Saturday, August 18, 2012

கண் திறந்த கதைஒரு சிறிய கதை:

ஓர் ஊரில் ஒரு கவிஞன் இருந்தான். அவன் பார்வை இழந்த குருடனாக இருந்தான். அவனுடைய கவிதைகள் மிகவும் பிரபலமாக இருந்தன. அவனுக்கு ரசிகர்கள் பலர் இருந்தனர்.

அவனுக்கு ஒரு காதலி இருந்தாள். மாபெரும் சாம்ராஜ்யத்தின் இளவரசியாக இருக்கும் தகுதி பெற்ற பேரழகி அவள். ஆனால் அவள் ஆடுகளை மேய்க்கும் இடைச்சியாக இருந்தாள்.

பால்ய பருவத்தில் இருந்தே அவர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அவனின் கவித்திறமைக்கு அவள் ஊக்கம் அளித்து வளர்த்தாள். பருவங்கள் மாறிய போது அந்த நட்பு மெல்ல மெல்ல காதலாக மாறியது. அதனை அவர்கள் இருவரும் உணர்ந்து கொண்டார்கள்.

அவள் மீது அவன் கவிதைகள் எழுத ஆசைப்பட்டான். அழகியே! என்று வருணிக்க மட்டுமே அவனால் முடிந்தது. அவளின் லட்சணங்களை அவன் நேரில் ஒருபோதும் கண்டதில்லையே!

செவி வழிச் செய்தியாக அவளைப் பற்றி அவன் அறிந்து வைத்திருந்ததை அடிப்படையாக வைத்துக் கொண்டு அவளை வருணித்துக் கவிதைகள் எழுதினான். அவற்றை அவளிடம் வாசித்துக் காட்டினான். ஆனால் அது அவர்கள் இருவருக்குமே திருப்தியாக இல்லை. ஏனெனில் அவை அனுபவத்தில் பிறந்தவையாக இல்லை.

எப்போதும் நெருக்கமாகவே இருந்து வந்துள்ள தன் காதலியைத் தான் ஒருபோதும் கண்களால் காணாமல் இருப்பது பற்றி அவன் மனதில் வேதனை குடைந்தது.

இந்த நிலையில் சில ஆண்டுகள் ஓடின. பக்கத்து ஊர் ஒன்றில் ஒரு தேர்ந்த மருத்துவர் இருப்பதாகவும் அவரின் வைத்தியத்தில் குருடர்கள் மீண்டும் பார்வை பெற்று வாழ்கிறார்கள் என்றும் அவன் கேள்விப்பட்டான். மனதில் ஒரு முடிவுக்கு வந்தவனாக அவரைச் சந்திக்கப் புறப்பட்டுவிட்டான்.

அவன் தன்னை அந்த வைத்தியரிடம் முழுமையாக ஒப்படைத்துக் கொண்டான். அவர் அவனின் கண்களைப் பரிசோதித்துப் பார்த்தார். ”மகனே! உன் கண்களின் நரம்புகள் பலம் இழந்துள்ளன. முறையான சில பயிற்சிகள் செய்தால் அவற்றை உறுதிப் படுத்த முடியும். அவை பலமடைந்தால் உனக்குப் பார்வை கிடைக்கும்” என்று அவர் சொன்னார். அவர் தரும் பயிற்சிகளைச் செய்ய அவன் இசைந்தான்.

கவிதைகள் பாடுவதை அவன் நிறுத்திவிட்டான். ஒரு சுண்ணாம்புச் சுவற்றை நோக்கி அவன் நாளெல்லாம் அமர்ந்திருந்தான். பார்வை இல்லாத தன் கண்களை வெறித்த படி அதனையே உற்று நோக்கியும், மேலும் கீழும் இடமும் வலமுமாகச் சுழற்றிக் கொண்டும் இருந்தான். அவனைப் பார்த்தவர்கள் அவன் மீது பரிதாபப் பட்டார்கள்.

“பாவம். நம் ஊரின் சிறந்த கவிஞனாக இருந்தவன் இப்படி ஆகிவிட்டானே! அந்த மருத்துவர் இவனைக் கிறுக்கனாக்கி விட்டார்.” என்றும், “தன் காதலியைப் பற்றிக்கூட இப்போது அவன் கவிதைகள் பாடுவதில்லையாம். நிலைமை இவ்வளவு மோசமாகி விட்டது” என்றும் அவர்கள் பேசிக்கொள்வது அவன் செவிகளில் அவ்வப்போது விழுந்து கொண்டிருந்தது.

