்ளமை
அற்றவை. அவை அனைத்தும் இறைவனின் உள்ளமையில் தோற்றப்பட்டுள்ள குறிப்புக்கள் ஆகும். இறைவனின்
சிந்தனையில் உள்ள படிவங்களின் (அஃயான்) வெளிப்பாடுகள் ஆகும். அவனது உள்ளமையில் காட்சி
தரும் ஒரு குறிப்பான சூரியனை இன்னொரு குறிப்பான மனிதன் வணங்கும் போது தனக்கென்று ஒவ்வொன்றும்
தனித்தனி உள்ளமை கொண்டுள்ளதாகக் கருத்து ஏற்படுவதால் அது இணைவைப்பு (ஷிர்க்) ஆகிறது.
சர்வ
கோடி சிருஷ்டிகளின் மூலம் ஏக உள்ளமையான இறைவன் மட்டுமே. எனவே வணக்கம் (வழிபாடு) என்பது
குறிப்பு ஆன சிருஷ்டி தன் மூலமான ஏக உள்ள்மையின் பக்கம் மீள்வதே ஆகும். அனைத்து சிருஷ்டிகளும்
அந்த ஏக இறைவனிடமே மீண்டு கொண்டுள்ளன. சூரியனும் இறைவனிடம் மீண்டு கொண்டுள்ள ஒரு சிருஷ்டியே.
“சூரியன்
தனது தங்குமிடம் நோக்கி ஓடிக்கொண்டுள்ளது
இது மிகைத்தோனும்
அறிந்தோனும் ஆகிய இறைவன் விதித்ததாகும்”
(வஷ்ஷம்சு தஜ்ரீ லிமுஸ்தகர்ரில் லஹா; தாலிக தக்தீருல்
அஸீஸில் அலீம் – 36:38)
உள்ளமையில்
தோற்றப்பட்டுள்ள ஒரு குறிப்பு இன்னொரு குறிப்பின் பக்கம் மீள்வதனால் அது தன் மூலமாகிய
இலக்கை அடைய இயலாது. அவ்வாறு ஏன் அது இன்னொரு குறிப்பை வழிபடுகிறது? அஃது அந்தக் குறிப்பை
சுய உள்ளமை கொண்ட பொருளாக விளங்குவதனால் ஆகும். சிருஷ்டியான ஒரு குறிப்பை நம் கற்பனை
சுய உள்ளமை கொண்டதாக நினைப்பதால் அது அவ்வாறு ஆகிவிடாது. நம் கற்பனை உண்மையை மாற்றிவிடாது.
எவ்வொரு
சிருஷ்டியும் பரம்பொருளான ஏக உள்ளமையை விட்டும் பிரிந்ததல்ல. எனினும் ஒரு குறிப்பிட்ட
சிருஷ்டியில் மட்டும் இறைவனின் உள்ளமையை மட்டுப்படுத்திக் கவனிக்கும் போது இறைத்தன்மைக்கு
மாற்றமான ஒன்றை, படைப்புக்களின் தன்மைகளில் ஒன்றை, அதாவது இட வர்த்தமானத்தில்
(spatial dimension) கட்டுண்ட தன்மையை இறைவனின் மீது சாற்றுவதாகிறது. மேலும் அப்பொருள்
அல்லாதவற்றிற்கு அவற்றிற்கான பல சுய உள்ளமைகளைக் கற்பனை செய்ததாகவும் முடியும். எனவே
இது படைப்பின் தன்மையில் படைத்தவனை ஆக்கும் இணை வைப்பு (ஷிர்க்) ஆகிறது.
”இறைவன்
அர்ஷ் என்னும் அரியாசனத்தில் ’மட்டும்தான்’ இருக்கிறான்” என்று அவனை அர்ஷ் என்னும்
படைப்பில் மட்டுப்படுத்தும் போதும் இதே இணைவைப்புத்தான் (ஷிர்க்) உண்டாகிறது. எந்தப்
படைப்பில் இறைவனை மட்டுப் படுத்தினாலும் அது ஏகத்துவத்திற்கு வேறான ’ஷிர்க்’ என்னும்
இணை வைப்பாகத்தான் முடியும்.
