”நபியே!
மகத்தான
இரவு
நீங்கள்
இதர இரவுகள்
நாங்கள்”
சிறிது
நேரச் சிந்தனைக்குப் பின் இந்த வரிகளுக்கு வந்து சேர்ந்தேன்.
நீரூற்றி
வளர்த்ததில் பூத்த நறுமண மலர் இந்தக் கவிதை. ஆனால் விதைக்குச் சொந்தக்காரன் நான் அல்ல.
அது என் இதய நிலத்தில் இறைவனின் கருணை தூவிய ஒன்று.
மகத்தான
இரவு (லைலத்துல் கத்ர்) பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்த இரவே நபிகள் நாயகத்திற்கு
ஓர் அழகிய உவமையாய் அமைந்திருப்பதைக் கண்டேன்.
நபிகள்
நாயகம் நம்மைப் போன்ற சாதாரண மனிதர் அல்ல. இது என் கொள்கை. இந்தக் கொள்கையை மகத்தான
இரவு உவமையாய் நின்று உணர்த்துவது என் உள்ளத்தில் தித்தித்தது.
”நபிகள்
நாயகம் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்தான்” என்று கொள்கை கொண்டோர் உண்டு. ஆதாரம் என்று
அவர்கள் எடுத்துக் காட்டும் திருமறை வசனம் என் மனக் கண்ணில் பளிச்சிட்டது.
”கூறுக:
நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்
என்னிடம்
இறையுதிப்பு உண்டாகிறது”
(41:6)
இவ்வசனத்தின்
மூலத்தில் ‘பஷர்’ என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது. அதனைக் கவனித்து ”கூறுக: வெளித்தோற்றத்தில்
நான் உங்களைப் போன்ற மனிதன்தான்” என்று பொருள் கொள்ளவேண்டும்.
இவ்வசன
நடை அமைப்பைக் கவனித்தும் அப்படிப் பொருள் கொள்ளலாம். அதாவது இதில் நபியின் புறமும்
அகமும் சுட்டப்பட்டுள்ளன. ’நான் உங்களைப் போன்ற மனிதன்தான்’ என்பது நபியின் புறத்தோற்றத்தைக்
குறிக்கும். ‘என்னிடம் இறையுதிப்பு உண்டாகிறது’ (யூஹா இலய்ய) என்பது நபியின் அகத்தைக்
குறிக்கும். ஏனெனில் இறையுதிப்பு (வஹீ) உண்டாவது இதயத்தில்தான்; அன்றி உடலில் அல்ல.
மகத்தான
இரவை வருணிக்கும் ’கத்ர்’ அத்தியாயத்தின் திருவசனங்களைக் கவனிப்போம்.
“நிச்சயமாக
நாம் அதனை
மகத்தான
இரவில் இறக்கினோம்”
(97:1)
அதனை
என்பது திருக்குர்ஆனைக் குறிக்கிறது. மற்ற இரவுகளில் அது இறக்கப்படவில்லை. அதுபோல்,
திருக்குர்ஆன் நபியின் இதயத்தில் இறக்கப்பட்டது. வேறு எவரின் இதயத்திலும் அல்ல.
மகத்தான
இரவில் திருக்குர்ஆன் முழுமையும் முதல் வானத்தில் இறக்கப்பட்டுப் பின்பு சன்னஞ் சன்னமாக
இருபத்து மூன்றாண்டுகள் நபிக்கு அறிவிக்கப்பட்டது என்று ஒரு விளக்கம் உண்டு. இறைவெளிப்பாடுகள்
முதலில் நபியின் எதார்த்தத்திற்குத் தரப்படுகின்றன. அவர்களின் வழியாகவே அவற்றை முந்தைய
இறைத்தூதர்களும் அடைந்து வந்தார்கள்.
“மேலும்,
மகத்தான இரவு என்ன என்பதை
உமக்கு
அறிவித்தது எது?”
(97:2)
அதாவது,
‘மகத்தான இரவு என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?”
இதற்கு
என்ன பதில் சொல்வீர்கள்? ‘அது ஓர் இரவு’ என்று சொல்வது பதிலாகுமா? அது ஓர் இரவுதான்.
ஆனால் அதனை இரவாக அறிந்திருப்பதால் மட்டுமே அதனை நீங்கள் அறிந்துவிட்டீர்கள் என்பதற்குப்
போதுமானதல்ல. மாறாக, நீங்கள் அதனை அறியவில்லை என்பதற்கே அது ஆதாரமாகும்.
“முஹம்மத்
(ஸல்) யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” இதற்கு என்ன பதில்? ‘அவர் ஒரு மனிதர்’ என்பது
இதற்கு விடையாகுமா? அவர் ஒரு மனிதர்தான். ஆனால் அவர்களை மனிதர் என்று அறிந்திருப்பதால்
மட்டுமே அவர்களை நீங்கள் அறிந்துவிட்டீர்கள் என்பதற்குப் போதுமானதல்ல. மாறாக, நீங்கள்
அவர்களை அறியவில்லை என்பதற்கே அது ஆதாரமாகும்.