அவன் மனம் துடித்தது. சந்தேகத்தின் புகை அவன் மனதிற்குள் மூட்டம் போட்டன. நரகத் தீயில் இருந்து வரும் அந்தப் புகையில் அவனின் மூச்சு திணறும் போதெல்லாம் அவன் மருத்துவரை நோக்கி ஓடினான். மருத்துவ முறைகளைப் பற்றி அவர் அவனுக்கு விளக்கினார். மனம் தெளிவு பெற்றது. ஊர்ப் பேச்சிற்குக் காது கொடுக்கக் கூடாது என்னும் மனவுறுதி அவனுக்கு வாய்த்தது. அவன் முன்பை விட இன்னும் ஆழமாகப் பயிற்சியில் தோய்ந்து ஈடுபட்டான்.

அவனது கண்களின் நரம்புகள் பலமடைந்து வந்தன. பார்வை கொஞ்சம் கொஞ்சமாக வந்தது. தன் காதலியை அவன் பார்க்கத் தொடங்கினான். அவளின் உருவம் முதலில் நிழல் போல் தெரிந்தது. காலப் போக்கில் அவனின் கண்கள் முழுமையான பார்வையை அடைந்தபோது அவளின் தரிசனத்தில் அவன் சொக்கி நின்றான்.


இப்போது அவன் எழுதும் கவிதைகள் ஜீவன் கொண்டிருந்தன. ஏனெனில் அவை இரவல் தகவல்களில் இருந்து பிறக்கவில்லை. அவனுடைய நேரடி தரிசன அனுபவத்தில் இருந்து பிறந்தன. அவனின் ஒவ்வொரு சொல்லும் இப்போது அவளின் மனதில் இனித்தது. அவள் அவனை மேலும் மேலும் நேசித்தாள்.

அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். ஐம்புலன்கள் கரையும் அனுபவங்களை அவன் அவளிடத்தில் அடைந்தான். அவன் கவித்திறன் தன் இயலாமையில் அவளின் முன் மண்டியிட்டது. அவனே அவளை வருணிக்கும் கவிதை ஆனான்.

இதுவரை நீங்கள் கேட்டு வந்த இந்தக் கதை வெறும் மாயப் புனைகதை (FAIRY TALE) அல்ல. இது ஒரு சூஃபி குறியீட்டுக் கதை. சூஃபி தத்துவம் ஒன்றினை விளக்குவதற்காகவே இந்தக் கதை என் மனதில் தோன்றியது.

இஸ்லாமிய மூல மந்திரம் ‘கலிமா’ எனப்படுகிறது. அதற்கு ‘கலிமா தய்யிபா’ (நறுமணமிக்க திருமந்திரம்) என்றும் ஒரு வருணிப்பு உண்டு. “லா இலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வை அன்றி வேறு பரம்பொருள் இல்லை) என்பது அந்தத் திருக்கலிமாவின் முற்பகுதி. 

சூஃபிகளிடம் இந்தத் திருக்கலிமா சார்ந்து ஒரு கோட்பாடு உண்டு. ஃபார்சி மொழியில் அதனை இவ்வாறு கூறுகிறார்கள்: ‘கலிமா கூ தான் பீன் ஷூ’

இதன் அர்த்தம்:
கலிமா கூ – மந்திரம் சொல்
கலிமா தான் – மந்திரம் அறி
கலிமா பீன் – மந்திரம் காண்
கலிமா ஷூ – மந்திரம் ஆகு.

அதாவது, திருக்கலிமாவை நாவால் உரைப்பது, மனத்தால் அறிவது, அகக்கண்ணால் தரிசிப்பது, அதன் அனுபவமாகவே ஆகிவிடுவது என்னும் நான்கு ஆன்மிக நிலைகளை இது சுட்டுகிறது.

மேலே நாம் கேட்ட சிறிய கதை இந்த நான்கு நிலைகளை விளக்குகின்றது.

”ஓர் ஊரில் ஒரு கவிஞன் இருந்தான். அவன் பார்வை இழந்த குருடனாக இருந்தான்.” அந்தக் கவிஞன் நாம்தான். ஆன்மிகச் சாதகனின் ஆரம்ப நிலை இது. அவன் பிறவிக் குருடன் அல்ல. இடையில் பார்வையை இழந்தவன்.”


நம் அகக்கண் இப்போது அகப்பார்வையை இழந்துள்ளது. நாம் அகக் குருடர்களாக இருக்கிறோம். ஆனால், இறைவன் நம்மைப் படைத்த ஆன்ம உலகில் நம் ஆன்மா அவனின் தரிசனத்தில் லயித்திருந்தது. அவனைக் கண்டுகொண்டே அவனுடன் உரையாடினோம்.

