Saturday, August 18, 2012

கண் திறந்த கதை (தொடர்ச்சி )


”செவி வழிச் செய்தியாக அவளைப் பற்றி அவன் அறிந்து வைத்திருந்ததை அடிப்படையாக வைத்துக் கொண்டு அவளை வருணித்துக் கவிதைகள் எழுதினான்.”

இறைவனைப் பற்றிய படிப்பறிவு இருக்கிறது. ஆனால் பட்டறிவு இல்லை. நூல்களின் வழியாக இறைவனைப் பற்றிய செய்திகளை அறிந்திருக்கிறான். ஆனால் அனுபவத்தில் அவன் இறைவனை அறியவில்லை. என்றாலும் இந்த அறிவிற்கும் இறைவனிடம் ஒரு மதிப்பு இருக்கத்தான் செய்கிறது.

இவன் ஆலிமே ழாஹிர் – வெளிப்படையான அறிஞனாக இருக்கிறான். ஆனால் ஆலிமே பாத்தின் – அந்தரங்க அறிஞனாக இல்லை. அதாவது ஆரிஃப் – ஞானியாக இல்லை.
கலிமா தான் – மந்திரம் அறி என்னும் நிலையில் இவன் இருக்கிறான்.

”அவற்றை அவளிடம் வாசித்துக் காட்டினான். ஆனால் அது அவர்கள் இருவருக்குமே திருப்தியாக இல்லை. ஏனெனில் அவை அனுபவத்தில் பிறந்தவையாக இல்லை.”

ஏட்டுக்கல்வி மட்டுமே வைத்திருக்கும் வெளிரங்க அறிஞனின் பேச்சு கிளியின் பேச்சுதான். அது ’தக்ரார்’ - கூறியது கூறல் எனப்படும். அது ‘பயான்’ – உள்ளுதிப்பில் பேசுதல் அல்ல.

பிறர் சொல்வதை வைத்து அவன் வருணித்தவைகள் உண்மைதான் என்றாலும் அவற்றில் அனுபவத்தின் நறுமணம் கொஞ்சமும் இல்லை. அந்தக் கோணத்தில் பார்க்கும்போது, அவன் கூறும் வாசகங்கள் உண்மையாக இருந்தாலும் அவனின் செயல் பொய் சொல்வதாக உள்ளது! அதாவது அவளின் அழகைப் பற்றி அவன் சொல்லும் சாட்சி அவன் அவளைக் காணாமல் கூறுவதால் பொய் சாட்சியாக இருக்க்றது.

இவ்வாறு பிறரிடம் கேட்டும் வெறும் ஏட்டறிவைக் கொண்டும் அவன் தன்னை வருணிப்பது அவளுக்குத் திருப்தியாக இல்லை. கருத்து உண்மையாக இருப்பினும் தன்னை அறியாமல் அவன் தன்னைப் புகழ்வது அவளுக்கு இன்பமாக இல்லை. தன்னை அறிந்து பின் அவன் தன்னைப் புகழ வேண்டும் என்று விரும்புகிறாள்.

”இறைநம்பிக்கை கொண்டோரே!
அல்லாஹ்வின் மீதும்
அவனது திருத்தூதர் மீதும்
நம்பிக்கை கொள்ளுங்கள்”
(4:136)
என்று இறைவன் கோருவது அதைத்தான். தக்லீதி ஈமான் – பின்பற்றுதலாக அறியாமலே பெற்ற நம்பிக்கை, தெஹ்கீகி ஈமான் – மெய்த்தேடலில் உண்டான நம்பிக்கையாக மாறவேண்டும்.

”அல்லாஹ்வை அன்றி வேறு தெய்வம் இல்லை
என்பதை அறிந்து கொள்க”
(47:19)
என்று சுட்டிக் காட்டப் படுவதும் அந்த அறிவின் பக்கம்தான்.

கலிமா கூ – மந்திரம் சொல் என்னும் இந்த நிலையில் அவனிடம் ‘இல்முல் யகீன்’ (அறிதலால் உண்டான தெளிவு) இருக்கிறது. ஆனால் ’ஐனுல் யகீன்’ (காண்பதால் உண்டாகும் தெளிவு) இல்லை.