”மகத்தான
இரவு
ஆயிரம்
மாதங்களினும் சிறந்ததாகும்”
(97:3)
தோற்றத்தில்
(ஷகல்) அதுவும் ஓர் இரவுதான். மற்ற இரவுகள் கறுப்பாக இருப்பதைப் போல் இதுவும் கறுப்பாகத்தான்
இருக்கும். மற்ற இரவுகளில் நிலவும் விண்மீன்களும் வருகின்றன. இதிலும் அப்படித்தான்.
மாற்றமாக சூரியனோ வானவில்லோ தோன்றுவதில்லை. ஆனால் இறைவனின் பார்வையில் அந்த இரவிற்கு
உள்ள அந்தஸ்த்தில் அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.
தோற்றத்தில்
நபியும் ஒரு மனிதர்தான். மற்ற மனிதர்களின் தோற்றம் போல், இரு கைகள், இரு கால்கள், முகம்
– அதில் கண்கள் மூக்கு வாய் காது என்பன போன்றுதான் நபியும் இருப்பார்கள். மாற்றமாக,
அவர்களுக்குச் சிறகுகள் இருக்கவில்லை. ஆனால் இறைவனின் பார்வையில் அந்த நபிக்கு உள்ள
அந்தஸ்த்தில் அவர்கள் இறைவனின் பிற படைப்புக்கள் அனைத்தைக் காட்டிலும் சிறந்தவர்கள்
– ஃகைரி ஃகல்க்கிஹி.
இவ்வசனத்தில்
அல்லாஹ் மகத்தான இரவை பிற இரவுகளுடன் ஒப்பிடவில்லை. மாறாக மாதங்களுடன் ஒப்பிட்டுள்ளான்.
அதாவது, முப்பது இரவுகள் சேர்ந்து உண்டாகும் மாதத்துடன் ஒப்பிட்டுள்ளான். ஆயிரம் மாதங்களை
விடவும் சிறந்தது என்றால் அது முப்பதாயிரம் இரவுகளினும் சிறந்தது என்று பொருளாகிறது.
‘ரமலான்
என்னும் மாதத்தினுள் ஒரு நாளின் இரவாக வருவதாலேயே இந்த இரவை நீங்கள் லேசாக நினைக்காதீர்கள்.
இதுவோ ஆயிரம் மாதங்களைக் காட்டிலும் சிறந்தது’ என்று இறைவன் நம்மை நோக்கிச் சொல்வது
போல் இருக்கிறது.
அரபியர்கள்
என்னும் இனத்தில் ஒரு மனிதராக இருப்பதாலேயே நபியை நீங்கள் இவரும் நம்மில் ஒரு மனிதர்தானே
என்று லேசாக எண்ணிவிடாதீர்கள். அவர்கள் அனைத்து மனித இனங்களைக் காட்டிலும் சிறந்தவர்கள்.
இன்னொரு மனிதனை அவர்களுடன் ஒப்பிடுவது எங்கே? மனித குலத்தையே அவர்களுடன் ஒப்பிட முடியாது!
”அதில்
வானவர்களும் ஆன்மாவும்
தம் ரட்சகனின்
கட்டளையின்படி
சகல காரியங்களுடன்
இறங்குகின்றனர்”
(97:4)
இவ்வசனத்தில்
மகத்தான இரவில் நடைபெறும் செயல்பாடுகள் (ஃபி’ல்) சுட்டிக் காட்டப் படுகின்றன. மகத்தான
இரவில் வானவர்கள் இறங்கும் அளவிற்கு வேறு இரவுகளில் அவர்கள் இறங்குவதில்லை. சகல காரியங்களுடனும்
– மின் குல்லி அம்ர் அவர்கள் வருகின்றார்கள். இதர இரவுகளில் சில வானவர்கள் சில காரியங்களுக்காக
இறங்கலாம். ஆனால் இந்த இரவின் அளவு இல்லை. எனவே இது மகத்தான இரவாக இருக்கிறது.
அதுபோல்,
நபி(ஸல்) அவர்களின் செயல்களைக் கவனியுங்கள். அவர்களின் செயல் (ஃபி’ல்) ஒவ்வொன்றுமே
அற்புதம் (முஃஜிஸா) என்பது நபிக் காதலர்களுக்குத் தெரியும். அவர்களில் நிகழும் செயல்கள்
இறைவனின் உத்தரவுப் படியாகவே இருந்தன.
”அவர்களை
வெட்டியது நீங்கள் அல்ல
ஆனால்
அல்லாஹ்வே அவர்களை வெட்டினான்;
நீங்கள்
எறிந்தபோது நீங்கள் எறியவில்லை
ஆனால்
அல்லாஹ்வே எறிந்தான்”
(ஃபலம்
தக்துலூஹும் வலாகின்னல்லாஹ கதலஹும்
மா ரமைத்த
இத் ரமைத்த வலாகின்னல்லாஹ ரமா)
(8:17)
என்பது
அவர்களின் செயலுக்கான வருணனை.