“உன் ரட்சகன் ஆதமின் மக்களுடைய முதுகுகளிலிருந்து
அவர்களின் சந்ததிகளை வெளியாக்கி
அவர்களை அவர்களது உயிர்களின் மீது சாட்சியாக்கி
‘நான் உங்களுடைய ரட்சகன் அல்லவா?’ என்று கேட்கவும்
‘மெய்தான், நாங்கள் சாட்சி ஆகின்றோம்’
என்று அவர்கள் சொன்னதை நினைவூட்டுக”
(7:172)

ஆன்மாக்கள் பூமிக்கு இறக்கப்பட்டு, உடல் என்னும் கூண்டில் அடைபட்டவுடன் அவை தம் பார்வையை இழந்துவிட்டன. உடலின் புறக்கண்கள் திறந்து கொண்டன; உயிரின் அகக்கண்கள் மூடிவிட்டன. படைப்புக்களைப் பார்க்கும் புறப்பார்வை கிடைத்தது; படைத்தவனைப் பார்க்கும் அகப்பார்வை போய்விட்டது.

”அவனுக்கு ஒரு காதலி இருந்தாள். மாபெரும் சாம்ராஜ்யத்தின் இளவரசியாக இருக்கும் தகுதி பெற்ற பேரழகி அவள். ஆனால் அவள் ஆடுகளை மேய்க்கும் இடைச்சியாக இருந்தாள்.”

இங்கே காதலி என்பது இறைவனுக்கான குறியீடு. ஆன்மாவின் காதலி இறைவன் மட்டுமே. அவனே மஃஷூக்கே ஹகீகி – மெய்ம்மைக் காதலி.

இறைவன் பற்றிய இரண்டு நிலைகள் இதில் பேசப்படுகின்றன. படைப்புக்கள் அனைத்தையும் விட்டு விலகிய அவனுடைய சுயநிலை ஒன்று. அதற்கு ‘ஷானே தன்ஸீஹ்’ என்று பெயர்.

”திண்ணமாக அல்லாஹ்
அகில உலகங்களை விட்டும்
தேவை அற்றவன்”
(3:97)
என்பது அந்நிலையின் வருணிப்பு.

அனைத்து வஸ்துக்களிலும் தான் வெளிப்பட்டு நிற்கும் அவனுடைய கருணை நிலை மற்றொன்று. அதற்கு ’ஷானே தஷ்பீஹ்’ என்று பெயர்.

“கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன
எப்பக்கம் நீங்கள் திரும்பினாலும்
அல்லாஹ்வின் திருமுகமே நிறைந்துள்ளது.
நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்
அனைத்தையும் அறிந்தவன்”
(2:115)

”அல்லாஹ் அனைத்து வஸ்த்துக்களின் மீதும்
பிரசன்னமாக இருக்கிறான்”
(58:9)

“அவனே 
ஆதியாகவும் அந்தமாகவும்
புறமாகவும் அகமாகவும்
இருக்கிறான்”
(57:3)

“அல்லாஹ்
வானங்கள் மற்றும் பூமியின்
ஒளியாக இருக்கிறான்”
(24:35)
அகிய திருவசனங்களும் அன்ன பிறவும் அவனின் ‘ஷானே தஷ்பீஹ்’ என்பதன் வருணிப்புக்கள் ஆகும்.

”அவனின் உதாரணம் போல் எதுவுமில்லை
அவன் கேட்பவனாகவும் காண்பவனாகவும் இருக்கிறான்”
(42:11)
என்னும் திருவசனத்தில் அவனது தன்ஸீஹ் மற்றும் தஷ்பீஹ் ஆகிய இரு நிலைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன என்று மகான் இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.


படைப்புக்கள் எதற்குமே எட்டாத சுயநிலை கொண்ட இறைவன் அனைத்துப் படைப்புக்களிலும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு தன் கருணையால் மிக எளியவனாகி நிற்கிறான்.

”பால்ய பருவத்தில் இருந்தே அவர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அவனின் கவித்திறமைக்கு அவள் ஊக்கம் அளித்து வளர்த்தாள்.”

இங்கே நட்பு என்று சொல்லப்படுவது பொதுவான நேசமாகும்.
“அல்லாஹ் இறைநம்பிக்கையாளரின் நேசன்” (அல்லாஹு வலிய்யுல்லதீன ஆமனூ -2:257) என்று சொல்லப்பட்டுள்ளது பொதுவான நேசத்தைக் குறிக்கின்றது.

இறைவன் படைப்புக்களை விட்டு ஒருபோதும் பிரிந்ததில்லை. அவனைப் பிரிந்து படைப்பு எதுவும் இருக்கவே இயலாது. அவனில் அது; அதில் அவன் என்னும் உறவாகவே அதை அவன் படைத்த கணம் தொட்டு இருந்து வருகின்றது.

