பசித்திரு, விழித்திரு, தனித்திரு
ஆன்மிக
நெறி செல்லும் சீடர்களுக்கு தலையான ஓர் உபதேசம் இது.
ரமலான்
மாதத்தில் இந்த முப்பயிற்சிகளும் இடம்பெறுகின்றன என்பதைச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
உடலுக்கான
உணவும் உறவும் தவிர்த்தலில் ’பசித்திரு’ என்னும் பயிற்சி உள்ளது. இரவில் சிறப்புத்
தொழுகையில் ’விழித்திரு’ என்னும் பயிற்சி உள்ளது. வழிபாடுகள் பெருகச் செய்வதில் (மக்களை
விட்டுத்) ’தனித்திரு’ என்னும் பயிற்சி உள்ளது.
நோன்பு
என்னும் நதியின் கரையில் நின்றாலே கால் நனைக்கும் கருத்துக்கள் இவை. நான் அந்த நதியில்
இடையளவும் நெஞ்சளவும் தலையளவும் இறங்கிப் பார்க்க ஆசை வைத்தேன்.
’பசித்திரு’
என்னும் பதத்தின் பதம் பார்த்துக் கொண்டிருந்தேன். பழைய ஞாபகங்களைக் கொஞ்சம் கிளறினேன்.
“நோன்பின்
நோக்கம் என்ன?” என்னும் வினாவைப் பலரிடமும் தொடுத்திருக்கிறேன். ‘ஏழைகளின் பசியை நாமும்
உணரவேண்டும் என்பதே நோன்பிருப்பதன் நோக்கம்’ என்னும் பதிலைப் பலரும் சொன்னதுண்டு. அவர்களிடம்
நான் கேட்கும் அடுத்த கேள்வி, “அப்படியெனில் வருடம் முழுவதும் பசியின் கடுமையை உண்ர்ந்து
கொண்டிருக்கும் ஏழை முஸ்லிமாக இருந்தாலும் அவர் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருப்பது
ஏன்?”
இது போதும்,
நோன்பின் நோக்கமாக அவர் கருதிக் கொண்டிருக்கும் சிவப்புச் சிந்தனையின் சாயம் வெளுத்துவிடும்.
என் வினா எஞ்சி நிற்கும்: “நோன்பின் நோக்கம் என்ன?”
இம்முறை
இன்னும் அடிப்படையான ஒரு வினா: “நோன்பு என்பது என்ன?” உணவு உண்ணாமல் இருப்பது என்னும்
வழக்கமான விடை திருப்தியாக இல்லை.
“நோன்பு
நோற்கும் பலருக்கு அவர்களின் நோன்பில் இருந்து பசி தாகம் தவிர வேறெதுவும் கிடைப்பதில்லை.
இரவில் விழித்து வணங்கும் பலருக்கு விழித்திருப்பதைத் தவிர வேறு எதுவும் கிடைப்பதில்லை”
(தாரிமி) என்னும் நபிமொழியில் என் சிந்தனை ஊன்றி நின்றது.
பசித்திருப்பதும்
தாகித்திருப்பதும் கண் விழித்திருப்பதும் நோன்பின் நோக்கம் அல்ல என்பதை இந்த நபிமொழி
தெளிவு படுத்துகிறது. அவை நோன்பின் நோக்கமாக இருக்குமே ஆனால் மேற்சொன்ன நபர்களுக்கு
இறைவன் அவை கிடைக்குமாறு விட்டிருக்க மாட்டான்.
இன்னொரு
நபிமொழி: “யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் தவிர்க்கவில்லையோ அவர்
தமது உணவையும் பானத்தையும் தவிர்ப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை” (புகாரி,
முஸ்லிம்)
பசித்திருப்பதும்
தாகித்திருப்பதும் நோன்பின் அடையாளங்களில் உள்ளவையே தவிர அவையே நோன்பு அல்ல என்பதை
இந்த நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.
நோன்பு
உடலிலும் உள்ளத்திலும் நிகழவேண்டும். உடலால் மட்டும் நோன்பு வைப்பவர்களுக்கு வெறும்
பசியும் தாகமும் மட்டுமே கிடைக்கிறது. உடலால் மட்டுமே வணங்குபவர்களுக்கு வெறும் கண்
விழித்தல் மட்டுமே கிடைக்கிறது. நோன்பின் நோக்கம் இவை அல்ல.
