Tuesday, August 28, 2012

சூஃபியும் காஃபியும்இயைபான சொற்களில் ஓர் ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆங்கிலம் தமிழ் அரபி உருது என்று செவியில் கிடைத்த மொழிகளில் எல்லாம் இயைபுச் சொற்களை அறிந்து பரவசப்படுகிறான் என் பிள்ளை. அப்படி அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதில் ஒருநாள் சிக்கியது சூஃபி-காஃபி என்னும் ஜோடி!

காஃபியின் வாசத்திற்கு நான் ரஸிகன். லாட்டே, மோக்கா என்று சகதர்மினி அவ்வப்போது ஒரு சாண் உயரப் பீங்கான் கோப்பையில் ஆவி பறக்கக் கொண்டு வந்து தரும் தருணங்கள் வாழ்வில் வரம். அதிலும் பரபரப்பில்லாத விடுமுறை நாளென்றால் கேட்கவா வேண்டும். மேலும், மழைநாள் எனில்... உச்சம்!

சூஃபி-காஃபி என்னும் இயைபு வெறும் வார்த்தையளவில் மட்டும் ஜோடி அல்ல. மெய்யாலுமே அப்படித்தான்.

தமிழக வாழ் அல்லது இந்தியத் திருநாட்டின் முஸ்லிம்கள்தான் ச்சாயாப் பிரியர்களாக, அதாவது டீ ரசிகர்களாக இருக்கிறார்கள். “இத்தனைக்கும் டீ பச்சை நிறத்தில் கூட இல்லை” என்று நாகூர் ரூமி கிண்டல் செய்வார். எங்கள் வீட்டு வட்டாரங்களிலும் அப்படித்தான். ”தேத்தண்ணி தேத்தண்ணி” என்னும் சப்தம் சகஜமான ஒன்று.

ஆனால் காஃபி என்பது தமிழகத்தைப் பொருத்தவரை பிராமணர்களின் பானம் என்றே ஆகிவிட்டது. நானும்கூட நல்ல காஃபி சுவைக்கப் பழகியது, என் பால்ய வயதில், எங்கள் குடும்ப நண்பராக இருந்த கல்யாணி மாமி வீட்டில்தான். அவர் போட்டுத் தரும் டிக்காஷன் காஃபியின் மணம் மூக்கில் இழையும் போதே நாக்கில் ஜலம் ஊறும்.

இதெல்லாம் எப்படி நிகழ்ந்தது? கலாச்சாரப் பிணைப்புகள். தாவோ / ஜென் ஞானிகள் கண்டுபிடித்த டெ / ச்சாய் என்னும் டீ – தேநீர் இங்கே முஸ்லிம் சமூகத்தின் பானம் என்பது போல் ஆகிவிட்டது. சூஃபிகள் கண்டுபிடித்த காஃபி இங்கே பிராமணர்களின் பானம் என்பது போல் ஆகிவிட்டது.

டீ, காஃபி இரண்டுமே ஆன்மிக பானங்கள். அதாவது, தியானம் செய்வதற்காகக் கண்டறியப்பட்ட பானங்கள். தேநீரை போதிதர்மர் கண்டுபிடித்தார் என்னும் கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இப்போது காஃபியின் கதையைக் காண்போம்.
காஃபியின் பிறப்பிடம் அபிசீனியா தேசம்.அதாவது, இன்றைய எத்தியோப்பியா. ஹழ்றத் பிலால் (ரலி) அவர்களின் தாய்நாடு.


காஃபி பிறந்த காலகட்டம் 13-ஆம் நூற்றாண்டு எனப்படுகிறது. அது பிறந்த விதம் ஒரு சிறு கதையாகச் சொல்லப்படுகிறது:

எத்தியோப்பியாவில் ஃகாலித் என்று ஒரு இடையன் இருந்தான். ஊருக்கு வெளியே உள்ள வனப்பகுதிகளில் ஆடுகளை மேய விட்டு அழைத்து வருவது அவனின் அன்றாட வேலையாக இருந்தது. ஆடுகள் ஒரு குறிப்பிட்ட செடியின் கனிகளை விரும்பி உண்பதை ஒருநாள் கவனித்தான். அந்தக் கனிகள் செந்நிறத்தில் இருந்தன. அவற்றைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்து சமைத்தான். கனிகள் வெந்த நீர் சுவையாக இருந்தது. இப்படித்தான் தோராயமான காஃபி உருவாயிற்று, டிக்காஷனோ காஷனோ இல்லாமல் காஷுவலாக.