அவனது
உள்ளமையில் தோற்றப்பட்ட குறிப்புக்களே அவன் அல்ல. அவற்றில் ஒன்றையோ பலவையோ அல்லது அனைத்தையுமோ
அவன் என்று சொல்வது இணைவைப்புத்தான். அதாவது, அவனுக்கு வேறான ஒன்றை அவனாகவே எடுத்துக்
கொள்வது இணைவைப்பு.
அவனுக்கு
வேறான படைப்பு அவனது உள்ளமையை விட்டுப் பிரிந்ததாக இல்லை. எனினும் அதன் பெயரை அவன்
மீது சாற்றுவது இணை வைப்பாகும். அல்லது அவனுக்குரிய சுயநாமத்தை அவன் அல்லாதவற்றின்
மீது சாற்றுவதும் இணை வைப்பாகும்.
சூரியன்
என்பது இறைவனின் உள்ளமையில் தோற்றப்பட்டிருக்கும் ஒரு குறிப்பே. எனவே அது ஒரு சிருஷ்டியே.
அதன் சுயம் நாமரூபம் கொண்டது. அந்த நாமத்தினையோ அல்லது ரூபத்தினையோ அதன் மூலமாக இருக்கும்
ஏக உள்ளமையான பரம்பொருளுக்குச் சாற்றுவது இணைவைப்பாகும். சூரியனின் நாமம் அல்லது ரூபம்
அல்லது நாமரூபம் இரண்டினையும் இறைவனுக்குச் சாற்றி வணங்குவது இணைவைப்பாவது இதனால்தான்.
ஷீபா
நாட்டின் நிலையைப் பற்றிக் கூறிய ஹுத்ஹுத் பறவை, “அவளையும் அவளின் சமூகத்தையும் சூரியனுக்குத்
தலை சாய்ப்பவர்களாக நான் கண்டேன்” (வஜத்துஹா
வ கவ்முஹா யஸ்ஜுதூன லிஷ்ஷம்சி) என்று மட்டும் கூறவில்லை, ஆனால் “அவளையும் அவளின்
சமூகத்தையும் அல்லாஹ்வின் வேறான சூரியனுக்குத்
தலை சாய்ப்பவர்களாக நான் கண்டேன்” (வஜத்துஹா
வ கவ்முஹா யஸ்ஜுதூன லிஷ்ஷம்சி மின் தூனில்லாஹி -27:24) என்று கூறிற்று.
”அவர்கள்
நேர்வழி பெறவில்லை” (ஃபஹும் லா யஹ்ததூன்
-27:24) என்று அவர்களைப் பற்றி அப்பறவை கூறிற்று. அதாவது, சிருஷ்டியை வணங்குவது சிருஷ்டியிடம்
கொண்டு சேர்க்குமே அன்றி இறைவனிடம் கொண்டு சேர்க்காது. நேர்வழி என்பதோ பரம்பொருளை அடையும்
வழிதான்.
சகல சிருஷ்டிகளும்
எந்த ஏக உள்ளமையில் தரிப்பட்டுள்ளனவோ அந்த ஏக உள்ளமையே அவற்றின் ஆதியாகவும் அந்தமாகவும்
வெளிரங்கமாகவும் அந்தரங்கமாகவும் இருக்கிறது. “அவனே ஆதியும் அந்தமும் புறமும் அகமும்”
(ஹுவல் அவ்வலு வல்ஆஃகிரு வழ்ழாஹிரு வல்பாத்தின்
-57:3 )
எனவே
சகல சிருஷ்டிகளுக்கும் வெளிப்படுவது அவனில் அன்றி (வேறில்) இல்லை. சகல சிருஷ்டிகளுக்கும்
மறைவு அவனில் அன்றி (வேறில்) இல்லை. எனவே மறைவோ வெளிப்பாடோ அவன் அறிவில் இல்லாது இல்லை.