இன்னொரு
நபிமொழியும் என் சிந்தனையை வெகு நேரம் மீட்டிக் கொண்டிருந்தது:
“’ஆதமுடைய
மகனின் (மனிதனின்) ஒவ்வொரு செயலும் அவனுக்கு உரியதாகும், நோன்பைத் தவிர. நிச்சயமாக
நோன்பு எனக்கே உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.” (புகாரி
#1904)
’ஒவ்வொரு
செயலும் மனிதனுக்கு உரியதாக உள்ளது, நோன்பைத் தவிர’ என்பதன் அர்த்தம் என்ன? எல்லா வழிபாடுகளுமே
இறைவனுக்காகத்தான் செய்யப்படுகின்றன. லில்லாஹி – அல்லாஹ்வுக்காக என்னும் எண்ணத்தின்
அடிப்படையில்தான் செய்யப்படுகின்றன. தொழுகை நோன்பு ஜகாத் (ஏழை வரி), ஹஜ் புனிதப் பயணம்
எல்லாமே அல்லாஹ்வுக்காக என்பதுதான் நிய்யத் (பிரதிக்ஞை). இதில் நோன்பு மட்டும் தனித்து
நிற்கிறது. அது மனிதனுக்கு உரியதாக இல்லை; அல்லாஹ்வுக்கு உரியதாக இருக்கிறது என்று
சொல்லப்படுவது எதன் அடிப்படையில்?
”ஆதமுடைய
மகனின் (மனிதனின்) ஒவ்வொரு செயலும் அவனுக்கு உரியதாகும், நோன்பைத் தவிர.” என்று அல்லாஹ்
கூறுவதை சற்றே சிந்தியுங்கள்.
’யாருக்காக
நிகழ்த்தப் படுகிறது’ என்பதை வைத்து உடைமை என்னும் அடிப்படையில் பார்க்கும்போது தொழுகை
நோன்பு ஜகாத் ஹஜ் குர்பானி போன்ற வழிபாடுகள் அனைத்துமே அல்லாஹ்வுக்காகத்தான் நிகழ்த்தப்
படுகின்றன.
‘நோன்பு
என்றால் என்ன?” என்பதை ஆராய்வதற்கான – தஹ்கீக் செய்வதற்கான வாசல் இங்கே திறக்கிறது.
இதை விளக்க
ஒரு விஷயத்தைப் பார்ப்போம். நோன்பாளி தூங்கும்போது நோன்பு முறிவதில்லை. அதாவது நோன்பு
என்பது அடியான் நிகழ்த்தும் ஒரு செயலாக இருக்குமேயானால் தூங்கினால் அது முறிந்துவிடும்.
அதாவது தூக்கத்தில் அது நிகழ முடியாது.
தொழுகை
அடியான் நிகழ்த்தும் செயல். எனவே தூங்கிக் கொண்டே தொழுவது சாத்தியம் இல்லை.
ஆனால்
நோன்பு அடியானின் செயலினைச் சார்ந்ததாக இல்லை. எனவே அவன் தூங்கினாலும் அது தொடர்கிறது.
அது சோர்வும் தூக்கமும் அறவே இல்லாத இறைவனுக்கு உரியது. அதாவது தூங்கும் அடியானில்
நோன்பு என்பது தூங்காத இறைவனால் பேணப்படுகிறது. அடியான் விழித்திருக்கும்போதும் அவனில்
நோன்பைப் பேணுவது இறைவன்தான்.
இங்கே
இன்னொரு நபிமொழி கவனத்திற்கு உரியது:
”ஒருவர்
மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தமது நோன்பை முழுமைப் படுத்தட்டும்; ஏனெனில் அவரை
அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்” (புகாரி #1933)
நோன்பைத்
தன் பக்கம் சாற்றிக் கூறிய அல்லாஹ் அடியானுக்கு உரியதை (உணவை) அடியானின் பக்கம் சாற்றி
அப்போதும் நோன்பு முறியாமல் பாதுகாக்கிறான். ஏனெனில் நோன்பு அவனுக்குரியது; அடியானுக்கு
உரியதல்ல.