ஃகாலித் வடித்த பானம் இன்றைய அர்த்தத்திலான காஃபி அல்ல. ஏனெனில் அது (புலவர்களின் பாஷையில் கூறுவதெனில்) கொட்டை வடிநீர் அல்ல, கனி வடிநீர் ஆகும். காஃபியில் முக்கியம் கனியின் சதை அல்ல, அதன் விதைதான் என்பது கண்டறியப்பட சில கால ஆராய்ச்சிகள் தேவைப்பட்டிருக்கும்.

காஃபி என்பது 13 – 15-ஆம் நூற்றாண்டுகள் வாக்கில் ஷாதிலிய்யா சூஃபிப் பள்ளியைச் சேர்ந்தவர்களால் அரபு தீபகர்ப்பம் முழுவதும் பிரபலமாக்கப் பட்டது என்கிறது வரலாறு. ஷாதிலிய்யா தரீக்காவில் ஒரு குருவான அபுல் ஹசன் அலீ இப்னு உமர் எத்தியோப்பியாவை ஆண்டு கொண்டிருந்த சுல்த்தான் சலாஹுத்தீனின் அவையில் சிறிது காலம் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு காஃபி பானம் அறிமுகமாகியது. சுடச்சுட அருந்திய அந்தப் பானம் மூளையைச் சுருசுருப்பாக்கி தூக்கம் நீக்கி விழிப்பை ஊக்கியதை அனுபவித்து அறிந்த அவர் அதனை யமன் தேசத்திற்கு எடுத்துச் சென்றார்.


ஷாதிலிய்யா தரீக்காவினர் உலக வாழ்விலும் மிக வேகமாக இயங்கி வந்தார்கள். மிகச் சிறந்த வணிகர்களாக இருந்தார்கள். அவர்கள் கையில் காஃபி பயிர்த்தொழிலும், பான தயாரிப்பும் பொருள் கொழிக்கும் வணிகமாக யமனிலும் அரேபியாவிலும் பரவின. இன்றளவும் காஃபித் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் ஆதரவு நாயகராக ஞானி அபுல் ஹசன் அலீ இப்னு உமர் அவர்களே கருதப்படுகிறார். அல்ஜீரியாவில் காஃபி ‘ஷாதிலிய்யா’ என்றும் அழைக்கப்படுகிறது!

யமனிலும் அரேபியாவிலும் காஃபி ‘கஹ்வா’ என்று அழைக்கப்பட்டது. முன்பு அது மதுவுக்குரிய பெயர்களில் ஒன்றாக இருந்தது. அதனால்தான் பின்னாளில் காஃபி ஐரோப்பியாவிற்குத் துருக்கியர்களால் அறிமுகம் செய்யப்பட்ட போது அது ‘இஸ்லாத்தின் மது’ (Wine of Islam) என்று அழைக்கப்பட்டது.

யமன் நாட்டில் காஃபி ஏற்றுமதிக்கு ஒரு முக்கிய மையமாக இருந்த துறைமுகத்தின் பெயர் ’மோக்கா’ (Mocha). இன்று அப்பெயர் சாக்லேட் கலந்த காஃபியின் நாமகரணம்!

ஷாதிலிய்யா தரீக்காவினரால் காஃபி, அவர்களின் தியான நிகழ்வுகளில் பயன்படுத்தப் பட்டது. இரவெல்லாம் விழிப்புடன் தியானத்தில் ஈடுபடுவதற்கான ஒரு காரணியாக அது பயன்பட்டது. காஃபி பருகுவதால் உண்டாகும் விழிப்பு நிலைக்கு அவர்கள் ஒரு பெயர் சூட்டினார்கள்: ‘மர்க்கஹா’. ஷாதிலிய்யா பள்ளியின் ஞானியருள் ஒருவரான அபூபக்ரிப்னு அப்துல்லாஹ் அல்-ஐதரூஸ் (ரஹ்) அவர்கள் காஃபியின் பெயரால் ஒரு கஸீதா (நெடுங்கவிதை) பாடியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது!