எல்லா
இறைத் தூதர்களுக்கும் அற்புதங்கள் வழங்கப் பட்டிருந்தன. ஆனால் அவை அனைத்தும் நபி(ஸல்)
அவர்களில் ஒன்று திரண்டிருந்தன. எனவே அவர்கள் நபிமார்களின் முத்திரையாகவும், நபிமார்களின்
தலைவராகவும் இருக்கிறார்கள்.
”யூசுஃபின்
பேரழகு ஏசுவின் மூச்சு மூசாவின் வெண்கரம்
அவை
அனைத்து அற்புதங்களும்
ஒருமித்துள்ளன உங்களில் தனியே”
(ஹுஸ்னே
யூசுஃப் தமே ஈசா யதே பைளாதாரி
ஆன்ச்செ
ஹமா ஃகூபான் தரந்த் தூ தன்ஹாதாரி)
என்று
வியக்கிறது ஒரு ஃபாரசி கவிதை.
“பேரமைதி
அது
விடியல் உதிக்கும்வரை
நிலவியிருக்கும்”
(97:5)
இந்தத்
திருவசனத்தில் மகத்தான இரவின் பண்பு (சிஃபாத்) பேசப்படுகிறது. அந்த மகத்தான இரவு பேரமைதி
(சலாம்) நிரம்பியதாகும். ஆனால் அதே இரவில் ஒரு மனிதன் விடியும் வரை மனநிம்மதி இல்லாமல்
தவிக்கிறான் என்றால் அது அவனுடைய மனநிலையின் குறையே தவிர அந்த இரவில் பேரமைதி இல்லை
என்பதற்கு அது ஆதாரம் அல்ல. அப்படி வாதிடுபவன் அகக்குருடனாகத்தான் இருப்பான். காதலியோ
அழகின் திரட்சியாக இருக்கிறாள்; ஆனால் குருட்டுப் பயலால் அந்த அழகை எப்படிக் காண முடியும்?
அவளிடம் அழகே இல்லை என்று அவன் வாதிடுவதால் யாருக்கு நட்டம்?
நபியின்
பண்பு (சிஃபத்) எப்படிப்பட்டது என்பதைக் கொஞ்சம் கவனியுங்கள். ஓர் உதாரணம்:
”அவர்
தம் இச்சையின்படிப் பேசுவதில்ல
அது அவருக்கு
உதிப்பாக்கப்பட்ட
இறைச்
செய்தியே அன்றி வேறில்லை”
(மா யன்திகு
அனில் ஹவா
இன்ஹுவ
இல்லா வஹ்யுன் யூஹா)
(53:3,4)
என்பது
அவர்களின் பேச்சிற்கான வருணிப்பு.
ஒட்டு
மொத்தமாகச் சொல்வதென்றால்,
“மேலும்,
(நபியே!) நீங்கள்
மகத்தான
பண்புடையவராக இருக்கின்றீர்”
(வ
இன்னக லஅலா ஃகுலுகின் அழீம்)
(68:4)
அது
எத்தகைய பண்பு? என்ன பண்பு? இதற்கு விடை நபிமொழியிலேயே இருக்கிறது:
“இறைப்பண்புகள்
கொண்டு உன்னை நீ உருவாக்கிக் கொள்” (தஃகல்லகூ பி அஃக்லாக்கில்லாஹ்)
நபி இறைவன் வெளிப்படும் மகத்தான
தளமாக (மழ்ஹரே அதம்மு) இருக்கிறார்கள். அதனை அகக்குருடனால் காண முடியவில்லை. அவனோ நபியும்
பிற மனிதர்களைப் போன்றவர்தான் என்று பிதற்றிக் கொண்டிருப்பான். ‘இதுவும் பிற இரவுகளைப்
போல் ஒரு சாதாரண இரவுதான்’ என்று அகக்குருடன் தன் மனதில் நிம்மதி இன்றி மகத்தான இரவில்
புலம்பிக் கொண்டிருப்பதைப் போல்!
அல்ஹம்துலில்லாஹ். அருமையான விளக்கம்.அல்லாஹ் உங்களுக்கு பேரருள் செய்வானாக!
ReplyDeleteMasa Allah..! Padikkum pothe kan kalangugirathu.. Uyirinum melaanavargalai patriya miga arumaiyaana vaasippu kidaithathu... Mikka nandri...
ReplyDeleteSpeechless...! Masha Allah..!!
ReplyDeleteயூசுஃபின் பேரழகு ஏசுவின் மூச்சு மூசாவின் வெண்கரம்
ReplyDeleteஅவை அனைத்து அற்புதங்களும்
ஒருமித்துள்ளன உங்களில் தனியே”----மாஷாஅல்லாஹ்