ஆனால்
தெரிந்தே ஒருவன் சிறிதளவு சாப்பிட்டாலும் அல்லது பருகினாலும் நோன்பு முறிந்துவிடும்.
அதாவது அடியானில் அவனின் சுய இச்சையைக் காணும் அல்லாஹ் அவனிலிருந்து நோன்பை விலக்கி
விடுகிறான்.
உணவின்
தேவையே இல்லாத அல்லாஹ் அடியானை உண்ணவும் பருகவும் வைத்து அவனில் நோன்பையும் பாதுகாக்கிறான்!
எத்தனை அற்புதமான நிலை!
ரஜ்ஜாக்
என்றால் இரணம் (ரிஜ்க்) அளிப்பவன் என்பது மட்டும்தான் பொருளா? ரிஜ்கின் பக்கம் தான்
முற்றிலும் தேவையற்ற நிலையில் இருந்தபடி ரிஜ்க் தேவைப்படும் அனைத்துப் படைப்புக்களுக்கும்
தான் மட்டுமே ரிஜ்கை அளிப்பவன் அவன்.
“நிச்சயமாக
அல்லாஹ்
அவனே
உணவளிப்பவன்
சக்தி
உள்ளவன்
வலிமை
மிக்கவன்”
(51:58)
என்னும்
திருவசனத்தைக் கவனியுங்கள்.
உணவளிப்பவன்
(ரிஜ்க்) என்பதுடன் நிறுத்தவில்லை. அவனுடைய சக்தி (குவ்வத்) என்பதையும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது
ஏன்?
ரிஜ்க்
என்பது என்ன என்று விளங்க இது ஒரு குறிப்பு. ’ரிஜ்க்’-ஐ அடைவது என்பது உண்மையில் இறைவனிடமிருந்து
அவனின் சக்தியை நாம் அடைந்து கொள்வதுதான். உணவு உண்ணும்போது அந்த உணவின் போர்வையில்
நாம் அல்லாஹ்வின் குவ்வத் – சக்தியைத்தான் பெற்றுக் கொள்கிறோம்.
சக்தி
தராத உணவினால் என்ன பயன்? அது உடலை எப்படி ரட்சிக்கும்? உதாரணமாக, ஐந்து இட்லி, ஆனால்
ஜீரோ கலோரி என்றால் அதைச் சாப்பிடுவதில் என்ன பயன்? பசித்தவன் அதை உட்கொள்வதில் அர்த்தம்
என்ன?
உணவின்
போர்வையில் தன்னுடைய சக்தியைத் தன் படைப்பிற்கு அல்லாஹ் தரும்போது அவனுக்குப் பெயர்
ரஜ்ஜாக்.
உணவின்
போர்வையில் தன் சக்தியை வழங்குவது அல்லாஹ்வின் நடைமுறையாக இருந்தாலும் அப்படித்தான்
அவன் வழங்க முடியும் என்னும் நிர்ப்பந்தம் அவன் மீது இல்லை. உணவு என்னும் போர்வையை
நீக்கிவிட்டு தன் சக்தியை நேரடியாக வழங்கவும் அவனால் முடியும். இதைத்தான் நபி(ஸல்)
தன் தொடர் நோன்பு பற்றிய விளக்கத்தில் தெளிவுபடுத்தினார்கள்.
“நபி(ஸல்)
அவர்கள் மக்கள் மீது இரக்கப்பட்டுத் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். நபித்தோழர்கள்,
’நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள்,
‘நான் உங்களைப் போன்றவன் அல்லன். என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் வழங்குகிறான்’
என்று கூறினார்கள்” (புகாரி #1964)
இங்கே
‘உண்ணவும் பருகவும் வழங்குகிறான்’ என்பது ஆன்மிக ரீதியாக நேரடியாக ஊட்டப்பட்ட இறைசக்தி
ஆகும். மாறாக, பருப்பொருளான உணவும் பானமும் என்று விளங்கினால் தொடர் நோன்பு என்பதற்கே
அர்த்தமில்லாமல் போய்விடும்.
