Wednesday, September 12, 2012

எறும்பின் கண்



அறிவு ஆறு என்கிறது தொல்காப்பியம். அதுவும்கூட தொல்காப்பியர் முடிவு செய்ததில்லை. அவருடைய முன்னோர்கள் சொல்லி வைத்ததாம்.

உண்மையில் அறிவு என்பது ஒன்றுதான். புறவுலகை எத்தனைக் கருவிகளால் (புலன்களால்) அறிகின்றோமோ அத்தனை அறிவு என்று ஒரு வசதிக்காகச் சொல்லிக் கொள்கிறோம். உதாரணமாக, வீட்டிற்குள் விளக்கு எரிகிறது. வெளியே இருந்து பார்க்கும் போது சுவரில் உள்ள நான்கு கண்ணாடி ஜன்னல்களில் அது பளிச்சென்று தெரிகிறது. ஒளி ஒன்றுதான். இருந்தாலும் ஜன்னல்களின் எண்ணிக்கையை வைத்து ’அந்த வீட்டிற்குள் நான்கு ஒளிகள் இருக்கின்றன’ என்று சொன்னால் எப்படி? அப்படித்தான் அறிவுகள் பல இருப்பதாகச் சொல்வதும்.


வெளி உலகை அறியும் வழிகள் ஆறு என்கிறது தொல்காப்பியம். எனவே ஆறு அறிவுகள்.
ஸ்பரிசம், வாய், நாக்கு, மூக்கு, கண், காது மற்றும் மனம். இவற்றில் ஒன்றுடன் ஒன்று அடுத்தடுத்துக் கூட்டிக் கொண்டே போக அறிவும் கூடிக்கொண்டே போகும்.

“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே”
(தொல்காப்பியம் #1511/ பொருளதிகாரம்/ மரபியல் #27)

அறிவது எது? உயிர். ஆமாம், “உலகத்துப் பல்லுயிரையும் அறியும் வகையால் கூறப்படுதலை உணர்த்துதல் நுதலிற்று” என்று மேற்படி நூற்பாவிற்கு இளம்பூரணர் எழுதும் உரையால் இது விளங்கும்.

அதாவது ‘உடல், நாவு, மூக்கு, கண், செவி ஆகிய கருவிகளைக் கொண்டு மனம்தான் முறையே உற்றும், சுவைத்தும், நுகர்ந்தும், கண்டும், கேட்டும் அறிகிறது’ என்றுதான் நாம் சொல்வோம்.

“கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியு ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள”
என்றார் திருவள்ளுவர். அதாவது, ஐம்புலன்களாலும் பெறும் இன்பம் ஒரே இடத்தில் இருக்கிறது என்றால் அது பெண்ணிடம் என்று சொல்கிறார். எனவே, ஐம்புலன்கள் என்பவை மனத்தின் கருவிகள் என்பதுதான் அவரின் கருத்தும்.

ஸ்பரிசம், நாவு, மூக்கு, கண் மற்றும் செவி ஆகியன ஐந்தும் உடல் சார்ந்தவை. மனம் என்பது உடலுக்கு அப்பாற்பட்டது. அவை புறம் என்றால் இது அகம்.

தொல்காப்பியர் சொன்ன வரிசை முறை முக்கியமானது. அதாவது உடலில் எந்தெந்தப் புலன்கள் காணப்படுகின்றனவோ அதன்படிச் சொல்லப்பட்டுள்ளது. எனவே இரண்டறிவு உயிரினத்திற்கு உள்ள இரண்டாம் புலனான நாவு அதற்குக் கீழான ஓரறிவு உயிரினத்தில் இருக்காது; மூன்றறிவு உயிரினத்திற்கு உள்ள மூன்றாம் புலனான மூக்கு அதற்குக் கீழான அறிவுள்ள உயிரினங்களில் இருக்காது; நான்கறிவு உயிரினத்திற்கு உள்ள நான்காம் புலனான கண் அதற்குக் கீழான அறிவுள்ள உயிரினங்களில் இருக்காது; ஐந்தறிவு உயிரினத்திற்கு உள்ள ஐந்தாம் அறிவான செவி அதற்குக் கீழான அறிவுள்ள உயிரினங்களில் இருக்காது; ஆறறிவு உயிரினத்திற்கு உள்ள ஆறாம் அறிவான மனம் அதற்குக் கீழான அறிவுள்ள உயிரினத்திற்கு இருக்காது.