இறைவனை அகக்கண்களால் கண்டு அறிய வேண்டும் எனில் அகப்பார்வை உண்டாக வேண்டும். அதற்கு என்ன வழி?


அகக்கண் விழிப்படைந்த ஒரு குருவிடம்தான் அதை நீ அடைய முடியும். அந்த அறிவை நூல்கள் தராது. நூல்களுக்கு நூலான இறைமறை திருக்குர்ஆனே இதைச் சொல்கிறது:
“அளவற்ற அருளாளன்
அவனைப் பற்றி
ஆழ்ந்து அறிந்தவர்களிடம் கேளுங்கள்”
(25:59)

”அர்ரஹ்மான் ஃபஸ்’அல் பிஹி ஃகபீரா” – இதில் இறைவனின் ரட்சகப் பண்பின் திருபெயர் சொல்லப்பட்டுள்ளதே அன்றி அவனது சுயத்தின் பெயரான ‘அல்லாஹ்’ என்பது ஆளப்படவில்லை. அவனின் ரட்சகத்தன்மை பற்றி அறிவதற்கே ஒரு மெய்ஞ்ஞானியின் தொடர்பு அவசியம் என்னும்போது அவனது தெய்வீகத்தன்மை (உலூஹிய்யத்) மற்றும் சுயம் (தாத்) பற்றி அறிவது வெறும் ஏட்டுக் கல்வியால் சாத்தியமா?

எப்போதும் நெருக்கமாகவே இருந்து வந்துள்ள தன் காதலியைத் தான் ஒருபோதும் கண்களால் காணாமல் இருப்பது பற்றி அவன் மனதில் வேதனை குடைந்தது.”

”நாம் அவனின் பிடரி நரம்பினும்
அவனிடம் நெருக்கமாக உள்ளோம்”
(50:16)

நமக்கு நம்மினும் நெருங்கிய நேசனைக் காணும் ஆவல் எழாமல் இருப்பது நியாயமா?

கலிமா கூ தான் – மந்திரம் சொல், அறி என்னும் நிலைகளை அடைந்தவனின் உள்ளத்தில் கலிமா பீன் – மந்திரம் பார் என்னும் நிலையை எட்டும் ஏக்கம் பிறக்கிறது.

இல்முல் யகீன் என்னும் நிலையில் இருப்பவனின் இதயத்தில் ஐனுல் யகீன் என்னும் நிலையை அடையும் ஆர்வம் உதிக்கிறது.

காதலியின் நறுமணமும் இனிய கீதமும் இதயத்தைத் தொட்ட பின்னும் தரிசனத்தின் ஆசை கொள்ளாமல் கண்களை மூடிக் கொண்டிருப்பவன் எவன்?

இறைவனுடன் வசனித்த மூசா நபிக்கு அவனைக் காண வேண்டும் என்னும் ஆசை உள்ளத்தில் கொந்தளிக்க வில்லையா?

”நாம் குறித்த காலத்தில் மூசா வந்த போது
அவரின் ரட்சகன் அவருடன் பேசினான்
அப்போது மூசா: ‘என் ரட்சகனே!
எனக்குக் காண்பி
நான் உன்னைக் காண வேண்டும்’
என்றார்”
(7:143)

இறை தரிசனத்தின் படித்தரங்கள் அனேகம் உள்ளன. சுருக்கமாகச் சொல்வதெனில், இறைவனின் சுய நிலையை அவனை அன்றி வேறு எவரும் காண இயலாது. அவனின் உடைமைகள், செயல்கள் மற்றும் திருப்பண்புகளின் தரிசனங்கள் உள்ளன. இவ்வுலகில் இதயத்தின் கண்களால் அவனை தரிசிக்கலாம்; மறுவுலகில் புறக்கண்களால் தரிசிப்பதும் உண்டு.