இறைவன் தன் கருணையால் அதனை ரட்சித்து வருகின்றான். “ரப்” என்னும் பெயர் அதைத்தான் குறிக்கிறது. அதன் குறிக்கோளினை நோக்கி அதனைச் சன்னஞ் சன்னமாக கொண்டு செல்பவன் அவனே.

அவனுடைய ஜீவன், அறிவு, நாட்டம், சக்தி, கேள்வி, பார்வை, பேச்சு ஆகியவற்றின் ஒளிச்சுடர்கள் வீசுவதாலேயே படைப்புக்களில் திறமைகள் வெளியாகின்றன. இல்லையேல், அவற்றில் புகழுக்குரிய எந்தத் திறமையும் வெளிப்படாது.

”பருவங்கள் மாறிய போது அந்த நட்பு மெல்ல மெல்ல காதலாக மாறியது. அதனை அவர்கள் இருவரும் உணர்ந்து கொண்டார்கள்.”

நேசம் ஆழமாகும் போது காதலாகிறது. இறைநம்பிக்கையாளர்கள் இறைவனின் மீது வைத்திருப்பது லேசான நேசம் அல்ல. மிக ஆழமான உறுதியான நேசமாகும்.

”இறை நம்பிக்கை கொண்டவர்கள்
அல்லாஹ்வின் நேசத்தில் மிக உறுதியானவர்கள்”
(2:165)

ஆன்மாவின் மீது பருவங்கள் கடந்து செல்லும்போது இறைவனின் மீதான நேசம் ஆழமாகிவிடுகிறது. இறைக்காதல் உண்டாகிவிடுகிறது.

”அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்
அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள்”
(6:119)


சாமானியர்கள் இறைவன் தங்களுக்கு வழங்கும் அருட்கொடைகளுக்காக இறைவனை நேசிக்கிறார்கள். இறைக்காதலர்கள் இறைவனுக்காகத் தன்னையே இழக்கத் தயாராக இருக்கிறார்கள். இறைவனை அடைய வேண்டும் என்பதே அவர்களின் ஒரே இலட்சியமாக இருக்கிறது.

“கூறுக:
எனது தொழுகையும்
எனது தியாகமும்
எனது வாழ்வும்
எனது மரணமும்
அகிலங்களின் ரட்சகனான
அல்லாஹ்வுக்கே”
(6:162)

”அவள் மீது அவன் கவிதைகள் எழுத ஆசைப்பட்டான். அழகியே! என்று வருணிக்க மட்டுமே அவனால் முடிந்தது. அவளின் லட்சணங்களை அவன் நேரில் ஒருபோதும் கண்டதில்லையே!”

பொருள் உணராமலேயே திருக்கலிமாவைச் சொல்லிக் கொண்டிருக்கும் நிலைதான் முதலில் இருக்கிறது. திருக்கலிமாவின் மீது நேசம் இருக்கிறது. ஏனெனில் அது தன் நேசனின் வருணனையாக உள்ளது. ஆனால் அதனைப் பற்றிய அறிவுகள் இன்னும் அடையப்படவில்லை.

கலிமா கூ – மந்திரம் சொல் என்னும் நிலையில் இவன் இருக்கிறான்.

(தொடரும்)

2 comments:

 1. //கலிமா கூ – மந்திரம் சொல்
  கலிமா தான் – மந்திரம் அறி
  கலிமா பீன் – மந்திரம் காண்
  கலிமா ஷூ – மந்திரம் ஆகு//

  இந்த நான்கும்,4 வேதங்களின் மஹா வாக்யங்களைப் போல ஒலிக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.
  ப்ரக்யானம் ப்ரம்ம(ரிக்); அயம் ஆத்ம ப்ரம்ம(யஜுர்);தத்வமசி(சாம);அஹம் ப்ரம்மாசி(அதர்வ)

  "கலிமா பீன் – மந்திரம் காண்"

  வேதங்களை மகர்ஷிகள் கண்டார்கள் என்றே சொல்லப்பட்டுள்ளது.
  "மந்த்ர த்ரஷ்டா" என்பது அவர்களுடைய பெயர்.

  //எப்பக்கம் நீங்கள் திரும்பினாலும்
  அல்லாஹ்வின் திருமுகமே நிறைந்துள்ளது.
  நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்//

  'பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைகின்ற பரிபூரண ஆனந்தமே'
  தாயுமானவ சுவாமிகள்.

  "பூர்ண‌மிதப் பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண‌முதச்யதே
  பூர்ணஸ்ய பூர்ண‌மாதாயப் பூர்ணமேவா வசிஷ்யதே"  ReplyDelete
 2. அவன் கடந்தும் உள்ளான்; உள்ளிலும் உள்ளான். அதனால்தான் கடவுள்.

  ReplyDelete