அதாவது ஓரறிவு உயிரினத்திற்கு தேகம் உண்டு. இதரப் புலன்கள் இல்லை.
இரண்டறிவு உயிரினத்திற்கு தேகமும் நாவும் உண்டு. இதரப் புலன்கள் இல்லை.
மூன்றறிவு உயிரினத்திற்கு தேகமும் நாவும் மூக்கும் மட்டும் உண்டு. இதரப் புலன்கள் இல்லை.
நான்கறிவு உயிரினத்திற்கு தேகமும் நாவும் மூக்கும் கண்ணும் உண்டு. இதரப் புலன்கள் இல்லை.
ஐந்தறிவு உயிரினத்திற்கு தேகமும் நாவும் மூக்கும் கண்ணும் செவியும் உண்டு. மனம் கிடையாது.
ஆறறிவு உயிரினத்திற்கு மேற்சொன்ன ஐம்புலன்களுடன் ஆறாம் அறிவான மனமும் உண்டு.


ஒவ்வொரு வகைக்கும் தொல்காப்பியரே உதாரணங்கள் சொல்லியிருக்கிறார்.

ஓரறிவு உயிரினம் என்பது தாவர இனம்- மரம் செடி கொடிகள்.

ஈரறிவு கொண்டவை ‘நந்தும் முரளும்’ அன்ன பிறவும். அதாவது, சங்கு, நத்தை, அலகு, நொள்ளை, இப்பி, கிளிஞ்சல், ஏரல் போன்றன.

மூன்றறிவு கொண்டவை சிதல் எறும்பு அட்டை போன்றன. இவற்றுக்கு உடலும் நாவும் மூக்கும் மட்டுமே உண்டு. கண்ணும் செவியும் மனமும் கிடையாது.

நான்கறிவு கொண்டவை நண்டும் தும்பியும் வண்டும் போன்றன. இவற்றுக்கு உடலும் நாவும் மூக்கும் கண்ணும் உண்டு. செவியும் மனமும் கிடையாது.

ஐந்தறிவு கொண்டவை கால்களுள்ள விலங்குகளும், பறவைகளும் நீர்வாழ் உயிரினங்களான மீன் முதலை ஆமை போன்றவையும் பாம்பு, தவளை போன்றவையும் ஆகும். இவற்றுக்கு ஐம்புலன்கள் உண்டு, மனம் கிடையாது.

ஆறறிவு கொண்டவர்கள் மனிதர்களும் அவர்களைப் போன்ற பிற இனமும் என்கிறார் தொல்காப்பியர். பிற இனத்தவர் என்பவர்கள் யார்? வேற்று கிரக மனிதர்களா? Aliens? “தேவர் அசுரர் இயக்கர் முதலியானோர்” என்று சொல்கிறார் இளம்பூரணர்.


இப்படிப் பட்ட படிநிலை வளர்ச்சியில்தான் உயிர்கள் உள்ளன என்கிறார் தொல்காப்பியர். வேறு காம்பினேஷன்ஸ் கிடையாது. அதாவது, இரண்டாம் மூன்றாம் அறிவு இல்லாமல் முதலாம் + நான்காம் + ஐந்தாம் அறிவு மட்டும் வைத்து ஓர் உயிரினம் கிடையாது, ’உடலோடு கண்ணும் காதும் மட்டும் வச்சாப்ல ஒரு ஜீவராசி வேணுமுங்க’ என்று கேட்டால் கிடைக்காது. ஓர் உயிரினத்தில் குறிப்பிட்ட புலன் இருக்கிறது என்றால் அதன் கீழுள்ள புலன்கள் அதனிடம் கட்டாயம் இருந்தே தீரும். (’ஒரு மனுஷனுக்கு ரெண்டு கண்ணும் அவிஞ்சு போயி வாயும் பேசாத ஊமையா இருக்கான்யா. இப்ப அவன எதுல சேக்குறது?’ன்னு கேக்காதீங்க. அவனிடமும் புலன்கள் இருக்கின்றன. ஆனால் அவை பழுதாக இருக்கின்றன, அவ்வளவே!)