இறைவன் பகிரங்கமானவன் (அழ்ழாஹிர்). அவனின் வெளிப்பாடுதான் எங்கெங்கும் நிறைந்துள்ளது. ஒருகணமும் அவன் வெளிப்படாமல் இல்லை. ”சிருஷ்டிகள் அவனுக்கு எப்படித் திரையாகும்? அவனால் படைக்கப்பட்டவை அவனை எப்படி மறைக்கும்?” என்று கேட்கிறார்கள் ஹிகம் நூலாசிரியர் இப்னு அதாவுல்லாஹ் சிகந்தரீ (ரஹ்).


இறைவன் தன் அடையாளங்களைக் காட்டிக் கொண்டேதான் இருக்கிறான். அவற்றில் அவனை நாம் தரிசிக்க வேண்டும் என்றும் விரும்புகிறான்.

”நாம் அவர்களுக்கு வெளியிலும்
அவர்களின் உள்ளேயும்
நம் அத்தாட்சிகளைக்
காட்டிக்கொண்டே இருப்போம்
அது சத்தியம்தான் (ஹக்) என்று
அவர்களுக்குத் தெளிவாகும் வரை;
உம் ரட்சகன் சகல வஸ்துக்களிலும்
பிரசன்னமாக இருப்பது
உமக்குப் போதவில்லையா?”
(41:53)

இதே போல் இன்னொரு இடத்தில்:
“திடநம்பிக்கை கொண்டோருக்குப்
பூமியில் பல அத்தாட்சிகள் உள்ளன
உங்களுக்கு உள்ளேயும் உள்ளன
நீங்கள் ஆழ்ந்து பார்க்க வேண்டாமா?”
(51:20,21)

அவன் காட்டும் அத்தாட்சிகளை அடையாளங்களை அடியார்கள் ஏன் பார்க்காமல் இருக்கிறார்கள்?
“நிச்சயமாக
கண்கள் குருடாகவில்லை
ஆனால் நெஞ்சினுள் இருக்கும்
இதயங்கள் குருடாக உள்ளன”
(22:46)

மேற்கண்ட கதையில் வரும் மருத்துவர் ஆன்மிக குருநாதருக்கான குறியீடு. சூஃபி குருமகான் அகத்தின் மருத்துவர் ஆவார். அவர் தரும் பயிற்சிகள் நமக்கு அகப்பார்வையை நல்கும். மெல்ல மெல்ல நம் இதயத்தின் கண்களைத் திறக்கும்.

குரு-சிஷ்ய வழிமுறையை விளங்காதவர்கள் ஆயிரம் விதங்களில் விமர்சனம் செய்வார்கள். அவற்றைச் செவியில் போட்டுக்கொள்ளக் கூடாது. குழப்பங்கள் ஆன்மிக சிகிச்சையின் பத்தியத்தை முறித்துவிடக் கூடும்.

வெறும் ஏட்டுக்கல்வியிலிருந்து உள்ளுதிப்பின் ஞானம் மிகவும் வேறுபட்டது. திருக்குர்ஆனை எந்த ஒளியில் படித்து விளங்கினால் அது சரியாக இருக்குமோ அந்த ஒளியை இதயத்தில் நிரப்பும் பயிற்சியையே ஆன்மிக குருநாதர் தருகிறார்.

ஒருமுறை ரத்தினச் சுருக்கமாக ஆங்கிலத்தில் இப்படி எழுதி வைத்தேன்:
Ulamaae zaahir – informative ; Ulamaae baatin – transformative.

அதாவது, வெளிரங்கமான மார்க்க அறிவு மட்டுமே கொண்ட அறிஞர்கள் (ஆலிம்கள்) உங்களுக்கு மேலும் மேலும் தகவல்களை மட்டுமே தர முடியும். அவர்களால் உங்களை மாற்றி அமைக்க முடியாது. அந்தரங்கமான ஞானம் கொண்ட இறை ஞானிகள் (ஆரிஃபீன்) மட்டுமே உங்களில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