ஷைகிப்னு இஸ்மாயீல் பா-அலவி அல்-ஷிஹ்ரி அவர்கள் காஃபியை தியானத்தில் பயன்படுத்துவது பற்றிப் பேசியுள்ளார்கள். தூய மனத்துடன், இறை தியானம் செய்வதற்கான விழிப்பிற்காக என்னும் நோக்கில் காஃபியை அருந்தும்போது அது கஹ்வா மஃனவிய்யா என்றும் கஹ்வா சூஃபிய்யா என்றும் சொல்லப்படும் உன்னதமான நிலைக்கு இட்டுச் செல்லும் என்று அவர்கள் கூறினார்கள். அதாவது, சூஃபிகள் தியானத்தின் ஆழத்தில் பெறும் இறையனுபவ நிலைக்கு இட்டுச் செல்லும் துணைக்கருவி காஃபி!


அரேபியாவில் காஃபி பரவிய பின் அது தியான சபைகளில் பருகப்பட்டு வந்ததை ஜஸீரி பதிவு செய்துள்ளார். “மக்காவின் புனிதப் பள்ளியில் அது பருகப்பட்டு வந்தது. காஃபி பரிமாறப்படாத மவ்லித் சபையோ தியான சபையோ அப்போது இருக்கவில்லை” என்று அவர் எழுதுகிறார்.

கி.பி.16-ஆம் நூற்றாண்டில் காஃபி எகிப்து நாட்டிற்கு அறிமுகமாகி விரைவிலேயே மக்களிடம் பரவலாகப் பழக்கமாகிவிட்டது. கெய்ரோ நகரில் உள்ள அல்-அஜ்ஹர் பல்கலைக்கழகத்திலும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்த சூஃபி தியான மடங்களிலும் நிகழ்வுகளில் காஃபி பரிமாறப்பட்டது. இப்னு அப்துல் கஃப்ஃபார் என்பவர் அத்தகைய ஒரு தியான சபையை வருணிக்கிறார்: “ஒவ்வொரு (அரபுக் கணக்குப் படியான) திங்கள் மற்றும் வெள்ளி இரவுகளில் காஃபி அருந்தப் பட்டது. அது ஒரு பெரிய செந்நிற மண்-பானையில் தயாரிக்கப்பட்டது. சபையின் தலைவர் அதனை ஒரு சிறிய குவளையில் மொண்டு வலது புறமாக ஒவ்வொருவருக்கும் வழங்கி வந்தார். அப்போது அவர்கள் அனைவரும் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ முதலிய மந்திரங்களை ஒலித்திருந்தார்கள்.”

காஃபி தயாரிப்பு ஒரு பெரிய வணிகமாக ஆனபோது எகிப்தின் ஆளுநராக இருந்த அஹ்மத் பாஷா காஃபி நிலையங்களை அரசின் செலவில் நிறைய கட்டினார். அதில் பணியாளர்கள் அமர்த்தப்பட்டனர். அவை மக்கள் கூடும் இடங்களாக மாறின. கி.பி.17-ஆம் நூற்றாண்டில் காஃபி துருக்கியின் தலைநகரான இஸ்தான்பூலில் அறிமுகமானபோதும் அங்கே காஃபி நிலையங்கள் கட்டப்பட்டன.

ஒரு சில நூற்றாண்டுகளில் காஃபிக்கு எதிரான மதப் போக்கும் உருவானது. மூளையைப் புத்துணர்ச்சியாக்கி விழிப்பைத் தருகிறது எனில் அது எப்படி மதப் பண்டிதர்களின் சோதனைப் பார்வையை விட்டுத் தப்பும்? அது ஆகுமானதா ஆகாததா – ஹலாலா? ஹராமா? என்னும் விவாதங்கள் எழுந்தன. காஃபியின் மீது கண்டனங்களும் ஃபத்வா என்னும் மார்க்கத் தீர்ப்புகளும் எழுதப்பட்டன.

ஆரம்பத்தில் பச்சையான விதைகளில் இருந்துதான் காஃபி வடிக்கப்பட்டு வந்தது. காஃபி விதைகளை வறுத்து அதிலிருந்து பானம் தயாரிக்கும்போது அதன் சுவையும் மணமும் மேலும் செம்மையாக வெளிப்படுகிறது என்று கண்டறிந்தவர்கள் பாரஸீகர்கள்தான். இந்தக் கோணத்திலும் காஃபிக்கு எதிராக மார்க்கத் தீர்ப்புகள் எழுதப்பட்டன. அதாவது, கரிக்கப்பட்ட பொருளை உட்கொள்வது ஆகாது என்பதாக.