எனக்கும் ஒரு சந்தேகம் எழுந்தது. ’கடல்கோள்’ (சுனாமி) போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது மனிதர்கள் தேமே என்று பேக்குகளாய் இருக்க விலங்குகளும் பறவைகளும் தம் உள்ளுணர்வால் முன்பே உணர்ந்துகொண்டு அபாயம் இல்லா இடம் நோக்கி விரைகின்றன எனும்போது அவற்றுக்கு மனம் இல்லை என்று சொல்வது தகுமா?

தொல்காப்பியர் சொல்வது ஒரு பொது விதி. நம் முன்னோர்களின் உயிரியல் அறிவு எத்தனைச் செம்மையாக இருந்தது என்பதற்கு இது ஒரு சான்று. ஆனால், விதி உண்டென்றால் விதி விலக்குகளும் இருக்கும் அல்லவா? அதையும் அவரே கூறுகிறார்:

“ஒருசார் விலங்கும் உளவென மொழிப”
(தொல். #1518, பொருள்/ மரபியல் #34)
அதாவது விலங்குகளில் சிலவற்றுக்கு மனம் உண்டு! “அவையாவன கிளியும் குரங்கும் யானையும் முதலாயின” என்கிறார் இளம்பூரணர்.

ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு உயிர்களில் வெவ்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளன. கழுகின் பார்வைக் கூர்மை நம்மிடம் இல்லை. சில உயிரினங்கள் பல கி.மீ தொலைவில் இருந்தே சப்தத்தைக் கேட்கின்றன. நாயின் மோப்பத் திறன் மனிதனிடம் இல்லை. ஆனால் மனம் மனிதனில் வளர்ச்சி அடைந்த அளவு வேறு உயிரினங்களில் வளர்ச்சி பெறவில்லை.


உதாரணமாக, கிளிக்கு நாக்கிசாக அதாவது அரைகுறையாக ஒரு மனம் இருக்கிறது என்று தொல்ஸும் இ.பூரணரும் சொல்வதை அலசிப்பாருங்கள். மரங்களில் தன் உறவுகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஒரு கிளியைப் பிடித்துக் கூண்டில் அடைத்துவைத்து, அதை ஒருவர் தன் செல்ல மகளுக்குப் பிறந்த நாள் பரிசாக வாங்கித் தருகிறார். அந்தப் பெண் அக்கிளிக்குப் பரஞ்சோதி/ பப்லு/ பாப்பி/ தேன்மொழி போன்ற ஏதாவது ஒரு பெயரை வைத்து வளர்க்கிறாள்.(பாலி – PAULIE கிளியை மையமாக வைத்து 1998-ல் இப்பெயரில் ஒரு திரைப்படம் வெளிவந்தது. A journey of thousand miles begins with a single parrot.) கிளி பேசும் என்று யாரோ சொல்ல அதைப் பேச வைக்கப் பிரயத்தனங்கள். அதன் நாக்குத் தொலியை உரித்தால்தான் பேசும் என்று ஒருவர் ஐடியா கொடுக்க வாழைப்பழமும் மாம்பழமும் நிறுத்தப்பட்டு இப்போது சிவப்பு மிளகாய்ப் பழங்கள் அதற்கு வழங்கப் படுகின்றன. வாயும் ஆசன வாயும் எரிய எரிய அவதிப்பட்டு அது பேசித்தொலைத்து விடுவோம் என்று ஒரு நாள் ‘குட்மார்னிங்’ சொல்கிறது. இதோ கிளிக்கும் மனிதனைப் போல் மனம் இருக்கிறது என்று சொல்லிவிட முடியுமா?