சூரியன்
என்னும் சிருஷ்டி இப்பருவுலகைப் பொருத்தவரை ஒளியூட்டக் கூடியதாக இருக்கிறது. அதன் இத்தன்மை
பலரையும் மன மயக்கில் ஆழ்த்திவிட்டது. அதாவது, சூரியன் தன் ஒளியால் தன்னைக் காட்டியபடி
தான் அல்லாத பிற பொருள்களையும் காட்டுகிறது என்று கண்டவர்கள் அதனைச் சத்தியப் பரம்பொருளுக்கான
ஓர் உவமை ஆக்கிவிட்டார்கள். உவமை என்பது குறியீடாகி அதுவே வழிபாடாகவும் ஆகிவிட்டது.
”எப்பொருளும்
அவனின் உவமை போன்று இல்லை” (லைச கமிஸ்லிஹி ஷைஉன்
-42:11) என்னும் எல்லைக் கோட்டை நினைவில் வைத்திருந்தால் உவமைகளையும் குறியீடுகளையும்
எதார்த்தமாகக் கருதி வழிகெடுவதில் இருந்து தப்பலாம். விஷயங்கள் எளிதாக விளங்க வேண்டும்
என்பதற்காகத்தான் உவமைகளும் குறியீடுகளும் பயன்படுத்தப் படுகின்றனவே தவிர அவையே எதார்த்தங்கள்
அல்ல.
இறைவனின்
அழகிய திருநாமங்களில் ஒன்று ”நூர்” (ஒளி) என்பது. அதற்கு, ’தன்னைக் கொண்டே தன்னை வெளிப்படுத்தித்
தான் அல்லாதவற்றையும் வெளிப்படுத்திக் காட்டும் ஒன்று’ என்பது விளக்கம். இத்தத்துவத்தை
ஃபக்ருத்தீன் இராக்கீ (ரஹ்) அவர்கள் தங்களின் “லமஆத்” என்னும் ஞான நூலில் சூரியனையே
உதாரணம்
காட்டி விளக்குகிறார்கள்:
“உன்னைக்
கொண்டே
உன்னை
அறிந்தேன்
சூரியனின்
ஒளியால்
சூரியனைக்
காண்பது போல்”
*
”சூரியனில்
மூழ்கியுள்ளது பாலைவனம்
நிழல்
எதுவும் வர முடியாது இங்கே
என்னே
அற்புதம்!
சூரியன்
சுடரும் போது
நிழல்
மறைந்துவிடுகிறது
எனினும்
சூரியன்
இன்றி
நிழல்
என்பதில்லை!”
*
”அவனின்
உள்ளமையோ சூரியன்
வானும்
பூமியும்
குடைகளாய்க்
காண்கிறேன்”
*
உவமை
சொல்லப்படும் பொருள் ஒன்றாக இருந்தாலும் ஒவ்வொரு வரிக்கும் தனித்தனி விளக்கங்கள்!