பள்ளிவாசல்களை விடவும் காஃபிக் கூடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அந்நிலை மக்களின் சீர்கேட்டையே காட்டுவதாக மார்க்க அறிஞர்கள் கருதினார்கள். காஃபிக் கூடங்கள் புதிய சிந்தனைகளின் பிறப்பிடமாகவும் இருந்தது. சமயத்திற்கு மாற்றமான கருத்துக்கள் கருத்தரித்து வளரும் சூழல் அதில் இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். (ஐரோப்பாவின் காஃபிக் கூடங்களில்தான் பல கலை இயக்கங்களும் அரசியல் இயக்கங்களும் தோன்றி வளர்ந்தன என்பதை இங்கே நினைவு கூரவும்.) காஃபி அருந்துவோரின் போக்குகள் கண்காணிக்கப்பட்டன. அவர்கள் பொதுமக்களை விட வித்தியாசமாக இருப்பதாக அவதானிக்கப்பட்டது.

“காஃபியைப் பொருத்தவரை அது ஒரு பித்அத் (புதுமையான விஷயம்). அது தூக்கத்தை நீக்குகிறது. இனவிருத்தி ஆற்றலைக் குறைக்கிறது. காஃபிக் கூடங்கள் குழப்பத்தின் கூடாரங்களாக உள்ளன. காஃபி ஹராமானது என்று நிறைய ஃபத்வாக்கள் எழுதப்பட்டுள்ளன. ஏனெனில் எரிக்கப்பட்ட பொருள் எதுவும் உட்கொள்ளத் தகாதது ஆகும்” என்று எழுதுகிறார் அவ்லியா எஃப்ஃபெண்டி.

உண்மைதான். மருத்துவ ரீதியாகக் காணும்போது காஃபி என்பது ஒரு போதை வஸ்து என்றே சொல்லலாம். அதாவது அதில் உள்ள காஃபீன் என்னும் பொருள் இரத்தத்தால் உடனடியாக உறிஞ்சப்பட்டு மூளைக்குள் நுழைகிறது. அங்கே தூக்கத்தைத் தூண்டும் வேதிப்பொருட்களைத் தடை செய்கிறது. அட்ரினலின் என்னும் ஹார்மோன் அதிகமாகச் சுரக்குமாறு செய்கிறது. அது மூளையில் ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்குகிறது. இதயத் துடிப்பை அதிகமாக்குகிறது. மூளையின் செல்கள் ‘ஃபயர்’ ஆவதை அதிகமாக்குகிறது. அதாவது, மூளையின் தகவல் பரிமாற்றத்தை அதிகமாக்குகிறது. இத்தனை வேலைகளைச் செய்கிறது இந்தத் திரவம். பேஷ் பேஷ், ரொம்ப நன்னாயிருக்கு!

ஓரளவுக்கு மேல் போனால் தண்ணீரும்கூட உயிரை மாய்க்கும் விஷமாகிவிடும் என்று மருத்துவ அறிவியல் சொல்கிறது. காஃபியும் அப்படித்தான். கொக்கொ கோலாவும் அப்படித்தான். இந்த அளவுகள் அததற்கு மாறலாம், அவ்வளவே. காஃபிப் பிரியர்கள் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம், அடியேனையும் சேர்த்து. கொஞ்சம் மிஞ்சினால் அது நம்மைக் காஃபி வெறியர்கள் ஆக்கிவிடும். மூளைக்கும் நிரந்தரமான பாதிப்புக்களையும் கொண்டுவரக் கூடும்.

வரலாறுக்குத் திரும்புவோம்...

எகிப்தில் புனித ரமலான் மாதத்தில் காஃபிக் கூடங்கள் இழுத்து மூடப்பட்டதும், பின்னர் கட்டுப்பாடுகளுடன் அவை அனுமதிக்கப்பட்டதும், காஃபிக் கூடங்களில் பிரசங்கம் செய்ய முல்லாக்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மக்களுக்கு உபதேச போதனைகள் செய்ததும் அவ்லியா எஃப்ஃபெண்டியின் பதிவுகளில் உள்ளன. (அட்வைஸ் கேட்டுக்கிணே காஃபி குடிக்கணுமா? இன்னா கொடும சார் இது?)