கிளிப்பிள்ளை சொன்னதைச் சொல்லும். அதுவும் கூட ஆபத்தில்லாத நேரத்தில்தான் சொல்லும் என்கிறார் இராமகிருஷ்ண பரமஹம்சர். ஒருவன் கிளி ஒன்று வளர்த்தானாம். அதற்கு ராமா ராமா என்று ஜெபம் செய்யக் கற்றுக் கொடுத்திருந்தான். ஒருநாள் கூண்டு திறந்து கிடக்கவே அவ்வழியாக வந்த பூனை அதனைப் பிடிப்பதற்காகப் பாய்ந்ததாம். பதறியடித்து தத்தித் தாவிய கிளி கீகீகீகீ என்றுதான் கத்தியது ‘ராமா ராமா’ என்று கத்தவில்லை. கிளிப்பிள்ளை பக்தி என்பது இப்படிப் பட்டதுதான் என்கிறார் பரமஹம்சர்.


கிளிப்பிள்ளை ’கண்டதையும்’ சொல்லும் என்று காட்டுகிறது கலிங்கத்துப் பரணி. அவள் சிறு வயதிலிருந்தே ஒரு கிளியைத் தன் தோழி போல் வளர்த்து வந்தாள். அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. தினமும் கணவன் அறைக்குள் வந்ததும் கிளியைக் கூண்டோடு எடுத்து வெளியே வைத்துவிடுவாள். ஒருநாள் கிளியை வெளியே வைக்க மறந்துவிட்டாள். காலையில் கிளி பேசத் தொடங்கியது. இரவில் அந்த இளம் இணை ஆசையால் ஓசை மெழுகிப் பேசிக் கொண்டதை எல்லாம் அது மீண்டும் சொல்லிக் காட்டியது. இங்கிதம் இன்றி இப்படிக் கண்டதையெல்லாம் பேசித் தொலைக்கிறதே என்று அவள் பதறிப் போய் (அ)தன் வாயை மூடுகிறாள்.
“நேயக் கலவி மயக்கத்தே
நிகழ்ந்த தெல்லாம் கிளியுரைப்ப
வாயைப் புதைக்கும் மடநல்லீர்
மணிப்பொற் கபாடம் திறமினோ”

இப்படியாகக் கிளி கேட்டதையும் கண்டதில் கேட்டதையும்தான் பேசும் என்று சொன்னாலும் அது சிந்தித்துக் கம்பனைப் போல் ஒரு விருத்தப் பாடல் இயம்புமா? அல்லது ஐன்ஸ்டீனைப் போல் ஒரு ரிலேட்டிவிட்டி தியரி கண்டறியுமா? என்றால் முடியாது.

ஐந்தறிவு ஜீவன்களின் மனநிலை இஃதே என்கிறார் தொல்காப்பியர். ஏனெனில் மனம் என்பதற்கு இளம்பூரணர் தரும் விளக்கம் ‘அனுமானிக்கும் திறன்’ (Capacity of Assumption) என்றுதான் சொல்கிறது. அது மனிதனிடத்தில் மட்டுமே காணப்படுகிறது என்கிறார்.

இந்த அறிவு வகைப்பாட்டுச் சூத்திரத்தை எனக்கு என் பேராசிரியர் வகுப்பில் பயிற்றுவித்த போது மூன்றாம் அறிவில் எனக்கொரு சந்தேகம் வந்தது. தொல்காப்பியர் சொல்வதின் படி எறும்பு மூன்றாம் அறிவு என்றால் அதற்குக் கண் இல்லை என்றாகிறது. “ஐயா எறும்புக்குக் கண் உண்டே. இவர் என்ன இப்படிச் சொல்கிறார்?” என்று கேட்டேன். ”யோவ், எறும்புக்குக் கண்ணெல்லாம் இல்லைய்யா. எதையாவது கெளப்பி விடாத” என்று சொன்னார் என் ஆசான். அரில் தப உணர்ந்தவரின் சூத்திரத்தில் குறை சொன்னால் அவருக்கு ஆத்திரம் வராதா என்ன? ஆனால் மீண்டும் நான் என் புள்ளியை வலியுறுத்தினேன்.