மௌலானா
ரூமியும் தன்னுடைய காவியங்களில் சூரியன் என்பதை உவமையாகவும் குறியீடாகவும் பயன்படுத்தி
உதாரணங்களால பல நுட்பமான கருத்துக்களை விளக்கியிருக்கிறார்கள். அவர்களின் குருநாதரின்
பெயர் ஷம்ஸுத்தீன் (மார்க்கத்தின் சூரியன்) என்பதால் தன் காவியங்களில் பல இடங்களில்
தமது குருநாதரை ஞான சூரியன் என்று குறிப்பிட்டுப் பாடியுள்ளார்கள். ஆனால் இதனைப் புரிந்துகொள்ளாத
சில ஞான சூனியங்கள் அவர்கள் பழைய பாரசீக நாட்டின் சூரிய வழிபாட்டு முறையை மறைமுகமாக
மீண்டும் நிறுவி விட்டார்கள் என்று விஷப் பிரச்சாரம் செய்ததுண்டு. அவர்களுக்காக அன்றே
மௌலானா ரூமி சொல்லிவிட்டார்கள்:
”உயிருள்ள
வரை குர்ஆனுக்குக் கட்டுப்பட்டவன் நான்
தேர்ந்தெடுக்கப்
பட்டவரான முஹம்மத் (ஸல்) அவர்களின்
பாதையின்
பணிவான தூசி நான்
இதன்
வேறாய் என் கவியை எவனேனும் விளங்கினால்
அவனை
விட்டும் விலகுகிறேன்
அவன்
சொல்லின் மீதும் வெறுப்பானேன்”
(மன் பந்தாயே குர் ஆனம் அகர் ஜான் தாரம்
மன் ஃகாக்கே ராஹே முஹம்மத் முஃக்தாரம்
கர் நக்ல் குனத் ஜுஸீன் கஸ் அஸ் குஃப்தாரம்
பேஸாரம் அஸூ வஸீன் சுஃகன் பேஸாரம்)
”எப்பொருளும்
அவனின் உவமை போன்று இல்லை” (லைச கமிஸ்லிஹி ஷைஉன் -42:11) என்பதைக் கொண்டு சூரியன் என்னும்
குறியீட்டின் எல்லைகளைக் கவனிப்போம். சூரியன் தன் ஒளியால் தன்னையும் தான் அல்லாத பிற
பொருட்களையும் காட்டுகிறது என்பது பாமரர்களின் பார்வையிலான, அல்லது அஃறிணைகளின் அறிவு
நிலையிலான கருத்துத்தான். அதாவது, புறக்கண்கள் என்னும் புலனின் அடிப்படையிலான கருத்து.
இதனைக் கொண்டு அகக்கண்ணின் பார்வையிலான கருத்துத் தொடப்பட வேண்டும். அதாவது அனைத்தையும்
(அந்தச் சூரியன் உட்பட) காட்டுவது பரம்பொருள்; அவனை அவனே வெளிப்படுத்தியும் உள்ளான்.
சூரியனின்
ஒளி பாய்வதற்கு ஓர் எல்லை இருக்கிறது; சூரியன் பகலில் தோன்றி இரவில் மறைந்து விடுகிறது;
அதாவது, பூமியின் பாதியைத்தான் அது வெளிச்சமிடுகிறது, அடைய வளைந்து முழுமையாக வெளிச்சம்
இடவில்லை. சூரியன் என்பது எல்லைகளற்ற பிரபஞ்சப் பரப்பில் ஒரு அணுத்துகளை விடவும் சிறியது!
குறியீட்டின்
வழிபாட்டில் இருந்து ஸபா நாட்டினரை மீட்டு அக்குறியீடு எந்தத் தத்துவத்தை விளக்குவதற்காக
முதலில் ஏற்பட்டிருக்குமோ அந்தத் தத்துவத்தை, பரம்பொருள் ஞானத்தை ஹுத்ஹுத் பறவை அடுத்து
முன் வைக்கிறது:
“வானங்களிலும்
பூமியிலும் மறைந்துள்ளவற்றை வெளியாக்குகிறவனும்
நீங்கள்
மறைப்பதையும் வெளியிடுவதையும் அறிபவனுமாகிய
அல்லாஹ்வுக்கு
அவர்கள் தலைசாய்க்க வேண்டாமா?” (27:25)
இதனைத்
தொடர்ந்து சுலைமான் நபி அவர்கள் ஸபா நாட்டின் அரசியான பல்கீஸுக்கு ஒரு கடிதம் எழுதி
அந்த ஹுத்ஹுத் பறவையிடமே கொடுத்து அனுப்பினார். அக்கடிதம் மிகவும் முக்கியமான ஒன்று.
மேற்சொன்ன கருத்துக்களின் முத்தாய்ப்பாக உள்ள ஒன்று!
(தொடரும்)
No comments:
Post a Comment