பாரஸீகத்திலும் இதே நிலைதான் இருந்தது. ஆனால் பாரஸீகம் ஞானக் கவிதைகளின் ரோஜாத் தோட்டமாக இருந்தது. காஃபிக் கூடங்களில் அமரும் மக்கள் ஞானக் கவிதைகளின் வாசிப்பைக் கேட்டுக்கொண்டே காஃபி அருந்துவது அங்கே வழக்கமானது. அரசியல் விவாதங்களும் அங்கே சூடாக நடந்தது. மதகுருமார்களின் போதனைகளும் வழக்கமாக நடந்து வந்தன. அவ்வப்போது யாரேனுமொரு தர்வேஷ் (சூஃபித் துறவி) தடாலடியாக உள்ளே நுழைந்து உலக வாழ்வின் இழிநிலை பற்றி மக்களை எச்சரிப்பதும் உண்டு. பதினேழாம் நூற்றாண்டில் அங்கிருந்த நிலையை ஃபிரெஞ்சு யாத்ரீகர் ழீன் ச்சார்டின் இவ்வாறு வருணித்தார்.

காஃபி கி.பி.1615-இல் வெனீஸ் நகருக்குள் நுழைந்தது. 1644-இல் மார்செய்ல்ஸிலும், 1651-இல் லண்டனிலும் அறிமுகப்படுத்தப் பட்டது. எனினும் 1669-இல் துருக்குத் தூதர் சுலைமான் முஸ்தஃபா கோச்சா அதனைப் பாரீசில் பிரபலமாக்கிய பிறகே ஐரோப்பா முழுவதும் அது பரவிற்று. அங்கிருந்துதான் அது வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இன்று உலகிலேயே அதிகமாக காஃபி விளையும் நாடு ப்ரேசில்!

ஐரோப்பாவிலும் காஃபிக்கு எதிர்ப்புகள் இருந்துள்ளன. கிறித்துவர்கள் அதனை அருந்தக் கூடாது என்று முதலில் தடை இருந்தது. போப் க்ளெமண்ட் ’எட்டு’ அவர்கள் அதனை அருந்திச் சோதித்த பின்பே அது அனுமதிக்கப்பட்டது. பிறகு காஃபிக்கு அந்தரங்கமான எதிர்ப்புக்கள் தோன்றின. அதாவது, காஃபி அருந்துவதன் விளைவாகத் தங்கள் ஆண்களின் தாம்பத்ய ஆற்றல் பாதிக்கப்படுவதால் காஃபியின் கவர்ச்சி வலையில் மயங்கி அவர்கள் மோசம் போவதை விட்டும் காப்பாற்றித் தருமாறு ஐரோப்பியப் பெண்மணிகள் அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்தது உண்டு.

இது உண்மையா என்று பதறவேண்டிய அவசியம் இல்லை. மருத்துவ ஆய்வுகளே இதில் ஒரு தெளிவான முடிவைச் சொல்லவில்லை. இப்படியும் அப்படியுமாகக் கூறுகிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு கோப்பை காஃபி அருந்தும் ஆண்களின் உயிரணுக்கள் வேகமாக நீந்துகின்றன என்று ஒரு விஞ்ஞானி தன் ஆராய்ச்சியின் முடிவைக் கூறியிருக்கிறார். பிறவிக் கடல் நீந்தும் நினைப்புடைய ஞானியர் கண்டறிந்த காஃபியின் கதியைப் பார்த்தீர்களா, அன்பர்களே?

காஃபியை ஒரு ழாஹிரி வஸ்தாகவே இதுகாறும் பேசி வந்தோம். இனி அதனை ஒரு குறியீடாகக் காண்போம். நாமே ஒரு காஃபிக் கொட்டைதான் என்று சொல்கிறார் ஷைக் முஹம்மத் ஷரீஃப் பாபா. தான் பிறந்த ஊரான இஸ்தான்பூலில் வசித்துவரும் இவர் துருக்கி, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் சூஃபித்துவப் பயிற்சி அளித்து வருகிறார். வட கரோலினாவில் உள்ள ச்சேப்பல் ஹில் எனுமிடத்தில் பல வருடஙளாக ரூமி விழாவின் அமைப்பாளராக இருந்து வந்துள்ளார். அவருடைய ஒரு கோப்பை காஃபியை நீங்கள் பருகி மகிழ இடம் விட்டு இத்துடன் என் உரையை நான் முடித்துக் கொள்கிறேன். இனி பாபா பேசுவார்:

“’என் சமூகத்தினரின் வளர்ச்சியில் படிக்கட்டுக்களாகும் படியான சில தவறுகள் உள்ளன’ என்று நபிகள் நாயகம் சொன்னார்கள். இதன் பொருள், நீங்கள் வெளியே சென்று தவறுகளில் ஈடுபடுங்கள் என்பதல்ல. ஆனால் நீங்கள் தவறுகள் செய்யும் போது அங்கே உடனே விழிப்புணர்வுக்கு வாருங்கள் என்பதுதான். ஒரு மனிதனால் அழ முடியவில்லை எனில் நிச்சயமாக அவனால் சிரிப்பதின் இன்பத்தையும் அனுபவிக்க முடியாது. நம் வாழ்வின் நிகழ்வுகள் நமக்குப் பயிற்சி தருகின்றன, நம்மைச் சமைக்கின்றன.

காஃபி என்னும் கனி கண்ணீரைக் குறிக்கின்றது. கண்ணீர் – அஷ்க். ஏனெனில் அது நம் இதயத்தின் குறியீடாக இருக்கின்றது. தஸவ்வுஃபில் (சூஃபித்துவத்தில்) ‘த்ஸைரி சுலூக்’ என்று ஒரு நிலை இருக்கிறது. ’தேடலின் பயணம்’ என்று பொருள். காஃபியின் பயணமும் இதுதான். ஆரம்பம் முதல் முடிவு வரை காஃபியின் த்ஸைரி சுலூக் முற்றிலும் அஷ்க் ஆகும்.

காஃபி, ஒரு மரத்தில் வளரும்போது, அது ஓடு போர்த்திய கனி. அதன் பின் அது பல நிலைகளைக் கடக்கின்றது. முதலில் அது பறிக்கப்படுகின்றது. அதன் ஓடு உடைக்கப் படுகின்றது. விதை வறுக்கப் படுகின்றது. உருட்டி உருட்டி அது எல்லாப் பக்கங்களிலும் வறுபடும்போது வேதனை தாளாது கதறிக் கொண்டுள்ளது. அப்போது அதன் கெட்ட வாசனைகள் அதனை விட்டு நீங்கிப் போகின்றன.

அதன் பின் அதை என்ன செய்கிறார்கள்? அதை எடுத்து அரவையில் போட்டு அரைக்கிறார்கள். முர்ஷித் – குருநாதரின் கையில் ஒரு முரீத் – சீடன் அரைக்கப் படுவது போல்... அது மாவாக மாறுகிறது. அதன் நிறம் மாறிவிட்டது. அதன் பெயர் மாறிவிட்டது. இப்போது அதை காஃபி என்று அழைக்கிறோம்.

அந்த அப்பாவி காஃபியிடம் அதுவரை அது அனுபவித்து வந்த வலிகள் எத்தனை எத்தனை என்று கேட்டால், அந்த நிலையும் கூட முடிவல்ல. இன்னும் அது செல்ல வேண்டிய பயண தூரம் மீதம் உள்ளது.


அதை நீரில் போடுகிறார்கள். அது நெருப்பின் மீது வைக்கப் படுகிறது. அதை இரண்டாம் நெருப்பு ஒன்று எரிக்கின்றது. அது நீரின் மீது நுரை விட்டபடி கொதிக்கின்றது... ஆனந்த நடனம்! அதன் பின் நண்பன் அதனை அருந்துகிறான்!

அஷ்க் அப்படித்தான். அது முதலில் இதயத்தில் ஆரம்பிக்கிறது. காஃபியைப் போன்றே. அதனைச் சுற்றிலும் ஓடு மூடியிருக்கிறது. வேறு வார்த்தையில் சொல்வதெனில் ‘கஃப்லத்’ – மறதி. இறைவனை மறந்த நிலை. அந்த ஓட்டினை முதலில் நீங்கள் உடைக்க வேண்டும். அதன் பின் அது சூரியனின் கீழே வைக்கப்பட வேண்டும். அது முர்ஷிதின் பார்வை ஆகும். முர்ஷித் உங்களைப் பார்க்கும் போது, அந்தப் பார்வை...

ஆனால் அப்போதும் அது கடினமாகத்தான் இருக்கிறது. அதைக் கடிக்க முயன்றால் பல்லை உடைத்துக் கொள்வீர்கள். அதை நீங்கள் நெருப்பில் போடுகிறீர்கள்.