உயிர்களை அறிவுப் புலன்களின் படி வகைப் படுத்தியவர்கள் சும்மா ஒன்றும் செய்யவில்லை. “நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே” என்றுதான் தொல்காப்பியர் கூறுகிறார். அதாவது ‘First Hand Observation’ – Direct Observation செய்திருக்கிறார்கள். சாரை சாரையாக ஓடிக்கொண்டிருக்கும் எறும்புகளைக் கூர்ந்து குறுகுறுவென்று பார்த்துத்தான் அதற்குக் கண் இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். மூக்கு? அதுதான் சக்கரையை மோப்பம் பிடித்து வரிசையாக வந்துவிடுகிறதே! வாய்? ஊசி போட்டாப்ல கடிக்கறதே ஐயா!

ஒரு மாணவன் எழுந்து தன் கருத்தை முன் வைத்தான். “எறும்புகள் ஒன்றுக்கொன்று நேராகச் சந்திக்கும் போது முகத்தோட முகம் முட்டிக்கிறது. அப்புறம் சேதியைச் சொல்லிவிட்டுப் போகிறது. அதுனால அதுக்குக் கண் இல்லைங்கறது உண்மைதான்.”

இன்னொரு மாணவன் எழுந்தான். “ஐயா, தொல்காப்பியர் சொல்ற அந்த ஆளுங்க பார்த்த எறும்புக்குக் கண் இருந்திருக்காது. இவரு பார்த்த எறும்புக்குக் கண் இருந்திருக்கலாம்” என்றான். என்னே ஓர் உன்னத விடை!

‘நீ எப்படிய்யா எறும்புக்குக் கண் இருக்குன்னு சொல்றே?’ என்று பேராசிரியர் கேட்டார். “திருக்குர்ஆன் சொல்கிறது!” என்றேன்.

(தொடரும்)

2 comments:

  1. //கிளிப்பிள்ளை சொன்னதைச் சொல்லும். அதுவும் கூட ஆபத்தில்லாத நேரத்தில்தான் சொல்லும் என்கிறார் இராமகிருஷ்ண பரமஹம்சர். ஒருவன் கிளி ஒன்று வளர்த்தானாம். அதற்கு ராமா ராமா என்று ஜெபம் செய்யக் கற்றுக் கொடுத்திருந்தான். ஒருநாள் கூண்டு திறந்து கிடக்கவே அவ்வழியாக வந்த பூனை அதனைப் பிடிப்பதற்காகப் பாய்ந்ததாம். பதறியடித்து தத்தித் தாவிய கிளி கீகீகீகீ என்றுதான் கத்தியது ‘ராமா ராமா’ என்று கத்தவில்லை. கிளிப்பிள்ளை பக்தி என்பது இப்படிப் பட்டதுதான் என்கிறார் பரமஹம்சர்.//

    அருமையான எடுத்துக்காட்டு.மனதில் இறைவனை பதித்துக் கொள்ளாமல், வெறும் 'லிப் சிம்பதி'செய்து வாழும் பண்டிதர்களை ஸ்ரீராமகிருஷ்ணர் கண்டிக்கிறார்.இந்த எடுத்துக் காட்டைப்போலவே பருந்து எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் நிலத்தில் கிடக்கும் அழுகிய எலியின் மீதே கவனமாக இருக்கிறது என்பார். அதுபோல வேத வேதாந்தங்களைப் படித்து வியாக்கியானம் சொன்னாலும், பக்தி இல்லாத பண்டிதனின் எண்ணம் முழுதும் உலக இன்பங்களிலேயே இருக்கும். பொருள் அறியாமல் உருப் போட்டதை ஒப்பிகும் பண்டிதன் கிளியைப் போலப்பேசுபவன்தான்.

    உங்களின் படிப்பின் வீச்சு கண்டு மலைக்கிறேன். மகிழ்கிறேன்.




    ReplyDelete
  2. //பாம்பு, தவளை போன்றவையும் ஆகும். இவற்றுக்கு ஐம்புலன்கள் உண்டு, மனம் கிடையாது.//
    பாம்புக்கு காது உள்ளதா ??????????????

    ReplyDelete