”நோன்பு
எதற்காக?” என்னும் கேள்விக்கு, “பசியை நாம் நன்றாக உணர்வதற்காக” என்று சிலர் பதில்
சொல்கிறார்கள். இப்படி விடை கூறிய ஒருவரிடம் நான் சொன்னேன், “இல்லை. நோன்பு என்பது
பசியை உணர்வது அல்ல; பசியை உணராமல் இருப்பது.” குழம்பிப் போன அவர் நான் சொல்லியதை விளக்கும்படிக்
கேட்டுக் கொண்டார்.
“உணவு
உட்கொள்ளாத நிலையில் பசியும் தாகமும் ஏற்படுவது மனிதப் பண்புதான். ஆனால் நோன்பு என்பது
ஒரு வழிபாடு (இபாதத்). அடிமை தன் பண்பின் கவனிப்பில் மூழ்கி இருப்பது வழிபாடு ஆகாது.
தன் அடிமைத்தனத்தில் தன் எஜமானின் கருணையைக் கவனிப்பதுதான் வழிபாடாகும். தொழுகையைப்
பற்றிச் சொல்லும் அல்லாஹ்,
‘நிச்சயமாக
நானே அல்லாஹ்
என்னை
அன்றி வேறு தெய்வம் இல்லை
எனக்கே
அடிமைத்தனம் செய்யுங்கள்
என்னை
நினைவு கூர்வதற்காகவே
தொழுகையை
நிலைப்படுத்துங்கள்”
(20:14)
என்று
சொல்கிறான். தொழுகையின் நோக்கம் இறை நியாபகம்தான். அது இல்லாத தொழுகை தொழுகையே அல்ல.
உடல் தனியாக நியாபகம் செய்யாது. அது மனத்திலும் உயிரிலும் நிகழ்வது.
அனைத்து
வழிபாடுகளின் நோக்கமும் இறைவனை நியாபகம் செய்வதற்குத்தான். நோன்பு என்பதும் அடியான்
தன் பண்பின் பக்கம் கவனம் வைப்பதற்கல்ல; இறைவனின் பக்கம் கவனத்தை நிறுத்துவதற்குத்தான்.
அப்போதுதான் அது அவனை வழிபட்டதாகும்.
பசியும்
தாகமும் அடியானின் பண்பு. உணவு தேவை என்னும் நிலை அடியானின் பண்பு. பசி தாகம் அற்ற
நிலை இறைவனின் பண்பு. உணவு தேவை இல்லை என்னும் நிலை இறைவனின் பண்பு.
நோன்பில்
பசி தாகத்தைக் கவனிக்கும்போது நாம் நம் பண்புகளையே கவனிக்கிறோம். அதாவது நாம் நம்மையே
நியாபகம் செய்கிறோம். பசி தாகத்தின் பக்கம் சாயும் நம் கவனத்தை இறை நியாபகத்தில் நிறுத்திப்
பழக்க வேண்டும். இறைவனின் நினைவில் பசி தாகம் மறந்த நிலை நம்மில் உருவாக வேண்டும்.
அப்போதுதான் நோன்பு நோன்பாக இருக்கும்.
இறை நினைவு
நான்கு நிலைகளில் நிகழவியலும்:
இறைவனின்
திருநாமத்தை (இஸ்மு) நியாபகம் செய்வது.
இறைவனின்
செயல்பாட்டை (ஃபி’ல்) நியாபகம் செய்வது.
இறைவனின்
திருப்பண்புகளை (சிஃபாத்) நியாபகம் செய்வது.
இறைவனின்
சுயத்தை (தாத்) நியாபகம் செய்வது.
நோன்பு
என்னும் வழிபாட்டில் நாம் இறைவனின் திருப்பண்பினை நினைவு கூரும் வாசல் திறக்கிறது.
அல்லாஹ் உணவு பானம் உடை இடம் காலம் மற்றும் சகல பொருட்களின் தேவையும் அறவே இல்லாதவன்.
“நிச்சயமாக
அல்லாஹ்
அகில
உலகங்களிடமும்
தேவை
அற்றவன்”
(3:97)
நோன்பில்
இந்த தன் பண்பினை அல்லாஹ் தன் அடியானில் பிரதிபலிக்கிறான். அந்தப் பிரதிபலிப்பைக் கண்டு
லயித்து அவன் நினைவில் மூழ்கியிருப்பதே சூஃபிகளின் நோன்பு.