அங்கே அவன் மக்களின் அன்பில் ஈடுபடுகிறான். மக்களின் அன்பிற்குள் நீ நுழையும் போது உன் தன்முனைப்புடன் நுழைகிறாய். அங்கே நீ கொய்யாச் செடியை நட்டு வைக்கிறாய். ஆனால் முடிவில் நீ திராட்சையைப் புசிக்கப் போகிறாய்.

அதன் பின் நீ அரவைக்குள் போடப்படுகின்றாய். முர்ஷித் உனக்குத் தருகின்ற பாடங்கள், வாழும் முறைமைகள் அதன் நிகழ்வுகள் எல்லாம் உன்னை அரைத்து விடுகின்றன. அங்கே நீ பணிவையும் பொறுமையையும் கற்றுக் கொள்கிறாய். ஹலீம் சலீம் – மென்மையாக அமைதியாக இருக்கவும், மௌனமாக இருக்கவும் கற்றுக் கொள்கிறாய். அவசரமாக இல்லாமல் இருக்கவும், ஒவ்வொன்றையும் அதனதன் நேரத்தில் செய்யவும் கற்றுக் கொள்கிறாய். இவை எல்லாம் நம் வாழ்வின் நிகழ்வுகளில் வைத்து அரைக்கப்பட வேண்டும். இது சொல்வதற்கு மிக எளிது. ஆனால், வாழ்வதற்கு மிகவும் கஷ்டமானது. இரண்டு பாறையுருளைகளுக்கு  இடையில் அரைபடும் காஃபி விதையைப் போல் உங்கள் இதயம் அரைக்கப்படும். பிறகு அந்தக் கடினமான காஃபி மென்மை ஆகிவிடுகிறது.

அதன் பின் அது நீரில் இடப்படுகிறது. எனினும் நீ இன்னும் கமாலிய்யத் என்னும் பூரண நிலையை அடையவில்லை. உனக்குக் கீழே அஷ்க்கின் தீ எரிய வேண்டும். உண்மையான அஷ்க் அப்போதுதான் ஆரம்பம் ஆகிறது. ஆனால், அதன் பின் ஓர் அற்புதமான கருணை பொங்கி அகில உலகையும் அனைத்து மக்களையும் அரவணைத்துக் கொள்கின்றது.
அத்தகைய ஒரு மனிதனை நீங்கள் அடித்தால் தன் வாயில் உள்ள உணவையும்கூட கையில் எடுத்து உங்களுக்குத் தருவான். அஷ்க் உங்களை அந்த உன்னத நிலைக்குக் கொண்டு வருகிறது. நபியின் நிலை எப்படி இருந்தது? ‘ரஹ்மத்தல்லில் ஆலமீன்’ - அகில உலகிற்குமான அருட்கொடையாக அவர்கள் இருந்தார்கள். அதுதான் அஷ்க்கின் உன்னத நிலை. இந்த அஷ்க்கில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தன் சிறகுகளின் கீழ் மக்களை எடுத்துச் செல்வான். இதுதான் காஃபி. அதனால்தான் நீங்கள் காஃபியை மிகவும் விரும்புகிறீர்கள். உணவுக்குப் பிறகு எப்போதும் நாம் காஃபி அருந்துகிறோம், சிறிய கோப்பைகளில்.”
2 comments:

 1. அற்புதம் - காயாக,கனியாக, கொட்டையாக, காப்பியாக, ஆய்வாக இறுதியில் மனித நிலையாக.. பரிணமித்த உங்களின் கஃபி ஆராய்ச்சி அற்புதம்.வசீகரமிக்க எழுத்துப்பாணி .நன்றி பகிர்விற்கு..

  ReplyDelete
 2. காஃபி பற்றி அடியேன் எழுதியதை இங்கே படிக்க வேண்டுகிறேன்.தலைப்பு:
  "காஃபி என்ற பிசாசு நம்மைப் பிடித்துக் கொண்ட கதை"

  தங்களுடைய காஃபி, சூஃபி ஆக்கம் நல்ல முழுமையுடனும், பன்முகத்தன்மையுடனும், நகைச்சுவையுடனும் விளங்குகின்றது.பாராட்டுக்கள்.  http://classroom2007.blogspot.in/search?updated-min=2010-12-31T10:30:00-08:00&updated-max=2011-12-14T04:22:00%2B05:30&max-results=50&start=10&by-date=false

  ReplyDelete