இதற்கு நல்லதொரு உதாரணம் மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள். ஆயிரக் கணக்கான  மாணவர்களுக்கு மார்க்கக் கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியராக (மௌலவி) அவர்கள் இருந்தார்கள். எனினும், உள்ளுதிப்பின் ஞானம் உண்டாக அவர்கள் ஒரு குருநாதரின் அடிமை ஆக வேண்டி இருந்தது. அவர்களே சொல்கிறார்கள்:

“மௌலவி ஹர்கிஸ் ந ஷுத் மௌலாயே ரூம்
தா குலாமே ஷம்செ தப்ரேஸி ந ஷுத்”
(ஷம்ஸ் தப்ரேஸின் அடிமையாக ஆகாதவரை மௌலவியாக (மார்க்க ஆசிரியராக) இருந்த நான் ஆன்மிக வழிகாட்டியாக மாற முடியவில்லை)


ஆன்மிகத்தின் மேலான படித்தரங்களை எய்தப் பெற்ற பின் மௌலானா ரூமி நமக்குச் சொன்னார்கள்:

“ஸத் கிதாபொ ஸத் வரக் தர் நார் குன்
சீனா ரா அஸ் நூரெ யார் குல்ஸார் குன்”
(நீ புரட்டிக் கொண்டிருக்கும் நூறு நூறு நூல்களையும் தாள்களையும் நெருப்பில் போட்டுவிடு; உன் இதயத்தை நண்பனின் ஒளி கொண்டு பூஞ்சோலை ஆக்கிவிடு)


”அவனது கண்களின் நரம்புகள் பலமடைந்து வந்தன. பார்வை கொஞ்சம் கொஞ்சமாக வந்தது. தன் காதலியை அவன் பார்க்கத் தொடங்கினான். அவளின் உருவம் முதலில் நிழல் போல் தெரிந்தது. காலப் போக்கில் அவனின் கண்கள் முழுமையான பார்வையை அடைந்தபோது அவளின் தரிசனத்தில் அவன் சொக்கி நின்றான்.

இப்போது அவன் எழுதும் கவிதைகள் ஜீவன் கொண்டிருந்தன. ஏனெனில் அவை இரவல் தகவல்களில் இருந்து பிறக்கவில்லை. அவனுடைய நேரடி தரிசன அனுபவத்தில் இருந்து பிறந்தன. அவனின் ஒவ்வொரு சொல்லும் இப்போது அவளின் மனதில் இனித்தது. அவள் அவனை மேலும் மேலும் நேசித்தாள்.”

’ஐனுல் யகீன்’ என்னும் பார்ப்பதால் உண்டாகும் தெளிவு நிலையைச் சாதகன் அடைகிறான். இறைவனின் அடையாளங்களை அத்தாட்சிகளை அவன் காண்கிறான். இறைவனின் ஒளிச்சுடர்கள் அவன் அகப்பார்வையை விட்டு ஒருபோதும் மறைவதில்லை. அந்த தரிசனத்தில் அவனின் கண்கள் லயித்திருக்கின்றன.

அவனுடைய வழிபாடுகள் வெறும் ஒப்பித்தலாக இல்லை. அதில் ஒப்படைத்தல் உண்டாகிவிட்டது. அதாவது, இறைவனின் உதடுகளில் அவன் ஒரு புல்லாங்குழலாக இருக்கிறான். அவன் வழியே இறைவனின் மூச்சு இனிய இசையாக வெளியாகிறது.

”உமரின் நாவில் அல்லாஹ் பேசுகிறான்” என்று உமர் ஃகத்தாப் (ரலி) அவர்களைப் பற்றியும், “யமன் நாட்டிலிருந்து இறைவனின் மூச்சு வருகிறது” என்று உவைசுல் கர்னீ (ரஹ்) அவர்களைப் பற்றியும் நபி (ஸல்) அவர்கள் அருளிய அமுத மொழிகளை ஆய்ந்து அறிக.

”அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். ஐம்புலன்கள் கரையும் அனுபவங்களை அவன் அவளிடத்தில் அடைந்தான். அவன் கவித்திறன் தன் இயலாமையில் அவளின் முன் மண்டியிட்டது. அவனே அவளை வருணிக்கும் கவிதை ஆனான்.”