“இறைநம்பிக்கை
கொண்டோரே!
உங்களுக்கு
முன்னிருந்தோர் மீது கடமையாக்கப் பட்டது போல்
உங்கள்
மீதும் நோன்பு கடமை ஆக்கப் பட்டுள்ளது
நீங்கள்
இறையச்சம் உள்ளோர் ஆகும் பொருட்டு”
(2:183)
நோன்பின்
நோக்கம் தக்வா (இறையச்சம்) என்பதை இந்தத் திருவசனம் குறிப்பிடுகிறது. ’தக்வா’ என்பதற்குப்
பொதுவாக இறையச்சம் என்று அர்த்தம் சொல்லப்படுகிறது. ‘தவிர்த்துக் கொள்வது’ என்பது நேர்ப்பொருள்.
இறையச்சம் உள்ளவன் என்று யாரைச் சொல்வோம்? இறைவனுக்குப் பிடிக்காதவற்றைத் தவிர்த்துக்
கொள்பவனை அல்லவா? தக்வா என்பதை இறையச்சம் என்று விளங்குவது இந்தத் தொடர்பினால்தான்.
மற்றபடி தக்வா என்பது வேறு அச்சம் என்பது வேறு.
அரபியில்
மூன்று சொற்களை இங்கே நாம் கவனிக்க வேண்டும்: கவ்ஃப், கஷிய்யத் மற்றும் தக்வா. மூன்றுக்குமே
நாம் அச்சம் என்று அர்த்தம் தந்துவிடுகிறோம்.
கவ்ஃப்
என்றால் அச்சம் என்றே பொருள்.
“அறியுங்கள்,
நிச்சயமாக
அல்லாஹ்வின்
அன்பர்கள்
அவர்கள்
மீது
அச்சம்
என்பது இல்லை
அவர்கள்
கவலைப்படுவதும் இல்லை”
(10:62)
என்பதில்
கவ்ஃப் என்னும் சொல் வந்துள்ளது.
இனி கஷிய்யத்
மற்றும் தக்வா என்னும் இரண்டு சொற்கள் உள்ளன. இரண்டிற்குமே இறையச்சம் என்று பொதுவாக
அர்த்தம் விளங்கப் படுகிறது. இவ்விடத்தில் திருக்குர்ஆன் வசனமொன்று நம் சிந்தனைக்கு
முன் நிற்கிறது:
“இன்னும்
எவர்கள் அல்லாஹ்வுக்கும்
அவனது
தூதருக்கும் கீழ்ப்படிந்து
அல்லாஹ்வுக்கு
கஷிய்யத் செய்து
மேலும்
அல்லாஹ்வுக்கு தக்வா செய்கிறார்களோ
திண்ணமாக
அவர்களே வெற்றி பெற்றவர்கள்”
(24:52)
கஷிய்யத்
என்பது வேறு தக்வா என்பது வேறு என்று இந்தத் திருவசனம் தெளிவாகப் பிரித்துக் காட்டியிருக்கிறது.
இரண்டிற்குமே இறையச்சம் என்று அர்த்தம் வைப்பது இந்தத் திருவசனத்தை அபத்தமாக விளங்க
வைத்துவிடும். இந்தத் திருவசனத்தின் பேரில் அல்லாமா கரீமி ஷாஹ் ஆமிரி அவர்கள் பேசியதன்
ஒரு பகுதியைக் கவனியுங்கள்:
”கஷிய்யத்
என்ன? தக்வா என்ன? இரண்டிற்குமே அச்சம் என்று பொருள் சொன்னால் எப்படி? ‘அல்லாஹ்வை அஞ்சுவார்கள்
மேலும் அல்லாஹ்வை அஞ்சுவார்கள்’ என்றால் சரியான விளக்கமா அது?