இதில் கலிமா ஷூ – மந்திரம் ஆகு என்னும் நிலை பேசப்படுகிறது.

ஐனுல் யகீன் என்னும் நிலை தரிசனத்தால் உண்டாகும் தெளிவு என்றால் அதைவிடவும் முழுமையான மேலான நிலை ஹக்குல் யகீன் என்பதாகும். இது இறையனுபவத்தால் உண்டாகும் தெளிவு.

கேட்டு அறிவதை விடப் பார்த்து அறிவது மேலானது. பார்த்து அறிவதை விட அனுபவித்து அறிவது மேலானது.

விட்டில் ஜோதியைப் பார்க்கிறது. அனுபவத்தை நோக்கி ஈர்க்கப் படுகிறது. தன்னை அந்த ஜோதியில் முற்றிலும் அர்ப்பணித்து விடுகிறது. குருட்டு விட்டிலுக்கோ விளக்கு இருக்கும் திசை கூட தெரியாது.


திருக்கலிமாவின் ஞானங்கள் உண்டாகும் படிநிலைகள் நான்கு என்று சூஃபி மகான் நூரீ ஷாஹ் (ரஹ்) அவர்கள் விளக்கினார்கள்:
இல்மெ லா இலாஹ இல்லல்லாஹ் – திருக்கலிமாவின் அறிவு
திக்ரெ லா இலாஹ இல்லல்லாஹ் – திருக்கலிமாவின் நியாபகம்
ஃபிக்ரெ லா இலாஹ இல்லல்லாஹ் – திருக்கலிமாவின் சிந்தனை
ஷுகலே லா இலாஹ இல்லல்லாஹ் – திருக்கலிமாவின் அனுபவம்.

வழிபாடுகள் இறைவனுக்காக என்று சொல்வதன் முடிந்த எல்லை இறையனுபவம் அடைதல்தான். ”யாஃப்தே ஹக்” என்று இதனை சூஃபிகள் சொல்கிறார்கள் (ஃபார்சி மொழியில்.)

நபி (ஸல்) அவர்களின் அருள்மொழி: “நிச்சயமாகத் தொழுகையில் அனுபவம் இருக்கிறது” (இன்ன ஃபிஸ்ஸலாத்தி ஷுக்லா – புகாரி #1199)

இந்த அனுபவம் எது? என்று கேட்பீர்களானால் தொழுகை யாருக்காக? என்பதைச் சிந்தியுங்கள். லில்லாஹி – அல்லாஹ்வுக்காக. எனவே இந்த அனுபவம் இறையனுபவம்தான்.

எத்தனை சிறந்த கவிஞனாக இருந்தாலும் அந்த அனுபவத்தை வருணித்துவிட முடியாது. அது மொழியின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. அதன் சாயையான சிற்றின்பத்தையே கவிஞர்கள் இன்னும் முழுமையாக வருணித்துத் திருப்தி அடைய முடியவில்லை எனும்போது அந்தப் பேரின்பத்தை எப்படி வருணிக்க இயலும்?

இறையனுபவம் பெற்ற அடியானின் ஒவ்வொரு அசைவும் இறைவனைப் புகழ்வதாகி விடுகிறது. அவனின் இருப்பே இறைவனின் புகழ்ச்சியாக உள்ளது.

விண்ணேற்றத்தில் இறைதரிசனம் பெற்ற பெருமானார் சொன்னார்கள்:
“நீயே தூயவன்! உன்னை நீயே புகழ்ந்து கொண்டது போல் நான் உன்னை முழுமையாகப் புகழ்ந்துவிட முடியாது” (சுப்ஹானக லா அஹ்ஸ த்ஸனாஅ அலைக்க அன்த கமா அத்ஸ்னைத்த அலா நஃப்சிக்க – தஃப்ஸீர் ரூஹுல் பயான்).

நினைவில் நிறுத்துங்கள்: கலிமா கூ தான் பீன் ஷூ.No comments:

Post a Comment