நூர்
(ஒளி) அத்தியாயத்தின் திருவசனம் இது. நூரீயிடம் கேளுங்கள், அவர் உங்களுக்குச் சொல்வார்
இது என்ன என்று. நூரீயால் (நூரி ஷாஹ் (ரஹ்)) நூரி (ஒளிமயம்) ஆக்கப்பட்ட யாரேனும் ஒருவரிடம்
கேளுங்கள். அல்லாஹ்வின் கலாம் (பேச்சு) இது. கலீமியிடம் கேளுங்கள். அவர் உங்களுக்குச்
சொல்வார் இது என்ன என்று.” ஆக, இறைஞானம் கொண்ட சூஃபிகளிடம் கேட்டுத் தெரியுங்கள் என்று
சொல்கிறார்கள்.
இதனை
விளக்க பின்வரும் திருவசனங்களைக் கவனிப்போம்:
“இறைநம்பிக்கையாளர்கள்
நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்
அவர்கள்
எத்தகையோர் எனில்
தம் தொழுகையில்
உள்ளச்சத்தோடு இருப்பார்கள்
மேலும்,
வீணானவற்றை விட்டும் விலகி இருப்பார்கள்”
(23:1-3)
மேற்சொன்ன
திருவசனங்களில் உள்ளச்சம் என்பதற்கு மூலத்தில் கஷிய்யத் என்றுள்ளது. (24:52) திருவசனத்தில்
கஷிய்யத்தைத் தொடர்ந்து தக்வா சொல்லப்பட்டது. இந்தத் திருவசனங்களின் (23:2,3) அமைப்பில்
முறையே அவை விளக்கப்படுவதாகக் கொண்டால் தக்வா என்பது தவிர்த்தல் – விலகுதல் என்னும்
அர்த்தம் பெறுகிறது.
பொதுமையாக
இப்படிச் சொல்லலாம்:
கவ்ஃப்
– அச்சம்
கஷிய்யத்
– உள்ளச்சம்
தக்வா
– தவிர்ப்பு.
’வீணானவற்றை
விட்டும் விலகி இருப்பார்கள்’ என்பதன் பொருள் என்ன? பொதுவாகவே, ஆகாதவை என்று இறைவனும்
இறைத்தூதரும் அறிவித்த அனைத்தையும் விட்டு அடியான் விலகி இருக்க வேண்டியது அவசியம்.
ஆகுமானவற்றிலும் அவன் அளவைப் பேணுவது அவசியம். இது பொதுவான தக்வா – தவிர்த்தல் ஆகும்.
சூஃபிகள்
தக்வா என்பதற்கு இன்னும் ஆழமான நிலைகளில் பொருள் கொள்கிறார்கள். படைப்புக்களின் பண்புகளைப்
படைப்புக்களின் பக்கமும் இறைவனின் பண்புகளை இறைவனின் பக்கமும் சேர்க்க வேண்டும் என்பதே
அவர்களின் தக்வா ஆகும்.
படைப்புக்களில்
இறைவனின் பண்புகள் பிரதிபலித்துக் கொண்டிருப்பதால் இது மிகவும் அவசியமாகிறது. இந்தத்
தக்வா விளக்கம் இல்லாதவன் இணைவைப்பு (ஷிர்க்) என்னும் பாவத்தில் விழுவான். படைப்புக்களின்
பண்பினை இறைவனின் பக்கம் சேர்த்துவிடுவான் அல்லது இறைப்பண்புகளைப் படைப்புக்களின் பக்கம்
சேர்த்துவிடுவான் அல்லது இரண்டையுமே செய்வான். இந்த நிலையில் இருந்து தப்பிக்க தக்வா
அவசியம்.
இறையச்சம்
(கஷிய்யத்) என்பதை இறைஞானம் இல்லாமலே செய்ய முடியும். ஆனால் தக்வா செய்ய இறைஞானம் அவசியம்.
படைப்புக்களில்
இறைவனின் பிரதிபலிப்பு இருக்கிறது. அதனைப் படைப்பிற்கு உரியதாக விளங்கிவிடாமல் இறைவனுக்குரியதாகக்
காணும் தக்வா வாய்ப்பதற்கே நோன்பு கடமை ஆக்கப்பட்டுள்ளது.
நோன்பு
அடியானில் நிகழ்வதாக இருப்பினும் அது இறைவனுக்கு உரியதாகவே இருக்கிறது என்பதன் தாத்பரியத்தை
அந்தத் தக்வா உள்ளவர்களே புரிந்துகொள்ள முடியும்.
No comments:
Post a Comment